பிறர் பொருளைக் கவர எண்ணாதே

 


பிறர் பொருளுக்கு ஆசை கொள்ளாதே

-----

 

     தானும் தனது குடும்பமும் சுகமாக வாழவேண்டும் என்றே எந்த மனிதனும் விரும்புவான். சுகமாய் வாழப் பொருள் தேவை. அந்தப் பொருளைப் பெறுதற்குதக்க வாணிகத்தையோபதவியையோ தனத நல்ல முயற்சியினால் தேடிக் கொள்வதே எவ்வகையிலும் உயர்வைத் தரும். நல்ல வழியை விட்டு விலகினால்தீமை நிச்சயம் விளையும். தீய வழியில் பிறரது ஆக்கத்தைக் குலைத்து வாழ எண்ணுவது பெரும்பாவம். அதனால்,அவன் அழிவதோடு,அவனது குடிக்கும் கேடு உண்டாகும். பழியும் நிற்கும்.

 

     திருக்குறளில், "வெஃகாமை" என்னும் ஓர் அதிகாரம். வெஃகுதல் என்பது,பிறருக்கு உண்டான ஆக்கத்தைப் பொறுத்துக் கொள்ள மனம் இல்லாமல்அவருக்கு உரிய பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்புவது ஆகும். பிறருக்கு உரிய பொருளைக் கண்டபோதுபொறாமை கொள்ளுவதும் அல்லாமல்அதனைத் தான் அபகரிக்க எண்ணுவது குற்றம் என்பது கூறப்பட்டது. அழுக்காறு என்னும் பொறைமை இல்லாமல்பிறர் பொருளை அபகரிக்க எண்ணாமல் வாழ்வதே புனிதமான வாழ்வு ஆகும். "அழுக்காறாமை" என்னும் அதிகாரத்திற்குப் பின், "வெஃகாமை" என்னும் அதிகாரத்தை நாயனார் வைத்துள்ளதை அறிக. பொறாரை உண்டானபோதுஅபகரிக்க வேண்டும் என்னும் எண்ணம் உண்டாகும்.

 

     இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து சிந்திப்போமானால்பிறருடைய ஆக்கம் என்பது ஒருவரது பொருளாதார நிலை மட்டும் அல்லாமல்பதவி நிலையையும் குறிக்கும். பொருள் என்பது உழைப்பால் வருவது. பதவி என்பது தகுதியால் வருவது. ஆனால்பொறாமை காரணமாகதமக்குத் தகுதி உள்ளதா என்பதையும் ஆராயாமல்பிறரது பதவியைக் கண்டு மனம் பொறுக்காமல்அதனை எவ்வாறாயினும் கைப்பற்ற எண்ணுவது கூடாது. நேரிய நெஞ்சத்தை உடையவர் சீரியராகத் திகழ்வார். இன்றைய உலகில்பொருளைப் பற்றிய பொறாமை மட்டும் அல்லாதுபதவிப் பொறாமையும் சேர்ந்துகொண்டு பேயாட்டம் ஆடுகின்றது. பிறர் பதவியை எவ்வாறாயினும் கைப்பற்றுவது பெரிய சாதனையாகவே எண்ணப்படுகின்றது. உள்ளத்தில் செம்மையை உடையவர்பிறருக்கு எவ்விதத்திலும் யாதொரு தீமையும் செய்ய எண்ணமாட்டார். செம்மையான உள்ளம் இல்லாதவர் பிறர் வகிக்கும் பதவியை எந்த வழியிலாவது பெற முனைவார்.

 

     இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறளில், "பிறர் உழைத்துப் பெற்ற நல்ல பொருளை அபகரிக்க எண்ணுதல் அறம் அல்ல. நடுவு நிலையில் இருந்து தவறிஅபகரிக்க எண்ணினால்,அப்படி எண்ணுபவனது குடி அழிவதோடு அல்லாமல்பல பழிக்கும் அவன் ஆளாக நேரும்" என்கி்றார் நாயனார்.

 

"நடுவு இன்றி நன்பொருள் வெஃகின்குடி பொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்".    

