வடதிருமுல்லைவாயில் - 0694. சோதி மாமதி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சோதி மாமதி (வடதிருமுல்லைவாயில்)

முருகா!
விலைமாதர் மயலில் அழியாமல்
நற்கதி பெற அருள்.


தான தானன தானன தந்தன
     தான தானன தானன தந்தன
          தான தானன தானன தந்தன ...... தனதான


சோதி மாமதி போல்முக முங்கிளர்
     மேரு லாவிய மாமுலை யுங்கொடு
          தூர வேவரு மாடவர் தங்கள்மு ...... னெதிராயே

சோலி பேசிமு னாளிலி ணங்கிய
     மாதர் போலிரு தோளில்வி ழுந்தொரு
          சூதி னால்வர வேமனை கொண்டவ ...... ருடன்மேவி

மோதி யேகனி வாயத ரந்தரு
     நாளி லேபொருள் சூறைகள் கொண்டுபின்
          மோன மாயவ மேசில சண்டைக ...... ளுடனேசி

மோச மேதரு தோதக வம்பியர்
     மீதி லேமய லாகிம னந்தளர்
          மோட னாகிய பாதக னுங்கதி ...... பெறுவேனோ

ஆதி யேயெனும் வானவர் தம்பகை
     யான சூரனை மோதிய ரும்பொடி
          யாக வேமயி லேறிமு னிந்திடு ...... நெடுவேலா

ஆயர் வாழ்பதி தோறுமு கந்துர
     லேறி யேயுறி மீதளை யுங்கள
          வாக வேகொடு போதநு கர்ந்தவன் ...... மருகோனே

வாதி னால்வரு காளியை வென்றிடு
     மாதி நாயகர் வீறுத யங்குகை
          வாரி ராசனு மேபணி யுந்திரு ...... நடபாதர்

வாச மாமல ரோனொடு செந்திரு
     மார்பில் வீறிய மாயவ னும்பணி
          மாசி லாமணி யீசர்ம கிழ்ந்தருள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சோதி மாமதி போல் முகமும், கிளர்
     மேரு உலாவிய மாமுலையும் கொடு,
          தூரவே வரும் ஆடவர் தங்கள் முன், ...... எதிராயே

சோலி பேசி முன் நாளில் இணங்கிய
     மாதர் போல், ரு தோளில் விழுந்து, ரு
          சூதினால் வரவே, மனை கொண்டு அவர் ....உடன்மேவி

மோதியே, கனி வாய் அதரம் தரு
     நாளிலே, பொருள் சூறைகள் கொண்டு, பின்
          மோனமாய் அவமே சில சண்டைகள் ......உடன்ஏசி,

மோசமே தரு தோதக வம்பியர்
     மீதிலே, மயல் ஆகி மனம் தளர்,
          மோடன் ஆகிய பாதகனும் கதி ...... பெறுவேனோ?

ஆதியே எனும் வானவர் தம் பகை
     ஆன சூரனை மோதி, ரும்பொடி
          ஆகவே மயில் ஏறி முனிந்திடு ...... நெடுவேலா!

ஆயர் வாழ்பதி தோறும் உகந்து, ரல்
     ஏறியே உறி மீது அளையும், களவு
          ஆகவே கொடு போத நுகர்ந்தவன் ...... மருகோனே!

வாதினால் வரு காளியை வென்றிடும்,
     ஆதி நாயகர் வீறு தயங்கு கை
          வாரி ராசனுமே பணியும் திரு ...... நடபாதர்,

வாச மாமலரோனொடு, செந்திரு
     மார்பில் வீறிய மாயவனும் பணி,
          மாசிலாமணி ஈசர் மகிழ்ந்து அருள் ...... பெருமாளே.


பதவுரை


      ஆதியே எனும் வானவர் தம் பகை ஆன சூரனை மோதி ---- ஆதி மூர்த்தியே என்று உம்மைப் போற்றிய தேவர்களுடைய பகைவனாகிய சூரனைத் தாக்கி

     அரும் பொடி ஆகவே --- நன்கு பொடியாகும்படிச் செய்து,

     மயில் ஏறி முனிந்திடு நெடுவேலா --- மயில் மீது இவர்ந்து சென்று கோபித்த நெடிய வேலாயுதத்தை உடையவரே!

