கேளுங்கள், அருமையான ஓர் வரம்.

 


கேளுங்கள்அருமையான ஓர் வரம்

-----

     வள்ளல்பெருமான் என வழங்கப்படும்இராமலிங்க சுவாமிகள்சென்னையில் ஏழுகிணறுப் பகுதியில்விராசாமிப் பிள்ளைத் தெருவில் வாழ்ந்திருந்த காலத்தில்கந்தகோட்டம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ளமுருகப் பெருமானை வழிபட்டுப் பாடிய "தெய்வமணி மாலை"  31 பாடல்களைக் கொண்டது. சுவாமிகள் தமது ஒன்பதாம் வயதில்இறையருள் நிரம்பப் பெற்றுப் பாடியது.

அதில் வரும் ஒரு பாடலைக் காண்போம்.... 

"ஈ என்று நான் ஒருவர் இடம் நின்று கேளாத

இயல்பும்என்னிடம் ஒருவர் ஈது

இடு என்ற போது அவர்க்கு இ(ல்)லை என்று சொல்லாமல்

இடுகின்ற திறமும்இறையாம்

 

நீ என்றும் எ(ன்)னை விடா நிலையும்நான் என்றும் உள்

நி(ன்)னை விடா நெறியும்அயலார்

நிதி ஒன்றும் நயவாத மனமும்மெய்ந்நிலை நின்று

நெகிழாத திடமும்உலகில்

 

சீ என்றுபேய் என்றுநாய் என்று பிறர் தமைத்

தீங்கு சொல்லாத தெளிவும்,

திரம் ஒன்று வாய்மையும்தூய்மையும் தந்துநின்

திருவடிக்கு ஆள் ஆக்குவாய்,

 

தாய்ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

தலம் ஓங்கு கந்தவேளே!

தண்முகத் துய்யமணிஉள்முகச் சைவமணி,

சண்முகத் தெய்வ மணியே".

 

இதன் பொருள் ---

 

தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே --- எல்லோருக்கும் தாய் போன்று விளங்கும் சென்னையில் கந்த கோட்டத்துள்அருள் ஓங்க விளங்கும் கந்தவேளேதண்முகத் துய்யமணி--- சினமே இல்லாத குளிர்ந்த முகத்துடன் உள்ள தூய மணியைப் போல்பவரே! உள்முகச் சைவமணி, --- உள்முகத்துள்ளே  அன்பு நிறைந்த மணியே!சண்முகத் தெய்வமணியே--- ஆறு திருமுகங்களை உடையதெய்வங்களில் சிறந்தவரே!

 

ஈ என்று நான் ஒருவர் இடம் நின்று கேளாத இயல்பும் --- நான் ஒருவரிடம் போய் நின்று எனக்கு வேண்டியதைத் தருவாயாக என்று யாசகம் கேட்டுப் பெறாத இயல்பும் என்னிடம் ஒருவர் ஈது இடு என்ற போது அவர்க்கு இ(ல்)லை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும் --- என்னிடம் ஒருவர் வந்து என்னிடம் உள்ள ஒரு பொருளைச் சுட்டிஇதைத் தருவாயாக என்று கேட்டால்அவருக்கு இல்லை என்று சொல்லாமல் இடுகின்ற மன உறுதியும்நீ என்றும் எ(ன்)னை விடா நிலையும் --- (முருகப் பெருமானே!) நீ என்னை என்றும் கைவிட்டிடாத நிலையும் நான் என்றும் உள் நி(ன்)னை விடா நெறியும்--- நான் என்றும் என் நெஞ்சத்தின் உள்ளே உனது  நினைவை விடாது பற்றி வழிபாடு செய்கின்ற நெறியும்,அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் --- அடுத்தவர்கள் வசம் உள்ள பொருளை விரும்பாத மனமும்மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் ---உண்மை நிலையில் இருந்து தளராமல் ஒழுகுகின்ற உள்ளத் திடமும்,உலகில்சீ என்றுபேய் என்றுநாய் என்று பிறர் தமைத் தீங்கு சொல்லாத தெளிவும் ---  எக்காரணம் கொண்டும்எந்த நிலையிலும் மற்றவர்களை சீ என்றும்பேய் என்றும்நாய் என்றும் தீங்கு சொல்லாமல் வாழும் தெளிவும், திரம் ஒன்று --- நிலைபேறும்உறுதியும் உள்ளத்தில் கொண்டுவாய்மையும்தூய்மையும் தந்து --- உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவதால் உண்டாகும் மனத் தூய்மையும் அடியேனுக்கு அருள் புரிந்துநின் திருவடிக்கு ஆள் ஆக்குவாய் --- உனது திருவடிக்கு நான் ஆளாகும்படி அருள் செய்வாய்.

