ஔவையார் அருளிய
முதுரை
-----
இறைவழிபாட்டால் எல்லா நலமும் வரும்
-----
ஔவைப் பிராட்டியார் அருளிய அருந்தமிழ் நூல்களுள் "மூதுரை"என்பதும் ஒன்று. மூதுரை என்பதற்கு மூத்த உரை அல்லது அறிவுரை என்று பொருள். மூதுரை என்று வழங்கப்பட்டு வந்த இந்த அருமையான நூல் பிற்காலத்தில், "வாக்குண்டாம்" என்ற பெயராலும் வழங்கப்படுகின்றது. "வாக்குண்டாம்" என்று இந்த நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் தொடங்குவதால், முதலில் வந்த சொல்லே நூலின் பெயராக அமைந்து விட்டது.
இந் நூலின் கடவுள் வாழ்த்தாக உள்ள பாடல் வருமாறு...
"வாக்குண்டாம்,நல்ல மனமுண்டாம்,மாமலராள்
நோக்குண்டாம்,மேனி நுடங்காது,-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு."
இப் பாடலின் அன்னுவயம் - கொண்டு கூட்டுதல் ---
பூக்கொண்டு, துப்பு ஆர் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு, வாக்கு உண்டாம்;நல்ல மனம் உண்டாம்;மாமலராள் நோக்கு உண்டாம்; மேனி நுடங்காது.
இதன் பதவுரை ---
துப்பு ஆர் திருமேனித் தும்பிக்கையான் பாதம் - பவளத்தைப் போலும் (சிவந்த) திருமேனியையும், துதிக்கையையும் உடைய விநாயகப் பெருமானின் திருவடிகளை, பூக் கொண்டு - (அருச்சனைக்கு உகந்த நறுமண) மலர்களை எடுத்துக் கொண்டு, தப்பாமல் சார்வார் தமக்கு - நாள்தோறும் தவறாமல், அடைந்து பூசை செய்வோருக்கு, வாக்கு உண்டு ஆம் - வாக்கு வன்மை உண்டாகும்; நல்ல மனம் உண்டு ஆம் - நல்ல சிந்தனை உண்டாகும்; மாமலராள் நோக்கு உண்டு ஆம் - பெருமை பொருந்திய செந்தாமரை மலரைத் தனக்கு இருப்பிடாமாகக் கொண்டு இருக்கும் திருமகளின்அருட்பார்வை உண்டாகும்; மேனி நுடங்காது - (அப்படி வழிபடுவோரது) உடம்பு, (பிணிகளால்) வாட்டம் அடையாது.
இந்தப் பாடலில் அருமையானதொரு செய்தியை நமக்கு அறிவுறுத்திக் காட்டுகின்றார் ஔவைப் பிராட்டியார்.
"வாக்கு" என்பது கல்வி நலத்தைக் குறிக்கும். "நல்ல மனம்" என்பது நற்குண நற்செய்கைகளைக் குறிக்கும். "மாமலராள் நோக்கு"என்பது, திருமகளின் கடைக்கண் பார்வையால் உண்டாகும் செல்வ வளத்தைக் குறிக்கும். "மேனி நுடங்காது" என்பது உடல் நலத்தைக் குறிக்கும்.
மக்களாகப் பிறந்தோர்க்கு, வாழ்க்கையில் நல்ல கல்வி நலமும், நல்ல குணமும், செல்வ வளமும், நல்ல உடல் நலமும் அமைந்து விட்டால், பின் வேண்டத் தக்கது எதுவும் இல்லை. இதனால் உயிர் நலம் பெறும்.
கல்வி என்பது கலைமகள் திருநோக்கால் உண்டாவது. மனநலம் என்பது மலைமகள் திருநோக்கால் உண்டாவது. செல்வம் என்பது திருமகள் திருநோக்கால் உண்டாவது.
பொதுவாக உலகியலில், கல்வி இருந்தால்,செல்வம் இருக்காது. செல்வம் இருந்தால் கல்வி இருக்காது என்று சொல்லக் கேட்டுள்ளோம். இதற்கு, கூறப்படும் நியாயத்தை எண்ணினால், வெட்கக் கேடாக இருக்கும். கலைமகள் என்பவள், திருமகளின் மருமகள். மாமியாரும் மருமகளும் ஒன்று கூடமாட்டார்கள். இது அப்பட்டமான அறியாமையால் உண்டானது.
