நல்லார் வறுமை நன்று --- கல்லாதான் செல்வம் தீது

 

நல்லார் வறுமை நன்று

கல்லாதான் செல்வம் தீது

-----

 

     திருக்குறளில் "கல்லாமை" என்னும் அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "கற்றறிவு உடைய சான்றோரிடத்து உண்டான வறுமையைக் காட்டிலும், நூல்களைக் கல்லாத கடையரிடம் உண்டான செல்வம் துன்பமானதே" என்கின்றார் நாயனார்.

 

     "கடையே கல்லாதவர்" என்று நாயனார் பிறிதோரிடத்தில் காட்டி உள்ளதால், கற்றார் நல்லோர் என்றும், கல்லாதார் தீயோர் என்றும் பொதுவாகக் கொள்ளப்பட்டது. கற்றோரிலும் தீயோர் உண்டு. கல்லாதாரிலும் நல்லோர் உண்டு.

 

     செல்வம் கற்றாரிடத்து நிற்கவேண்டும். தரித்திரம் கல்லாதவரிடத்து நிற்கவேண்டும். இரண்டுமே மாறுபட்டு நிற்பதால், செல்வம் இல்லாமையால் கற்றார் துன்புற மாட்டார் என்பதும், செல்வம் இருந்தும் கல்வி இல்லாமையால் கல்லாதவர் துன்புறுவார் என்பதும் பெறப்பட்டது.

 

     ஆனால், பரிமேலழகர், செல்வம் இல்லாமையால் கற்றார் துன்றுபுவர் என்கின்றார். அது உண்மைதான். என்றாலும், தமது முன்வினைப் பயனால் செல்வம் உண்டாகவில்லை என்னும் உண்மையை உணர்ந்து, தாம் துன்புறுவதைக் கற்றார் ஒரு பொருட்டாகக் கொள்ளமாட்டார். கல்வி அறிவில்லாதவர்க்கோ, அவர் படைத்துள்ள செல்வம் அவர்க்கும், பிறருக்கும் பயன்படாததோடு, அவரது செல்வம் அவரை நன்னிலையில் நிறுத்தத் துணை புரியவில்லையாதலால், அவர் இறுதியில் செல்வத்தின் பயனைப் பெறாது துன்புறுவர். மேலும், நியாய அநியாயங்களை உணராமல் அவர் பிறர்க்குத் துன்பம் செய்வார் என்பதும் வெளிப்படை.

 

     பேரறிவாளன் செல்வத்தின் திறனறிந்தவன். ஆதலால் அதை ஆக்கவழியில் பயன்படுத்துவான். அவன் பெற்ற செல்வம் ஊருணியில் நீர் நிறைந்தாற்போல் பலர்க்கும் நன்மை விளைவிக்கும். அவனே வறுமைப் பிணியால் வாடினால், அவனிடமுள்ள கல்விச்செல்வத்தின் துணைக்கொண்டு, வறுமையிலும் செம்மையராய், சுடச்சுடரும் பொன்போல் வறுமைப் பிணி வருத்த வருத்த, நற்குண நற்செயல்களின் சிறுதும் நீங்காதவராய் ஒளியுடன் விளங்குவான். மாறாக, கல்லாத ஒருவனிடம் செல்வம் குவிந்துவிட்டால், அவனிடம் கல்விப்பயன் இல்லாததால், கிடைத்த செல்வத்தைப் பயனற்றதாக ஆக்கி, அதை அழிவுச் சத்தியாக மாற்றிவிடுவான். நல்லார் வறுமையுற்றாலும் அந்நிலையிலும் செம்மையுடன் வாழ்த் தெரிந்தவர். வறுமைக் காலத்து அவர் மட்டுமே வருந்துவர். ஆனால் கல்லார் செல்வம் அவர்க்கும் பிறர்க்கும் தீங்கு செய்யும். எனவே நல்லார் வறுமையினும் கல்லாதார் செல்வம் தீயது என்று சொல்லப்பட்டது.

 

ஆற்றுப் பெருக்கு அற்று, டிசுடும் அந்நாளும் அவ்வாறு

ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு

நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்

இல்லை என மாட்டார் இசைந்து.

 

என்று நல்வழிப் பாடல் கூறுவதால், கற்றார் அடையும் வறுமையால் பிறர்க்குத் துன்பம் இல்லை. ஆனால், கல்லாதாரின் செல்வத்தால் துன்பம் விளையும்.

