வாலிகொண்டபுரம் --- 0906. ஈயெறும்பு நரி

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ 

ஈயெறும்பு நரி (வாலிகொண்டபுரம்)

 

முருகா!

பொய் வாழ்வில் ஆசை நீக்கி,

தேவரீரது திருவடியில் அன்பு வைக்க அருள்வாய்.

 

 

தான தந்ததன தான தந்ததன

     தான தந்ததன தான தந்ததன

     தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான

 

 

ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு

     காக முண்பவுட லேசு மந்துஇது

     ஏல்வ தென்றுமத மேமொ ழிந்துமத ......வும்பல்போலே

 

ஏது மென்றனிட கோலெ னும்பரிவு

     மேவி நம்பியிது போது மென்கசில

     ரேய்த னங்கள்தனி வாகு சிந்தைவச ...... னங்கள்பேசிச்

 

சீத தொங்கலழ காவ ணிந்துமணம்

     வீச மங்கையர்க ளாட வெண்கவரி

     சீற கொம்புகுழ லூத தண்டிகையி ...... லந்தமாகச்

 

சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலு

     மாசை வெந்திடவு னாசை மிஞ்சிசிவ

     சேவை கண்டுனது பாத தொண்டனென ....அன்புதாராய்

 

சூதி ருந்தவிடர் மேயி ருண்டகிரி

     சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ

     சூரி யன்புரவி தேர்ந டந்துநடு ...... பங்கினோடச்

  

சோதி யந்தபிர மாபு ரந்தரனு

     மாதி யந்தமுதல் தேவ ருந்தொழுது

     சூழ மன்றில்நட மாடு மெந்தைமுத ...... லன்புகூர

 

வாது கொண்டவுணர் மாள செங்கையயி

     லேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள்

     மாதர் சிந்தைகளி கூர நின்றுநட ......னங்கொள்வோனே

 

வாச கும்பதன மானை வந்துதினை

     காவல் கொண்டமுரு காஎ ணும்பெரிய

     வாலி கொண்டபுர மர்ந்துவளர் ...... தம்பிரானே.

 

 

பதம் பிரித்தல்

 

 

, எறும்பு, நரி, நாய்கணம், கழுகு

     காகம் உண்ப உடலே சுமந்து, இது

     ஏல்வது என்று மதமே மொழிந்து, மத ....உம்பல்போலே

 

ஏதும் என்தன் இட கோல் எனும் பரிவு

     மேவி, நம்பி இது போதும் என்க, சிலர்

     ஏய் தனங்கள் தனி வாகு சிந்தை வச......னங்கள்பேசிச்

 

சீத தொங்கல் அழகா அணிந்து மணம்

     வீச மங்கையர்கள் ஆட, வெண்கவரி

     சீற, கொம்புகுழல் ஊத, தண்டிகையில் ...... அந்தம்ஆகச்

 

சேர் கனம் பெரிய வாழ்வு கொண்டு உழலும்

     ஆசை வெந்திட, உன்ஆசை மிஞ்சி, சிவ

     சேவை கண்டு, னது பாத தொண்டன் என ....அன்புதாராய்.

 

சூது இருந்த விடர் மேய் இருண்ட கிரி

     சூரர் வெந்துபொடி ஆகி மங்கிவிழ,

     சூரியன் புரவி தேர் நடந்து, நடு ...... பங்கின்ஓட,

 

சோதி அந்த பிரமா புரந்தரனும்

     ஆதி அந்த முதல் தேவரும் தொழுது

     சூழ, மன்றில் நடம் ஆடும் ந்தை முதல் ......அன்புகூர

 

வாது கொண்ட அவுணர் மாள செங்கை அயில்

     ஏவி, அண்டர் குடிஏற, விஞ்சையர்கள்

     மாதர் சிந்தைகளி கூர நின்று நடனம் ....கொள்வோனே!

 

வாச கும்ப தன மானை வந்து, தினை

     காவல் கொண்ட முருகா! எணும் பெரிய

     வாலி கொண்டபுரம் அமர்ந்துவளர் ...... தம்பிரானே.

