பேதை தன் வாயாலேயே கெடுவான் - அவனுக்கு வேறு பகை வேண்டா.

 

பேதை தன் வாயாலேயே கெடுவான் - அவனுக்கு

வேறு பகை வேண்டா.

-----

    

     திருக்குறளில் "புல்லறிவாண்மை" என்னும் ஓர் அதிகாரம். புல்லறிவாண்மை என்பது, அறிவில் சிறுமையையே பெருமையாகக் கருதி நடந்துகொள்ளுதல் ஆகும். அதாவது, சிற்றறிவினனாக இருந்துகொண்டே, தன்னைப் பேரறிவு உடையவனாக மதித்து, உயர்ந்தோர் சொல்லும் உறுதிக் சொல்லை மனத்துள் கொள்ளாமை ஆகும்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "புல்லறிவாளர் தம்மைத் தாமே வருத்திக் கொள்ளும் துன்பத்தை, அவருடைய பகைவராலும் செய்ய முடியாது" என்கின்றார் நாயனார்.

 

     பகைவன் ஒருவன் ஒரு தீமையை ஒருவனுக்குச் செய்ய எண்ணுவானாயின், அதற்கு உரிய காலம் இடம் பார்த்துக் காத்திருக்கவேண்டும். ஆனால், பகைவனால் செய்யப்படக் கூடிய துன்பத்தைக் காட்டிலும், அறிவில்லாதவன் தனக்குத் தானே தேடிக் கொள்ளுகின்ற துன்பம் பல ஆகும். தான் பெற்றுள்ள செல்வத்தை நன்னெறியில் செலவிடாது, தீய வழியில் செலவழித்து, உள்ள செல்வத்தை இழந்து, வறுமையை வரவழைத்துக் கொள்ளுவதோடு, தீய வழியில் செலவழித்ததால் உண்டான பழியைத் தேடிக் கொள்வான். பழியைத் தேடிக் கொண்டதால், பாவத்துக்கு ஆளாகி, எக்காலத்தும் துன்பத்தை அனுபவிப்பான்.

 

     நுணலும் தன் வாயால் கெடும் என்றபடி, பேதை தன் வாயாலேயே தான் கெடுவான். அவனுக்கு வேறு பகை வேண்டா. அறிவில்லாதவன், பகைவர் இல்லாமலேயே தனக்குத் தானே துன்பத்தைத் தேடிக் கொள்வான் என்பதை அறிவுறுத்த,

 

அறிவு இலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை,

செறுவார்க்கும் செய்தல் அரிது.          

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, தருமை ஆதீனகர்த்தராகிய கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

ஈசன் அடியார் இசையாதேயும், இசைந்து அமணர்

தாமே கழு ஏறும் தன்மையால், ஞாலத்து

அறிவு இலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை,

செறுவார்க்கும் செய்தல் அறிது.

 

இதன் பொருள் ---

 

     ஈசன் அடியார் இசையாதேயும் --- சிவனடியார் ஆகிய திருஞானசம்பந்தப் பெருமான் தமக்கு இயற்கையாக அமைந்துள்ள அருள் மிகுதியால் உடன்படாதபோதும், அமணர் இசைந்து --- சமணர்கள் இசைந்து, தாமே கழு ஏறும் தன்மையால் --- தாமே கழுவில் ஏறிய தன்மையை எண்ணுமிடத்து, ஞாலத்து --- உலகத்தில், அறிவிலார் --- உண்மை அறிவு இல்லாதவர்கள், தாம் தம்மைப் பீழிக்கும் பீழை --- தாமே தமக்கு இழைத்துக் கொள்ளும் துன்பமானது, செறுவார்க்கும் செய்தல் அரிது --- பகைவராலும் செய்வதற்கு அரிது ஆகும் (என்பதை விளக்கி நின்றது)

 

சமணர்கள் தாமே கழுவில் ஏறிய வரலாறு

 