      ஆயர்வாழ் பதிதோறும் உகந்து --- இடையர்கள் வாழ்ந்திருந்த ஊர்கள் தோறும் விரும்பிச் சென்று,

     உரல் ஏறியே --- உரலின் மீது ஏறி

     உறி மீது அளையும் களவாகவே கொடு போத(ம்) நுகர்ந்தவன் மருகோனே --- உறி மேல் உள்ள வெண்ணெயை திருட்டுத் தனமாகக் கொண்டு போய் வேண்டிய அளவு உண்டவனுடைய திருமருகரே!

       வாதினால் வரு காளியை வென்றிடும் ஆதிநாயகர் --- வாது செய்ய வந்த காளியை வென்ற முதற்பரம்பொருளும்,

     வீறு தயங்கு கை வாரி ராசனுமே பணியும் --- மேலிட்டு விளங்கி கும்பிட்டு வீழும் கைகள் போல் வருகின்ற பெரும் அலைகளை உடைய கடல் அரசனாகிய வருணனும் வணங்கும்

     திரு நடபாதர் --- திரு நடனம் புரியும் அழகிய பாதங்களை உடையரும் ஆகிய சிவபெருமான்,

      வாச மாமலரோனொடு --- நறுமணம் உள்ள தாமரையில் வாசம் புரியும் பிரமனோடு,

     செம் திரு மார்பில் வீறிய மாயவனும் பணி ---அழகிய திருமகள் விளங்கும் திருமார்பினை உடைய திருமாலும் வணங்குகின்,

     மாசிலாமணி ஈசர் மகிழ்ந்து அருள் பெருமாளே --- வடதிருமுல்லைவாயில் என்னும் திருத்தலத்தில் மாசிலாமணி ஈசர் என்னும் திருநாமத்தோடு எழுந்தருளி உள்ள சிவபெருமான் உள்ளம் மகிழ்ந்து அருளிய பெருமையில் மிக்கவரே!

       சோதி மாமதி போல் முகமும் --- ஒளி பொருந்திய சிறந்த நிலவைப் போன்ற முகத்தினையும்,

     கிளர் மேரு உலாவிய மாமுலையும் கொடு --- விளங்குகின்ற மேருமலையைப் போன்ற பெரிய முலைகளையும் கொண்டு,

      தூரவே வரும் ஆடவர் --- தொலைவிலே வருகின்ற ஆடவர்கள்,

     தங்கள் முன் எதிர் ஆயே --- தங்கள் முன்னர் எதிர்ப்பட்ட போது,

     சோலி பேசி --- காரியமாகப் பேசி,

     முன் நாளில் இணங்கிய மாதர் போல் --- முன்னமேயே பழக்கம் கொண்டு பெண்களைப் போல்,

      இருதோளில் விழுந்து --- எதிர்ப்பட்ட ஆடவருடைய இரு தோள்களிலும் விழுந்து,

     ஒரு சூதினால் --- ஒப்பற்ற வஞ்சகமான செயலால்,

     வரவே --- வருவதற்கு இணங்கும்படியாகச் செய்து,

     மனை கொண்டு அவருடன் மேவி --- தங்களின் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் அவர்களுடன் பொருந்தி இருந்து,

      மோதியே --- வலிய அணைத்துக் கொண்டு,

     கனிவாய் அதரம் தருநாளிலே --- கனியமுதம் போன்ற வாயிதழைத் தருகின்ற நாள்களில்,

     பொருள் சூறைகள் கொண்டு --- பொருள்களை எல்லாம் வலியக் கவர்ந்து கொண்டு,

     பின் மோனமாய் --- பிறகு பேசாமல் மவுனமாக இருந்து,

     அவமே சில சண்டைகளுடன் ஏசி --- வீணாகச் சில சண்டைகள் இட்டு, இகழ்ந்து பேசியும்,

       மோசமே தரு தோதக வம்பியர் மீதிலே மயலாகி --- மோசத்தைச் செய்கின்ற வஞ்சனை மிக்க துட்ட மகளிர் மேல் காம இச்சை கொண்டு,

     மனம் தளர் மோடன் ஆகிய பாதகனும் கதி பெறுவேனோ --- உடல் மட்டும் அல்லாமல் மனமும் தளர்ச்சி அடைகின்ற மூடனும் பாதகனாகிய அடியேனும் நற்கதியைப் பொருந்துவேனோ?


