பாக்கம் - 0689. கார்க்கொத்த





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கார்க்கு ஒத்தமேனி (பாக்கம்)
 
முருகா!
அருள்நூல்களை ஓதி வழிபடும் அறிவை அருள்
 

தாத்தத்த தானதன தாத்தத்த தானதன
     தாத்தத்த தானதன ...... தனதான
  
கார்க்கொத்த மேனிகடல் போற்சுற்ற மானவழி
     காய்த்தொட்டொ ணாதவுரு ...... ஒருகோடி

காக்கைக்கு நாய்கழுகு பேய்க்கக்க மானவுடல்
     காட்டத்தி னீளெரியி ...... லுறவானிற்

கூர்ப்பித்த சூலனத னாற்குத்தி யாவிகொடு
     போத்துக்க மானகுறை ...... யுடையேனைக்

கூப்பிட்டு சாவருளி வாக்கிட்டு நாமமொழி
     கோக்கைக்கு நூலறிவு ...... தருவாயே

போர்க்கெய்த்தி டாமறலி போற்குத்தி மேவசுரர்
     போய்த்திக்கெ லாமடிய ...... வடிவேலாற்

பூச்சித்தர் தேவர்மழை போற்றுர்க்க வேபொருது
     போற்றிச்செய் வார்சிறையை ...... விடுவோனே

பார்க்கொற்ற நீறுபுனை வார்க்கொக்க ஞானபர
     னாய்ப்பத்தி கூர்மொழிகள் ...... பகர்வாழ்வே

பாக்கொத்தி னாலியலர் நோக்கைக்கு வேல்கொடுயர்
     பாக்கத்தில் மேவவல ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


கார்க்கு ஒத்த மேனி, கடல் போல் சுற்றம் ஆனவழி,
     காய்த்து ஒட்ட ஒணாத உரு ...... ஒருகோடி,

காக்கைக்கு, நாய், கழுகு, பேய்க்கு அக்கமான உடல்
     காட்டத்தின் நீள் எரியில் ...... உற, வானில்

கூர்ப்பித்த சூலன் அதனால் குத்தி, ஆவிகொடு
     போத் துக்கமான குறை ...... உடையேனைக்

கூப்பிட்டு, உசா அருளி, வாக்கு இட்டு, நாம மொழி
     கோக்கைக்கு நூல் அறிவு ...... தருவாயே.

போர்க்கு எய்த்திடா மறலி போல் குத்தி மேவு அசுரர்
     போய்த் திக்கு எலாம் மடிய, ...... வடிவேலால்,

பூச் சித்தர், தேவர், மழை போல் துர்க்கவே பொருது,
     போற்றிச் செய்வார் சிறையை ...... விடுவோனே!

பார்க் கொற்ற நீறு புனைவார்க்கு ஒக்க, ஞானபரன்
     ஆய், பத்தி கூர்மொழிகள் ...... பகர்வாழ்வே!

பாக் கொத்தினால் இயலர் நோக்கைக்கு வேல்கொடு, யர்
     பாக்கத்தில் மேவ வல ...... பெருமாளே.


பதவுரை


      போர்க்கு எய்த்திடா மறலி போல் --- போருக்குச் சளைக்காத எமனைப் போல்,

     வடிவேலால் குத்தி --- கூர்மை பொருந்திய வேலாயுதத்தால் குத்தி,

     மேவு அசுரர் போய்த் திக்கெலாம் மடிய --- எதிர்த்து வந்த அசுரர்கள் திசை தோறும் ஓடிப் போய் இறக்கும்படியாக,

         பூச்சித்தர் தேவர் மழை போல் துர்க்கவே பொருது --- பூமியிலே வாழுகின்ற சித்தர்களும் வானில் உள்ள தேவர்களும் மழை போல பூக்களைப் பொழிந்து நிறைத்து வாழ்த்த, உக்கிரமாகப் போர் புரிந்து,

       போற்றிச் செய்வார் சிறையை விடுவோனே --- போற்றி வணங்கி தேவர்களைச் சிறை விடுத்தவரே!

      பார்க் கொற்ற நீறு புனைவார்க்கு ஒக்க --- பூமியில் பெருமை தருகின்ற திருநீற்றை அணிகின்ற சிவபெருமானுக்கு ஒக்க,

     ஞான பரனாய் --- ஞானத்தில் மேம்பட்டவராக

     பத்தி கூர் மொழிகள் பகர் வாழ்வே --- அவருக்கே பத்திநெறியை மிகுவிக்கும் ஞானமொழிகளைக் கூறியருளிய குருமூர்த்தியாகிய செல்வமே!

