நாளும் கோளும் என்ன செய்யும்?!

 


     

நாளும் கோளும் என்ன செய்யும்?

-----

 

     மனிதனாகப் பிறந்தவன் வாழ்கிறான்சாகிறான். சாவது மிகப் பெரிய துன்பம். "சாதலின் இன்னாதது இல்லை" என்றார் திருவள்ளுவ நாயனார். வாழும்போதும் ஒவ்வொரு நாளும் துன்பத்தையே அனுபவிக்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். எத்தனை துன்பத்தை அனுபவித்தாலும் வாழ்க்கையில் சலிப்பு உண்டாவதில்லை. தினந்தோறும் நம் உடம்பில் இருக்கிற நோய்களால் துன்புறுகிறோம்! நோய்க்கு இடமாக உள்ள இந்த உடம்பை ஒழித்து விடலாம் என்று யாரும் நினைப்பதும் இல்லை. காரணம்துன்பத்தை அவர்கள் விரும்புகிறார்கள் என்பது அல்ல. நாளைக்கு ஒருகால் இந்தத் துன்பம் நீங்கி இன்பம் வரும் என்ற நம்பிக்கையினால் அவர்கள் வாழ்கிறார்கள். 

 

     நம்பிக்கைதான் வாழ்க்கைக்கு அடிப்படை.  நம்பி நம்பி இன்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மனிதனுக்கு முன்வாழ்நாள் முடிவு வரும் காலத்தில் இயமன் வந்து நிற்கிறான்.  இறப்பைக் கண்டு அஞ்சுபவர்கள் பலர். தமக்குக் கிடைத்துள்ள இன்பத்தின் மீதுள்ள ஆழ்ந்த பற்று காரணமாஇயமன் வரும்போது அச்சம் உண்டாகின்றது. மிகவும் அருமையான பொருள் ஒன்றைப் பற்றிக் கொண்டவன்சற்று அசைந்தாலும் அது போய்விடுமோ என்று அஞ்சுவான். குழந்தை சற்றே வெளியில் போனாலும் அதற்கு ஏதேனும் ஊறுபாடு உண்டாகுமோ எனத் தாய் அஞ்சுவதுஅவளுக்கு குழந்தையிடத்தில் உள்ள பற்றுக்கு அறிகுறி. 

 

     இறைவன் திருவருளைப் பெற்றாலும்,இயமன் வரும் வேளையில் துன்பம் உண்டாகுமோ என்று அஞ்சுவதற்குக் காரணம் தாம் பெற்ற அனுபவத்திலுள்ள பெரும் பற்று.  ஒவ்வொரு நாளும் மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் கலந்தே வருகின்றன. ஆனால் பொதுவாக மனிதர்களைக் கேட்டால்துன்பமே மிகுந்து இருப்பதாகவே சொல்லுவார்கள். இன்பதுன்பங்கள் கலந்தே வருகின்றன. குழந்தை இறந்துவிட்டது என்று துன்பப்படுகிறார்கள். அதை அடக்கம் செய்துவிட்டு வந்து சாப்பிடுகிறார்கள். சாப்பிடும்போது பசி தீருகிறது. பசி தீருவதும் ஒருவகை இன்பமே. குழந்தை இறந்துவிட்ட துன்பத்திற்கு இடையே பசி தீருகிற இன்பம் வருகிறது. துன்பம் மிகுதியாக இருப்பதனால் பசி தீருகிற இன்பம் மறைந்து விடுகிறது. எனவேதுன்பம் மிகுதியாக இருப்பதனால் மனித வாழ்க்கையே துன்பம் தருவது என்று சொல்கிறார்கள். 

 