பொழிப்புரை


     ஆதி மூர்த்தியே என்று உம்மைப் போற்றிய தேவர்களுடைய பகைவனாகிய சூரனைத் தாக்கி, நன்கு பொடியாகும்படிச் செய்து, மயில் மீது இவர்ந்து சென்று கோபித்த நெடிய வேலாயுதத்தை உடையவரே!

       இடையர்கள் வாழ்ந்திருந்த ஊர்கள் தோறும் விரும்பிச் சென்று, உரலின் மீது ஏறி, உறி மேல் உள்ள வெண்ணெயை திருட்டுத் தனமாகக் கொண்டு போய் வேண்டிய அளவு உண்டவனுடைய திருமருகரே!

         வாது செய்ய வந்த காளியை வென்ற முதற்பரம்பொருளும், மேலிட்டு விளங்கி கும்பிட்டு வீழும் கைகள் போல் வருகின்ற பெரும் அலைகளை உடைய கடல் அரசனாகிய வருணனும் வணங்கும் திரு நடனம் புரியும் அழகிய பாதங்களை உடையரும் ஆகிய சிவபெருமான், நறுமணம் உள்ள தாமரையில் வாசம் புரியும் பிரமனோடு, அழகிய திருமகள் விளங்கும் திருமார்பினை உடைய திருமாலும் வணங்குகின், வடதிருமுல்லைவாயில் என்னும் திருத்தலத்தில் மாசிலாமணி ஈசர் என்னும் திருநாமத்தோடு எழுந்தருளி உள்ள சிவபெருமான் உள்ளம் மகிழ்ந்து அருளிய பெருமையில் மிக்கவரே!

         ஒளி பொருந்திய சிறந்த நிலவைப் போன்ற முகத்தினையும், விளங்குகின்ற மேருமலையைப் போன்ற பெரிய முலைகளையும் கொண்டு, தொலைவிலே வருகின்ற ஆடவர்கள், தங்கள் முன்னர் எதிர்ப்பட்ட போது, காரியமாகப் பேசி, முன்னமேயே பழக்கம் கொண்டு பெண்களைப் போல், எதிர்ப்பட்ட ஆடவருடைய இரு தோள்களிலும் விழுந்து, ஒப்பற்ற வஞ்சகமான செயலால், வருவதற்கு இணங்கும்படியாகச் செய்து, தங்களின் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் அவர்களுடன் பொருந்தி இருந்து, வலிய அணைத்துக் கொண்டு, கனியமுதம் போன்ற வாயிதழைத் தருகின்ற நாள்களில், பொருள்களை எல்லாம் வலியக் கவர்ந்து கொண்டு, பிறகு பேசாமல் மவுனமாக இருந்து, வீணாகச் சில சண்டைகள் இட்டு, இகழ்ந்து பேசியும், மோசத்தைச் செய்கின்ற வஞ்சனை மிக்க துட்ட மகளிர் மேல் காம இச்சை கொண்டு, உடல் மட்டும் அல்லாமல் மனமும் தளர்ச்சி அடைகின்ற மூடனும் பாதகனாகிய அடியேனும் நற்கதியைப் பொருந்துவேனோ?


விரிவுரை

சோதி மாமதி போல் முகமும் ---

பெண்களின் முகமானது ஒளி பொருந்திய சிறந்த நிலவைப் போன்று இருக்கும் என்று காமுகர் கருதுவர்.

கிளர் மேரு உலாவிய மாமுலையும் கொடு ---

மார்பகமானது பருத்து உயர்ந்து மேரு மலை என்று சொல்லும்படி விளங்கும்.

"கிரி உலாவிய முலை மிசை துகில் இடு கபட நாடக விரகிகள் அசடிகள்" என்றார் திருத்தணிகைத் திருப்புகழில்.