 

 

பதவுரை

 

 

         சூது இருந்த விடர் மேய் இருண்டகிரி --- வஞ்சகத்துக்கு இடமாக குகைகளைக் கொண்டு இருந்த மிக இருண்ட மலையான கிரெளஞ்ச மலையும்,

 

         சூரர் வெந்து பொடியாகி மங்கி விழ --- சூரர்களும் வெந்து பொடியாகி அழிந்து விழ,

 

         சூரியன் புரவி தேர் நடந்து நடுபங்கின் ஓட --- சூரியனது குதிரைகள் பூட்டிய தேர் (சூரனது ஆட்சிக்கு முன்பு போல) சென்று நேர்வழியில் வானின் நடுப்பாகத்தில் ஓட

 

         சோதி அந்த பிரமா, புரந்தரனும் --- ஒளி பொருந்திய அந்தப் பிரம தேவனும், இந்திரனும்,

 

         ஆதி அந்தமுதல் தேவரும் தொழுது சூழ் --- முதல் தேவரிலிருந்து கடைசித் தேவர் வரை எல்லாத் தேவர்களும் வணங்கிச் சூழ்ந்து நிற்க,

 

         மன்றில் நடமாடும் எந்தை முதல் அன்பு கூர --- பொன்னம்பலத்தில் திருநடனம் புரிந்து அருளுகின்ற எமது தந்தையும், முழுமுதல் கடவுளும் ஆகிய சிவபிரான் திருவுள்ளத்தில் அன்பு கொண்டிருக்க,

 

         வாது கொண்ட அவுணர் மாள --- போருக்கு வாதுசெய்து வந்த அசுரர்கள் மாண்டு அழிய,

 

         செங்கை அயில் ஏவி --- செங்கையில் திகழும் வேலாயுதத்தை விடுத்து அருளி,

 

         அண்டர் குடியேற --- தேவர்கள் (முன்புபோல் தமது  பொன் நாட்டில்) குடியேற,

 

         விஞ்சையர்கள் மாதர் சிந்தை களி கூர --- வித்தியாதரர்களின் மாதர்கள் மனம் மிக மகிழ,

 

         நின்று நடனம் கொள்வோனே --- போர்க்களத்திலே நின்று திருநடனம் புரிந்தவரே!

 

         வாச கும்ப தன மானை வந்து --- மணம் வீசுவதும், குடத்தை ஒத்ததும் ஆன மார்பகங்களை உடையவளும், மானின் சாயலை உடையவளும் ஆகிய வள்ளிநாயகியிடம் வந்து,

 

         தினை காவல் கொண்ட முருகா --- தினைப்புனத்தைக் காவல் காக்கும் தொழிலை மேற்கொண்ட முருகப் பெருமானே!

 

         எணும் பெரிய வாலி கொண்டபுரமே அமர்ந்து வளர் தம்பிரானே --- மதிக்கத்தக்க பெருமைவாய்ந்த வாலிகொண்டபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருள் வளரும் தனிப்பெரும் தலைவரே!

 

ஈ எறும்பு நரி நாய் கணம் கழுகு காகம் --- ஈ, எறும்பு, நரி, நாய், பேய், கழுகு, காகம் இவைகள்

 

         உண்ப உடலே சுமந்து --- (கடைசியில்) உண்ணப்போகின்ற இந்த உடலை நான் சுமந்து,

 

         இது ஏல்வது என்று மதமே மொழிந்து --- இதுவே எனக்குப் பொருத்தமாவது என்று எண்ணி, பெரிதாக மதித்துப் பேசியிருந்து,

 

        மத உம்பல் போலே --- மதம் பிடித்த யானையைப் போலே

 

         ஏதும் என்றன் இட கோல் எனும் பரிவு மேவி --- எல்லாமே என்னுடைய ஆட்சியில் அடங்கியவை என்னும் படியான பரிவினைக் கொண்டிருந்து,

 

        நம்பி --- இதுவே நிலைத்திருக்கும் என நம்பி,

 

         இது போதும் என்க சிலர் --- சிலர் இந்த ஆடம்பரங்கள் இவனுக்குப் போதுமோ என்று கூறும்படியாக,

 

         ஏய் தனங்கள் --- பொருந்திய செல்வங்களால்,

 

        தனி வாகு சிந்தை வசனங்கள் பேசி --- ஒப்பற்ற கர்வத்தை மனத்தில் கொண்டு, (அதனால் விளைந்த) பேச்சுக்கள் பேசி,

 

         சீத தொங்கல் அழகா அணிந்து மணம் வீச --- குளிர்ந்த மாலைகளை அழகாக அணிந்துகொண்டு அவற்றின் நறுமணம் வீச,

 

         மங்கையர்கள் ஆட --- மங்கையர்கள் நடனமாட,

 

         வெண்கவரி சீற --- வெண்சாமரங்கள் இரட்ட,

 

        கொம்பு குழல் ஊத --- ஊதுகொம்பு, குழல் முதலியவை ஊதிவர,

 

