வெளிவேடத்தால் ஒருவரை மதித்தல் கூடாது

 

 

 

வெளிவேடத்தால் ஒருவரை மதித்தல் கூடாது.

-----

 

 

     திருக்குறளில் "கூடா ஒழுக்கம்" என்னும் ஓர் அதிகாரம். மனத்தை ஐம்பொறிகளின் வழியே போக ஒட்டாமல், நிலைநிறுத்திக் கொள்ளும் வண்ணம், பல விரதங்களை மேற்கொண்டு, உணவைச் சுருக்கிக் கொள்ளுதலும், கோடைக் காலத்தில் காய்கின்ற வெயிலில் நிற்றலும், மழைக் காலத்தில், மழையிலும், பனிக்காலத்தில் பனியிலும் இருத்தலும், நீர் நிலைகளில் நிற்றலும் ஆகிய நல்ல செயல்களைக் கடைப்பிடித்து, அசெ செயல்களால் தம்முடைய உயிருக்கு வரும் துன்பங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு, பிற உயிர்கள்பால் அருள் உடையர் ஆதல் தவம் ஆகும்.

 

     தாம் ஓர் உயிருக்கும் ஒரு துன்பத்தையும் செய்தல் கூடாது என்றும், தமது உயிருக்கு எந்த துன்பம் வந்தாலும், பொறுத்துக் கொண்டு தவத்தினை முடித்து, வீடுபேற்றினை அடையவேண்டும் என்னும் விருப்பம் கொண்டு, துறவறத்தை மேற்கொண்டு தவம் புரிய வந்தவர்கள், பொருள்கள் எல்லாவற்றையும் விட்டு நின்றாலும், தாம் விட்ட காம இன்பத்தையும் அறவே மறந்து ஒழியவேண்டும். அவ்வாறு இருப்பதற்கு மனவலிமை அவசியம். அதற்குப் பொறி வாயில்களான ஐந்தையும் அவித்து ஒழுகல் வேண்டும். உள்ள உரம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும். உள்ள உறுதியில்லாமல், காமநோயால் துன்புறுகின்ற காலத்தில், சிலர் அவ்வின்பத்தைப் பிறர் அறியாமல், தவ உருவில் மறைந்து இருந்து அனுபவித்தலும் நிகழும். தீய ஒழுக்கமாகிய அது, தவ வாழ்விற்குக் கூடாத ஒழுக்கம் என்பதால், "கூடா ஒழுக்கம்" எனப்பட்டது.

 

     ஒரு காலத்தில் ஒரு பொருளால் ஐம்புலன்களும் அனுபவித்தற்கு உரிய சிறப்பினை உடையது மகளிரது புணர்ச்சியால் வரும் சிற்றின்பம் ஆகிய காம இன்பம் ஆகும்.

 

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறளில், "மனத்தைத் தன்வயப்படுத்தி அடக்கும் வல்லமை இல்லாத இயல்பினை உடையவன், மனத்தைத் தன்வயப்படுத்தி அடக்கின வல்லமை உடையவரது தவவேடத்தைத் தான் மேற்கொண்டு, தான் தனது மனம் போன வழியே போதல், பசுவானது, காவல்காரர் துறத்தாது இருக்கும்படி, புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு, பயிரை மேய்ந்தது போலும்" என்கின்றார் நாயனார்.

 

     புலியானது பசித்தாலும் புல்லைத் தின்னாது என்னும் நம்பிக்கையாலும், நெருங்கிச் சென்று துரத்தினால் கொன்றுவிடும் என்னும் பயத்தாலும், புலியின் தோலைப் போர்த்துப் பயிரை மேயும் பசுவைக் காவலர் துரத்தமாட்டார். பசுவானது வல்லுவருவம் கொண்டதன் பயன் அதுவே.

 

     தவத்தினர், காம இன்பத்தை அனுபவிக்க மாட்டார் என்னும் நம்பிக்கையாலும், நெருங்கிச் சென்று விசாரித்தால், சாபத்தை அனுபவிக்க நேருமே என்னும் பயத்தாலும், உலகவர் சந்தேகம் கொள்ளமாட்டார் என்னும் காரணத்தாலும், தனக்கு உரிமையாக உள்ள மனைவியையும் துறந்து, மனத்தைத் தன்வயப்படுத்தும் வல்லமை இல்லாது, பிறர் சந்தேகம் கொள்ளாதபடி, தவவேடத்தைத் தரித்துக் கோண்டு, கூடாவொழுக்கத்தால், தன் மனம் சென்ற வழியே சென்று, தவ்வேடத்தில் மறைந்து நின்று, பிற பெண்களை விரும்புதல், தவத்திற்குக் "கூடாவொழுக்கம்" ஆகியது.

