யோகம்

 

யோகம்

---

"யோகம்" என்னும் சொல்லுக்குப் 'பொருந்துதல்' அல்லது 'ஒன்றி இருத்தல்' என்று பொருள். பரம்பொருளுடன் பொருந்துதல் யோகம் எனப்படும். 

பொருந்துதல் என்ற உடனே,

1. பொருந்துகின்ற பொருள் எது?

2. எந்தப் பொருளோடு பொருந்த வேண்டும்?

3. பின் பொருந்துதற்கு உரிய காரணம் என்ன?

4. இதற்கு முன் பொருந்தாது இருந்தமைக்குக் காரணம் என்ன?

5.ஒன்றை மற்றொன்றைனொடு பொருத்துகின்ற உபகார சக்தி எது?

6.பொருந்திய பின்விளையும் பயன் என்ன?

என்ற வினாக்கள் எழும். இவ்வினாக்களுக்கு விடை பின்வருமாறு:

1.பொருந்துகின்ற பொருள், சீவன்.

2.பொருந்தப்படும் பொருள், பரம்பொருள்.

3..பின் பொருந்துதற்குரிய காரணம், பரமானந்த வேட்கை;

4.முன் பொருந்தாது இருந்தாமைக்குக் காரணம், ஆணவமல மறைப்பு;

5. பொருத்துகின்ற பொருள், இறைவனோடு தாதான்மியப்பட்டு நிற்கும் அனுக்கிரக சக்தி;

6. பொருந்திய பின் விளைவது பரமானந்தம்.

இது எதைப் போல என்றால், ஒருத்தியும் ஒருவனும் கூடி இன்புறுவார்களானால், கூடுகின்றவள் மனைவி. கூட்டப்படுகின்றவன் மணாளன்.  அவள் அவனைக் கூடுவதற்குக் காரணமாக அமைந்தது காமவேட்கை. முன் அவனைக் கூடாது இருந்தமைக்குக் காரணம் அவனை அறியாமை. அறியாமை இருந்தபோது அந்தப் பெண்ணுக்கு காம வேட்கை என்றால் என்னவென்று அறிந்து கொள்ள முடியவில்லை. பக்குவம் வந்தபோது,  அவளுக்குக் காமவேட்கை தானாகவே உண்டாகிறது. தனது ணாளனைக் கேடி மகிழ்கிறாள். அப்போது கிடைத்த இன்பத்தை எண்ணுகின்ற போது, இதனை அறியாமல் இருந்தோமே என்று தனது பக்குவம் இன்மையை எண்ணி அவள் தனக்குள்ளேயே சிரித்துக் கொள்கிறாள். கூடிய பின் விளைவது சொல்லால் விவரிக்க முடியாத இன்பம் என்கிறார் தாயுமான அடிகளார்.

"இன்னமுது கனிபாகு கற்கண்டு சீனிதேன்

எ(ன்)ன ருசித்திட, வலியவந்து

இன்பம் கொடுத்த நி(ன்)னை எந்நேரம் நின்அன்பர்

இடையறாது உருகிநாடி

உன்னிய கருதது அவிழ, உரைகுளறி, உடல் எங்கும்

ஓய்ந்து உயர்ந்து அவசமாகி,

உணரவு அரிய பேரின்ப அநுபூதி உணர்விலே

உணர்வார்கள் உள்ளபடிகாண்;

கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும்,

கைக்கொள்வள் பக்குவத்தில்

கணவன் அருள் பெறின், மு(ன்)னே சொன்னவாறு என் என்னக்

கருதி நகையாவள், அதுபோல்

சொன்னபடி கேட்கும் இப் பேதைக்கு நின்கருணை

தோற்றில் சுக ஆரம்பம் ஆம்

சுத்த நிர்க்குணமான பரதெய்வமே! பரஞ்

சோதியே! சுகவாரியே!"

இதன் பொருள் ---

சொன்னபடி கேட்டு நடக்கும் அறிவில்லாத அடியேனுக்கு, உன்னுடைய பேரருட்பெருக்கு இருக்குமாயின், நீங்காத பேரின்பத் தோற்றம் ஓங்கும். முக்குணச் சார்பில்லாத நன்மைக்கு மேலான விழுமிய முழுமுதற்பொருளே! பேரொளிப் பிழம்பே! பேரின்பப் பெருங்கடலே! இனிய அமுதுக்கு ஒப்பான வாழை மா பலா என்னும் முக்கனியைப் போலவும், சருக்கரைப் பாகுபோலவும், கற்கண்டு எனவும், சீனத்துச் சீனிபோலவும், தேன் போலவும் சுவை உண்டாகும்படி வலிய எழுந்தருளி வந்து திருவடி இன்பத்தினை அருட்கருணையால் ஊட்டி அருளிய உன்னை, அந்த இன்பத்தினை அனுபவித்த மெய்யன்பர்கள், எப்பொழுதும் உன்னையே இடையறாது நினைந்து உள்ளம் உருகி, எண்ணி, எண்ணிய உள்ளமும் நெகிழ்ந்து, சொல் தடுமாறி, உடம்பு இளைத்து, நினைவு இழந்து,  தன்வசம் இழந்து நின்வசம் ஆகி,  அறிதறகு அரிய பேரின்ப நுகர்வு உணர்விலே உணர்ந்து இன்ப வண்ணமாய் அமர்ந்திருப்பர்; இது மெய்ம்மை ஆகும்.

அது எதைப் போன்றது என்றால்) மங்கைப்பருவம் எய்தாத கன்னிப் பெண் ஒருத்தி, தனது பருவம் இன்மையால், உண்மையில் பலராலும் விழைந்து அனுபவிக்கப்பட்டு வரும் சிற்றின்பத்தினை கசக்கும் வேம்பு என வெறுத்துப் பேசுவாள். அவளே மங்கைப் பருவத்தினை அடைந்து, தனக்கு வாய்த்த கணவனுடன் இல்வாழ்க்கையை ஏற்று, கணவனுடன் கூடி மகிழ்ந்து வரும் காலத்தில், அவள் அனுபவித்து வரும் இன்பமே பேரின்பம் என அவளுக்குத் தோன்ற, முன்னம் என்ன சொன்னோம் என்று நினைந்து அடங்காத சிரிப்பினை எய்துவாள்.

பருவம் அடையாதபோது, ஒரு கன்னிப் பெண்ணுக்கு சிற்றின்பம் என்றால் என்னவென்று தெரியாது. எனவே, அதை வேப்பங்காயாக எண்ணி வெறுத்தாள். பருவம் வந்து காமவேட்கை மீதூர, கணவனாக அமைந்த ஒருவனுடன் கூடி இன்பத்தை அனுபவித்தபோது அந்த இன்பம் அவளுக்குப் பேரின்பமாகத் தோன்றியது. மருவம் இல்லாத காலத்தில் தான் எண்ணியதை நினைத்து இப்போது அவளுக்கே சிரிப்புத் தோன்றுகின்றது.

அருள்நந்தி சிவாச்சாரியார் தாம் அருளிய "சிவஞான சித்தியார்" என்னும் நூலில் இதே நிகழ்வை வைத்துப் பின்வருமாறு பாடுகின்றார்.

"கருவி கழிந்தால் காணார், ஒன்றும் எனில் காணார்

காணாதார், கன்னிகைதான் காமரதம் காணாள்

மருவி இருவரும் புணர வந்த இன்பம்

வாயினால் பேச அரிது, மணந்தவர்தாம் உணர்வர்;

உருவின் உயிர் வடிவதுவும் உணர்ந்திலர் காண்; சிவனை

உணராதார் உணர்வினால் உணர்வது கற்பனைகாண்;

அருள்பெறின் அவ் இருவரையும் அறிவுஇறந்து அங்கு அறிவர்;

அறியாரேல் பிறப்பும் விடாது ஆணவமும் அறாதே."

கருவிகளை விட்டு நீங்கப் பெற்றவர்கள் எதனையும் காண முடியாதவர் ஆவார் அல்லவா!  எனவே அந்தக்கரணங்களோடும் கூடாதே நின்றவர்களே இறைவனைக் காண்பார் என்பது பொருந்துமா? என்று சிலர் வினவுவர். உலகியல் பொருளைக் காண்பதற்கு உட்கருவியாகிய மனக்கண்ணும், புறக்கருவி ஆகிய கண்ணும் வேண்டும். இது உலகியாருக்கே பொருந்தும். ஆனால் ஞானநிட்டை கூடியவர்கள் இறைவனைத் தமது உள்ளக்கண்ணால் கண்டவர்கள் ஆதலால், ஞானத்தால் யாவற்றையும் அறியும் அறிவு பெற்றவர்கள்.  இது எத்தகையது என்றால், திருமணமாகாத கன்னிப் பெண் ஒருத்தி இன்பச் சுவையை அறிய மாட்டாள். ஒருவனும் ஒருத்தியுமாகக் கலந்து அனுபவிக்கும் இன்பம் இத்தகையது எனச் சொல்லினால் உணர்த்த இயலாது. அவ்வின்பத்தை துய்த்தவரே அதனை உணர்வர். அது போலவே இறைவனைக் கண்டவர்கள் பெறுகின்ற இன்பமும் இத்தகையது என்று உணர்த்த இயலாது. திருவருள் வழி நின்று உணராதவர்கள் தாம் உணர்வதாகக் கூறினால் அது கற்பனையே அன்றி வேறு அல்ல. திருவடி ஞானம் பெற்றவர்க்கு அல்லாமல் பிறர்க்குப் பிறப்பும் நீங்காது. ஆணவமும் அறாது.

இறைவன் உயிர்களுக்குப் பேரின்பத்தை வழங்கி அருளும் நிலையைத் திருமூல நாயனார் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார்.

"அற்புதமாகி அனுபோகக் காமம்போல்

கற்பனை இன்றிக் கலந்து நின்றானே."      --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

கருத்து ஒருமித்த காதலர் கூடி அனுபவித்த அந்தக் காம இன்பம்போல், இறைவன் நிலையும், அவன் திருவடியின்பமும் நுண்ணுணர்வால் உணர்ந்து அனுபவிக்கப் படுவது ஆகும்.  

        இது பொய்யெனக் கூறப்படும் கற்பனை அல்ல.  

ஓர் அறிவற்ற பொருள் மற்றோர் அறிவற்ற பொருளுடன் கூடி இன்புறுவது இல்லை. ஒரு மரப்பலகை ஒரு மாம்பழத்துடன் கலந்து அதன் சுவையை அறியாது. அறிவற்ற பொருளாய் இருப்பினும் அறிவு உடைய பொருளுடன் கூடும்போதுதான் அறிவுடைய பொருள் இன்புறும். ஒரு மாங்கனியை ஒரு மனிதன் நுகர்ந்து இன்புறுவன். ஆயினும் அது அற்ப இன்பமே ஆகும்.

அதனினும் சிறந்தது, அறிவுடைய ஒருவனும் மற்றோர் அறிவுடைய ஒருத்தியும் கூடுகின்ற பொழுது உண்டாகும் மிகுந்த இன்பம். ஆயினும் அந்த இன்பம் கூட, கணப்பொழுதில் மறைவதும், தூய்மை இல்லாததும், நோய் செய்வதும், வெறுக்கத் தக்கதும் ஆகி விடும்.

சிற்றறிவுடைய ஆன்மா பேரறிவுடைய பரம்பொருளோடு கூடுகின்ற பொழுது,  தெவிட்டாத பேரின்பமும், அனுபவிக்க அனுபவிக்கக் குறையாத ஆனந்தமும், நிலைபேறான உண்மை இன்பமும் உண்டாகும். ஆதலால்,  அருளியல் நிலையில் யோகம் என்பது,  ஆன்மா பரம்பொருளுடன் பொருந்துதல் எனப் பொருள்படும்.

இதனைத் திருமூல நாயனார் பின்வரும் திருமந்திரப் பாடலால் விளக்கி அருளுகின்றார்.

"புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல,

உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு

உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி

அணைத்தலும் இன்பம் அது இது ஆமே."

இதன் பொருள் ---

பெண்டிரோடு கூடும் கூட்டத்தில், ஆடவர் அப் பெண்டிர்மேல் வைக்கின்ற அன்பிலே தனது அறிவு அழிந்து நிற்றல்போல, பரம்பொருளினிடத்துச் செய்கின்ற அன்பிலே தம் அறிவு அழிந்து அந்நிலையில் நிற்க வல்லார்க்கு, அதனால் விளைகின்ற பேரின்பம் அவரைப் பின்னும் அந்நிலையில் இருந்து பெயராத வகையில் பெருகி விளங்கி, விழுங்கி அன்பு வடிவாக நிற்கும்.

ஆணும் பெண்ணும் கூடி மகிழ்கின்றபோது, அறிவு அழிந்து, பிற உணர்வுகள் ஏதும் இன்றி, அன்பு மட்டுமே விஞ்சி நிற்பதைப் போல, பிற உணர்வுகள் எவையும் இல்லாமல், அறிவு அழிந்து, அன்பு மேலிட்டு இறைவன் ஒருவனையே எண்ணி இருத்தல் வேண்டும்.

