53. ஈடு ஆகுமோ?

 


                       53. ஈடாகுமோ?

                                   ---


தாரகைகள் ஒருகோடி வானத் திருக்கினும்

     சந்திரற் கீடாகுமோ?

தாருவில் கொடிதொனிகள் பலகூடி னாலுமொரு

     தம்பட்ட ஓசையாமோ?


கோரமிகு பன்றியின் குட்டிபல கூடின்ஒரு

     குஞ்சரக் கன்றாகுமோ?

கொட்டிமலர் வாவியில் பலகூடி னாலுமொரு

     கோகனக மலராகுமோ?


பாரமிகு மாமலைகள் பலகூடி னாலுமொரு

     பைம் பொன்மக மேருவாமோ?

பலனிலாப் பிள்ளைகள் அநேகம் பிறந்தும்விற்

     பனன்ஒருவ னுக்குநிகரோ?


வாரணக் கொடியொரு கரத்திற்பிடித் தொன்றில்

     வடிவேல் அணிந்தமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் ---


வாரணக்கொடி ஒரு கரத்தில் பிடித்து, ஒன்றில் வடிவேல் பிடித்த முருகா - ஒரு திருக்கையிற் சேவற்கொடியையும், ஒரு திருக்கையில் வடிவேலையும் பிடித்த முருகப் பெருமானே! 


மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

தாரகைகள் ஒருகோடி வானத்து இருக்கினும் சந்திரர்க்கு ஈடாகுமோ - ஒரு கோடி விண்மீன்கள் வானத்திலே ஒளி வீசினும் திங்களுக்கு ஒப்பாகுமோ? 


தாருவில் கொடி தொனிகள் பல கூடினாலும் ஒரு தம்பட்ட ஓசை ஆமோ - மரத்தில் கட்டிய பல துகிற்கொடிகளின் ஒலிகள் பல கூடினாலும், ஒரு பறையின் ஒலிக்கு ஈடாகுமோ?


கோரம் மிகு பன்றியின் குட்டி பல கூடின் ஒரு குஞ்சரக்கன்று ஆகுமோ - அழகற்ற பன்றிக் குட்டிகள் பல சேர்ந்தாலும் ஒரு யானைக் கன்றுக்குச் சமம் ஆகுமோ?


வாவியில் பல கொட்டிமலர் கூடினாலும் ஒரு கோகனக மலர் ஆகுமோ - பொய்கையிலே பல கொட்டிப் பூக்கள் மலர்ந்திருந்தாலும் ஒரு தாமரை மலர்போல் அழகு பெறுமோ?


பாரம் மிகு மாமலைகள் பல கூடினாலும் ஒரு பைம்பொன் மகமேரு ஆமோ - பெருமை மிகுந்த பெரிய மலைகள் பல சேர்ந்தாலும் ஒப்பற்ற பொன் மலையான மகாமேருவுக்குச் சமமாகுமோ? 


பலன் இலாப் பிள்ளைகள் அநேகம் பிறந்தும் விற்பனன் ஒருவனுக்கு நிகரோ - பயன் அற்ற பிள்ளைகள் பலபேர் பிறந்திருந்தாலும் அறிவுடைய ஒரு மகனுக்கு ஒப்பாவரோ?


     அறிவில்லாப் பல பிள்ளைகளினும் அறிவுடைய ஒரு மகனே மேல் என்பது கருத்து.


No comments:

Post a Comment

திருத் தில்லை - 14

  "ஆற்றோடு தும்பை அணிந்துஆடும் அம்பலவாணர் தமைப் போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில், சோற்றுஆவி அற்று, சுகமற்று, சுற்றத் துண...