இறைவன் உயிர்களைத் தண்டிக்கும் விதம்

 


இறைவன் உயிர்களைத் தண்டிக்கும் விதம்

-----

 

     "தப்புச் செய்தால் சாமி கண்ணைக் குத்தும்" என்னும் ஆப்தமொழியைப் பற்றி முன்பு பார்த்தோம்.

 

     உயிர்கள் இன்பத்தை விரும்புவது அன்றிதுன்பத்தை ஒருபோதும் விரும்புவது இல்லை. அறிவும்ஆற்றலும்அழகும்செல்வமும்வாழ்நாளும் குறைந்து நிற்றலையும் விரும்புவது இல்லை. ஆனால்துன்பத்தைத் தருகின்றதும்அறிவுக் குறைவுஆற்றல் இன்மைஅழகு இன்மைசெலவம் இன்மைஅற்ப வாழ்நாள் ஆகியவற்றைத் தருகின்ற காரணத்தை உயிர்கள் விரும்புகின்றன. குறைபாடுகளைத் தருவது இறைவனின் விருப்பம் அல்ல.

 

     உலகவாழ்வில் ஏதோ இன்பம் மிகுந்து இருப்பதைப் போல எண்ணிக் கொண்டு அதனை அனுவிப்பதற்கு பிறப்பை உயிர்கள் விரும்புகின்றன. ஆனால்உலக வாழ்வில் இன்பம் என்பது முட்செடியில் உள்ள மலர் போன்று உள்ளது. முட்களால் துன்புற்ற பிறகேமுட்செடியில் உள்ள மலரைப் பறிக்க முடிகின்றது. அதாவதுபெரும் துன்பத்தின் பயனாகவே சிறிது இன்பம் உண்டாகின்றது. எனவேஉலக இன்பத்தை விரும்புவதே துன்பமாகத் தான் உள்ளது. இருந்தும் உலக வாழ்வை விட்டுவிட யாரும் நினைப்பது இல்லை.

 

     ஓர் உயிர்தான் துன்பத்தை விரும்பாது இன்பத்தை விரும்புவது போலவேபிற உயிர்களும் துன்பத்தை விரும்பாது இன்பத்தையே விரும்புகின்றன என்பதை உணர்ந்துபிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாது இருத்தல் வேண்டும். இதுதான் நீதி.  இந்த நீதிநெறி தவறிதீங்கு செய்தால்தண்டிக்க வேண்டிய அவசியம் உண்டாகின்றது. தண்டிப்பது துன்புறுத்துவதற்கு அல்ல. தண்டிப்பது என்பதோதுன்புறுத்துவது என்பதோதலைமைப் பண்பில் உள்ள ஒருவருக்கு விருப்பமான செயலாக இருந்துவிடக் கூடாது. கடமையாக இருத்தல் வேண்டும். தவறு செய்தவன் திருந்துவதற்குத் தண்டித்தல் வேண்டும். இதனை, "முறைசெய்தல்" என்று நூல்கள் கூறும்.

 

     தவறு செய்த ஒருவரைச் சிறையில் இட்டுசிலகாலம் வைத்திருப்பதுஅவரைத் துன்புறுத்துவதற்கு அல்ல. தவறு செய்தவரைஅதற்குரிய சூழலில் இருந்து விலக்கிதனிமைப்படுத்திசிந்திக்க வைத்துதிருந்துவதற்கு ஒரு நல்வாய்ப்பை உண்டுபண்ணவே ஆகும். வெளியில் இருந்தால்வேளைக்கு உண்ணாவதவன் கூடசிறையில் இருந்தால்மணி அடித்தால்உண்ணவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றான். தவறு செய்தவனைத் துன்புறுத்துவதுதான் நோக்கமாக இருந்தால்வேளா வேளைக்கு உணவு கொடுக்கவேண்டாமே

 

     இதுபோலவேபிற உயிர்களுக்குத் தீங்கு செய்த உயிர்களை இறைவன்இழி பிறப்பையும்உடல் குறைவையும்வறுமையையும் தருவதன் மூலம் தண்டிக்கின்றான். அதுவும்உயிர்கள் மீது வைத்த கருணையே ஆகும்.

