சிறந்த பத்தி

 


சிறந்த பத்தி

---

 

     இறைவனை வழிபடுபவர்கள் நான்கு தரத்தினர் என்று வகைப்படுத்துகின்றது பகவத் கீதை.

 

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோ அர்ஜுன।

ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப॥ 7.16 ॥

 

     வடமொழியில் உள்ள இந்தப் பாடல்களுக்குத் தமிழ் வடிவம் தந்து, "கீதைப்பாட்டு" என்று பாடியுள்ளார் மகாவித்துவான் ராகவையங்கார் அவர்கள்.

 

துன்பினன்,தன்னைத் தெரிபவன்,செல்வம் 

சூழ்பவன்,என்னைத் தெளிபவன் என்று

நன்செயல் நால்வகையார் நரர் என்னை 

நச்சுவர்அர்ச்சன! பாரதர் ஏறே.        --- கீதைப்பாட்டு.

 

     நற்செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். துன்பத்தை அனுபவிப்போர்,அறிவை விரும்புவோர்,பயனை வேண்டுவோர்,ஞானிகள் என நான்கு விதமான நல்லவர்கள் என்னை வழிபடுகிறார்கள் என்று கண்ணன் அருச்சுனனுக்கு அறிவித்தார். 

 

தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விஷிஷ்யதே।

ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ அத்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய:॥ 7.17 ॥

 

எத் தருணமும் எனை இயைந்த ஒரு பத்தி 

யேயுடைய ஞானி,இவருள் தலைவன் ஆவன்,

இத்தனை எனாமல் அவனுக்கு இனியன் யானால்,

எற்கு இனியன் ஆவனவனும் இ துமெய் அன்றோ.--- கீதைப்பாட்டு.

 

     அவர்களில் நித்திய யோகம் பூண்டு ஒரே பத்தி உணர்வோடு இருக்கும் ஞானியே சிறந்தவன். அவன் எனக்கு மிகவும் இனியவன். நானும் அவனுக்கு மிகவும் இனியவன் ஆவேன்.

 

     திருமாலுக்கு, "சிஷ்டேஷ்ட" என்று ஒரு பெயர் உண்டு. சீடர்களால் விரும்ப்படுகின்றவன் என்று பொருள். போற்றுதற்கு உரியவன் இறைவனே என்னும் மெய்யறிவு உண்டானபடியால்இப்படிப்பட்டவரிடத்து என்றும் மாறாத பத்தி உண்டாகின்றது. தனக்கு உயிருக்கு உயிராக இருப்பவன் இறைவன் என்பதை அறிந்த பின்னர் அத்தகைய அன்பு உண்டாகின்றது.

 

     இறைவனுக்கு மிகப் பிரியமான இவர்கள் எக்காலத்தும் இறைவனையே வழிபட்டுக் கொண்டு இருப்பார்கள். எந்தவிதமான இடையூறு வந்தாலும்இறைவனை மறக்கமாட்டார்கள். எனவே,அவர்களுக்கு உண்டாகும் துன்பத்தைஅவர்கள் வேண்டாமலேயேதக்க விதத்தில் தீர்த்து அருள் புரிகின்றான் இறைவன். இவர்கள் மோட்சம் என்னும் வீடுபேற்றை விரும்புபவர்கள் அல்லர்.கூடும் அன்பினில் கும்பிடுவதையே விரும்பி இருப்பார்கள்.

 

"கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்

ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்

கூடும் அன்பினல் கும்பிடலே அன்றி

வீடும் வேண்டா விறலின் விளங்கினார்" 

 

என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் இவர்களை அடையாளம் காட்டினார்.

 

     தில்லைக் கூத்தனைக் கண்ணாரக் கண்டு வணங்கும் பேறுபெற்ற பிறகுதான்தாம் எப்படிப்பட்ட அருமையான பிறவியை எடுத்து வந்துள்ளோம் என்று அப்பரடிகள் மகிழ்ந்தார். பெருமானை வழிபட்டு மகிழ்வததானால்இந்தப் பிறவி வேண்டத்தக்கதே என்று எண்ணி மகிழ்ந்து,

 

"குனித்த புருவமும்கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்,

பனித்த சடையும்,பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்,

இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்,

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே"

 

என்று பாடிநமக்கு எல்லாம் ஒரு சிறந்த நல்வழியைக் காட்டி அருள் புரிந்தார்.