செல்வம் யாரைச் சேர்ந்து இருக்கும் என்பதற்கு, விடையாக, குலசேகர ஆழ்வார் பாடியருளிய ஒரு பாடலைக் காணலாம்.
நின்னையே தான் வேண்டி,நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான் வேண்டும் செல்வம்போல்,மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவக்கோட்டு அம்மானே!
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே.
இதன் பொருள் ---
மிக்க ஒளியினை உடைய ஆழிப் படையினைத் திருக்கையில் கொண்டுள்ள வித்துவக்கோட்டு அம்மானே! உலகில் மிகுந்த செல்வத்தை விரும்பாது, உன்னையே விரும்பி இருப்பவரிடம் தானாகவே வந்து சேருகின்ற செல்வத்தைப் போல, உனது மாயையால் நீ என் மீது பரிவு காட்டவில்லையானாலும், உனது அடியவன் ஆன நான் உன்னை அடைவதையே விரும்பி நிற்பேன்.
செல்வத்தை வேண்டாதவரிடம் செல்வம் வந்து சேரும். கல்விச் செல்வத்தால் அறிவு நிரம்பப் பெற்று, பிறப்பின் பயன் பரம்பொருளை வழிபட்டு, நற்கதியை அடைவதே என்று தெளிந்தவர்கள், அருட்செல்வத்தையே விரும்பி இருப்பார்கள். பொருட்செல்வத்தை விரும்பி இருக்கமாட்டார்கள். ஆனால், இறைவன் அவர்களை வறுமையில் வாடவிட மாட்டான். தன்னை நம்பும் அடியவர்களை வறுமையில் வாடவிட்டால், அவரைப் பார்க்கின்ற மற்றவர்க்கு, கடவுள் நம்பிக்கை உண்டாகாது. அடியவர்கள் தமக்கு வந்த செல்வமானது, இறையருளால், தாம் முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பலனாக வந்தது என்று தமது கல்வி அறிவால் உணர்ந்து, நிலையற்ற செல்வத்தைக் கொண்டு, நிலையான அறத்தைப் புரிவதிலேயே கருத்தாக இருப்பார்கள். எனவே, அடியார்களிடம் வருகின்ற செல்வம் அவர்களிடத்தில் நிலைத்து இருப்பதில்லை. கல்வி அறிவு நிரம்பப் பெறாதவன்,பொருளாசை கொண்டு,பொருளைச் சேர்த்து வைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்துகொண்டு, நல்லறமும் புரியாமல், நற்கதிக்கு வழி தேடிக் கொள்ளமாட்டான்.
இறைவனே தன்னை வழிபடும் அடியவர்க்கு ஏவல் புரிபவன் தானே. அடியவர்க்குத் திருமகள் ஏவல் புரிவாள் என்கின்றார் திருஞானசம்பந்தர், பின்வரும் தேவாரப் பாடலின் மூலம்..
"கொய்த அம் மலரடி கூடுவார், தம்
மை திகழ் திருமகள் வணங்க வைத்துப்
பெய்தவன் பெருமழை, உலகம் உய்யச்
செய்தவன் உறைவிடம் திருவல்லமே"
இதன் பொழிப்புரை ---
அன்பர்களால் கொய்து அணியப் பெற்ற அழகிய மலர் பொருந்திய திருவடிகளைச் சேர்பவர்களை, பலரிடத்தும் மாறிமாறிச் செல்லும் இயல்பினளாகிய திருமகளை வணங்குமாறு செய்விப்பவனும், பெருமழை பெய்வித்து உலகை உய்யுமாறு செய்பவனுமாய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.
அடியார்களைப் பிரியாது திருமகள் இருப்பாள் என்கின்றார் அப்பர் பெருமான்...
"செந்துவர் வாய்க்கருங் கண்இணை வெண்நகைத் தேன்மொழியார்
வந்து வலம்செய்து மாநடம் ஆட மலிந்த செல்வக்
கந்தம் மலிபொழில் சூழ்கடல் நாகைக்காரோணம் என்றும்
சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும் திருமங்கையே".
