அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
திரிபுர மதனை (பொது)
தனதன தனன தனதன தனன
தனதன தனன ...... தனதான
திரிபுர மதனை யொருநொடி யதனி
லெரிசெய்த ருளிய ...... சிவன்வாழ்வே
சினமுடை யசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி ...... விடுவோனே
பருவரை யதனை யுருவிட எறியு
மறுமுக முடைய ...... வடிவேலா
பசலையொ டணையு மிளமுலை மகளை
மதன்விடு பகழி ...... தொடலாமோ
கரிதிரு முகமு மிடமுடை வயிறு
முடையவர் பிறகு ...... வருவோனே
கனதன முடைய குறவர்த மகளை
கருணையொ டணையு ...... மணிமார்பா
அரவணை துயிலு மரிதிரு மருக
அவனியு முழுது ...... முடையோனே
அடியவர் வினையு மமரர்கள் துயரு
மறஅரு ளுதவு ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
திரிபுரம் மதனை ஒருநொடி அதனில்
எரிசெய்து அருளிய ...... சிவன்வாழ்வே!
சினம் உடை அசுரர் மனம் அது வெருவ
மயில் அது முடுகி ...... விடுவோனே!
பருவரை அதனை உருவிட எறியும்
அறுமுகம் உடைய ...... வடிவேலா!
பசலையொடு அணையும் இளமுலை மகளை
மதன்விடு பகழி ...... தொடல் ஆமோ?
கரிதிரு முகமும் இடம் உடை வயிறும்
உடையவர் பிறகு ...... வருவோனே!
கனதனம் உடைய குறவர் தம் மகளை
கருணையொடு அணையும் ...... மணிமார்பா!
அரவு அணை துயிலும் அரிதிரு மருக!
அவனியும் முழுதும் ...... உடையோனே!
அடியவர் வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு ...... பெருமாளே.
பதவுரை
கரிதிரு முகமும் இடமுடை வயிறும் உடையவர் பிறகு வருவோனே --- யானையின் அழகிய திருமுகமும் பெருத்த வயிறும் உடையவராகிய மூத்த பிள்ளையார் பின்பு அவதரித்தவரே!
கனதனம் உடைய குறவர்தம் மகளை கருணையொடு அணையும் மணிமார்பா --- பெருத்த மார்பகங்களை உடைய குறவர் மகள் வள்ளிநாயகியை கருணையோடு தழுவும் அழகிய திருமார்பை உடையவரே!
அரவு அணை துயிலும் அரிதிரு மருக --- பாம்பு அணையில் துயில் கொள்ளும் திருமாலின் திருமருமகரே!
அவனியும் முழுதும் உடையோனே --- உலகையும், உலகப் பொருள்களையும் உடைமையாக உடையவரே!
அடியவர் வினையும் அமரர்கள் துயரும் அற அருள் உதவு பெருமாளே --- அடியவர்கள் வினையும் அசுரர்கள் துயரமும் அற்றுப்போகத் திருவருளைத் தந்து அருளும் பெருமையில் மிக்கவரே!
திரிபுரம் மதனை ஒருநொடி அதனில் எரிசெய்து அருளிய சிவன்வாழ்வே --- முப்புரங்களையும், மன்மதனையும் ஒரு நொடிப் பொழுதில் எரித்து அருளிய சிவபெருமான் பெற்ற செல்வமே!
சினம் உடை அசுரர் மனம் அது வெருவ மயில் அது முடுகி விடுவோனே --- சினத்தோடு வந்து போர் புரிந்த அசுரர்களின் மனத்தில் அச்சம் உண்டாகும்படியாக மயில்மீது விரைவாக வந்து அருளியவரே!
பருவரை அதனை உருவிட எறியும் அறுமுகம் உடைய வடிவேலா --- பெருத்த கிரவுஞ்சமலையினை ஊடுருவும்படியாக எறிந்த வேலை உடைய ஆறுமுகப் பரம்பொருளே!
பசலையொடு அணையும் இளமுலை மகளை மதன்விடு பகழி தொடலாமோ --- விரக தாபத்தினால் பசலை நோய் வந்து தவிக்கும் இளமையான முலைகளை உடைய எனது மகளை மன்மதன் விடும் மலர்க்கணைகள் துன்புறுத்தலாமா?