     தொன்றுதொட்டு வைதிக சைவ சமயமே எங்கும் நிறைந்து விளங்கி இருந்த பாண்டி நாட்டிலே, கொல்லாமை மறைந்து துறையும் சமண சமயம் பரவி, அரசனும் அம்மாய வலைப்பட்டு சைவசமய சீலங்கள் மாறின. உலகெலாம் செய்த பெருந்தவத்தின் வடிவால், சோழமன்னனது திருமகளாய், பாண்டிமா தேவியாய் விளங்கும் மங்கையர்க்கரசியாரும், அவருக்கு சீதனமாக சோழமன்னனால் தரப்பட்டு வந்து, பாண்டியனின் அரசவையில் முதல் அமைச்சராயிருந்து, சைவநிலைத் துணையாய், அரசியார்க்கு உடன் உதவி செய்து வருகின்ற குலைச்சிறை நாயனாரும் மிகவும் வருந்தி, ஆலவாய் அண்ணலை நோக்கி, “சமண இருள் நீங்கி சைவ ஒளி ஓங்கும் நாள் என்றோ?” என்று ஏங்கி நின்றார்கள். அப்போது திருஞானசம்பந்தரது அற்புத மகிமையையும், அவர் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருப்பதையும் அறிந்து, முறைப்படி அவரை அழைத்து வருமாறு சில தகுந்த ஏவலரை அனுப்பினார்கள். அவர்கள் வேதாரணியத்திற்கு வந்து பாலறாவாயரைப் பணிந்து, பாண்டிய நாட்டில் சைவநிலை கரந்து, சமண நிலை பரந்திருப்பதை விண்ணப்பித்து, அதனை ஒழுங்குபடுத்த அம்மையாரும் அமைச்சரும் அழைத்து வருமாறு அனுப்பினார்கள் என்று தெரிவித்து நின்றார்கள். திருஞானசம்பந்தர் மறைக்காட்டு மணிகண்டரை வணங்கி, அப்பரிடம் விடை கேட்டனர்:. திருநாவுக்கரசர் சமணர்களது கொடுமையை மனத்தில் கொண்டு, ”பிள்ளாய்! வஞ்சனையில் மிக்க சமணர்களுள்ள இடத்திற்கு நீர் போவது தகுதியன்று; கோளும் நாளும் வலியில்லை” என்றனர்.

 

வேயுறு தோளிபங்கன்,விடம் உண்ட கண்டன்,

         மிகநல்ல வீணைதடவி

 மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்

         உளமே புகுந்த அதனால்,

 ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி

         சனி பாம்பு இரண்டும் உடனே

 ஆசறும், நல்லநல்ல, அவை நல்லநல்ல

         அடியாரவர்க்கு மிகவே”

 

என்ற திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்து, அப்பரை உடன்படச் செய்து விடைபெற்று, முத்துச் சிவிகை ஊர்ந்து, பல்லாயிரம் அடியார்கள் “அரகர” என்று கடல்போல் முழங்க, பாண்டி நாட்டிற்கு எழுந்தருளி வருவாராயினார். எண்ணாயிரம் சமண குருமார்களுக்கும் அவரைச் சார்ந்த பல்லாயிரம் சமணர்களுக்கும் பற்பல துற்சகுனம் ஏற்பட்டது. எல்லாரும் மதுரையில் கூடி நின்றார்கள். புகலிவேந்தர் வரவை உணர்ந்த மங்கையர்க்கரசியார், பெருமானை வரவேற்குமாறு அமைச்சர் பெருமானை அனுப்பித் தாம் திருவாலவாய்த் திருக்கோயிலில் எதிர்பார்த்து நின்றனர்.

 

     சீகாழிச் செம்மல் பல விருதுகளுடன் வருவதை நோக்கி, குலச்சிறையார் ஆனந்தக் கூத்தாடி, கண்ணீர் ததும்பி கூகைகூப்பி, மண் மிசை வீழ்ந்து வணங்கிய வண்ணமாய்க் கிடந்தார். இதனை அறிந்த கவுணியர்கோன் சிவிகை விட்டிழிந்து, அவரைத் தமது திருக்கைகளால் எடுத்து “செம்பியர் பெருமான் குலமகளார்க்கும், திருந்திய சிந்தையீர்! உமக்கும் நம் பெருமான்றன் திருவருள் பெருகும் நன்மைதான் வாலிதே” என்னலும், குலச்சிறையார் கைகூப்பி, “சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும், இன்று எழுந்தருளப் பெற்ற பேறு, இதனால் எற்றைக்கும் திருவருள் உடையேம். நன்றி இல் நெறியில் அழுந்திய நாடும் நற்றமிழ் வேந்தனும் உய்ந்து நலம் பெற்றனர்” என்றார்.