 

     தாய்தந்தையர் தமது பிள்ளைகள் நல்வழிப்பட்ட வேண்டும் என்பதற்காக, "தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்" என்றெல்லாம் சொல்லி வளர்ப்பார்கள். அந்த அச்சுற்றுத்தல் பலன் தராதபோதுஅடித்தும்கட்டி வைத்தும் தண்டனை கொடுப்பார்கள். இதுவும் தமது பிள்ளைகள் மீது வைத்த அன்பின் வெளிப்பாடுதான். அதுபோலவேஇறைவன் உயிர்களைத் தண்டிப்பதும் ஆகும்.

 

     அனுக்கிரகம்நிக்கிரகம் என்னும் அறக்கருணைமறக்கருணை ஆகியவற்றால் இறைவன் உயிர்களுக்குப் புரியும் அருள் பற்றிமெய்கண்ட தேவரின் முதல் மாணாவர் ஆகியசகலாகம பண்டிதர்அருள்நந்தி சிவாச்சாரியார் பாடியுள்ள "சிவஞானசித்தியார்" கூறுவது காண்போம்....

 

"அறம்மலி இதம் செய்வோருக்கு

            அநுக்கிரகத்தைச் செய்வன்;

மறம்மலி அகிதம் செய்யின்

            நிக்கிர கத்தை வைப்பன்".  --- சிவஞானசித்தியார்.

 

     அறவழியில் நின்று பிற உயிர்க்கு நன்மை செய்வோர்க்கு இறைவன் அருள் (அனுக்கிரகம்) புரிவான். பாவம் மிகுந்த தீய செயல்களைப் புரிவோரைஅதற்கு ஏற்ப தண்டிப்பான். எனவேஇறைவன்ன் செய்யும் அனுக்கிரகம்நிக்கிரகம் இரண்டும் உயிர்கள் மீது வைத்த கருணையே ஆகும்.

 

"நிக்கிரகங்கள் தானும்

            நேசத்தால் ஈசன் செய்வது;

அக்கிரமத்தால் குற்றம்

            அடித்துத் தீர்த்து அச்சம் பண்ணி

இக்கிர மத்தி னாலே

            ஈண்டு அறம் இயற்றிடு என்பன்;

எக்கிர மத்தி னாலும்

            இறைசெயல் அருளே என்றும்".--- சிவஞானசித்தியார்.

 

            இறைவன் உயிர்களை அவைகள் செய்த வினைக்கு ஏற்ப தண்டிப்பதும் கூட அவனது திருவருட் செயலே ஆகும். எவ்வாறு என்னில்,முறைமை தப்பிக் குற்றம் இழைத்த உயிரைத் தக்க வகையில் தண்டித்து,இனித் தீவினை செய்யாத வண்ணம் அச்சுறுத்தி,இனியேனும் அறத்தோடு பொருந்திய செயல்களைச் செய்வாயாக என்று உள் நின்று உணர்த்துவான். எம்முறையில் பார்த்தாலும் இறைவனின் செயல் என்றென்றும் அருளே ஆகும்.

 

     அது எப்படி என்பதைப் பார்ப்போம்...

 

"தந்தையாய் பெற்ற தத்தம்

     புதல்வர்கள்,தம்சொல் ஆற்றின்

வந்திடா விடில்,உறுக்கி,

            வளாரினால் அடித்து தீய

பந்தமும் இடுவர்எல்லாம்

            பார்த்திடில் பரிவே ஆகும்;

இந்த நீர் முறைமை அன்றோ-

            ஈசனார் முனிவும் என்றும்?"   --- சிவஞானசித்தியார்.

 இதன் பொருள் ---

     தந்தையும் தாயும் தாம் பெற்றெடுத்த மக்கள்,தம் சொல்படி நல்வழியில் நடக்கவில்லை என்றால்,அம்மக்களைச் சொல்லால் கடிந்தும்வளாரினால் அடித்தும்அதற்கும் பணியாத போது கட்டி வைத்து அவர்களைத் திருத்த முயல்வார்கள். வெளிப் பார்வைக்குக் கோபத்தால் தண்டிப்பது போலத் தோன்றினாலும்,ஆராய்ந்து பார்க்கும் போது தாய்தந்தையர்களின் இச் செயல்கள் யாவும் தம் மக்களிடத்து அவர்கள் கொண்ட அன்பினால் விளைந்தனவே ஆகும். அவ்வாறே இறைவன் உயிர்களை ஒறுப்பதும் என்றென்றும் அவன் அருளால் விளைந்ததே.