 

     பொதுவாகவேஎல்லா அடியவர்களும் பிறவி வேண்டாம் என்றுதான் கூறிப் போந்தார்கள். ஆனால்அப்பர் பெருமான்இறைவனைக் கண்ணாரக் கண்டு வழிபடும் பேறு கிடைக்குமானால்இந்த மனிதப் பிறவியும் வேண்டத் தக்கதே என்றார்.

 

     கற்பனைக் களஞ்சியம் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், "சோணசைல மாலை" என்னும் நூலில், "நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும்",திருவண்ணாமலையாரை வேண்டிப் பாடிய அருமையான பாடல்,அப்பர் பெருமான் தேவாரப் பாடல் கருத்தை உட்கொண்டு இருத்தலைக் காணலாம். "நால்வர் நான்மணி மாலை" என்னும் ஓர் அற்புதமான நூலைப் பாடிய சிவப்பிரகாச சுவாமிகள்பொருள் உணர்ந்து ஓதித் திருமுறைகளில் தோய்ந்தவர் என்பது இதனால் விளங்கும்.

 

"விரைவிடை இவரும் நினைப் பிறவாமை

      வேண்டுநர் வேண்டுகமதுரம்

பெருகுறு தமிழ்ச்சொல் மலர்நினக்கு அணியும்

      பிறவியே வேண்டுவன் தமியேன்;

இருசுடர் களும்மேல் கீழ்வரை பொருந்த

      இடைஉறல் மணிக்குடக் காவைத்

தரையிடை இருத்தி நிற்றல்நேர் சோண

     சைலனே கைலை நாயகனே.      --- சோணசைலமாலை.     

 

இதன் பொருள் ---

 

     சூரியன் சந்திரன் ஆகிய இரு சுடர்களும் மேல்மலைகீழ்மலை ஆகியவற்றில் விளங்கஇடையில் மலைவடிவமாக நிற்றல் இருபுறத்தும் குடங்களைக் கொண்ட காவடியைத் தரையில் வைத்து நிற்பவரைப் போலத் தோன்றும் சோணசைலப் பெருமானே! திருக்கயிலையின் நாயகனே! விரைந்து செல்லும் இடப வாகனராகிய தேவரீரிடத்தில் பிறவாமை வேண்டுவோர் வேண்டுவோராகுக. இனிய தமிழ்ச் சொற்களால் ஆன பாமாலையை தேவரீருக்கு அணிவிக்கக் கூடிய மனிதப் பிறவியையே அடியேன் வேண்டுகின்றேன்.

 

     நிறைநிலா நாளில் சூரியன்மேற்கில் அத்தகிரியை அடையும்போதுசந்திரன் உதயகிரியில் கிழிக்குத் திசையில்  உதிப்பதால்இடையில் உள்ள திருவண்ணாமலைக்கு இருபுறமும் காவடியைப் போல் சூரிய சந்திரர்கள் அமைந்துள்ளதாகக் கற்பனை வளம் காட்டிப் பாடுகின்றார். காவப்படுதலின்காவடி என வழங்கும்.

 

     திருவிளையாடல் புராணம்திருவாலவாய் ஆன படலத்தில் வரும் இந்தப் பாடல்,திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தமிழ்வேதமாகிய திருப்பதிகங்களைத் திருச்செவியில் மடுத்து அருளும் சொக்கநாதப் பெருமானுடைய திருப்புகழை நாமும் பாடி வழிபடுவோமானால்,இந்தப் பிறவி விரும்பத் தக்கதே ஆகும் என்கின்றது.

