பட்டினத்தடிகள் பாடியருளிய
திரு ஏகம்ப மாலை
திருச்சிற்றம்பலம்
"அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம்
துறந்தான், அவனில் சதகோடி உள்ளத் துறவு உடையோன்,
மறம்தான் அறக் கற்று, அறிவோடு இருந்து, இருவாதனை அற்று,
இறந்தான் பெருமையை என்சொல்லுவேன், கச்சிஏகம்பனே!"
பதவுரை ---
கச்சிஏகம்பனே! - திருக்காஞ்சியில் எழுந்தருளி உள்ள ஏகம்பநாதனே! அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான் - மனத் தூய்மையோடு இல்லறத்தில் நடத்த வேண்டிய தருமங்களை முறையாகச் செய்து, மறுமையில் சுவர்க்காதி பதங்களைப் பெறும் இல்லறத்தானை விடவும், இல்லத்தை விட்டு நீங்கி, எனது என்னும் புறப்பற்று அற்றவன் ஒரு கோடிப் பங்கு உய்ரந்தவன் ஆவான். அவனில் சதகோடி உள்ளத் துறவு உடையோன் - அவனைக் காட்டிலும் நான் என்னும் அகப்பற்று நீங்கி, உள்ளத் துறவு உடையவன் நூறு கோடிமடங்கு உயர்ந்தவன் ஆவான். மறம் தான் அறக் கற்று - தீவினையாகிய துன்பங்களில் இருந்து நீங்க, அறிவுநூல்களைக் கற்று, அறிவோடு இருந்து - நல்லறிவு தலைப்பட்டு இருந்து, இருவாதனை அற்று - இருவகைத் துன்பங்கள் ஆகிய புண்ணிய பாவங்களின் செயல் அற்று, இறந்தான் பெருமையை என் சொல்லவேன் - உலக ஒழுக்கங்களில் இருந்து நீங்கித் தவ ஒழுக்கத்தினை மேற்கொண்ட உண்மைத் துறவியின் சிறப்பினை அடியேன் என்ன என்று கூறுவேன்?
விளக்கம் : அறம் என்றது, அறநூங்களில் விதித்தவற்றைச் செய்தலும், விலக்கியவற்றைச் செய்யாது ஒழித்தலும் ஆகும். முதற்கண் அறம் என்றது இல்லறத்தை. காரணம், பின்னர் இல்லம் துறந்தான் என்றும் சுவாமி கூறுகின்றார். "அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை" என்று திருவள்ளுவ நாயனார் கூறினார். இல்லம் - வீடு. இல்லம் துறந்தான் - புறப்பற்றுக்களை விட்டவன். எனது என்பது புறப்பற்று. உள்ளத் துறவு உடையோன் - நான் என்னும் அகப்பற்று அற்ற சந்நியாசி. அறிவோடு உள்ளவன் - யோகஞானி. அறிவு மயமாய் விளங்கும் ஞானியே சீவச்செயல் சிறிதும் இன்றி, சிவமாகி வீடு அடைவான். அவன் பெருமையை அளவிடுதல் இறைவன் பெருமையை அளவிடுதலோடு ஒக்கும் என்பதால் 'என் சொல்லுவேன்' என்றார். மறம் - அதருமம், பாவம். (அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் முதலியன அறத்திற்கு மாறானவை.) கற்றல் - அபரஞானம், நூலறிவு. அறிவோடு இருத்தல்- பரஞானம், நுண்ணறிவு.
"கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர் சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்து அறியாரே." --- திருமூலர் திருமந்திரம்.
சிவத்தை அறிகின்ற கல்வியினைக் கல்லாதார் மூடர் எனப்படுவர். அவரே உண்மையில் அறிவிறல்லாதவரும் ஆவர். அவ்வறிவிலாதவரை நல்லார் காணவும் அஞ்சுவர். அதனால் அம் மூடரைக் காணவொண்ணாது என்றனர். மூடர் என்போர் அறியாமையால் மூடப்பட்டவர். அவர்தம் ஒழுக்கமிலாத இழுக்கு வாயால் வரும் வழுக்குமொழிகளைச் செவி கொடுத்துக் கேட்பது முறைமையாகாது. (கடன் - முறைமை.) கல்லாத மூடர்க்குத் திருமுறைக் கல்வி இல்லாதவரே நல்லாராவர். கல்லாத மூடர் ஆகும் கருத்தினையும் அறியார்; ஆன்றோர் கருத்தினையும் அறியார்.