     ஆனால்இந்த மானிட வாழ்வில் எப்போதும் இன்பமாக உள்ள நிலை ஒன்றைப் பெறலாம் என்று அடியவர்கள் சொல்கிறார்கள். இறைவன் திருவருளைப் பெற்றால்இப்போது அனுபவிக்கின்ற சுகத்திற்கும் துக்கத்திற்கும்  அப்பாலுள்ள ஒருவகை இன்பம் உண்டாகும். ஆனால்அந்த இன்பம் இந்திரிய நுகர்ச்சிக்கு அப்பாற்பட்டது. நாம் நினைக்கிற இன்பங்கள் எல்லாம் ஐந்து இந்திரியங்களின் வாயிலாக வருகின்றவை. ஐந்து பொறிகளின் வாயிலாக மனத்தில் இன்ப துன்பங்கள் சாருகின்றன. நாம் பெறுகின்ற துன்பங்களுக்கு அளவு கருவி ஐந்து இந்திரியங்கள். இறைவன் திருவருளால் கிடைக்கிற இன்பம் பொறி புலன்களுக்கு அப்பால் இருப்பதனால் அந்த இன்பத்தை நமக்குத் தெரிந்த அளவைகளால் அளக்க முடியாது. வாழ்க்கையில் இன்பம் கிடைக்கும்போது நாம் பல நல்ல காரியங்கள் செய்ததனால் கிடைத்தது என்று எண்ணுகின்றோம். துன்பம் வந்தால் அதற்கு என்ன காரணம் என்று ஆழ்ந்து ஆராய்ச்சி செய்து பார்த்துபெரும்பாலும் பிறரைக் காரணமாகச் சொல்லத் துணிகிறோம். இந்த இரண்டு வகையான நினைவுகளும் ஊழ்வினையால் நிகழ்கின்றன 

 

     ஒருவன் நம்மை அடிக்கிறான். நம்மை அடிப்பது கை என்றாலும் அவன் அடித்தான் என்று சொல்கிறோம். அவன் தனது கையைக் கருவியாகக் கொண்டு அடிக்கிறான். அவன் கை அடிப்பதை மாத்திரம் தெரிந்து கொண்டு அந்தக் கையைக் கொண்டவனைத் தெரியாமல் இருப்பது அறியாமை. அவன் கை அடிக்கவில்லைஅவனே கையாகிய கருவியால் அடிக்கிறான் என்று தெரிந்து கொள்வது போலவேஅவனைக் கருவியாகக் கொண்டு நம்மை அடிப்பது வேறு ஒன்று உண்டு என்று உணரவேண்டும். அதுதான் நாம் முற்பிறவியில் செய்த தீவினை.

 

     பகுத்தறிவு உடையவர்கள் என்று சொல்லிக் கொள்கிற நமக்கு நாய்க்கு இருக்கும் அறிவுகூட இல்லை. நாய் ஒடும்போது ஒருவன் கல்லை எடுத்து அடிக்கிறான். கல் நாயின்மேல் பட்டு அதற்குத் துன்பத்தை விளைக்கிறது. அதற்காக நாய் கல்லைக் கடிக்கப் போவதில்லை. கல்லை வீசி எறிந்தவனைப் போய்க் கடிக்கிறது. அந்த அறிவு நமக்கு இல்லை.


     பெரியவர்கள் விதி என்று சொன்னதற்கும்நாம் இப்போது விதி என்று சொல்வதற்கும் வேறுபாடு உண்டு. முயற்சி எதுவும் இன்றிச் சோம்பலில் மூழ்கி எதையும் விதியின் தலையில் போட்டுவிட்டுத் தப்பப் பார்க்கிறோம். நன்மை ஏற்படும்போது யாரும் தலைவிதி என்று சொல்வது இல்லை. "எனக்கு இலாபம் கிடைத்தது எனது தலை விதிஎனக்கு நன்மை நடந்தது எனது தலைவிதி"   என்று பலரும் சொல்வது இல்லை. ஆனால் தீமை ஏற்படும்போது"தலைவிதிஎன்று நொந்து கொள்கிறோம்.  'நம்மை அவனா அடித்தான்அவனைக் கருவியாகக் கொண்டு நம் விதி அல்லவா அவனை அடிக்கத் தூண்டியதுநம்முடைய விதி கர்த்தாஅவன் கருவி என்னும் மனோபாவம் வந்தால் அவன்மேல் கோபம் வராது. எனவேநமக்குத் துன்பம் வரும்போதும் நன்மை வரும்போதும் விதியால் ஏற்பட்டவை என்று நினைக்கச் சொல்லிக் கொடுத்தார்கள் நமது பெரியவர்கள். 

 

     கடமையைச் செய்யாமல் விதியைக் காரணமாகச் சொல்கிறவன் சமுதாயத்துக்கும் இறைவனுக்கும் துரோகம் செய்கிறவன் ஆவான். அவன் தான் அடைந்த துன்பத்திற்குக் காரணமென்று பிறரிடம் வெறுப்புக் கொள்ளாமல்தன்னுடைய விதியினால் ஏற்பட்டது என்று நினைத்தால்இனி நல்ல காரியங்களைச் செய்ய முயல்வான்.