 

பாய் உடையார் விடுத்தபழி அழல்வழுதி

     உடல்குளிப்பபதிகம் ஓதும்

சேய் உடை ஆரணம் திளைக்கும் செவிஉடையார்

     அளவிறந்த திசைகள் எட்டும்

தோய்உடையார்,பொன்இதழித் தொடைஉடையார்,

     விட அரவம் சுற்றும் ஆல-

வாய் உடையார் புகழ்பாடப் பெறுவேமேல்,

     வேண்டுவது இம் மனித யாக்கை.

 

இதன் பொருள் ---

 

     பாயை ஆடையாக உடுத்துபொய்த் தவம் புரிந்து உழலுகின்ற சமணர்கள்தமது திருமடத்தின்கண் தீயிட்டதால் உண்டாக்கி வைத்த பழிக்கு ஏதுவாகிய நெருப்பு,பாண்டியன் உடலில் சென்று பற்றுமாறு,  திருப்பதிகத்தைப் பாடியருளுகின்றதிருஞானசம்பந்தப் பிள்ளையாரின் தமிழ்வேதத்தை இடையறாது கேட்டு அருளும் திருச் செவியினை உடையவரும்எல்லையின்றிப் பரந்துள்ள எட்டுத் திக்குகளையும் பொருந்திய ஆடையாக உடையவரும்(திகம்பரர்),பொன்போன்ற கொன்றை மாலையை அணிந்தவரும்,நஞ்சினை உடைய பாம்பினால் கோலி வரையறுக்கப்பட்ட திருவாலவாய் என்னும் திருத்தலத்தைத் தமது பதியாகஉடையவரும் ஆகிய சோமசுந்தரப் பெருமானுடையதிருப்புகழைப் பாடுகின்ற பாக்கியத்தைப்பெறுவோமானால்இந்த மனித உடம்பு நமக்கு வேண்டுவதே ஆகும்.

 

     இதேகருத்தை, "கோயில் புராணம்" வலியுறுத்துவதையும் பின்வரும் பாடல்களால் அறியலாம்..

 

"மறந்தாலும் இனி இங்கு

     வாரோம் என்று அகல்வர் போல்

சிறந்து ஆர நடம் ஆடும்

     திருவாளன் திருவடி கண்டு,

இறந்தார்கள்,பிறவாத

     இதில் என்ன பயன்வந்து

பிறந்தாலும் இறவாத

     பேரின்பம் பெறலாம்ஆல்".

 

இதன் பொருள் ---

 

     இனி இந்தப் பூதலத்தில் மறந்தும் வந்து பிறக்கமாட்டோம் என்று இந்தப் பிறவியினை வெறுத்து வழித்துச் சென்றவர்களைப் போல

உயிர்களுக்குத் திருவருள் சிறக்கத் திருநடம் புரிகின்ற திருவாளன் ஆகிய பெருமானின் திருவடிகளைத் தரிசித்து,இந்தப் பிறவியை நீத்து சிவபதத்தை அடைந்தவர்கள்,மீட்டு இங்கு வந்து வினைப் பிறவியைச் சாராத தன்மையினால் என்ன பயன் உண்டு? (ஒரு பயனும் இல்லை)

மீண்டு வந்து இந்த பூவுலகில் பிறந்தாலும்இறைவன் திருக்கூத்தைக் கண்டு மகிழ்கின்றதால் உண்டாகும் ஒழியாத பேரின்பத்தைப் பெறலாமே.

 

     இந்த உண்மை அனுபவத்தைதில்லையில் திருநடம் கண்டு மகிழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் அனுபவித்ததாக,தெய்வச் சேக்கிழார் பெருமான் தமது பெரியபுராணத்தில் பின்வருமாறு பாடி நம்மைத் தெளிவித்து அருளுகின்றார்.

 

"தெள்நிலா மலர்ந்த வேணியாய்! உன்றன்

   திருநடம் கும்பிடப் பெற்று

மண்ணிலே வந்த பிறவியே எனக்கு

   வாலிதாம் இன்பமாம் என்று,

கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியக்

   கைம்மலர் உச்சிமேல் குவித்துப்

பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்

   பாடினார்பரவினார்பணிந்தார்".