 

திரு கல்லாரைக் கெடுக்கும் ---- வறுமை நல்லாரைக் கெடுக்காது.


நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே,

கல்லார்கண் பட்ட திரு.        

 

என்பது திருவள்ளு நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பெரியபுராணத்தில் வரும் கலிய நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடி அருளிய பாடல் ஒன்று....

 

எள்ளா விளக்கு அரன்பால் ஏற்றவே, வாள்கலியர்

கொள்ளாரேல் ஏதும் கொடார்உலகில் - உள்ளார்கொல்

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட்ட திரு.        

 

இதன் பொருள் ---

 

     தொண்டை மண்டலத்திலே திருவொற்றியூரிலே உள்ள சக்கரப்பாடியிலே அவதரித்தவர் கலிய நாயனார். அவர் செக்கார் குலத்தவர். பெரும் செல்வர். செல்வம், யாக்கை முதலியனவற்றின் நிலையாமையை உணர்ந்தவர். சிவபுண்ணியம் செய்தலே மேல் எனத் தெளிந்தவர். அவ்வூர்ச் சிவாலயத்திலே உள்ளும் புறம்பும் அல்லும் பகலும் எண்ணிறந்த திருவிளக்குகள் ஏற்றும் நியமம் பூண்டவர் அவர். அவருடைய அளவிறந்த பத்தியைப் பிறருக்குப் புலப்படுத்தத் திருவுள்ளம் கொண்டு அருளினார் சிவபெருமான். அவரது செல்வமெல்லாம் குன்றச் செய்தார். வறுமை மிக்கது. நாயனார் அக்காலத்தும் பணி குறையாமல் தம் மரபில் உள்ளோர் தரும் எண்ணெயை வாங்கி வந்து விற்று, அதனால் கிடைக்கும் கூலியைக் கொண்டு விளக்கேற்றி வந்தார். நாட்களில் அவரும் கொடாது ஒழிந்தனர். மனம் தளர்ந்தார். பின்பு எண்ணெய் ஆட்டும் இடத்தில் சென்று தொழில் செய்து கூலி பெற்றுத் திருவிளக்கு இட்டார். அத்தொழிலால் வரும் பேறும் கிடையாது முட்டுப்பாடு வந்தது.  கவலை மிகக் கொண்டார். மனைவியாரை விற்றுத் திருவிளக்குப் பணி செய்ய முற்பட்டார். மனைவியை விலைக்கு வாங்குவார் இன்றித் தவித்தார். ஆலயம் அடைந்தார். திருவிளக்கு ஏற்றும் சமயத்திலே "இப்பணி மாறில் யான் இறப்பேன்" எனத் துணிந்தார். திரியிட்ட அகல்களைப் பரப்பினார். எண்ணெய்க்குப் பதிலாகத் தமது இரத்தத்தை நிறைக்கும் பொருட்டு ஆயுதத்தினாலே தமது கழுத்தை அரிந்தார். அப்போது சிவபெருமான் நேரில் எழுந்தருளினார். அவருடைய கரத்தைப் பிடித்தார். இடபவாகனக் காட்சி தந்தார். நாயனாரும் தாம் அடைந்த துன்பம் நீங்கி இன்புற்று வணங்கினார். 

 

     கற்றாரிடத்தில் நின்ற வறுமையினும் இன்னாது, கல்லாதார்மாட்டு நின்ற செல்வம் என்று திருவள்ளுவ நாயனார் கூறியருளினமை காண்க.

 

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்

உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்,

நல்லறிவு உடையோர் நல்குரவு

உள்குதும் பெரு, யாம் உவந்து நனி பெரிதே... --- புறநானூறு.

 

இதன் பொருள் ---

 

    யாம் மிகப் பெரிய துன்பத்தை அடைந்தாலும்; எனைத்து சிறிதும் அறிவிலாதோருடைய செல்வம் பயன்படாமையின் அதனை நினையோம். நல்லறிவினை உடையோரது வறுமை பயன்படுதலின், யாம் உவந்து மிகப் பெரிதும் நினைப்பேம்.