பொழிப்புரை
யானையின் அழகிய திருமுகமும் பெருத்த வயிறும் உடையவராகிய மூத்த பிள்ளையார் பின்பு அவதரித்தவரே!
பெருத்த மார்பகங்களை உடைய குறவர் மகள் வள்ளிநாயகியை கருணையோடு தழுவும் அழகிய திருமார்பை உடையவரே!
பாம்பு அணையில் துயில் கொள்ளும் திருமாலின் திருமருமகரே!
உலகையும், உலகப் பொருள்களையும் உடைமையாக உடையவரே!
அடியவர்கள் வினையும் அசுரர்கள் துயரமும் அற்றுப்போகத் திருவருளைத் தந்து அருளும் பெருமையில் மிக்கவரே!
முப்புரங்களையும், மன்மதனையும் ஒரு நொடிப் பொழுதில் எரித்து அருளிய சிவபெருமான் பெற்ற செல்வமே!
சினத்தோடு வந்து போர் புரிந்த அசுரர்களின் மனத்தில் அச்சம் உண்டாகும்படியாக மயில்மீது விரைவாக வந்து அருளியவரே!
பெருத்த கிரவுஞ்சமலையினை ஊடுருவும்படியாக எறிந்த வேலை உடைய ஆறுமுகப் பரம்பொருளே!
விரக தாபத்தினால் பசலை நோய் வந்து தவிக்கும் இளமையான முலைகளை உடைய எனது மகளை மன்மதன் விடும் மலர்க்கணைகள் துன்புறுத்தலாமா?
விரிவுரை
கரி திருமுகமும் இடமுடை வயிறும் உடையவர் பிறகு வருவோனே ---
கரி - யானை. யானையின் முகத்தை உடையவர் மூத்த பிள்ளையார்.
இடம் உடை வயிறு - பெருத்த வயிறு.
கனதனம் உடைய குறவர்தம் மகளை கருணையொடு அணையும் மணிமார்பா ---
கனதனம் --- பருத்த மார்பகங்கள்.
கனம்+தனம் --- சிறந்த செல்வம். சிறந்த செல்வத்தை உடைய வேடர்களின் திருமகளாக வளர்ந்தவர் வள்ளிநாயகியார் என்றும் பொருள் கொள்ளலாம்.
அவனியும் முழுதும் உடையோனே ---
உலகையும், உலகப் பொருள்களையும் தனக்கு உடைமையாக உடையவர் இறைவன். எல்லாப் பொருள்களும் ஆனவன். எல்லாப் பொருள்களையும் உடையவன். "எல்லாம் ஆம் எம்பெருமான்" எனத் திருஞானசம்பந்தப் பெருமானும், "எல்லா உலகமும் ஆனாய் நீயே" என அப்பர் பெருமானும், "எல்லாம் உடையான் என்று ஊதுஊது சங்கே - எல்லாமும் ஆனான் என்று ஊதுஊது சங்கே" சென்று வள்ளல்பெருமானும் பாடியுள்ளது காண்க.
அடியவர் வினையும் அமரர்கள் துயரும் அற அருள் உதவு பெருமாளே ---
"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய நீடுதனி வேல்விடும் மடங்கல் வேலா" எனப் பழனித் திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளது காண்க. நீசர்கள் ஆகிய அரக்கர்கள் அழியவும், அடியவர்களின் வினைத்துயர் ஒழியவும் முருகப் பெருமான் வேலை விடுத்து அருளினார்.
"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்."
என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.
நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு. "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.
திரிபுரம் மதனை ஒருநொடி அதனில் எரிசெய்து அருளிய சிவன்வாழ்வே ---
திரிபுரம் அதனை என்று கொண்டால், முப்புர தகனத்தைக் குறிக்கும்.
திரிபுரம் மதனை என்றும் பொருள் கொள்ள இடம் உண்டு. அவ்வாறு கொண்டால், முப்புரங்களையும், மன்மதனையும் ஒரு நொடிப் பொழுதில் எரித்து அருளியவர் சிவபெருமான் என்று கொள்ள வேண்டும்.
