உணவு வகைகள் மூன்று

 


உணவு வகைகள் மூன்று

-----

 

     ஊண் என்பது உண்ணப்படுவது. உண்பது ஒரு சடங்கல்ல. அது ஒரு கடமையும் அல்லஉண்பது கூட ஒரு பணியே ஆகும். பயன் கருதிச் செய்ய வேண்டிய பணி அது ஒன்றே ஆகும். உணவு பலவகைப்படும். வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவிதமான ஊணவு தேவைப்படுகின்றது. எல்லாம் உடம்பை திடம்படச் செய்துஉயிரை வளர்க்கவே. இன்றைய நாளில்உடல் இயக்கத்திற்கு உண்ணப்பெற வேண்டியதே உணவு என்று பலர் கருதுகிறார்கள். மற்றைய உணவுகளைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. இன்னும் சொல்லப்போனால்உணவையும் கூடப் பலர்உடல் இயக்கத்தின் அவசியம் கருதி உண்பதில்லை. நாக்கு ருசியையே கருதுகின்றனர். வயிறு நிறைய உண்பதே கருத்தாக உள்ளது. சுவைத்து உண்பதும் தேவைதான். ஆனாலும் சுவைக்காக மட்டுமே உண்ணக்கூடாது. உடல் இயக்கத்திற்கும்ஆற்ற வேண்டிய பணிக்கும்அதற்குத் தேவைப்படும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு உணவு முறை அமைந்து இருக்கவேண்டும். உண்ணும் உணவுஉடலுக்கு வலிமையை மட்டும் தந்தால் போதாது. உடல் இயங்கும் ஆற்றலை அது தரவேண்டும். உடல் இயக்கத்திற்காகவே உண்கின்றோம். 

 

     பெரும்பாலும் நோய்கள் எல்லாம் செரிமானம் ஆகாத உணவாலும்,பொருந்தாத உணவாலும்மிகையான உணவாலுமே நேர்கின்றன.

 

     செரிமானத்தை அறியும் குறிகள் ஆவன --- வயிற்றில் கனம் இன்மைஏப்பத்தின் செம்மை,  பசி உண்டாதல்உணவு உட்கொண்டு ஐந்து மணி நேரத்திற்கு மேலாக இருத்தல்என்பன ஆகும்.

 

     தமிழகத்து உணவு தொன்றுதொட்டு மருத்துவ முறையில் சமைக்கப்பட்டு வருகின்றது. பச்சரிசி சூடு உண்டாக்கும். எனவேஅது நமது வெப்ப நாட்டிற்குப் பொருந்தாது என்று புழுங்கலரிசி ஆக்கப்படுகின்றது. அதைச் சரி அளவு தண்ணீர் வைத்துச் சமைத்தல் வேண்டும்.வாழைக்காய் வாயுவை மிகுப்பது என்றுபிஞ்சு நிலையில் சமைக்கப்படும். சீனி அவரை என்னும் கொத்தவரை பித்தம் மிகுப்பது என்று அதற்குப் புளி சேர்க்கப்படும். 

 

காயச் சரக்காகக் கூட்டுவனவற்றுள்

 

--- மஞ்சள் நெஞ்சுச் சளியை முறிக்கும்

--- கொத்துமல்லி பித்தத்தை அடிக்கும்

--- சீரகம் வயிற்றுச் சூட்டைத் தணிக்கும்

--- மிளகு தொண்டைக் கட்டைத் தொலைக்கும்

--- பூண்டு வாயுவை அகற்றி வயிற்றுப் பொருமலை நிறுத்திப்  பசியை மிகுவிக்கும்

--- வெங்காயம் குளிர்ச்சி உண்டாக்கிக் இரத்தத்தைத் தூய்மைப் படுத்தும்;

---  பெருங்காயம் வாயுவை வெளியேற்றும்

--- இஞ்சி பித்தத்தை ஒடுக்கிக் காய்ச்சலைக் கண்டிக்கும்;