தூரவே வரும் ஆடவர் தங்கள் முன் எதிர் ஆயே ---

பொருள் மீது கொண்ட ஆசையால், ஆடவரை மயக்கி, தமது உடம்பை விலை பேசுகின்ற விலைமாதர்கள் தொலைவிலே வரும் ஆடவர் தங்கள் முன்னர் எதிர்ப்பட்ட போது அவர்களை மயக்க முற்படுவார்கள்.

சோலி பேசி ---

எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசி தங்கள் முன் வந்து எதிர்ப்பட்ட ஆடவரை சொல்லாலும் பார்வையாலும், செய்கையாலும் மயக்குவார்கள்.

முன் நாளில் இணங்கிய மாதர் போல் இருதோளில் விழுந்து ---

இதற்கு முன்னரே வெகுநாள்களாகப் பழகியவர் போல முன்னமேயே பழக்கம் கொண்ட பெண்களைப் போல், எதிர்ப்பட்ட ஆடவருடைய இரு தோள்களிலும் விழுந்து சாகசம் செய்வார்கள்.
  
ஒரு சூதினால் வரவே, மனை கொண்டு அவருடன் மேவி ---

விலை மாதர் செய்யும் வஞ்சனைச் செயல்களுக்கு ஒப்பு இல்லை. அவர்களை எப்படியாவது மயக்கி, தமது வீட்டுற்கு வரும்படிச் செய்து, வரும்படி ஒன்றையே கருதி அழைத்துச் சென்று அவரோடு பொருந்தி இருப்பார்கள்.

வெம்புவாள் விழுவாள் பொய்யே,
     மேல்விழுந்து அழுவாள் பொய்யே,
தம்பலம் தின்பாள் பொய்யே,
     சாகிறேன் என்பாள் பொய்யே
அம்பினும் கொடிய கண்ணாள்
     ஆயிரம் சிந்தையாளை
நம்பின பேர்கள் எல்லாம்
     நாயினும் கடை ஆவாரே.       --- விவேக சிந்தாமணி.


மோதியே, கனிவாய் அதரம் தருநாளிலே ---

வலிய அணைத்துக் கொண்டு, கனியமுதம் போன்ற வாயிதழைத் தந்து காம உணர்வே மேலிடச் செய்வார்கள். விலைமகளிரின் வாய் எச்சிலானது காமுகருக்குத் தேனும் பாலும் கலந்தது போல இனிக்கும். இபவு பகல் எனப் பாராமல் கலவி இன்பத்தில் மூழ்கி அறிவு இழந்து கிடக்கின்ற

பொருள் சூறைகள் கொண்டு ---

உள்ள பொருள்களை எல்லாம் வலியக் கவர்ந்து கொள்வார்கள். உடம்புக்குச் சுகம் இல்லை, மருத்துவம் பார்க்க வேண்டும் என்பார். கடன்காரன் தொல்லை தாங்க முடியவில்லை, செத்துப் போகலாம் என்று இருக்கின்றேன் என்பார்கள். பண்டிகை நாள்கள் வருகின்றன, ஒரு ஆடையை எடுத்துக் கொள்ளவும் பொருள் இல்லை என்பார்கள்.  இவ்விதமாக வலிந்து பல மயக்கும் செற்களைப் பேணி, சாகசச் செயல்கள் பலவும் புரிந்து, ஆடவர் மனமானது இளகும் படிச் செய்து, அவரிடத்து உள்ள பொருள்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்துக் கொள்வர்.

பின் மோனமாய் அவமே சில சண்டைகளுடன் ஏசி ---

பிறகு பறிப்பதற்கு ஏதும் இல்லை என்ற நிலை வந்த பிறகு, அந்த மனிதரைத் தம் வசம் இருந்து விலக்குவதற்கு முதற்படியாக அவரோடு பேசாமல் இருந்து, எதையாவது காரணம் காட்டி வீண் சண்டைக்கு இழுத்து ஏசிப் பேசுவார்கள்.பேசாமனல் மவுனமாக இருந்து,

மோசமே தரு தோதக வம்பியர் மீதிலே மயலாகி ---

இப்படி வஞ்சகமாக மோசம் செய்கின்ற விலைமாதர் பால்  மனம் வைத்தல் கூடாது.