அறிவு இல்லாதவரைக் கண்டால் மட்டுமே அச்சம் கொள்ள வேண்டும் என்கிறார் மணிவாசகப் பெருமான்.
"தறிசெறி களிறும் அஞ்சேன், தழல்விழி உழுவை அஞ்சேன்,
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்க ளேத்திச் சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே"
இதன் பொருள் ---
கட்டுத் தறியிலே பொருந்தியிருக்கும் ஆண் யானைக்கும் அஞ்சமாட்டேன். நெருப்புப் போன்ற கண்களை உடைய புலிக்கும் அஞ்சமாட்டேன். மணம் வீசுகின்ற திருச்சடையை உடையவனும் தந்தையும் ஆகிய இறைவனது, தேவர்களாலும் அடைய முடியாத நெருங்கிய கழலணிந்த திருவடிகளைத் துதித்துச் சிறப்புற்று, இன்பமாக இருக்க மாட்டாத அறிவிலிகளைக் காணின் ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.
"கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார், துரிசு அறார் மூடர்கள்,
மற்றும் பல திசை காணார் மதி இலோர்,
கற்று அன்பில் நிற்போர் கணக்கு அறிந்தார்களே." --- திருமூலர் திருமந்திரம்.
அளவில்லாத உலக நூற்களைக் கற்றும் அறிவுநூலாகிய சிவஞானம் கல்லாதவர் கலதிகளாகிய வீணர்களாவர். 'மறப்பித்துத் தம்மை மலங்களில் வீழ்க்கும், சிறப்பு இல்லாதா'ர் ஆகிய தீய சுற்றத்தைவிட்டு நீங்கார். அதனால் அவர் மும்மலக் குற்றத்தனின்றும் நூங்கார். இத்தகையார் மூடர்கள் எனப்படுவர். பல திசைகளிலும் திருவடியுணர்வு கைவந்த நல்லோர் மாண்பினைக் கண்டும் கேட்டும் இவர் தேறார். இவர்கள் உய்யும் அறிவு இல்லாதவர் ஆவர். திருவடியுணர்வுத் திருமுறை கற்றபின் அதன்படி ஓவாது ஒழுகிக் கண்ணுதலோன் அன்பினில் உறுதியாக நிற்போரே கணக்கறிந்தாராவர். (வீடார் - விட்டு நீங்கார். கணக்கு - முறைமை. கலதிகள் - வீணர்கள். துரிசு - களங்கம்.) என்றார் திருமூல நாயனார்.
"கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்" என்று பாடினார் திருஞானசம்பந்தப் பெருமான். "கற்றதனால் ஆய பயன் என்கொல், வால்அறிவன் நல்தான் தொழாஅர் எனின்"என்றார் திருவள்ளுவ நாயனாரும்.
"கல்லாத பேர்களே நல்லவர்கள், நல்லவர்கள்,
கற்றும்அறி வில்லாதஎன்
கர்மத்தை என்சொல்கேன்; மதியை என் சொல்லுகேன்;
கைவல்ய ஞானநீதி
நல்லோர் உரைக்கிலோ கர்மத் முக்கியம்என்று
நாட்டுவேன்; கர்மம் ஒருவன்
நாட்டினாலோ, பழைய ஞானம் முக்கியம் என்று
நவிலுவேன்; வடமொழியிலே
வல்லார் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே
வந்ததா விவகரிப்பேன்;
வல்லதமிழ் அறிஞர்வரின் அங்ஙனே வடமொழியில்
வசனங்கள் சிறிதுபுகல்வேன்;
வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகைவந்த
வித்தைஎன்? முத்திதருமோ?
வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற
வித்தகச் சித்தர்கணமே." --- தாயுமானார்.