      பாக் கொத்தினால் இயலர் நோக்கைக்கு --- இயற்றமிழ் வல்ல புலவர்கள் பாமாலைகளால் பலவும் பாடி, கண்ணாரக்கண்டு வழிபடுவதற்காக,

      வேல் கொடு --- வேலாயுதத்தைத் திருக்கரத்திலே தரித்து,

     உயர் பாக்கத்தில் மேவ வல பெருமாளே ---  சிறந்த பாக்கம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருள் புரிவதில் வல்ல பெருமையில் மிக்கவரே!

      கார்க்கு ஒத்த மேனி கடல் போல் --- கரு நிறத்தை உடைய கடல் போலப் பரந்த

     சுற்றமான வழி காய்த்து ஒட்ட ஒணாத உரு --- சுற்றத்தார்கள் பொருந்திய இடத்திலே பிறந்து தோன்றி, நிலைத்து நிற்காத வடிவத்தோடு கூடியது இந்த உடல்.

         ஒரு கோடி காக்கைக்கு நாய் கழுகு பேய்க்கு அக்கமான உடல் --- ஒரு கோடிக் காக்கைகளுக்கும் நாய்களுக்கும், கழுகுகளுக்கும், பேய்களுக்கும் உணவு ஆகப்போகின்ற இந்த உடல்.

       காட்டத்தில் நீள் எரியில் உற --- இதனைச் சுடுகாட்டில் பெருநெருப்பில் சேரும்படி,

     வானில் கூர்ப்பித்த சூலன் --- ஆகாயத்தில் இருந்து கூர்மை கோண்ட சூலாயுதத்தை உடைய யமன்

     அதனால் குத்தி --- சூலத்தால் என்னைக் குத்தி

     ஆவிகொடு போத் துக்கமான குறை உடையேனை --- என் ஆவியைக் கொண்டு போகின்ற துக்கமான குறையை உடைய என்னை,

       கூப்பிட்டு --- அழைத்தருளி,

     உசா அருளி --- விசாரித்துத் திருவருள் பாலித்து,

     வாக்கிட்டு நாமம் மொழி கோக்கைக்கு நூல்அறிவு தருவாயே --- தேவரீரது அருட்புகழைப் பாடுகின்ற சொற்கள் பொருந்திய அருள் நூல்களை ஓதி வழிபடும் நல் அறிவை அடியேனுக்குத் தந்து அருவேண்டும்.


பொழிப்புரை


         போருக்குச் சளைக்காத எமனைப் போல், கூர்மை பொருந்திய வேலாயுதத்தால் குத்தி, எதிர்த்து வந்த அசுரர்கள் திசை தோறும் ஓடிப் போய் இறக்கும்படியாக, பூமியிலே வாழுகின்ற சித்தர்களும் வானில் உள்ள தேவர்களும் மழை போல பூக்களைப் பொழிந்து நிறைத்து வாழ்த்த, உக்கிரமாகப் போர் புரிந்துபோற்றி வணங்கி தேவர்களைச் சிறை விடுத்தவரே!

         பூமியில் பெருமை தருகின்ற திருநீற்றை அணிகின்ற சிவபெருமானுக்கு ஒக்க, ஞானத்தில் மேம்பட்டவராக, அவருக்கே பத்திநெறியை மிகுவிக்கும் ஞானமொழிகளைக் கூறியருளிய குருமூர்த்தியாகிய செல்வமே!

         இயற்றமிழ் வல்ல புலவர்கள் பாமாலைகளால் பலவும் பாடி, கண்ணாரக் கண்டு வழிபடுவதற்காக,  வேலாயுதத்தைத் திருக்கரத்திலே தரித்து, சிறந்த பாக்கம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருள் புரிவதில் வல்ல பெருமையில் மிக்கவரே!

         கரு நிறத்தை உடைய கடல் போலப் பரந்த சுற்றத்தார்கள் பொருந்திய இடத்திலே பிறந்து தோன்றி, நிலைத்து நிற்காத வடிவத்தோடு கூடியது இந்த உடல். ஒரு கோடிக் காக்கைகளுக்கும் நாய்களுக்கும், கழுகுகளுக்கும், பேய்களுக்கும் உணவு ஆகப்போகின்ற இந்த உடல். இதனைச் சுடுகாட்டில் பெருநெருப்பில் சேரும்படி, ஆகாயத்தில் இருந்து கூர்மை கொண்ட சூலாயுதத்தை உடைய யமன் சூலத்தால் என்னைக் குத்தி என் ஆவியைக் கொண்டு போகின்ற துக்கமான குறையை உடைய என்னை, அழைத்தருளி, விசாரித்துத் திருவருள் பாலித்து, தேவரீரது அருட்புகழைப் பாடுகின்ற சொற்கள் பொருந்திய அருள் நூல்களை ஓதி வழிபடும் நல் அறிவை அடியேனுக்குத் தந்து அருவேண்டும்.


