இன்று ஆறு கிரகச் சேர்க்கை

 

 

இன்று ஆறு கிரக சேர்க்கை

----

 

     இன்று (10.02.2021) ஆறு கிரகங்களும் மகர இராசியில் கூடி இருக்கும் நாள் என்று "கணித மங்கல நூலவர்" கூறுகின்றனர். இதை வைத்து, சிலர் அச்சுற்றுத்தவும் செய்கின்றனர். கணித நூல் என்பது சோதிட நூலைக் குறிக்கும். மங்கல நிகழ்வுகளுக்கு, கிரக நிலைகளைக் கணக்கிட்டுப் பார்த்து அறிவது என்பதால், "கணித மங்கல நூல்" என்று சோதிட சாத்திரம் கூறப்படுகின்றது. வேதங்களின் அங்கங்களாக உள்ளவை ஆறு அங்கங்கள் எனப்படும். அவற்றில் சோதிடமும் ஒன்று. வேதங்களில் விதிக்கப்பட்ட நற்செயல்களை அனுட்டிப்பதற்கு உரிய நாளைக் கணிப்பதற்கு மட்டுமே அது உரியது. ஆனால், நம்மில் சிலர் எதற்கெடுத்தாலும், சோதிடத்தை ஆராய முற்படுகின்றனர்.

 

     ஆன்மாக்கள் அவை அவை செய்கின்ற நல்வினை, தீவினையின் பயன்களை அனுபவித்துக் கழிக்கவே வேண்டும். அந்தப் பயன்களை ஊட்டுவது இறைவன். இறைவன் ஆணைப்படி நின்று, வினைப் பயன்களை ஊட்டும் தொழிலைப் புரிபவர்கள், ஞாயிறு முதலான ஏழு கோள்களும், நிழல் கிரகம் அல்லது சாயா கிரகம் என்று சொல்லப்படும் இராகு கேதுக்களும்.

 

     இன்பம் வந்து சேர்ந்தால் எதைப்பற்றியும் கவலைப் படுவது இல்லை. இது இறைவன் அருளால் வந்தது என்று எண்ணிப் போற்றுவதும் இல்லை. "எல்லாம் என்னால் தான்" என்கின்றோம். துன்பம் வந்தால், அது இன்னாரால் வந்தது, இதனால் வந்தது என்று புலம்பி, அதைத் தீர்த்துக் கொள்ள வழி தேடி, கணிதநூல் வல்லாரிடம் செல்கின்றோம். அவர்கள் ஒவ்வொருவரும் பலப்பல விதமாக அவரவது அறிவு நிலைக்கும், அனுபவத்துக்கும் ஏற்ப பலன்களைச் சொல்லி, பரிகாரங்களையும் பரிந்துரைப்பார்கள். உண்மையில் பரிகாரம் என்பது சோதிட நூல்களில் சொல்லப்படவில்லை. மருந்துக் கடைக்குச் சென்று நாமே நமக்கு ஏற்பட்டுள்ள நோயைச் சொல்லி, மருந்து வாங்கிப் பயன்படுத்துதல் என்பது எத்தனை தவறானதோ, அதேபோல நாமாக பரிகாரத்தைச் செய்தல் என்பதும் தவறானதே. பரிகாரம் வேறு, ஜோதிடம் வேறு. ஜோதிட நூல்கள் எதுவும் பரிகாரத்தைப் பற்றிச் சொல்லாது. ஜோதிடர் என்பவர் உங்களுக்கு உண்டாகியுள்ள தோஷத்தைப் பற்றித் தெளிவாக எடுத்துரைக்க இயலும். ஆனால் அதே ஜோதிடர் பரிகாரத்தைச் சொல்வது என்பது தவறு. பரிகாரத்தைச் சொல்ல வேண்டும் என்றால் அந்த ஜோதிடர், அது குறித்த அறிவினைப் பெற்றவராக இருக்க வேண்டும். பரிகாரத்தைப் பற்றி, ஜோதிட நூல்கள் அல்லாத "சாந்தி குசுமாகரம்", "சாந்தி ரத்னாகரம்" முதலான நூல்கள் தெளிவாகச் சொல்கின்றன. இந்த நூல்களையும் தர்ம சாத்திரத்தையும் கற்றறிந்த வேத விற்பன்னர்கள் மட்டுமே சாந்தி பரிகாரங்களைச் சொல்லவும் செய்யவும் இயலும். மேலும் சாந்தி என்பது சாந்தப்படுத்துவதே ஆகும். அது தீர்வு ஆகாது.

 

     தீர்வு என்பது, வினைகளின் பயனை யார் நமக்கு விதித்தாரோ, அவரிடம்தான் உள்ளது. வினைப்பயனை ஊட்டி, பிறவியைத் தந்தது இறைவன். அந்த இறைவனால் மட்டுமே நமது வினைகளை வேர் அறுக்கமுடியும் என்பதை அறியவேண்டும். சாந்தி அல்லது பரிகாரம் எனப்படுவது, முளையைக் கிள்ளுவது போல. வேரை அறுத்தால்தான் முளைப்பது இல்லாமல் போகும் என்பதை அறிதல் வேண்டும்.