         தண்டிகையில் அந்தம் ஆக சேர் கனம் --- சிவிகையினில் அழகாகப் பொருந்திய பெருமையே,

 

       பெரிய வாழ்வு கொண்டு உழலும் ஆசை வெந்திட --- பெரிய வாழ்வாகக் கொண்டு திரியும் (எனது) ஆசையானது வெந்தழிய,

 

உன் ஆசை மிஞ்சி --- தேவரீர் பால் ஆசை மிகுந்து,

 

சிவ சேவை கண்டு --- மங்களகரமான தரிசனத்தைக் கண்டு அனுபவித்து,

 

உனது பாத தொண்டன் என அன்பு தாராய் --- தேவரீரத் திருவடித் தொண்டன் என்று சொல்லிக் கொள்ளும்படியான அன்பை எனக்குத் தந்தருளுவாயாக.

 

 

பொழிப்புரை

 

     வஞ்சகத்துக்கு இடமாக குகைகளைக் கொண்டு இருந்த மிக இருண்ட மலையான கிரெளஞ்ச மலையும்,  சூரர்களும் வெந்து பொடியாகி அழிந்து விழ,  சூரியனது குதிரைகள் பூட்டிய தேர் சூரனது ஆட்சிக்கு முன்பு போலச் சென்று நேர்வழியில் வானின் நடுப்பாகத்தில் ஓட, ஒளி பொருந்திய அந்தப் பிரம தேவனும், இந்திரனும், முதல் தேவரிலிருந்து கடைசித் தேவர் வரை எல்லாத் தேவர்களும் வணங்கிச் சூழ்ந்து நிற்க, பொன்னம்பலத்தில் திருநடனம் புரிந்து அருளுகின்ற எமது தந்தையும், முழுமுதல் கடவுளும் ஆகிய சிவபிரான் திருவுள்ளத்தில் அன்பு கொண்டிருக்க, போருக்கு வாதுசெய்து வந்த அசுரர்கள் மாண்டு அழிய,  செங்கையில் திகழும் வேலாயுதத்தை விடுத்து அருளி, தேவர்கள் முன்புபோல் தமது  பொன் நாட்டில் குடியேற,  வித்தியாதரர்களின் மாதர்கள் மனம் மிக மகிழ, போர்க்களத்திலே நின்று திருநடனம் புரிந்தவரே!

 

         மணம் வீசுவதும், குடத்தை ஒத்ததும் ஆன மார்பகங்களை உடையவளும், மானின் சாயலை உடையவளும் ஆகிய வள்ளிநாயகியிடம் வந்து, தினைப்புனத்தைக் காவல் காக்கும் தொழிலை மேற்கொண்ட முருகப் பெருமானே!

 

         மதிக்கத்தக்க பெருமைவாய்ந்த வாலிகொண்டபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருள் வளரும் தனிப்பெரும் தலைவரே!

 

, எறும்பு, நரி, நாய், பேய், கழுகு, காகம் இவைகள் கடைசியில் உண்ணப்போகின்ற இந்த உடலை நான் சுமந்து,  இதுவே எனக்குப் பொருத்தமாவது என்று எண்ணி, பெரிதாக மதித்துப் பேசியிருந்து, மதம் பிடித்த யானையைப் போலே எல்லாமே என்னுடைய ஆட்சியில் அடங்கியவை என்னும் படியான பரிவினைக் கொண்டிருந்து, இதுவே நிலைத்திருக்கும் என நம்பி நான் இருக்க, சிலர் இந்த ஆடம்பரங்கள் இவனுக்குப் போதுமோ என்று கூறும்படியாக, எனக்குப் பொருந்திய செல்வங்களால், ஒப்பற்ற கர்வத்தை மனத்தில் கொண்டு, அதனால் விளைந்த பேச்சுக்கள் பேசி,  குளிர்ந்த மாலைகளை அழகாக அணிந்துகொண்டு அவற்றின் நறுமணம் வீச, மங்கையர்கள் நடனமாட,  வெண்சாமரங்கள் இரட்ட, ஊதுகொம்பு, குழல் முதலியவை ஊதிவர, சிவிகையினில் அழகாகப் பொருந்திய பெருமையே, பெரிய வாழ்வாகக் கொண்டு திரியும் எனது ஆசையானது வெந்தழிய, தேவரீர் பால் ஆசை மிகுந்து, மங்களகரமான தரிசனத்தைக் கண்டு அனுபவித்து, தேவரீரது திருவடித் தொண்டன் என்று சொல்லிக் கொள்ளும்படியான அன்பை எனக்குத் தந்தருளுவாயாக.

