எது திருத்தலம்?

 


எது திருத்தலம்?

-----

 

     "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது முதுமொழி. திருக்கோயில் இல்லாத ஊர் திரு இல்லாத ஊர் என்பதால், "திருக்கோயில் இல்லாத திரு இல் ஊர்" என்றார் அப்பர் பெருமான். திருக்கோயிலும் அதைச் சார்ந்த நிலைகளையும் பின்வருமாறு காட்டிஅவைகள் இல்லாவிட்டால்அந்த ஊர்ஓர் ஊரே அல்ல. அது பெருங்காடு ஆகும் என்கின்றார்.

 

"திருக்கோயில் இல்லாத திருஇல் ஊரும்;

            திருவெண்ணீறு அணியாத திருஇல் ஊரும்;

பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும்;

            பாங்கினோடு பலதளிகள் இல்லா ஊரும்;

விருப்போடு வெண்சங்கம் ஊதா ஊரும்;

            விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும்;

அருப்போடு மலர்பறித்துஇட்டு உண்ணா ஊரும்;

            அவை எல்லாம் ஊர்அல்ல அடவி காடே.

 

இதன் பொருள் ---

 

     சிவபெருமானது திருக்கோயில் இல்லாததால் நன்மை இல்லாத ஊரும்திருவெண்ணீற்றை மக்கள் அணியாததால் நன்மை இல்லாத ஊரும்உடம்பு வணங்கிப் பத்தி மிகுதியால் மக்கள் பாடாத (மக்கள் வாழ்கின்ற) ஊரும்அழகான பலதளிகள் இல்லாத ஊரும்விருப்புடன் வெண்ணிற வலம்புரிச் சங்கினை ஊதாத ஊரும். மேற்கட்டியும் வெண் கொடிகளும் இல்லாத ஊரும்மலரைப் பேரரும்பாய் உள்ள நிலையில் பறித்துச் சிவனுக்குச் சாத்திப் பின்னரே உண்ணுதல் முறையாய் இருக்க,அங்ஙனம் உண்ணாத (மக்கள் வாழுகின்ற) ஊரும்ஆகிய அவை எல்லாம் ஊரல்லஅடவியாகிய பெருங்காடே.

 

     இத் திருத்தாண்டகப் பாடல்மக்கள் வாழுகின்ற ஊருக்கு உரிய இயல்புகளைப் பற்றிக் கூறி,அங்கு வாழும் நன்மக்களுக்கு உரிய ஒழுக்க நெறியை வகுத்து அருளியது. 

 

     "திரு" என்பது பொதுவாகச் செல்வம் என்று கூறப்பட்டாலும்,பொருட்செல்வமானது கீழ்மக்களிடத்தும் உள்ளது என்னும் பொருளில், "பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" எனத் திருவள்ளுவ நாயானார் அருளியபடியால்நன்மக்களிடத்துநல்ல வழியில் வந்த செல்வத்தையே "திரு" என்ற சொல் குறிக்கும் என்று கொள்ளுதல் வேண்டும். "திரு" என்பது உலகியல் இன்பத்திற்கு உரிய பொருட்செல்வத்தையும்அருளியல் இன்பத்திற்கு உரிய அருட்செல்வத்தையும் குறிக்கும். எனவேநன்மக்கள் வாழாத ஊர் "திரு இல் ஊர்" என்றார். 

 

     நன்மக்கள் வாழுகின்ற ஊர் "திருத்தலம்" எனப் பாராட்டப் பெற்றுமக்களால் வணங்கப் பெறுவது."திருத்தலம்" என்பது சிறந்த பெயர்! ஊர்கள் எல்லாம் திருத்தலங்கள் ஆகா. திருக்கோயில் இருக்கும் இடம் எல்லாம் திருத்தலம் ஆகி விடுவதில்லை.  திருவருள் துணையுடன் வளர்ந்த மனிதர்கள் படைப்பதுவாழ்வதுதிருத்தலம். 

 

     திருத்தலங்களை வழிபட்டுப் பாடிய அருளாளர்கள் எல்லாம்அங்கு வாழும் மக்களின் இயல்பினை எடுத்துக் காட்டத் தவறியது இல்லை. பொய்ம்மை என்பது புண்ணியத்திற்கு மாறான பாவத்திற்கு உரியது. பொய்ம்மை உயிரின் வளர்ச்சிக்கு ஊறு செய்வது.பொய்ம்மைஉயிர்க்கு ஊதியம் சேர்ப்பதற்குத் தடைஆக இருப்பது. உயிர்ஊதியமற்றுப் போனால்அதன்உள்ளீடு இல்லாமல் போகும். உயிரின் உள்ளீடாகிய அன்போடு கூடிய பத்தி முதலிய இனிய பண்புகள் இல்லாதவர்கள் பொய்ம்மையே பேசுவர்.பொய்ம்மையே செய்வர்.  பொய்ம்மை செய்யாதவர் வாழும் பதியே திருத்தலமாகும்.