 

     மதுரையும் ஆலவாயான் ஆலயமும் தெரிய, மங்கையர்க்கரசியாரையும், குலச்சிறையாரையும் சிறப்பித்துத் திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடி, கோயிலுள் புகுதலும், அங்கு எதிர்பார்த்திருந்த அம்மையார் ஓடிவந்து அடிமிசை வீழ்ந்து வணங்க, பிள்ளையார் அவரைத் தமது தாமரைக் கைகளால் எடுத்து, அருள் புரிந்து, இன்னுரை கூறி, ஆலவாயானைத் தெரிசித்து, தமக்கு விடுத்த திருமடத்தில் தங்கியருளினார்.

 

     சமணர்கள் அது கண்டு வருந்தி, “கண் முட்டு” “கேட்டு முட்டு” என்று பாண்டியனிடம் இதனைக் கூறி அவன் அனுமதி பெற்று திருமடத்தில் தீப்பிடிக்க அபிசார மந்திரஞ் செபித்தனர். அம் மந்திர சக்தி அடியார் திருமடத்திற்கு தீங்கிழைக்கும் ஆற்றலற்றுப் போனது. சமணர்கள் அது கண்டு கவலை அடைந்து, தாமே இரவில் போய் திருமடத்தில் தீ வைத்தனர். அதனை அடியார்கள் அவித்து, ஆளுடைய பிள்ளையாரிடம் தெரிவிக்க, திருஞானசம்பந்தர், இது அரசன் ஆணையால் வந்தது என்று உணர்ந்து,

 

    செய்யனே! திரு ஆலவாய் மேவிய

  ஐயனே! அஞ்சல் என்று அருள் செய் எனைப்

  பொய்யராம் அமணர் கொளுவும் சுடர்

  பையவே சென்று பாண்டியற்கு ஆகவே”

 

என்று பாடியருளினார். “பையவே” என்றதனால் அந்நெருப்பு உயிர்க்கு மிகவும் கொடுமை செய்யாது சுர நோயாகி பாண்டியனைப் பிடித்து வருத்தியது. அந்நோயை நீக்க ஆயிரக்கணக்கான சமணர்கள் வந்து மந்திரஞ் சொல்லி, மயிற்பீலியால் பாண்டியன் உடம்பைத் தடவினர். அம்மயிற் பீலிகளெல்லாம் வெந்து நீறாயின. அண்டி வந்த அமணர்களுடைய உடலும் உயிருங் கருகின. அரசன் அவரைக் கடிந்து விரட்டினான். மங்கையர்க்கரசியார் மகிணனை வணங்கி, திருஞானசம்பந்தர் திருமடத்திற்குச் செய்த தீங்கினால் தான் இச் சுரநோய் பிடித்ததென்றும், அவர் வந்தாலொழிய இது தீராதென்றுங் கூற, அரசன் “இந்நோய் தீர்த்தார் பக்கத்தில் நான் சேருவேன்; அவரை அழைமின்” என்றான். அது கேட்டு அம்மையாரும் அமைச்சரும் திருமடத்திற்கு வந்து,

 

ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை

வானத்தின் மிசையின்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தைத்

தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்குங்

கானத்தின் எழுபிறப்பைக் கண்களிக்கக் கண்டார்கள்.”

 

கண்டு வணங்கி நிகழ்ந்தது கூறி, அரசனையும் தம்மையும் உய்விக்க எழுந்தருளுமாறு விண்ணப்பஞ் செய்தனர். திருஞானசம்பந்தர் அபயம் தந்து, அடியார் குழத்துடன் புறப்பட்டு திருக்கோயில் சென்று, தென்னவனாய் உலகாண்ட கன்னிமதிச் சடையானைப் பணிந்து, “ஞாலம் நின்புகழே மிகவேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே!” என்று பாடி விடைபெற்று, பாண்டியர்கோன் மாளிகை புக்கார். பாண்டியன் சுவாமிகளைக் கண்டு கைகூப்பி, தலைப்பக்கத்தில் பொன்னால் ஆன பீடம் தரச் செய்து இருக்கச் செய்வித்தனன். சுவாமிகள் இனிது வீற்றிருக்க சமணர் பலரும் அது கண்டு பொறாராய் சீறினர். அம்மையார் அது கண்டு அஞ்ச, கவுணியர் வேந்து,

 

மானின்நேர் விழிமாதராய், வழுதிக்கு மாபெருந் தேவி,கேள்

பானல்வாய் ஒருபாலன் ஈங்கு இவன்என்று நீ பரிவு எய்திடேல்

ஆனை மாமலை ஆதியாய இடங்களிற் பல அல்லல்சேர்

ஈனர்கட்கு ஏளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.”