 

 

விரிவுரை

 

ஈ எறும்பு நரி நாய் கணம் கழுகு காகம் உண்ப உடலே சுமந்து, இது ஏல்வது என்று மதமே மொழிந்து ---

 

கணம் --- பேய்.

 

ஏல்வது --- பொருந்துவது.

 

சிலர் அருமையாக வீடுகட்டி, வர்ணம் பூசி, தூண்களுக்குக் கூட உரைபோட்டு அழகு படுத்துவர். இந்த வீடு நமக்கே சொந்தம் என்று எண்ணி இறுமாந்திருப்பர். அதற்கு வரியும் செலுத்துவார்கள். ஆனால் அந்த வீட்டில் வாழும் பல்லி, எட்டுக்கால் பூச்சி கரப்பான் பூச்சி முதலியவை இந்த வீடு நமக்குத் தான் சொந்தம் என்று கருதிக் கொண்டிருக்கின்றன. இவன் அந்த பிராணிகள் மீது வழக்குத் தொடர முடியுமா? அதுபோல், இந்த உடம்பு நமக்கே சொந்தம் என்று நாம் கருதுகின்றோம். இந்த உடம்பில் வாழும் எண்ணற்ற புழுக்கள் தமக்குச் சொந்தம் என்று மகிழ்ந்திருக்கின்றன. அன்றியும் இவ் உடம்பை நெருப்பு தனக்குச் சொந்தம் என்று எண்ணியிருக்கின்றது. மயானத்தில் உள்ள பூமி இவ்வுடல் தனக்கே சொந்தம் என்று எண்ணுகின்றது. பருந்துகள் தமக்கு உரியது என்று உன்னி இருக்கின்றன. நரிகள் நமக்குச் சொந்தம் என்று நினைக்கின்றன. நாய் நமக்கே இது உரியது என்று எண்ணுகின்றது. இத்தனை பேர் தத்தமக்குச் சொந்தம் என்று எண்ணுகின்ற உடம்பை நாம் எழுந்தவுடன் இறைவன் திருநாமத்தைக் கூறாமலும், பல் தேய்க்காமலும் கூட, உண்டு உடுத்து வளர்க்கின்றோம்.

 

"எரி எனக்கு என்னும், புழுவோ எனக்கு என்னும்,

     இந்த மண்ணும்

சரி எனக்கு என்னும், பருந்தோ எனக்கு என்னும்,

     தான் புசிக்க

நரி எனக்கு என்னும், புன்நாய் எனக்கு எனும்,

     இந்நாறு உடலைப்

பிரியமுடன் வளர்த்தேன், இதனால் என்ன

     பேறு எனக்கே".  

                                   

என்கின்றார் பட்டினத்து அடிகள்.

"காட்டிலே இயல் நாட்டிலே பயில்
     வீட்டிலே உல ...... கங்கள் ஏசக்
காக்கை நாய்நரி பேய்க் குழாம் உண
     யாக்கை மாய்வது ...... ஒழிந்திடாதோ?"      

 

என்று இரங்குகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     இந்த உடம்பு அழிந்து போகக் கூடியது. உயிரானது, அது எடுத்த உடம்போடு விதித்த நாள் வரையில் மட்டுமே ஒட்டி இருக்கும்.

 

"மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்

தலைமிசைக் கொண்ட குடையர் --- நிலமிசைத்

துஞ்சினார் என்று எடுத்துத் தூற்றப்பட்டடார் அல்லால்,

எஞ்சினார் இவ்வுலகத்து இல்".           

 

என்கின்றது நாலடியார்.

 

யானையின் மீது அமர்ந்து, மலைமேல் தோன்றும் முழுநிலவைப் போன்ற வெண்கொற்றக் குடை பிடித்துச் சென்ற பேரரசர்கள் எல்லாமும் எப்படியும் ஒரு நாள் இறந்து போயினர் என்று தான் சொல்லப்படுகின்றதே ஒழிய, மரணத்தை வென்று யாரும் இந்த உலகில் நின்று நிலைத்தது இல்லை. எல்லோரும் ஒரு நாள் இறக்க நேரும். அப்போது இந்த உடலும் அழிந்து போகும்.

 

இந்த உடம்பு மட்டுமல்ல. உடம்பை எடுத்து வந்த பிறகு அனுபவிக்கின்ற சுகங்கள் அத்தனையுமே ஒரு நாள் நமது என்று இல்லாமல் போகும்.

