இறைவனது அருள் விளையாட்டு
-----
"ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்,
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்,
பருவங்கள் தோறும் பயன் பல ஆன,
திரு ஒன்றில், செய்கை செகம் முற்றும் ஆமே".
என்பது நமது கருமூலம் அறுக்க வந்து அவதரித்த திருமூல நாயனார் அருளிய திருமந்திரம்.
உலகப் படைப்பானது சிவசத்திகளுக்கு ஒரு விளையாட்டு. அதுதான், உயிர்களுக்குப் பந்தத்தை உண்டு பண்ணி, பின் வீடுபேற்றிற்கு உண்டான வழியைக் காட்டுகின்றது. இந்த இரண்டு நிலைகளாகிய பந்தம், வீடு ஆகியவற்றுக்கு இடையே, உயிர்களின் பக்குவத்திற்கு ஏற்ப, உயிர்களுக்கு படைப்பின் பயன் பல தரப்பட்டதாக இருக்கிறது. ஓர் உயிரானது திரு என்று சொல்லப்படும் வீடுபேற்றில் ஒன்றுமானால், அதன் அளவில் உலகப் படைப்பானது முடிந்து விடுகிறது. அந்த உயிரானது பிறவி வட்டத்தைக் கடந்து விடுகின்றது.
இதனை மணிவாசகப் பெருமான் தமது திருவாசகத்தில், "பந்தமும் வீடும் படைப்போன் காண்க" என்றும் "பந்தமுமாய் வீடும் ஆயினாருக்கு" என்றும் பாடிக் காட்டினார்.
இந்த அருள் விளையாட்டை, திருவாசகம் திருவெம்பாவையில் மணிவாசகப் பெருமான் மேலும் அழகாகத் தெளிவு படுத்திக் காட்டினார்....
"மொய்ஆர் தடம்பொய்கை புக்கு, முகேர் என்ன
கையால் குடைந்து குடைந்து, உன்கழல் பாடி,
ஐயா, வழிஅடியோம், வாழ்ந்தோம் காண், ஆர்அழல்போல்
செய்யா, வெண்நீறு ஆடி, செல்வா, சிறுமருங்குல்
மைஆர் தடம்கண் மடந்தை மணவாளா,
ஐயா, நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்,
உய்வார்கள் உய்யும் வகைஎல்லாம் உய்ந்து ஒழிந்தோம்,
எய்யாமல் காப்பாய் எமை, ஏல் ஓர் எம்பாவாய்".
இப்பாடலில், "ஐயா, நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்து ஓழிந்தோம்" என்பது சிந்தனைக்கு உரியது. தலைவனாகிய நீ உயிர்களை அடிமைகொண்டு, காத்து அருளும் திருவிளையாட்டினால், உய்தி பெறுவார் உய்யும் வகைகள் எல்லாவற்றாலும் பிழைத்து விட்டோம்,இனி நாங்கள் இளைத்து விடாதபடி எம்மைக் காத்து அருள்வாயாக என்பது இதன் பொருள்.
இதற்கு முன்பாக ஒரு சிந்தனை. திருவெம்பாவையில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் வரும் சொல்லாகிய "எலோர் எம்பாவாய்" என்பது பற்றியது. பொதுவாக, எல்லோருமே, "ஏலோர் எம்பாவாய்" என்று தான் பாடுகின்றனர். வெகுசிலர், "ஏலோ ரெம்பாவாய்" என்றே படிக்கின்றனர். இதுதான் பொருள் உணர்ந்து ஓதுகின்ற இலட்சணம்.
காய்கறிகளை உண்டு, சுவைத்து அனுபவிப்பதற்கு ஏற்றவைகளாக மாற்றுவது சமையல். ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாகத் திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். எந்தக் காயை எவ்வாறு திருத்துவது என்று அறிவது நல்ல சமையலுக்கு அடித்தளம். அவ்வாறே, பாடல்களில் வரும், ஒவ்வொரு பதத்தையும் பிரித்துப் படிக்க அறிந்து இருத்தல் வேண்டும். பிரிக்கப் படிக்கத் தெரியவில்லை என்றால், பொருள் உணர்வது கூடி வராது. நானும் பொருள் பிரிக்கின்றேன் என்று முயன்று பார்ப்பவர்களும் உண்டு. அது சரியா தவறா என்பதை உணராதவர்கள், அப்படிப் படிப்பவர் மேல் கொண்ட அபிமானத்தால், அவரைப் புகழ்வதும், அவர் மீது கொண்ட வெறுப்பால், இவரை இகழ்வதும் உண்டு.
எனது முன்னிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த, ஒரு திருவாசக முற்றோதல் நிகழ்வின்போது, என்னை விட வயதில் பெரியவர் ஒருவர், "அப்பொருளாம் நஞ்சிவனைப் பாடுதும் காண் அம்மானாய்" எனவரும் பாடல் வரியினை, "அப்பொருளாம் நஞ்சு இவனைப் பாடுதும் காண் அம்மானாய்" என்று பதம் பிரித்து அழகாகப் பாடினார். மோகனம் என்னும் இராகத்தில் அவர் பாடினது அழகாகத் தான் இருந்தது. ஆனால் அவத்தமான பொருளை அது தந்து நின்றது. அவர் பாடி முடித்ததும், நான் குறுக்கிட்டு, "நீங்கள் பதச் சேதம் எதுவும் செய்ய வேண்டாம். அப்படியே பாடுங்கள்" என்றேன். "இதிலேயும் தப்பு வந்ததா?"என்றார்.