 

     கௌதம முனிவரின் பன்னியை இச்சித்த இந்திரன், கோதம முனிவர் போன்று வேடமிட்டு வந்தது இங்கு கருதத்தக்கது.

 

 

வலிஇல் நிலைமையான் வல்உருவம், பெற்றம்

புலியின் தோல் போர்த்து மேய்ந்து அற்று.

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, திராவிட மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னு் நூலில் வரும் ஒரு பாடல்...

 

மாயன்அவ்வே டங்கொண்டே வன்சலந் தரன்கிழத்தி

தூயநலம் கவர்ந்தான், சோமேசா! - ஆயின்

வலியில் நிலைமையான் வல்உருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந்து அற்று.

 

இதன் பொருள்---

 

         சோமேசா! ஆயின் --- ஆராயுமிடத்து, வலிஇல் நிலைமையான் வல்உருவம் --- மனத்தைத் தன் வழிப்படுத்தும் வலியில்லாத இயல்பினையுடையான் வலியுடையார் வேடத்தைக் கொண்டு தான் அதன் வழிப்படுதல்,  பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று --- பசுவானது காவலர் கடியாமல் புலியின் தோலைப் போர்த்துப் பைங்கூழை மேய்ந்தாற்போலும்... 

 

         வன் சலந்தரன் கிழத்தி --- வலிய சலந்தரன் மனைவியாகிய பிருந்தை என்பவளுடைய,  தூய நலம் --- குற்றமில்லாத இன்பத்தை, மாயன் --- திருமால், அவ்வேடம் கொண்டே கவர்ந்தான் --- அச் சலந்தரன் உருவத்தைத் தாங்கியே கைக் கொண்டான் ஆகலான் என்றவாறு.

 

         சலந்தராசுரன் தன் மனைவியாகிய பிருந்தை தடுத்தும் கேளாது, சிவபெருமானோடு போர் புரிய வேண்டி, திருக்கயிலைமலை நோக்கி வரும் வழியில், சிவபெருமான் ஓர் அந்தண வடிவம் கொண்டு நின்று, "எங்குச் செல்கின்றனை?" என்று வினவ, அவன் "சிவனோடு போர் புரிந்து வெல்லச் செல்கிறேன்" என்ன,  பெருமான், "அது உனக்குக் கூடுமோ? கூடுமாயின், தரையில் யான் கீறும் சக்கரத்தை எடுப்பாய்" என்று ஒரு சக்கரம் கீற, அதை அவன் தோளின்மீது எடுக்க, அப்போது அது அவன் உடம்பைப் பிளக்கவே அவன் இறந்தொழிந்தான். அதனை அறிந்த திருமால், தாம் அவன் மனைவியாகிய பிருந்தையினிடத்துக் கொண்டுள்ள மோகத்தைத் தணித்துக் கொள்ளுதற்குத் தக்க தருணம் அதுவே என நினைத்து, அச் சலந்தரன் வடிவம் தாங்கிச் சென்று எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்கையில் வஞ்சனை அறிந்த பிருந்தை உடனே தீயில் புகுந்து மாண்டாள். திருமால் அவளது பிரிவாற்றாது அவள் சாம்பரில் புரண்டார். 

 

இடுகாட்டுள் மாதர் எலும்பில் புரள்மால்,

சுடுகாட்டுள் ஆடுவாற் சுட்டின் --- ஒடுகாட்டும்

சம்பந்தா! என்பு நின் பால்தந்து ஆக்கிக் கொண்டிலன், என்

கும்பம்தாம் என்னும் முலைக் கொம்பு.

 

என்னும் நால்வர் நான்மணி மாலைச் செய்யுளை நோக்குக.

 

இப் பாடலின் பொருளைச் சிறிது இங்கு நோக்குவோம்...