 

மத உம்பல் போலே ---

 

மத உம்பல் --- மதம் பிடித்த யானை.

 

ஏதும் என்றன் இட கோல் எனும் பரிவு மேவி நம்பி ---

 

மதம் என்பது ஒருவனுக்குப் பிடித்து விட்டால், அவனுக்கு அறிவு வேலை செய்யாது. எல்லாமே தன்னுடையது என்றும், எல்லாமே தனது ஏவலின்படியுமே நடக்கும், நடக்கவேண்டும் என்று இருமாந்து இருப்பான். "கொடு மதம் என்னும் துட்ட கண்கெட்ட ஆங்காரி" என்று வள்ளல்பெருமான் அருளி உள்ளது அறிக.

 

ஏய் தனங்கள் தனி வாகு சிந்தை வசனங்கள் பேசி ---

 

தனி --- சிறந், ஒப்பற்ற,

 

வாகு --- திறமை,

 

சீத தொங்கல் அழகா அணிந்து மணம் வீச ---

 

சீதம் --- குளிர்ச்சி.

 

தொங்கல் --- மாலை. தொங்குவதால் மாலை எனப்பட்டது.

 

மங்கையர்கள் ஆட, வெண்கவரி சீற, கொம்பு குழல் ஊத, தண்டிகையில் அந்தம் ஆக சேர் கனம், பெரிய வாழ்வு கொண்டு உழலும் ஆசை வெந்திட ---

 

பொன்னும், பொருளும், மண்ணும் பெற்றதால் உண்டான பொய்யான வாழ்வில் உண்டான ஆசையைக் கண்டித்து அடிகளார் பாடி அருளுகின்றார்.

 

படர் புவியின் மீது மீறி வஞ்சர்கள்

     வியனின் உரை பானுவாய் வியந்து உரை

     பழுதில் பெரு சீலநூல்களும், தெரி ...... சங்கபாடல்

பனுவல், கதை, காவ்யம் ஆம் எண் எண்கலை

     திருவளுவ தேவர் வாய்மை என்கிற

     பழமொழியை ஓதியே உணர்ந்து,பல் ......சந்தமாலை,

மடல்,பரணி, கோவையார், கலம்பகம்

     முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும்,

     வகை வகையில் ஆசு சேர் பெருங்கவி ..... சண்டவாயு

மதுரகவி ராஜன் நான் என், வெண்குடை,

     விருதுகொடி, தாள மேள தண்டிகை,

     வரிசையொடு உலாவும் மால் அகந்தை ......தவிர்ந்திடாதோ?

                                                                      --- திருச்செந்தூர்த் திருப்புகழ்.

 

நிகமம் எனில் ஒன்றும் அற்று, நாடொறு

     நெருடு கவி கொண்டு வித்தை பேசிய

     நிழலர், சிறு புன்சொல் கற்று, வீறு உள ......பெயர்கூறா,

நெளிய முது தண்டு சத்ர சாமர

     நிபிடம்இட வந்து, கைக்கு மோதிரம்,

     நெடுகி அதி குண்டல ப்ரதாபமும் ...... உடையோராய்,

முகமும் ஒரு சம்பு மிக்க நூல்களும்,

     முதுமொழியும் வந்து இருக்குமோ எனில்,

     முடிவில் அவை ஒன்றும் அற்று, வேறு ஒரு ...... நிறமாகி

முறியும் அவர் தங்கள் வித்தை தான், இது

     முடிய உனை நின்று பத்தியால் மிக

     மொழியும், வளர் செஞ்சொல் வர்க்கமே வர ......அருள்வாயே.--- பழநித் திருப்புகழ்.

 

சக சம்பக் குடைசூழ் சிவிகைமெல்

     மத இன்பத்துடனே, பல பணி

     தனிதம், பட்டு உடையோடு, கல்முரசு ...... ஒலிவீணை

தவளம் தப்புடனே கிடுகிடு

     நடை தம்பட்டம் இடோல் பலஒலி

     சதளம் பொன் தடிகாரரும் இவை ...... புடைசூழ,

வெகு கும்பத்துடனே, பலபடை

     கரகம் சுற்றிடவே வர, இசை

     வெகு சம்பத்துடனே, அழகுடன் ...... இதமேவும்

விருமம் சித்திரமாம் இது, நொடி

     மறையும் பொய்ப் பவுஷோடு உழல்வது

     விட, உம்பர்க்கு அரிதாம் இணையடி ...... தருவாயே.---  சிதம்பரத் திருப்புகழ்.