இதனை இன்னும் தெளிவாக, "ஒழிவில் ஒடுக்கம்" என்னும் நூலில் சொல்லப்பட்டு உள்ளது. காழிக் கண்ணுடைய வள்ளல் என்னும் அருளாளர் அருளிய இந்த நூலை, அதன் அருமை உணர்ந்து, வடலூர் வள்ளல்பெருமான் பதிப்பித்து அருளினார். இந்த நூலில் முதல் பாடலுக்கு அருமையான விளக்கத்தையும் அருளினார். நூல் முழுமைக்கும் வள்ளல்பெருமானுடைய விளக்கம் நமக்குக் கிடைக்கத் திருவருள் இல்லைபோலும். பின்னாளில், திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் நூல் முழுமைக்கும் விளக்கம் எழுதி அளித்தார்கள். பாடலையும், சிதம்பர சுவாமிகள் அருளிய விளக்கத்தையும் காணலாம்.

"முலைமுதிர நாணம் முதிர்ந்து, அடங்கி, மூடி,

கலவியிலே நக்கினத்தைக் காட்டல் - சலனைபயன்

ஆனாலும் தம்பனைசெய் ஆநந்தம் ஆக்குவது

போனாலாம் இந்தப் பொருள்."

இதன் பதவுரை ---

  முலைமுதிர நாணம் முதிர்ந்து அடங்கி மூடிக் கலவியிலே நக்கினத்தைக் காட்டல் - ஓர் பேதைப் பெண் தனது முலை முதிர முதிர, நாணம் மேன்மேலும் முதிர்ந்து,  புற புருடரோடு முன்போல நகையாடல் செய்யாது அடங்கி, அம் முலையினை மறைத்துத் தனது சுய புருடனுக்குக் கூட்டுறவின்கண் நக்கினத்தைக் காட்டுவதுபோலும், ஒருவன் அறிவு முதிர முதிர, முன்போல் விடயங்களில் செல்வதற்கு நாணம் முதிர்ந்து, அவ் விடயங்களில் செல்லும் போதத்தை (அறிவை) உள்ளடக்கித் திருவருளில் மறைத்து, ஆநந்தத்திற்கு ஒப்பித்து நிற்றல், அப் போதத்தை ஆனந்தத்திற்கு ஒப்பிக்க எனின், அங்ஙனம் ஒப்பிக்குமாறே நில்லாமல்,

சலனை பயன் ஆனாலும் தம்பனை செய் ஆநந்தம் ஆக்குவது போனாலாம் இந்தப் பொருள் - போதச் சலனை ஆனாலும் விடயப் பயனை அனுபவிப்பதானாலும், இவ் விடயப் பயனை நீக்கி, அப்போதச் சலனையை அடக்கி, அப் போதத்தை ஆனந்த மயமாக்குவதானாலும், இவ் ஆநந்தப் பொருள் ஓர் இயல்பிற்றாய்த் தோற்றாது, அங்ஙனம் செய்வன் போம் ஆயின், இப்பொருளும் ஓர் இயல்பிற்றாய்த் தோற்றுவதாம்.

குறிப்பு --- முலை முதிர்ந்த பெண், அம் முலையையும் அல்குலையும் பிற புருடருக்குக் காட்டாது மறைத்துத் தன் புருடனுக்குக் காட்டுதல்போல், அறிவு முதிர்ந்தோர் தற்போதத்தை விடயங்களில் செல்ல ஒட்டாது மீட்டு உள்ளடக்கி, அதனைச் சிவாநந்தத்திற்கு ஒப்பிக்க வேண்டும். ஆகலின், அங்ஙனம் உவமை கூறினார்.

தலைவனும் தலைவியும் கூடித் தம்மை மறந்து இன்பத்தை அனுபவிப்பது யோகம் ஆகும். நாற்றைப் பிடுங்கி நடுவதைப்போல, திருமணத்தின் மூலம் தான் பெற்ற மகளை வேற்றுக் குடும்பத்துக்குள் புகுத்துகிறார்கள். பிறந்த வீட்டின் சூழலுக்கு முற்றும் மாறாகப் பெகுந்த வீடு இருக்கும். அந்தச் சூழலுக்குத் தக்கவாறு தன்னை அமைத்துக் கொள்ளாவிட்டால் துன்பப்படுவாள் மகள். எனவே, எந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தான் வாழ்ந்த வாழ்வை முன்வைத்து, மகளுக்கு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறாள் தாய். எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவள், மகள் தன் மணவாளனோடு உறவாடித் தோய்ந்து பெற வேண்டிய இன்பத்தின் தன்மையை மட்டும் சொல்லிக் கொடுப்பதில்லை. காரணம், அந்த அனுபவம் தாய்க்குக் கிடைக்கவில்லை என்பது அல்ல. அந்த அனுபவத்தைச் சொல்லிக் கொடுக்க முடியாது என்பதே.

கணவனோடு உறவாடித்தான் மகளைப் பெற்றாள். அந்த உறவின் மூலம் பெற்ற இன்பத்தைத் தனது மகளுக்கு அவளால் எப்படிச் சொல்லமுடியும்?  கருத்தில் வைத்து அனுபவித்துப் பார்க்கவே முடியும். எல்லாவற்றையும் கண்ணில் பார்க்க வேண்டும் என்றால், தனிநிலை அக அனுபவங்களை வெளிப்படுத்திக் காட்ட யாராலும் முடியாது. எனவே,  உங்கள் முகக் கண்களை மூடிவிட்டு அகக் கண்களைத் திறந்து பாருங்கள். எதைப் பெற விரும்புகிறீர்களோ அதைத் தேடுங்கள், அதில் தோயுங்கள், கண்டுகொள்வீர்கள் என்று கடவுளைத் தேடுதலை யோக அனுபவமாகக் காட்டுகிறார்கள் நமது முன்னோர்கள். அதைப் பாடல்களாக வடித்து வைத்து அருளி உள்ளனர்.

இந்த யோக நிலையைத்தான், "நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா" என்று ஆண்டாள் நாச்சியார் காட்டினார். தெய்வச் சேக்கிழார் பெருமான், யோகம் என்பதற்கு விளக்கமாகப் பெரியபுராணத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியாருடன் கூடி வாழ்ந்த வகையைக் காட்டிப் பாடியுள்ள பாடல் வருமாறு...

"தென்நாவ லூர்மன்னன் தேவர்பிரான் திருவருளால்

மின்ஆருங் கொடிமருங்குல் பரவைஎனும் மெல்லியல்தன்

பொன்ஆரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வுஆகப்

பல்நாளும் பயில்யோக பரம்பரையின் விரும்பினார்."

இதன் பொருள் ---

அழகிய திருநாவலூரின் மன்னராக விளங்கும் ஆரூரர் (சுந்தரமூர்த்தி சுவாமிகள்), தியாகேசப் பெருமானின் திருவருளால் மின்னலையும் கொடியையும் ஒத்த இடையினை உடைய பரவையார் என்னும் மெல்லியலாரின், பொன் அணிகலன்களை உடைய தனங்களாகிய இருமலைகளின் நெருங்கிய சிகரங்களையே அரணாகக் கொண்டு பலநாள்களும் பழகும் யோகத்தை, அதற்கு உரித்தான வழிவழியாகச் சொல்லப் பெறும் அறத்தின் வழிநின்று துய்த்து மகிழ்வாராயினார்.

குறிப்புரை : மின்னல், இடையின் அசைவிற்கும், கொடி அதன் மென்மைக்கும் உவமை ஆயின. யோகம் - கூடுவது. மனத்தை இறைவன்பால் கூட்டவும் பின் அதனை விட்டு நீங்காது காக்கவும் கொள்ளும் பயிற்சியே யோகமாகும். இதனைச் செய்தற்கு உலகியல் சூழலினின்றும் நீங்கி மலைச் சிகரங்களைச் சார்ந்து பயில்வர். அப்பொழுது தான் அது விரைவாகவும் நிறைவாகவும் கைகூடும். இவ்வாறே நம் ஆரூரரும் பரவையாரை மணந்திருந்தும், உலகியலில் காணும் இன்பவழியன்றி, அருளியல்வழிக் காணும் இன்பமாம் இவ் யோகப் பயிற்சியைச் செய்தார் என்பதை இவ்வாறு கூறினார்.

ஓங்கல் - மலை. குவடு - சிகரங்கள். இங்குப் பரவையாரின் தனங்களாகிய மலைகளின் நெருங்கிய சிகரங்களையே இடனாகக் கொண்டு ஆரூரர் யோகம் செய்தார் என்றார். இறைவன் திருவருளிலேயே அழுந்தி நின்று அவன் செயலாகவே அனைத்தையும் கண்டு நிற்பார்க்கு நாம் காணும் உலகியல் இன்பங்களும் இறைவனின் அருள் வழிவரும் இன்பங்களாகவே தோன்றும். அம் மனநிலையால் அவர் அனுபவிக்கும் உலகியல் இன்பங்கள் நம்போன்று வினை வழிப்படுவனவும் ஆகா. 

ஆக, யோகம் என்னும் சொல்லுக்கு ஒன்றி இருத்தல், பொருந்தி இருத்தல், சேர்க்கை, புணர்ச்சி என்று பொருள்கள் உண்டு. தியானத்திற்கு "யோகிப்பு" என்ற ஒரு பொருளும் உண்டு. எதனோடு ஒன்றி இருக்கின்றோமோ, அதற்கு யோகம் என்று பொருள். அதனால் பெறப்படும் அனுபவம் யோக அனுபவம் ஆகும். தத்துவமசி யோகம் என்று ஒன்று உண்டு. இதற்குப் பொருள் "அது நீயாக இருக்கிறாய்" என்பதாகும். வடமொழியில் `தத்+த்வம்+அசி` என்னும் மூன்று பதங்களின் சேர்க்கையே `தத்துவமஸி` என்று ஆகின்றது. தத் - அது. த்வம் - நீ,  அசி - ஆகின்றாய். தத்துவமசி - அது நீ ஆகின்றாய். இங்ஙனமாயினும் 'ஆகின்றாய்' என்பதனால், 'நீ அது ஆகின்றாய்' என்பதே கருத்து.  பக்குவம் வாய்த்தவர்க்கு யோக அனுபவம் கைகூடும். 

புளிக்கும் மாங்காய் மரத்திலே இருக்கிறது. பச்சைப் பசேல் என்று இருக்கும் அந்த மாங்காயைப் பறித்தால் கண்ணிர் விடுவது போலப் பால் வடிகிறது. அது பழுத்துவிட்டால், அதன் பச்சை நிறம் பொன் நிறமாகிறது. கடினமாய் இருந்தது போய் நெகிழ்ச்சி பெறுகிறது. அதன் புளிப்பு மாறி இனிப்பாகிறது. நன்றாகப் பழுத்துவிட்டால் யாரும் பறிக்காமல் தானாகவே மரத்திலிருந்து நழுவிவிடுகிறது. அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது. நாமும் இறைவன் திருவடியை நினைந்து அவனைத் தியானம் பண்ணப் பண்ண, அந்தத் தியானம் உள்ளத்தில் ஏறஏற,  யோகமுதிர்ச்சி உண்டாக உண்டாக உள்ளத்தில் ஆனந்தம் அரும்பும். இது இவ்வுலக வாழ்வில் உண்மையில் நடக்கக் கூடியதே.



சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை

சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை

-----

சின்னக் குழந்தைக்கு ஒழுக்க நெறியைப் போதிக்க வந்த ஒளவைப் பிராட்டியார், சிறியவர் யார், பெரியவர் யார் என்பதை ஒரு பாடலின் மூலம் சொல்லி நல்வழிப்படுத்துகிறார். நல்வழிப்படுவதற்குப் பாடியதால், அந்த நூலின் பெயர் "நல்வழி" ஆயிற்று. மக்களை ஆண்சாதி பெண்சாதி என்றோ, நால்வகை சாதி என்றோ அவர் வகுக்கவில்லை. மேல் சாதி, கீழ்சாதி என்று இருவகையாகப் வகுத்துக் காட்டுகிறார்.

"சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை; சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்,

பட்டாங்கில் உள்ள படி"

என்பது ஔவையார் பாடியருளிய அருமையான பாடல்.

இதன் பதவுரை ---

சாற்றுங்கால் - சொல்லுமிடத்து, மேதினியில் - பூமியில், சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை - இரண்டு சாதியின்றி வேறில்லை, (அவ்விரண்டு சாதியாரும் யாவர் எனின்) நீதி வழுவா நெறி - நீதி தவறாத நல்வழியில் நின்று, முறையின் - முறையோடு; இட்டார் - (வறியர் முதலானவர்க்கு) ஈந்தவரே, பெரியோர் - உயர்வாகிய சாதியார்; இடாதார் - ஈயாதவரே, இழிகுலத்தார் - இழிவாகிய சாதியார்; பட்டாங்கில் உள்ளபடி - உண்மை நூலில் உள்ள இயற்கை இதுவே ஆம். (பட்டாங்கு = உண்மை, உள்ள நிலைமை, சாத்திரம்)

இந்த உலகத்தில் தம்மிடம் உள்ள பொருளை யார் பிறருக்குக் கொடுக்கிறார்களோ அவர்களே பெரியவர்கள். கொடுக்காமல் இருக்கிறவர்கள் சிறியவர்கள் என்று நமது பெரியபாட்டி சொல்கிறாள்.

