தலைமையின் தகுதி
-----
தலைமை என்றால், அதற்குரிய தகுதிகள் பொருந்தி இருத்தல் வேண்டும். தலைமைக்குரிய தகுதிகள் சிறந்த குணங்கள் ஆகும். சிறந்த குணங்கள் பொருந்தி உள்ளவர் சான்றோர் ஆவர். சான்றோரே தலைமைக்குத் தகுதி உள்ளவர். "அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்து சால்பு ஊன்றிய தூண்" என்பார் திருவள்ளுவ நாயனார். உள்ளத்தில் அன்பு, தகாத எண்ணங்களில், செயல்களில் மனத்தைச் செலுத்தாமல் ஒடுங்கி இருத்தல், உலகத்தோடு ஒத்த உயர்ந்த நடை (ஒழுக்கம்), பிறர் தவறு செய்தபோதும் பழமை கருதி கண்ணோட்டம் செய்தல், மெய்ப்பொருள் உணர்ச்சி ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கி நிற்கும் தூண்கள். சான்றாண்மைக்கு உரிய தகுதிகளாக இன்னும் பல செய்திகளைத் திருவள்ளுவ நாயனார் "சான்றாண்மை" என்னும் அதிகாரத்தில் அருளிச் செய்து உள்ளார்.
தகுதிகள் அனைத்தும் பெற்ற தலைமை உலகில் கிடைப்பது மிக அரிது. தேவர் உலகத்தும் அது கிடைப்பதில்லை. பொதுவாகப் பலர் தம்முடைய தகுதியை உயர்த்திக்கொள்ள விரும்புவதில்லை. ஆனால், தலைமைக்கு மட்டும் முந்திக்கொண்டு போட்டி போடுகின்றனர்.
தக்கன் ஒரு வேள்வியினைச் செய்தான். வேள்வியில் இடப்படும் திருவமுதுப் படையல் பொருள்களைப் பெறுவதற்கு தகுதிப்பாடு சிவபரம்பொருளுக்கே உள்ளது. அத்தகைய தலைமையை தக்கன் மதிக்கவில்லை. "நான்" என்னும் ஆணவம் அவனிடத்தில் மிகுந்து நின்றது. அதனால், சிவபரம்பொருளின் தலைமையை ஒதுக்கி, வேள்வியைச் செய்யத் தலைப்பட்டான். சிவபரம்பொருளைத் தவிர மற்றவர்க்கு எல்லாம் அழைப்பு விடுத்தான். ஆசிரியர் இருக்கும் வரையில் அடங்கி இருந்து, இல்லாதபோது கொட்டம் அடிக்கும் சிறுபிள்ளைத்தனம் தேவர்களிடமும் இருந்தது. சிவபெருமான் இல்லாத இடத்தில் தமக்கு முன்னிலை வாய்க்கும் என்ற ஆசை இருந்தது. தலைவனை மதிக்காத இடத்திற்குத் தாம் போகலாமா என்னும் ஆராய்ச்சி அறிவு மங்கியது.
அண்ணன் செத்தால் திண்ணை காலி ஆகும் அல்லவா? மண்ணில் வாழ்வோர்க்கு இருப்பதைப் போலவே பிரமனுக்கும், திருமாலுக்கும் தலைமை வேட்கை வந்து விட்டது. தலைமை வேட்கை மிகவும் வெறி பிடித்தது. அது எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் ஆற்றல் பெற்றது. சதி பிறந்தது. வேள்விக்குச் சிவன் அழைக்கப் பெறவில்லை. பிரமனும் திருமாலும் தலைமைக்குரிய இன்பத்தை அனுபவித்தார்கள். இன்பத்தைத் தூய்த்தலும், மகிழ்தலும் தலைமைக்குரிய இலக்கணமே அல்ல. பிறர் துய்க்கத் தான் மகிழ்வதே தலைமைக்கு உரிய உயர்ந்த பண்பு. தலைமை என்றால் இன்பத்தை மட்டுமே அனுபவிப்பது அல்ல. துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, பிறர்க்கு நலம் புரிவதே தலைமைப் பண்பு.