திரிபுரங்களை நொடிப் பொழுதில் எரித்த வரலாறு
கமலாட்சன், விட்யுன்மாலி, தாராகாட்சன் என்ற மூன்று அசுர வேந்தர்கள் சிறந்த சிவனடியார்கள். இவர்கள் இரும்பு, வெள்ளி, பொன் என்ற உலோகங்களாலாய மூன்று புரங்களில் வாழ்ந்தார்கள். இமையவருக்கு இடுக்கண் புரிந்தார்கள்.
திரிபுரவாசிகளின் சிவபக்தி குலையுமாறு திருமால் புத்தாவதாரம் எடுத்து, நாரதரைச் சீடராகப் பாடச் செய்து திரிபுர நகர்களில் தெய்வம் இல்லை என்று பிரசாரம் புரிந்தார். திரிபுரத் தலைவர்கள் மூவர் மட்டும் உறுதிகுலையாது சிவபக்தியில் சிறந்து இருந்தார்கள். திரிபுர வாசிகள் சிவபக்தி குலைந்தார்கள். தேவர்கள் சிவபெருமானிடம் திரிபுரத்தை அழிக்குமாறு முறையிட்டார்கள்.
அப்போது, இந்தப் பூமியே தேராகவும், கீழே உள்ள எழு உலகங்கள் கீழ்த் தட்டுக்களாகவும், மேலே உள்ள எழு உலகங்கள் மேல் தட்டுக்களாகவும், எண்திசைப் பாலகர்கள் தூண்களாகவும், மேருகிரி வில்லாகவும், வாசுகி நாணாகவும், பிரமன் சாரதியாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், திருமால் பாணமாகவும், அதற்கு அக்கினி வாயாகவும், வாயு அம்பின் குதையாகவும் இவ்வாறு தேவர்கள் கூட்டமே தேராக அமைத்துத் தந்தார்கள். கரிய உருவுடைய திருமால் அம்பாக ஆனார்.
"மாலாய வாளியைத் தொடுத்து அரக்கர்களின் ஒரு மூவர்
மாளாது பாதகப் புரத்ரயத்தவர்
தூளாகவே முதல் சிரித்த வித்தகர்" --- (ஆனாத) திருப்புகழ்.
"கல்லால்நிழல் கீழாய்இடர் காவாய்என வானோர்
எல்லாம்ஒரு தேராய்அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப
வல்லாய்எரி காற்றுஈர்க்குஅரி கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில் எய்தான்இடம் வீழிம்மிழ லையே”. --- திருஞானசம்பந்தர்.
"வரிஅரவே நாண்ஆக மால்வரையே வில்லாக
எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்
பொரிசுடலை ஈமப் புறங்காட்டான் போர்த்ததுஓர்
கரிஉரியான் மேவியுறை கோயில் கைச்சினமே." --- திருஞானசம்பந்தர்.
"குன்ற வார்சிலை நாண் அராஅரி
வாளி கூர்எரி காற்றின் மும்மதில்
வென்றவாறு எங்ஙனே விடைஏறும் வேதியனே
தென்ற லார்மணி மாட மாளிகை
சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே." --- திருஞானசம்பந்தர்.
"கையில்உண் உடுழல்வாரும் சாக்கியரும்
கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்
பொய்இலா தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்
பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்
கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே." --- அப்பர்.
"நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்
வெற்புஆர்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே
கற்பாரும் கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்
கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லூர் காணே." --- சுந்தரர்.
மன்மதனை நொடிப் பொழுதில் எரித்த வரலாறு
இந்திரன் முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வர, பிரமதேவர் வைகுந்தம் சென்று, திருமாலின் திருப்பாத கமலங்களை வணங்கி நின்றார். திருமால், நான்முகனிடம், "உனது படைப்புத் தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார்.
"எந்தாய்! அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள். அவர்களை யான் நோக்கி, மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள் என்றேன். அவர்கள் அது கேட்டு, நாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு நாங்கள் படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறி, பெருந்தவத்தைச் செய்தனர். அவர்களுடைய தவத்திற்கு இரங்கி, ஆலமுண்ட அண்ணல் தோன்றி, 'உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்க, வேத உண்மையை விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.