விரிவுரை

கார்க்கு ஒத்த மேனி கடல் போல் சுற்றமான வழி காய்த்து ---

கார் - கருநிறம்.

கடல் - எளிதில் கடக்க முடியாதது.

தரையில் வீழ்தர, சேடியர் வெருக்கொண்டு தாங்கி,
வரைசெய் மாடத்தின் உட்கொடு புகுந்திட, வணிகர்
உரையும் உள்ளமும் நிலை அழிந்து, றுதுயர் பெருக,
கரையில் சுற்றமும் தாமும் முன் கலங்கினார் கலுழ்ந்தார்.    --- பெரியபுராணம்.

கடல் எளிதில் கரை காண முடியாதபடி அளவு கடந்து இருப்பது போ, பிறவிகள் தோறும் ஈட்டப்பட்ட வினையின் காரணமாக, உயிர்க்கு வரும் சுற்றமும் அளவு படாதது என்பதைக் காட்ட, "கடல் போல் சுற்றம்" என்றார்.

அது கிளைத்துக் கொண்டே வருதலால், கிளை எனப்பட்டது. சுற்றம் நாம் தேடி வருவதோ கேட்டு வருவதோ  இல்லை. வினைகளின் பயனாக அவை நம்மை நாடி வரும். வினையின் அனுபவம் முடிந்த உடன், நம்மிடம் சொல்லிக் கொள்ளாமலே அது நம்மை விட்டு நீங்கும்.

கேளாதே வந்து, கிளைகளாய் இல்தோன்றி,
வாளாதே போவரால் மாந்தர்கள், - வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கு ஓழிய நீத்து.                --- நாலடியார்.

யாரையும் கேளாமலே சுற்றத்தார்கள் அவரவருக்கு உரிய இல்லங்களிலே வந்து பிறப்பார்கள். வந்தது போலவே யாரிடமும் சொல்லால் ஒரு நாள் போய்ச் சேர்வார்கள். மக்கள் வாழ்க்கை இத்தகையது தான். மரத்தில் கூடு கட்டி வாழத் தொடங்கிய பறவையானது, தன் தேவை முடிந்த பிறகு, தான் கட்டிய கூட்டினை அந்த மரத்திலேயே விட்டு விட்டு, வெகு தூரம் பறந்து செல்வதைப் போல, அதுவரையில் குடியிருந்த இந்த உடலை விட்டுப் போய் விடுகின்றது. (இந்த உடம்பைத் தானே எண்ணி எண்ணி மகிழ்ந்தீர்கள். இந்த உடம்பை உங்களிடமே விட்டுச் செல்கின்றேன், கட்டிக் கொண்டு அழுங்கள் என்பது போல அது அமையும்.)

குடம்பை தனித்து ஒழிய புள் பறந்து அற்றே,
உடம்பொடு உயிர் இடை நட்பு. 

எனத் திருவள்ளுவ நாயனாரும் இதனையே வலியுறுத்திப் பேசினார். குடம்பை என்பது உடம்பைக் குறித்தது. புள் என்பது உயிரைக் குறித்தது.
  
ஒட்ட ஒணாத உரு ---

உரு - வடிவம். இங்கே உடம்பைக் குறிக்கும். இந்த உருவம் அழிந்து போகக் கூடியது. உயிரானது, அது எடுத்த உடம்போடு விதித்த நாள் வரையில் மட்டுமே ஒட்டி இருக்கும்.

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்ட டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.                   ---  நாலடியார்.

யானையின் மீது அமர்ந்து, மலைமேல் தோன்றும் முழுநிலவைப் போன்ற வெண்கொற்றக் குடை பிடித்துச் சென்ற பேரரசர்கள் எல்லாமும் எப்படியும் ஒரு நாள் இறந்து போயினர் என்று தான் சொல்லப்படுகின்றதே ஒழிய, மரணத்தை வென்று யாரும் இந்த உலகில் நின்று நிலைத்தது இல்லை. எல்லோரும் ஒரு நாள் இறக்க நேரும். அப்போது இந்த உடலும் அழிந்து போகும்.

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பு இடை நின்ற உயிரை அறியார்,
உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின்றாரே.    --- திருமந்திரம்.