--- தேங்காய் நீர்க்கோவை அல்லது தடுமன் என்னும் முக்குச்  சளியை நீக்கும்;

---  கறிவேப்பிலை உணவுக்கு மணம் ஊட்டி விருப்பை  உண்டாக்கும்

--- கடுகு வயிற்று வலி வராமல் காக்கும்

--- நல்லெண்ணெய் கண் குளிர்ச்சியும் அறிவுத் தெளிவும்  உண்டாக்கும்

 

     இவை எல்லாம் சேர்த்த துவரம் பருப்புக் குழம்பும்சீரகம் பூண்டு கலந்த மிளகு நீரும்சூட்டைத் தணித்துச் செரிமான ஆற்றலை மிகுக்கும் மோரும்சோற்றைக் கொழுமைப்படுத்திக் குடல் புண்ணை ஆற்றும்நெய்யோடும் உடலுக்கு வலிமை செய்துமல பந்தத்தை நீக்கும் கீரையொடும்குளிர்ச்சி தந்து பித்தம் போக்கும் எலுமிச்சை ஊறுகாயொடும்அறுசுவைப்பட உண்ட பின்உண்டது செரிமானம் ஆகிநல்ல பசி எடுத்தால்அதன் பின்னர் மறுவேளை உணவை உட்கொண்டால்மருந்து என்பது ஒன்று வேண்டியதில்லை. 

 

எனவே

 

"அற்றது அறிந்துகடைப்பிடித்துமாறு அல்ல

துய்க்க துவரப் பசித்து".  

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

இதன் பொருள் --- முன்னர் உண்ட உணவு செரிமானம் ஆனதை உணர்ந்துநன்றாகப் பசி எடுத்த பின்னர்உடல் நிலைக்கும்அற முறைக்கும் மாறுபாடு இல்லாத உணவு வகைகளைநோக்கமாகக் கொண்டு உண்ணுக.

 

"அற்றது அறிந்து"என்றதுசெரிமானத்தின் இன்றியமையாமையை வலியுறுத்தவே. 

 

     கண்ணுக்கு அழகாக இருப்பதையும்நாவிற்கு சுவையாக இருப்பதையும் கருதி உண்பது இன்பம்தான். ஆனால்அவ்வாறு உண்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் துன்பமே. ஆகவேஉண்பதால் வரும் இன்பத்தை விடசெரிமானம் ஆவதால் வரும் இன்பமே சிறந்தது.

 

     திருவள்ளுவ நாயனார் செரிமானத்தால் வரும் இன்பத்தை முதன்மையாகக் கொண்டதினாலேயேஇன்பத்துப்பாலில் உலகில் சிறந்த இன்பத்தைக் கூறுகின்ற போதும்,

 

"உணலினும் உண்டது அறல் இனிதுகாமம்

புணர்தலின் ஊடல் இனிது"

 

என உவமமாகக் கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது. 

 

இதன் பொருள் ---உண்ணுவதை விடவும்முன்னர் உண்ட உணவு செரித்தல் இன்பத்தைத் தரும். அதுபோலவேகாம இன்பத்திற்குச் சேர்க்கையில் உள்ளதை விடஊடல் கொள்ளுதல் இன்பம் ஆகும்.

 

     உண்ட உணவு செரித்த பின்பும்அதன் சுவையும் மணமும் சற்று நேரம் நிற்கும். நாம் ஏப்பம் விடும்போது இதை நன்கு உணரலாம். ஏனவேதுவரப் பசித்தபின் உண்ணுதல் வேண்டும்.  

 

     ஊதை பித்த கோழைகளை மிகுப்பனவும் குறைப்பனவுமாக உள்ளவை உணவுகள். இளமைக்கு உரிய உணவுகளை முதுமையில் உண்பது பருவத்தோடு மாறுபடும். அருவருப்பான தோற்றமும் நாற்றமும் உள்ள உணவுகளை விருப்பத்தோடு மிகுதியாக உண்பது கூடாது. கோடைக்கு உரிய உணவை மழை நாளிலும்காலைக்கு உரிய உணவை மாலையிலும் உண்பதும் கூடாது.  வெப்பநாட்டிற்கு உரிய உணவைக் குளிர் நாட்டில் உண்பதும் கூடாது. 

