6. கொக்கெனவே நினைத்தனையோ?
முக்கணர்தண் டலைநாட்டிற் கற்புடைமங்
கையர்மகிமை மொழியப் போமோ!
ஒக்கும்எரி குளிரவைத்தாள் ஒருத்தி! வில்வே
டனையெரித்தாள் ஒருத்தி! மூவர்
பக்கம்உற அமுதளித்தாள் ஒருத்திஎழு
பரிதடுத்தாள் ஒருத்தி! பண்டு
‘கொக்கெனவே நினைத்தனையோ? கொங்கணவா!'
என்றொருத்தி கூறி னாளே!
இதன் பொருள் ---
முக்கணர் தண்டலை நாட்டிற் கற்புடை மங்கையர் மகிமை மொழியப் போமோ - முக்கண்ணர் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருத்தண்டலை என்னுநம் திருத்தலத்தை உடைய நாட்டிலே கற்புடைய மாதரின் பெருமை விளம்ப முடியுமோ?, ஒருத்தி ஒக்கும் எரி குளிர வைத்தாள் - ஒருத்தி (தன்னைப்) போன்ற நெருப்பைக் குளிரச் செய்தாள், ஒருத்தி வில்வேடனை எரித்தாள் - ஒருத்தி வில்லையுடைய வேடனைச் சாம்பலாக்கினாள், ஒருத்தி மூவர் பக்கம் உற அமுது அளித்தாள் - ஒருத்தி முத்தேவரையும் தன் பக்கத்தில் (குழந்தைகளாக) அமரச் செய்து பாலூட்டினாள், ஒருத்தி எழுபரி தடுத்தாள் - ஒருத்தி (கதிரவனுடைய) ஏழு குதிரைகளையும் தடுத்தாள், பண்டு ஒருத்தி, ‘கொங்கணவா! கொக்கு எனவே நினைத்தனையோ' என்று கூறினாள் - முற்காலத்தில் ஒருத்தி, ‘கொங்கணவா! (என்னையும் நீ யெரித்த) கொக்கு என்று நினைத்தாயோ?' என்று கூறினாள்.
எரி குளிரவைத்தவள் சீதை : அநுமான் இராமன் ஆணைப்படி சீதையைத் தேடிச் சென்று இலங்கையிற் கண்டான். அவனை அரக்கர் பற்றிச் சென்று அவன் வாலிலே தீயிட்டனர். இதனை அறிந்த சீதை தீக்கடவுளை வேண்டி அநுமானைச் சுடாதிருக்குமாறு செய்தாள்.
வில்வேடனை எரித்தவள் தமயந்தி : காட்டில் நளனைப் பிரிந்த தமயந்தி கலக்கமுடன் அலையும்போது ஒரு வேடன் அவளைக் கற்பழிக்க நெருங்கினான். தமயந்தி, ‘சீறா விழித்தாள்! சிலை வேடன் அவ்வளவில் - நீறாய் விழுந்தான் நிலத்து!'
மூவர் பக்கம் உற அமுது அளித்தவள் அனுசூயை : பிரமன் திருமால் சிவன் என்னும் முத்தேவரும் அனுசூயை கற்பைச் சோதிக்க எண்ணித் துறவிகளாக வடிவமெடுத்துச் சென்றனர். அனுசூயை அவர்களை அதிதிகளாக வரவேற்றாள். அவர்கள் தங்களுக்கு ஆடையின்றி வந்து உணவளிக்க வேண்டும் என்றனர். அவள் உடனே அவர்களைச் சிறு குழந்தைகளாக்கித் தொட்டிலில் இட்டுத் தன் ஆடைகளைக் களைந்துவிட்டு வந்து பாலூட்டினாள். அவர்கள் அவளுடைய கற்பின் திறமைக்கு வியந்தனர்.
எழுபரி தடுத்தவள் நளாயினி : நளன் மகளான இவள் தன் கணவரைக் கூடையில் நள்ளிரவிலே அவர் விரும்பிய தாசி வீட்டிற்குச் சுமந்து செல்கையிற் கழுவிலிருந்த மாண்டவியரின் காலிற் கூடை தட்டியது. வலிபொறுக்க முடியாத மாண்டவியர் தன் கணவன் பணிவிடையில் உள்ள ஊக்கத்தாலே தன்னைக் கவனியாமற் சென்றாள் என்று சினந்து, ‘விடிந்தவுடன் நளாயினி தன் தாலியை இழப்பாள்' எனச் சாப்பித்தார். நளாயினி திடுக்கிட்டுப், ‘பொழுது விடியாமற் போகட்டும்' என்று சபித்தாள். அவ்வாறே விடியாமற் போனதால், தேவர்கள் தலையிட்டு நளாயினியின் கணவன் இறவா வண்ணம் மாண்டவியரைக் கூறச்செய்து பொழுது விடியுமாறு நளாயினியைக் கூறச்செய்தனர்.
‘கொக்கென்று நினைத்தனையோ?' என்றவள் வாசுகி : கொங்கணவன் (போகரின் மாணாக்கன் என்பர்) என்ற ஒருவன் தவம் புரிந்துகொண்டிருந்தான். நண்பகலிலே ஊருக்குட் சென்று உணவு வாங்கியுண்பது வழக்கம். ஒருநாள் அவ்வாறு செல்கையில், வழியில் ஒரு மரநிழலிலே தங்கினான். ஒரு கொக்கு மரத்திலிருந்து இவன்மேல் எச்சமிட, அவன் அதனை உறுத்துப் பார்த்தான். அக் கொக்கு உடனே எரிந்தது. தன் தவச்சிறப்பை வியந்து தற்பெருமை கொண்ட அவன் திருவள்ளுவர் வீட்டிலே உணவுக்குச் சென்றான். திருவள்ளுவர் மனைவி இவன் வாயிலில் வந்து நின்று கேட்டவுடனே வராமல் தன் கணவருக்கு உணவு படைத்தபின் உணவு கொண்டு வந்தாள். சினங்கொண்ட கொங்கணவன் அவளை உறுத்துப் பார்த்தான். அவள் நகைத்துக் ‘கொக்கென்று நினைத்தனையோ கொங்கணவா' என்று கூறினாள். இது ஒரு பழமொழியாக நம் நாட்டில் வழங்குகிறது. ஒழுக்கமே யாவற்றினும் உயர்ந்தது என்பது கருத்து.
No comments:
Post a Comment