அமுதம் வேண்டித் தேவர்கள் பாற்கடலைக் கடைய முற்பட்டனர். எல்லாம் வல்ல பரம்பொருளின் அருளைப் பெற்று, அத் தொழிலைச் செய்யவேண்டும் என்னும் பாங்கு தேவர்களிடத்தில் இல்லாமல் போய்விட்டது. ஆசை கண்ணையும், அறிவையும் மறைத்தது. அலைகடலில் இருந்து ஆலகால விடம் எழுந்தது. தலைமையைத் தேடிப் பற்றிக்கொண்ட நான்முகனும் திருமாலும் நஞ்சினை ஒடுக்கி உலகைக் காப்பாற்ற முடியாமல் தங்களையும் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் அலறினர். அப்போதுதான் அவர்களுக்குத் தலைவனான சிவனைப் பற்றிய எண்ணமே வந்தது. ஓடி வந்து ஈசனிடம் முறையிட்டனர். அவன் தனக்கு உவமையில்லாத தலைவன் அல்லவா? தன்னை நம்பியவர்களைக் காப்பதுதானே தலைவன் கடமை. எனவே, யாரும் விரும்பாத நஞ்சை உண்டு எல்லோரையும் காத்து அருள் புரிந்தான்.
இன்றும் பலர் தலைமையை விரும்புகின்றனர். ஆனால் அதற்குரிய தகுதியை முயன்று அடைய முயல்வதில்லை. தலைமைக்கு உரிய தகுதிகள் உடையாரை ஏற்றுக் கொள்ளவும் மறுக்கின்றனர். இழித்தும் பேசுகின்றனர். அவர்களை எப்படியாவது அகற்றச் சூழ்ச்சியும் புரிகின்றனர். பல நேரங்களில் இந்தச் சூழ்ச்சி வெல்வதுதான் வேதனைக்கு உரிய செய்தி. இதனால் எல்லாம் தலைமை வந்துவிடாது. வந்தாலும் நிலைத்து இருக்காது. தலைமைக்கு உரிய தகுதி உடையாரை ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் தலைவர் அல்ல என்று ஆகிவிட மாட்டார்கள். தலைமை, தலைமைதான்!
தலைமைக்குரிய பண்பு, போகத்தைத் துய்த்தல் அல்ல. புகழில் மயங்கித் திரிதல் அல்ல. ஆன்ற ஆள்வினையே தலைமைக்குரிய தகுதியை நிலைநாட்டும். கொலையே தொழில் எனக் கொண்டு, கோட்டை கொத்தளங்கள் கட்டி, வாழ்ந்த திரிபுர அரக்கர்களின் செம்மாந்த வாழ்வி நெடுநாளைக்கு நிலைக்கவில்லை.அளவற்ற செல்வத்தாலும், வலிமையினாலும் அரக்கர்கள் கை ஓங்கி நின்றது. தேவர்களும் கூட அவர்களுக்கு ஏவல் செய்யும் திலை உண்டாகியது. அறத்தின் சார்பு இன்மையால், அந்தத் தலைமை தற்காலிகமானது ஆயிற்று. அதுதானே நியதி. மேருமலையை வில்லாகக்கொண்டு, முப்புரங்களை அழித்து, மூவுலகையும் காத்தது சிவபரம்பொருள். ஆயினும் தலைமைக் கிறுக்குப் பிடித்த இந்த அமரர்கள் சிவபெருமானை நாள்தோறும் - வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் "இவரா தலைவர்! இல்லை, இல்லை! இவர் தலைவர் அல்ல"என்றெல்லாம் பேசுகின்றனர். இவர்கள் எதைப் பேசினாலென்ன? அவன் தனக்கு உவமையில்லாத தலைவனே. இன்றைக்கு உலகியல் நிலையில் கூட, சில தலைமைப் பொறுப்பில் உள்ள சில அதிகாரிகள், தலைவர்கள் நிலையும் கூட இப்படித்தான் அமைந்து உள்ளது.
தலைமைப் பண்புகளைப்பெற முயற்சி செய்ய வேண்டும். அதற்குத் தனக்கு உவமையில்லாத் தலைவன் திருவடிகளைப் பணிந்து அவன் இயல்புகளைப் பெறவேண்டும். தகுதியால் வருவதே தலைமை. மற்றபடி இடத்தால்,பொருளால்,வாய்ப்பால்,அதிட்டத்தால், மற்றவர் ஏமாற்றத்தால் வரும் தலைமைசிறந்த தலைமையாகாது. நீடித்த தலைமையும் ஆகாது. சான்றாண்மைக்கு உரிய பண்புகள் பொருந்தி இருந்தால், தலைமைக்கு முயற்சி செய்யலாம்.
"கொலைவரையாத கொள்கையர் தங்கள் மதில்மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனும்,சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே!"