ஔவையார் காட்டிய இரண்டு சாதிகளில் ஒன்று உயர்ந்ததாகிய நீதிச் சாதி. மற்றொன்று தாழ்ந்ததாகிய அநீதிச் சாதி. உயர்ந்த சாதிக்கு அறிவு இருக்கிறது. தாழ்ந்த சாதிக்கு ஆசை இருக்கிறது. அறிவு, நீதியைச் சார்ந்து தெய்வத் தன்மையோடு விளங்குவது. ஆசை, அநீதியைச் சார்ந்து விலங்குத் தன்மையோடு இருப்பது. அறிவு இருக்கின்ற இடத்தில் அன்பு விளங்கும். ஆசை இருக்கின்ற இடத்தில் வஞ்சகம் இருக்கும். நீதிக்கும் அநீதிக்கும் நடக்கின்ற போர் எப்போதும் ஓயாது இருக்கும். அறிவு விஞ்சுகின்ற போது தெய்வத் தன்மை விளங்கும். ஆசை விஞ்சுகின்ற போது விலங்குத் தன்மை இருக்கும்.

நாம் தெருவிலே நடந்து போய்கொண்டு இருக்கின்ற போது ஒரு பையைக் காண்போம். பையிலே உள்ளதை அறிந்து கொள்ள ஆசை மேலிடும். அதிலே நிச்சயம் பணம் அல்லது பணமதிப்பு உள்ள பொருள் காணப்படும். இப்போது ஆசைக்கும் அறிவுக்கும் இடையே போர் மூளும். இது யாரோ உழைத்துச் சேர்த்த பொருள். இதை இழந்தவர் வருத்தப்படுவார். இதற்கு உரியவர் யார் என்று அறிந்து அவரிடம் சேர்த்து விடவேண்டும் என்று அறிவு சொல்லும். பையைத் துழாவிப் பார்த்தால் ஒரு முகவரி இருக்கும். மனம் நிம்மதி அடையும். ஆனால், ஆசை விடாது தனது போர்க்குணத்தைக் காட்டும். அந்தப் பை கிடைத்தது தமது அதிருஷ்டம் என்று வியக்கும். இந்தப் போராட்டத்தில் வெற்றி கொள்வது அறிவாக இருந்தால் நீதி தழைக்கும். ஆசையாக இருந்தால் அநீதி தாண்டவம் ஆடும்.

"புண்ணியம் ஆம், பாவம் போம்" என்பது ஔவையார் அருள்வாக்கு. புண்ணியம் செய்யத் தக்கது. பாவம் விலக்கத் தக்கது. நீதியை மறைக்கும் குற்றங்கள் இரண்டு. ஒன்று அறியாமை, மற்றொன்று வஞ்சகம். அறியாமை பாவம் அல்ல. இருந்தாலும், அறியாமல் இருப்பது குற்றம் என்பதால், அறியாமை என்பது நீக்கிக் கொள்ளக் கூடிய குற்றம் ஆகிறது. ஆனால், வஞ்சகம் பெரும் குற்றம் ஆகும். அது நரகத்துக்கு வித்தாக அமைகிறது. அது உயிரின் அறிவை அழித்து, அறியாமை என்னும் இருளிலேயே மக்களை வைத்து இருப்பது.

வழியில் கண்டு எடுத்த பொருள் நமது இல்லை என்பது நன்றாகவே தெரியும். பொருளுக்கு உரியவர் இன்னார் என்று தெரிகிறது. அவர் குறித்து அறிந்து கொள்ள வழியும் உள்ளது. பொருளை உரியவரிடம் ஒப்படைப்பதே நீதி என்று அறிவு சொல்லுகின்றது. வஞ்சகம் அந்த அறிவு மழுங்கச் செய்கிறது. இந்தக் கள்ளத்தனம்தான் நமக்குப் பரமவிரோதி. அதனோடு நாம் சதாகலமும் போர் தொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். வஞ்சகம் ஒரு கணத்தில் மனதைத் தன் வசப்படுத்திவிடும். நாம் அதனைச் சிறை செய்து அறிவினிடம் ஒப்புவிக்க வேண்டும். நீதி பற்றிய விசாரம் வேண்டும்.  அது, அறியாமை மற்றும் வஞ்சகத்தைச் சிறிது சிறிதாக அகற்றும் ஒளி ஆகும். அறிவு உதயம் ஆக ஆக, அறியாமை இருள் கொஞ்ச கொஞ்சமாக அகலும்.

நீதியின் வடிவாக உள்ளவன் இறைவன். நீதியின் வழி நடப்பவன் அகச் சமயவாதி. அதற்குப் புறம்பானவன் சமயத்துக்கும் புறம்பானவனே. நீதி மிக ஆழமானது. மிக நீளமானது. அந்த நீதியை நான் எனது என்னும் அகப்பற்றும் புறப்பற்றும் உள்ளர்களால் காணமுடியாது. "பங்கயத்து அயனும் மால் அறியா நீதியே" என்று மணிவாசகப் பெருமான் பாடிருளியதை உணரவேண்டும். நீதியோடு சம்பந்தப்பட்டவன் இறைவனோடு சம்பந்தப்பட்டவன் ஆகிறான்.

நீதி மிக ஆழமானது என்று சொன்னோம். நீதியின் ஆழத்தை இப்போது காண்போம்.

தமிழ்நாட்டில் ஈகையின் பெருமையைப் பல புலவர்கள் மிகச் சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்கள். திருவள்ளுவர் ஈகையை மிகச் சிறப்பித்துப் பேசுகின்றார். ஈபவனுக்கு வாங்குகிறவன் இருந்தால்தான் பெருமை. ஈதலினால் ஒருவனுக்கு இன்பம் வரவேண்டுமானால் அவனிடத்தில் ஏற்றுக் கொள்வான் ஒருவன் இருக்க வேண்டும். ஆகையால், ஒரு வகையில் பார்த்தால் ஈதலும் ஏற்றலும் ஒன்றாகவே நிகழ்வன என்று தெரியும். புறநானூற்றில் ஈதலையும் இரத்தலையும் பற்றி ஒரு புலவர் பேசுகிறார். இழிந்ததிலும் இழிந்தது இன்னது, உயர்ந்ததிலும் உயர்ந்தது இன்னது என்று காட்டுகிறார். நமக்கு இறைவன் உடம்பையும், அறிவையும், பிற வசதியையும் கொடுத்திருப்பதால் அவற்றைப் பயன்படுத்தி முயற்சி செய்து நல்ல வகையில் வாழவேண்டும். அப்படியின்றி முயற்சி செய்யாமல் சோம்பேறியாகத் திரிந்து, பொருள் ஈட்டாமல் பிறரிடத்தில் சென்று பல்லைக் காட்டிக் கொண்டு 'ஈ' என்று சொல்லுதல் மிகவும் இழிந்த செயல்.  அப்படி ஒருவன் மானத்தை விட்டுப் பிறர் இழிவு படுத்துவதற்குரிய நிலையில் பல்லைக் காட்டி இரக்கும்போது செல்வம் உள்ளவன் ஈதலே முறை. அப்படியின்றி இல்லை என்று சொல்கிறானே அவன் மிகவும் இழிந்தவன். அவனுடைய குணம் இழிந்த குணம். "ஈ என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று" என்று இப்படி இழிவையும், அதனினும் இழிவையும் சொன்ன புலவர், உயர்வையும் அதனினும் உயர்வையும் சொல்ல வருகிறார். பிறருடைய குறைபாட்டைக் குறிப்பினால் தெரிந்து கொண்டு தமக்கு இறைவன் அருளிய செல்வம் பிறருடைய வறுமையை நீக்குவதற்கு என்று அறிந்து, தாமே வலிந்து சென்று,  'இந்தா, இதைப் பெற்றுக்கொள்' என்று கொடுப்பது மிக உயர்ந்த இயல்பு. இனி இந்த உயர்ந்த இயல்புக்கு மேல் மற்றோர் இயல்பைப் பற்றிக் கூறுகின்றார். கொள்வாயாக என ஒருவன் கொடுக்கும் போது, நான் இதனைப் பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று மறுக்கிறானே, அவன் கொடுக்கும் உயர்ந்த குணம் படைத்தவனை விடச் சிறந்தவன். "கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று"  என்கிறார் புறநானூற்றுப் புலவர். கொள் என்று கொடுப்பவனுக்கு முன்னாலே நின்று, கொள்ளமாட்டேன் என்று சொல்வதற்கு மனத் திண்மை வேண்டும். நம்பிக்கை வேண்டும். இறைவன் திருவருள் நமக்கும் ஒரு வழி காட்டும் என்ற உறுதி வேண்டும். ‘'வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை, யாண்டும் அஃது ஒப்பது இல்" என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். வேண்டாமை என்பது ஒன்றுதான் மேலான செல்வம். 


"வேண்டாமை ஒன்றை அடைந்து, உளம்

     மீண்டு ஆறி, நின் சரணங்களில்

     வீழந்து, ஆவல் கொண்டு உருகு அன்பினை...உடையேனாய்,

வேந்தா! கடம்பு புனைந்து அருள்

     சேந்தா! சரண் சரண் என்பது,

     வீண்போம் அது ஒன்று அல என்பதை .....உணராதோ?"

என்பது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்.

இதன் பொருள் ---

ஒரு பொருளையும் விரும்பாத தன்மையை அடைந்து, உள்ளமானது இங்கு ஆறுதலாக இருந்து, தேவரீருடைய திருவடிகளில் விழுந்து வணங்கி, ஆவல் கொண்டு உள்ளம் உருகுகின்ற அன்பை உடையவனாகி, அரசரே, கடப்ப மாலை அணிந்து அருள் புரிகின்ற செம்மைப் பண்பு உடையவரே, உமது திருவடியே சரணம் சரணம் என்று அடியேன் கூறுவது வீண்போகாது என்பதைத் தேவரீர் திருவுள்ளம் அறியாததோ?


வேண்டும் என்பது உள்ளவரை பிறவிப் பிணி அகலாது. வேண்டும் என்பது ஒன்று உண்டாயின், அது பிறவாமையே ஆகும். அப் பிறவாமை வேண்டாமை எய்தினால் எய்தும்.


"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை, மற்றுஅது

வேண்டாமை வேண்ட வரும்." ---  திருக்குறள்.


"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்,

வேண்டின் அஃதொன்றுமே வேண்டுவது, வேண்டினது

வேண்டாமை வேண்டவரும் என்றமையால், வேண்டிடுக

வேண்டாமை வேண்டும் அவன் பால்."   ---  திருக்களிற்றுப்படியார்.


வேண்டும் என்ற தன்மை உள்ளவரை துன்பம்தான். ஆதலின், வேண்டும் என்ற எல்லாவற்றையும் ஒருங்கே விடவேண்டும்.


"அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை, விடல்வேண்டும்

வேண்டிய எல்லாம் ஒருங்கு."

என்ற திருவள்ளுவ நாயனார் அருளிய வானமுத வாக்கை நன்கு உணர்ந்து,  அதனைச் செயலில் கொண்டுவர வேண்டும். கொடுப்பதை வேண்டாம் என்று சொல்கிறவன் ஒரு வகையில் செல்வனாக விளங்குகிறான். பணம் இருந்தாலும், மேலும் ஒருவன் கொடுத்தால் பணத்தின்மேல் பணத்தைச்  சேர்த்துக் கொள்வதற்காக வாங்குகிறவர்கள் உலகத்தில் உண்டு. அப்படி இருக்க, நம்முடைய வறுமை தெரிந்து ஒருவன் கொடுக்கிறான் என்றால், அதனை மறுப்பது சாமானிய மனம் படைத்தவனால் இயலாது. அதற்கு ஒரு சிறந்த மனத் துணிவு ஆகையால் கொள் என்பதற்கு எதிரே கொள்ளேன் என்று சொல்வது மிகச் சிறந்த பண்பு என்று புலவர் சொன்னார்.  எனவே, கொடுப்பவர் உயர்ந்த சாதி. இறுக்கம் பிடிப்பவர் தாழ்ந்த சாதி.