சிவபெருமான் திருக்கயிலாயத்தின் தென்பால், ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, நால்வர்க்கும் நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை அடையாமையால், மீண்டும் அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டு, திருக்கயிலையை அடைந்து, மனம் அடங்குமாறு உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள், ஆகமத்தின் உட்கருத்துக்கள் ஆகிய சரியை, கிரியை, யோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்து, ஞானபாதத்தை விளக்க சின்முத்திரையைக் காட்டி, மோன நிலையை உணர்த்தி, தானும் மோன நிலையில் இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான் ஒரு கணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின. உயிர்கள் இச்சை இன்றி, ஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது. இதுவும் அல்லாமல், சிவபரம்பொருளிடம் பலப்பல வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும் துன்பத்தை விளைவித்தனர். இந்திரன் மகனையும், பிற தேவர்களையும், தேவமாதர்களையும் சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபன்மன் தேவர்களை ஏவல் கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல், சிவபரம்பொருள், சிவயோகத்தில் அமர்ந்துள்ளார். இனிச் செய்ய வேண்டியதொரு உபாயத்தை எமக்கு நீர் தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.
இதைக் கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய், அருவமும், உருவமும், உருவருவமும் ஆகிய எல்லா உயிர்கட்கும், எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்ற, மூவர் முதல்வன் ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றார், உலகில் எவர்தான் இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"
"ஆவிகள் அனைத்தும் ஆகி, அருவமாய் உருவமாகி
மூவகை இயற்கைத்து ஆன மூலகாரணம் ஆது ஆகும்
தேவர்கள் தேவன் யோகின் செயல்முறை காட்டும் என்னில்,
ஏவர்கள் காமம் கன்றித் தொன்மை போல் இருக்கும்நீரார்."
"சிவமூர்த்தியின்பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன், ஊழ்வினை வயப்பட்டு, செய்ந்நன்றி மறந்து, சிவமூர்த்தியை நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்ய, அந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம் சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்து, இன்பத்தை நல்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபன்மனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும், தேவர்கள் அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டி, உயிர்களுக்கு இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், சிவபெருமானுடைய பேரருள் பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவருக்கு உணர்வு காட்டும் மோனத்தில் இருந்து நீங்கி, எம்பெருமாட்டியை மணந்து கொண்டால், படைத்தல் தொழில் இனிது நடைபெறும். உமாமகேசுவரன்பால் ஓரு குமரன் தோன்றினால், சூராதி அவுணர்கள் அழிந்து இன்பம் உண்டாக்கும். உலகம் எல்லாம் தொன்மை போல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரே! இவைகள் எல்லாம் நிகழ வேண்டும் என்றால், உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டு, ஈசன்மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால், சிவபெருமான் யோக நிலையில் இருந்து நீங்கி, அகிலாண்ட நாயகியை மணந்து, சூராதி அவுணர்களை அழிக்க ஒரு புத்திரனைத் தந்து அருள்வார். இதுவே செய்யத்தக்கது" என்றார்.
அது கேட்ட பிரமதேவர், "அண்ணலே! நன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார்.
திருமால், "பிரமதேவரே! நீர் உடனே மன்மதனை அழைத்து, சிவபெருமானிடம் அனுப்பு" என்றார். பிரமதேவர் மீண்டு, தமது மனோவதி நகரை அடைந்து, மன்மதனை வருமாறு நினைந்தார்.
மாயவானகிய திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி, "அடியேனை நினைத்த காரணம் என்ன. அருள் புரிவீர்" என்று வேண்டி
நின்றான். "மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கி, சிவபெருமான் மகேசுவரியை உணந்து கொள்ளுமாறு, உனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக் காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.
"கங்கையை மிலைச்சிய கண்ணுதல், வெற்பின்
மங்கையை மேவ, நின் வாளிகள் தூவி,
அங்கு உறை மோனம் அகற்றினை, இன்னே
எங்கள் பொருட்டினால் ஏகுதி என்றான்."