என்னும் தேவாரப் பாடலின் வழி, இந்த அரிய சிந்தனையை நமக்குத் தந்து அருள் புரிகின்றார் திருஞானசம்பந்தர். தேவாதி தேவன் ஆகிய சிவபரம்பொருளின் தன்மையை உணராமல், செத்துச் செத்து பிழைக்கின்ற சிறுதெய்வங்களை வணங்குகின்ற புறச்சமயிகளைப் பார்த்து இவ்வாறு தெரிவிக்கின்றார்.
இதன் பொருள் ---
கொல்லும் தொழிலைக் கைவிடாத கொள்கையினர் ஆகிய அவுணர்கள் மும்மதில்களையும் மேருமலையை வில்லாகக் கொண்டு அழித்தவராயினும்,திருச்சிராப்பள்ளியின் தலைவராகிய அப்பெருமானாரைத் தலைவர் அல்ல என்று நாள் தோறும் கூறிவரும் புறச் சமயிகளே! நிலவுலகில் நீலம் உண்ட துகிலின் நிறத்தை, வெண்மை நிறமாக மாற்றல் இயலாதது போல,நீங்கள் கொண்ட கொள்கையையும் மாற்றுதல் இயலாது.
அற்ப அறிவினை உடையோர் தாம் உண்மையாகவே ஒன்றும் அறியாதவர்களாக இருந்தும், தமக்கு உள்ள கர்வத்தினால், எல்லாம் அறிந்தவர்களாகத் தம்மை எண்ணிக் கொள்ளுகின்றார்கள். தலைமைப் பொறுப்புக்கும் எப்படியவாது வந்துவிட வேண்டும் என்று துடிக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்க்கு நல்லறிவு இருக்காது. காரணம் அவர்கள் உள்ளமானது நீலம் ஏற்றப்பட்ட துணியாகி விட்டது. ஒருவனுக்கு நல்லறிவைப் புகட்ட,ஒருவர் சென்று உண்மையை உபதேசித்தாலும், அது அவனுக்குப் பயனைத் தராததோடு, சொன்னவர்க்கும் இழுக்கு உண்டாகும். அந்த அற்ப அறிவாளன் தான் உணர்ந்ததையே உண்மை என்று தீர்மானித்து,அதன் வழியே ஒழுகுவான். எனவே, புல்லறிவாளனுக்கு நல்லறிவை எவ்வழியாலும் புகட்ட முடியாது என்று அறியப்படும் என்பதை உணர்த்த,
"காணாதான் காட்டுவான் தான் காணான், காணாதான்
கண்டான் ஆம் தான் கண்ட ஆறு".
என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார்.
"ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத
மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க,- மூர்க்கன்தான்
கொண்டதே கொண்டு விடான் ஆகும்,ஆகாதே
உண்டது நீலம் பிறிது".
என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "பழமொழி நானூறு".
இதன் பொருள் ---
தான் ஆராய்ந்த உணர்ந்த உயர்ந்த கருத்துக்களையும், உலக ஒழுக்கத்தினையும் உணராத மூர்க்கனுக்கு எந்த ஒரு உறுதிப் பொருளையும் சொல்லவேண்டாம். மூர்க்கன் ஆனவன், தான் கொண்டதையே பற்றிக் கொண்டு, விடாதவனாக இருப்பான்.
நீல நிறத்தை உண்டபொருள் வேறொரு நிறத்தைக் காட்டுதல் முடியாது. (அதுபோல), மூர்க்கனும் தான் மேற்கொண்டதனையே மனத்தின்கண் கொண்டு இருப்பான்.
மூர்க்கர்கள் பிறர் கூறுவனவற்றைக் கேட்டுத் திருந்தார். ஆராய்ந்த கருத்தும்,ஆராயும் அறிவும் உடையார் அறிவுடையோர் ஆவர். பிறர் கூறுகின்றகருத்தின் உண்மையையும் தம் கருத்தின் உண்மையையும் ஆராய்ந்து செம்மை உடையதனை மேற்கொள்ள வேண்டும். இதுஉண்மையை ஆராயும் உணர்வு,அறிவுடையோர்க்கு இன்றியமையாதது. நீலம் உண்ட பொருள் தன்னை அடுத்த பொருளையும் நீலமாக்குதல் போல, மூர்க்கன் தான்கொண்ட தவறுடைய அப்பொருளையே பிறருக்கும் போதிக்க முற்படுவான்.
"மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா" என்பது பழமொழி.