 

     வேதாரண்யம் என்று தற்போது வழங்கப்படும் "திருமறைக்காடு" என்னும் திருத்தலத்திற்கு எழுந்தருளி இருந்தனர் திருஞானசம்பந்தரும், அப்பரும். பாண்டிய நாட்டில் இருந்து அழைப்பு வந்தது திருஞானசம்பந்தருக்கு. அவர் பாண்டிய நாட்டிற்கு எழுந்தருள உடன்பட்டபோது, அங்கே மிகுந்து இருந்த சமணர்களால் ஏற்கெனவே மிகவும் துன்புற்ற அப்பர் பெருமான், சிறுபிள்ளையாகிய திருஞானசம்பந்தர் போவது தகாது என்று உள்ளத்தில் கொண்ட அன்பு காரணமாக, அவரைத் தடுக்கவேண்டும் என்று கருதி, "பிள்ளாய்! அந்த அமண்கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை, உறுகோள் தானும் தீய, எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது" என்று தடுக்கின்றார். "பரசுவது நம்பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது" என்று சொல்லி, "வேயுறு தோளி பங்கன்" எனத் தொடங்கும் திருப்பதிகத்தை அருளிச் செய்கின்றார். இத் திருப்பதிகம், "கோள் அறு திருப்பதிகம்" எனப்படுகின்றது.

 

     இறைவன், தன்னை வழிபடுகின்ற அடியவர் உள்ளத்தில் எழுந்தருளி இருக்க, நாளும் கோளும் அவரை நலியாது என்ற உண்மையை இத் திருப்பதிகத்தின் மூலமாக அருளிச் செய்தார்.

 

     இத் திருப்பதிகத்தின் உண்மையை அறியாமல், நம்மில் சிலர், நவக்கிரகங்களின் முன் இருந்தோ, நவக்கிரகங்களை வலம் செய்து கொண்டோ, இத் திருப்பதிகத்தைப் பாராயணம் செய்கின்றார்கள், படிக்கின்றார்கள். இது அறியாமை. இறைவன் சந்நிதியில் ஓதி வழிபடவேண்டிய திருப்பதிகம் இது. "உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் ஆன சொல் மாலை"யை நாளும் ஓதி வழிபடுவோர்க்கு இன்பமே வந்து சேரும். துன்பம் வந்தாலும் அதன் தாக்கம் தோன்றாது.

 

     இந்த உண்மையை, பின்வரும் பாடல்களிலும் திருஞானசம்பந்தப் பெருமான் காட்டி உள்ளார் என்பது அறிந்துகொள்ள வேண்டியது.

 

வேள்படுத்திடு கண்ணினன், மேரு வில்லாகவே

வாள் அரக்கர் புரம் எரித்தான், மங்கலக்குடி

ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே,

கோளும் நாள்அவை போய்அறும் குற்றம் இல்லார்களே.

 

இதன் பொருள் ---

 

     மன்மதனை அழித்த நெற்றி விழியினை உடையவனும், மேருமலையை வில்லாகக் கொண்டு வாட்படை உடைய அரக்கர்களின் முப்புரங்களை எரித்தவனும், திருமங்கலக்குடி என்னும் திருத்தலத்தில் ஆட்சிகொண்டருளும் முதற்பரம்பொருள் ஆகிய சிவபிரான் திருவடிகளை அடைந்து, அவனை வழிபடுவோர்கள்,  நாள், கோள் ஆகியவற்றால் வரும் தீமைகளை அகல்வர். குற்றங்கள் இலராவர்.

 

காளமேகந் நிறக் காலனோடு, அந்தகன் கருடனும்

நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின்,

நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்,

கோளுநாளும் தீயவேனும் நன்குஆம் குறிக்கொள்மினே.

 

இதன் பொருள் ---

 

     கரிய நிறமுடைய காலன், அந்தகன், கருடன், தூரத்தே நின்று மலர்க் கணை எய்த காமன் ஆகியோரை இறைவன் அழித்ததை நினைந்து, நாள்தோறும் சிவபிரான் உறையும் திருநாகேச்சுரத்தை நண்ணி வழிபடுபவர்க்குக் கோள்களும் நாள்களும் தீய ஆக இருந்தாலும் நல்லன ஆகும். அதனை மனத்தில் கொள்ளுங்கள்.

 

     இக் கருத்தையே அருணகிரிநாதப் பெருமானும் வலியுறுத்தி, பின்வரும் பாடல்களில் அறிவுறுத்தியுள்ளார்.

 

நாள்என் செயும், வினைதான் என்செயும், எனை நாடிவந்த

கோள்என்செயும், கொடும் கூற்று என்செயும், குமரேசர் இரு

தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும்.,

தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

 

இந்தக் கந்தர் அலங்காரப் பாடலின் பொருள்----

 

     நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்? அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.