 

பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை என்னும் இந்த மூவாசையும் தவிர்க்கப்பட வேண்டியது என்பதை நெஞ்சறிவுறுத்தலாக வள்ளல் பெருமான் பாடி அருளி இருப்பதையும் காண்க.

 

நின்ஆசை என்என்பேன், நெய்வீழ் நெருப்பு எனவே

பொன்ஆசை மேன்மேலும் பொங்கினையே, - பொன்ஆசை

 

வைத்து, ழந்து, வீணே வயிறு எரிந்து மண்ணுலகில்

எத்தனைபேர் நின்கண் எதிர்நின்றார், - தத்துகின்ற

 

பொன்உடையார் துன்பப் புணரி ஒன்றே அல்லது, மற்று

என்உடையார் கண்டு இங்கு இருந்தனையே - பொன்இருந்தால்

 

ஆற்றல் மிகு தாயும் அறியா வகையால் வைத்திட, ஓர்

ஏற்றஇடம் வேண்டும், தற்கு என்செய்வாய், - ஏற்றஇடம்

 

வாய்த்தாலும், அங்கு அதனை வைத்த இடம் காட்டாமல்

ஏய்த்தால், சிவசிவ மற்று என்செய்வாய், - ஏய்க்காது

 

நின்றாலும், பின் அதுதான் நீடும் கரி ஆனது

என்றால், அரகர, மற்று என்செய்வாய், - நன்றாக

 

ஒன்று ஒருசார் நில் என்றால் ஓடுகின்ற நீ, அதனை

என்றும் புரப்பதனுக்கு என் செய்வாய், - வென்றியொடு

 

பேர்த்துப் புரட்டிப் பெருஞ்சினத்தால் மாற்றலர்கள்

ஈர்த்துப் பறிக்கில் அதற்கு என்செய்வாய், - பேர்த்தெடுக்கக்

 

கை புகுத்தும் கால் உள் கருங்குளவி செங்குளவி

எய் புகுத்தக் கொட்டிடில் மற்று என்செய்வாய், - பொய்புகுத்தும்

 

பொன்காவல் பூதம் அது போய் எடுக்கும் போது, மறித்து

என்காவல் என்றால், மற்று என்செய்வாய், - பொன்காவல்

 

வீறுங்கால், ஆணவமாம் வெங்கூளி நின்தலைமேல்

ஏறுங்கால் மற்று அதனுக்கு என்செய்வாய், - மாறும்சீர்

 

உன்நேயம் வேண்டி உலோபம் எனும் குறும்பன்

இன்னே வருவன் அதற்கு என்செய்வாய், - முன் ஏதும்

 

இல்லா நமக்கு, ண்டோ இல்லையோ என்னும் நலம்

எல்லாம் அழியும் அதற்கு என்செய்வாய், - நில்லாமல்

 

ஆய்ந்தோர் சிலநாளில் ஆயிரம்பேர் பக்கல் அது

பாய்ந்து ஓடிப் போவது நீ பார்த்திலையே, - ஆய்ந்தோர்சொல்

 

கூத்து ஆட்டு அவைசேர் குழாம்விளிந்தால் போலும் என்ற

சீர்த்தாள் குறள்மொழியும் தேர்ந்திலையே.........

 

.....       .....       .....       .....       இந்நிலத்தில்

 

நீள்மயக்கம் பொன்முன் நிலையாய் உலகியலாம்

வீண்மயக்கம் என்று அதனை விட்டிலையே - நீள்வலயத்து

 

இச்செல்வம் இன்றி இயலாதேல், சிற்றுயிர்கள்

எச்செல்வம் கொண்டு இங்கு இருந்தனவே - வெச்சென்ற

 

மண்ணாசை கொண்டனை நீ, மண்ணாளும் மன்னர் எலாம்

மண்ணால் அழிதல் மதித்திலையே - எண்ணாது

 

மண்கொண்டார் மாண்டார்தம் மாய்ந்தஉடல் வைக்க, அயல்

மண்கொண்டார் தம்இருப்பில் வைத்திலரே, - திண்கொண்ட

 

விண்ஏகும் கால் அங்கு வேண்டும் என ஈண்டுபிடி

மண்ணேனும் கொண்டு ஏக வல்லாரோ - மண்நேயம்

 

என்னது என்றான் முன்ஒருவன், என்னது என்றான் பின்ஒருவன்

இன்னது நீ கேட்டு இங்கு இருந்திலையோ - மன் உலகில்

 