 

     அறுசுவைகளுள்,  துவர்ப்பும் புளிப்பும் ஊதைக் கூறு உள்ளவை. உவர்ப்பும் கசப்பம் பித்தக் கூறு உள்ளவை. இனிப்பும் கார்ப்பும்கோழைக் கூறு உள்ளவை.

 

     ஒரே சுவையுள்ள காய்கனிகள் நேர்மாறான குணம் செய்வதாலும்ஒரே கனி வேறுபட்ட வளர்ச்சி நிலையிலும் வேறுபட்ட நிலத்தாலும் வேறுபட்ட காலத்தாலும் சுவை வேறுபடுதலாலும்சுவையை மட்டும் நோக்காது பொருளையும் நோக்கிஏற்பதும் ஏற்காததும் அறிந்து, கொள்வதும் தள்ளுவதும் செய்தல் வேண்டும். 

 

     வெளி இடங்களில் உடல்கூறு முதலியவற்றோடு மாறுபடும் உணவுகளைசுவை கருதியோஅல்லது வேறு காரணம் கருதியோ உண்ண நேர்ந்தாலும்அவற்றிற்கு உரிய மாற்றுக்களை உடனே உண்டுவிடுவது நோய் வராமல் தடுக்கும். 

 

     ஒவ்வோர் உணவுப் பொருளிலும்சிறிது அளவாகவோ பேரளவாகவோஒவ்வொரு குற்றம் இருந்தாலும்ஒருவர் உடலுக்கு ஓத்தது இன்னொருவர் உடலுக்கு ஒத்து வராது.

 

     பித்தத்தையும் காய்ச்சலையும் நீக்கினும்தாது வளர்ச்சியைக் குறைக்கும் இஞ்சி சுக்குபோல ஒன்றிற்கு ஆவது இன்னொன்றிற்கு ஆகாது என்பதாலும்அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு ஆகும் என்பதாலும்எல்லாவற்றின் இயல்பையும் அறிந்துஎல்லா நிலைமைக்கும் ஏற்பஉடம்பிற்கு ஒத்த உணவை அளவாக உண்டு நோய் இன்றி வாழலாம்.

 

     ஆகமுன்னர் கூறியது போலவாதம்பித்தம்,சிலேத்துமம் என்னும் மூன்று கூறுகள் அளவாக இல்லாத போதுஒன்றுக்கு ஒன்று குறைந்தாலும்மிகுந்தாலும் நோய் உண்டாகும்.

 

     வள்ளல் பெருமான்உடம்பின் மேலே வெள்ளை அழுக்கும்கீழே மஞ்சள் அழுக்கும் தேங்காமல் காத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார். நமது உடம்பில் கீழே உள்ளது மஞ்சள் அழுக்கு என்னும் மலம். மலம் கழியாமல் இருந்தாலும் ஆபத்து. மார்புக்கு மேலே உள்ளது வெள்ளை அழுக்கு என்னும் கபம்கோழை. சளியானதுமார்ச்சளி ஆகிகபம் அல்லது கோழையாக மாறவிடக் கூடாது.

 

     அழுக்கினைத் தேங்காமல் காத்துக் கொள்வதுஉண்ணத் தக்க உணவினைகாலம்வயதுஇடம் அறிந்து கடைப்பிடிப்பதால் சாத்தியம் ஆகும். நமது வாழ்க்கை முறையும்நடைமுறையும் அதற்கு இடம் கொடுக்காமல் காத்துக் கொள்வது நலம்.