இசைக்குப் பெயர்பெற்ற பாணர் குலம் காலப்போக்கில் தீண்டாக் குலம் ஆனது. அக்குலத்தில் பாண்பெருமாள் என்னும் திருநாமத்தோடு, ஆழ்வார்கள் வரிசைக் கிரமத்தில் பதினோராம் ஆழ்வாராக அவதரித்தவர் சிறந்த திருமால் அடியார். எனினும், தன் குலத்தின் பொருட்டு திருவரங்கத்தின் உள்ளே நுழைவதற்கும், அந்த மண்ணை மிதிப்பதற்கும் அஞ்சி காவிரியின் மறுகரையில் இருந்தவாறே, பண் இசைத்துத் திருவரங்கனைப் பாடி வந்தார். காவிரியிலிருந்து தண்ணீரைக் குடத்தில் எடுத்துச் சென்று அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்யும் பொருட்டு விரைந்து வந்த லோகசாரங்கர் என்னும் கோயில் பட்டர், வழியில் தன்னிலை மறந்து நின்றுகொண்டிருந்த பாணரைப் பலமுறை அழைத்தும் அவர் செவிமடுக்காததால், பாணர் விலகும் பொருட்டு ஒரு கல் கொண்டு எறிந்தார். லோகசாரங்கர் எறிந்த கல் பாணரின் தலையில்பட்டு குருதி பெருக, அதைக் கவனியாது லோகசாரங்கர் தண்ணீரோடு அரங்கன் முன் சென்றார். பாணரின் சிறந்த பத்தி உணர்வையும், அவரது உயர்வையும் உணர்த்த விரும்பிய திருவரங்கன், இரத்தம் வடிந்த முகத்தினராய் லோகசாரங்கருக்கு காட்சி கொடுத்ததோடு, பாணரான திருப்பாணாழ்வாரைத் தனது தோளில் சுமந்து திருவரங்கத்துள் கொணர்ந்து தனது சந்நிதியில் நிறுத்தும்படியும் லோகசாரங்கருக்கு ஆணையிட, அவ்வாறே செய்தார். அதன் பொருட்டு திருப்பாணாழ்வாருக்கு "முனிவாகனன்" என்றும் "யோகிவாகனன்" என்றும் பெயர் ஏற்பட்டது.

"என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே" என்று பாடியபடி தன் பருவுடலோடு ஆண்டாள் போல அரங்கனோடு இரண்டறக் கலந்தார். இதனால், திருமால் குலம் கோத்திரம் பார்ப்பதில்லை. அன்பு செய்யும் அடியவரையே விரும்புகின்றான் என்பது தெளிவாகும்.

தில்லையின் சிறப்பை அறிந்தும் உணர்ந்தும் இருந்த திருநாளைப் போவார் நாயனார் என்னும் நந்தனார், தமது குலத்தின் இழிவைக் கருதி, தில்லைத் திருத்தலத்தை மிதிப்பதற்கு ஆஞ்சி, தில்லையின் எல்லையை இரவு பகல் பலகாலும் வலம் செய்து வந்தார். ஒருநாள், "தில்லையின் உள் நுழைவிற்கு இப்பிறவி தடையாக நிற்கிறதே, எந்த வழியில் திருக்கூத்தைக் கண்டு தொழுவது" என்று நினைந்து, நினைந்து, மனம் நொந்து நொந்து உறங்கிவிட்டார். அன்பர் உள்ளம் கோயில் கொண்ட தில்லையம்பலவாணப் பெருமான், நந்தனார் கனவில் தோன்றிப் புன்முறுவல் செய்து,  "இப் பிறவி ஒழிய,  நீ நெருப்பில் மூழ்கி வேதியர்களுடன் நம் முன் அணைவாய்" என்று திருவாய் மலர்ந்தருளினார். மேலும் தொடர்ந்து, தில்லைவாழ் அந்தணர்கள் கனவில் தோன்றித் திருநாளைப் போவார் நிலையை அவர்களுக்கு உணர்த்தி, எரி அமைக்குமாறு பணித்து அருளினான். அந்தணர் பெருமக்கள் விழித்து எழுந்து, அச்சத்துடன் ஆலயத்திலே ஒருங்கு சேர்ந்து, ஆண்டவன் கட்டளையை நிறைவேற்ற உறுதிகொண்டு, திருநாளைப் போவாரிடம் சேர்ந்தார்கள். சென்று, "ஐயரே! ஆண்டவன் ஆணைப்படி இங்கே வந்தோம், உம்பொருட்டு எரி அமைக்கப் போகிறோம்" என்றார்கள். திருநாளைப் போவார் "உய்ந்தேன், உய்ந்தேன்" என்று ஆண்டவன் திருவருளைப் போற்றினார். 

ஆகவே சாதியை வைத்து மனிதன் உயர்நிலையை அடைவது இல்லை. எனவே சாதி வேற்றுமை பார்ப்பது கூடாது. நல்ல குலம், தீய குலம் என்பதன் பொருளை நாலடியார் உணர்த்துமாறு காணலாம்.

"நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும்

சொல்அளவு அல்லால் பொருள்இல்லை; - தொல்சிறப்பின்

ஒண்பொருள் ஒன்றோ? தவம் கல்வி, ஆள்வினை

என்று இவற்றான் ஆகும் குலம்".                    --- நாலடியார்.

இதன் பொருள் ---

     நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும் உலகத்தில் பிறப்பின் மேலேற்றிச் சொல்வது வெறும் சொல்லளவே அல்லால், அதற்குப் பொருள் இல்லை. குலம் என்பது, தொன்று தொட்டுவரும் மேன்மையினை உடைய செல்வத்தால் மட்டுமல்ல, தவம், கல்வி, முயற்சி என இவை தம்மால் எல்லாம் உண்டாவதாகும்.

உயர்ந்த குலத்தில் பிறந்து, அந்தக் குல ஒழுக்கம் தவறி, கன்ம சண்டாளனாக ஒருவன் ஆவது இழுக்கு. குலத்திற்கு ஏற்ற ஒழுக்க நிலையில் இருந்து உயர்கதியை அடைதல் வேண்டும். ஒழுக்கம் கெடுமானால், இழிந்த பிறப்பு ஆகிவிடும். மறந்துபோனால் கூட, வேதத்தை, திரும்பவும் தக்கவரை அடுத்து ஓதிக் கொள்ளலாம். ஆனால், உயர் குலப் பிறப்பானது ஒழுக்கம் குன்றினால் கெட்டுப் போகும் என்பதைக் காட்ட, "மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்" என்றார் திருவள்ளுவ நாயானர். சன்ம சண்டாளனாகப் பிறந்த ஒருவர், தமது ஒழுக்க நெறியால் உயர் நிலையை அடையலாம் என்பதே திருப்பாணாழ்வார் மற்றும் திருநாளைப் போவார் நாயானார் வரலாறு உணர்த்துவது.

பெரிய கடலின் நீரானது தன்னை அடுத்து உள்ள சிறிய உப்பங்கழியிலும் சென்று பாயும். அது போல, உயர்ந்தவர்கள் தம்முடைய தம்மையும் தம்முடைய தலைமைத் தன்மையையும் எண்ணிப் பார்த்து தம்மைத் தாமே வியக்காமல், தாழ்ந்தவர்கள் இருக்கும் இடமும் சென்று அவர் துன்பத்தைப் போக்குவார்கள் என்கிறார் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் 

"தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துஉயர்ந்தோர்

தம்மை மதியார், தமையடைந்தோர் - தம்மின்

இழியினும் செல்வர், இடர்தீர்ப்பர், அல்கு

கழியினும் செல்லாதோ கடல்." --- நன்னெறி.

தலைமை - பெருமை. இழியினும் - கீழானவர்களாக இருந்தாலும். அல்கு கழி - சிறிய உப்பங் கழிநிலம்.

மேலும், அறிவு உடையோரே உயர்குலத்தவர் என்றும் அறிவு இல்லாதவர்  இழிகுலத்தவர் என்றும் பின்வரும் பாடலால் வகுத்துக் கூறுகின்றார்.


"ஆக்கும் அறிவான் அல்லது பிறப்பினால்

மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க - நீக்க

பவர்ஆர் அரவின் பருமணிகண்டு என்றும்

கவரார் கடலின் கடு." --- நன்னெறி.


நஞ்சை உடைய பாம்பினிடத்தே தோன்றிய பெரிய மாணிக்கத்தை இகழ்பவர் இல்லை. திருப்பாற்கடலினிடத்தே தோன்றிய நஞ்சை விரும்புபவரும் இல்லை. அதுபோல அறிவினால் அல்லாமல் பிறப்பினால் உயர்வு தாழ்வு கொள்ளக் கூடாது.

ஆக்கும் - கல்வியால் உண்டாக்கும். மீக்கொண்ட - மேன்மையாகக் கொள்ளுகிற. அரவின் பருமணி - பாம்பின் சிறந்த மணி. கடு - நஞ்சு.

எனவே, நீதி வழுவா நெறிமுறையில் நின்று வறுமையில் வாழ்வோர்க்கு அவர் இருக்கும் இடம் தேடிச் சென்றும், தம்மிடம் தேடி வந்தபோதும் இல்லை என்னாமல் உதவி புரிபவரே உயர்ந்த சாதியினர். "இம்மி அரிசித் துணையானும் வைகலும் நும்மில் இயைவ கொடுத்து உண்மின்" என்கிறது நாலடியார். "வறிஞர்க்கு என்றும் நொய்யில் பிளவு அளவேனும் பகிர்மின்கள்" என்கிறார் அருணகிரிநாதர். பெரிதாகத் தருமம் செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள், இயன்ற வரையில் நொய்யரிசியில் பாதி அளவாவது ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்து, தாம் உண்ணுதல் வேண்டும். நற்சிந்தையும், நற்சொல்லும், நற்செயலும் என்று மூன்று வகைப்பட்ட அறத்தை முறையே மனத்தாலும், வாக்காலும், காயத்தாலும் ஒழியாது செய்து வருதல் வேண்டும். அவரே உயர்ந்த சாதியினர்.

செல்வமானது நீர்மேல் குமிழிபோல் நிலையற்றது. ஆதலால், அதனை உள்ளபோதே அறவழியில் செலவழித்தல் வேண்டும். செல்வம் வந்தபோது அதன் நிலைமையை உணர்தல் வேண்டும்.  நம்மைக் காட்டிலும் அறிவும் ஆற்றலும் உடையவர்கள் எல்லாம் ஏழையாய் இருக்கிறார்களே?  நமக்கு மட்டும் செல்வம் உண்டாவதற்குக் காரணம் என்ன?  "கொடுத்து வைத்த புண்ணியவான்" என்கிறார்களே? எப்போது கொடுத்து வைத்தோம்? முந்தின பிறவியில் ஏழைகளுக்குக் கொடுத்து வைத்தோம். அதன் புண்ணியத்தால் இப்போது பெருஞ்செல்வராய் இருக்கிறோம். இப்போதும் கொடுத்து வைத்தால் தானே, இனிவரும் பிறிவியிலும் சுகமே வாழ்வோம். நாம் எந்தப் பொருளை ஏழைக்குத் தருகிறோமோ அதுதான் நம்முடைய பொருள். எவ்வளவு பொருளை அறவழியில் செலவழிக்கிறோமோ, அவ்வளவும் மறுமைக்கு வந்து துணை செய்யும். இதனை ஒவ்வொருவரும் தனியே இருந்து சிறிது நேரம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

பிறக்கும் பொழுது கொண்டு வந்ததில்லை. இறக்கும் பொழுது கொண்டு போவதுமில்லை. எனவே இடையில் வந்த பொருள் இறைவனால் கொடுக்கப்பட்டது. அதனை இறைபணியிலும், அடியார் பணியிலும் செலவழித்தல் வேண்டும்.  அங்ஙனம் செலவழிக்காது காவல் புரிந்து கொண்டிருந்தால், செல்வம் விரைவில் அழியும். தேனீயானது மிகவும் துன்புற்று அலைந்து சிறிது சிறிதாகத் தேனைச் சேர்த்து வைத்துத் தானும் உண்ணாமல் பிறருக்கும் வழங்காமல் காத்துக் கொண்டிருக்கிறது. பின்னர் என்ன ஆகிறது? பிறரால் அத்தேன் கவரப்பட்டு, தேனீ வீணே வருந்தி அழிகிறது. அதுபோல் அறம் செய்யாதான் செல்வம் அழியும். 

"உடா அதும், உண்ணாதும், தம்உடம்பு செற்றும்,

கெடாஅத நல்லறமும் செய்யார்-கெடா அது

வைத்து ஈட்டினார் இழப்பர், வான்தோய் மலைநாட!

உய்த்து ஈட்டும் தேனீக் கரி."           --- நாலடியார்.

பெருந் தருமங்களைப் புரிவதற்குப் போதிய செல்வம் இல்லாதோரும் தமது தகுதிக்குத் தக்கவாறு சிறிதாவது அறம் புரிதல் வேண்டும். இதனை வலியுறுத்துவதற்காகவே “இயல்வது கரவேல்” என்ற அமுதமொழி எழுந்தது. ஒவ்வொரு நாளும் நமது வருவாயில் சிறிதாவது அறத்தில் செலவழிந்ததா என்று இரவில் படுக்கும்போது சிந்தித்தல் வேண்டும்.


"ஒல்லும் வகையான் அறவினைஓவாதே

செல்லும் வாய் எல்லாம் செயல்."       --- திருக்குறள்.


சிறுமிக் குமர நிகர்வீர் பகிரச் சிதையுயிர்த்துச்

சிறுமிக் குமர சரணமென் னீருய்விர் செந்தினைமேற்

சிறுமிக் குமர புரைத்துநின் றோன்சிலை வேட்டுவனெச்

சிறுமிக் குமர வணிமுடி யான்மகன் சீறடிக்கே.  --- கந்தர் அந்தாதி.