"நஞ்சிவனை" என்னும் சொல்லை, கீழோரைக் குறிப்பதானால், "நஞ்சு இவனை" என்று சொல்லலாம். ஆனால், திருவாசகத்தில் இறைவனைக் குறித்து வந்த இந்தச் சொல்லை, "நம் சிவனை" என்று பிரித்துப் படிப்பதே பொருத்தம் உடையது. தாம் பாடியதன் பொருளை அவர் உணரவில்லை. அதனால் பிழை நேர்ந்தது. இதனை நான் விளக்கிய பின்னர்,அவர் மட்டுமல்லாது, அந்த நிகழ்வில் இருந்தோர் அனைவரும் தெளிந்து கொண்டனர். இதுதான், "சொல்லிய பாட்டின் பொருளை உணர்ந்து சொல்லுதல்" என்று மணிவாசகப் பெருமான் காட்டியது. பாட்டின் பொருளை மட்டுமல்ல, பாட்டின் பொருளாக உள்ள இறைவனையும் உணர்ந்து பாடுவதே சிறந்தது என்பதை அறிதல் வேண்டும்.
திருவெம்பாவைக்கு உரை வடித்த பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்கள் தமது 18.1.1953தேதியிட்ட பதிப்பில் பின்வருமாறு காட்டியுள்ளார்கள் என்பது சிந்தனைக்கு உரியது....
"திருப்பாட்டுக்களின் ஈறுதோறும் வரும், "ஏலோ ரெம்பாவாய்" என்னும் தொடர்க்கு, 'எங்கள் பெண்ணே! யாம் கூறுவதை ஏற்றுக்கொள், ஆராய்ந்து பார்' என்று பொருள் கூறி, எழுப்பப்படுபவள் மேல் ஏற்றி விளியாகவும், ஏவலாகவும் கூறுதல் ஈண்டும், இன்னும் சில திருப்பாட்டுக்களில் கன்னி ஒருத்தியை முன்னிலைப் படுத்துக் கூறும் இடங்களிலும் பொருந்தும். ஆயினும், எல்லாத் திருப்பாட்டுக்களிலும் பொருள் முடிபோடு இயைவது அன்று"
பண்டிதமணி அவர்களின் உரை விளக்கத்தின்படி, "ஏல் ஓர் எம்பாவாய்" என்று பொருந்தும் இடங்களில் கொள்ளவேண்டும், . எல்லாப் பாட்டுக்களுக்கும் பொருந்தாமை அறிக.
ஆனாலும், பின் வந்த பெரியோரில் சிலர், இதனை எல்லாப்பாட்டுக்கும் கொள்ளலாமாகக் கூறி வந்ததையும் யாம் அறிவோம். முன்பின் அறியாத சிலர், 'வேறு யாருமே இவ்வாறு பொருள் கொள்ளவில்லை, இவர் ஒருவரே அருமையாக இவ்வாறு கூறினார்' என்று ஏற்றம் கூறி, தம்மைத் தாமே ஏமாற்றம் கொள்ள வைத்தமையும் சைவ உலகத்தில் உண்டு. இவையெல்லாம், பொருள் உணர்ந்து ஓதாமையின் விளைவே. "ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும்" என்று திருவள்ளுவ நாயானர் காட்டினார். ஓதுவது உணர்வதற்காகவே என்பது தெளிவாகும். "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். எனவே, ஓதுவதும், உணர்வதும் ஆகிய இரண்டும் ஒருங்கே நிகழவேண்டும்.
நிற்க, உயிர்களைப் படைத்தும், காத்தும் ஒடுக்கியும் மறைத்தும் அருளுதல் என்பது இறைவனுக்கு ஒரு திருவிளாயாட்டுப் போலும் எளிமையான செயல் என்பதால் அதனை விளையாட்டு என்றார். உயிர்களுக்கு கட்டுநிலையில் சொர்க்காதி போகமும் பதமுத்திகளும், முத்தி நிலையில் வீடு பேற்றை அருளுவதும் இறைவன் திருவிளையாட்டு.
இறைவன் கருணையானது, இடைவிடாது பெய்யும் மழை நீரைப் போன்றது. மழையானது மேட்டு நிலத்தில் தங்காது,பயனும் விளையாது. பள்ள நிலத்தில் பாய்ந்து பயன் விளைக்கும். அதுபோல, இறைவன் பொழியும் அருள் அமுதத்தை, தூய்மை பெறாத மேட்டு நிலமாகிய உள்ளம் கொண்டோர் பயன் கொள்ளாமல் விட்டு ஒழிக்கவும், பள்ளம் போன்ற தூய்மை பெற்ற நெஞ்சினை உடையோர் பயன்பெறுவதும் நிகழும். அதனாலேயே, "பள்ளம் தாழ் உறு புனலில் கீழ்மேலாகப் பதைத்து உருகும் அவர்" என்றும் சுவாமிகள் காட்டினார்.
