அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முழுமதி அனைய (பொது)
முருகா!
திருவடி அருள்வாய்.
தனதன தனன தனதன தனன
தனதன தனன ...... தந்ததான
முழுமதி யனைய முகமிரு குழையில்
முனிவிழி முனைகள் ...... கொண்டுமூவா
முதலறி வதனை வளைபவர் கலவி
முழுகிய வினையை ...... மொண்டுநாயேன்
வழிவழி யடிமை யெனுமறி வகல
மனமுறு துயர்கள் ...... வெந்துவாட
மதிதரு மதிக கதிபெறு மடிகள்
மகிழ்வொடு புகழு ...... மன்புதாராய்
எழுதிட அரிய எழில்மற மகளின்
இருதன கிரிகள் ...... தங்குமார்பா
எதிர்பொரு மசுரர் பொடிபட முடுகி
இமையவர் சிறையை ...... யன்றுமீள்வாய்
அழகிய குமர எழுதல மகிழ
அறுவர்கள் முலையை ...... யுண்டவாழ்வே
அமருல கிறைவ உமைதரு புதல்வ
அரியர பிரமர் ...... தம்பிரானே.
பதம் பிரித்தல்
முழுமதி அனைய முகம், இரு குழையில்
முனிவிழி முனைகள் ...... கொண்டு, மூவா
முதல் அறிவு அதனை வளைபவர், கலவி
முழுகிய வினையை ...... மொண்டு, நாயேன்
வழிவழி அடிமை எனும் அறிவு அகல,
மனம்உறு துயர்கள் ...... வெந்து வாட,
மதிதரும் அதிக கதிபெறும் அடிகள்
மகிழ்வொடு புகழும் ...... அன்பு தாராய்.
எழுதிட அரிய எழில்மற மகளின்
இருதன கிரிகள் ...... தங்குமார்பா!
எதிர்பொரும் அசுரர் பொடிபட முடுகி
இமையவர் சிறையை ...... அன்று மீள்வாய்!
அழகிய குமர! எழுதலம் மகிழ
அறுவர்கள் முலையை ...... உண்ட வாழ்வே!
அமர் உலகு இறைவ! உமை தரு புதல்வ!
அரிஅர பிரமர் ...... தம்பிரானே.
பதவுரை
எழுதிட அரிய எழில்மற மகளின் இருதன கிரிகள் தங்கும் மார்பா --- ஓவியமாகத் தீட்டுதற்கு அருமையான அழகினை உடைய வேடர் மகளாகிய வள்ளிநாயகியின் மலைபோன்ற இரு மார்பகங்கள் தங்கி உள்ள திருமார்பினரே!
எதிர்பொரும் அசுரர் பொடிபட முடுகி இமையவர் சிறையை அன்று மீள்வாய் --- எதிர் வந்து போர் புரிந்த அரக்கர்கள் பொடிபட்டு அழியுமாறு செய்து, தேவர்களைச் சிறையில் இருந்து மீள விட்டவரே!
அழகிய குமர --- அழகு மிக்க குமாரக் கடவுளே!
எழுதலம் மகிழ அறுவர்கள் முலையை உண்ட வாழ்வே --- ஏழுலகங்களும் மகிழும்படியாக கார்த்திகைப் பெண்கள் அறுவரின் திருமுலைப்பாலை உண்டு அருளிய செல்வமே!
அமர் உலகு இறைவ --- தேவலோகத்துக்குத் தலைவரே!
உமை தரு புதல்வ --- உமையம்மையின் திருப்புதல்வரே!
அரிஅர பிரமர்தம் பிரானே --- திருமால், அரன், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளின் தனிப்பெருந்தலைவரே!
முழுமதி அனைய முகம் --- முழுமதியை ஒத்த முகத்தையும்,
இரு குழையில் முனிவிழி முனைகள் கொண்டு --- காதில் உள்ள இரண்டு குழைகளையும் கோபிக்கின்ற கண்களையும் கொண்டு,
மூவா முதல் அறிவு அதனை வளைபவர் --- முற்றாத அறிவு உடையவர்களைத் தம் வசப்படுத்துகின்ற பொதுமகளிரின்,
கலவி முழுகிய வினையை மொண்டு --- கலவி இன்பத்தில் முழுகிக் கிடக்கும் செயலை உடைய,
நாயேன் --- நாயினும் கடையான நான்,
வழிவழி அடிமை எனும் அறிவு அகல --- தேவரீருக்கு வழிவழி அடிமைப்பட்டவன் என்னும் அறிவு விசாலப்படவும்,
மனம்உறு துயர்கள் வெந்து வாட --- மனத்தில் உண்டான துயரங்கள் வெந்து ஒழியவும்,
மதிதரும் --- நல்லறிவைத் தருவதும்,
அதிக கதிபெறும் அடிகள் --- உயிர்கள் மேலான கதியைப் பெற உதவுவதும் ஆகிய தேவரீரது திருவடிகளை,
மகிழ்வொடு புகழும் அன்பு தாராய் --- உள்ள மகிழ்வோடு புகழ்ந்து வழிபடும் அன்பினைத் தந்து அருள்வீராக.