 

     "மலச் சிக்கல் பலச் சிக்கல்" என்பார்கள். வீழ வேண்டிய மலம்சலம் சிக்குவதாலும்மலசலத்தை அடக்குவதாலும் நோய் உண்டாகும் என்று மேலே கண்டோம். தக்க உணவு முறைகள்செயல்முறைகள் மூலம் மஞ்சள் மலத்தை நாள்தோறும் இருமுறை கழித்துக் கொள்ளுதல் வேண்டும்.

 

     உடம்பின் மேலே உண்டாகும் வெள்ளை மலம் என்னும்சளிகோழை அல்லது கபம் வராமல் காத்துக் கொள்ள வேண்டியது மிகமிக அவசியம். வந்தால் அதைஉரிய முறையில் போக்கிக் கொள்ள வேண்டியதும் மிகமிக அவசியம்.

 

     உடல் இயக்கத்திற்கு உண்ணப்பெறும் உணவைப் போலவே அறிவின் இயக்கத்திற்கு உண்ணவேண்டிய உணவும் உண்டு. அதனைத் திருவள்ளுவ நாயனார்"செவியுணவு"என்று கூறுகின்றார். வாய் உணவில் சுவை காண்பது போலவே செவியாலும் சுவை கண்டு உண்ணவேண்டும். அறிவுடைய வாழ்க்கை வாழ வேண்டும். செவிச் சுவை உணராதவர்வாய்ச்சுவை உணவு உண்பது பயனற்றுப் போகிறது.

 

     வாயால் உண்ணப்படுவது வாயுணவு. செவியால் உண்ணப்படுவது செவியுணவு எனப்படும் கேள்வி ஆகும். இந்தக் கேள்வியானதுகேட்கின்ற ஒருவன் கற்றவனாக இருப்பானாயின்அது அவனுடைய கல்வியை மேன்மேலும் வளரச் செய்யும். கேட்கின்றவன் கல்லாதவன் ஆயின்அவனுக்குக் கல்வி அறிவை உண்டாக்கும்.

 

     கேள்வி என்பது கற்றார்க்கும் கல்லாதார்க்கும் இன்றியமையாதது. பல நூல்களையும் முயன்று கல்லாமல்கற்று வல்லவரிடத்திலே கேட்டு அறிதலால்இது பெரும் செல்வம் ஆயிற்று.பிற செல்வங்கள் நிலையில்லாதன. துன்பத்தைத் தருவன.எனவே"செவியால் அனுபவிக்கப்படும் செல்வமானது சிறப்புடையதுஅதுவே செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலையானது" என்று நாயனார்,

 

"செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்,அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை".

 

என்னும் திருக்குறளின் வழி காட்டினார்.

 

     இத்தகைய தலையாய செல்வம் ஆகிய செவியுணவை அனுபவித்து உணராமல்வாயினால் உண்ணப்படும் உணவையே மதித்துப் போற்றுகின்றவர்களைமக்கள் என்று சொல்லாமல், "மாக்கள்" (விலங்குகள்) என்றார் நாயனார். இத்தகையவர்கள் இருப்பதால் என்ன நன்மைஇல்லாது போவதால் என்ன தீமைஎன்றும் வினாவை எழுப்பிநம்மை உய்த்து உணர வைக்கின்றார்.

 

     மேன்மக்கள் போல்,காதுகளால் அனுபவிக்கும் சுவையை அறியாதுவாயினால் உண்ணப்படும் உணவுகளின் சுவையையே அறிகின்ற கீழ்நிலை மாக்கள் இந்த உலகத்தில் இருந்தால் என்ன நன்மைஇறந்தால் என்ன தீமைஇரண்டும் ஒன்றே என்னும் விடை கிடைக்கும்.

 

     "மாக்கள்" என்றது மன உணர்ச்சி இல்லாதாரை. "மாவும் மாக்களும் ஐயறிவினவேமக்கள் தாமே ஆறறிவுயிரே" என்னும் தொல்காப்பயச் சூத்திரத்தின்படிக்கு இதனை உணராலம்.

 

"செவியில் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?"