 

என்று பாடித் தேற்றினார்.

 

         அரசன் சமணரையும் திருஞானசம்பந்தரையும் சுரநோயைத் தீர்ப்பதன் மூலம் தமது சமயத்தின் உண்மையைக் காட்டலாம் என, அமணர் இடப்புற நோயை நீக்குவோமென்று மந்திர உச்சாடனத்துடன் மயிற்பீலியால் தடவ, நோய் அதிகப்பட்டது. அரசன் வருந்தி புகலி வேந்தரை நோக்க, சுவாமிகள், "மந்திரமாவது நீறு" என்ற திருப்பதிகம் பாடி, வலப்பக்கத்தில் தடவியருள நோய் தீர்ந்தது. இடப்பக்கம் அதிகரித்தது. இறைவன் சமணரைக் கடிந்து வெருட்டிவிட்டு, பாலறாவாயரைப் பணிய, பிள்ளையார் மீண்டும் திருநீறு பூச, நோய் முற்றும் நீங்கியது. அரசன் பன்முறை பணிந்து ஆனந்தமுற்றான்.

 

         பின்னர், சமய உண்மையைக் கூறி வாதிக்கும் ஆற்றலற்ற சமணர்கள் அனல்வாதம் தொடங்கினர். பெருநெருப்பு மூட்டினர். திருஞானசம்பந்தர் தாம் பாடிய தேவராத் திருமுறையில் கயிறு சாத்தி ‘போகமார்த்த’ என்ற திருப்பதிக ஏட்டை எடுத்து, “தளரிள வளரொளி” என்ற திருப்பதிகம் பாடி நெருப்பிலிட்டனர். அது வேகாது பச்சென்று விளங்கியது. சமணர்கள் தங்கள் ஏடுகளை இட, அவை சாம்பலாயின.  

 

     புனல் வாதம் தொடங்கினர். தோற்றவர் கழுவில் ஏறுவதென்று சமணர்கள் துணிந்தனர். வையை ஆற்றில் சமணர்கள் தமது ஏடுகளை விட, அது நீருடன் கீழ்நோக்கிச் சென்றது. திருஞானசம்பந்தப் பெருமான், "வாழ்க அந்தணர்" எனத் தொடங்கும் திருப்பாசுரத்தைப் பாடி அருளி, அந்த ஏட்டினை வைகை ஆற்றில் இட்டார். அந்த ஏடு வெள்ளத்தை எதிர்த்து வேகமாகச் சென்றது. தமது திருப்பாசுரத்தில், வேந்தனும் ஓங்குக” என்று பாடி அருளியதனால், பாண்டியன் கூன் நிமிர்ந்து, நின்ற சீர் நெடுமாறன் ஆயினார். அவ்வேடு நிற்க “வன்னியும் மத்தமும்” என்ற திருப்பதிகம் பாடினார். குலச்சிறையார் ஓடி அவ்வேட்டை எடுத்த இடம், திருவேடகம் என்பர். மும்முறையும் தோற்ற சமணர் தாமே கழுவேறி மாய்ந்தனர். பாண்டியன் சைவசீலம் மேவி வாழ்ந்தனன்.

 

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற, "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

தாதை சிலைஒடிப்பத் தான்மொழிந்தான் தீதாக,

ஈதுஅடையார் செய்யார், இரங்கேசா! - ஒதில்

அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை

செறுவார்க்கும் செய்தல் அரிது.          

 

இதன் பொருள் ---

 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! தாதை --- விதுரனாகிய சிறிய தந்தை, சிலை ஒடிப்ப --- தனது வில்லை இரு துண்டாய் முறித்து ஏறியும்படி, தீது ஆக தான் மொழிந்தான் --- அவற்கு மனக்கிலேசம் உண்டாகத் துரியோதனன் பேசினான், ஈது --- இந்தப் பிழை, அடையார் செய்யார் --- அவனுக்கு அவன் பகைவரும் செய்யமாட்டார்கள்,  (ஆகையால், இது) ஓதில் --- எடுத்துச் சொன்னால், அறிவு இல்லார் --- புல்லறிவாளர்,  தாம் தம்மை பீழிக்கும் பீழை --- தாமே தங்களை வருத்திக்கொள்ளும் வருத்தமானது, செறுவார்க்கும் --- வருத்துதற்கு உரிய தமது பகைவர்க்கும், செய்தல் அரிது --- செய்தல் அரிதாகும் (என்பதை விளக்குகின்றது).