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாதிராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....

 

நின் அபிடேகப் பழத்தை நீள்மறையோர்க்கு ஈந்தஇறை

துன்னு குடியோடுஅழிந்தான்,சோமேசா! --- பன்னில்

நடுவுஇன்றி நன்பொருள் வெஃகில்,குடி பொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.

 

இதன் பொருள் ---

 

            சோமேசா! பன்னில் --- ஆராய்ந்து சொல்லுமிடத்துநடுவு இன்றி --- பிறர்க்கு உரியனவற்றைக் கொள்ளுதல் நமக்கு அறம் அல்ல என்னும் நடுவு நிலைமை இல்லாமல்நன்பொருள் --- அவர் கொண்டிருக்கும் நன்பொருளைவெஃகின் --- (ஒருவன்) அபகரிக்கக் கருதுவானாயின்குடி பொன்றி --- அச் செய்கை அவன் குடியைக் கெடச் செய்துகுற்றமும் --- பல குற்றங்களையும்ஆங்கே தரும் --- அப்பொழுதே அவனுக்குத் தந்துவிடும்.  

 

            நின் அபிடேகப் பழத்தை --- உனது அபிடேகத்திற்கு உரியவான வாழைப் பழத்தைநீள் மறையோர்க்கு --- மிக்க அந்தணருக்குஈந்த இறை --- கொடுத்த அரசன்துன்னு குடியோடு அழிந்தான் --- பொருந்திய தனது குடியோடு அழிவடைந்தான் ஆகலான் என்றவாறு.

 

            விதாதா என்னும் அங்கநாட்டு அரசன் ஒருவன் அசித்தன் என்னும் புரோகிதன் சொற்படி நடந்து செங்கோல் செலுத்தும் நாளில்ஒரு நாள் நாரத முனிவர் அங்கு எழுந்தருளி அரசனை நோக்கி, "உன் தந்தை இந்திர பதவி பெற்று இனிது வாழ்கின்றான்உன்னை அறநெறி வழாது நடக்க வேண்டினான்" எனவும்அசித்தனை நோக்கி, "உன் தந்தை நரகில் வருந்துகின்றான். தான் தேடிய நிதியைப் புதைத்த இடம் உனக்குச் சொல்லாது இருந்தான். அது ஒரு தூணின் அடியில் உள்ளதாம். அதனை எடுத்துத் தானம் செய்யச் சொன்னான்" எனவும் கூறிப் போயினார். அவ்வாறே அரசன் பல் அறம் புரிந்து வாழ்ந்திருக்கஅசித்தன் அந் நிதியைத் தூண் ஒன்றின் அடியிலிருந்து எடுத்துக் கோதானம்பூதானம்சொர்ணதானம்கன்னிகாதானம் முதலிய செய்தான். அசித்தன் தந்தையும் நரகத்தின் நீங்கி சுவர்க்கம் அடைந்தான். இந்நிலையில் அரசனும் அசித்தனும் விந்தியமலை சென்றார்கள். அங்குள்ள திவ்விய நதி தீரத்தில் பிராமண போசனம் செய்விக்க ஆசை கொண்டு,பல பண்டங்களையும் வருவித்தார்கள். வாழைப்பழம் ஒன்றுமே கிடைக்கவில்லை. பிராமணர்கள் வாழைப்பழம் இன்றி உண்ணோம் என்னஅரசன் வீமேச்சுரத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் பெருமானுக்கு என விடப்பட்ட தோட்டம் ஒன்றில் வாழைக் கனிகள் வேண்டிய அளவு இருப்பதனை ஓர் அந்தணன் சொல்லக் கேட்டறிந்து,அங்குள்ள வாழைக் குலைகளைத் திருக்கோயிலஅதிகாரிகள் கருத்திற்கு மாறுபட்டுக் கொணர்ந்து பரிமாறினான். இதனால் தேவராசனாய் இருந்த அவன் தந்தை நரகம் புகுந்தான். அவனும் இறந்தபின் நரகத்து அழுந்தினான். இக்காரியத்தின் தொடர்பு உடைய யாவரும் நரகத்தில் பயிர்போல வளர்ந்தார்கள். 