 

     நன்மையோதீமையோ முந்திய ஊழ்வினையினால் விளையும் எனக் கருதி இறைவன் திருவருளைப் பெற முயலவேண்டும். இறைவன் திருவருள் பலம் இருந்தால் விதியினால் உண்டாகின்ற துன்பத்தின் உறைப்பு நமக்கு இராது. அப்படி இல்லாமல்இனி என்ன நடக்கும் என்று சோதிடம் பார்த்துதுன்பமாக இருந்தால் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இன்பமாக இருந்தால் கர்வப்படுகிறோம். 

 

     வாழ்க்கையில் உண்டாகின்ற இன்பதுன்பங்களைச் சொல்வது சோதிடம். கடமையிலிருந்து சிறிதளவும் வழுவாத மக்கள் இன்ன இன்ன காரியங்களைஇன்ன இன்ன காலங்களில் செய்ய வேண்டுமென்று வரையறுத்து இருந்தார்கள். அந்த கால நியதியைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக வான நூலாகிய சோதிடத்தை எழுதி வைத்தார்கள். வேதத்திற்கு அங்கங்கள் ஆறு. சோதிடம் வேதத்தின் கண் என்பார்கள். வேதத்தில் விதித்த கர்மாக்களை நன்கு செய்வதற்குரிய காலத்தைத் தெரிந்து கொள்வதற்குப் பஞ்சாங்கத்தைக் கணித்தார்கள்.

 

     காலக் கணக்கைத் தெரிந்து கொண்டு காரியங்களை வழுவாமல் செய்த மக்கள் மிகுதியாக இருந்தபோதுகாலத்தை நிர்ணயிக்கும் பஞ்சாங்கத்துக்கு மதிப்பு இருந்தது. வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டு என்ற ஆசை பிற்காலத்தில் வளர ஆரம்பித்தது. 

 

     சோதிடம் சொல்பவர்கள் நாளையும் கோளையும் பார்க்கிறார்கள். நாளும் கோளும் என்று சேர்த்துச் சொல்வது ஒரு மரபு. நாள் என்பது இருபத்தேழு நட்சத்திரங்களைக் குறிக்கும். கோள் என்பது கிரகம். இருபத்தேழு நட்சத்திரங்களும் பன்னிரண்டு இராசிகளில் அடங்கும். ஒன்பது கிரகங்கள் இந்தப் பன்னிரண்டு இராசிகளில் சஞ்சாரம் செய்கின்றன. அப்படிச் செய்வதனால் அந்த அந்த நட்சத்திரங்கள் அந்த அந்தக் காலங்களில் உரியவர்களுக்குச் சிலவகையான பலன்களை உண்டாக்கும் என்று கூறுகிறார்கள். கிரகங்கள் இராசிகளில் சஞ்சாரம் செய்வதைக் "கிரகசாரம்" என்று சொல்வார்கள். ஒருவருக்கு ஏதேனும் துன்பம் வந்தால், "என்னுடைய கிரகசாரம்என்று சொல்வதை இக்காலத்தில் கேட்கிறோம். 

 

     நாம் செய்த பண்டை வினையின் பயனாக இந்தப் பிறவியில் இன்பதுன்பங்கள் விளைகின்றன. நம்முடைய பழைய வினைக்கு ஏற்ப நாளும் கோளும் அமைகின்றன என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. அதனாலேதமக்கு வருகிற இன்பதுன்பங்களை முன்கூட்டியே நாளைக் கொண்டும் கோளைக் கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்று மக்கள் நம்புகிறார்கள். 

 

     இறைவனிடத்தில் நம்பிக்கை உடையவன் சோதிடம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. கிரகங்களின் போக்கை முன்னால் தெரிந்து கொண்டு,அவற்றால் நமக்கு வருகின்ற துன்பத்தைப் போக்கிக் கொள்ளக் கிரக சாந்தி செய்யலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். கிரகங்களுக்குச் சாந்தி பண்ணுவதைவிடகிரகங்களுக்கு எல்லாம் தலைவனாக இருக்கிற இறைவனையே சரணாகதி அடைந்துவிட்டால்அந்தக் கிரகங்களால் நமக்கு என்ன தொல்லை விளையாது. இன்ன கிரகத்திற்கு இன்னபடி சாந்தி செய்ய வேண்டும் என்பதை சாந்தி இரத்தினாகரம் முதலான நூல்களில் இருந்து நன்கு அறிந்து நமக்கு யாராவது சொல்ல வேண்டும். நூலில் நுட்பமாகச் சொல்லியிருக்கிறபடி நடந்தால் நமக்கு ஒருகால் கிரகத்தினால் விளையும் துன்பங்கள் குறையலாமே தவிர தீராது. ஆனால்அவ்வளவு நுட்பமாகக் கணித்துச் சொல்பவர்கள் மிகவும் அரிதாகவே உள்ளனர். எல்லாவற்றுக்கும் பரிகாரமாக இறைவனுடைய துணை நமக்கு இருக்குமானால் எந்தக் கிரகம் எப்படி வந்தாலும் அதனால் விளையும் துன்பம் நமக்குக் குறைந்துவிடும். 