பிரமதேவர் கூறிய கொடுமையானதும், நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச் சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருனாது யோக நிலையை அகற்றவேண்டும் என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால், பெருமான் அவனுடைய உடம்பை எரிப்பது ஓர் அற்புதமா?
மன்மதன் தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி, திருவைந்தெழுத்தை மனத்தில் நினைந்து, வாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.
"அண்ணலே! தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால், பெரியோர்கள் உய்யும் வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம் எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு அருள் சிறிதும் இல்லையா? என்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில் ஒருவரும் இல்லை. பூதேவியையும், பூவில் வைகும் சீதேவியையும், ஏனைய மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப் புணருமாறும், திலோத்தமையைக் கண்டு உள்ளத்தால் புணருமாறும், உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும், கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும் செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச்செய்து, இந்திரனுடைய உடல் முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கச் செய்து, சூரியனைப் புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து, புதன் என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கி, மாதர்களுக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுது உணர்ந்த அகத்தியர், அத்திரி, கோதமன், அறிவில் சிறந்த காசிபர், வசிட்டர், மரீசி முதலிய முனிவர்களின் தவ வலியை, இமைப்பொழுதில் நீக்கி, என் வசப்பட்டுத் தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் யாரும் இல்லை. ஆயினும், சிவபெருமானை வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும் என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி. சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம் நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்? அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப் போல அவரையும் எண்ணுவது கூடாது".
"சண்ட மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில், வெண்ணீறு அணிந்த விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல், உய்ந்தவர் யாரும் இல்லை".
"திரிபுர சங்கார காலத்தில், திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரிய, முக்கண்பெருமான் தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?"
"தன்னையே துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனை, பெருமான் தனது இடது திருவடியால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?"
"முன் ஒரு நாள், தாங்களும், நாராயணமூர்த்தியும் 'பரம்பொருள் நானே' என்று வாதிட்ட போது, அங்கு வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்க, உமது ஐந்து தலைகளில் ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா?"
"சலந்தரன் ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"
"உமது மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும், பெருமான்பால் தோன்றிய வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா?"
"திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டு, நம்மை எல்லாம் காத்து அருளியதும் மறந்து போயிற்றா?"
"உலகத்தை எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது சிவபெருமான் தானே!"
"தாருகா வனத்தில், இருடிகள் அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யனை, புலி, மான்,முயலகன், பாம்பு முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள் உரியாகவும், போர்வையாகவும், ஆபரணமாகவும் அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா?"
"சர்வ சங்கார காலத்தில், சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால் உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ? இத்தகைய பேராற்றலை உடைய பெருமானை, நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு வில்லைக் கொண்டு, மலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."
இவ்வாறு மன்மதன் மறுத்துக் கூறியதும், நான்முகன் உள்ளம் வருந்தி, சிறிது நேரம் ஆராய்ந்து, பெருமூச்சு விட்டு, மன்மதனைப் பார்த்து, "மன்மதனே! ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடையவரிடம் விளம்புவதைப் போல் என்னிடம் விளம்பினை. நீ உரைத்தது எல்லாம் உண்மையே. தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவு பெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே ஆகும். ஆதலால், நீ கரும்பு வில்லை வளைத்து, பூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல், ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு
யாராவது ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய துன்பத்திற்கு இரங்கி, அவருடைய துன்பத்தைக் களையாது, தன் உயிரைப் பெரிது என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமமோ? ஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால், அத் துன்பத்தைத் தன்னால் நீக்க முடியுமானால், அவன் சொல்லா முன்னம் தானே வலிய வந்து துன்பத்தை நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள மறுத்து, பின்னர் நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால், அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாவம் மட்டும் அல்ல, அகலாத பழியும் வந்து சேரும்.
"ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகில்,
ஓவில் குறை ஒன்று அளரேல், அது முடித்தற்கு
ஆவி விடினும் அறனே, மறுத்து உளரேல்
பாவம் அலது பழியும் ஒழியாதே."