 

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகபிறைசை சாந்தக் கவிராயர் பாடிய நீதி சூடாமணி என்கிற "இரங்கேச வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்.... 

 

முன்னோனைப் போரின் முடுக்கி,விமானத்தை

என்னோ கைக் கொண்டான்?இரங்கேசா! - அன்னோ

நடுவு இன்றி நன்பொருள் வெஃகின்,குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும். 

 

இதன்பொருள்---  

 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! முன்னோனை --- தனக்கு மூத்தவனாகிய குபேரனைபோரின் முடுக்கி --- சண்டையில் வென்றுவிமானத்தை --- அவனுடைய புஷ்பக விமானத்தைஎன்னோ கைக் கொண்டான் --- இராவணன் ஏனோ அபகரித்து (அடியோடு மாண்டான். ஆகையால்இது) நடுவு இன்றி --- நடுவு நிலைமை இல்லாமல்,  நன்பொருள் வெஃகின் --- (ஒருவன்) பிறனுக்கு நன்மை தரும் பொருளை இச்சித்தால்அன்னோ --- அந்தோகுடி பொன்றி --- அவனுடைய குலம் நாசமாய்குற்றமும் ஆங்கே தரும் --- (அக் காரியம் என்றும் அழியாப்) பழியையும் விளைவிக்கும் (என்பதை விளக்குகின்றது).

 

            கருத்துரை--- பிறர் பொருளை இச்சித்து அபகரித்தவன் பெரிதும் நாசமாவான்.

 

            விளக்கவுரை--- இராவணன் தனக்குத் தமையன் முறையான குபேரனைக் கொஞ்சமேனும் கண்ணோட்டமின்றிச் சண்டையிட்டுத் துரத்தி,அவனுடைய புஷ்பக விமானம் முதலிய உயர் பொருள்களைக் கொள்ளையிட்டுக் கொண்டுபோய் இலங்கையில் சேர்த்து வாழ்ந்து வந்தான். ஆனாலும் அவன் வாழ்வு நெடுநாள் நிலைத்திருக்கவில்லை. இப்படிப் பற்பல அநீதிகள் செய்து வந்தான். அவன் இராமாயணப் போரில்ராமன் கை அம்பால் கிளையோடு மாண்டான். மாண்டும்பாவி என்ற நாமம் படைத்துத் தன் குலத்திற்கே பெரும் பழி தேடிக் கொண்டான்.  

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகசிதம்பரம் ஈசானிய மடத்து,இராமலிங்க சுவாமிகள் பாடிய "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

மாண்டு நகரோடு அளறு வாய்ந்தான் பராந்தகக் கோன்

மூண்டு அரன் பூ வெஃகி,முருகேசா! - வேண்டும்

நடுவு இன்றி நன்பொருள் வெஃகின்,குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.     

 

இதன் பொருள் ---

 

     முருகேசா --- முருகப் பெருமானேபராந்தகக் கோன் --- பாரந்தகன் என்னும் சோழ மன்னன்அரன் பூ மூண்டு வெஃகி --- சிவபெருமானுக்குரிய செவ்வந்தி மலர்களை மிகுதியாக விரும்பிஅதனால்நகரோடு மாண்டு அளறு வாய்ந்தான் --- நகரில் உள்ளவர்களோடு இறந்து நரகத்தை அடைந்தான். வேண்டும் --- விரும்பப் படுவதாகியநடுவு இன்றி --- நடுவு நிலைமை இல்லாமல்நன்பொருள் வெஃகில் --- பிறருக்குரிய நல்ல பொருளை விரும்பினால்குடி பொன்றி --- குடியானது கெட்டுகுற்றமும் ஆங்கே தரும் --- குற்றத்தையும் அப்பொழுதே கொடுக்கும்.