 

     பொய்ம்மையின் விளைவு வஞ்சகம்வஞ்சகத்து இன்னொரு பெயர் சலம் செய்தல். சலம் செய்தால் சஞ்சலமே மிஞ்சும். சலம் என்றால் என்னநல்லது போலக் காட்டித் தீமை செய்தல். அன்புடன் பழகுவது போல நடித்துப் பகைமையை வளர்த்தல். இதுவே வஞ்சகம். உள்ளம் ஒன்று வைத்துப் புறம்ப் ஒன்று பேசுதல். விரைந்து செய்வார் போலக் காட்டி,ஏதும் செய்யாது இருத்தல் சலம். வார்த்தைகளில் காட்டும் அக்கறை வாழ்க்கையில் இருக்காது. இத்தகையதோர் மனித உருவில் உலாவினாலும் இவர்கள் மனிதர்கள் அல்லர். இத்தகையோர் வாழும் ஊர்வளர்ச்சி குன்றி இருக்கும். மனவளமும் குன்றியே இருக்கும்.

 

     யாக்கை ஆக்கத்தைத் தருவதாக மாறினால், "ஆக்கை" எனப்படும். உயிருக்கு உரிய ஆக்கமாகிய வீடுபேற்றைக் கருதாமல்யாக்கைக்கே இரைதேடி அலைபவர்கள் இந்தப் பொய்யர்கள். எப்படியாவது பிழைக்கவேண்டும் என்று எண்ணுபவர்கள். இவர்களுக்கு மெய்யறிவில் ஆர்வம் இருக்காது. எதையும் பேசுவர். எதையும் செய்வர். இவர்களுக்கு நினைத்ததே விதி. இவர்களைத் திருவள்ளுவர் கயவர் என்பார். கொல்லாமை பற்றிக் கூறவந்த திருவள்ளுவ நாயனார்,கயவரைக் கொன்றால்தான் பயன் என்றால் கொல்லலாம் என்னும் பொருளில், "கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல்பைங்கூழ் களை கட்டதனோடு நேர்" என்று அருளினார்.இத்தகைய கயவரை "நீதர்" என்று குறிப்பிடுகிறார் திருஞானசம்பந்தர். நீதித் தன்மையிலாதவர் நீதர். இவர்கள் வாழும் ஊரும் சுடுகாடாகலாமே தவிர,ஊர் கூட ஆகாது. ஊர் என்றே மதிக்கப்படாத ஒன்று எப்படித் திருத்தலம் ஆகும்கோயில் உள்ளதாலாஅல்லகோயிலாகத் தமது உள்ளத்தை ஆக்கிக் கொண்ட தூயர்கள் உள்ளதால்.

 

     திருத்தலம் என்றால்அங்குள்ள திருக்கோயிலை மட்டுமே குறிப்பது அல்ல. திருக்கோயிலும் திருக்கோயிலைச் சூழந்து தக்காரும் வாழும் ஊரே திருத்தலம். தக்கவர்கள் "தக்கார்" எனப்படுவர். எனவேதான்திருக்கோயில் நிர்வாகத்தில் உள்ளவர்க்கு, "தக்கார்" என்று பெயர் வழங்கப்பட்டது. தகுதி உடையவர் வாழும் பதியே திருத்தலம். அவர்களால் மட்டுமே தனக்கு உவமை இல்லாத தலைவன் ஆகிய இறைவனை வழிபட முடியும். வழிபடுவோர்க்கு வழி காட்ட முடியும். சிந்தனை இறைநலத்தில் தோய்ந்தால் புலன்கள் அழுக்கினின்றும் அகன்று தூய்மை பெறும். தூய்மையான உள்ளத்தைத் திருக்கோயிலாகக் கொண்டு இறைவன் எழுந்தருள்வான். தூய்மையான மனத்தவர் பாவிக்கின்ற வடிவில் இறைவன் எழுந்தருள்வான். அவர்களைத் தேடிச் சென்று அங்கேயே குடியிருப்பான் இறைவன் என்பதை, "மாசு இல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடிவிளையாடிஅங்ஙனே நின்று வாழும் மயல் வீரனே" என்னும் அருணகிரிநாதப் பெருமான் அருளிய திருப்புகழ் வரிகளால் அறிந்துகொள்ளலாம். எனவேமனமாசு இல்லாத அடியவர்கள் வாழ்வதே ஊர். அந்த ஊரைத் தேடி இறைவன் செல்வான். அல்லாதவை எல்லாம் ஊர் அல்ல. காடுதான்.

 

     திருத் தலைச்சங்காடு என்னும் திருத்தலத்திற்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தப் பெருமான்அத் திருத்தலத்து இறைவரைப் பாடிய திருப்பதிகத்தில்அங்கு வாழ்ந்திருந்த தகுதி வாய்ந்த பெருமக்களைச் சிறப்பித்துப் பாடினார்.

 

"நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்றுஐந்து

புலநீர்மை புறம்கண்டார்பொக்கம் செய்யார்போற்று ஓவார்,                                                    

சல நீதர் அல்லாதார்தக்கோர்வாழும் தலைச்சங்கை

நலநீர கோயிலே கோயில் ஆக நயந்தீரே".

