41. அற்பருக்கு வாழ்வு
அற்பர்க்கு வாழ்வுசற்று அதிகமானால் விழிக்கு
யாவர் உருவும் தோற்றிடாது,
அண்டி நின்றே நல்ல வார்த்தைகள் உரைத்தாலும்
அவர் செவிக்கு ஏறிடாது,
முற்பட்சம் ஆனபேர் வருகினும் வாரும் என
மொழியவும் வாய்
வராது,
மோதியே வாதப் பிடிப்பு வந்தது போல
முன்காலை அகல வைப்பார்,
விற்பனம் மிகுந்த பெரியோர் செய்தி சொன்னாலும்
வெடு வெடுத்து ஏசி
நிற்பார்,
விருதா மகத்துவப் பேய் அது சவுக்கடி
விழும்போது
தீரும் என்பார்,
மல்புயம் தனில் நீப மாலையணி லோலனே!
மார்பனே!
வடிவேலவா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு
குமரேசனே.
இதன் பொருள் ---
மல் புயம் தனில்
நீபமாலை அணி லோலனே! மார்பனே! வடிவேலவா! ---வலிமை பொருந்திய
திருத்தோள்களிலே கடப்பமாலையை அணிந்த இனியவரே! அழகிய திருமார்பினரே! கூர்மை பொருந்திய வேலாயுதத்தை திருக்கையில் ஏந்தியவரே!
மயில் ஏறி
விளையாடு குகனே ---
மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல்
நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது
எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
அற்பர்க்கு
வாழ்வு சற்று அதிகம் ஆனால் விழிக்கு யாவர் உருவும் தோன்றிடாது --- இழிந்த குணம் உடைய கீழ்மக்களுக்கு செல்வாக்கு சிறிது அதிகமானால், அவர்கள் கண்களுக்கு எதிரில் வருபவர் யார் என்று தெரியாது.
அண்டி நின்றே
நல்ல வார்த்தைகள் உரைத்தாலும் அவர் செவிக்கு ஏறிடாது --- அவர்களை
நெருங்கி இருந்து நல்ல சொற்களைச் சொன்னாலும் செவியில் ஏறாது.
முன் பட்சமான
பேர் வருகினும் வாரும் என மொழியவும் வாய் வராது --- முன்னர் தம்மிடத்தில் அன்பு
கொண்டு இருந்தவர்கள் வந்தாலும் வாருங்கள் என்று கூறி வரவேற்கவும் வாயில் சொல் வராது.
வாதப்பிடிப்பு
வந்தது போல முன்காலை மோதியே அகல வைப்பார் --- அடக்கமாக நடப்பதை விடுத்து, வாதநோய் வந்தவர்கள் போல முன்காலை விரைந்து நீட்டி வைத்து
நடப்பார்கள்.
விற்பனம்
மிகுந்த பெரியோர் செய்தி சொன்னாலும் வெடுவெடுத்து ஏசி நிற்பார் --- அறிவில் சிறந்த
பெரியோர்கள் ஏதாவது சொன்னாலும் முகம் கடுகடுத்து அவர்களை ஏசுவார்கள்.
விருதா
மகத்துவப் பேயது சவுக்கடி விழும்போது தீரும் என்பார் --- இந்த வீண் பெருமை என்னும் இடும்பானது பேய்த் தன்மையைக் கொண்டது. தக்க
தண்டனைக்கு உட்பட்டால் ஒழிய வேறு எதனாலும் அது தீராது.
விளக்கம் ---
செல்வம் வந்து உற்ற காலைத்
தெய்வமும் சிறிது பேணார்,
சொல்வன அறிந்து சொல்லார்,
சுற்றமும் துணையும் பேணார்,
வெல்வதே கருமம் அல்லால்
வெம்பகை வலிது என்று எண்ணார்,
வல்வினை விளைவும்ஓரார்,
மண்ணின் மேல் வாழும் மாந்தர். --- விவேகசிந்தாமணி.
விற்பனர்க்கு வாழ்வு வந்தால் மிகவணங்கிக்
கண்ணோட்டம் மிகவும் செய்வார்!
சொற்பருக்கு வாழ்வு வந்தால் கண் தெரியாது,
இறுமாந்து துன்பம் செய்வார்!
பற்பலர்க்கு வாழ்வுதரும் தண்டலையா
ரே! சொன்னேன்! பண்பு இல்லாத
அற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்
திரி குடைமேல் ஆகும்தானே! --- தண்டலையார் சதகம்.
கீழ்மைக் குணம் படைத்தவருக்கு செல்வம் சிறிது வந்துவிட்டால், யாரையும் அன்போடு நோக்கமாட்டார்கள். எந்த அறிவுரையும் அவர் காதில்
விழாது. ஒரு காலத்தில் தன்னோடு அன்பாகப் பழகியவரோ உறவினரோ வந்தாலும், அவர்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ள
மாட்டார்கள். இவர் தம் இறுமாப்பு வீண் மமதை ஆகும். இந்த மமதை என்னும் பேயானது தண்டனை
என்னும் சவுக்கடி பட்டால் ஒழிய விலகாது.
"உற்று அலால் கயவர் தேரார்" என்பது சுந்தரர் தேவாரம்.
No comments:
Post a Comment