 

இதன் பொருள் ---

 

     வெண்மையான இளம்பிறை விளங்கும் திருச் சடையை உடை பெருமானே! உன்னுடைய ஆனந்தத் திருக்கூத்தைக் கண்டு வழிபாடு செய்யப் பெற்றுஇந்நிலவுலகத்தில் வந்த மானிடப் பிறவியே எனக்கு மேலான இன்பம் என்றுகண்களில் இருந்து இன்பக் கண்ணீர் அருவியாகச் சொரியகைகளாகிய மலர்களைத் தலைமிசை வைத்துக் குவித்துஇசையோடு கூடிய அறிதற்கு அரிய திருப்பதிகத்தை இசைத்தார். போற்றினார்வணங்கினார்.

 

     இத்தகைய சிறந்த ஞானியர்களில் ஒருவராகிய பட்டினத்து அடிகளார் "தேவதேவனே! உனது அடியார்களுடன் கூடி இருந்துதேவரீர் இயற்றுகின்ற தெய்வக் கூத்தும்செய்ய திருவடியும் வணங்கப் பெறுகின்ற பெரும் செல்வமானது அடியேனுக்கு வாய்க்கப் பெறுமானால்வானவர் வாழ்வு எனக்கு வந்தாலும்அல்லாது நரக வேதனை வந்தாலும்உலகவர் என்னை நல்லவன் என்று போற்றினாலும்அன்றி தீயவன் என்று என்னை இகழ்ந்தாலும்எல்லா நலங்களயும் அடைந்தாலும்அல்லது எல்லாத் தீமைகளையும் அனுபவிக்க நேர்ந்தாலும்என்றும் இளமையோடு இருந்தாலும்அல்லாது இன்றே இறக்க நேர்ந்தாலும்,இவைகளால் அடியேன் விருப்பு வெறுப்பினை அடைவதில்லை. எனக்குக் கிடைத்தற்கு அரிய மிகப்பெரும் செல்வமானது எனக்குக் கிடைத்து விட்டதால்மற்ற எதைப் பற்றியும் எனக்குக் கவலையும் இல்லை,மகிழ்ச்சியும் இல்லை" என்று "கோயில் நான்மணி மாலை" என்னும் நூலில் பாடி உள்ளார்.

 

ஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக்

குதிகொள் கங்கை மதியின் மீது அசைய,

வண்டு இயங்கு வரைப்பின் எண்தோள் செல்வ!

ஒருபால் தோடும் ஒருபால் குழையும்

இருபாற் பட்ட மேனி எந்தை!

 

ஒல்ஒலிப் பழனத் தில்லை மூதூர்

ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்

இமையா நாட்டத்து ஒருபெருங் கடவுள்!

வானவர் வணங்கும் தாதை யானே!

மதுமழை பொழியும் புதுமந் தாரத்துத்

 

தேன் இயங்கு ஒருசிறைக் கானகத்து இயற்றிய

தெய்வ மண்டபத்து ஐவகை அமளிச்

சிங்கம் சுமப்ப ஏறி,மங்கையர்

இமையா நாட்டத்து அமையா நோக்கம்

தம்மார்பு பருகச் செம்மாந்து இருக்கும்

 

ஆனாச் செல்வத்து வானோர் இன்பம்

அதுவே எய்தினும் எய்துக,கதும் எனத்

தெறு சொலாளர் உறுசினம் திருகி

எற்றியும்,ஈர்த்தும்,குற்றம் கொளீஇ

ஈர்ந்தும்,போழ்ந்தும்,எற்றுபு குடைந்தும்,

 

வார்ந்தும்,குறைத்தும்,மதநாய்க்கு ஈந்தும்,

செக்கு உரல் பெய்தும்,தீநீர் வாக்கியும்,

புழுக்கு உடை அழுவத்து அழுக்கியல் சேற்றுப்

பன்னெடுங் காலம் அழுந்தி,இன்னா

வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர்

 