 

      எதற்கெடுத்தாலும பரிகாரம் பரிகாரம் என்று சொல்லுகின்றார்கள். அதைக் கேட்டு நாமும் அலைகின்றோம். அருணகிரிநாதப் பெருமான் வினையாலும் அந்த வினையின் விளைவைத் தருவனவாக நினைக்கின்ற நாளினாலும் கோளினாலும் வருகின்ற துன்பங்களுக்கு நல்லதொரு பரிகாரத்தை அருளிச் செய்து உள்ளார். முருகனுடைய திருவருள் இருந்தால்அவற்றால் அச்சம் கொள்ள வேண்டாம் என்று உறுதி கூறுகிறார். முருகப் பெருமான் தன்னுடைய திருக்கோலத்தை எனக்குக் காட்டினால் நாள் என் செயும்வினை தான் என் செய்யும்கோள் என் செயும்கொடும் கூற்றுவன் என் செய்வான்?' என்று கேட்கிறார். 

 

"நாள்என் செயும்?வினை தான்என் செயும்?எனை நாடிவந்த 

கோள்என் செயும்?கொடுங் கூற்றுஎன் செயும்குமரேசர்இரு 

தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் 

தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே".

 

என்று கந்தர் அலங்காரத்தில் பாடி அருளினார்.

 

     உலகில் பிறந்து வாழ்கின்ற மக்களுக்கு நாள்கோள்வினைகொடுங்கூற்று (இயமன்) ஆகிய நான்கின் வாயிலாகத் துன்பம் உண்டாகின்றன. முதல் மூன்றும் மனிதன் வாழ்கின்ற காலத்தில் துன்பத்தை உண்டாக்குகின்றன. வாழ்க்கையின் முடிவில் கொடுங்கூற்று துன்புறுத்துகிறது. வாழ்வு முடிவுறும்போது உயிரைக் கொண்டு போவதற்கு வருகிறான் கூற்றுவன். முதல் மூன்றுக்கும் நாள்கோள்வினை என்று அடைமொழி எதுவும் இன்றிச் சொன்னார். நான்காமவனாகிய கூற்றுவனைகொடுங்கூற்று என்று சொன்னார் அருணகிரிநாதர். 

 

     அந்தக் "கொடும்"என்ற சொல்லை முதல் மூன்றுக்கும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை இலக்கணம் அறிந்தோர், "இடைநிலைத் தீவகம்" என்பர். "கொடும்" என்ற சொல் நடுவில் நின்று நாள்வினைகோள் என்று முன் உள்ளவற்றோடும்கூற்று என்று பின் உள்ளதோடும் இயைகிறது. நாளிலும் கோளிலும் இருவகை உண்டு. நல்ல நாளும்பொல்லாத நாளும். நல்ல கோளும்பொல்லாத கோளும் உண்டு. அப்படியே வினையிலும் நல்ல வினையும்தீய வினையும் உண்டு. நாள்கோள்வினை ஆகியவற்றில் நல்லவற்றால் மனிதனுக்கு இன்பமே விளைகிறது. மனிதன் நல்ல நாளைக் கண்டு அஞ்சுவது இல்லை. நல்ல கோளையும்,நல்ல வினையையும் கண்டும் அஞ்சுவது இல்லை. அவன் கொடிய நாளையும்கொடிய கோளையும்கொடிய வினையையும் கண்டு அஞ்சுகிறான். 

 

     என்னை நாடிவந்த கோள் என் செயும்என்கிறார் அருணகிரிநாதர். எல்லோருக்கும் பொதுவாகக் கிரகம் இருந்தாலும் அதனுடைய சாரம் ஜாதகனின் நாளுக்கு ஏற்றபடி இன்பதுன்பங்களைச் செய்கிறது. அந்தக் கிரகம் அவனை நாடி வந்து பயனைக் கொடுப்பது போலத் தோற்றுகிறது. 