கண்காணி யாய்நீயே காணி அல்லாய், நீ இருந்த

மண்காணி என்று மதித்தனையே, - கண்காண

 

மண்காணி வேண்டி வருந்துகின்றாய் நீ, மேலை

விண்காணி வேண்டல் வியப்பு அன்றே, - எண்காண

 

அந்தரத்தில் நின்றாய் நீ, அந்தோ? நினை விட மண்

அந்தரத்தில் நின்றது அறிந்திலையே - தந்திரத்தில்

 

மண்கொடுப்பேன் என்று உரைக்கில் வைவார் சிறுவர்களும்,

மண்கொடுக்கில் நீதான் மகிழ்ந்தனையே, - வண்கொடுக்கும்

 

வீடு என்றேன், மற்று அதை மண் வீடு என்றே நீ நினைந்தாய்,

வீடு என்ற சொல்பொருளை விண்டிலையே, - நாடொன்றும்

 

மண்ணால் மரத்தால் வனைகின்ற வீடு அனைத்தும்

கண்ணாரக் கட்டு அழிதல் கண்டிலையோ, - மண்ணான

 

மேல்வீடும், அங்குடைய வேந்தர்களும், மேல்வீட்டு அப்

பால்வீடும் பாழாதல் பார்த்திலையோ, - மேல்வீட்டில்

 

ஏறுவனே என்பாய், இயமன் கடா மிசை வந்து

ஏறுவனேல், உன் ஆசை என் ஆமோ, - கூறிடும்இம்

 

மண்அளித்த வேதியனும் மண்விருப்பம் கொள்ளானேல்,

எண்ணம் உனக்கு எவ்வாறு இருந்ததுவே, - மண்ணிடத்தில்

 

ஆகாத் துரும்பு இடத்தும் ஆசைவைத்தாய் என்னில் உன்தன்

ஏகாப் பெருங்காமம் என்சொல்கேன்....         ---  திருவருட்பா.

 

 

முடிசார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு

பிடிசாம்பராய் வெந்து மண் ஆவதும் கண்டு, பின்னும் இந்தப்

படிசார்ந்த வாழ்வை நினைப்பது அல்லால், பொன்னின் அம்பலவர்

அடிசார்ந்து நாம் உய்ய வேண்டும் என்றே அறிவார் இல்லையே. --- பட்டினத்தார்.

 

தண்டிகை பல்லக்கு உடனே சகல சம்பத்துகளும்

உண்டு என்று நம்பி உணர்வு அழிந்தேன் பூரணமே.  --- பட்டினத்தார்.

 

பட்டு உடையும், பொன்பணியும், பாவனையும், தீவினையும்

விட்டு விட்டு உன் பாதம் விரும்புவது எக்காலம்.

தண்டிகையும், சாவடியும், சாளிகையும், மாளிகையும்

கண்டு களிக்கும் கருத்து ஒழிவது எக்காலம். --- பத்ரகிரியார்.

 

செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர்,

கல்வியில் சிறந்தோர், கடுந்திறல் மிகுந்தோர்,

கொடையில் பொலிந்தோர், படையில் பயின்றோர்,

குலத்தின் உயர்ந்தோர், நலத்தினின் வந்தோர்,

எனையர் எம் குலத்தினர் இறந்தோர், அனையவர்

பேரும் நின்றில போலும், தேரின்

நீயும் அஃது அறிதி அன்றே, மாயப்

பேய்த் தேர் போன்றும் நீப்பரும் உறக்கத்துக்

கனவே போன்றும் நனவுப் பெயர் பெற்ற

மாய வாழ்க்கையை மதித்து, காயத்தைக்

கல்லினும் வலிதாக் கருதி, பொல்லாத்

தன்மையர் இழிவு சார்ந்தனை நீயும்...   --- பதினோராம் திருமுறை.

 

எந்தை நின் திருவருள் நாட்டம் கருணையின் பெறலும்,

யாவையும் எனக்குப் பொய் எனத் தோன்றி,

மேவரும் நீயே மெய் எனத் தோன்றினை,

ஓவியப் புலவன் சாயல் பெற எழுதிய

சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித்

தவிராது தடவினர் தமக்குச்

சுவராய்த் தோன்றும் துணிவு போன்று எனவே.     --- பதினோராம் திருமுறை.

 

உன் ஆசை மிஞ்சி ---

 

அழிவைத் தரும் பொய்யானவற்றில் வைத்த ஆசையை மாற்றி, அழியாத வாழ்வைத் தருகின்ற இறைவன் திருவடியில் ஆசை வைக்கவேண்டும் என்று அடிகளார் அறிவுறுத்துகின்றார்.

