ஆத்திசூடி --- 01. அறம் செய விரும்பு
---
எழுத்து வர்க்க முறையிலே, ஔவைப் பிராட்டியாரால் அருளிச் செய்யப்பட்டது ஆத்திசூடி என்னும் அற்புதமான நூல்.
ஆத்திசூடிக்கு வழிகாட்டியாக அமைந்தது அப்பர் தேவாரம் எனலாம். அப்பர் பெருமான் அருளிய ஐந்தாம் திருமுறை என்னும் திருக்குறுந்தொகையில், "சித்தத் தொகைத் திருக்குறுந்தொகை" என்று ஒரு திருப்பதிகம் அமைந்துள்ளது. இதில் வரும் முப்பது பாடல்களும், அகர வரிசையில் அமைந்தவை ஆகும். இப் பகுதியில் ல,வ,ற என்னும் மூன்று எழுத்துக்களுக்கு உரிய பாடல்கள் நாம் அறியக் கிடைக்கவில்லை. இது போலவே, மூவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களில், இடையில் சில பாடல்கள் இல்லை. அவை பின்னாளில் மறைந்து போய் இருக்கலாம். இத் திருப்பதிகமே, பின்னாளில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற அகர வரிசையில் அமைந்த நீதிநூல்கள் தோன்றக் காரணமாக அமைந்திருக்கலாம்.
பின்னாளில் பாம்பன் அடிகளார் அருளிய "சண்முக கவசம்" என்னும் நூலும் இப்படியே அகர வரிசையில் அமைந்தது.
ஔவையார் அருளிய ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை ஆகியவை முன்னாளில் தொடக்கக் கல்வியில் மாணவர்கள், முறையாக ஓதி, மனப்பாடம் செய்து வருவது வழக்கமாக இருந்தது. மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், மனித குலத்திற்கே வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைந்தவை ஔவையார் அருளிய ஆத்திசூடி முதலான நூல்கள்.
புருஷார்த்தங்கள் என்று சொல்லப்படும் அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றை அடைவதே நூலின் பயன் ஆகும் என்பதால், "அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே" என்றது நன்னூல் சூத்திரம். "புருஷர் வடிவானதே அன்றி புருஷார்த்தம் ஏதும் இல்லேன்" என்று தூயுமான அடிகளார் இரங்கி வழிபட்டு உள்ளார்.
ஔவைக் கிழவி, நம் கிழவி,
அமுதின் இனிய சொற்கிழவி,
செவ்வை நெறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் பழங்கிழவி,
கூழுக் காகக் கவிபாடும்
கூனக் கிழவி, அவள் உரையை
வாழும் வாழ்வில் ஒருநாளும்
மறவோம், மறவோம், மறவோமே.
என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போற்றிப் புகழ்ந்துள்ளதில் இருந்து ஆத்திசூடி அருளிய ஔவைப் பிராட்டியின் அருமை விளங்கும்.
கடவுள் வாழ்த்தாக அமைந்த செய்யுள், "ஆத்திசூடி என்று தொடங்குவதால், இந்நூலுக்கு, "ஆத்திசூடி" என்று பெயர் எழுந்தது எனலாம்.
"ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே"
என்பது இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்.
"ஆத்திமரலால் ஆன மாலையைத் திருமுடியில் தரித்துள்ள சிவபெருமானை மனம், வாக்கு, காயம் என்னும் முக்கரணங்களாலும் வணங்கித் தொழுவோம்" என்பது இதன் பொருள்.
ஆத்திசூடி என்னும் இந்த அறநூலானது, அறத்தைக் கேட்பதற்கும், கேட்டவாறு ஒழுகி அறத்தைச் செய்வதற்கும், விருப்பம் கொள்ளுபவர்க்கு இன்றியமையாது வேண்டிய சிறப்பு என்பது, அறத்தைச் செய்வதில் கொள்ளும் விருப்பமே என்பதால், "அறம் செய விரும்பு" என்று தொடங்கியது. நீ அறத்தைச் செய்யவேண்டுமானால், அதில் அன்பு (விருப்பம்) வைப்பாயாக என்பது இதன் பொருள்.