இதன் பொழிப்புரை ---
சிவந்த பவளம் போன்ற வாயையும், கரிய இருகண்களையும், வெண்மையான பற்களையும், தேன்போன்ற இனிய சொற்களையும் உடைய இளைய மகளிர் வந்து வலம் செய்து சிறந்த கூத்து நிகழ்த்துமாறு, செல்வம் மிகுந்ததும், நறுமணம் வீசும் பொழில்களால் சூழப்பட்டதுமான கடலை அடுத்து அமைந்த நாகைக் காரோணத்தை என்றும் தியானிப்பவர்களைத் திருமகள் என்றும் நீங்காது இருப்பாள்.
ஆக, திருமகள் என்பவள், அறவழியில் முயல்பவர் இடத்தில் இருப்பாள். சத்தியம் தவறாத உத்தமர் வாழும் இடத்தில் அவள் இருப்பாள். இறை அடியார்களை நீங்காமல் இருப்பாள் என்பது தெளிவாகும்.
பொருளை ஈட்டவேண்டுமானால், நன்னெறியில் வாழத் திருவருள் வேண்டும். திருவருள் இருக்குமானால், திருமகள் அருளும் இருக்கும். திருமகள் இருப்பது எங்கு? அவளது இருப்பால் என்ன விளையும்?என்பது குறித்து, "குமரேச சதகம்" கூறுவது காண்போம்...
சத்தியம் அது இருப்பவர் இடத்தினில்
சார்ந்து திருமாது இருக்கும்;
சந்ததம் திருமாது இருக்கும் இடந்தனில்
தனது பாக்கியம் இருக்கும்;
மெய்த்துவரு பாக்கியம் இருக்கும் இடந்தனில்
விண்டுவின் களைஇருக்கும்;
விண்டுவின் களைபூண்டு இருக்கும் இடம்தனில்
மிக்கான தயைஇருக்கும்;
பத்தியுடன் இனியதயை உள்ளவர் இடம்தனில்
பகர்தருமம் மிகஇருக்கும்;
பகர்தருமம் உள்ளவர் இடம்தனில் சத்துரு
பலாயனத் திறல்இருக்கும்;
வைத்துஇசை மிகுந்ததிறல் உள்ளவர் இடத்தில்வெகு
மன்னுயிர் சிறக்கும் அன்றோ?
மயில் ஏறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
சத்தியம் தவறாது இருப்பவர் இடத்தினில் திருமாது சார்ந்து இருக்கும் - உண்மை நெறியில் வழுவாமல் வாழ்பவர் இடத்தில்திருமகள் சேர்ந்து இருப்பாள்; திருமாது இருக்கும் இடந்தனில் சந்ததம் தனது பாக்கியம் இருக்கும் - திருமகள் வாழுகின்ற அந்த இடத்திலே எப்போதும் அவள் அருளால் பெறப்படும் செல்வம்இருக்கும்; மெய்த்து வரு பாக்கியம் இருக்கும் இடந்தனில் விண்டுவின் களை இருக்கும் - உண்மையாக அவ்வாறு வருகின்ற செல்வம்இருக்கும் இடத்திலே திருமாலின் அருள் இருக்கும்; விண்டுவின் களை பூண்டு இருக்கும் இடம் தனில் மிக்கான தயை இருக்கும் - திருமாலின் அருளைப் பெற்றோர் இடத்திலே பெருமைக்குரிய இரக்கம் மிகுந்து இருக்கும்; பத்தியுடன் இனிய தயை உள்ளவர் இடந்தனில் பகர் தருமம் மிக இருக்கும் - திருமாலிடத்து வைத்துள்ள அன்பும், இனியஇரக்க குணமும் உள்ளவர் இடத்திலே சிறப்பித்துச் சொல்லப்படும் ஈகை என்னும் அறம் இருக்கும்; பகர் தருமம் உள்ளவர் இடந்தனில் சத்துரு பலாயனத் திறல் இருக்கும் - புகழ்ந்து கூறப்படும் அற உணர்வு உள்ளவர் இடத்திலே பகைவரை வெல்லும் வலிமை இருக்கும்; இசை வைத்து மிகுந்த திறல் உள்ளவரிடத்தில் வெகு மன் உயிர் சிறக்கும் அன்றோ - புகழ் பெற்று உயர்ந்த வலிமை பெற்றவர் இடத்திலே மிகுதியான நிலைபெற்ற உயிர்கள் சிறப்புற்று வாழும் அல்லவா?
