பொய் வீட்டை விட்டு, மெய் வீட்டில் குடியேறுவோம்

 

பொய் வீட்டை விட்டு, மெய் வீட்டில் குடியேறுவோம்

-----

 

     சுகமாக இருக்க வேண்டுமானால், நல்ல சுத்தமான இடத்தில் சுத்தமாக வாழ வேண்டும். உயிரானது இப்போது இந்த உடம்பாகிய சிறு குடிசையில் வாழ்கிறது. அது எப்போது அழியும் என்பதும் தெரியாது. அவ்வப்போது பழுதுபார்த்துக் கொண்டே இருக்கவேண்டும். என்னதான் பழுதுபார்த்துக் காத்தாலும் ஒருநாள் அழிந்து போகின்றது.

 

     "பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந்து, ளுத்து, சும்பு ஒழுகிய பொய்க்கூரை இத்தை மெய் எனக் கருதி நின்று, இடர்க்கடல் சுழித்தலைப் படுவேனை" என்றார் மணிவாசகப் பெருமான். இந்த உடம்பு வெறும் "ஊன் மிசை உதிரக் குப்பை" என்றார் அப்பர் பெருமான். இந்தக் குப்பையை விட்டுவிட மனம் இல்லாமல், இதையே பொருளாக எண்ணி மதித்து, இதைப் பற்றிக் கொண்டு, இதன் மீது அளவற்ற அபிமானம் வைத்து வாழ்கிறோம். உடம்புக்கு எந்தவிதமான ஊறும் நேரக்கூடாது என்று வேளை வேளையில் விரும்பிய உணவைக் கொள்கிறோம்.  விரும்பிய உணவைக் கொண்டதால் நோய் வருகின்றது. நோய் வராமல் இருக்க மருந்துகளை விழுங்குகிறோம். தலை வலித்தால் போதும்.  உடனே மருத்துவரிடம் ஒடுகிறோம். அவர் ஊசியால் குத்தினாலும் சகித்துக் கொள்கிறோம். கசப்பு மருந்தைக் கொடுத்தாலும் உட்கொள்கிறோம். இவையெல்லாம் எதற்காக? உடம்பிலுள்ள நிணத்தைக் காப்பதற்காக.  சதையைப்  பெருக்கிக் கொள்வதற்காக.

 

     நமக்கு உள்ள வாழ்நாளில் பெரும்பகுதியை இந்த உடம்பை வளர்ப்பதற்காகவும், உடம்பால் சுகித்து இருப்பதற்காகவுமே செலவிடுகின்றோம். நாம் பேணுகின்ற இந்த உடம்பு எப்போதும் நிலைத்து இருக்கும் என்றும் எண்ணுகின்றோம். நமது விதிக்கு ஏற்ற வகையில் உடம்பு வந்தது.  "விதி காணும் உடம்பை விடாவினையேன்" என்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     நல்ல பழத்தைக் கண்டால் ஆண்டவனுக்கு நிவேதனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை. வெடுக்கென்று கடித்துத் தின்னவேண்டும் என்ற ஆசை முந்துகிறது. நாக்கு ருசியானது, அந்த இறை நினைப்பை வர விடாமல் கெடுக்கிறது.

 

"பரம்ஏது? வினைசெயும் பயன்ஏது?  பதிஏது?

                  பசுஏது? பாசம்ஏது?

         பத்திஏது? அடைகின்ற முத்திஏது?  அருள்ஏது?

                  பாவபுண் ணியங்கள் ஏது?

வரம்ஏது? தவம்ஏது? விரதம்ஏது? ஒன்றும்இ)ல்)லை;

                  மனம்விரும்பு உணவு உண்டு, நல்

         வத்திரம் அணிந்து, மட மாதர்தமை நாடி,நறு

                  மலர்சூடி, விளையாடி,மேல்

கரம்மேவ விட்டு, முலைதொட்டு வாழ்ந்து, அவரொடு

                  கலந்து மகிழ்கின்ற சுகமே

         கண்கண்ட சுகம், இதே கைகண்ட பலன்"

 

வள்ளல்பெருமான் பாடிக் காட்டியபடியும் வாழ்க்கை கழிகின்றது.

 

     உடம்பின் சதை கொஞ்சம் குறைந்தால்,  நம்மைப் பார்க்கிறவர்கள் கூட, 'என்ன மிகவும் இளைத்துவிட்டதே! உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று சொல்கிறார்கள். நிணத்தை, மாமிசத்தை வளர்த்துக் கொள்வதில் அத்தனை அக்கறை. இந்த உடம்பை "நிணம் காட்டும் கொட்டில்" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான். கொட்டில் என்பது மாடுகளைக் கட்டி வைக்கும் இடம். அதை எப்போதும் தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். அழகுபடுத்த வேண்டியது இல்லை. ஆனால், இந்த உயிர் வாழும் கொட்டிலை அழகுபடுத்திப் பேணுவதிலேயே நமது காலம் கழிகின்றது.