இதன் பதவுரை -----

சிறு - சிறிதான, உமிக்கும் - குற்று உமியை ஆயினும், பகிர மர நிகர்வீர் - பிறர்க்கு இட்டு உண்ண மனம் கூடாமல் மரம் போன்று இருப்பவரே, சிதை - அழிந்து போவதும், உயிர் - பிராணனுக்கு, துச்சில் - ஒதுக்கிடமும் ஆகிய இவ் உடலின்கண், துமி - ஒரு தும்மல் உண்டாகும் அக் காலையினும், குமர - குமரனே, சரணம் - உனக்கு அடைக்கலம், என்னீ்ர் - என்று சொல்லுங்கள், உய்விர் - பிழைப்பீர்கள், செம் - சிவந்த, தினைமேல் - தினைப் புனத்தில் வாசம் செய்த, சிறுமிக்கு - வள்ளிநாயகிக்கு, மரபு - தமது மரபின் வழிகளை, உரைத்து - எடுத்து உரைத்து, நின்றோன் - குறையிரந்து நின்றவனும், சிலை - வில்லை உடைய, வேட்டுவன் - வேடத் திருமேனியை உடைய கண்ணப்ப நாயனார், எச்சில் - ஊன் முதலியவற்றை முன் ருசி பார்த்து நிவேதித்த எச்சிலை, து - உவப்புடனே உண்டவராகிய, மிக்கும் - மேன்மையாக, அரவு - பாம்பு ஆபரணத்தை, அணி - தரித்த, முடியான் - முடியை உடைய பரமசிவனது, மகன் - மைந்தனுமாகிய குமாரக் கடவுளினது, சீறடிக்கு - சிறிய திருவடியைக் கருதிக் கொண்டே.

அறிஞர் அறமொழியைக் கேட்பதனாலும், அறிவு நூல்களைப் படிப்பதாலும் அறஞ்செய்ய வேண்டுமென்ற எண்ணம் உண்டாகும். அங்ஙனம் உண்டாயின் உடனே அறத்தைச் செய்யவேண்டும். இன்று புரிவோம் நாளை புரிவோம் என்றிருத்தல் கூடாது, ஏனெனில் மறுகணம் இருப்போம் என்பது நிச்சயம் இல்லை. நாம் இளையோம் முதுமையில் அறம் புரிவோம் என்னில், இளமையில் அழிதலும் கண்கூடு. காற்று அடித்தால் முற்றிய கனி உதிர்வதோடு, முதிராத பிஞ்சுகளும் உதிர்ந்து வீழ்வதைக் காண்கிறோம். ஆதலால், யாக்கை நிலையாமையை யஉணர்ந்து, அறம்புரிய வேண்டும் என்ற எண்ணம் உண்டானபோதே, விரைந்து தருமம் செய் என்றனர்.

"அன்று அறிவாம் என்னாது அறஞ்செய்க, மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை."         --- திருக்குறள்.


"மற்றுஅறிவாம் நல்வினை, யாம்இளையம் என்னாது

கைத்துஉண்டாம் போதே கரவாது அறஞ்செய்மின்,

முற்றி இருந்த கனிஒழியத் தீ வளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு."                    --- நாலடியார்.


ஆன்றோர் அறமொழிகள்,  அறிவு நூல்கள் இவைகளைக் கொண்டு யாக்கை, இளமை, செல்வ நிலையாமைகளை உணரவில்லை என்றாலும், தினந்தோறும் இறந்தவரைப் பறை ஒலி முழக்கிக் கொண்டு போவதைக் கண்டாவது நெஞ்சம் அஞ்ச வேண்டாமோ? இறந்தோரை அலங்கரித்து அழுகை ஒலியுடன் ஈமதேசத்திற்குக் கொண்டுபோகப் போகிறதைக் கண்டும் ஆசையில் அழுந்தலாமா?

நெடு நாளைக்கு நாம் இருப்போம் என்று எண்ணுவது மதியீனம்.  "ஐயோ! இறையருளால் பொருளைப் பெற்று இருந்தும், இதுவரையில் அறஞ்செய்யாது ஒழிந்தோமே?  நாமும் ஒரு நாள் இறப்போம்.  பாடுபட்டுத் தேடிய இவ்வளவு செல்வத்தையும் விட்டுப்போய் விடுவோம்.  நமக்கு இப்போது இருக்கிற பெயரை நீக்கி, பிணம் என்ற பெயரினை இட்டு, பறை ஒலியுடன் கொண்டுபோய்த் தீக்கு இரையாக்குவர்? அதற்குள் விரைந்து தருமம் செய்து இகபர சௌபாக்கியத்தைப் பெற வேண்டும்" என்று நினைத்து நினைத்து நெஞ்சம் அஞ்சிப் பகிர்ந்து அளிக்கவேண்டும். அந்த ஈகையின் பயனாக உண்டாகும் புகழினை இப்பிறவியிலேயே தேடிக் கொள்ள வேண்டும். 

"ஈதல், இசைபட வாழ்தல், அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு" என்றார் திருவள்ளுவ நாயனார். நாயனாரும், ஔவையாரும் இன்னபிற அருளாளர்களும் காட்டிய வழியில் வாழ்பவர் உயர்ந்த சாதியினர். அல்லாதவர்கள் தாழ்ந்த சாதியினர் என்று காட்டி, அந்த வழியில் வாழ்ந்து காட்டியது முந்தைய தமிழ்ச் சமுதாயம். அதனைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. "குலமும் கோத்திரமும் கொண்டு என் செய்வீர்?" என்று கேட்டவர் அப்பர் பெருமான். "சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதம் இலி" என்று பாடியவர் மணிவாசகப் பெருமான். 

"சாதியிலே, மதங்களிலே, சமய நெறிகளிலே,

சாத்திரச் சந்தடிகளிலே, கோத்திரச் சண்டையிலே,

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்!

அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகு அலவே"

என்று வள்ளல்பெருமானும் அறிவுறுத்தி உள்ளார். எல்லா வேறுபாடுகளும் நீங்கி 'ஒருமையின் உலகெலாம் ஒங்குக' என உலக ஒருமைக்கு அவர் வித்திட்டு உள்ளார். நாயன்மார்கள், ஆழ்வார்கள், உட்பட இன்னும் பல அருளாளர்களும் அறிஞர்களும் உலக ஒற்றுமைக்கு அடிகோலி வந்துள்ளனர். சாதி மத வேற்றுமைகளைப் போலவே, இன வேற்றுமையும் ஒழிக்கப்படல் வேண்டும். இவ்வளவும் இருக்க, தமிழ்ச் சமுதாயத்திற்கு, அதற்குப் புறம்பானவர்கள் போதிப்பது அவசியம் அற்றது. "சாதிகள் இல்லையடி பாப்பா" பாரதியார் சொன்ன பிறகும் ஏன் இந்தப் பதைபதைப்பு? அங்கலாய்ப்பு! சமணத்தில் சாதி இல்லை. பௌத்தத்தில் சாதி இல்லை. இன்னும் சில சமயங்களில் சாதிப் பாகுபாடு இல்லை. சாதிக்குப் புறம்பானவர்களிடம் நால்வருணம் பற்றிப் பேசவேண்டிய அவசியம் இல்லை. 


ஆன்மநேய ஒருமைப்பாடு

 


ஆன்ம நேய ஒருமைப்பாடு

-----

அன்பு என்பது உயிருக்கு இயல்பாக அமைந்திருக்க வேண்டிய பண்பு ஆகும். அன்பு செலுத்துவதையே பண்பாகவும், அறச் செயலைச் செய்வதையே பயனாகவும் கொண்டு விளங்குவதே இல்வாழ்க்கை என்பதை விளக்க, "அன்பும் அறனும் உடைத்து ஆயின், இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது" என்றார் திருவள்ளுவ நாயனார். அன்பு என்னும் சொல்லுக்கு நேயம் என்றும் பொருள் உண்டு. ஆன்மநேயம் என்பது, எல்லா உயிர்களையும் ஒர் இனம் எனக் கருதி, எல்லா உயிர்களிடத்திலும் அன்பு உடையவராக ஒழுகுகின்ற நிலையைக் குறிப்பது. ஆன்மா = உயிர்; நேயம் = அன்பு; ஒருமை =  அன்பு என்னும் பாசத்தால் எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணும் மனத்தின் ஒருமைப்பாடு. 

உயிர் என்பது காட்சிக்குப் புலனாகாத அருவப் பொருள். "காணா மரபிற்று உயிர் என மொழிப" என்பது தொல்காப்பியம்.  கண்ணால் காண முடியாத உயிரின் இருப்பை, காணப்படும் அதன் உடம்பின் இயக்கத்தைக் கொண்டு நாம் உணர்கின்றோம். எனவே, உயிர் உணரும் தன்மை உடையது. உடம்பு உணர்வு அற்றது. உயிர் என்றும் அழியாத நிலைபேறு உடையது என்பதால், அதனை 'மன்னுயிர்'  என வழங்குகிறோம். உயிரினது நிலைக்களம் ஆகிய உடம்பு அழியக் கூடியது. அறிவில்லாததும் அழியக் கூடியதும் ஆகிய இவ்வுடம்பிற்கும், அறிவுடையதும் நிலைபேறு உடையதும் ஆகிய உயிருக்கும் உண்டாகிய தொடர்புக்குக் காரணம் என்ன என்று திருவள்ளுவ நாயனார் தெளிவிக்கின்றார்.


"அன்போடு இயைந்த வழக்கு என்ப,  ஆருயிர்க்கு 

என்போடு இயைந்த தொடர்பு"  


'காணா மரபினதாகிய உயிர்க்குக் காணப்படும் உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை அன்பு என்னும் உயிர்ப் பண்பினை வளர்த்தல் பொருட்டு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்' என்கிறார் திருவள்ளுவ நாயனார். அருவ நிலையிலே உள்ள உயிர்கள், உடம்பின் தொடர்பைப் பெற்றுத்தான், அன்பு என்னும் உயிர்ப்பண்பை வளர்த்துக் கொள்ள முடியும். "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி" என்றார் மணிவாசகப் பெருமான். புல் முதலாகிய உடம்புகள் உயிர்க்குப் படிகால் முறையாகப் படைத்து வழங்கப் பெற்றன என்பதை அறியலாம். புல் என்பது,  ஓரறிவு உயிருக்கு வாய்த்த உடம்பு. அதுபோலவே, ஈரறிவு முதல் ஆறறிவு உயிர்க்கு, அவற்றிற்கு ஏற்ற உடம்பு வாய்த்தது. 

ஒரறிவு உயிராகிய புல் முதல், ஆறறிவு உயிராகிய மக்கள் ஈறாக எல்லா உயிர்களும் தாம் பெற்றுள்ள உடம்புகளால் வேறுபட்டுத் தோன்றினாலும்,  ஊழ்வினை காரணமாகப் பிறக்கும் பிறப்பு இயல்பினால் ஒத்த தன்மை உடையனவே என்பது,  "பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்"  எனவரும் திருவள்ளுவ நாயனார் அருள்மொழியால் நன்கு விளங்கும். உயிர்கள் செய்த புண்ணிய பாவம் ஆகிய இருவினைப் பயன்களை, செய்த உயிர்களே அனுபவிக்கும்படி வரையறுத்து ஊட்டுவது ஊழாகிய நியதி தத்துவம் ஆகும். இந்த நியதி காரணமாகவே உலகில் பல்வேறு உயிர்களும் பல்வேறு உடம்பினைப் பெற்று, மாறிமாறிப் பிறந்து வருகின்றன. இவ்வாறு உயிர்த் தொகுதிகள் தாம் தாம் பிறக்கும் இடவகையாலும் அவ்வப்பொழுது மேற்கொள்ளும் உடல் வகையாலும் வேறுபட்டனவாயினும், உணர்வுடைய பொருளாய் உயிர் எனப் பேசப்படும் தன்மையில் ஒற்றுமையும், உயிர்ப் பண்பாகிய அன்பின் தொடர்ச்சியினால் உறவும் உடையனவே. 

சங்க காலச் சான்றோர் இந்த உண்மையைத் தமது அனுபவத்தால் உணர்ந்து, ஆன்ம நேய ஒருமைப்பாட்டிற்கு வித்திட்டு உள்ளார்கள்.

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்,

தீதும் நன்றும் பிறர் தர வாரா,

நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன,

சாதலும் புதுது அன்றே, வாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின்

இன்னாது என்றலும் இலமே, மின்னொடு

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறை வழிப்படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம், ஆதலின் மாட்சியில்

பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"

எனவரும் கணியன் பூங்குன்றனார் பாடலால் இது உய்த்து உணரப்படும். 