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     உயிரியல் வாழ்க்கைக்கு உடல் ஒரு இன்றியமையாத கருவி ஆகும். உயிரின் வளத்தை மையமாகக் கொண்டே உடலியல் வாழ்க்கை அமைகிறதுஉலகியல் வாழ்க்கை உருவாகிறதுஉயிர் செழித்து வளரவும் உணவு தேவை. உடல் வளர்ச்சிக்குரிய உணவு ஒருபொழுது உண்பதில்லைஅடிக்கடி உண்ண வேண்டும். பசியை முற்றாக மாற்ற உணவால் முடியாது. பசித்து உண்பவர்க்கு மீண்டும் பசி வரும்.  ஆதலால்,உடல் இயக்கத்திற்குப் பயன்படும் உணவுசிற்றுணவு என்று கருதப்பெறும். இந்த உணவுக்குப் பசியை ஆற்றுகின்ற ஆற்றல் உண்டு. ஆனால் பசியை மாற்றுகின்ற ஆற்றல் இல்லை.

 

     ஆனால்செவி வழியாக உண்ணப்படும் உணவோ நல்ல உணவு. அது நாட்டில் எளிதாகக் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் செவிச் சுவை முழுதுமாகக் கைகூடுவதில்லை. நகைச்சுவையாகவும்ஜனரஞ்சகமாகவும் பேசப்படுகின்ற பேச்சுக்கள் காதுக்கு உணவாக அமைகின்றன. அவை மன நிறைவைஅறிவு நிறைவைத் தரமாட்டா. செவிக்குக் கிடைக்கின்ற நல்ல உணவுஉயிர் நிறைவைப் பெறத் துணை செய்யும். ஆனாலும்அதுவே நிறைவாகாது. வாயுணவும் செவியுணவும் உடல் வாயில்களான வாய் வழியாகவும்,செவி வழியாகவும் உண்ணப்பெறுவனஉயிர்நிறைவை நோக்கி நடத்தும் பயணத்திற்குத் துணை செய்வன. ஆனால் உயிருக்கு நேரடியான உணவாகா இவை. 

 

     உயிருக்கு உணவு இறைவன் திருவருளே ஆகும். உயிருக்கு உற்ற குறையை நீக்கநிறைநலம் வழங்கத் திருவருளாகிய உணவாலேயே இயலும். குறைவிலா நிறைவாழ்வான நல்வாழ்க்கையைதுன்பத் தொடர்பு இல்லாத நிறைவான இன்ப வாழ்க்கையை நேரடியாக வழங்கும் ஆற்றல் வாயுணவுக்கும் செவியுணவுக்கும் இல்லை. ஆயினும்இவை இரண்டும் இன்றி உயிர் நிறை நலம் பெறமுடியாது. இவையிரண்டின் துணையுடன் உலாவரும்போதே உயிர் தனக்குரிய உணவை உண்ண முயலவேண்டும்.

 

     எனவே திருவருளை நினைந்து வாழ்தலே உயிர் உண்ணுதற்குரிய உணவாகும். இறைவனை நினைத்தலின் மூலம் உண்ணும் உணவுஉயிர் உண்ணத்தக்க உணவாகும். இந்த உணவு குறைந்தால் துன்பம் வந்து விடாதுமிகுதியானாலும் துன்பம் வராது.

 

     இறைவன் திருவருளை உன்னி உன்னி எண்ணுதலை உணவு என்றே திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். உடலுக்கு இடும் உணவை உடல் ஏற்றுமுறையாகச் செரித்து உணவின் பயன்கொள்ளும்பொழுதுஉடல் நோய் இல்லாமல் வாழ முடிகிறது. உயிர் இறைவன் திருவருளை நினைந்து தவம் செய்தலின் மூலம் அத் திருவருளின் தன்மைகளைத் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளும்பொழுதுபிறவி எனும் நோயிலிருந்து விடுதலை பெறுகிறதுவாழ்க்கையின் பயனை உயிரானது பெற்றுவிடுகின்றது.