 

     கொட்டிலில் மனிதன் வாழ முடியுமா? நிணம் பொதிந்த உடம்பாகிய இந்தக் கொட்டிலில் மாடுகள் இருக்கின்றனவா என்றால், வாழுகின்றோம், இந்தக் கொட்டிலில் ஐந்து மாடுகளும் உள்ளன என்று திருமூலர் சொல்கிறார்.

 

     மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களாகிய பசுக்கள் வாழும் கொட்டில், இந்த உடம்பு. பசுக்கள் சாந்தமாக இருக்கும். பாலைப் பொழிந்து தரும். ஆனால், நம்மோடு வாழும் பசுக்கள் வெறித் தன்மையோடு இருக்கின்றன. நமக்கும் பிறருக்கும் பயன்படும் பாலைத் தருவது இல்லை. காரணம், அந்தப் பசுக்களை எப்படி மேய்ப்பது என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. அறிய முனையவும் இல்லை.

 

     பசுவின் பால் மிகவும் நல்லது, பசுவும் நல்லது என்று எண்ணி அப்பசுக்களிடத்தில் பால் கறக்கப் போனால் அவை சீறுகின்றன. பாலை வெளியில் வாங்குகின்றோம். அவற்றைச் சரியாக அடக்கி மேய்க்கின்ற ஒருவன் இல்லாததனாலே அவை வெறித்துத் திரிகின்றன. தட்டிக் கொடுத்து அடக்கலாம் என்று நெருங்கினால் கொம்புகளால் முட்டுகின்றன. வெறித்துக் கிடக்கின்ற கொண்டி மாடுகள் ஐந்தை வீட்டிலே வைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

 

     ஒருவர் வந்து, "ஐந்து மாடுகளை வைத்துக் கொண்டு எதற்காக வெளியில் பால் வாங்குகிறீர்?' என்று கேட்டார். "ஐயோ, அவை கொண்டி மாடுகள். அவற்றினிடம் போகவே நான் அஞ்சுகிறேன். அருகிலே போனாலே முட்டுகின்றன; உதைக்கின்றன. நான் எப்படிப் பால் கறக்கமுடியும்?" என்று அழுதான். கேட்டவர் சிரித்தார். 'ஐயா, பசுமாடுகள் இயல்பாகவே சாதுவானவை. உங்களுக்கு அவற்றை அடக்கத் தெரியவில்லை. எப்படி அடக்குகிறது என்று நான் சொல்லித் தருகிறேன். அப்புறம் அவை நிறையப் பால் கறக்கும்"' என்று சொல்லி அவற்றை அடக்கும் உபாயத்தைச் சொல்லிக் கொடுத்தார். "மெள்ளத் தடவிக் கொடுங்கள். அவற்றிற்கு வேண்டிய நல்ல புல்லைத் தாருங்கள். நல்ல தண்ணீர் காட்டுங்கள். மனிதனுக்கே உண்ட பின் ஓய்வு தேவைப்படுகின்றது. பசுக்களைச் சிறிது ஓய்வில் விடுங்கள். பின்னர் அவை உங்களைக் கண்டதும் கனைக்கும். உங்கள் பின்னாலேயே ஓடிவரும். மடியைத் தொட்டவுடனே பாலைச் சொரியும். சண்டேச நாயானார் வரலாற்றை நீங்கள் அறிந்திருக்கவில்லை போலும்" என்று சொல்லிச் சென்றார்.

 

     மாடுகளை வைத்திருந்தவர் அப்படியே செய்தார். மேய்க்கத் தெரிந்த ஒருவரிடம் விட்டார். மாடுகளின் வெறி அடங்கிவிட்டது. நல்ல பாலைப் பொழிந்து தரத் தொடங்கின.

 

பார்ப்பான் அகத்திலே பால்பசு ஐந்துண்டு;

மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன;

மேய்ப்பாரும் உண்டாய், வெறியும் அடங்கினால்,

பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.

 

என்கின்றார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார்.

 

இதன் பொருள் ---

 

     பார்ப்பானாகிய ஆருயிர்களின் அகமாகிய உடம்பில் பால் தரும் துணையாகப் பசுக்கள் ஐந்து உள்ளன. அவை அறிவுக் கருவிகள் அல்லது ஞானேந்திரியங்கள் என்று சொல்லப்படும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்பட. அப் பசுக்களை மேய்த்து அருள்பவன் சிவன். நல்ல மேய்ப்பன் ஆ, அச் சிவபெருமானை ஆருயிர்கள்

திருவைந்தெழுத்தினை இடையறாது எண்ணுதல் வேண்டும். அங்ஙனம் எண்ணினால், அவன் திருவருள் அப் பசுக்களை மேய்க்கும். உயிர்கள் அச் சிவபெருமானை எண்ணாவிட்டால் அவன் மேய்க்காது விட்டு விடுகின்றனன். மேய்த்தல் - அடக்குதல். மேய்ப்பார் இன்மையாலே அப் பசுக்கள் வெறித்துத் திரிகின்றன. வெறித்துத் திரிவன என்பது உலகியல் இன்பங்களில் ஆருயிர்களை ஈர்த்துச் செல்வதைக் குறிக்கும். அப் பசுக்களை மேய்ப்பானாகிய சிவபெருமான் வெளிப்பட்டால் அப் பசுக்களுக்கு வெறி அடங்கும். வெறி அடங்கினால் அப் பசுக்கள், அந்த உயிரானது சிவனை நினையத் துணை புரியும்.