கருத்து --- சத்தியம் தவறாத உத்தமர் வாழும் இடத்திலே செல்வ வளமும், இறைவன் அருளும், தானமும், தருமமும் சிறக்கும். அந்த இடத்திலே பகைவருக்கும் அருளும் பண்பு இருக்கும். அதனால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழும்.
மாமலராள் நோக்கு உண்டாம் என்றார் ஔவைப் பிராட்டியார். திருமகளின் கடைக்கண் பார்வை உண்டானால் வருகின்ற சிறப்புக்கள் குறித்து, "குமரேச சதகம்" கூறுவது...
திருமகள் கடாட்சம்உண் டானால் எவர்க்கும்
சிறப்புண்டு,கனதை உண்டு,
சென்றவழி எல்லாம் பெரும்பாதை ஆய்விடும்,
செல்லாத வார்த்தைசெல்லும்
பொருளொடு துரும்பு மரியாதைஆம்,செல்வமோ
புகல் பெருக்காறு போல் ஆம்,
புவியின் முன் கண்டு மதியாதபேர் பழகினவர்
போலவே நேசம் ஆவார்,
பெருமையொடு சாதியில் உயர்ச்சிதரும்,அனுதினம்
பேரும் ப்ரதிட்டை உண்டாம்,
பிரியமொடு பகையாளி கூட உறவு ஆகுவான்,
பேச்சினில் பிழை வராது,
வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும், அதிக
வல்லமைகள் மிகவும் உண்டாம்,
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
எவர்க்கும் திருமகள் கடாட்சம் உண்டானால் சிறப்பு உண்டு - யாவருக்கும் திருமகளின் கிடைக்கண் நோக்கம் உண்டானால் கீர்த்தி உண்டு; கனதை உண்டு - பெருமை உண்டு; சென்ற வழி எல்லாம் பெரும் பாதை ஆய் விடும் - வாழ்ந்து காட்டும் வழி எல்லாம் எல்லோரும் பின்பற்றும் பெரிய ஒழுக்கநெறி ஆகிவிடும்; செல்லாத வார்த்தை செல்லும் - ஏற்றுக் கொள்ளத்தகாத சொற்களும் பிறரால்ஏற்றுக் கொள்ளப்படும்; பொருள் ஒரு துரும்பு - எல்லாப் பொருளும் அவருக்கு எளிதில் கிடைக்கும்; மரியாதை ஆம் - பிறர் போற்றும் சிறப்பு உண்டாகும்; செல்வமோ புகல் பெருக்கு ஆறுபோல் ஆம் - அவரிடத்தில் செல்வமானது வற்றாத ஆற்று வெள்ளம் போல் வந்து சேரும்; புவியில் முன் கண்டு மதியாத பேர் பழகினவர் போலவே நேசம் ஆவர் - இந்த உலகில் வறுமை உடையவனாய் இருந்தபோது, கண்டும் காணாதது போல், மதியாமல் சென்றவர் எல்லாம், முன்பே நெடுநாள் பழகினவர் போல் வந்து நட்புக் கொண்டாடுவர்; சாதியில் பெருமையொடு உயர்ச்சி தரும் - பிறந்த குலத்தில் பெருமையும், உயர்வும் உண்டாகும்; அனுதினமும் பேரும் பிரதிட்டை உண்டாம் - எந்நாளும் பேரும் புகழும் உண்டாகும்;பகையாளி கூட பிரியமொடு உறவாகுவான் - பகைவனும் கூட அன்போடு உறவு கொண்டாடுவான்; பேச்சினில் பிழை வராது - பேசும் போது பிழையில்லாத பேச்சு வரும்; (வந்தாலும் பிழையாக யாரும் கொள்ளமாட்டார்); வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும் - வரவேண்டும் என்று எண்ணிய பொருள் யாவும் தவறாமல் கிட்டும்; அதிக வல்லமைகள் மிகவும் உண்டாம் - எடுத்த செயலை முடிக்கும் பேராற்றல் மிகுதியாக உண்டாகும்.