 

 

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி இருந்தும்

அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்;

மறுமை அறியாதார் ஆக்கத்தின், சான்றோர்

கழி நல்குரவே தலை.                ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     அலை வீசுகின்ற நீர்ப்பெருக்கினை உடைய பெரிய கடலில் நீர் நிறைந்து இருந்தாலும், தண்ணீர் தாகம் கொண்டவர்கள், அந்தப் பெரிய கடலில் உள்ள நீரை அருந்த எண்ணாமல், அடிக்கடி நீர் வற்றுகின்ற சிறிய கிணற்றின் ஊற்றையே மக்கள் தேடிக் கண்டு உண்பர். அதுபோல, தாம் பெற்றுள்ள பெரும்செல்வத்தினைக் கொண்டு, பிறர்க்கு உதவி செய்து வாழ்வதே இம்மையில் மட்டுமல்லாமல், மறுமையிலும் இன்பத்தைத் தரும் என்பதை உணராத அறிவில்லாத அற்பர்கள் பெற்றிருக்கும் செல்வத்தை விட, மேலார் வறுமையே பெருமை உடையதாகும்.

 

         ஈயாதார் பெருஞ்செல்வராய் இருப்பினும், அவரால் நன்மையில்லை.

 

 

நல்லார் நயவர் இருப்ப நயம் இலாக்

கல்லார்க்கு ஒன்று ஆகிய காரணம், - தொல்லை

வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்!

நினைப்ப வருவது ஒன்று இல்.      ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     வேற்படை போன்ற நீண்ட கண்களையுடைய மாதே! உயர்ந்த அறிவு செயல்களை உடையாரும் இனியருமான மேலோர் உலகத்தில் செல்வ வளம் இல்லாமல் இருக்க, இனிமையும் கல்வியறிவும் இல்லாக் கீழோர்க்கு ஒரு செல்வநிலை உண்டான காரணம்,  பழைய நல்வினையின் பயனே அல்லது வேறு ஆய்ந்து துணிதற்குரிய காரணம் இல்லை.

 

         நற்குண நற்செயல்கள் இல்லாதவர் செல்வராய் இருப்பினும், சான்றோர் அதனை முன்வினைப் பயனென்று கருதி மதியாது செல்வர்.

 

 

சிறியவர் எய்திய செல்வத்தின், நாணப்

பெரியவர் நல்குரவு நன்றே, --- தெரியின்

மதுமயங்கு பூங்கோதை மாணி்இழாய்! மோரின்

முதுநெய்தீது ஆகலோ இல்.    --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     தேன் மிகுந்த அழகிய மாலையையும் மாட்சிமைப்பட்ட அணிகலன்களையும் உடையவளே! ஆராய்ந்து பார்த்தால், புதிய மோரினைவிடப் பழைய நெய் தீது ஆவதில்லை. மோரை வி, நெய் மிகுந்த நன்மையே பயக்கும். அதுபோலவே, அறிவில் சிறியார் பெற்ற செல்வத்தைவிட, அறிவுடையோர் எய்திய வறுமை மாட்சிமைப்பட நல்லதே யாகும்.

 

         அறிவிலார் பெற்ற செல்வத்தைவிட அறிவுடையோர் பெற்ற வறுமையே மிகச் சிறந்தது.

 

         மோர் புதிதாயினும் நெய் பழையதாயினும், மோரை விட நெய்யில் மிக்க பயனுண்டு. அதுபோல, சிறியவர் எய்தியது செல்வமே ஆயினும், பெரியவர் எய்தியது வறுமையே ஆயினும், அவர் செல்வத்தைவிட, இவர் வறுமையே மிக நல்லது. சிறியார் செல்வம் தன்னையும் பிறரையும் கெடுக்கும். பெரியார் வறுமை யாருக்கும் துன்பத்தை உண்டு பண்ணாது. எனவே, சிறியவர் செல்வத்தினும், பெரியவர் வறுமை சிறந்தது எனப்பட்டது.

 

 

மெய்ந்நெறி உணர்கிலார் வெறுக்கை பெற்றது

துன்னிய கிளைக்கு ஒரு துன்பம் ஆதல் போல்,

ஒன்னலன் விடும் கணை உலப்பின்று ஓடலால்

தன் உறு படைகளைத் தானும் கொன்றவே.

                                                 --- கந்தபுராணம், சிங்கமுகாசுரன் வதைப்படலம்.

 

இதன் பொருள் ---

 

     மெய்ந்நெறியினை உணராதவர் பெற்ற செல்வமானது, அவரோடு கூடிய சுற்றத்தார்க்குமே துன்பத்தை விளக்கும். அதுபோல, சிங்கமுகாசூரன் விட்ட அம்புகள் அவனது படைகளையே கொன்றது.

 

வெறுக்கை --- செல்வம். துன்னிய --- நெருங்கிய. கிளை --- சுற்றம்.

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...