வானத்தில் உலவும் மேகம் பெருமழையைப் பெய்தமையால் உண்டாகிய வெள்ளப்பெருக்கு, மலைமுகட்டில் உள்ள கற்களை அலைத்துக்கொண்டு பேராறாக இழியும் நிலையினை ஒத்தது உலகின் இயக்கம். பேராற்றலினால் முறைப்படுத்தப்படும் ஊழாகிய நியதி என்பதும்,  அந்த ஆற்றினால் ஈர்த்துச் செல்லப்படும் மிதவை (தெப்பம்) போன்றது மன்னுயிர்த் தொகுதி என்பதும், ஊழின் வயப்பட்ட உயிர்கள் உலகில் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு இனங்களிலும், பிறந்தும்,  இறந்தும் உழன்று இருவினைப் பயன்களை நுகர்ந்து வருதலால், அவ்வுயிர்கட்கு யாதும் ஊரே, யாவரும் உறவினரே என்பதும், மக்கள் அடையும் நன்றும் தீதும் ஆகியன பிறரால் தரப்படுவன அல்ல, அவரவர் செய்த வினையின் பயனாகத் தாமே வருவன என்பதும், உலகிலேயே மக்கள் பெறும் உயர்வு தாழ்வுகட்கு அவரவர் இயற்றிய இருவினைப் பயனாகிய ஊழ் என்னும் முறைமையே காரணம். ஆதலால் நல்வினையால் உயர்ந்த பெருமக்களை வியந்து புகழ்தலையோ, அன்றித் தீவினையால் தாழ்வுற்ற சிறியவர்களை எண்ணி இகழ்தலையோ மெய்யறிவு பெற்றோர் ஆகிய தத்துவஞானிகள் ஒருபோதும் மேற்கொள்ளமாட்டார்கள் என்பதும் ஆகிய உண்மைகள் இப்பாடலில் தெளிவுபடுத்தப் பெற்றுள்ளன.

படைப்புக் காலம் தொடங்கி மன்னுயிர்கள் ஊழ்வினை காரணமாகப் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு உடம்புகளிலும் பிறந்து இறந்து துன்புறும் நிலையில், அவ்வுயிர்கட்கு யாதும் ஊராகவும், யாவரும் உறவினராகவும் அமைந்துள்ள திறத்தை.

"அகில லோகமும் அனந்த யோனியும்

நிகிலமும் தோன்ற நீ நினைந்த நாள் தொடங்கி

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து

யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்

தாயர் ஆகியும் தந்தையர் ஆகியும்

வந்து இலாதவர் இல்லை; யான் அவர்

தாயர் ஆகியும், தந்தையர் ஆகியும்

வந்து இராததும் இல்லை; முந்து

பிறவா நிலனும் இல்லை; அவ்வயின்

இறவா நிலனும் இல்லை;"

என  11 -ஆம் திருமுறையில் திருக்கழுமலமும்மணிக் கோவைப் பகுதியில் பட்டினத்து அடிகளார் விரித்துக் கூறி உள்ளார். இது மேற்குறித்த, புறநானூற்றுப் பாடலுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்.

உயிர்களுக்கு மறுபிறப்பு உண்டு.  இருவினைப் பயனால் இறந்த உயிர் மீளவும் பிறக்கும்போது, வெவ்வேறு இடங்களில் சென்று பிறக்கும். அவ்வுயிரிடத்தே அன்பு செலுத்துவோர் அது எங்கே பிறந்தது என்று அறியமுடியாமையால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல் வேண்டும். சோழ இளவரசனாகிய உதயகுமரன் என்பவன், மாதவியின் மகள் ஆகிய மணிமேகலையை விரும்பி, அவளைப் பின் தொடர்ந்து செல்லும் போது,  துறவியாகிய மணிமேகலை, காயசண்டிகை என்ற பெண்ணின் வடிவம் உடையவளாக உருமாறினாள். காயசண்டிகையின் கணவன், அவள் மணிமேகலை என்பதை அறியாமல், தன் மனைவி காயசண்டிகையே என எண்ணி, அவளைத் தொடர்ந்து வந்த உதயகுமரனை வாளால் வெட்டி வீழ்த்தினான். அதனைக் கேட்ட சோழ மன்னன் தன் மகன் இறந்ததற்குச் சிறிதும் வருந்தாமல், மணிமேகலையைச் சிறையில் வைத்தான். தன் புதல்வனை இழந்த அரசமாதேவி தன்மகன் இறந்ததற்குக் காரணமாயிருந்த மணிமேகலையை இனி உயிரோடு வைக்கமாட்டேன் எனச் சினந்து, மணிமேகலையைச் சிறையில் இருந்து விடுவித்து, அவளைப் பலவாறு துன்புறுத்தினாள். தான் பெற்ற மந்திர ஆற்றலால் அத்துன்பங்களை எல்லாம் பொறுத்துக் கொண்ட மணிமேகலை, சிறிதும் மாற்றம் இன்றிக் காணப்பட்டாள். அதனைக் கண்டு வியந்த அரசமாதேவி நடுக்கமுற்றவளாய், "என் மகனை இழந்த துன்பத்தால் உனக்கு இத்தகைய கொடுமைகளைச் செய்தேன். இவற்றைப் பொறுத்தருள வேண்டும்" என மணிமேகலையைப் பலவாறு வேண்டினாள். அது கேட்ட மணிமேகலை, சென்ற பிறப்பில் நீலபதியின் வயிற்றில் தோன்றிய இராகுலன்  என்பவனைத் திட்டிவிடம் என்ற பாம்பு தீண்ட அவன் இறந்தபொழுது, அவன் மனைவியாக இருந்த நான் அத்துயரத்தைப் பொறாது தீயில் பாய்ந்து உயிர் துறந்தேன். அந்த இராகுலனே இப் பிறப்பில் உனக்கு மகனாக வந்த உதயகுமாரன் ஆவான். அவன் முன்பிறப்பில் பாம்பு தீண்டி இறந்தபொழுது அவனது பிரிவாற்றாது நான் தீப்பாய்ந்து உயிர் விட்ட அந்நாளில், இளங்கோ ஆகிய அவன்பொருட்டு அரசியாகிய நீ எங்கிருந்து அழுதாய்? அப்பொழுது அவனுக்கும் உனக்கும், மகன்-தாய் என்னும் உறவு முறைமை இல்லாமையால் அழாது இருந்தாய். இப்பொழுது அவன் உன் மகனாகிய நிலையில் இறந்தபொழுது, பிற உயிர்க்குத் தீங்கு செய்தல் என்னும் பொருந்தாத செயல்களைச் செய்துவிட்டாய். இப்போது நீ அழுகின்றாய். நீ உன் மகனது உடலை நினைந்து அழுதாயா? அல்லது அவனது உயிரை நினைந்து அழுதாயா? உடலை நினைந்து அழுதாயானால் அவனது உடம்பையும் (எண்ணெய் முதலிய பாதுகாப்புப் பொருளில்) பேணி வைக்காமல் அதனை இடு காட்டில் இட்டவர்கள் யார்? இல்லை, உயிரை நினைந்து அழுதாயானால், அவ்வுயிர் சென்று புகும் உடம்பு அவ் வுயிர் செய்த வினைப்பயனால் பெறுவதாதலின் யாராலும் தெரிந்து காணுதற்கு இயலாது. அவ்வுயிர்க்கு, உண்மையான அன்பினைச் செலுத்துவாயானால், அவ்வுயிரோடு தொடர்புடைய எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் உள்ளவளாய் அன்பு செலுத்துதல் வேண்டும், என ஆன்மநேய ஒருமைப்பாட்டு உணர்வினை அறிவுறுத்திக் காட்டினாள் மணிமேகலை என்பதைப் பின்வருமாறு காப்பயிம் கூறும்.

"யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு?

பூங்கொடி நல்லாய்! பொருந்தாது செய்தனை,

உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ?

உடற்கு அழுதனையேல், உன் மகன் தன்னை

எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே!

உயிர்க்கு அழுதனையேல், உயிர் புகும் புக்கில்

செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது,

அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின், ஆய்தொடி!

எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்."   --- மணிமேகலை. 

ஆருயிர்களிடத்திலே செலுத்தும் அன்பு, அவ்வுயிர்கட்கும் உயிராக விளங்கும் பரம்பொருள் இடத்தும் சென்று சேரும் இயல்பினது ஆகும். உயிர்ப் பண்பாகிய அன்புக்கும், உயிர்க்கு உயிராகிய சிவத்துக்கும் உள்ள பிரிக்கமுடியாத அன்பின் தொடர்பின் உடையது என்கிறார் திருமூல நாயனார்.

"அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்,

அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்,

அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின்,

அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே."    --- திருமந்திரம்.

இறைவனை அடைவதற்குச் சாதனமாகிய அன்பும் அதனால் அடையக் கூடிய பயனாகிய சிவமும் என அன்பையும், சிவத்தையும், அவற்றின் இயல்பை அறியாதவர், இருவேறு பொருளாகப் பிரித்துக் கூறுவர். உயிர்களிடத்துக் காணப்படும் அன்பே சிவபரம்பொருளின் விரிந்த விளக்கமாகும்  என்பதை அவர்கள் உள்ளவாறு அறியமாட்டாதவர். உயிர்ப் பண்பாகிய அன்பே சிவத்துவ விளக்கம் ஆகும் என்னும் உண்மையினை யாவரும் அழுந்தி அறிந்தார்களானால், எவ்வுயிரிடத்தும் விரிந்து விளங்குவதாய்த் தம்மிடத்து நிலைபெற்ற அன்பே சிவமாகி விரிந்து தோன்ற, அத்தகைய சிவத்தின் வியாபகத்துள்ளே அன்புருவாய்ப் பிரிப்பின்றி அமர்ந்திருந்தார்கள் என்பது இத்திருமந்திரத்தின் பொருளாகும்.

உயிர்க்குணமாகிய அன்பு என்பது சிவபரம் பொருளின் திருவுருவ விளக்கமே அல்லாமல்,  சிவத்தின் வேறான பிறிதொரு பொருள் அல்ல என்பதால்,  "அன்பே சிவம் ஆவது” என்றார். "ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே;" என்றும், "அன்பினில் விளைந்த ஆரமுதே"  என்றும், "நேயத்தே நின்ற நிமலன்" என்றும் மணிவாசகப் பெருமான் அருளியதைப் பொருள் உணர்ந்து ஓதி உணர்தல் வேண்டும். எனவே, சிவத்துவ விளக்கமாகிய  அன்பினைப் பெருக்குவதற்கே உயிர்களுக்கு எலும்போடு இயைந்த இவ்வுடம்பு கொடுக்கப் பெற்றது என்பது புலனாகும். "அன்பைப் பெருக்கி, எனது ஆருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே" என்பது  தாயுமான அடிகளார் அருள்வாக்கு. மேற்குறித்த திருக்குறளை மீண்டும் ஓதி உணர்க.

"மகிழ்தி மடநெஞ்சே! மானுடரில் நீயும்

திகழ்தி, பெருஞ்சேமம் சேர்ந்தாய், - இகழாதே

யார் என்பே யேனும் அணிந்து உழல்வார்க்கு ஆட்பட்ட

பேரன்பே இன்னும் பெருக்கு."

என வரும் காரைக்கால் அம்மையார் பாடலும் இங்கு வைத்து எண்ணத் தக்கது.

"அன்பு பிழம்பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ" என்று கண்ணப்ப நாயனாரின் பெருமையை தெய்வச் சேக்கிழார் பெருமானும், "கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை" என்று மணிவாசகப் பெருமானும் அருளியது காண்க.

"ஈசனுக்கு அன்பு இல்லார், அடியவர்க்கு அன்பு இல்லார்,

⁠எவ்வுயிர்க்கும் அன்பு இல்லார், தமக்கும் அன்பு இல்லார்,

பேசுவது என்? அறிவிலாப் பிணங்களை நாம் இணங்கில்

⁠பிறப்பினிலும் இறப்பினிலும் பிணங்கிடுவர், விடு நீ"

என்பது அருள்நந்தி சிவம் அருள்வாக்கு. அடியாரிடத்து உண்மை அன்பு செலுத்தாதவர்கள் இறைவனிடத்தும் உண்மையான அன்பு இல்லாதவர்களே. அத்தகையவர்கள் பிற உயிர்களிடத்தும் அன்பு பாராட்டுதல் இல்லை. "தன்னைத் தான் காதலன் ஆயின், எனைத்து ஒன்றும் துன்னற்க தீவினைப் பால்" என்று திருவள்ளுவ நாயனார் கூறி அருளியது போல, இவர்கள் தம் மீதும் அன்பு இல்லாதவர்கள். அத்தகையவர்கள் உயிரோடு இருந்தும் அறிவற்ற பிணத்தினை ஒத்தவர்கள். இதற்கு மேலும் அவர்களைப் பற்றிக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. அவர்களோடு இணங்கி இருத்தல் மேலும் பிறப்பு இறப்புக்களில் நம்மை  ஆட்படுத்திக் கொள்ளுதல் ஆகும். ஆதலால் அவர்களை விட்டு நீங்கி இருத்தலே நலம் பயக்கும். 