மனம் தளர் மோடன் ஆகிய பாதகனும் கதி பெறுவேனோ ---

அப்படி வைப்பதால், உடல் மட்டும் அல்லாமல் மனமும் தளர்ச்சி அடைகின்ற நிலை உண்டாகும். அப்படிப்பட்ட அறியாமையால் மூடப்பட்டுள்ளவனும், பாதகச் செயல்களைப் புரிபவனும் ஆகிய அடியேன் நல்ல கதியைப் பொருந்துதற்கு வழி உண்டோ என்று முருகப் பெருமானிடம் குறையிரந்து நிற்கின்றார் அடிகளார்.

ஆயர்வாழ் பதிதோறும் உகந்து, உரல் ஏறியே, உறி மீது அளையும் களவாகவே கொடு போத(ம்) நுகர்ந்தவன் மருகோனே ---

"உறிதாவும் ஒரு களவு கண்டு, தனி கோபத் தாய்க் குல
     மகளிர் சிறு தும்புகொடு மோதிச் சேர்த்திடும்
     உரலொடு தவழ்ந்த நவநீதக் கூற்றனும்"

என்றார் "பரதவித" எனத் தொடங்கும் திருப்புகழில்.

மருது பொடிபட உதைத்திட்டு, ய்ச்செரி
     மகளிர் உறிகளை உடைத்துப் போட்டவர்
     மறுக ஒருகயிறு அடித்திட்டு ஆர்ப்பு உற ...... அழுதுஊறும்
வளரு நெடுமுகில், திர்த்துக் காட்டு என
     அசடன் இரணியன் உரத்தைப் பேர்த்தவன்,
     மழையின் நிரைமலை எடுத்துக் காத்தவன் ...மருகோனே.

என்றார் "பொருத கயல்விழி" எனத் தொடங்கும் திருப்பகழில்.

காயாத பால் நெய் தயிர்க் குடத்தினை
     ஏயா எணாமல் எடுத்து, இடைச்சிகள்
     காணாத ஆறு குடிக்கும் அப்பொழுது, ...... உரலோடே
கார் போலும் மேனி தனைப் பிணித்து, ஒரு
     போர் போல் அசோதை பிடித்து அடித்திட,
     காதோடு காது கையில் பிடித்து அழுது, ......இனிது ஊதும்

வேயால், நேக விதப் பசுத் திரள்
     சாயாமல் மீள அழைக்கும் அச்சுதன்,
     வீறுஆன மாமன் எனப் படைத்துஅருள் ...... வயலூரா!

என்றார் "மாயாசொரூப" எனத் தொடங்கும் விராலிமலைத் திருப்புகழில்.

ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு,
பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு,
வேய்த் தடந்தோளினார் வெண்ணெய் கோள் மாட்டாது, அங்கு
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்,
அடியுண்டு அழுதானால் இன்று முற்றும்.                   --- பெரியாழ்வார்.
  
உறி ஆர் வெண்ணெய் உண்டு, உரலோடும் கட்டுண்டு,
வெறிஆர் கூந்தல் பின்னை பொருட்டுஆன் வென்றான் ஊர்,
பொறி ஆர் மஞ்ஞை பூம்பொழில் தோறும் நடம் ஆ,
நறு நாள் மலர் மேல் வண்டு இசை பாடும் நறையூரே.   --- திருமங்கை ஆழ்வார்.

வெண்ணெய்தான் அமுது செய்ய,
     வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி,
கண்ணி ஆர் குறும் கயிற்றால்
     கட்ட, வெட்டென்று இருந்தான்,
திண்ணமா மதிளிகள் சூழ்ந்த
     தென் திருப்பேர் உள், வேலை
வண்ணனார் நாமம் நாளும்
     வாய்மொழிந்து உய்ந்தவாறே.                           --- திருமங்கை ஆழ்வார்.