 

     இறைவன் உயிர்களைத் தண்டிப்பது அவனது விருப்பபடி அல்ல. உயிர்கள் செய்த நல்வினை என்னும் புண்ணியம்தீவினை என்னும் பாவம் ஆகிய இவ்விரண்டின் தன்மைக்கு ஏற்பவேபிறவியில் புகுத்தும்போதுஅறிவுக் குறைவுஆற்றல் இன்மைஅழகு இன்மைசெலவம் இன்மைஅற்ப வாழ்நாள் ஆகியவற்றைத் தருகின்றான். உயிர்கள் செய்த வினையேஅவைகள் அனுபவிக்கும் பயனைத் தருகின்றது. இதைத்தான், "தீதும் நன்றும் பிறர் தர வாராநோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன" என்றது புறநானூறு. "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     உலகத்தை ஆள்கின்ற மன்னர்கள் அவர்களுடைய ஆணைகட்கு ஏற்ப நடவாதாரை தண்டித்தும்,சிறையில் இட்டும் வைப்பார்கள். அதே வேந்தர்கள் தம்முடைய ஆணைக்கு இணங்க நடப்பவர்களைப் பாராட்டி அவர்களுக்கு மாளிகையும் செல்வமும் அளித்து அதிகாரமும் வழங்கி வாழ்விப்பார்கள். இவ்வுலகில் ஒப்பற்ற பெருவேந்தனாகிய இறைவனும் இவ்வாறே தண்டம் செய்தும் தகுதிக்கு ஏற்ப உயர்த்தியும் தன் ஆணையை நடத்தி அருளுவான்.

 

"ஆணையால் அவனி மன்னன்

            அருமறை முறைசெய்யாரை

ஆணையின் தண்டம் செய்தும்

            அரும்சிறை இட்டும் வைப்பன்;

ஆணையின் வழிசெல்வோருக்கு

            அரும்பதி செல்வம் நல்கி

ஆணையும் வைப்பன்எங்கும்

            ஆணையே ஆணையே காண்!" ---சிவஞானசித்தியார்.

 

            பாவம் செய்தால் தண்டனை வழங்குவான் என்று கூறவே புண்ணியம் செய்தால் அதற்குரிய மேம்பாட்டை வழங்குவான் என்பதும் பெறப்படும்.

 

     உலகத்து அரசர்கள் செய்யும் தண்டத் தொழிலும் அவன் வழங்கும் சிறப்புகளும்,இறைவனின் அருள்வழியே நடப்பதாகும். நாட்டில் உள்ளோர் பாதகங்கள் செய்தால்,அரசன் அவர்களுக்குக் கொடிய தண்டனையை வழங்குவான். அதற்கு மேலும் கொடுமை செய்தால்,அதனினும் கடுமையாகத் தண்டிப்பேன் என்று கூறி அச்சுறுத்தி அவர்களைத் திருத்துவான். இறைவனும் பாவம் செய்தவர்களை நரகத்தில் இடுவது,அவர்களைத் திருத்துவதன் பொருட்டே ஆகும். இவ்வாறு தண்டிக்கப்பட்டவர் இறைவனின் ஆணைப்படி நடப்பார்கள். நரகத்தில் மீண்டும் சேராமல் இருப்பதற்கு உரிய நல்வழிகளில் நடப்பார்கள்.

 

"அரசனும் செய்வது ஈசன்

            அருள்வழி,அரும்பாவங்கள்

தரையுளோர் செய்யில்தீய

            தண்டலின் வைத்து தண்டத்து

உரைசெய்து தீர்ப்பன்பின்பு

            சொல்வழி நடப்பர் தூயோர்;

நிரயமும் சேரார்அந்த

            நிரயம் முன் நீர்மை ஈது ஆம்".--- சிவஞானசித்தியார்.