 

     கிரகங்களால் வாழ்க்கையில் நன்மை தீமைகள் உண்டாகின்றன என்று நினைப்பதற்கே ஒருவகை நம்பிக்கை வேண்டும். சூரியன் முதலிய கிரகங்களால் நம்முடைய வாழ்க்கையில் இன்பதுன்பங்கள் உண்டாகின்றன என்று நம்பியே சோதிடத்தைப் பார்க்கிறோம். அந்த நம்பிக்கையைப் பின்னும் மிகுதியாக்கிஎம்பெருமான் திருவருள் இருந்தால் கிரகங்களால் விளைகின்ற துன்பங்கள் நமக்கு வாரா என்று நினைத்துக் கொள்ளலாம். அப்படி நினைப்பதைத்தான் அருணகிரிநாதர் நமக்கு இந்தப் பாட்டில் கற்றுக் கொடுக்கிறார். 

 

     நவக்கிரகங்களைப் பற்றித் தெரிந்து கொள்வாரிடம் சோதிடம் கேட்பதை விடநவக்கிரகங்களை மறந்து இறைவனையே வழிபட்டுச் செம்மாந்து இருக்கலாம் என்பதே அருணகிரிதாநப் பெருமான் காட்டும் நெறி. 

 

     மன த்திண்மை இல்லாமல் மனம் போனபடி எல்லாம் பொறிகளைச் செல்லவிட்டுஉலகியல் அநுபவத்தைப் பெறுகின்ற மனிதன்இறைவன் திருவருளைப் பெற வேண்டும் என்று விரும்பினால் பல காலம் முயற்சி செய்ய வேண்டும். மனமானது ஒரு நிலையில் இராமல் அலைய அலையத் துன்பம் மிகுதியாகின்றது. பொறிகள் சிதறுண்டு செல்வதற்குக் காரணம் மனமே. அந்த மனத்தை ஒருமுகமாக நிறுத்துவதற்கு இறைவனுடைய திருக்கோலத் தியானம் அவசியம். முருகப் பெருமானுடைய திருக்கோலத்தை எண்ணி மனத்தை ஒருமுகப் படுத்தி வழிபடும் நிலை உண்டானால்,மனத்திற்குத் திண்மை ஏற்படும். அந்தத் திண்மைவாழ்க்கையில் உண்டாகின்ற துன்பங்களுக்கு அஞ்சாத நிலையை உண்டாக்கும் நாளுக்கும்கோளுக்கும்வினைக்கும் சிறிதும் தளர்வு அடையாத நிலையை உண்டாக்கும். 

 

     பாண்டி நாடு சமணர்களால் நிலைகுலைந்து இருந்த காலத்தில் அந்த நாட்டை ஆண்ட கூன்பாண்டியன் சமணர் சமயச் சார்பிலே நின்றான். சமணர்கள் அரசனைக் கைவசப்படுத்தித் தங்கள் சமயத்தின் பெயரால் சைவ சமயத்தினருக்குத் துன்பத்தை உண்டாக்கி வந்தார்கள். கூன்பாண்டியனுடைய மனைவியாகிய மங்கையர்க்கரசியாரும்அமைச்சர் குலச்சிறையாரும் திருஞானசம்பந்தப் பெருமானைப் பாண்டி நாட்டுக்கு அழைத்து வரவேண்டும் என்று விரும்பினார்கள். இக்காலத்தில் வேதாரணியம் என்று வழங்கப் பெறுகின்ற திருமறைக்காட்டில் திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளி இருந்தபோது தூதுவர்களை அனுப்பித் தம்முடைய விருப்பத்தைத் தெரிவித்தார்கள். 

