பெரியோரைச் சார்தல் நல்லது

 


பெரியோரைத் துணைக் கொள்

-----

 

     கல்வி அறிவுஒழுக்கங்களில் சிறந்தவர்கள் பெரியோர் எனப்படுவர். செக்கு உற்ற எள்ளைப் போல சிந்தை நொந்து வாடாமல்படிக்குகாமம்வெகுளிமயக்கம் என்னும் முக்குற்றங்களை ஒழித்தவர்கள் இவர்கள். அநாதியாக உண்டாகி உள்ள அவிச்சையும் 'அதுபற்றி யான்என மதிக்கும் அகங்காரமும்,அதுபற்றி எனக்கு இது வேண்டும் என்னும் அவாவும்அதுபற்றி அப்பொருட்கண் செல்லும் ஆசையும்அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும்என வடநூலார் குற்றம் ஐந்து என்றார். அவற்றுள்,அகங்காரம் என்பது அவிச்சையிலும்,அவாவுதல் என்பது ஆசையிலும் அடங்குதலால், 'குற்றங்கள் மூன்றுஎன்றார் திருவள்ளுவ நாயனார்.

     தமிழ் நூல்களில்,உயிர்க்கு உள்ள "உட்பகை" என்றும் "அரிட்ட வர்க்கம்" என்றும் சொல்லக் கூடியவை ஆறு. அவைகாமம்குரோதம்லோபம்மோகம்மதம்மாற்சரியம் என்பவை ஆகும். இவற்றில் காமம்மோகம் என்னும் இரண்டும் குறிப்பிடப்பட்டு உள்ளதால், "காமம்" என்னும் சொல்லுக்குசிறப்பாகஆசைவிருப்பம் என்றே பொருள் கொள்ளுதல் வேண்டும். "மோகம்" என்பதற்குகாம மயக்கம்வேட்கைமாயையால் நிகழும் மயக்க உணர்ச்சி என்று பொருள். உள்ளத்தில் தோன்றும் இந்த மாற்றங்களால் உயிர் கேடு அடைகின்றது. எனவேஇவற்றைத் தவிர்த்தல் அவசியம் ஆகின்றது.


     உயிர்க்கு இயல்பாக அமைந்த ஆறு குற்றங்களையும் முறைப்படி ஒழித்தல் வேண்டிதன்னைத் தீயவழியில் செல்லாதவாறு விலக்கிநன்னெறியில் செலுத்தும் பேரறிவு உடையவரைத் தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்என்பதால்குற்றங்கடிதல் வேண்டும் என்று சொன்ன திருவள்ளுவ நாயனார்அதற்குப் பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

     திருமூல நாயனாரும் பெரியாரைத் துணைக்கோடல் வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார்.

 

"நெறிதான் மிகமிக நின்றுஅருள் செய்யும்

பெரியார் உடன் கூடல் பேரின்பம் ஆமே".

         

     நன்னெறியில் உறைத்து நின்றுபிறரையும் அவ்வாறு நிற்கச் செய்து,உலகிற்கு நயம் புரிகின்ற பெரியாருடன் கூடுதலே பேரின்பம் எய்துவதற்கு வழியாகும்.

 

     பேரின்பத்தைத் தருவது நன்னெறி ஆகும். அதற்குச் சரியான உபாயம்நன்னெறியினை உணர்ந்து ஒழுகி,அந்நெறியில் செலுத்த வல்லபெரியாரைத் துணைக் கொள்ளுதல் ஆகும்.

 

     அறிவால் மூத்தவர்கள் சொல்லும் சொற்கள்ஒருவன் தானாகவே செய்ய விரும்பாத நல்ல செயல்களைச் செய்விக்கும் ஆற்றல் வாய்ந்தவை. தீய செயல்களில் செல்ல விரும்பி இருந்தால்அவனை அதில் இருந்து விலக்கும். எனவேமூத்தோர் வாயிலிருந்து பிறக்கும் சொற்கள்முதலில் துன்பம் தருவதாக இருந்தாலும்இறுதியில் இன்பமாகவே முடியும்.  "மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் காயும்முன் துவர்க்கும்,பின் இனிக்கும்" என்பது முதுமொழி. "மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்" என்பது கொன்றைவேந்தன். "முன் இன்னா மூத்தோர் வாய்ச்சொல்" என்னும் பழமொழிக்கு விளக்கமாக, "பழமொழி நானூறு" என்னும் நூலில் ஒரு பாடல்...