 

     தான் வகுத்த சட்டதிட்டங்களின்படி நடவாதோரைமன்னன் தக்க வகையில் தண்டிப்பதும்சட்டதிட்டங்களின்படி நடப்போரைத் தக்க வகையில் உபசாரம் செய்வதும் போலவேஇறைவனது அருட்செயலும் அமையும் என்பது பெறப்படும். இறைவன் தன்னுடைய அருளினால் உரைத்த நூல்களின் வழி நில்லாது ஒருவன் பாவம் செய்வானாகில்,அவனை இருள் செறிந்த நரகத்தில் இட்டு,துன்பத்தை அனுபவிக்க வைத்துஅதன்வழி அவன் செய்த பாவத்தைத் தீர்த்து வைப்பான்.அறநூல்களில் சொல்லப்பட்ட நெறியில்நின்றவனை இன்ப அனுபவத்துக்கு உரிய சுவர்க்க உலகத்தில் செலுத்தி,அவன் செய்த புண்ணியத்தின் பலனைத் தீர்ப்பான். பாவம் புண்ணியம் என்ற இரண்டு வினைகளுமே உயிர்கள் கட்டில் அகப்பட்டுப் பிறந்து இறந்து வருவதற்குக் காரணமான நோய்கள். ஆதலால் வைத்தியநாதனாகிய சிவபெருமான் அந்த நோயைத் தக்க மருந்தால் தீர்ந்து அருளுவான்.

 

"அருளினால் உரைத்த நூலின்

            வழிவாராது அதன்மம் செய்யின்

இருள்உலாம் நிரயத் துன்பத்து

            இட்டு இரும் பாவம் தீர்ப்பன்;

பொருள் உலாம் சுவர்க்கம் ஆதி

            போகத்தால் புணியம் தீர்ப்பன்;

மருள்உலாம் மலங்கள் தீர்க்கும்

            மருந்து இவை வயித்திய நாதன்".--- சிவஞானசித்தியார்.

 

            வேதாகம நூல்வழி நில்லாமை பாவம். நூல் வழி நின்று,அருள் வழி நில்லாமை புண்ணியம். இரண்டும் உயிர்க்கு நோய். ஆகையால்பாவம் புண்ணியம் ஆகிய இவற்றால் உயிர்கள் கட்டுப்படாமல் இருக்க வேண்டி,சிவபெருமான் ஆகிய மருத்துவன்,இன்ப துன்பங்களாகிய மருந்தை நுகரச் செய்வான். அதன் வழி,உயிர்களுக்கு உண்டாகிய பிறவிப் பெருநோயைத் தீர்த்து வைப்பதால்இறைவன், "வைத்தியநாதன்" எனப்பட்டான். பிறவிநோயைத் தீர்ப்பவன் என்பதால், "பவரோக வைத்தியநாதப் பெருமாளே" என்றார் அருணகிரிநாதப் பெருமான். தீராத நோய் பிறவிநோயே ஆகும். "மந்திரமும்தந்திரமும்மருந்தும் ஆகிதீரா நோய் தீர்த்து அருள வல்லான்" என்றார் அப்பர் பெருமான்.

 

     நோய் வந்தபோதுமருத்துவரிடம் செல்கின்றோம். நோய் ஏன் வந்ததுஒழுக்க நெறி தவறியதால். நோயின் தன்மையை அறிந்துமருத்தவர் தக்கபடி மருந்து கொடுத்துத் தீர்ப்பார். உயிர்களுக்குத் துன்பம் வருவதற்குக் காரணம் அவைகள் செய்த வினைகளே. வினைகளை அனுபவிக்கத் தந்துதுன்பத்தைத் தீர்த்து வைப்பான் இறைவன்.

 

     உடல் கூற்று இயல் உணர்ந்த மருத்துவ நூலில் விதிக்கப்பட்டபடி வாழ்ந்தால் நோய்கள் வரமாட்டா. அந்த நெறி தவறி வாழ்வார்க்கு,நோய் தோன்றி உடலை வருத்தும். மருத்துவன் மருந்து கொடுத்து அந்நோயைத் தணிப்பான். (மருந்து கொடுத்தால்அவற்றை வாங்கப் பொருள் தேவைப்படும். மருந்து உட்கொள்ளும்போதுபத்தியம் இருக்க வேண்டும். தேவைப்பட்டால்வேறு விதங்களில் நோயைத் தீர்க்கவேண்டும். இவை கூடஉயிருக்குத் துன்பமாக அமையும். சில நேரங்களில் மருந்து இல்லாமல்தக்க உபாயங்களைச் செய்தும் நோயைத் தணிப்பான். இது போன்றே சிவபிரானும் உயிர்களைப் பொருந்திய இருவினையாகிய நோயைப் பொருந்துகின்ற விதங்களில் ஊட்டித் தீர்ப்பான்.