 

விளக்கம் ---

 

"ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே,

தா என் கிளவி ஒப்போன் கூற்றே,

கொடு என கிளவி உயர்ந்தோன் கூற்றே"

 

என்பது தொல்காப்பியம்.

 

"ஈ தா கொடு எனும் மூன்றும் முறையே

இழிந்தோன்ஒப்போன்மிக்கோன் இரப்புரை"

 

என்பது நன்னூல்.

 

இவ்விரு நூல்களின் கருத்துப்படிஇழிந்த நிலையில் உள்ள ஒருவன்மற்றொருவனிடம் சென்று இரப்பது "ஈ" என்பதாகும். இது பொருள் இல்லாது இரப்பதாகும். பொருள் இல்லாத நிலையை இது காட்டும். பொருள் இருந்தும்பொருள் மீது கொண்ட ஆசை காரணமாகஇல்லை எனச் சென்று இரப்பதும் உண்டு. உள்ளபொருள் தொலைந்து போய்இல்லை என்று சென்று இரப்பதும் உண்டு.

 

தன்னோடு ஒப்பாக உள்ள ஒருவனிடம் சென்று ஒரு பொருளைக் கேட்பது, "தா" என்பதாகும். இதுவும் பொருள் இல்லாத நிலையைக் காட்டும். கைம்மாற்றான கடனாகவும் இது அமையலாம்.

 

தன்னினும் தாழ்ந்தோரிடம் சென்று ஒரு பொருளைக் கேட்பது "கொடு" என்பதாகும். ஒரு நற்செயலுக்காகப் பொருள் ஈட்டுங்கால்தன்னை விடவும் தாழ்ந்தோரிடமும் சென்று கேட்கவேண்டும். அவர் என்ன கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. அவர் என்ன கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளவேண்டும். 

 

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் தொல்காப்பிய விதிப்படி

 

ஈவது ஈகை.  தருவது தருமம்,  கொடுப்பது கொடை ஆகும். 

 

"ஈயென இரத்தல் இழிந்தன்றுஅதன்எதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று,

கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்றுஅதன்எதிர்

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று"

 

என்பது புறநானூற்றுப் பாடல்.

 

---   ஈ என்று சென்று இரப்பது இழிவானது.

---   ஈயேன் என்ற சொல்வது அதனினும் இழிவானது.

---   கொள்வாயாக என்று கொடுத்தல் உயர்வானது.

---   கொடுத்தாலும்கொள்ளேன் என்று சொல்வது அதனினும் உயர்வானது.

 

"ஏற்பது இகழ்ச்சி" என்பது ஔவைப் பாட்டி அருளிய ஆத்திசூடி. நிலை தாழ்ந்து போனாலும்ஒருவரிடம் சென்று யாசகம் கேட்பது இழிவானது ஆகும். கேட்பவர் கொடுத்தாலும் கொடுப்பார். "நாளை வா" என்று இழுக்கடிக்கவும் செய்யலாம். அடுத்த நாள் வரும்போது "இல்லை" என்றும் சொல்லலாம். ஆதனால்ஈ என இரத்தல் இழிந்தன்று" (இழிவான செயல்) எனப்பட்டது. அப்படிப்பட்ட இழிவான நிலை வரக் கூடாது என்கின்றார் வள்ளல்பெருமான்.