 

     அடியவர்கள் என்றால் பிறர் துன்பத்தைக் கண்டலும்கேட்டாலும் இதயம் நெகிழ்கின்ற தன்மை இருக்கவேண்டும். இதயம் நெகிழ்ந்த திருஞானசம்பந்தர் பாண்டி நாடு புறப்படச் சித்தமானார். உடன் இருந்த அப்பர் சுவாமிகள்சிறு குழந்தையாகிய திருஞானசம்பந்தப் பெருமான் மீது வைத்த பேரன்பு காரணமாக"சமணர்கள் மிகப் பொல்லாதவர்கள். அவர்கள் செய்த வஞ்சனையை நான் அறிவேன். அவர்களிடத்தில் அகப்படக் கூடாது. நாளும் சரியாக இல்லை. நான் போய் வருகின்றேன்"என்றார். இறைவனுடைய திருவருளைப் பெற்ற திருஞானசம்பந்தப் பெருமான் அதற்குச் சிறிதும் அஞ்சவில்லை. "பரசுவது நம்பெருமான் கழல்கள் என்றால்பழுது வந்து அணையாது" என்று சொல்லுவது பெரியபுராணம். "எம்பெருமானுடைய திருவருள் இருக்கும்போது நாள்களும் கோள்களும் நமக்குத் துணை செய்யும். அவற்றால் நமக்கு எத்தகைய துன்பமும் வராது" என்று "வேயுறு தோளிபங்கன்" எனத் தொடங்கும் ஒரு திருப்பதிகத்தையே விளக்கமாகப் பாடி அருளினார். அதற்குக் "கோளறு திருப்பதிகம்" என்று பெயர். "இறைவன் என்னுடைய உள்ளம் புகுந்த அதனால்,எனக்குக் கோளினாலே எந்த விதத் துன்பமும் இல்லைஎன்று தெளிவித்துப் பாண்டி நாடு புறப்பட்டார். 

 

     இத்தகைய நிலை அடியார்களுக்கு உண்டாகும். "சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன் சேயவன் புந்தி தடுமாறவே தரும் சேதம் இன்றே” என்று கந்தர் அந்தாதியிலும் அருணகிரியார் முருகனை நம்பினவர்களுக்கு நவக்கிரகங்களால் வரும் துன்பம் இல்லை என்று பாடியிருக்கிறார். 

 

     இத்தகைய மனத்திண்மை வரவேண்டுமானால் மனத்தை உலகியல் புயலுக்கு ஆட்படுத்தாமல்முருகப் பெருமானுடைய திருக்கோலத்தை நினைக்கின்ற இடமாகஅவன் எழுந்தருளி இருக்கும் சிங்காதனமாக ஆக்க வேண்டும். மனம் என்னும் பாழறையைஇறைவன் எழுந்தருளுகின்ற பள்ளி அறையாக மாற்றவேண்டும். இறைவன் திருக்கோலத்தை மனத்திலே அடிக்கடி நினைத்துப் பார்த்துப் பழகினால் அந்தத் தியானம் முறுகும் பார்க்கும் இடங்களில் எல்லாம் அவன் தோற்றம் தோன்றும். இத்தகைய சிறந்த நிலை வந்தவர்களுக்கு வினையினால் வருகின்ற துன்பம் தெரியாமல் போய்விடும்.

 

     எல்லாத் துன்பங்களுக்கும் தலையாய துன்பமாக வாழ்வின் முடிவில் கூற்றுவன் வரும்போது அந்தத் துன்பத்தைப் போக்குவதற்கு வழி என்னஅப்போது குமரேசரின் தாளும்தோளும்சண்முகமும் முன்னே வந்து தோன்றும். அவனுடைய திருக் கோலம் முழுவதும் தோன்றினால் கூற்றுவனால் வருகிற துன்பம் இல்லையாகும். 

 

     இந்தப் பாட்டில் முருகப் பெருமானை எப்படித் தியானிப்பது என்பதை அருணகிரிநாதர் அறிவிக்கின்றார். இத்தகைய பாடல்களைக் கேட்பதன் பயனே அதுதான். தியானம் நிலைபெற வேண்டுமானால் அந்தப் பெருமானுடைய திருவுருவத்தைத் தாரணை செய்து கொள்ள வேண்டும். இந்தப் பாட்டைச் சொல்லும் போதே முருகப்பெருமானின் திருவுருவம் நம் மனக்கண் முன் வரவேண்டும். இறைவனைத் திருக்கோயிலில் கண்டுஅவனது திருவடிகளையும்பன்னிரு திருத்தோள்களையும்ஆறுதிருமுகங்களையும் கண்ணாரக் கண்டு வணங்கிபாட்டையும் பாடிப் பழக வேண்டும். பின்பு இறைவனுடைய  திருக்கோயிலை விட்டு வீட்டுக்கு வந்து அமைதியாக இருந்துபொருள் உணர்ந்து பாட்டை மெல்லப் பாடினால் திருக்கோயிலில் கண்ட திருவுருவம் நாளடைவில் நினைவுக்கு வரும். 