 

     சுடுகாட்டுள் ஆடுவான் சுட்டினொடு காட்டும் சம்பந்தா ---  சுடுகாட்டிலே நடிப்பவராகிய இறைவரைச் சுட்டுதலோடு காட்டிய திருஞானசம்பந்தமூர்த்தியே, இடுகாட்டுள் மாதர் எலும்பில் புரள் மால் --- சுடுகாட்டிலே பிருந்தையின் எலும்பிலே புரண்ட திருமால்,

 

         (சலந்தரன் திருமால் முதலியவரைப் பலமுறையும் வென்று செருக்கால், சிவபெருமானையும் வெல்வான் திருக்கயிலையின் எய்தி,  ஆங்குப் பெருமான் திருவடியால் நிலத்தில் கீறிய சக்கரத்தால் மடியவும், அத்திருமால் அவன் உடலில் புகுந்து, அவன் மனைவியாகிய பிருந்தையை அனுபவித்திருக்க, அவள் அஃது உணர்ந்து, கற்பு அழிந்தமைக்குக் வருந்தி,  கனலில் மூழ்கலும், விரகம் மிக்கு, அவள் எலும்பில் புரண்டாராகலின், மால் எனப் பெயர் பெற்றதும், இதனால் போலும் என்பார் "இடுகாட்டில் மாதர் எலும்பில் புரள் மால்" என்றும்,

 

         புரளக்கண்ட பிரமன் முதலியோர் அம்பிகை அளித்த வித்தை, அச்சுடலையின் இட்டு அமுதம் பெய்ய, அதில் தோன்றிய துளவம் கன்னியாகக் காணப் பெற்றமை அன்றித் தாம் காதலித்த அவள் என்பு அங்ஙனம் ஆகப் பெறாமை கண்டு வைத்தும், அவர் அமிர்து இன்றிச் சொல் அளவானே பெண்ணாக்கவல்ல தேவரீர்பால் அவ் என்பைத் தந்து, அழகுக்கு அணியாகும் பூம்பாவை போலும் ஒரு பெண்ணாக ஆக்கிக் கொள்ளாமை ஆராய்ச்சி இன்மையில் போலும், என்பதால், ஆக்கிக் கொண்டிலன் என் என்றார்.)

 

     என்பு நின்பால் தந்து --- அவ் எலும்பைத் தேவரீர் இடம் கொடுத்து, கும்பம் தாம் என்னும் முலைக் கொம்பு ஆக்கிக் கொண்டிலன் ---  அமிர்த கலசமே என்னும் அமைதி

வாய்ந்த தனங்களை உடைய பூங்கொம்பு போலும் ஓர் அரிய பெண்ணாகச் செய்து கொண்டாரில்லை, என் --- அங்ஙனம் செய்துக் கொள்ளாமைக்குக் காரணம்

யாது.

 

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

சந்யாசி யாய்விஜயன் தார்குழலைக் கொண்டகன்றான்

இந்நா னிலம்போற்றும், இரங்கேசா! - சொன்னால்

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியிந்தோல் போர்த்துமேய்ந் தற்று.

 

இதன் பதவுரை --- 

 

     இந் நானிலம் போற்றும் --- இவ் உலகத்தார் துதிக்கின்ற, இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! விஜயன் --- அருச்சுனன், சந்நியாசியாய் --- சந்நியாசி வேடம் கொண்டு, தார்குழலை --- மலர்மாலை அணிந்த கூந்தலை உடைய சுபத்திரையை, கொண்டு அகன்றான் --- (காந்தருவ விவாகம் செய்து) கொண்டு போனான், (ஆகையால், இது) சொன்னால் --- எடுத்துப் பேசினால், வலி இல் நிலைமைான் --- மனவலி இல்லாத வெளி வேட நிலைமை உடையவனுடைய, வல் உருவம் --- பலம் பொருந்திய வெளிவேடமானது, பெற்றம் --- பசு, புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று --- புலித்தோலை மேலே மூடிக்கொண்டு (வயல்காரரை வெருட்டி வயலில்) மேய்ந்தது போலாகும் என்பதை விளக்குகின்றது.