 

இல்லை என்று ஒருவர் வந்துபல் எல்லாம் தெரியக் காட்டிஇரந்து நிற்கும்போதுஇரக்கம் கொள்ளுவது மனித இயல்பு. யாருக்கும் கொடுக்காமல்,தாமே மிகு பொருள் கொண்டு வாழவேண்டும் என்று எண்ணும் உலோபத் தனம் மனிதனிடத்தில் இருப்பதும் உண்டு. இல்லை என்று வந்து இரந்தவர்க்கும் கொடுக்க மனம் எழவில்லையானால்அது மிகவும் இழிவான நிலை. இதனால், "ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று" எனப்பட்டது. இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லாமல் உதவுகின்ற நல்ல மனம் அமைய அருள் புரிய வேண்டுகின்றார்.

 

என்றும் உள்ளத்தில் இறை நினைவை இருத்தி வைத்து இருப்போரைஇறைவன் மறப்பதில்லை. கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதால்அப்படிப்பட்ட பெருமானைத் தான் என்றும் மறவாமல் நினைந்து வழிபட வேண்டும் என்கின்றார்.

 

"வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பு இலியை,

பஞ்சிச் சீறடியாளைப் பாகம் வைத்து உகந்தானை,

மஞ்சு உற்ற மணிமாட வன்பார்த்தான் பனங்காட்டூர்

நெஞ்சத்து எங்கள் பிரானைநினையாதார் நினைவு என்னே!"

 

என்பது சுந்தரர் தேவாரம்.

 

"அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும்என்பதுதான் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய இன்றியமையாத பண்பு ஆகும். அடுத்தவன் பொருளுக்கு ஆசைப் படக் கூடாது. அது பொறாமைக்கு இடம் தரும். பொறைமை வந்தால்அடுத்தவர் பொருளை எப்படியாவது கவர்ந்து அனுபவிக்க வேண்டும் என்னும் எண்ணம் அறியாமலேயே உதிக்கும். அது நிச்சயம் அழிவிலே கொண்டு சேர்க்கும். பெருவெள்ளம் வந்தபோதுஆற்றில் ஏற்கெனவே இருந்த நீரும் அடித்துக் கொண்டு போகப் படுவது போல்வஞ்சகத்தால் பொருள் வந்தால்அது விரைந்து போகும்போதுஉள்ள பொருளையும் கொண்டு சென்று விடும்.

 

பாண்டவர்களிடம் பொறாமை உணர்வு கொண்டு காலம் எல்லாம் வாழ்ந்திருந்த கௌரவாதிகள் இறுதியில் அழிந்தே போனார்கள்.

 

மெய் நிலை --- உண்மையான நிலை. அன்புஅடக்கம்ஒழுக்கம்உண்மைபொறுமைகடமை உணர்ச்சி. இன்ன பிற எல்லாம் மெய்ந்நிலை ஆகும். மெய்ந்நிலை நின்றோர் மெய்ப்பொருளாகிய இறையருளைப் பெற்று மகிழலாம். பொய்ந் நிலை நின்றால் பொய்யாகவே போகும்.

 