 
வாதினால் வரு காளியை வென்றிடும் ஆதிநாயகர், திரு நடபாதர் ---

திருவாலங்காட்டின் பெருமையைச் சிவபெருமான் சொல்லக் கேட்ட சுநந்த முனிவர், பெருமான் அருளிய வண்ணம் தாண்டவ அருட்கோலத்தைக் காண விழைந்து திருவாலங்காடு சென்று தவம் புரிந்து இருந்தனர். கண்ணுதல் பெருமானது கைவிரல் அணியாகிய கார்க்கோடகன் திருவிரலில் விடத்தைக் கக்க, பெருமான் “நம்மைக் கருதாது தருக்குடன் நீ செய்த தீமைக்காகத் திருக்கைலையினின்று நீங்குக” எனப் பணித்தார் சிவபெருமான். நாகம் நடுநடுங்கிப் பணிய, சிவமூர்த்தி, “திருவாலங்காட்டில் அநேக ஆண்டுகளாக அருந்தவம் இயற்றும் சுநந்தருடன் சண்ட தாண்டவத்தைத் தரிசித்துப் பிறகு வருவாயாக” என்று அருளிச் செய்தனர். கார்க்கோடகன் கருடனுக்கு அஞ்ச, எம்பெருமான் “இத் தீர்த்தத்தில் முழுகி அங்குள்ள முத்தி தீர்த்தத்தில் எழுக” என்று அருள் பாலிக்க, அரவு அவ்வாறே ஆலவனம் வந்து, சுநந்தரைக் கண்டு தொழுது, தனது வரலாற்றைக் கூறி நட்புகொண்டு தவத்து இருந்தது. சுநந்தர் நெடுங்காலம் தவத்தில் இருப்ப, அவரைப் புற்று மூடி முடிமேல் முஞ்சிப்புல் முளைத்துவிட்டது. அதனால் அவர் முஞ்சிகேச முனிவர் எனப் பெயர் பெற்றனர்.

இது நிற்க, நிசுபன், சும்பன் என்னும் அசுரர் இருவர் ஒப்பாரும் மிக்காரும் இன்றி, பல தீமைகளைச் செய்து வந்தனர். அத் துன்பத்திற்கு அஞ்சிய தேவர்கள் உமாதேவியாரை நோக்கி அருந்தவம் செய்தனர். அகிலாண்டநாயகி அமரர் முன் தோன்றி, “உங்களைத் துன்புறுத்தும் அசுரரை அழிப்பேன்” என்று அருளிச்செய்து, மலைச்சாரலை அடைந்து, தவ வடிவத்தைக் கொண்டு உறைகையில், சண்டன் முண்டன் என்னும் அவுணர் இருவர் அம்பிகையை அடைந்து “நீ யார்? தனித்திருக்கும் காரணம் என்ன? சும்பனிடம் சேருதி” என்னலும், உமாதேவியார், “தவம் இயற்றும் யான் ஆடவர்பால் அணுகேன்” என்று கூற, அவ்வசுரர் சும்பன்பால் சென்று தேவியின் திருமேனிப் பொலிவைக் கூறி, அவனால் அனுப்பப்பட்ட படையுடன் வந்து அழைத்தும் அம்பிகை வராமையால், வலிந்து இழுக்க எண்ணுகையில் இமயவல்லி, சிறிது வெகுள, அம்மையார் தோளிலிருந்து அநேகம் சேனைகளும் ஒரு சக்தியும் தோன்றி, அவற்றால், அசுர சேனையும் சண்டனும் முண்டனும் அழிந்தனர். உமாதேவியார் “சண்டணையும் முண்டனையும் கொன்றதனால் சாமுண்டி எனப் பெயர் பெற்று உலகோர் தொழ விளங்குவாயாக” என அச்சக்திக்கு அருள் புரிந்தனர்.

அதனை அறிந்த நிசும்பன், சும்பன் என்போர் வெகுண்டு ஆர்த்து, அளப்பற்ற அசுர சேனையுடன் வந்து, அம்பிகையை எதிர்த்துக் கணைமாரி பெய்தனர். அகில ஜக அண்டநாயகி தனது உடலினின்றும் சத்தமாதர்களையும் சிவதூதியரையும் உண்டாக்கிப் போருக்கு அனுப்பி, அவர்களால் அசுரசேனையை அழிப்பித்து, தாமே முதலில் நிசும்பனையும் பிறகு சும்பனையும் கொன்றருளினார்.