திருவெம்பாவையில் அடுத்த பாடல்.....
"ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்து ஆடும்
தீர்த்தன், நல்தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும்
கூத்தன், இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும், படைத்தும், கரந்தும் விளையாடி,
வார்த்தையும் பேசி, வளைசிலம்ப, வார்கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய, அணிகுழல் மேல் வண்டுஆர்ப்ப,
பூத் திகழும் பொய்கை குடைந்து,உடையான் பொற்பாதம்
ஏத்தி, இரும்சுனை நீர் ஆடு ஏல், ஓர், எம்பாவாய்".
முன் பாடலில், மக்களை ஆட்கொண்டு அருளுதல், இறைவனுக்குத் திருவிளையாட்டு ஆகும் என்பதைக் காட்டிய சுவாமிகள், இந்தப் பாடலில், "இவ்வானும் குவலயமும் எல்லோமும் காத்தும், படைத்தும், கரந்தும் விளையாடி" என்றார். 'மக்களே அல்லாமல், விண்ணுலகம், மண்ணுலகம் முதலிய எல்லா உலகங்களையும் படைத்தல் முதலிய தொழிலில் படுத்துதுல் இறைவனுடைய அருள் விளையாட்டே' என்று காட்டினார். காணப் படாத பொருள்களைப் படைத்து காட்டுதலும், காட்டியவற்றைச் சிலகாலம் நிலைபெறச் செய்தலும், பின் மறையச் செய்தலும் ஆகிய வித்தையானது, கட்டுநிலையில் உயிர்களை உடல் முதலியன படைத்து வெளிப்படச் செய்வதற்கும், வினைக்கு ஏற்ப வரையறுக்கப்பட்ட காலம் வரை அவற்றை நிலைபெறுத்துதற்கும்,பின் ஒடுக்கி மறைத்தற்கும் ஆகிய தொழில்கள் இறைவனுக்கு விளையாட்டு.
"விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே" என்பார் வள்ளல் பெருமான்.
ஆடல்வல்லான் செய்யும் அருள்விளையாட்டைக் குறித்து, "உண்மை விளக்கம்" என்னும் மெய்கண்ட சாத்திர நூலில் பின்வருமாறு காட்டப்பட்டது....
"மாயைதனை உதறி, வல்வினையைச் சுட்டு, மலம்
சாயஅமுக்கி, அருள்தான் எடுத்து - நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்
தான், எந்தையார் பரதம் தான்".
உயிர்களைப் பற்றி உள்ளவை ஆணவம், மாயை, கன்மம் என்னும் மூன்று மலங்கள். பக்குவப் பட்ட ஆன்மாக்களின் உணர்வில் இருந்துமுதலில் மாயா மலத்தை நீங்கச் செய்து, பின்பு அவ்வுயிரைத் தொடரும் வலிய கன்மமலத்தைச் சுட்டு எரித்து,அதன் பின்னர் மூலமலம் ஆகிய ஆணவமலத்தை, அதன் ஆற்றல் கெடும்படி மெலிவித்து அடக்கி, ஆன்மாவானது இதுவரை பிறப்பு இறப்புக்களில் சுழன்று வந்த அந்த நிலையில் இருந்து எடுத்து,அருள் நிலையில் வைத்து, தனது பெருங்கருணையினால், பேரின்பக் கடலில்அவ்வுயிரை அழுந்தும்படி செய்தலேஎமது தந்தையாகிய சிவபெருமான்திருச்சிறம்பலத்தில் இயற்றும் திருக்கூத்து ஆகும்.
அம்பலவாணப் பெருமான் தனது திருக்கரத்தில் துடியை அசைத்தல் என்பது,பக்குவம் எய்திய உயிரின் உணர்வில் இருந்து மாயையை உதறி விலக்குவது ஆகும். நெருப்பை ஏந்தியுள்ள திருக்கை,அவ்வுயிரைத் தொடரும் வலிய வினையைச் சுடுவதாய் இருக்கும். ஊன்றிய திருவடி ஆணவமலத்தை வலிகெட்டு நிற்கச் செய்வதாகும். எடுத்த திருவடி பிறப்பு இறப்புக்களில் சுழன்று வந்த அவ்வுயிரை அந்நிலைகளினின்றும் உயர்த்தி அருள் நிலையில் வைப்பதாகும். எடுத்த அத்திருவடியின் வளைவும், அதனைக் காட்டி நிற்கும் வீசிய கையும், யான் எனது என்னும் செருக்கு அற அடங்கி நில் என்னும் பொருள்பட அமைத்த திருக்கையும் உயிரைப் பேரின்பத்தில் அழுத்தும் குறிப்பு உடையவை ஆகும்.
ஆக, ஒருவன் ஒருத்தியாக சிவமும் சத்தியும் விளையாடும் விளையாட்டானது, உயிர்களுக்குப் பந்தத்தைக் கொடுத்து, வீட்டைக் காட்டும் "அருள் விளையாட்டு" ஆகும்.