நிரயம் சேரினுஞ் சேர்க;உரையிடை

ஏனோர் என்னை ஆனாது விரும்பி

நல்லன் எனினும் என்க;அவரே

அல்லன் எனினும் என்க;நில்லாத்

திருவொடு திளைத்துப் பெருவளஞ் சிதையாது

 

இன்பத் தழுந்தினும் அழுந்துக;அல்லாத்

துன்பந் துதையினும் துதைக;முன்பின்

இளமையொடு பழகிக் கழிமூப்புக் குறுகாது

என்றும் இருக்கினும் இருக்கஅன்றி

இன்றே இறக்கினும் இறக்க;ஒன்றினும்

 

வேண்டலும் இலனே,வெறுத்தலும் இலனே;

ஆண்டகைக் குரிசில் நின் அடியரொடு குழுமித்

தெய்வக் கூத்தும்நின் செய்ய பாதமும்

அடையவும் அணுகவும் பெற்ற

கிடையாச் செல்வம் கிடைத்த லானே.   --- பட்டினத்தடிகள்.

 

பொருள் ---  

 

     ஈர வேரித் தார் வழங்கு சடிலத்து --- குளிர்ச்சியும்நறுமணமும் உள்ள கொன்றைமாலை தங்கியுள்ள திருச்சடையில்,குதி கொள் கங்கை --- வேகமாகப் பாய்கின்ற கங்கை நதியினைமதியின் மீது அசைய --- பிறைச் சந்திரனின் மீது முடித்துள்ளஎண்தோள் செல்வ --- எட்டுத் திருத்தோள்களை உடைய பெருமானே! ஒருபால் தோடும் --- ஒரு பாகத்தில் தோடும்,ஒருபால் குழையும் --- ஒரு பாகத்தில் குழையும் ஆ,இருபாற் பட்ட மேனி எந்தை --- இரு வகைப்பட்ட திருமேனியினைக் கொண்ட எமது தந்தையே!ஒல்லொலி வண்டு இயங்கு வரைப்பின் --- வண்டுகள் ஒலிக்கின்ற எல்லைகளை உடைபழனத் தில்லை மூதூர் --- வயல்களால் சூழப்பட்டுள்ள திருத்தில்லை என்னும் பழம்பதியில்ஆடகப் பொதுவில் --- பொன்னம்பலத்தில்நாடகம் நவிற்றும் --- திருநடம் புரிந்து அருளுகின்,இமையா நாட்டத்து --- இமையாத திருக்கண்களை உடைரு பெரும் கடவுள் --- ஒப்பற்ற பெரும் தெய்வமே!வானவர் வணங்கும் தாதையானே --- வானவர்கள் பணிந்து வணங்குகின்ற தந்தை ஆனவனே!ஆண்டகைக் குரிசில் --- ஆண் தன்மை நிறைந்து பெருமையில் சிறந்தவனே! நின் அடியரொடு குழுமி --- தேவரீரது அடியார் பெருமக்களுடன் கூடியிருந்துதெய்வக் கூத்தும் --- தேவரீர் இயற்றுகின்ற தெய்வத் தன்மை பொருந்திய திருக்கூத்தினையும்நின் செய்ய பாதமும் --- தேவரீரது திருவடித் தாமரைகளையும்அடையவும் அணுகவும் பெற்ற --- அடைந்து அனுபவிக்கப் பெற்ற,கிடையாச் செல்வங் கிடைத்தலான் --- பெறுதற்கு அரிய பெருஞ்செல்வமாகிய பேறு அடியேனுக்குக் கிடைக்கப் பெறுதலால்புது மந்தாரத்து --- புதிதாகிய மந்தார மரத்தினின்று,  மதுமழை பொழியும் --- மழை போலச் சொரிகின்ற தேனை உண்ண,தேன் இயங்கு --- தேன் ஒண்டுகள் உலாவுகின்ஒருசிறை ஒரு பக்கத்தில்கானகத்து இயற்றிய --- காட்டில் உண்டாக்கப்பட்டதெய்வ மண்டபத்து --- தெய்வத் தன்மை பொருந்திய மண்டபத்தில்ஐவகை அமளி --- ஐவகையாகிய படுக்கையில்சிங்கம் சுமப்ப ஏறி --- சிங்கங்கள் தாங்குகின்ற அந்த படுக்கையில் ஏறி இருந்துங்கையர் --- அழகிய பெண்களின்இமையா நாட்டத்து அமையா நோக்கம் --- இமைக்காத கண்களுக்கு நிரம்பாத அழகினை உடை,அம் மார்பு