உலகில் நம்மை விட உயர்ந்தோர் என்ன தவறு செய்தாலும்வேண்டியவராய் இருந்தாலும்வேண்டாதவராய் இருந்தாலும் நாம் கவலைப்படுவதில்லை. கவலைப்பட்டும் எதுவும் ஆகப் போவதில்லை. நம்மை ஒத்த நிலையில் உள்ளவர்நமக்கு வேண்டியவர் என்று ஆகிவிட்டால்அவர் தவறு செய்தாலும் நாம் பொருட்படுத்துவதில்லை. அவரை இடித்து உரைக்க வேண்டும் என்னும் எண்ணம் நமக்கு வருவதில்லை. நமக்கு வேண்டாதவராக இருந்தால்நேரில் சொல்ல வக்கு இல்லாமல்அமைதியாக இருப்போம். ஆனால்நம்மிலும் தாழ்ந்தவர் ஒருவர்அறியாமையாலோ அல்லது உரிமை காரணமாகவோஒரு தவறைச் செய்துவிட்டால்நாம் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுகின்றோம். வசை பாடுகின்றோம். அந்த நிலையில் நாமும்,மதி கலங்கி,தவறுக்கு இடம் தந்துவிடுவோம். எனவே, "சீ என்றுபேய் என்றுநாய் என்று பிறர் தமைத் தீங்கு சொல்லாத தெளிவும்" அருள வேண்டும் என்கின்றார். 

 

"திரம் ஒன்று வாய்மையும்தூய்மையும் தந்துநின்

திருவடிக்கு ஆள் ஆக்குவாய்" ---  

 

திரம் --- நிலையானதுஉறுதியானது. திரம் என்னும் தமிழ்ச்சொல்வடமொழியில் "ஸ்திரம்" என்று சொல்லப்படும். (உறுதி - நன்மை)

 

திரம் ஒன்று வாய்மை --- வாய்மையே உயிர்க்கு நிலைபேற்றையும்உறுதி எனப்படும் நன்மையைம் தரும். வாய்மை உள்ள மனம் தூய்மையாக இருக்கும். தூய்மையான உள்ளத்தில்இறைவன் குடிகொண்டு இருப்பான். எனவே, "திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துஉனது திருவடிக்கு ஆள் ஆக்குவாய்" என்று வேண்டுகின்றார்.

 

உலகியல் வாழ்வில் நாம் எது எதற்கோ ஆட்பட்டுப் போய்க் கிடக்கின்றோம். தெளிவாக நல்லதல்ல என்று தெரிந்தாலும்விட்டுவிட மனம் வருவதில்லை. நன்மை தருவது போலச் சிலது தோன்றும். சிலதில் இருந்து விடுபடவும் முடிவதில்லை. அவற்றில் இருந்து விடுபடுவதால் எந்த நன்மைக் குறைவும் உண்டாகப் போவது இல்லை.

 

"அருட் செல்வம் செல்வத்துள் செல்வம்பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்பது திருக்குறள். பொருட்செல்வம் என்பது கீழோரிடத்திலும் உள்ளதை நாம் காணலாம். அந்த செல்வம் அனைத்தும் இன்று இருந்து ஒருநாள் மறைந்து போகும் தன்மை உடையவை. பொருளை மட்டும் வேண்டி இருந்தால்பொருள் வரும். வந்த வழியே போகும். தீயவழியில் வந்தால்அழித்துவிட்டுப் போகும். நல்வழியில் வந்த பொருள்அருள் கொழிக்கச் செய்துவிட்டுப் போகும். இறைவன் திருவடிக்கு ஆளாகிநின்றால்அருளோடு பொருளும் வரும். பொருளால் நமது வாழ்வும்பிறர் வாழ்வும் மேம்படும்

 

வேள் --- விரும்பப்படுபவன். 

 

கருவேள் எனப்படும் மன்மதன் எல்லோராலும் விரும்பப்படுபவன். திருமால் கருநிறம் பொருந்தியவர். அதனால்அவருக்குப் பிறந்த மன்மதன் "கருவேள்" அவனால் விளைவது சிற்றின்பமும்அதனால் உண்டாகும் துன்பமுமே.

 

பொன்னார் மேனியன்செம்மேனி எம்மான் என்று சொல்லப்படும்சிவபரம்பொருளின் கருணையால் அவதரித்தமுருகப் பெருமான் செவ்வேள் ஆவார். அவரை விரும்பினால்இம்மை மறுமை நலங்கள் யாவும் விளங்கும்.

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...