 

            சிவபெருமானுக்குரிய மலரை விரும்பிய படியினால் பராந்தகச் சோழன் தன்னுடைய நகரத்தார்களோடு மாண்டு நரகத்தை அடைந்தான். நடுவு நிலைமை இல்லாமல் பிறருக்குரிய பொருளை விரும்பினால் விரும்பியோருடைய குடி கெடுவதல்லாது,அப்பொழுதே குற்றமும் உண்டாகும் என்பதாம். 

 

                                                பராந்தகச் சோழன் கதை

 

            சாரமா முனிவர் என்பவர் சிவபிரானைத் திரிசிரா மலையிலே போற்றி வழிபட்டுக் கொண்டு இருந்தார். ஒரு காலத்தில் பாதலத்தில் இருந்து நாக கன்னிகைகள் செவ்வந்தி மலரைக் கொண்டு வந்து அம்மலரால் இறைவனை வழிபட்டார்கள். அம்மலரின் நறுமணம் முதலிய சிறப்புணர்ந்த முனிவர் தாமும் அப் பெண்களோடு பாதலம் சென்று,செவ்வந்திச் செடியை வாங்கி வந்து பயிரிட்டு,அதன் மலரைக் கொண்டு இறைவனைப் பூசித்து வழிபட்டார். அக்காலத்தில் உறையூரில்அரசு புரிந்திருந்த சோழன் செவ்வந்தி மலர்களின் சிறப்பை உணர்ந்து அவைகளைக் களவு செய்து கொண்டுவரச் செய்து தான் அணிந்து மகிழ்ந்தான். இதனை உணர்ந்த சாரமா முனிவர் மண்மாரி பெய்து உறையூர் அழியுமாறு செய்தார். நகர் அழிந்து ஒழிந்ததும் அரசனும் இறந்து தொலைந்து இறைவனுக்குரிய மலரை விரும்பிய தீவினையால் நரகத்தை அடைந்தான்.

 

     பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

எஃகு எறி செருமுகத்து ஏற்ற தெவ்வருக்கு

ஒஃகினன்உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான்,

அஃகல் இல் அறநெறி ஆக்கியோன் பொருள்

வெஃகிய மன்னன்வீழ் நரகின் வீழ்கயான்.    --- கம்பராமாயணம்பள்ளிபடை படலம்.

 

இதன் பதவுரை ---

 

     எஃகு எறி செருமுகத்து --- ஆயுதங்களை வீசிப் போர் செய்யும் போர்க்களத்து,  ஏற்ற தெவ்வருக்கு ஒஃகினன் --- எதிர்த்துப் போர் புரியும் பகைவர்களுக்கு எதிரே (தானும் போர் செய்யாமல் உயிராசையால்) வணங்கியவன்உயிர் வளர்த்து உண்ணும் ஆசையால் --- உயிரை உடலில் நிலைபெறச் செய்து நெடுநாள் வாழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்கின்றஆசையாலேஅஃகம் இல் அறநெறி ஆக்கியோன் பொருள் வெஃகிய மன்னன் --- சுருங்குதல் இல்லாத பெரிய அறவழியில் பொருள் சேர்த்தவனது பொருளைப் (பேராசைப்பட்டு) கைப்பற்றிக் கொண்ட அரசன்;  வீழ் நரகின் யான் வீழ்க --- (ஆகிய இவர்கள்) விழுகின்ற நரகத்தில் யானும் வீழ்வேனாக. 

 

     எனது அண்ணன் இராமனுக்கு நான் துரோகம் எண்ணி இருந்தால்இன்னவாறான நரகத்திற்கு நான் போகக் கடவேன் என்று கோசலை முன் பரதன் பலவாறாக சபதம் கூறினான். பிரறுடைய பொருளை அபகரித்தவன் வீழும் நரகத்தில் நானும் வீழ்வேனாக என்றான்.

 

     நேர்மையாளன் சீர்மையாய்ச் சிறந்து வாழ்வான். வஞ்சநெஞ்சன் பழிபடிந்துஇழிவடைந்துகுடியிழந்து ஒழிவான்.

 

THE HOUSE OF THE WICKED SHALL BE OVERTHROWN. 

BUT THE TABERNACLE OF THE UPRIGHT SHALL FLOURISH.  --- BIBLE, P.14.11.

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...