அறிவை விளக்குவதும், அறியாமையை விளைப்பதும் ஊழே.

 

 

அறிவை விளக்குவதும், அறியாமையை உண்டாக்குவதும் ஊழே.

----

 

     திருக்குறளில் "ஊழ்" என்னும் ஓர் அதிகாரம். அறத்துப்பாலின் முப்பத்துமூன்று அதிகாரங்களில், இல்லறம், துறவறம் ஆகிய இரு இயல்களின் வழி, இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றையும் தரும் சிறப்பினை உடைய அறத்தை விரித்து அருளிய நாயனார், அறத்தின் வழிப் பொருள் செய்து, இன்பத்தை நுகரும் முறை கூறத் தொடங்கி, பொருள் இன்பங்களின் முதற்காரணமாய் நிற்கும் ஊழின் வலியை அருளிச் செய்கின்றார்.

 

     நல்வினை, தீவினை என்னும் இருவினைகளின் பயனானது, அவற்றைச் செய்தவனையே சென்று அடைவதற்குக் காரணமான நியதியை ஊழ் என்றார். ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருளைக் குறித்தனவே.

 

     "ஊழ்த்தல்" என்னும் சொல்லுக்கு, பதன் அழிதல், கெடுதல், மலர்தல், விரிதல், மூடுதல், பருவம் என்று பொருள்கள் உண்டு. நாம் முற்பிறவிகளில் செய்த வினைகளின் பயன், இப் பிறவியில் ஊழாக வந்து மூடுகின்றது, மலர்கின்றது என்று பொருள்.

 

     இந்த ஊழ், பொருள் இன்பம் இரண்டினுக்கும் பொதுவாக நிற்பதாலும், இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றினையும் உண்டாக்கும் அறத்தோடு தொடர்பு உடையது என்பதாலும், அறத்துப்பாலின் இறுதியில் வைத்துக் கூறினார்.

 

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறளில், "அறியாமையை உண்டாக்குவதாகிய ஊழினை (தீவினையின் பயனை அனுபவித்தற்கு) உடைய ஒருவன், நுட்பமான பொருள்களை அறிவிக்கும் நூல்கள் பலவற்றையும் கற்றானாயினும், அவனுக்குத் தனது ஊழின் அளவாகிய பேதைமை அறிவே மேம்பட்டு விளங்கும்" என்கின்றார் நாயனார்.

 

     பேதைமை என்னும் அறியாமை மேம்படுதல், அறிவு மேம்படுதல் என்னும் இரண்டிற்கும்  ஊழ் முதற்காரணம். ஆதலால், நுண்ணிய நூல்கள் பலவற்றை ஒருவன் கற்றவன் ஆயினும், அவனுக்கு உள்ள செயற்கை அறிவினையும் ஊழானது மாற்றி, தனது வலியையே அது நாட்டும். செயற்கை அறிவினையும் ஊழ் கெடுக்க வல்லது என்பதைக் காட்ட,

 

 

நுண்ணிய நூல்பல கற்பினும், மற்றும் தன்

உண்மை அறிவே மிகும்.

 

என்னும் திருக்குறளை அருளிச் செந்தார் நாயனார்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

பற்றின் கருத்தின்படி நுண்ணிய நூல்

     பலகற்பினும்
மற்றும் தன் உண்மை அறிவே மிகும் எனின்,

     மாந்தரெல்லாம்
கற்றுஇங்கு இருக்கினும் உண்மைஅறிவு

     உனைக்காண்பது அன்றி
முற்றும் பொருள் இனி உண்டோ? புல்லாணி       

     முகில்வண்ணனே.

 

இதன் பொருள் ---

 

     திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் மேவண்ணன் ஆகிய திருமாலே! அறியாமையை உண்டாக்குவதாகிய ஊழினை உடைய ஒருவன், அவன் கொண்ட கருத்தின்படி, நுட்பமான பொருள்களை அறிவிக்கும் நூல்கள் பலவற்றையும் கற்றானாயினும், அவனுக்குத் தனது ஊழின் அளவாகிய பேதைமை அறிவே மேம்பட்டு விளங்கும் என்றால், மனிதர்கள் யாவரும் நூல்களைக் கற்று இவ்வுலகத்தில் இருந்தாலும், அவர்களிடத்தில் விளங்கவேண்டிய உண்மையான அறிவானது உன்னைக் காண்பதாகிய அறிவை அல்லாது முடிவான பொருள் ஒன்று உள்ளதோ?

 

     கற்று இங்கு இருக்கினும் --- நூல்களைக் கற்று இவ்வுலகத்தில் இருந்தாலும். உண்மையறிவு --- மெய்யறிவு. முற்றும்பொருள் --- முடிவான பொருள். முகில்வண்ணன் --- கார்நிறத்தினன்.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

 

 

கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்

குப்பை கிளைப்போவாக் கோழிபோல், - மிக்க

கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்

மனம்புரிந்த வாறே மிகும்.           ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     நொய்யரிசியைத் தவிடு போகத் தெழித்து, வேளை தவறாமல் கொடுத்து வந்தாலும், கோழியானது குப்பையைக் கிளறித் தின்னத்தான் போகும். அதுபோலவே, என்னதான் உயர்ந்த அறிவு நூல்களை எடுத்துக் கூறினாலும், கீழ்மக்கள் காதில் அது ஏறாது. அவர்கள் தங்களுக்கே இயல்பான இழிசெயல்களைச் செய்துகொண்டுதான் இருப்பர்.

 

 

பல் ஆவுள் உய்த்து விடினும், குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலை, - தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தே, தற்செய்த

கிழவனை நாடிக் கொளற்கு.         ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     பல பசுக்களின் இடையில் ஒரு இளைய பசுக்கன்றினைச் செலுத்திவிட்டாலும், அது தனது தாய்ப் பசுவைத் தேடிக் கண்டுகொள்ளும். அதுபோலவே, ஒருவன் முன் செய்த செயல்களின் பயன், அதைச் செய்த அவனிடமே சென்று சேரும்.

 

 

சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்

பட்ட விருத்தம் பலவானால், - பட்ட

பொறியின் வகைய கருமம் அதனால்

அறிவினை ஊழே அடும்.     ---  பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     குறிப்பிட்டுச் சொல்லப்படும் மிகுந்த அறிவு உடையாரிடத்தும், உண்டாகிய குற்றங்கள் பலவானால், அதற்குக் காரணம், பொருந்தியிருக்கின்ற பழவினையின் வழிப்பட்டனவாய் இருக்கும் செயல்கள் என்பது அறியப்படும். ஆகையால்,  முன் செய்த ஊழே ஒருவனது நல்லறிவினை விளங்கவொட்டாமல் தடுத்து, அவனை அறிவிலியாக்கும்.

 

         மிகுந்த அறிவுடையாரிடத்தும் குற்றங் காணப்படுதல் ஊழினால் வருவது.

 

         மிகச் சிறந்தார் என்று குறித்துக் கூறப்படும் பெரியோரிடத்துக் குற்றம் காணப்படின், அது அவர் இப்பொழுது செய்ததால் வந்தது அல்ல.  பழவினையால் பிறந்த செயல்களால் ஆனது. செயல் மாறுபடின், அதற்குக் காரணமாகிய அறிவும் மாறுபடும். ஆகவே நல்ல அறிவினைப் பேதைப்படுத்து நிற்பது ஊழேயாம்.

 


No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...