இதன் பொருள் ---
பண்பாடு இன்றி நூலை மட்டும் கற்றவர்களைக் காட்டிலும், கல்லாதவர்களே மிகவும் நல்லவர்கள் ஆவர். நூல்களைக் கற்றும் கற்றபடி ஒழுகும் அறிவு இல்லாத ஊழ்வினைப் பயனை என்ன என்று சொல்லுவேன்? வினைவழி ஒழுகும் அறிவினை என்ன என்று சொல்லுவேன். வீடுபேற்றினை அளிக்கும் மெய்யுணர்வு முறைமைகளை, திருவருள் கைவந்த செம்பொருள் துணிவினர் எனப்படும் நல்லார்கள் நயந்து உரைப்பார்களாயின், அவ்வுணர்வினும் சிறந்தது செய்யும் வினையே முதன்மையானது என்று வலியுறுத்திக் கூறுவேன். மற்றொருவன் வினையே முதன்மை உள்ளது என்று பலவாறு கூறி நாட்டுவானாகில், தொன்மையாகத் தொடர்ந்து வருகின்ற மெய்யுணர்வே முதன்மை உடையது என்று முன்னின்று நாட்டுவேன்;
வடமொழி வல்லான் ஒருவன் வந்து சொற்போர் தொடுத்தால், திராவிடம் எனப்படும் சிறந்த தமிழ்மொழியிலே வந்து உள்ளதெனச் சொற்போர் இடுவேன். தமிழறிவு படைத்த ஒருவன் வருவனாயின், வடமொழியில் இருந்து சில சொற்களைச் சொல்லி வருவேன். முறையாக எவரையும் வெல்லுதல் செய்யாது, வாயடி அடித்து அவர்களை மயக்கம் செய்து ஓட்டிவிடும்படியாக அடியேனுக்கு வகைவந்துள்ள பாழான கல்வியானது வீடுபேற்றினைத் தருமோ? (தாராது) மறைமுடிவும் திருமுறைமுடிவும் ஆகிய வேதாந்த சித்தாந்த சமரசம் என்னும் வேறுபாடு இல்லாத நல்ல நிலைபெற்ற மூதறிவாம் மெய்யுணர்வினை உடைய சித்தர்தம் சீரிய திருக்கூட்டமே.
நூல்கள் இருவகைப்படும். அவை உலகநூல்கள், மெய்ந்நூல்கள் என்பன. உலகியல் பற்றி எழுந்தவை உலகநூல்கள். வீட்டு நெறியை உணர்த்துவன மெய்ந்நூல்கள். உலகநூல்களை யாரும் கற்கலாம். பல துறைகளைச் சார்ந்த உலகநூல்களை அவ்வத் துறையில் வல்ல ஆசிரியரை அடுத்துக் கேட்டு விளங்கிக் கொள்ளலாம்.
ஆனால், மெய்ந்நூல்கள் அத்தகையன அல்ல. அவற்றைக் கற்பதற்குப் பக்குவம் வேண்டும். பக்குவமில்லார் அவற்றைக் கற்க விழையார். கற்க முன்வரார். ஒருவேளை முன்வந்த போதிலும் அவற்றின் பொருளை உள்ளவாறு விளங்கிக் கொள்ளார். ஏனெனில் ஆசை, வெகுளி முதலிய மாசுகள் மனத்தில் இருக்கின்ற வரையில் அம் மனத்தில் ஞானநூற் பொருள்கள் சென்று பதியா. முன்கூறியபடி மனம் மொழி மெய்களினால் இறைவனை உண்மையாக வழிபட்டு வருவோர்க்கு மனமாசுகள் அகலும்; உள்ளத்தூய்மை உண்டாகும். அவரே பக்குவம் உடையவர். அவரே மெய்ந்நூலறிவைப் பெறுதற்கு உரியவர்.
பொருளியல்பை உள்ளவாறு உணர்தலே ஞானமாகும். அதாவது, தனக்குப் புகலாகிய இறைவனது இயல்பையும், அவன் வழியில் நிற்றற்குரிய தனது இயல்பையும், அவ்வாறு நிற்கவொட்டாது தன்னைத் தடுத்து நிற்கும் தளையினது நிலையையும் உள்ளவாறு உணர்தலே ஞானமாகும்.
இந்த ஞானத்தைத் தரும் மெய்ந்நூல்களை ஒருவர் தாமே முயன்று கற்று ஞானத்தைப் பெறுதல் என்பது இயலாது. ஏனைய ஆசிரியன்மார்களை அடைந்து வருந்திக் கற்று ஞானத்தைப் பெறலாம் என்பதும் இயலாது. ஏனெனில் நம்மினும் சிறிது அதிகம் கற்ற அவ்வாசிரியர்கள் உலகநூற் பொருளை உணர்த்த வல்லவரேயன்றி ஞானநூற் பொருளை உணர்த்தும் தகுதியுடையவர் அல்லர்.