 

     பார்ப்பான் யார்? அகத்திலே கண் கொண்டு பார்க்கின்றவன் பார்ப்பான். அவனுடைய உடம்பிலே பஞ்சேந்திரியங்களாகிய ஐந்து பசுக்கள் இருக்கின்றன. மேய்ப்பார் இல்லாமையினால் அவை வெறித்துத் திரிகின்றன. அவற்றை மேய்ப்பவனாகிய ஞானாசிரியன் கிடைத்துவிட்டால், பார்ப்பானுடைய பசுக்கள் ஐந்தும் வெறி அடங்கிச் சாந்தம் என்னும் பாலைச் சொரியும். அடங்காமல் திரிகிற ஐந்து மாடுகள் வாழும் கொட்டில் இந்த உடம்பு. நாற்றத்தில், கொசுக் கடியில் எத்தனை காலம் வாழ்வது? மாமிசம் நிரம்பிய இந்தக் கொட்டிலை விட்டு, முத்தியாகிய வீட்டுக்குப் போக வேண்டும். வீடு நம்முடைய விருப்பப் படி இருக்கிற இடம். நாம் போகிற ஒர் ஊரில் நண்பருடைய வீட்டில் எத்தனை வசதிகள் இருந்தாலும் நமக்கு அங்கேயே நெடுநாள் இருப்புக் கொள்ளுவதில்லை. அலுவலத்திற்குப் போகிறோம். நமது ஆணைக்குக் கைகட்டி நிற்க அங்கே சேவகர்கள் இருக்கிறார்கள். நல்ல அற்புதமான அறை நமக்காகவே இருக்கிறது. மின்விசிறி இல்லை. குளிர்சாதன வசதி செய்யப்பட்டு உள்ளது. நமது வீட்டில் இந்த வசதிகள் இல்லை. இருந்தாலும் மாலை ஐந்து மணிக்குமேல் ஒரு நிமிடம் கூட அலுவலகத்தில் தங்க மனம் வருவதில்லை. வீட்டுக்கு வந்து உட்காரும்போது எத்தனை ஆறுதலோடு, 'அப்பாடா!'  என்கின்றோம். ஏன்?  அது நமக்கு உரிய வீடு. நமக்கு உரிய வீடு இறைவன் திருவடி. அங்கே இரவுபகல் என்பது அறியாமல் எப்போதும் ஆனந்தமாக இருக்கலாம். அது மிகவும் அழகான வீடு.

 

     நிணம் காட்டும் கொட்டில் ஆகிய இந்த வீட்டை, துச்சில் என்பார் திருவள்ளுவப் பெருமான். துச்சில் என்றால், ஒதுக்கிடம், ஒண்டிக் குடித்தனம். கொட்டில், துச்சில் ஆகிய இந்த உடம்பு என்னும் வீட்டில் நெடுங்காலம் வாழ்வதை விடுத்திடுவோம். பொய்யான இந்த வீட்டில் வாழ்வதை விடுத்து, "வீடு" அல்லது "மோட்சம்" அல்லது "இறைவன் திருவடி" என்னும் மெய்யான வீட்டில் குடிபோகின்ற வழியைத் தேடுவோம். அதற்கு நமது புலன்களை வென்று வாழ்வோம். புலன்களை வென்று நல்வாழ்வு வாழும் உபாயத்தை அருள் புரிய, ஞானாசிரியனாக வந்து அருள் புரிய இறைவனை வேண்டுவோம்.

 

     பின்வரும் கந்தர் அலங்காரப் பாடலின் வழி, அருணகிரிநாதப் பெருமான், நமக்கு நல்வழி காட்டுவதை அறிந்து தெளிவோம்.

 

நிணம் காட்டும் கொட்டிலைவிட்டு,

     ஒரு வீடு எய்தி நிற்க நிற்கும்

குணம் காட்டி ஆண்ட குருதேசிகன்,

     அம் குறச் சிறுமான்

பணம் காட்டு அல்குற்கு உருகும்

     குமரன் பத அம்புயத்தை

வணங்காத் தலை வந்து இது எங்கே

     எனக்கு இங்ஙன் வாய்த்ததுவே?

 

இதன் பொருள் ---

 

     கொழுப்புடன் கூடிய தசைகள் மிகுதியாகத் தோன்றுகின்ற தொழுவமாகிய இந்த உடலைவிட்டு அகன்று, ஒப்பற்ற முக்தியை அடைந்து நிலைபெற்று இருத்தற்கு உரிய வழியைக் காட்டியருளி அடியேனை ஆட்கொண்ட குருநாதரும், குறவர் குலத்தில் தோன்றிய அழகிய இளமான் போன்ற வள்ளியம்மையின் பொருட்டு உள்ளம் உருகுகின்றவருமான  முருகப்பெருமானின் திருவடித் தாமரைகளைப் பணியாத தலையானது எவ்விதமாக வந்து அடியேனுக்குக் கிடைத்தது? 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...