 

     கண்ணாலே காணுகின்ற பொருளைக் காணாத காலத்தில்கருத்தினாலே காண்பதற்குத் தூண்டு கோலாக இருப்பது அதனுடைய பெயர். இறைவனுடைய திருநாமங்களும் துதிகளும் அப்படியே இருக்கின்றன. அவனுடைய துதிகளைச் சொல்லிக் கொண்டு தன் கண்முன் இருக்கிற உருவை உள்ளக் கண்ணில் காண்பதற்கு பழக்கம் செய்துகொள்ள வேண்டும். அப்பழக்கம் முறுகினால் கனவிலும் அவன் திருக்கோலத்தைக் காணலாம். இது மனத்தில் உண்டான பழக்கத்தைச் சார்ந்தது. ஆனால்திருக்கோயிலுக்குச் சென்றால்,இறைவனைக் கண்ணாரக் காணும் நேரத்தை விடபராக்கு பார்க்கும் நேரமே அதிகம் என்று சொல்லலாம்.

 

     யாரேனும் மிகவும் அன்பு உடையவர்கள் இறந்து போனால் அவர்களுடைய நினைவாகவே இருக்கிறோம். அதனுடைய பயனாக நம்முடைய நனவிலும்கனவிலும் அவர்களுடைய உருவம் அடிக்கடி வந்து தோன்றுகிறது. இதற்குக் காரணம் நமக்கு அவர்களிடத்தில் உள்ள அன்புதான். அந்த அன்பு எவ்வளவுக்கு எவ்வளவு உரமாக இருக்கிறதோஅவ்வளவுக்கு அவ்வளவு அவர்களுடைய உருவம் நம்முடைய கனவில் வந்து நிற்கும். இது மனிதன் தன்னுடைய அநுபவத்தில் காண்பது. இது போலவே எம்பெருமானுடைய திருக்கோலத்தைக் கண்ணாலே கண்டுமீதூர்ந்த காதலினால் நெஞ்சத்தில் வைத்துத்  தியானம் பண்ணிப் பழகினால் கண்ணாலே காணாத காலத்தும் அக்கோலத்தோடு நினைவில் வந்து நிற்பான் கனவிலும் வந்து நிற்பான். அவன் திருவுருவத்தைக் காணும் பேறு நமக்குக் கிடைக்கும். பழகப் பழக நெஞ்சிலே தோன்றும் உருவமே கண் முன்னாலும் தோன்றும். அந்தத் தோற்றத்தை உருவெளித் தோற்றம் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.  "நனவினும் கனவினும்நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்" என்றார் திருஞானசம்பந்தர்.

 

     கவிச்சக்கரவர்த்திஇராமாயணத்தில் இப்படி ஒரு காட்சியை வைத்துள்ளார். சூர்ப்பனகை இராமனைக் கண்டு ஆசை கொள்கிறாள். அவனை அணுகியபோது இலட்சுமணனால் தண்டிக்கப்பெற்றுத் திரும்புகிறாள். இராவணனிடம் வந்துதான் மூக்கை இழந்ததற்குக் காரணம் கூறுகிறாள். பேரழகியாகிய சீதையைத் தூக்கிக் கொண்டு வந்துஇராவணனுக்கு இன்பம் தரும் பொருளாக ஆக்க முயன்றதாகவும்அப்போது இலட்சுமணன் தன்னை இந்தக் கோலம் செய்ததாகவும் கூறுகிறாள். சீதையைப் பற்றி சூர்ப்பனகை பலபடியாக வருணிக்கக் கேட்ட இராவணனுக்கு சீதாதேவியிடம் ஆசை உண்டாகிறது. அவளுடைய உருவத்தை அவன் கற்பனை செய்து கொள்கிறான். காமம் மிகுதியால் அவன் மிகவும் துன்பப்படுகிறான். அப்போது அவனுக்கு உருவெளித் தோற்றமாக ஒரு பெண்ணின் உருவம் தோன்றுகிறது. சீதையை அவன் இதற்கு முன்பு பார்த்தது இல்லை. ஆனாலும் முன்னால் தோற்றுகின்ற பெண்ணின் உருவம் மிக அழகாக இருக்கிறது. அதை அவன் கண்டபோது அவள்தான் சீதையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளஉடனே சூர்ப்பனகையை அழைத்துவரச் சொல்கிறான். சீதை சீதை என்று எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தமையினால் அவனுக்குப் பார்க்கும் இடம் எங்கும் சீதையாகத் தோன்றும் நிலை வந்து விட்டது. இராவணன் ஏவலின்படி சூர்ப்பனகை அங்கே வந்தாள். அவளோ இராமனிடத்தில் தீரா விருப்பம் கொண்டவள். அவள் இராவணனை அணுகியபோது, "இதோ பார் இவள்தானா நீ சொன்ன சீதை"என்று அவன் கேட்கிறான்.  