பருக --- அழகிய கொங்கைகளின் இன்பத்தை அனுபவித்துசெம்மாந்து இருக்கும் --- பெருமிதத்தோடு களித்து இருக்கின்,ஆனாச் செல்வத்து --- அழியாத செல்வத்தினைப் பெற்ற,வானோர் இன்பம் அதுவே --- தேவலோகத்து இன்பமே (சுவர்க்க இன்பம்)  எய்தினும் எய்துக --- வந்தாலும் வரட்டும்கதும் என --- முன்னறிதல் ஏதும் இல்லாமல் திடீர் என்றுதெறு சொலாளர் உறு சினம் திருகி --- வெடித்த சொற்களை உடைய இயம தூதர்கள்மிக்க சினத்துடன் வந்து,எற்றியும் --- எறிந்தும்ஈர்த்தும் --- இழுத்தும்குற்றம் கொளீஇ --- என் மீது குற்றம் சுமத்திஈர்ந்தும் --- அரிவாளால் அரிந்தும்போழ்ந்தும் --- வாளால் பிளந்தும்எற்றுபு குடைந்தும் --- உடலை வீசித் தொளைத்தும்வார்ந்தும் --- ஆயுதங்களால் கீறியும்,குறைத்தும் --- உறுப்புக்களை அறுத்தும்மத நாய்க்கு ஈந்தும் --- வெறிகொண்ட நாய்களுக்கு இரையாகத் தந்தும்செக்கு உரல் பெய்தும் --- செக்காகிய உரலில் இட்டு நசுக்கியும்,தீ நீர் வாக்கியும் --- கொதிக்கும் நீரை என் மேல் சொரிந்தும்புழுக் குடை அழுவத்து --- புழுக்கள் நெளி்து குடைந்து செல்கின்அழுக்கு இயல் சேற்று --- பலவாகிய மலங்கள் தங்கியுள்ள சேற்றில்பன்னெடுங் காலம் அழுந்தி --- அளவு படாத காலம் அழுந்தச் செய்துஇன்னா--- கொடுமையானவரை இல் தண்டத்து --- அளவு படாத தண்டனைகளை அனுபவிக்கத் தந்துமாறாக் கடுந் துயர்நிரயம் சேரினும் சேர்க --- மாறுதல் இல்லாத மிக்க துன்பத்தை உடைய நரக வேதனை அடைந்தாலும் அடையட்டும்உரை இடை --- எனது சொற்களால்ஏனோர் --- அயலவர்கள்,என்னை ஆனாது விரும்பி --- என்னை (தீயவன் என்று வெறுக்காமல்) மிகவும் விரும்பிநல்லன் எனினும் என்க --- இவன் நற்குண நற்செய்கைகளை உடையவன் என்று சொன்னாலும் சொல்லட்டும்,அவரேஅல்லன் எனினும் என்க --- என்னை மிகவும் மதித்த அந்த அயலவர்களே என்னை இவன் நல்லவன் அல்லன் (தீயவன்) என்று சொன்னாலும் சொல்லட்டும்நில்லாத்திருவொடு திளைத்து --- ஓரிடத்திலும் நிலைபெறாத செல்வத்தினால் வந்த இன்பத்தில் திளைத்து,பெருவளம் சிதையாது --- மிக்க வளமானது சிறிதும் குறையாதுஇன்பத்து அழுந்தினும் அழுந்துக --- இன்பத்தில் முழுகி இருந்தாலும் இருக்கட்டும்அல்லாத்துன்பம் துதையினும் துதைக --- அவ்வாறு அல்லாமல் மிக்க துன்பத்தை அனுபவிப்பதாக ஆனாலும் ஆகட்டும்முன்பின்--- வலிமையால்இளமையொடு பழகி --- இறைமைப் பருவத்துடன் இருந்து,கழிமூப்புக் குறுகாது --- மிக்க முதுமையானது என்னை நெருங்காதுஎன்றும் இருக்கினும் இருக்க --- என்றும் இளமையோடு இருந்தாலும் இருக்கட்டும்அன்றி --- அல்லாமல்இன்றே இறக்கினும் இறக்க --- இன்றே இறப்பதாக இருந்தாலும் அவ்வாறே ஆகட்டும்,ஒன்றினும்வேண்டலும் இலனே --- ஒன்றையும் நான் விரும்பதலும் இல்லை. வெறுத்தலும் இலனே --- வெறுத்து ஒதுக்குதலும் இல்லை.