இறைவனுக்கு அன்புடைமை என்பது, அவன் அடியவரைக் கண்டு நிகழும் அன்பின் அளவு பற்றியே தெளியப்படும் ஆதலால், அடியவர்க்கு அன்பு இல்லாமல், இறைவனுக்கு அன்புடையோர் போல் ஒழுகுதல் நாடக மாத்திரையே ஆகும். எனவே, அடியவர்க்கு அன்பு இல்லாதார் ஈசனுக்கும் அன்பு இல்லாதவரே ஆவார். எவ்வுயிர்க்கும் உயிராய்,  அன்பே உருவாய்த் திகழும் பரம்பொருளிடத்தே உண்மையான அன்பினைச் செலுத்த எண்ணுவோர், அப் பரம்பொருள் எழுந்தருளியுள்ள கோயில்களாகத் திகழும் ஆருயிர்களிடத்திலே உண்மையான அன்பினைச் செலுத்துதல் வேண்டும்.

"எவ்வுயிரும் நீங்காது உறையும் இறை சிவம் என்று

எவ்வுயிர்க்கும் அன்பாய் இரு"

என்பது சைவசமயநெறி.


"எவ்வுயிரும் என் உயிர்போல் எண்ணி இரங்கவும் நின்

தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே!"

என்பது தாயுமான அடிளார் அருள்வாக்கு.

"அப்பா! நான்  வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்" என்று விண்ணப்பிக்கத் தொடங்கிய வள்ளல்பெருமான், முதலில் "ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்" என்று வேண்டியதைக் கருத்து ஊன்றிக் கவனித்தால், ஆன்மநேய ஒருமைப்பாடு ஒன்றுதான் மனித குலத்தில் விளங்கி இருக்க வேண்டிய பண்பு என்பது புலன் ஆகும். 

"உயிர் எ(ல்)லாம் ஒரு நீ திருநடம் புரியும்

⁠ஒருதிருப் பொது என அறிந்தேன்;

செயிர் எ(ல்)லாம் தவிர்ந்தேன்; திருஎ(ல்)லாம் அடைந்தேன்;

⁠சித்து எ(ல்)லாம் வல்லது ஒன்று அறிந்தேன்;

மயிர் எ(ல்)லாம் புளகித்து, உ(ள்)ளம் எ(ல்)லாம் கனிந்து

⁠மலர்ந்தனன்; சுத்த சன்மார்க்கப்

பயிர் எ(ல்)லாம் தழைக்க, பதி எ(ல்)லாம் களிக்கப்

⁠பாடுகின்றேன் பொதுப் பாட்டே!"


"எவ்வுயிர்த் திரளும் என் உயிர் எனவே

⁠எண்ணி,  நல் இன்புறச் செய்யவும்,

அவ்வுயிர்களுக்கு வரும் இடையூற்றை

⁠அகற்றியே அச்சம் நீக்கிடவும்,

செவ்வை உற்று உனது திருப்பதம் பாடிச்

⁠'சிவ சிவ’ என்று கூத்தாடி,

ஒவ்வுறு களிப்பால் அழிவுறாது இங்கே

⁠ஓங்கவும் இச்சை காண் எந்தாய்!"

எனவரும் வள்ளல்பெருமான் அருட்பாடல்கள் ஆன்மநேய ஒருமைப்பாட்டின் உண்மையைத் தெளிவிக்கும்


பசிப்பிணி மருத்துவர்

 


பசிப்பிணி மருத்துவர்

-----

உயிர்கட்கு தீராத நோய்கள் மூன்று இருக்கின்றன. 1. உடம்புக்கு இடையறாது வருகின்ற நோய் பசி. 2. உள்ளத்தில் எப்போதும் இருக்கின்ற நோய் காமம். 3. உயிருக்கு என்றும் அகலாது வருகின்ற நோய் பிறவி. இவற்றுள் பசி அரசனுக்கும் உண்டு. ஆண்டிக்கும் உண்டு. தொழுநோய், காசநோய் முதலிய நோய்களுடன் பல ஆண்டுகள் போராடுவார்கள். பசி நோயுடன் சில மணி நேரம் போராட முடியாது. "பசி என்னும் தீப்பிணி" என்று திருவள்ளுவ நாயனார் அருளியது காண்க.

உயிர்கள் கருவாய்ப் பதிந்த நாள் தொடங்கி, அவ்வுயிரினது உடம்பின் உள்ளே நிலைபெற்று  இருப்பது பசி ஆகும். உடல் வளர்ச்சிக்கு வேண்டிய உணவினை அவ்வப்பொழுது பக்குவப்படுத்தி நிற்கும் பசியாகிய இத்தீயானது, உடலுக்குத் தர வேண்டிய உணவு உரிய காலத்தில் தரப் பெறாத நிலையில் வயிற்றின் உள்ளிருந்து மூண்டு வெதுப்பும்.  உயிர்களின் கருவி கரணங்களைத் தளர்ச்சி அடையும். எனவே உடம்பொடு கூடிய உயிர்கள் இத்தகைய பசி என்னும் இத்தகைய கொடிய தீயானது தணிய உரிய காலத்தில் உணவினை உட்கொள்ளுதல் இன்றியமையாதது ஆகின்றது. 

உணவினை முதலாகக் கொண்டதே உயிர்கள் பெற்றுள்ள உடம்பாகும். இத்தகைய உணவினைப் பெற இயலாது மக்கள் பசியால் வருந்திய பொழுது அவர்களுக்கு வேண்டிய உணவினைக் கொடுத்தவர்கள், உயிரைக் கொடுத்தவராகவே மதித்துப் போற்றப் பெறுவர். உணவு என்று சொல்லப்படுவது நிலமும் நீரும் விரவிய நிலையில் விளையும் நெல் முதலிய தானியங்களும், காய் கனிகள் முதலியனவும் ஆகும். மக்களுக்கு இன்றியமையாத உணவுப் பொருள்களை  விளைவிக்கும் நோக்குடன் நீரையும் நிலத்தையும் ஒரு வழிக்கூட்டி வளம்பெறச் செய்தவர்கள், இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவர் எனப் பாராட்டப் பெறுவர். இவ்வுண்மை,

"நீர் இன்றி அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே;

உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;

நீரும் நிலனும் புணரியோர் - ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசி னோரே."

என்னும் புறநானூற்றுப் பாடலால் விளங்கும்.

பொருள் அற்ற மக்கள் உணவு பெறாது பசித் தீயால் வாட்டமுற்ற போது பொருள் படைத்தவர்கள், அவர்களுக்கு வேண்டும் உணவு அளித்துப்  பசித்தீயைத் தணிவித்தலே வாழ்வியல் அறமாகும். பொருளை ஈட்டியவர்கள் தாம் ஈட்டிய பொருளைச் சேமித்து வைக்கும் வங்கியாகத் திகழ்வது, பசி தீர்த்தலாகிய அறமே ஆகும் என்னும் உண்மையினை,

"அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன்

பெற்றான் பொருள் வைப்புழி."

என்னும் திருக்குற்ள காட்டுகிறது.


பசியின் கொடுமை குறித்து மணிமேகலைக் காப்பியம் பின்வருமாறு கூறும். 


"குடிப்பிறப்பு அழிக்கும், விழுப்பம் கொல்லும்,

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்,

நாண் அணி களையும், மாண் எழில் சிதைக்கும்,

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி என்னும் பாவி"

இதன் பொருள் ---

உயர்குடிப் பிறப்பைக் கெடுக்கும், விழுப்பம் கொல்லும். சிறப்பினை அழிக்கும்.  பற்றிய கல்வியாகிய பெரிய தெப்பத்தை நீக்கும். நாணாகிய அணிகலனைப் போக்கும். மாட்சிமைப்பட்ட அழகைக் குலைக்கும். பூண் விளங்குகின்ற கொங்கைகளை உடைய மகளிரொடு பிறர் கடைவாயிலில் நிறுத்தும்  பசி நோய் என்று கூறப்படுகின்ற பாவி.

பசிநோய் வந்தால், மானமும்,  குடிப்பிறப்பும், கல்வியும், ஈகையும், அறிவுடைமையும், தானமும், தவமும், உயர்வும், தொழில் முயற்சியும், தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லையுடைய மங்கையர்மேல் ஆசை வைத்தலும் ஆகிய, பத்தும் ஒருவனை விட்டு ஓடிப்போகும் என்கிறார் ஔவைப் பிராட்டியார்.

"மானம் குலங்கல்வி வண்மை அறிவுடைமை,

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்

கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் - பத்தும்

பசிவந்திடப் போம் பறந்து." --- நல்வழி.


அதியமான் நெடுமான் அஞ்சி  என்னும் வள்ளல், தான் உண்ணத் தொடங்கும் போது சிறிய அளவு சோறாக இருந்தாலும், மிக்க அளவு உடைய சோறாக இருந்தாலும், அதனை மிகப் பல கலங்களிலும் பகுத்து வழங்கிப் பலரோடும் உடனிருந்து உண்பான் எனவும், அவ்வாறு பகுத்து உண்ணுதலாகிய அறத்தினை உடைய அந்த வள்ளல் நம்மைவிட்டுப் பிரிந்தானே எனவும் செயலற்று இரங்கும் நிலையில்,

"சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னே

பெருஞ் சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே" -- புறநானூறு.

என ஒளவையார் வருந்திப் பாடியுள்ளார்.

இதன் பொருள் ---

"சோறு எல்லார்க்கும் பொதுவாதலால் சிறு அளவு உடைய சோறாயினும் அதனைப் பல உண்கலன்களிலும் பகுத்துப் பலரோடும் உடனிருந்து உண்பன், மிக்க அளவினை உடைய சோறாயினும் அதனைப் பல உண்கலன்களிலும், பகுத்துப் பலரோடும் உண்பன், அத்தகைய நெடுமான் அஞ்சி இன்று நம்மைவிட்டுப் பிரிந்தனனே." 

எல்லா நூல்களிலும். கூறப்படும் நல்லறங்களைத் தொகுத்து, எல்லா மக்களுக்கும் பொதுப்படக் கூறும் திருவள்ளுவ நாயனார், "கொல்லாமை" என்னும் நல்லறத்தை விளக்கும் அதிகாரத்தில்  பகுத்து உண்ணுதலாகிய அறமே எல்லாவற்றிலும் தலையாயது என்றார்.

"பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"

எனவரும் திருக்குறளில், உண்ணுதற்கு உரிய உணவினை, பசியால் வருந்திய உயிர்களுக்குப் பகுத்துக் கொடுத்து எஞ்சியதைப் பின் தான் உண்டு, எல்லா உயிர்களையும் சோர்ந்தும் இறப்பு நேராமல் குறிக்கொண்டு பாதுகாத்தல் அறநூலோர் தொகுத்த நல்லறங்கள் எல்லாவற்றுள்ளும் முதன்மையாகிய அறமாகும் என்பதை வலியுறுத்தினார்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சியில் சோழநாட்டில் உள்ள சிறுகுடி என்னும் ஊரின் தலைவனாய் விளங்கிய பண்ணன் என்பான், பசியால் வருந்தி வரும் எளியவர்களுக்குப் பெருஞ்சோறு கொடுத்துப் போற்றி வந்தான். பிறர் வறுமை நோக்கி உதவும் பண்ணனது பேரறச் செயலைச் சோழ மன்னன் ஆகிய கிள்ளிவளவன் கேள்வியுற்றான். பண்ணன் வாழும் சிறுகுடிக்குச் சென்று அவனுடைய நல்லறச் செயல்களைப் பாராட்டி மகிழவேண்டுமென எண்ணி, தானும் ஒரு பரிசிலன் போல் அவனுடைய சிறுகுடிக்குப் புறப்பட்டுச் சென்று அவ்வூரின் எல்லையை அடைந்தான். பழுத்த மரத்தில் புறவைகள் கூடி ஒலித்தால் போன்று பண்ணனது மனையில் பெருந்திரளாகக் கூடி உண்ணும் மக்களின்  ஆரவாரம் அவ்வூருக்கு நெடுந்தொலைவிலேயே கேட்டது. மழை பெய்யும் காலத்தை முன்னறிந்து தமது முட்டைகளை மேட்டு நிலத்திற்குக் கொண்டு செல்லும் சிறிய எறும்புகளின் வரிசை போன்று, பண்ணன் வீட்டில் பெரிய சுற்றத்தினருடன் கூடியுண்ட சிறு பிள்ளைகள் அடுத்த வேளைக்குப் பயன்படும்படி தங்கள் கைகளிலே சோற்றுத் திரளைக் கொண்டு செல்லும் அழகிய தோற்றத்தினைக் கிள்ளிவளவன் தன் கண்ணாரக் கண்டான். பண்ணன் இரவலர்பால் வைத்த அருளுடைமையை எண்ணி மனமுருகிய மன்னன், "நான் உயிர் வாழும் நாளையும் தனக்கு உரிமையாகப் பெற்றுப் பண்ணன் வாழ்வானாக"  எனப் பாராட்டி வாழ்த்திப் பின்வரும் பாடலைப் பாடினான்.

"யான் வாழு நாளும் பண்ணன் வாழிய!

பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை,

யாணர்ப் பழுமரம் புள் இமிழ்ந் தன்ன

ஊண் ஒலி அரவந் தானும் கேட்கும்,

பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி

முட்டை கொண்டு வற்புலம் சேரும்

சிறுநுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்பச்

சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்

இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும், கண்டும்,

மற்று மற்றும் வினவுதும் தெற்றெனப்

பசிப்பிணி மருத்துவன் இல்லம்

அணித்தோ, சேய்த்தோ கூறுமின் எமக்கே."  --- புறநானூறு.