 

செயல் வேண்டா நல்லன செய்விக்கும்;தீய

செயல்வேண்டி நிற்பின் விலக்கும்இகல்வேந்தன்

தன்னை நலிந்து தனக்கு உறுதி கூறலால்

முன்இன்னா மூத்தார்வாய்ச் சொல். --- பழமொழி நானூறு.

 

     ஆயிரம் மூடர்களால் செய்ய முடியாத உபகாரத்தைஅறிவுடைய ஒருவரால் செய்ய முடியும். பலவகையான விண்மீன்கள் வானத்தில் இருந்தாலும்பரந்த இருளை அவை போக்க முடிவதில்லை. விண்மீன்கள் இருக்கின்ற அதே வானத்தில் தோன்றுகின்ற நிலவால் மட்டுமே இருளைப் போக்க முடியும்.

 

ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்

மாயிரு ஞாலத்து மாண்பு ஒருவன் போல்கலார்,

பாய்இருள் நீக்கும் மதியம்போல் பல்மீனும்

காய்கலா ஆகும் நிலா.      --- பழமொழி நானூறு.

 

     இரும்பினால் செய்யப்பட்ட கருவிகளைக் கொண்டே இரும்பினை அறுக்க முடியும். மிக்க சுவையான பாயசம் முதலிய நீர் உணவை உண்டவர்களும்நீரைக் கொண்டே வாயைக் கழுவுவர். அதுபோலஅரிய செயல்களைகல்வி கேள்விகளால் சிறந்த பெரியவர்களாலேயே முடித்துக் கொள்ள முடியும் என்கின்றது "நான்மணிக் கடிகை"

 

"இரும்பின் இரும்பு இடை போழ்பபெருஞ்சிறப்பின்

நீர் உண்டார் நீரால் வாய் பூசுப --- தேரின்

அரிய அரியவற்றால் கொள்பபெரிய

பெரியரால் எய்தப் படும்".       ---  நான்மணிக்கடிகை.

 

     பிறப்பு என்பது எல்லாருக்கும் சகஜமாக (இயல்பாகவே) வாய்ப்பது. "பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்" என்றார் திருவள்ளுவ நாயனார். பிறப்புத் துன்பம் அறிய முடியவில்லை. ஆதலால்பிறப்பைப் பற்றி யாரும் கவலைப் படுவது இல்லை. அதை உணர்ந்த மணிவாசகப் பெருமான், "தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரம்" என்றார்.

 

"நனந்தலை உலகத்து அனந்த யோனியில்

பிறந்துழிப் பிறவாது,கறங்கு எனச் சுழன்றுழித்

தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்து

யாய் உறு துயரமும் யான் உறு துயரும்"

 

என்றார் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் பட்டினத்து அடிகளார்

 

இதன் பொருள் ---

 

நனந்தலை உலகத்து அனந்த யோனியில் --- பரந்துள்ள இந்த உலகத்தில் பலவகைப் பிறப்பில்பிறந்துழிப் பிறவாது --- பிறந்த காலத்தும் பிறவாது,கறங்கு எனச் சுழன்றுழி --- காற்றாடியைப் போல அலைந்த காலத்திலும்தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்து --- பிறவி எடுக்கின்ற போது பிறப்பதால் உண்டான துன்பத்தில்யாய் உறு துன்பமும் --- தாயானாவள் அடைகின்ற துன்பமும்யான் உறு துயரமும் --- அவள் வயிற்றில் இருக்கும் நான் அடைகின்ற துயரமும்"

 

     "பிறந்துழிப் பிறவாது" என்னும் சொற்றொடர் சிந்தனைக்கு உரியது. பிறக்க வேண்டிய காலத்தில் பிறவாது உயிர்கள் இருத்தலும் உண்டு என்பது அறிக.