அவ்விரு நிருதர்கட்கும் தங்கையாகிய குரோதி என்பவள் பெற்ற இரத்த பீசன் என்று ஒருவன் இருந்தான். அவன் தனது உடலினின்றும் ஒரு துளி உதிரம் தரைமேல் விழுந்தால், அத்துளி தன்னைப்போல் தானவன் ஆமாறு வரம் பெற்றவன். அவன், இச்செய்தி அறிந்து இமைப் பொழுதில் எதிர்த்தனன். அந் நிருதனுடன் சத்தமாதர்கள் சமர் செய்கையில், அவன் உடம்பினின்றும் விழுந்த உதிரத் துளிகளில் இருந்து, அவனைப் போன்ற அசுரர்கள் பல ஆயிரம் பேர் தோன்றி எதிர்த்தனர். இவ்வற்புதத்தைக் கண்ட சத்த மாதர்கள் அம்பிகையிடம் ஓடிவந்து கூற, அம்பிகை வெகுள, அவர் தோளினின்றும் பெரிய உக்கிரத்துடன் காளி தோன்றினாள். “பெண்ணே; நான் இரத்த பீசனைக் கொல்லும்போது உதிரத்துளி ஒன்றும் மண்ணில் விழாமல் உன் கைக் கபாலத்தில் ஏந்திக் குடிக்கக் கடவாய்” என்று பணித்து, இரத்த பீசனை அம்பிகை எதிர்த்து, காளி உதிரத்தைப் பருக, இறைவியார் இரத்த பீசனை சங்கரித்து அருளினார். இமையவரைத் தத்தம் இருப்பிடத்திற்கு அனுப்பிவிட்டு, காளியை மகிழ்வித்து அவளுக்கு சாமுண்டி என்ற பெயரும் தெய்விகமும் சிவபெருமானிடம் நிருத்தம் செய்து அவர் பக்கலில் உறைதலும் ஆகிய நலன்களைத் தந்தருளி, சத்த மாதர்கட்கும் அருள்புரிந்து மறைந்தருளினார்.

காளி, அசுரர் உதிரம் குடித்த ஆற்றலாலும், உமையிடம் பெற்ற வரத்தாலும் இறுமாந்து ஊன்களைப் புசித்து, மோகினி, இடாகினி, பூத பிசாசுகள் புடைசூழ ஒரு வனத்திலிருந்து மற்றொரு வனத்திற்குப் போய், உலகம் முழுவதும், உலாவி, திருவாலங்காட்டிற்கு அருகில் வந்து அனைவருக்கும் துன்பத்தைச் செய்து வாழ்ந்திருந்தாள்.

ஒரு நாள் திருவாலங்காடு சென்ற நாரத முனிவருக்குக் காளியின் தீச்செயலை கார்கோடக முனிவர் கூற, நாரதர் கேட்டுச் செல்லுகையில் காளி விழுங்க வர, அவர் மறைந்து சென்று திருமாலிடம் கூறி முறையிட்டார். திருமால் சிவபெருமானிடம் சென்று, “எந்தையே! காளியின் தருக்கை அடக்கி அருள வேண்டும்” என்று விண்ணப்பம் செய்ய, முக்கட்பெருமான் “இப்போதே காளியின் செருக்கை அடக்க வடாரண்யத்திற்கு வருவோம்” என்று திருவாய் மலர்ந்து, சுநந்த முனிவர் கார்க்கோடக முனிவர்கட்குத் திருவருள் செய்யத் திருவுளங்கொண்டு திருவாலங்காட்டிற்கு எழுந்தருளினார்.

கூற்றை உதைத்த குன்றவில்லி, வயிரவ வடிவு கொண்டனர். உடன் வந்த பூதங்களுடன் காளியின் சேனை எதிர்த்து வலி இழந்து காளியிடம் கூற, அவள் போர்க்கோலம் தாங்கி வந்து, அரனாரைக் கண்டு அஞ்சி “நிருத்த யுத்தம் செய்வோம்” எனக் கூற, கண்ணுதற் கடவுள் இசைந்து, முஞ்சிகேச கார்க்கோடகர்கட்குத் தரிசனம் தந்து திருநடனத்திற்குத் தேவருடன் வந்தருளினார். அக்காலை அமரர் அவரவர்கட்கு இசைந்த பல வாத்தியங்களை வாசித்தனர். அநவரதம், அற்புதம், ரௌத்ரம், கருணை, குற்சை, சாந்தம், சிருங்காரம், பயம், பெருநகை, வீரியம் என்னும் நவரசங்களும் அபநியமும் விளங்க வாத்தியங்களுக்கு ஒப்ப பாண்டரங்கம் ஆகிய சண்ட தாண்டவத்தைக் காளியுடன் அதி அற்புத விசித்திரமாகச் செய்தருளினார்.