 

         விளக்கவுரை --- அருச்சுனன் சந்நியாசி வேடம் கொண்டு துவாரகைக்குப் போய், பலராமரைக் கண்டு, "நான் மாத நோன்பு நோற்கவேண்டும், அதற்கு உமது உதவி வேண்டும், இடம், பொருள், ஏவல் ஏற்படுத்தித் தருக" என்று கேட்டான். அவனை அருச்சுனன் என்று அறியாத பலராமர், மெய்த்துறவி என்று நம்பி, விரத அநுகூலங்கள் ஏற்படுத்தித் தமது இல்லத்திலேயே இருத்தி, தன் தங்கையாகிய சுபத்திரையை, துறவி வேடத்தில் இருந்து அருச்சுனனுக்கு உபசாரம் செய்ய அமைத்தார். அவளும் அங்ஙனம் செய்ய உடன்பட்டு, சந்நியாசியின் இங்கிதத்தில் மயங்கி, அவனை அந்தரங்கத்தில் காந்தருவ விவாகம் செய்துகொள்ள ஒப்பினாள். அதற்காகவே வந்திருந்த வெளிவேடதாரியாகிய அருச்சுனன் யார்க்கும் தெரியாமல் அவளைத் தன் மனைவியாக்கி அழைத்துக்கொண்டு இந்திரப்பிரத்தம் போனான். பின்பு இதை அறிந்த பலராமரும் கண்ணனும், "ஆகா, வெளிவேடத்தால் மோசம் போனோமே" என்று அதிசயித்து, இந்திரப்பிரத்தம் போய் இருவருக்கும் பகிரங்க மணம் முடித்து மகிழ்ந்தார்கள். இதனால் வெளிவேடம் நம்பத்தக்கதன்று என்று தெரிகிறது.

 

 

வேட நெறிநில்லார் வேடம்பூண்டு என்பயன்?

வேட நெறிநிற்போர் வேடம் மெய் வேடமே?

வேட நெறிநில்லார் தம்மை, விறல்வேந்தன்

வேட நெறி செய்தால் வீடு அது ஆகுமே. ---  திருமந்திரம்.

 

இதன் பொழிப்புரை ---

 

     யாதோர் உயர்ந்த தொழிற்கும் அதற்கு உரிய கோலம் இன்றியமையாது. யினும், அத்தொழிற்கண் செம்மையாக நில்லாதார் அதற்கு உரிய கோலத்தை மட்டும் புனைதலால் யாது பயன் விளையும்? செயலில் நிற்பாரது கோலமே அதனைக் குறிக்கும் உண்மைக் கோலமாய்ப் பயன்தரும். அதனால், ஒருவகை வேடத்தை மட்டும் புனைந்து, அதற்குரிய செயலில் நில்லாதவரை, வெற்றியுடைய அரசன், அச்செயலில் நிற்பித்தற்கு ஆவன செய்வானாயின், அதுவே அவனுக்கு உய்யும் நெறியும் ஆய்விடும்.

 

        

நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப் போர்வை

கஞ்சுகம் அன்று, பிறிது ஒன்றே, --- கஞ்சுகம்

எப்புலமும் காவாமே மெய்ப்புலம் காக்கும், மற்று

இப்புலமும் காவாது இது.           --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பதவுரை ---

 

     நெஞ்சு --- தமது மனம்; புறம்பு ஆ --- புறத்திலே (கட்டுப்படாமல்) செல்ல, துறந்தார் --- துறந்தவர்களுடைய, தவப் போர்வை --- தவக்கோலமாகிய போர்வை, கஞ்சுகம் அன்று --- சட்டையைப் போன்றதும் ஆகாது, (ஏனெனில்) கஞ்சுகம் ---சட்டையானது, எப்புலமும்--- எல்லாம் புலன்களையும். காவாமே --- காக்கா விடினும், மெய்ப்புலம் --- உடம்பாகிய புலனை மட்டுமாவது, காக்கும் --- (பனி குளிர் முதலியவற்றினின்று) காக்கும், (ஆனால்), இது --- இந்தப் பொய்த்தவப் போர்வையானது, இப்புலமும் --- இந்த உடம்பையும், காவாது --- (குளிர், பனி முதலியவற்றினின்று) காக்கமாட்டாது, பிறிது ஒன்றே --- (ஆதலால் இப்பொய்த் தவக்கோலம்) வேறு ஒரு பொருளே. 

 

         மனத்தைப் புறஞ்செல்லவிட்டு மேலுக்கு மட்டும் துறந்தார்போல நடிப்பாரது துறவுக் கோலத்திற்கு, ஓர் எளிய சட்டைக்கு இருக்கும் பெருமை கூடக் கிடையாது என்றார். சட்டையாவது குளிரில் இருந்து காக்கும். இப் பொய்த்தவப் போர்வையோ அதுவும் செய்யாது.  

         மனத்தைக் கட்டுப்படுத்தாத துறவிகளின் தவக்கோலத்தால் யாதும் பயனில்லை.

 


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...