 

உடல்விடா யோனி பற்றி

         உதிப்பினும் உதிக்கும்ஒன்றில்

படர்வுறாது உறும் பாவத்தால்

         பாடாணம் போல் கிடந்து,

கடனதாம் காலம் சென்றால்

         கடுநர கதனில் வீழ்ந்து அங்கு

இடர் உறும் உருவம் கன்மத்து

         அளவினில் எடுக்கும் அன்றே.

 

என்பது சிவஞான சித்தியார்.

 

         உயிர்கள் தாம் செய்த வினைகளின் வன்மை மென்மைக்கு ஏற்ப,வேறு ஓர் உடம்பை எடுக்கும். அதாவது இப்பரு உடம்பை விட்ட பிறகு யாதனா உடம்பை விட்டு நீங்கிய உயிர் மீண்டும் இவ்வுலகத்தில் பரு உடம்பு கொண்டு தோன்றாமல் மற்றொரு யாதனா உடம்பில் புகுதலும் கூடும். சில வேளைகளில் இவ்வுடம்பினை விட்டு நீங்கிய அளவிலே மற்றொரு கருப்பையில் தங்கி மீண்டும் பிறத்தலும் உண்டு. சில வேளைகளில் வேறு உடம்பில் சேராமல் மிகுந்த பாவம் செய்ததனால் கல்லைப் போலக் கிடத்தலும் உண்டு. அவ்வாறு கல்லைப் போலக் கிடந்த உயிர்,உரிய காலம் கழிந்ததன் பின் கொடிய நிரயத்தில் சென்று துயர் உழன்று அதன் பின்னர்ப் பிறத்தலும் உண்டு.

 

         உயிர்கள் உடம்பு விட்டு உடம்பு மாறுவது இவ்வாறு தான் நிகழும் என்று வரையறுத்துக் கூற இயலாது என்ற கருத்து.

 

     எனவேபிறப்பை நினைக்க நமக்கு வருத்தம் உண்டாவது இல்லை என்பது இயல்பே. ஆனால்இறப்பை நினைத்தால்உள்ளம் நடுங்கும். ஐ விளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால் அடிவயிற்றை முறுக்காதோ?” என்பார்  வள்ளலார். 

ஆராய்ந்து பார்த்தால்,பிறவியானது துன்பத்தைத் தருவதுதான். என்றாலும்நல்லோர்களோடு கூடி இருப்பதானல்அதுவும் இன்பமாகவே இருக்கும் என்கின்றது "நாலடியார்".

 

இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும்

பிறப்பினை யாரும் முனியார்; - பிறப்பினுள்

பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோடு எஞ்ஞான்றும்

நண்பாற்றி நட்கப் பெறின்.           ---  நாலடியார்.

 

     மாணிக்கம் என்பதும் ஒரு கல்தான். என்றாலும்அது வாலாயமாக எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. மிகவும் அரிதாகவே கிடைக்கும். அதுபோலவேபெரியோர்களைக் காணக் கிடைப்பதும்,அவர்களோடு இணக்கம் கொண்டு இருப்பதும் அரிதான செயல் ஆகும். அரிய பெரியோரின் இணக்கம் கிடைக்கப் பெறுமானால்,அது ஒருவன் செய்த புண்ணியத்தின் விளைவு என்கின்றது "அறப்பளீசுர சதகம்" என்னும் நூல்.

 

காண அரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதே

     கண் இணைகள் செய்புண் ணியம்;

  கருணையாய் அவர்சொல்மொழி கேட்டிட லபிப்பதுஇரு

     காதுசெய் திடுபுண் ணியம்;

 

பேணிஅவர் புகழையே துதிசெய லபித்திடுதல்

     பேசில்வாய் செய்புண் ணியம்;

  பிழையாமல் அவர்தமைத் தொழுதிட லபிப்பதுகை

     பெரிதுசெய் திடுபுண் ணியம்;

 

வீணெறிசெ லாமலவர் பணிவிடை லபிப்பதுதன்

     மேனிசெய் திடுபுண் ணியம்;

  விழைவொடவர் சொற்படி நடந்திட லபிப்பதே

     மிக்கபூ ருவபுண்ணியம்;

 

ஆணவம் எனுங்களை களைந்தறி வினைத்தந்த

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

 

இதன் பொருள் ---

 

     ஆணவம் எனும் களை களைந்து அறிவினைத் தந்த அண்ணலே --- (எனது மனமாகிய கொல்லையிலே விளைந்துள்ள) நான் நான் என்று தருக்கும் ஆணவமாகிய களையைப் பறித்து எடுத்துஅறிவை அருளிய பெரியோனே --- நல்லறிவை எனக்கு அருளிய பெருமைக்கு உரியவனே!

     அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- எம் அருமையான மதவேள் நாள்தோறும் உள்ளத்தில் வழிபடுகின்ற சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுரதேவனே!

     காண் அரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பது கண் இணைகள் செய் புண்ணியம்--தேடிக் கிடைத்தற்கு அரிய பெரியோர்களின் சேவை கிடைப்பது இரு விழிகளின் நல்வினைப் பயன் ஆகும்

     கருணையாய் அவர் சொல் மொழி கேட்டிட லபிப்பது இரு காது செய்திடு புண்ணியம் --அவர்கள் கருணையோடு கூறும் மொழிகளைக் கேட்கக் கிடைப்பது இரு காதுகளும் செய்த நல்வினை ஆகும்

     அவர் புகழையே பேணித் துதி செய லபித்திடுதல் பேசில் வாய் செய் புண்ணியம் --- அவர்களுடைய புகழையே விரும்பிப் போற்றிடக் கிடைப்பது பற்றிக் கூறினால்,வாய் செய்த நல்வினைப் பயன் ஆகும்

     அவர் தமைப் பிழையாமல் தொழுதிட லபிப்பது கை பெரிது செய்திடு புண்ணியம் --- அவர்களைத் தவறாமல் வணங்கக் கிடைப்பது கைகள் பெரிதும் செய்த நல்வினைப் பயன் ஆகும்

     வீண் நெறி செ(ல்)லாமல் அவர் பணிவிடை லபிப்பது தன் மேனி செய்திடு புண்ணியம் ---பயனற்ற வழிகளில் செல்லாமல் அவர்களுக்குத் தொண்டு செய்யக் கிடைப்பதுதனது உடம்பு செய்திட்ட  நல்வினைப் பயன்ஆகும்

     விழைவொடு அவர் சொற்படி நடந்திட லபிப்பது மிக்க பூருவபுண்ணியம் --- விருப்பத்தோடு அவர் கூறியவாறு நடந்திடும் பாக்கியம் கிடைப்பது முற்பிறப்பில் செய்த பெரிய நல்வினைப் பயன் ஆகும்.

     ஆனால்நம்மைச் சுற்றி இருப்பது எல்லாமே தீமை பயப்பதாகத் தானே இருக்கிறது. தொலைக்காட்சிப் பெட்டிதிரைப்படம்வலைத் தளங்கள்செய்தித் தாள்கள்என்று எங்கு பார்த்ததாலும் பொய்யும்புரட்டும்வஞ்சனையும்கொலைகொள்ளைஏமாற்று வேலை என்று தானே இருக்கிறது. இவை நமது மனத்தைக் கொள்ளை கொள்வதாகவே உள்ளனவே. இவைகளில் இருந்து விடுபடுவதற்கு ஒரே வழிநல்ல வழி என்னவென்று ஔவைப் பிராட்டி கூறும் அறிவுரையைக் கைக்கொள்ளுவோம். பெரியோர்களை நேரில் காணவேண்டும் என்பதில்லை. வாய்ப்பு இருந்தால் காணலாம். வாய்த்தால் அது பெரும் கண்கள் படைத்ததன் புண்ணியம். இல்லையானாலும்,நல்லோரின் சொற்களைக் கேட்கலாம்காது செய்த புண்ணியம். நல்லோரைப் பற்றிப் பேசலாம்அது வாய் செய்த புண்ணியம். அவரோடு இணங்கி இருக்க வாய்க்குமானால்புண்ணியமோ புண்ணியம்.

 

"நல்லாரைக் காண்பதுவும் நன்றே,நலமிக்க

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே, ---நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றேஅவரோ(டு)

இணங்கி இருப்பதுவும் நன்று".         --- மூதுரை.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...