 

         விளக்கவுரை --- கண்ணபிரான் அத்தினாபுரத்துக்கு ஐவர் தூதாகச் சென்றபோது, விதுரன் அரண்மனையில் தங்கி விருந்து உண்டார். அவரை வரவேற்று விருந்து உபசரித்ததற்காக, துரியோதனன் தன் சிற்றப்பன் ஆகிய விதுரன்மேல் கோபித்து, நிந்தித்துப் பேசினான். கண்ணபிரானை வெகு கேவலமாக ஏசினான். தன்னைத் தூஷித்து இருந்தாலும் விதுரற்கு அவனிடத்தில் அத்தனை வெறுப்பு உண்டாயிராது. நிரபராதியான கண்ணனைத் தூஷித்ததனால், அவன்மேல் விதுரற்குக் கடும்கோபம் மூண்டது. ஆகையால், அவன் யாராலும் வெல்லுதற்கரிய தனது வில்லை இரு துண்டாக ஒடித்து எறிந்ததும் அன்றி, போர்க்களத்தில் நான் வரமாட்டேன் என்று பெரும் சபதம் செய்து, அங்குத் தங்கி இராமல் தீர்த்த யாத்திரை சென்றான்.

 

     இதனால் அறிவில்லாதவன் ஆகிய துரியோதனன் தானே தனக்குத் தேட்க் கொண்ட துன்பத்தை, அவனுடைய பகைவர்க்கும் செய்தல் அரிது என்பது விளங்குகின்றது. அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை, அவர்களுடைய செறுவாராலும் செய்தல் அரிது என்றும் பொருள் உரைத்துக் கொள்ளலாம்.

 

     பின்வரும் பாடல், இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளது  காண்க.

 

விதியது வலியினாலும், மேல்

     உள விளைவினாலும்,

பதி உறு கேடு வந்து

     குறுகிய பயத்தினாலும்,

கதி உறு பொறியின் வெய்ய காம

     நோய், கல்வி நோக்கா

மதியிலி மறையச் செய்த தீமைபோல்,

     வளர்ந்தது அன்றே.

                   --- கம்பராமாயணம், மாரீசன் வதைப்படலம்.

 

இதன் பொருள் ---

 

     விதியது வலியினாலும் --- ஊழ்வினையின் ஆற்றலினாலும்; மேல் உள விளைவினாலும் --- இனிமேல் அதனால் உண்டாக இருக்கிற பயன்களாலும்; பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும் --- இலங்கை மாநகருக்கு அழிவுக்கு உரிய நிலை ஏற்பட்டு நெருங்கியுள்ள பலன்களாலும்; கதி உறு பொறியின் --- விரைவாய் உற்று பொறிகளின் வழியே; வெய்ய காம நோய் --- (இராவணனைப் பற்றிய) கொடிய காம நோயானது; கல்வி நோக்கா மதியிலி --- கல்வி அறிவு அற்ற அறிவிலி ஒருவன்; மறையச் செய்த தீமை போல் --- யாரும் அறியாமல் மறைவாகச் செய்த கெடுதி போல; வளர்ந்தது --- ஓங்கிப் பெருகியது.

 

     வேதவதி சாபம், வானரங்களால் இலங்கை அழிய வேண்டும் என நந்தி இட்ட சாபம் முதலியனவெல்லாம் நிறைவேறத் தக்க காலம் நெருங்கியது. ஞானம் அற்றவன் மறைவாகச் செய்த தீங்கும் விரைவாக வெளிப்படும்.

 

     இராவணன் அழிந்துபோக, அவன் சீதாபிராட்டி மீது கொண்ட காமநோயே காரணமாக அமைந்தது. காம நோய் காரணமாக அவன் அறிவிழந்து நின்றான். அதனால் தனக்குத் தானே கேட்டினைத் தேடிக் கொண்டான்.

 

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...