 

சிவ சேவை கண்டு ---

 

சிவம் என்னும் சொல் மங்களத்தைக் குறிக்கும்.

 

"அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்" என்றார் திருமூல நாயனார். பொன் பொருள் முதலியவற்றோடு வாழும் உலக வாழ்வில் உயிர்கள்பால் அன்பு மிகாது. வன்மே மிகுந்து இருக்கும். "பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருள்" நீங்குமானால், அறியாமையாகிய இருள் நீங்கி, அன்பு சிறக்கும். அதனால் அருள் சுரக்கும். எனவே, எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அந்தண்மை" வேண்டும் என்று அடிகளார் அறிவுறுத்தியதாகவும் கொள்ளலாம்.

 

 

சூது இருந்த விடர் மேய் இருண்டகிரி ---

 

விடர் --- மலைப் பிளவு என்றும் மலைக் குகை என்றும் பொருள்படும்.

 

இருண்ட கிரி --- "இருளான துன்ப மருள் மாயை" என்றார் அடிகளார் பிறிதோரிடத்தில். இருளான துன்பத்தைச் செய்வதால் "இருண்ட கிரி" என்றார்.

 

இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சும் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், யாவரையும் தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.

 

"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.

 

"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்

     இள க்ரவுஞ்சம் தனோடு

          துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்

துரத்தி, அன்று இந்த்ர லோகம்

     அழித்தவன் பொன்றுமாறு,

          சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!"

 

என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.

 

கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.

 

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்

கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்

பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட

தனி வேலை வாங்கத் தகும்."

 

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலால் இக் கருத்து இனிது விளங்கும்.

 

"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.

 

 

சூரியன் புரவி தேர் நடந்து நடுபங்கின் ஓட ---

 

சூரனது ஆட்சியில் சூரியனுடைய வெம்மையான கிரணங்கள் அவனது நாட்டின் மேல் வீசக் கூடாது என்னும் ஆணை இருந்தது.

 

அறத்தினை விடுத்த தீயோன் அருக்கனை நோக்கி, நம் ஊர்ப்

புறத்தினில் அரண மீதாய்ப் போகுதல் அரிது, கீழ்மேல்

நிறுத்திய சிகரி ஊடு நெறிக்கொடு புக்கு, வான்போய்

எறித்தனை திரிதி நாளும் இளம் கதிர் நடாத்தி என்றான்.     --- கந்தபுராணம்.

    

முருகப் பெருமான் வேலாயுதத்தினை விடுத்து அருளி, சூராதி அவணர்களைத் தொலைக்க, முன்பு போல, சூரியனது குதிரைகள் பூட்டிய தேரானது நேர்வழியில் வானின் நடுப்பாகத்தில் ஓடத் தொடங்கியது.

 

        

வாச கும்ப தன மானை வந்து, தினை காவல் கொண்ட முருகா ---

 

நாள் தோறும், வள்ளிமலைச் சாரலில் தவம் செய்திருந்த ஒரு முனிவர் கண்ணருளால் மானின் வயிற்று உதித்த வள்ளியிநாயகியின் திருவடியை வருடி நின்று, தினைப்பயிரை உண்ண வந்த மயில், குயில், கிளி ஆகிய பறவை இனங்களை, புதிய கவண் கல் கொண்டு ஓட்டும்படி முருகப் பெருமான் திருத்தொண்டு புரிந்ததாக அடிகளார் அருளுகின்றார்.

 

மலைதனில் ஒரு முநி தந்த மாதுதன்

மலர்அடி வருடியெ நின்று, நாள்தொறும்

     மயில்பயில் குயில்கிளி வம்பிலே கடி...... தொண்டினோனே!  --- சீகாழித் திருப்புகழ்.

 

எணும் பெரிய வாலி கொண்டபுரமே அமர்ந்து வளர் தம்பிரானே ---

 

"எண்ணும்" என்னும் சொல் "எணும்" எனக் குறுகி வந்தது. எண்ணும் --- மதிக்கத்தக்க, போற்றத்தக்க.

 

வாலிகொண்டபுரம் என்னும் திருத்தலம் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கில், பெரம்பலூருக்கு அருகில் உள்ளது.

 

கருத்துரை

 

     முருகா!  பொய் வாழ்வில் ஆசை நீக்கி,  தேவரீரது திருவடியில் அன்பு வைக்க அருள்வாய்.


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...