 

"பொய் நின்ற நெஞ்சில்

    கொடியாள் புகுந்தாளை நோக்கி,

நெய் நின்ற கூர் வாளவன்,

    நேர் உற நோக்கு நங்காய்!

மை நின்ற வாள் கண் மயில் நின்று

    என வந்து என் முன்னர்

இந்நின்றவள் ஆம் கொல்

    இயம்பிய சீதைஎன்றான்".            --- கம்பராமாயணம்.

 

     சூர்ப்பனகைக்கு எப்போதும் இராமனுடைய நினைவாகவே இருக்கிறது. இராவணனுக்குச் சீதையிடத்தில் உள்ள ஆசை எத்தனை வலியதோஅத்தனை வலியது சூர்ப்பனகைக்கு இராமனிடத்தில் உள்ள ஆசை. இராவணன் தான் கண்ட உருவெளித் தோற்றத்தைக் காட்டி,  'இவள்தானே சீதைஎன்று கேட்டபோது சூர்ப்பனகை பார்க்கிறாள். அவளுக்கு அங்கே சீதை தோன்றவில்லைஇராமன்தான் தோன்றுகிறான். உடனே அவள் வியப்பு மீதுர்ந்து, 'இவன்தான் அந்த வல்வில் இராமன்என்கிறாள்.

          

"செந்தாமரைக் கண்ணொடும்,

    செங்கனி வாயினோடும்,

சந்து ஆர் தடம் தோளொடும்,

    தாழ் தடக் கைகேளாடும்,

அம் தார் அகலத்தொடும்,

    அஞ்சனக் குன்றம் என்ன

வந்தான் இவன்ஆகும்,அவ்

    வல்வில் இராமன்என்றாள்"                --- கம்பராமாயணம்.

 

     அற்ப சிற்றின்பத்தில் நாட்டம் உள்ள காமிகளுக்கே மனக்கண்ணிலும் புறத்திலும் அவர்கள் நினைத்த உருவம் தோற்றம் தருமானால்இறைவன்பால் எல்லை இல்லா அன்பு கொண்ட பக்தர்களுக்குத் தோற்றுவதற்குத் தடை இருக்குமாஎண்ணிப் பாருங்கள். மனம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். பக்தி உணர்ச்சி மிக்கவர்கள் இறைவனுடைய தியானத்தினால் அவன் திருக்கோலத்தை நினைத்த இடம் எல்லாம் காண்பதற்குரிய நிலையை அடைவார்கள். இந்த நிலையைத் தாம் அடைந்ததை "எங்கே நினைப்பினும் அங்கே வந்து என்முன் எதிர் நிற்பனே" என்று பிறிதோர் பாடலில் காட்டினார் அருணகிரிநாதப் பெருமான். 

 

     "எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும்,தன் அடியார்க்கு இங்கே என்றுருள்புரியும் எம்பெருமான்" என்கின்றார் திருஞானசம்பந்தப் பெருமான். 

 

"எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்

அங்கே வந்நு என்னொடும் உடனாகிநின்று அருளி

இங்கே என்வினையை அறுத்திட்டு எனை ஆளும்

கங்கா நாயகனே! கழிப்பாலை மேயானே!"

 

என்பது சுந்தரர் தேவாரம்.

 

     குமரேசப் பெருமான் நம்முடைய கவனத்தை ஈர்க்கும் சிலம்பு முதலியவற்றை அணிந்த திருத்தாள்களை உடையவனாக இருக்கிறான்அவற்றை நினைந்து நாளுக்கு நாள் அஞ்சுமுகம் கொள்ளாமல் பக்தர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக. ஆறுமுகத் திருக்கோலம் கொள்கிறான்.

 

     இதனால்வினையைக் கொன்றுவிடலாம் என்று சொல்லவில்லை. இறைவனைத் தியானிப்பவர்களுக்கு வினையை வென்றுவிடும் நிலை உண்டாகும் என்று காட்டினார் அருணகிரிநாதப் பெருமான்.

 


 

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...