 

     அடியவர்கள் எப்போதும் இறைவன் திருவடியை மறவாது இருப்பவர்கள். இந்த நிலையை அவர்கள் ஆண்டவனிடமும் வேண்டிப் பெறுவார்கள். பிறவாமை வேண்டும்மீண்டும் பிறப்பு உண்டேல்,உன்னை என்றும் மறவாமை வேண்டும்” என்று வேண்டுகின்றார் காரைக்காலம்மையார்.புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவாது இருக்க வரம் தரல் வேண்டும்” என்கிறார் அப்பரடிகள்.

 

எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும்

     எய்துகபிறப்பில் இனிநான்

எய்தாமை எய்துகினும் எய்திடுகஇருமையினும்

     இன்பம் எய்தினும் எய்துக,

வழுவகைத் துன்பமே வந்திடினும் வருக

     மிகுவாழ்வு வந்திடினும் வருக,

வறுமை வருகினும் வருகமதிவரினும் வருகஅவ

     மதிவரினும் வருகஉயர்வோடு

இழிவகைத்து உலகின் மற்று எதுவரினும் வருகஅலது

     எது போகினும் போகநின்

இணைஅடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம்

     எனக்கு அடைதல் வேண்டும் அரசே,

கழிவகைப் பவரோகம் நீக்கும் நல்அருள் என்னும்

     கதிமருந்து உதவு நிதியே

கனகஅம் பலநாத கருணைஅம் கணபோத

     கமலகுஞ் சிதபாதனே.               --- திருவருட்பா.

 

     பெருமானே! தேவர்மனிதர்விலங்குபறவைஊர்வனநீர்வாழ்வனதாவரம் என்ற இந்த ஏழுவகைப் பிறவிகளில் எந்தப் பிறவியிலேனும் அடியேன் பிறக்கத் தயார். அது பற்றிச் சிறியேனுக்குக் கவலையில்லை. ஒருவேளை பிறவாமை வந்தாலும் வரட்டும். இம்மை மறுமையில் இன்பமே வருவதேனும் வரட்டும். அல்லது துன்பமே வருவதாயினும் சரிஅது பற்றியும் அடியேனுக்குக் கவலையில்லை. சிறந்த வாழ்வு வந்தாலும் வரட்டும்பொல்லாத வறுமை வருவதாயினும் நன்றே.எல்லோரும் என்னை நன்கு மதிப்பதாயினும் மதிக்கட்டும்அல்லது சென்ற சென்ற இடமெல்லாம் அவமரியாதை காட்டி,`வராதே! திரும்பிப் போ’ என்று அவமதி புரிந்தாலும் புரியட்டும்.  உயர்வும் தாழ்வும் கலந்துள்ள இந்த உலகிலே,மற்று எது வந்தாலும் வரட்டும்எது போனாலும் போகட்டும்.  இறைவனே! எனக்கு இவைகளால் யாதும் கவலையில்லை. ஒரே ஒரு வரத்தினை உன் பால் யாசிக்கின்றேன்.  உனது இரண்டு சரணாரவிந்தங்களையும் சிறியேன் மறவாமல் இருக்கின்ற மனம் ஒன்று மட்டும் வேண்டும். அந்த வரத்தை வழங்கியருள வேண்டும் என்று வடலூர் வள்ளல் வேண்டுகின்றார். என்ன அழகிய வரம்?