"விரும்பு" என்னும் சொல்லுக்கு, "அன்பு வைத்தல்" என்னும் பொருள் எப்படி வந்தது? என்னும் ஐயம் எழலாம். "விருப்பு அறாச் சுற்றம்" என்று திருவள்ளுவ நாயனார் அருளியதற்கு, "அன்பு அறாத சுற்றம்" என்று பரிமேலழகர் பொருள் கண்டார். ஒருவர் மீது மனமார்ந்த விருப்பம் இருந்தால், அன்பு தன்னால் உண்டாகும்.
அறம் செய விரும்பு என்று ஏன் முதலிலேயே அறிவுறுத்தினார் ஔவையார் என்றால், அறமே ஒருவனுக்கு ஆக்கத்தைத் தருவது. ஆக்கம் என்பது உலகியல் ஆக்கமும், அருளியல் ஆக்கமாகிய வீடுபேறும். அறத்தைக் காட்டிலும் ஆக்கத்தைத் தருவது வேறு இல்லை என்பதால், "அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை" என்றும், அந்த அறத்தைச் செய்ய மறத்தலைக் காட்டிலும் அழிவைத் தருவதும் வேறு இல்லை என்பதால், "அதனை மறத்தலின் ஊங்கு இல்லை கேடு" என்று திருவள்ளுவ நாயனார் அருளி இருப்பது காண்க.
அறம் என்றதுமே தன்னிடத்தில் உள்ள பொருளைப் பிறருக்கு அள்ளிக் கொடுப்பது முதலான காரியங்கள் என்று கொள்ளவேண்டுவது இல்லை. அறச் செயல்கள் பலவாறாக விரியும். ஆனால், அறத்திற்கு இழுக்கைத் தருவன, அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகிய நான்குமே. இழுக்கைத் தரும் இந்த நான்கு தீயவைகளும் உள்ளத்தளவில் இல்லாது நீங்குமானால், அதுவே அறத்தைச் செய்ய விரும்புகின்ற ஒருவனுக்கு இலக்கணமாக அமையும். எனவே, மனத்தில் மாசு இல்லாமல் இருப்பதே உண்மையான அறம் ஆகும். அறம் என்பது, மனம் வாக்கு காயங்களால் புரியப்படுகின்ற நல்ல எண்ணமும், நல்ல சொல்லும், நல்ல செயலுமே ஆகும். "நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின்" என்கின்றது புறநானூற்றுப் பாடல்.
"அச்சமே கீழ்களது ஆசாரம்" என்று திருவள்ளுவ நாயனார் அருளி இருப்பதை எண்ண, அறிவில் தெளிவு இல்லாத கீழ்மக்கள் தெய்வத்தாலும், அரசாலும், உயர்ந்தோராலும், பிறராலும் உண்டாகும் அச்சம் காரணமாகவும், இதைச் செய்தால், அதைப் பெறலாம் என்னும் பொருளாசை காரணமாகவும், வேறு சிலர் புகழ் காரணமாகவும் அறச் செயல்களைப் புரிவதால், அதன் மறுமைப் பயனாகிய வீடுபேற்றை எய்தமாட்டார். எனவே,
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்,
ஆகுல நீர பிற.
அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
எனத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்துள்ள திருக்குறட்பாக்களை எண்ணுதல் நலம்.
ஏனவே, ஔவைப் பிராட்டி, மனத்தளவில் தூயவனாக விளங்கும் உண்மை அறத்தினை விரும்பி ஒருவன் கடைப்பிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்த, "அறம் செய விரும்பு" என்றார் என்பதை அறிந்து தெளிதல் நலம். மனத்தில் அழுக்காறு முதலிய குற்றங்கள் தோன்றாமல் காத்துக் கொள்பவனுக்கு, தன்னிடத்தில் உள்ள பொருளைத் தானே துய்க்கவேண்டும் என்னும் ஆசையும் அதன் காரணமாகப் பற்றும், அதன் காரணமாக உலோபத்தனமும் உண்டாகாது. அறச் செயல்களில் செலவிட்டு, தன்னிடத்தில் உள்ளபொருளை, போகின்ற வழிக்குத் துணையான அருளாக மாற்றிக் கொண்டு வாழ்வான். பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்கும் கேடு கெட்ட மனிதனாக வாழமாட்டான்.
ஆத்திசூடி பற்றி மேலும் சிந்திப்போம்....