எனவே, இறைவனை வழிபட்டால், கல்வி நலமும், செல்வ நலமும், உடல் வளமும் ஒருங்கே வாய்க்கும் என்பதை வலியுறுத்த, ஔவையார் மேற்குறித்த பாடலைக் காட்டினார்.
யாராவது கல்வி நலம் வாய்க்கப் பெற்று, கடவுள் வழிபாடு இல்லாதவராக இருந்தால், அவர் கல்வியின் பயனைப் பெற்றவராக மாட்டார். "கற்றதனால் ஆய பயன் என்கொல்? வாலறிவன் நல்தாள் தொழார் எனின்" என்னும் திருக்குறள் இக் கருத்துக்கு அரண் செய்யும்.
கல்வி நலமும் வாய்க்கப் பெற்று, கடவுள் வழிபாடும் உடையவர்கள், உடல் நலமும், செல்வ நலமும் இல்லாதவர்களாய் இருந்தால், அவர்களுடைய கல்வி முறையிலும், கடவுள் வழிபாட்டு முறையிலும் தவறு உண்டு என்று கொள்ளலாம். "கற்றபின் நிற்க அதற்குத் தக" என்று திருவள்ளுவ நாயனார் காட்டியபடி, கற்றபடி நில்லாமை, இறைவனை வழிபட்டுப் புண்ணியப் பேறு இல்லாமை ஆகியவை காரணமாக இருக்க வேண்டும். இதனை, பின்வரும் அப்பர் தேவாரப் பாடலால் அறியலாம்...
திருநாமம் அஞ்செழுத்தும் செப்பார் ஆகில்,
தீவண்ணர் திறம் ஒருகால் பேசார் ஆகில்,
ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில்,
உண்பதன்முன் மலர்பறித்து இட்டு உண்ணார் ஆகில்,
அருநோய்கள் கெட வெண்ணீறு அணியார் ஆகில்,
அளி அற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்,
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே
இதன் பொருள் ---
இறைவனுடைய திருநாமமாகிய அஞ்செழுத்தை ஒருகாலும் சொல்லாதவர் ஆனால், தீவண்ணருடைய இயல்பை ஒருகாலும் பேசாதவர் ஆனால், திருக்கோயிலினை ஒருகாலம் வலம் வராதவராக இருந்தால், உண்பதற்குமுன் பல மலரைப் பேர் அரும்பாய் உள்ள நிலையில் பறித்து,அவற்றை இறைவனுக்கு இட்டு, பின் உண்ணதவராக இருந்தால், கொடுமையான நோய்கள் கெடும்படியாக திருவெண்ணீற்றை அணியாதவராக இருந்தால், இவர்கள் எல்லாரும் இறைவனது திருவருளை இழந்தவர் ஆவர். அவர்கள் பிறவி எடுத்து வந்தது எதற்காக என்றால், தீராத கொடுநோய்கள் மிகவும் துன்புறுத்தச் செத்து, வரும் பிறப்பிலும் பயனின்றி வாளா இறந்து, மீளவும் பிறப்பதற்கு, அதுவே தொழிலாகி இறக்கின்றார் ஆதலே தான்.
உயிர்க்கு உறுதி எல்லாம் உடம்பின் பயனே,
அயிர்ப்பு இன்றி ஆதியை நாடு.
உடம்பினால் பெற்ற பயன் ஆவ எல்லாம்
திடம்பட ஈசனைத் தேடு.
என்னும் ஔவைக் குறள் பாக்களைச் சிந்திக்க, உடம்பினை பெற்றதன் பயன், அதன் உள்ளே இருக்கும் உயிருக்கு நன்மையைத் தேடிக் கொள்வதே ஆகும். அந்த நன்மையைப் பெறவேண்டுமானால், இறைவனை நாட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே, இறைவனுடைய திருவடிகளைத் தப்பாமல் வழிபட்டு வருவோர்க்கு,கல்வி நலமும்,செல்வ நலமும்,உடல் நலமும் ஒருங்கே வாய்க்கும் என்பது ஔவையார் காட்டிய பாடலால் தெளிவாகும்.