 

சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்தில்

சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னில்

சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்

சேயவன் புந்தி தடுமாற வேதரும் சேதம் இன்றே.

 

இந்தக் கந்தர் அந்தாதிப் பாடலின் பொருள் ---

 

     சேய - அழகினை உடைய, அன்பு - இச்சையோடு, உந்தி - கான்யாறு ஓடுகின்ற, வன - காட்டில், வாச - வாசம் செய்த, மாதுடன் - வள்ளிநாயகியுடன், சேர்ந்த - கூடியிருந்த, செந்தில் - திருச்செந்தில் பதியில் வாழாநின்ற, சேய - குமாரக் கடவுளே, வன்பு - வலிமையில், உந்து - உயர்ந்த, இகல் - மாறுபாட்டை உடைய, நிசாசர அந்தக - அசுரர் குலத்திற்கு இயமனே, சேந்த - கந்தனே, என்னில் - என்று துதிப்பீராகில், சேயவன் - செவ்வாய், புந்தி - புதன், பனிப்பானு - சந்திரன், வெள்ளி - சுக்கிரன், பொன் - வியாழம், செங்கதிரோன் - சூரியன், சேயவன் - அவ் ஆதித்தன் மைந்தன் சனி ஆகிய நவக்கிரகங்களின் வக்கிரோதயத்தால், புந்தி தடுமாறவே தரும் - புத்தியைச் சலனப் படுத்துகின்ற, சேதம் இன்று - கேடு இல்லை.

 

         அழகுடனும், மிகுந்த காதலுடனும், கானாறு பாய்கின்ற, வள்ளிக் காட்டில் வாழ்ந்த, வள்ளியுடன், காந்தர்வ மணம் புரிந்த, செந்தில் குமரக்கடவுளே! வலிமையில் மேம்பட்ட, பகைமை உடைய, இராக்கதர்களை அழித்தவனே! செந்நிறமான தெய்வமே! என்று துதித்தால், செவ்வாய், புதன், சந்திரன், சுக்கிரன், வியாழன், சூரியன், அவனுடைய பிள்ளையாகிய சனீசுவரன், (இவர்களின் வக்கிரத்தால் ஏற்படும்) நமது சித்தத்தை மாறுபடச் செய்யும், தீமை இல்லாது போகும்.

 

     சென்னையின் ஒரு பகுதியாகிய திருவான்மியூரில் அடக்கம் பெற்று அருள் பாலிக்கும் ஞானபானுவாகிய பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் பாடி அருளிய "பஞ்சாமிர்த வண்ணம்" என்னும் திருப்பாடலிலும், இக் கருத்து விலுயுறுத்தப்பட்டு உள்ளது.

 

மாதமும் தின வாரமும் திதி

யோகமும் பல நாள்களும் படர்

மாதிரம் திரி கோள்களும் கழல்

பேணும் அன்பர்கள் பால் நலம் தர

வற்சலம் அதுசெயும் அருட்குணா!

சிறந்த விற்பனர் அகக்கணா!

மற்புய அசுரரை ஒழித்தவா!

அனந்த சித்துரு எடுத்தவா!.......

...............................................சிவகுரு எனும் நாதா.

 

இதன் பொருள் ---

 

       மாதமும் தினம் வாரமும் திதி யோகமும் --- மாதம், நாள், வாரம், திதி மற்றும் யோகம் என்று சொல்லப்படுபவைகளும், பல நாள்களும் படர் மாதிரம் திரி கோள்களும் --- பல நட்சத்திரங்களும், வானத்தில் உலவுகின்ற கிரகங்களும், கழல் பேணும் அன்பர்கள் பால் நலம் தர --- உன் திருவடியை வழிபடுகின்ற அன்பர்கட்கு நன்மையைச் செய்யுமாறு, வற்சலம் அது செயும் அருட்குணா --- பெருங்கருணை புரியும் அருட்குணத்தை உடையவனே! சிறந்த விற்பனர் அகக்கணா --- கற்றறிந்த பெரியோரின் உள்ளத்தில் உலவுகின்றவனே! மற்புய அசுரரை ஒழித்தவா --- வலிமை கொண்ட தோள்களை உடைய அரக்கரை அழித்தவனே! அனந்த சித்துரு எடுத்தவா --- அளவில்லா ஞானத் திருமேனிகளை எடுத்தவனே!

 

     ஏனவே, அவரவர் கொண்டுள்ள இட்ட தெய்வங்களை முழுமனதுடன் வழிபட்டு வந்தால், நம்மால் செய்யப்பட்ட தீவினைகளின் பயன் வந்து நம்மைத் தாக்காது. தாக்கினாலும், தாங்கிக் கொள்ளுகின்ற வல்லமை இறையருளால் உண்டாகும். பின்னர் எல்லாம் நன்மையாகவே முடியும் என்பதை அறிந்து நலம் பெறுதல் வேண்டும்.


No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...