 

     உயிர் உண்ணும் உணவு என்பதுஇறைவன் திருவருள் என்றால்அந்த உயிர் திருவருளில் ஒன்றித் திளைத்துப் பயன் கொள்ளவேண்டும். உணவினால் உடலே பயன்பெறுகிறதுஉணவிற்குப் பயன் ஏதும் இல்லை. அதுபோலத் திருவருளால் உயிரே வளம் பெறுகிறதுஉயிருக்கே ஆக்கம் உண்டாகிறது. உயிருக்குத் திருவருளால் நன்மை. உயிரால் திருவருளுக்கு யாதொரு நன்மையும் இல்லை. அது அவசியமும் இல்லை.

 

     உயிருக்கு உணவாக அமைகின்ற திருவருளைப் பெறுகின்ற முறையில் பத்தி செய்து வந்தால்அந்தத் திருவருளாகிய உணவு உயிருக்குத் தடையின்றிக் கிடைக்கும். அதனால் உயிர் நலம் பெறும் என்கின்றார் திருஞானசம்பந்தர்.

 

இறைஊண் துகளோடு இடுக்கண்எய்தி,

            இழிப்புஆய வாழ்க்கை ஒழியத்தவம்

நிறைஊண் நெறிகருதி நின்றீர் எல்லாம்

            நீள்கழலே நாளும் நினைமின்,சென்னிப்

பிறைசூழ் அலங்கல் இலங்குகொன்றை

            பிணையும் பெருமான் பிரியாத நீர்த்

துறைசூழ் கடந்தைத் தடம்கோயில்சேர்

            தூங்கானை மாடம் தொழுமின்களே.

 

இதன் பொருள் ---

 

     குறைந்த உணவோடு பல்வகைத் துன்பங்களையும் எய்தி வருந்தும் இழிந்த வாழ்க்கை நீங்கதவமாகிய நிறைந்த உணவைப் பெறும் வழி யாது என மயங்கி நிற்கும் நீங்கள் அனைவரும்முடியில் பிறையைச் சூடியவரும்கொன்றை மாலை அணிந்தவரும் ஆகிய பெருமான் பிரியாது உறைவதாய்நீர்த் துறைகள் சூழ்ந்த கடந்தை நகரிலுள்ள பெருங்கோயிலாகிய தூங்கானைமாடத்தை நாளும் நினைந்து தொழுவீர்களாக.

 

     இறை ஊண் --- சிறிது உணவு. நிறை ஊண் --- நிறைவைத் தருகின்ற பேருணவு ஆகிய தவநெறி.

 

     வயிற்றுப் பசிக்கு உண்ணப்படுகின்ற உணவு. பசியை ஆற்றுவதற்கே பயன்படும். பசியை முற்றிலுமாகப் போக்கவதற்கு உணவு இல்லை. ஆனால்தவநெறி என்று சொல்லப்படுகின்ற பேருணவு உயிருக்கு நிறைவைத் தரவல்லது.

 

     உடல் நலத்திற்கு உண்போம். பசிக்குத் தான் உணவு. ருசிக்கு அல்ல. அறிவு நலத்திற்குத் தரமான கேள்வி உணவை உண்போம். உயிர் நலத்திற்குஇறைவன் திருவருளாகிய உணவைப் பெறுவோம்.

 

     தோத்திரப் பாடல்களாக இருந்தாலும்தேவார திருவாசகப் பாடல்களில் பொதிந்து உள்ள வாழ்வியல் உண்மைகளை உணர்ந்து ஓதிதெளிந்த நல்லறிவு பெற்றுத் திருவருள் பெறுவோமாக.

 

1 comment:

  1. New Vegas Sands Casino - SpiritUS Advising
    The Sands 우리 카지노 주소 Casino in Las Vegas is a 바카라 총판 양방 fully-managed, fully managed, fully operated, and fully operated casino hotel in Las 샌즈 카지노 먹튀 Vegas, 바카라 추천 사이트 Nevada. 온 카지노 먹튀

    ReplyDelete

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...