 

இதன் பொருள் ---

 

     நிலம்நீர்ஆகாயம்நெருப்புகாற்று ஆகிய ஐம்பூதவடிவாய் நின்று,ஐம்புலன்களை வென்று நிற்பவர்களும்,பொய்யில்லாத உள்ளத்தை உடையவர்களும்,வழிபாட்டை ஓவாமல் செய்பவர்களும்,வஞ்சகமும் இழிசெயல்களும் இல்லாதவர்களும் ஆகிய தக்கோர் வாழும் தலைச்சங்கையில் அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டுள்ளீர்.

 

     இப்பாடலில் திருத் தலைச்சங்கை என்னும் திருத்தலத்தில் வாழுகின்ற அடியவர்களின் சிறப்புக் கூறப்பட்டது. அவர்கள் ஐந்து புலன்களையும் வென்றவர்கள். உள்ளதிலும்செயலிலும் பொய்ம்மை இல்லாதவர்கள்,இறைவழிபாட்டில் என்றும் நிற்பவர்கள்உள்ளத்திலும் செயலிலும் வஞ்சகத் தன்மை இல்லாதவர்கள் ஆகிய தக்கார் என்றார் திருஞானசம்பந்தர். இப்படிபட்ட மெய்யடியார்கள் வாழுகின்ற ஊரிலே இறைவன் நிச்சயம் எழுந்தருளி இருப்பான்.

 

     திருஒமாம்புலியூர் என்னும் திருத்தலத்திற்கு வந்தார் திருஞானசம்பந்தர். மண்ணுலகில் உள்ளவர்களும்வானுலகை ஆள்பவர்களும்பாதாள உலகத்தினர் ஆகிய மூவுலகத்தவர்களும் அனுபவித்துக் கொண்டிருந்த துயரத்திற்குக் காரணமான அரக்கர்கள் அழிந்து ஒழியவேண்டிதிருமாலுக்குச் சக்கரப்படையை அளித்தவர் ஆகிய சிவபரம்பொருள் இனிதாக வீற்றிருக்கின்ற இடம் எது தெரியுமாஎன்று ஒரு வினாவை எழுப்பிஅது தீய செயல்களின் வழியே பொருள்களைச் சேர்ப்பதைச் செய்யாத ஒழுக்க சீலர்களும்பெரும்புகழினைத் தருகின்ற செயல்களைச் செய்பவர்களும் ஆகிய சான்றோர்கள் வாழுகின்ற ஓமாம்புலியூர் என்று அத் திருத்தலத்தை நமக்குக் காட்டுகின்றார்.

 

"நிலத்தவர்வானம் ஆள்பவர்கீழோர்,

            துயர்கெடநெடியமாற்கு அருளால்

அலைத்தவல் அசுரர் ஆசுஅறஆழி

            அளித்தவன் உறைவிடம் வினவில்,

சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத்

            தன்மையார்நன்மையால் மிக்க

உலப்புஇல்பல் புகழார் ஓமமாம் புலியூர்

            உடையவர் வடதளி அதுவே".

 

     உலகில் வாழப் பொருள் வேண்டியதுதான். அறத்தைச் செய்துஅருளைப் பெற்றுஆண்டவன் அடிநிழல் அடைந்து எக்காலமும் இன்புற்று இருப்பதற்குப் பொருள் வேண்டியதுதான். பொருளுக்காகவே வாழ்வது ஒன்று. அறவழியில் பொருளை ஈட்டிதானும் துய்த்துஅதனை அறவழியில் செலவழித்துபோகின்ற வழிக்குப் புண்ணியமாகச் சேர்த்துக் கொள்வதும் ஒன்று. பின்னதைச் செய்பவர்கள் தக்கார். அவர்களை உள்ளத்தை மட்டுமல்லாதுஅவர்கள் விரும்பி வழிபடும் திருக்கோயில்களைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டு இறைவன் எழுந்தருளி இருப்பான். அப்படிப்பட்ட ஊர் திருத்தலம் ஆகின்றது. கோயில் இருப்பதாலேயே ஓர் ஊர் திருத்தலம் ஆகிவிடுவது இல்லை.

 

     தீய வழியில் பொருளை ஈட்டிப் பாதுகாத்து வைத்தாலும்அது எப்படியாவது அழிந்துபோகும்அது பச்சை மண்ணால் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிமூடி வைத்ததைப் போன்றது என்று காட்ட,

 

"சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல்,பசுமண்

கலத்துள் நீர் பெய்து இரீஇ அற்று"

 

என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார். திருக்குறளின் வழி அருள்வாழ்க்கையை வாழுகின்ற அடியவர்கள் வாழுகின்ற ஊர் திருத்தலம் ஆகும்.           

 

     பச்சை மண்ணால் ஆன பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்தால்நீரும் வீணாகும். பாத்திரமும் கரைந்து அழிந்து போகும். அதுபோலதீய செயல்களால் வந்த பொருளைப் பாதுகாத்தலும் முடியாது. பழியும் வந்து சேரும் என்பதை உணர்ந்து நன்னெறியில் ஒழுகுபவர்கள் தக்கார் ஆவர். தக்கவர் ஆக ஒழுகுபவர்கள் தக்கார் எனப்படுவர்.

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...