இதன் பொருள் ---

நான் உயிர் வாழும் நாளையும் பெற்றுப் பண்ணன் இனிது வாழ்வானாக. பாடும் பாணர்களே! இந்தப் பரிசிலனது சுற்றத்தின் வறுமையைக் காண்பீராக.  புது வருவாயை உடைத்தாகப் பழுத்த மரத்தில் பறவைகள் கூடி ஒலித்தால் போன்று, உணவு உண்பவர்களின் ஆரவாரம் இந்த ஊரின் புறத்திலேயே கேட்கின்றது.  பருவமழை பெய்யும் காலத்தை முன்னரே அறிந்து, தமது முட்டைகளை எடுத்துக்கொண்டு மேட்டு நிலத்தினை அடையும் மிகச்சிறிய எறும்புகள் வரிசையாகச் செல்லும். அதுபோலவே, தமக்குக் கிடைத்து சோற்று உருண்டையைக் கையில் எடுத்துக் கொண்டு போகும் பெரிய சுற்றத்தோடும் கூடிய பிள்ளைகளைக் காண்பீராக. இதனைக் கண்டு வைத்தும், எமது பசி வருத்தத்தாலும், வழிநடந்து வந்த களைப்புத் துயரத்தாலும், மீண்டும் மீண்டும் கேட்கின்றேன். பசி நோயைத் தீர்க்கின்ற அந்த மருத்துவனது வீடு அண்மையில் உள்ளதா? அல்லது வெகுதொலைவில் உள்ளதா? எமக்குத் தெளிவாகச் சொல்லுங்கள்.

ஒருவருடைய இயல்புகளைக் கூறி வாழ்த்துவோர், 'பல்லாண்டு வாழ்க' என்று வாழ்த்துதல் உலக இயல்பு. மக்கள் கருவாய்ப் பதிகின்ற போதே அவர்களுக்குரிய வாழ்நாளும் வரையறை செய்யப்பட்டு விட்டது. அதற்கு மேலும் பல ஆண்டுகள் வாழ்க என வாழ்த்துதல் பொருத்தம் அற்றது என, எண்ணுபவர்கள்,  'ஊழால் உனக்கு வரையறுக்கப்பட்ட நாள் முழுதும் இனிதாக வாழ்வாயாக'  என வாழ்த்துதலும் உண்டு. இப்படி இருவகையிலும் வாழ்த்துவோர்க்கு இழப்பு ஏதும் உண்டாவது இல்லை. ஆனால், பசிப்பிணி மருத்துவனாக விளங்கிய பண்ணனை வாழ்த்திய கிள்ளிவளவன், தனக்குத் தெய்வத்தால் வரையறுக்கப்பட்ட ஆயுளில் கழிந்தன போக, இனி எஞ்சி இருக்கின்ற நாளையும் பண்ணன் தன் வாழ்நாட்களுடன்  சேர்த்துப் பெற்று இனிது வாழ்வானாக என வாழ்த்துகின்றான். தனக்கென வாழா, பிறர்க்கு உரியாளனாகிய பண்ணனது அருளையும், அவனது அறச் செயல்களில் ஈடுபட்டுத் தன்னை மறந்து உள்ளம் உருகிய சோழமன்னன் கிள்ளிவளவனது உள்ளத்தின் உயர்வையும் நன்கு சிந்தித்தல் வேண்டும். பசித்து வந்தோர்க்குப் பகுத்து உண்ணுதலாகிய அறச்செயல், பெரும் செல்வர்களால் மட்டுமின்றி ஏழை எளிய மக்களாலும் நாளும் மேற்கொள்ளுதற்குரிய எளிமை உடையதே,  உளத்தால் உயர்ந்தவர்களால் இது இயலும் என்பதனை, "யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி" எனத் திருமூல நாயனார் இரத்தினச் சுருக்கமாக அருளினார்.

தமிழ்க் காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலையில் ஆபுத்திரனும், மாதவியின் மகள் மணிமேகலையும் "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்னும் உயர்ந்த குறிக்கோளுடன் பிச்சை எடுத்தாவது மக்களது பசிப்பிணியைப் போக்கிய செய்திகளைக் காணலாம். 

திருஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் பெருமானும் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வழிபட்டு இருந்த காலத்தில் உண்டாகிய பஞ்சத்தால்,  உணவு இன்றி, உணவுப் பொருள்களும் இன்ளி, மக்கள் வருந்திய வருத்தத்தைத் தீர்க்க, மடங்களை அமைத்து, இறைவன் திருவருளால் நாள்தோறும் படிக்காசு பெற்று, நாள்தோறும் மக்களுடைய பசியை, பஞ்சம் தீரும் காலம் வரையில் செய்து வந்தார்கள்.

அருணகிரிநாதப் பெருமான் அருளிய உபதேசம் ஒன்று உண்டு. அது மிகவும் அற்புதமான உபதேசம். பின்பற்றுவதற்கு எளிமையான உபதேசம். "முருகா! என்று சொல்லிக் கொண்டு நாளும் இரு. அதற்காக உண்ணாமல் இருக்கவேண்டாம். உண்ணுகின்ற சோற்றில் ஒருபிடியை பசித்து வந்தவர்க்கு இட்டு, அதன்பிறகு நீ உண்டு மகிழ். இது போதும். இதுவே, ஒரு பிடி சாம்பலும் கூடக் காணாமல் அழிந்து போகக் கூடிய இந்த உடம்பை எடுத்து வந்ததன் பயன் ஆகும்" என்கின்றார் நமது அருட்குருநாதர் ஆகிய அருணை வள்ளலார்.

"பொரு பிடியும் களிறும் விளையாடும் புனச்சிறுமான்

தரு பிடி காவல! சண்முகவா! எனச் சாற்றி நித்தம்

இரு, பிடிசோறு கொண்டு இட்டுஉண்டு, இருவினையோம் இறந்தால்

ஒருபிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே" --- கந்தர் அலங்காரம்.

இவை எல்லாம் பண்டைத் தமிழினம், அற்றார் அழிபசியைப் போக்குவதைத் தமது வாழ்வியலாகக் கொண்டு இருந்தது என்பதை விளக்கிக் காட்டுவன ஆகும். இந்த அருள்நெறி மேலும் விளக்கம் பெறுவதற்காகவே, இறைவன் திருவருளால், சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வள்ளல்பெருமான் தோன்றி, எத்தகைய வேறுபாடும் கருதாது மக்களது பசிப்பிணியினைப் போக்குதற்கு என்றே, சத்திய தருமச் சாலையை நிறுவி, தமது அருட்கருணையால் ஏழை எளியவர்களின் பசிதீர உணவு அளிப்பதே இறைபணி என்ற சீரிய சிந்தனையை மக்கள் உள்ளத்திலே நன்கு நிலைபெறச் செய்து அருளினார்கள். 

பிற உயிர்கள் படும் துன்பத்தினைக் கண்டால் அறிவுடைய நன்மக்கள் உள்ளத்திலே இரக்க உணர்வு தன்னியல்பில் தோன்றுவதாகும். இத்தகைய இரக்கம் காரணமாகப் பிற உயிர்களின் துயரங்களைப் போக்குதற்கு முற்பட்டு முயலும் அருளாளர்களின் கருணைத் திறம் கொல்லாமை, புலால் உண்ணாமை, ஏழைகளின் பசி தீர்த்தல் என்னும் இம்மூவகை அறங்களால் நிகழும்.  இம் மூவகை அறங்களுள்ளும் பொருட்செல்வம் உடையோர், ஏழைத் தொழிலாளர், முதலிய பலதிற மக்களும் தம் வாழ்வில் எளிதில் கடைப்பிடித்தற்கு உரிய தலைசிறந்த அறமாகத் திகழ்வது, பசியால் வாட்டம் உற்றவர்களின் பசிப் பிணியைத் தீர்த்தலாகிய 'அன்னதானம்'  ஒன்றே ஆகும். பசித்தோர்க்கு உணவு இடுதலின் இன்றியமையாமையை வள்ளல்பெருமான், தாம் இயற்றிய சீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரைநடை நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.

உயிர்களின் உணர்வு ஒழுக்கங்களை அழித்து, அவ்வுயிர்கட்கு இறுதி விளைப்பதாகிய பசிப்பிணியின் கொடுமையினையும், அற்றார் அழிபசி தீர்த்தலாகிய நல்லறத்தினை மேற்கொண்டு செய்வோர் அடைதற்குரிய பெரும் பயன்களையும், வறியோரது பசி தீர்த்தலாகிய அறத்தினைச் செய்யாது மக்கள் மேற்கொள்ளும் பிற அறச் செயல்களும், தீர்த்தயாத்திரை முதலிய கடவுள் வழிபாடுகளும் எத்தகைய பயனையும் தரமாட்டா என்பதனையும் அறிவுறுத்தி உள்ளார். இந்த அருள்மொழிகளை உள்ளத்தில் பதித்துக் கொள்ள வேண்டியது நமது கடமை ஆகும்.

அருளின் திருவுருவாய்த் தோன்றிய அடிகளார், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் உளம் நைந்து வாடினார். பசியினால் இளைத்து, வீடுதோறும் சென்று பிச்சை எடுத்தும், பசிநோய் தணியப் பெறாது அயர்ந்தவர்களைக் கண்டு உள்ளம் வெதும்பினார். நாள்பட்ட நோயால் வருந்துவோரைக் கண்டு தமது உள்ளம் வருந்தி அவர்களுக்கு மருந்து அளித்துப் பிணிதீர்த்தார். உலகில் ஏழை மக்கள் பசியால் வருந்துகின்றார்கள் எனப் பிறர் சொல்லக் கேட்ட போதெல்லாம் உள்ளம் பகீர் எனத் துடித்தார். மானம் உடையவர்களாய், பிறரிடத்தில் சென்று இரந்து உண்ண மனம் கொள்ளாத ஏழைகள் நெஞ்சு இளைத்து இருந்தமையைக் கண்டு தானும் இளைப்பு உற்றார்.

"வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம்

⁠வாடினேன்; பசியினால் இளைத்தே

வீடுதோறு இரந்தும் பசி அறாது அயர்ந்த

⁠வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்;

நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் 

நேர் உறக் கண்டு உள்ளம் துடித்தேன்; 

ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு

இளைத்தவர் தம்மைக் கண்டே இளைத்தேன்"  --- திருவருட்பா.

உலகியல் வாழ்வில் பசியின் கொடுமையினை உள்ளவாறு உணர்ந்து உள்ளம் வருந்திய வள்ளல்பெருமான், பசிப்பிணியினை அறவே நீக்கத் திருவுள்ளம் கொண்டு சீவகாருண்ணிய ஒழுக்கத்தை அன்றாடம் நடைமுறையில் செயற்படுத்துதற்கென்றே வடலூரில் சத்திய தருமச் சாலையை நிறுவிப் பசிப்பிணி மருத்துவராகத் திகழ்ந்தார். 

வியாதிகள் நீங்க வள்ளல் பெருமான் கூறும் மருந்து ---

சூலை, குன்மம், குட்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்கட்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பே நல்ல மருந்தாக, அந்த வியாதிகளை நிவர்த்தி செய்து, விசேட சுகத்தை உண்டு பண்ணும் என்பது உண்மை.

பிள்ளைப் பேறு இல்லாதவர்க்கு வள்ளலார் கூறும் மருந்து ---

பலநாள் சந்ததி இல்லாமல் பலபல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பு, நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணும் என்பது உண்மை.

நீண்ட ஆயுள் பெற வள்ளலார் கூறும் மருந்து ---

அற்ப வயது என்று குறிப்பினால் அறிந்து கொண்டு இறந்து போவதற்கு அஞ்சி. விசாரப்படுகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி, பசித்த ஏழைகளுக்குப் பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பு தீர்க்காயுளை உண்டு பண்ணும் என்பது உண்மை.

கல்வியும் செல்வமும் பெற வள்ளலார் கூறும் வழி ---

கல்வி, அறிவு, செல்வம், போகம் முதலியவைகளைக் குறித்து வருந்துகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பே கல்வி, அறிவு, செல்வம், போகம் முதலானவைகளை உண்டு பண்ணும் என்பது உண்மை.

மருத்துவர் ஆகவேண்டுமானால், அதற்கான கல்வியைப் பெரும்பொருள் செலவில் பெற்றுக் கொள்ளவேண்டும். ஆனால், பணிப்பிணி மருத்துவர் ஆவதற்கு அவ்வளவு முயற்சி அவசியம் இல்லை. நாள்தோறும் தான் உண்ணும் உணவில் ஒரு கைப்பிடியைப் பசித்தோர்க்கு அளித்து வரும் உள்ளம் அமைந்தாலே போதும். "வயிற்றுக்குச் சோறு இட வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்" என்றார் பாரதியார். எல்லோரும் பசிப்பிணி மருத்துவர் ஆவது எளிது.


பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...