 

"மருத்துவன் உரைத்த நூலின்

            வழிவரின் பிணிகள் வாரா;

வருத்திடும் பிணிகள் தப்பின்

            தப்பிய வழியும் செய்யத்

திருத்தினன், மருந்து செய்யாது

            உறும்பிணி சென்றும் தீர்ப்பன்;

உரைத்தநூல் சிவனும் இன்னே

            உறுங் கன்மம் ஊட்டித் தீர்ப்பன்".  --- சிவஞானசித்தியார்.

 

     பொருந்துகின்ற விதம் என்பது, "மந்திரமும்தந்திரமும்மருந்தும் ஆகித் தீரா நோய் தீர்த்து அருள வல்லான்" என்னும் அப்பர் தேவாரத்தால் விளங்கும்.

 

     மருத்துவர் சிலருக்கு மருந்து கொடுக்கின்றார். சிலருக்கு ஊசி போடுகின்றார். சிலருக்கு அறுவை வைத்தியம் செய்கின்றார். இவ்வாறு சிலரை மென்மையாக வருத்துவதும்சிலரை மிகுதியாக வருத்துவதும்,மருத்துவர் நோயாளான் மீது கொண்டு விருப்புவெறுப்பு காரணமாக அல்ல. நோயின் தன்மையைப் பொறுத்தே வைத்திய முறை அமைகின்றது.

 

     மருத்துவன் இவ்வுலகில் தோன்றுகின்ற சில நோய்களை அக்கரையோடும் திண்ணமாகவும் கத்தியால் கீறியும்,அறுத்தும் தீர்ப்பான். வேறு சில நோய்களுக்கு வெல்லமும்பாலும் கலந்த மருந்துகளைத் தந்து தீர்ப்பான். அது போலவே இறைவனும் உயிர்களின் இருவினையாகிய நோய்களைத் தீர்க்கும் பொழுது வினைப் பயனுக்கு ஏற்றபடி அவற்றுக்கு இன்பத்தையோதுன்பத்தையோ கொடுத்து அறுத்து நீக்குவான் என்கின்றார் அருள்நந்தி சிவாச்சாரியார்.

 

"மண்ணுளே சில வியாதி

            மருத்துவன் அருத்தியோடும்

திண்ணமாய் அறுத்துக் கீறித்

            தீர்த்திடும்,சிலநோய் எல்லாம்

கண்ணிய கட்டி பாலும்

            கலந்து உடன் கொடுத்துத் தீர்ப்பன்;

அண்ணலும் இன்பத் துன்பம்

            அருத்தியே வினை அறுப்பன்".  --- சிவஞானசித்தியார்.

            

     இறைவன் வேண்டுதல் வேண்டாமை இலான் ஆகையால் அவன் உயிர்களுக்கு அதனதன் வினைப் பயனுக்கு ஏற்பவே இன்பத் துன்பங்களை ஊட்டுவான் என்பது உலகியிலில் வைத்து இவ்வாறு காட்டப்பட்டது.

 

     ஓர் உயிர்தான் துன்பத்தை விரும்பாது இன்பத்தை விரும்புவது போலவே,பிற உயிர்களும் துன்பத்தை விரும்பாது இன்பத்தையே விரும்புகின்றன என்பதை உணர்ந்துபிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாது இருத்தல் வேண்டும். 

 

     பாவ புண்ணியங்களால் வரும் துன்பங்களும் இன்பங்களும் இல்லாத சமநிலை வாய்க்க வேண்டுமானால்நிஷ்காமியமாகபற்று ஏதும் வைக்காமல்,செய்யும் செயல்களுக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்காமல்பணி செய்து வரவேண்டும். அப்போது,இன்பமே மிகுந்து இருக்கும்.

 

"அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால்,

இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே"

 

என்றார் தாயுமான அடிகளார்.

 

     "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்றார் அப்பர் பெருமான். "கர்மண்யேவ அதிகாரஸ்த" என்றது பகவத் கீதை.

 

     இறைபணியில் நின்றுஎவ்வுயிருக்கும் தீங்கு நினையாது,எல்லா உயிர்களிடத்தும் அன்பு வைத்து வாழ்ந்து இறைவன் திருவடியைச் சேரவேஇந்தப் பிறவி நமக்கு வந்தது. எதற்காக உடம்பெடுத்து வந்தோம் என்பதை உணராமல்மனம் போன போக்கில் வாழ்ந்தால்இறைவன் தக்க தண்டனையைத் தருவான்.