பொழிப்புரை
ஓவியமாகத் தீட்டுதற்கு அருமையான அழகினை உடைய வேடர் மகளாகிய வள்ளிநாயகியின் மலைபோன்ற இரு மார்பகங்கள் தங்கி உள்ள திருமார்பினரே!
எதிர் வந்து போர் புரிந்த அரக்கர்கள் பொடிபட்டு அழியுமாறு செய்து, தேவர்களைச் சிறையில் இருந்து மீள விட்டவரே!
அழகு மிக்க குமாரக் கடவுளே!
ஏழுலகங்களும் மகிழும்படியாக கார்த்திகைப் பெண்கள் அறுவரின் திருமுலைப்பாலை உண்டு அருளிய செல்வமே!
தேவலோகத்துக்குத் தலைவரே!
உமையம்மையின் திருப்புதல்வரே!
திருமால், அரன், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளின் தனிப்பெருந்தலைவரே!
முழுமதியை ஒத்த முகத்தையும், காதில் உள்ள இரண்டு குழைகளையும் கோபிக்கின்ற கண்களையும் கொண்டு, முற்றாத அறிவு உடையவர்களைத் தம் வசப்படுத்துகின்ற பொதுமகளிரின், கலவி இன்பத்தில் முழுகிக் கிடக்கும் செயலை உடைய, நாயினும் கடையான நான் தேவரீருக்கு வழிவழி அடிமைப்பட்டவன் என்னும் அறிவு விசாலப்படவும், மனத்தில் உண்டான துயரங்கள் வெந்து ஒழியவும் நல்லறிவைத் தருவதும், உயிர்கள் மேலான கதியைப் பெற உதவுவதும் ஆகிய தேவரீரது திருவடிகளை உள்ள மகிழ்வோடு புகழ்ந்து வழிபடும் அன்பினைத் தந்து அருள்வீராக.
விரிவுரை
இரு குழையில் முனிவிழி முனைகள் ---
காதில் உள்ள இரண்டு குழைகளையும் கோபிக்கின்ற கண்கள். காது அளவு ஓடிய கண்கள். நீண்ட கண்கள்.
மூவா முதல் அறிவு அதனை வளைபவர் ---
மூவா -- முற்றாத, நிரம்பாத.
முதல் அறிவு - தொடக்க அறிவு, அறிவின் ஆரம்ப நிலை.
வழிவழி அடிமை எனும் அறிவு அகல ---
உயிர்கள் இறைவனுக்கு அடிமைகள் என்பது நூல்களின் துணிபு. சிற்றறிவு காரணமாக, உலகியல் நிலைகளில் ஈடுபடும்போது அந்த அறிவு சுருங்கிவிடும். தீவினையின் காரணமாக நிகழ்வது இது. அந்த அறிவு இறைவன் திருவருளால் விசாலப்பட வேண்டும். அதற்கு நல்வினை வாய்க்க வேண்டும். "ஆறிவு அகற்றும் ஆகல் ஊழ் உள்ளக் கடை" என்றார் திருவள்ளுவ நாயனார்.
எழுதிட அரிய எழில்மற மகளின் இருதன கிரிகள் தங்கும் மார்பா ---
"எழுத அரியவள், குறமகள் இருதன கிரியில் முழுகின இளையவன்" எனத் திருவாரூர்த் திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளமை காண்க.
எழுதலம் மகிழ அறுவர்கள் முலையை உண்ட வாழ்வே ---
"கார்த்திகை முலை நுகர் பார்த்திப" எனப் பிறிதொரு திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளது காண்க.
"மகளிர் அறுவர் முலை நுகரும் அறுமுக" --- சீர்பாத வகுப்பு.
"அறுமீன் முலைஉண்டு, அழுது, விளையாடி" --- கந்தர் கலிவெண்பா.
"வனிதையர் அறுவரும்
எனது மகவு என உமைதரும் இமையவர் ...... பெருமாளே." --- நெடியவட (திருப்புகழ்).
கருத்துரை
முருகா! திருவடி அருள்வாய்.
No comments:
Post a Comment