மெய்ப்பொருளை உணரும் கல்வியே உண்மைக் கல்வி ஆகும். அதனால் பெறும் அறிவே உண்மை அறிவு ஆகும். "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்றார் திருவள்ளுவ நாயனார். பிறரை மருட்டி வெருட்டி வெல்லுமாறு கற்கும் கல்வி மெய்ந்நூல் கல்வி ஆகாது. பசுநூல் கல்வி எனினும் உலகியற்கல்வி எனினும் ஒன்றே. இவற்றைச் சிறப்புக் கல்வி என்றும், பிறப்புக் கல்வி என்றும் பெரியோர் கூறுவர். பசுநூல் கல்வி அல்லது உலகியற்கல்வி பற்றி திருவிசைப்பா என்னும் ஒன்பதாம் திருமுறையில் ஒரு பாடல் வரும்.
"எச்சனைத் தலையைக் கொண்டு செண்டு அடித்து, இடபம் ஏறி
அச்சங்கொண்டு அமரர் ஒட நின்ற அம்பலவற்கு அல்லாக்
கச்சரை, கல்லாப் பொல்லாக் கயவரை, பசுநூல் கற்கும்
பிச்சரைக் காணா கண்,வாய் பேசாது அப் பேய்களோடே." --- திருவிசைப்பா.
இதன் பொருள் ---
காளை வாகனத்தில் ஏறி வந்து எச்சனுடைய தலையைப் பூச்செண்டினை உருட்டுவது போல எளிதில் துண்டாக்கி, அஞ்சித் தேவர்கள் ஓடுமாறு வேள்விக் கூடத்தில் நின்ற சிவபெருமானை வழிபடாத வெறுக்கத் தக்கவரையும், அப்பெருமானைப் பற்றிய நூல்களைக் கல்லாத கீழ்மக்களையும், சிறுதெய்வங்களைப் பரம்பொருளாகக் கூறும் நூல்களைக் கற்கும் மயக்க உணர்வினரையும் என் கண்கள் காணமாட்டா. அப்பேயரோடு என்வாய் உரையாடாது.
இதனையே "நாலடியார்" வேறுவகையாக விளக்கும்.
"அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது,
உலகநூல் ஓதுவது எல்லாம், - கலகல
கூஉந் துணை அல்லால், கொண்டு தடுமாற்றம்
போஒந் துணை அறிவார் இல்."
இதன் பொருள் ---`
அவு அமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல்களைக் கற்று மெய்ப்பயன் பெறாமல், உலக வாழ்வுக்கு உரிய வாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக்கொண்டிருப்பது, கலகல என்று இரையும் அவ்வளவே. அல்லால், அவ் வுலகநூலறிவு கொண்டு பிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையை அறிகின்றவர் எங்கும் இல்லை. (கருவிக் கல்வி கொண்டு மெய்யுணர்வுக் கல்வி பெறுதலே, நோக்கமாதல் வேண்டும் என்பது கருத்து)
இப்பாடலில், பட்டினத்தடிகள் இரண்டு நிலைகளைக் காட்டினார். ஒன்று ஆன்மா மறத்தோடு இருத்தல். மற்றொன்று அறிவோடு இருத்தல். மறத்தோடு உள்ள நிலை, பெத்தநிலை என்றும் கட்டுநிலை என்றும் சொல்லப்படும். இந்நிலையில் ஆன்மாவுக்கு உண்மை அறிவு விளங்காது. அறிவு என்றது அறிவுப் பொருளாகிய இறைவனை. ஆன்மா தத்துவங்களோடு கலந்து உள்ள காலத்தில் தன்னிலை மறந்து, தன்னைக் கண்ட பொருளாகவும், அளவிடக் கூடியதாகவும் கருதும். ஆன்மா தத்துவங்களைக் களைந்து, தத்துவாதீதமாகிய சிவத்தோடு கலந்து விளங்கும் காலத்தில், அகண்டமாய் அளவு அற்றதாய் ஒளிரும்.
இருவாதனை என்றது, நல்வினை, தீவினை; பிறப்பு இறப்பு; இன்பம் துன்பம்; இம்மை மறுமை. "இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்" என்றார் திருவள்ளுவ நாயனாரும்.