பிறர்க்கு உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி முனிவரை இந்திரன் குறை இரப்ப, விருத்தாசுரனை வதைக்கும் பொருட்டு, தனது முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோ? பாற்கடலில் எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது, திருமால் நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறி, அவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது நின்று, தமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோ? பிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபன்மனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டு, நீ பஞ்ச பாணங்களுடன் செல்ல வேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.
அது கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப் பொழுதில் செய்வேன்" என்றான்.
பிரமதேவர் அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய். நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன். இரண்டில் எது உனக்கு உடன்பாடு. ஆராய்ந்து சொல்" என்றார்.
மன்மதன் அது கேட்டு உள்ளம் மிக வருந்தி, என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒருவாறு தெளிந்து, பிரமதேவரைப் பார்த்து, "நாமகள் நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால், அந்தப் பரம்பொருளின் நெற்றி விழியால் அழிந்தாலும், பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால் எனக்கு உய்தி இல்லை. எனவே, நீர் சொல்லியபடியே செய்வேன், சினம் கொள்ள வேண்டாம்" என்றான்.
பிரமதேவர் மனம் மகிழ்ந்து, "நல்லது. நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம். யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று அறுப்பினார்.
மன்மதன், பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்று, நிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூற, அவள் போகவேண்டாம் என்று தடுக்க, மன்மதன் அவளைத் தேற்றி, மலர்க்கணைகள் நிறைந்த அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டி, கரும்பு வில்லை எடுத்து, குளிர்ந்த மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டி, குயில், கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய் முழங்க, மீனக் கொடியுடன் கூடியதும், கிளிகளைப் பூட்டியதும், சந்திரனைக் குடையாக உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதி தேவியுடன் புறப்பட்டு, எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டு, கரம் கூப்பித் தொழுது, தேரை விட்டு இறங்கி, தன்னுடன் வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இரதிதேவியுடன் வில்லும் அம்பும் கொண்டு, பெரும் புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல் ஏறினான். கரும்பு வில்லை வளைத்து, மலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டு, இது மன்மதனுடைய செய்கை என்று தெளிந்து, 'உம்' என்று நீங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்தி, திருநந்தி தேவர் முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுது, யார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர சத்தியால் பசுவைத் தடிந்து, வேள்வி புரிந்து, மீளவும் அப்பசுவை எழுப்புதல் போல், மன்மதனை எரித்து, மலைமகளை மணந்து, பின்னர் இவனை எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்' என்று நினைத்து, "மாரனே! சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்க, மன்மதன், "எந்தையே! என் உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு திருநந்தி தேவர் விடை கொடுத்தார்.
மன்மதன் திருநந்திதேவரை வணங்கி, மேலை வாயிலின் உள் சென்று, சோதிமாமலை போல் வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்று, ஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி போல் வெருவுற்று, உள் நடுங்கி, உடம்பு வியர்த்து, கையில் பற்றிய வில்லுடன் மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர் புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனே, எதிர்த்துப் போர் புரிந்தால் என்ன ஆவேன்? இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன். விதியை யாரால் கடக்க முடியும். இதுவும் பெருமான் பெருங்கருணை போலும். இறைவன் திருவருள் வழியே ஆகட்டும். இனி நான் வந்த காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்து, கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண் ஏற்றி, அரும்புக் கணைகளைப் பூட்டி, சிவபெருமான் முன்பு சென்று நின்றான்.
இது நிற்க, மனோவதி நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி, "மன்மதனுடைய போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான். எல்லோரும் திருக்கயிலை சென்று, சிவபெருமானை மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான்மேல் படுதலும், பெருமான் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்க, நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது.
பருவரை அதனை உருவிட எறியும் அறுமுகம் உடைய வடிவேலா ---
பருவரை - பெருத்த மலை, கிரவுஞ்ச மலையைக் குறித்தது. பொன் மயமாக இருந்து அனைவரையும் மயக்கியது கிரவுஞ்ச மலை.
இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சம் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக் கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.