 

     நாரதர் ஒரு சமயம் முருகனை வேண்டித் தவம் புரிந்தனர். முருகவேள் தோன்றி, "என்ன வரம்வேண்டும்?"என்று கேட்டருளினார். நாரதர், "ஐயனே! உன் திருவடியை மறவாத மனம் வேண்டும்என்றார். முருகன் அந்த வரத்தை நல்கி விட்டு, "இன்னும் ஏதாவது வரம் கேள்தருகிறேன்என்றார். நாரதர்"பெருமானே! இன்னொரு வரத்தைக் கேட்கின்ற கெட்ட புத்தி வராமல் இருக்க அருள் புரிய வேண்டும்என்று கேட்டார்.

 

            இறைவன் திருவடியில் பத்தி செலுத்துவதுவீடுபேற்றையும் வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளுகின்றமேலான ஆனந்த நிலையை அடைவிக்கும். அதனையே ஞானிகள் விரும்பி இருப்பார்கள். உலகியலில் எந்த செல்வம் வந்தாலும்போதும் என்ற நிறைவு உண்டாகாது. எல்லாம் தனக்கு வேண்டும் என்று தோன்றும். ஆனால்இறைவன் திருவடி வழிபாட்டில் உண்டாகும் இன்பத்தை அனுபவித்த பிறகுஉலகியல் இன்பங்கள் எதிலும் பற்று உண்டாவதில்லை.

 

"வேண்டேன் புகழ்வேண்டேன் செல்வம்

     வேண்டேன் மண்ணும்விண்ணும்;

வேண்டேன் பிறப்புஇறப்புசிவம் 

     வேண்டார் தமை நாளும்

தீண்டேன்சென்றுசேர்ந்தேன்மன்னு

     திருப்பெருந்துறைஇறை தாள்

பூண்டேன்புறம் போகேன்இனி

     புறம்போகல் ஒட்டேனே!"       --- திருவாசகம்.

 

            மணிவாசகப் பெருமான்இரத்தினச் சுருக்கமாகதனது அனுபவத்தைப் பாடி உள்ளார்."நான் பிறந்தும் இறந்தும் உழல்வதை விரும்பவில்லைஆகையால்நான் புகழை விரும்பவில்லை. பொருளை விரும்பவில்லை. மண்ணுலக வாழ்க்கையையோ,விண்ணுலக வாழ்க்கையையோ விரும்பவில்லை. சிவத்தை விரும்பாத புறத்தாரைஒரு நாளும் நான் தீண்டவும் மாட்டேன் நிலைபெற்ற திருப்பெருந்துறை இறைவனது திருவடியைச் சென்று அடைந்தேன்இறைவன் திருவடியையே எனக்கு அணியாகவும் கொண்டேன்இனிமேல் அதனை விட்டு நீங்கமாட்டேன். என்னை விட்டு இறைவன் திருவடி நீங்குவதற்கும் இசையமாட்டேன்.

 

            என்னவென்று சொல்லுவதுஇத்தகு உன்னதமான நிலை நமக்கு வாய்க்க இறைவன் திருவருளை வேண்டுவோம்.

     

     என் ராமருக்கு முன்னேபொன்னாவது?பொருளாவது “நிதி சால சுகமா?ராமுநி சன்னிதி சேவ சுகமா?நிஜமுக பல்கு மனஸா” செல்வம் மிகுந்த இன்பத்தை அளிக்கக் கூடியதா?அல்லது ராமனின் சன்னதியில் சேவை புரிவது சுகம் தருமாமனமே! உண்மையைக் கூறுவாய் என்று தன்னையே கேட்டுக்கொண்டு தியாகராஜர்நிதி சால சுகமா’ என்று கல்யாணி ராகத்தில் பாடிய பாடல் என்ன சுகம்!!!!!  இது அல்லவோ உன்னதமான பத்தி!!!!

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...