 

     இறைவன் எப்படிப்பட்ட தண்டனையைத் தருவான் என்பைத அப்பர் பெருமான் பாடல் வழிக் காண்போம்...

 

"ஓதுவித்தாய்முன் அற உரைகாட்டி அமணரொடே

காதுவித்தாய்கட்டம்நோய்பிணிதீர்த்தாய்கலந்து அருளிப்

போதுவித்தாய்நின் பணி பிழைக்கின் புளியம் வளாரால்

மோதுவிப்பாய்உகப்பாய்முனிவாய்கச்சி ஏகம்பனே!"

 

இதன் பொருள் ---

 

     காஞ்சிபுரத்தில் ஒற்றை மாமர நிழலில் எழுந்தருளி இருக்கும் பெருமானே! அடியேனுடைய வாழ்க்கையின் முற்பகுதியில் சமணருடைய அறவுரைகளைப் பின்பற்றத் தக்கனவாக உள்ளத்தில் தெரிவித்துச் சமண சமய நூல்களை ஓதுமாறு செய்தாய். பிறகு அவர்களே என்னை அழிப்பதற்கு முயலுமாறும் செய்தாய். கொடிய நோயினால் அடியேன் பிணிக்கப்பட்டிருந்த நிலையை நீக்கினாய். அடியேனுடைய உள்ளத்தில் கலந்து,சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்குப் புகச் செய்தாய். உன்னுடைய திருத்தொண்டில் தவறு செய்வேனாயின்,அடியேனைப் புளிய மரக்குச்சியால் அடித்துத் தண்டிப்பாயாக. நீ சர்வ சுதந்திரன் ஆதலின் நீ விரும்பியதை உகப்பதும் விரும்பாததை வெறுப்பதும் செய்வாய். அடியேனைஉன் திருவுள்ளம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு நடத்துவாயாக.

 

     தவறு செய்தால் தண்டித்துத் திருத்துவாயாக என்று இறைவனிடம் அப்பர் பெருமான் வேண்டியதை வைத்துப் பார்க்கும்போது, "தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்" என்பு தெளிவாகும். குத்தினால்தான் தெளிவு வரும்.

 

     செய்யவேண்டியதை விடுத்துசெய்யக் கூடாததைச் செய்ததால்இறைவன் தன்னைத் தண்டித்ததாக (கண்ணைக் குத்தியதாக) வள்ளல்பெருமான் பாடுகின்றார். 

 

"கருங்கல் பாறைநேர் மனத்துப்

     பதகனேன்,படிற்று உருவகனேன்,

வசைஇலார்க்கு அருளும் மாணிக்க மணியே!

     வள்ளலே! நினைத்தொழல் மறந்து

நசைஇலா மலம்உண்டு ஓடுறும் கொடிய

     நாய்என உணவுகொண்டு உற்றேன்,

தசைஎலாம் நடுங்க ஒற்றியில் உன்னால்

     தண்டிக்கப் பட்டனன்,நன்றே".       --- திருவருட்பா

 

இதன் பொருள் ---

 

     ஈரம் (அன்பு) இல்லாத கரிய கல்பாறை போன்ற மனத்தை உடைய கொடியனாகிய நான் வஞ்சகமே உருவாகியவன்அதனால் குற்றம் இல்லாதவர்க்கு அருள் வழங்கும் மாணிக்க மணிபோன்ற வள்ளலாகிய உன்னைத் தொழுவதை மறந்துவிரும்பப்படாத மலத்தைத் தின்றுவிட்டு ஓடுகின்ற கொடிய நாய்போல் உணவு உண்டுஉனது திருக்கோயிலுக்கு வந்தேன்அதனால்உடம்பு முற்றும் தசை துடிக்க திருவொற்றியூரில் உன்னால் தண்டிக்கப்பட்டேன்அது நன்று.

     

     இந்தப் பாடலின் மூலம்தாம் செய்ய வேண்டாததைச் செய்ததால்,இறைவன் தம்மைத் தண்டித்ததாகப் (கண்ணைக் குத்தியதாகப்) பாடுகின்றார்.

 

     சாமி நமது கண்ணைக் குத்தாமல் படிக்கு வாழ்ந்துதான் பார்ப்போமே.

     

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...