"வருசுரர் மதிக்க ஒரு குருகுபெயர் பெற்ற கன
வடசிகரி பட்டு உருவ வேல்தொட்ட சேவகனும்"
என்றார் வேடிச்சி காவலன் வகுப்பில் அடிகளார்.
"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறையிட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில்.
பசலையொடு அணையும் இளமுலை மகளை மதன்விடு பகழி தொடலாமோ ---
தலைவியின் துயரைக் கண்டு அவளுடைய தாய் இரங்குவதாக அகத்துறையில் அமைந்த பாடல் இது.
பசலை --- தலைவனைப் பிரிந்த துயரால் தலைவியின் உடலில் உண்டாகும் நிறமாற்றம்.
மன்மதன் விடுக்கின்ற மலர்க்கணைகள் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் துயரத்தை மிகுக்கும் என்று சொல்லுவர்.
மன்மதனுடைய மலர்க்கணைகள். அது பரிமளம் மிக்க மா, அசோகு, தாமரை, முல்லை, நீலோற்பலம். மன்மதனுடைய கணைகளைப் பற்றியும், அவனுக்குத் துணை செய்யும் பொருள்களைப் பற்றியும் வரும் பாடல்களைக் காண்க.
"வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,
மலர்நீலம் இவைஐந் துமே
மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி
மனதில் ஆசையை எழுப்பும்;
வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;
மிகஅசோ கம்து யர்செயும்;
வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;
மேவும்இவை செயும்அ வத்தை;
நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,
நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,
நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்
நேர்தல், மௌனம் புரிகுதல்,
அனையவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!"
தாமரை, வளமிகுந்த மா, அசோகு, முல்லை, மலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும்,
இவை உயிர்களுக்கு ஊட்டும் பண்புகள் --- தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும். சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும். அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும். குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும். நீலமலர் உயிரை ஒழிக்கும்,
இவை உண்டாக்கும் நிலைகளாவன: எண்ணத்தில் அதுவே கருதுதல், மற்றொன்றில் ஆசை நீங்கல், பெருமூச்சுடன் பிதற்றுதல், உள்ளம் திடுக்கிடல், உணவில் வெறுப்பு, உடல் வெதும்புதல், மெலிதல், பேசாதிருத்தல், ஆசையுற்ற உயிர் உண்டோ இல்லையோ என்னும் நிலையடைதல் ஆகிய இவை பத்தும் ஆகும்.
மன்மதனுக்குத் துணை செய்யும் கருவிகள்......
"வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;
மேல்விடும் கணைகள் அலராம்;
வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;
வேழம்கெ டாதஇருள் ஆம்;
வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய
வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;
மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;
மனதேபெ ரும்போர்க் களம்;
சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;
சார்இரதி யேம னைவிஆம்;
தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்
தவறாதி ருக்கும் இடம்ஆம்;
அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்
அமுதமே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!"
ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு......
--- கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும்.
--- அம்பு கரிய வண்டின் கூட்டம் ஆகும்.
--- உயிர்களின் மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும்.
--- தேர் உலவும் தென்றற் காற்று ஆகும்.
--- குதிரைகள் பச்சைக் கிளிகளே ஆகும்.
--- யானை அழியாத இருளாகும்.
--- மிகுபடை பெண்கள் ஆவர்.
--- உடைவாள் தாழை மடல் ஆகும்.
--- போர் முரசு நீண்ட கொடைத்தன்மை பொருந்திய கடலாகும்,
--- கொடி மகர மீன் ஆகும்.
--- சின்னம் வேனிலில் வரும் குயிலோசைகும்.
--- பெரிய போர்க்களம் உயிர்களின் உள்ளமே ஆகும்.
--- பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும்.
--- குடை சந்திரன் ஆவான்.
--- காதலி அழகு பொருந்திய இரதியே ஆவாள்.
--- அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள் முடி ஆகும்.
--- எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் பெண்களின் அல்குல் ஆகும்.
மன்மதனுடைய கணைகளினால் அறிவாற்றல் அழியும். அவன் கணையினால் மாதவம் இழந்தோர் பலர்.