இவ்வாறு நடனம் புரிகையில், பெருமானது திருச்செவியில் இருந்து குண்டலமானது நிருத்த வேகத்தால் நிலத்தில் விழ, அதை இறைவரே திருவடி ஒன்றினால் எடுத்துத் தரித்து ஊர்த்துவ தாண்டவம் செய்ய, காளி செயலற்று நாணிப் பணிந்தனள். சிவபெருமான் “நீ இங்கு ஒரு சத்தியாய் இருப்பாயாக” எனத் திருவருள் புரிந்து, இரு முனிவரும், எண்ணில்லா அடியவரும் தமது தாண்டவத் திருவருட் கோலத்தை எந்நாளும் தெரிசிக்க திருவாலங்காட்டில் எழுந்தருளியிருந்தார்.

பூத்து ஆடிக் கழியாதே நீர் பூமியீர்!
தீத்தாடித் திறம் சிந்தையுள் வைம்மினோ!
வேர்த்து ஆடும் காளி தன்விசை தீர்க என்று
கூத்தாடி உறையும் குடமூக்கிலே.             ---  அப்பர்.

காளியோடு ஆடி, கனக அசலத்து ஆடி,
கூளியோடு ஆடி, குவலயத்தே ஆடி,
நீளிய நீர், தீ, கால், நீள்வான் இடை ஆடி,
நாள் உற அம்பலத்தே ஆடும் நாதனே.    திருமந்திரம்.

அறுகினை முடித்தோனை, ஆதாரம் ஆனவனை,
     மழு உழை பிடித்தோனை, மாகாளி நாணமுனம்
     அவைதனில் நடித்தோனை, மாதாதையே எனவும் .....வருவோனே!
                                                                     --- (தலைவலி) திருப்புகழ்.

திகழ்வேடம் காளியொடு ஆடிய
     ஜெகதீச சங்கேச நட ஈசுரர்
     திருவாலங்காடினில் வீறிய ......      பெருமாளே.  --- (கனவாலம்) திருப்புகழ்.
    
வாச மாமலரோனொடு ---

நறுமணம் உள்ள தாமரையில் வாசம் புரியும் பிரமதேவர் தரிசித்துப் பேறு பெற்றதால், தீர்த்தம் பிரமதீர்த்தம் என்றும் வழங்கப்படும்.

செம் திரு மார்பில் வீறிய மாயவனும் பணி ---

அழகிய திருமகள் விளங்கும் திருமார்பினை உடைய திருமாலும் வழிபட்ட சிறப்பினை உடையது வடதிருமுல்லைவாயில் என்னும் திருத்தலம்.

மாசிலாமணி ஈசர் மகிழ்ந்து அருள் பெருமாளே ---

வடதிருமுல்லைவாயில் என்னும் திருத்தலத்தில் மாசிலாமணி ஈசர் என்னும் திருநாமத்தோடு எழுந்தருளி உள்ளார் சிவபெருமான்.

சந்தன வேரும் கார்அகில் குறடும்
         தண்மயில் பீலியும் கரியின்
தந்தமும் தரளக் குவைகளும் பவளக்
         கொடிகளும் சுமந்துகொண்டு உந்தி
வந்துஇழி பாலி வடகரை முல்லை
         வாயிலாய் மாசிலா மணியே
பந்தனை கெடுத்துஎன் படுதுயர் களையாய்
         பாசுப தாபரம் சுடரே.                     --- சுந்தரர்.

கருத்துரை

முருகா! விலைமாதர் மயலில் அழியாமல் நற்கதி பெற அருள்.




பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...