உயிருக்கு உள்ள அதிசூக்கும சரீரம் ஆனது, முதலில் சூக்கும சரீரத்தைப் பற்றி, பின்பு அவ்விரண்டும் கூடித் தூல சரீரத்தைப் பற்றுதலினால், உயிர் அதிசூக்குமம், சூக்குமம், தூலம் ஆகிய மூன்று சரீரத்தோடும் பொருந்தித் தனது செயலைச் செய்துவரும். இந்த நிலையைப் பலர் அறியாது, `உடம்பு தான் உயிர்` என மயங்குகின்றனர். உடம்போடு உயிருக்குள்ள தொடர்பு, வினை காரணமாகச் சிறிது கால அளவினதே. இந்த உண்மையை அறியாதவர்கள், தூய திருமடங்களின் உள்ளே எவ்வாறோ புகுந்துவிட்ட நாய் `இந்த இடம் நமக்கு நிலையல்ல` என்பதை உணராமல், நிலைத்த ஒன்றுபோல நினைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள உணவைத் தனக்கே உரியனவாக எண்ணிக் களிப்பது போல, களித்து இருக்கின்றார்கள்.

மண்ஒன்று கண்டீர், இருவகைப் பாத்திரம்,
திண் என்று இருந்தது, தீவினை சேர்ந்தது,
விண்ணின்று நீர்விழின் மீண்டும் மண் ஆனாற்போல்,
எண் இன்றி மாந்தர் இறக்கின்றவாறே.        ---  திருமந்திரம்.

மண் என்னவோ ஒன்றுதான். அந்த மண்ணைக் கொண்டு, இரண்டு வகையான பாண்டங்கள் செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்று தீயிலிட்டுச் சுடப்பட்டது. மற்றொன்று அவ்வாறு சுடப்படாது இருப்பது. இரண்டு பாண்டங்களின் மீதும் மழை விழுந்த போது, சுடப்பட்ட பாண்டமானது கேடு இல்லாமல் இருக்கும். சுடப்படாத பாண்டம் மழையால் அழிந்து, மீண்டும் மண்ணாகி விடும்.

குறிக்கோளோடு வாழ்கின்றவர்கள், தூல உடல் அழிந்தாலும், இறைவன் திருவடியில் கலந்து மீண்டும் பிறவா நிலையை அடைகின்றார்கள். இது சுடப்பட்ட பாண்டத்திற்கு ஒப்பாகும். அல்லாதவர்கள், சுடப்படாத பாண்டமானது, மீண்டும் மண் ஆனதைப் போன்று, மக்கள் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து, பின் இறக்கின்றார்கள்..

வளத்திடை முற்றத்து ஓர் மாநிலம் முற்றும்
குளத்தின் மண் கொண்டு குயவன் வனைந்தான்,
குடம் உடைந்தால் அவை ஓடு என்று வைப்பர்,
உடல் உடைந்தால் இறைப் போதும் வையாரே.

உலகமெங்கும் குயவர்கள் குளத்திலிருந்து மண்ணைக் கொண்டு வந்து, தங்கள் வீட்டின் உள்ளே முற்றத்திலே பல குடங்களைப் பண்ணுகின்றார்கள். அக் குடங்கள் ஆளப் பட்டு உடைந்து விடுமானால், வறுக்கும் ஓடாகப் பயன்படும் என்று வீட்டிலே சேமித்து வைப்பார்கள். ஆனால் பண்ணப்படும் முறையால் அக் குடத்தோடு ஒப்பனவாகிய இந்த உடம்புகள் சிதைந்தால், நொடி நேரமும் மக்கள் வீட்டில் வைத்திருக்க உடன்பட மாட்டார்கள்.

ஒரு கோடி காக்கைக்கு நாய் கழுகு பேய்க்கு அக்கமான உடல் --- 

அக்கம் - கயிறு. இந்த உடலானது அறம் பாவம் என்னும் அருங் கயிற்றால் கட்டப்பட்டு, உள்ளே புழுவும் அழுக்கும் வெளித் தெரியாதபடி, புறத்திலே தோலால் போர்க்கப்பட்டு மூடப்பட்டு உள்ளது.

உயிர் அற்ற உடலை அப்படியே விட்டுவிட்டால், காக்கைகளும், கழுகுகளும், நாய்களும், நரிகளும் வந்து தின்று போகும்.

நாள்தோறும் நாழிகை தவறாமல் மிகுந்த எச்சரிக்கையாக உணவுகளைத் தந்து வளர்த்த இந்த உடம்பு, முடிவில் பேய்க்கும், நாய்க்கும், நரிக்கும் பருந்துக்கும் இரையாகிக் கழிகின்றது.

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே..          

என்கின்றார் அப்பர் அடிகளார். இந்த யாக்கையால்,

பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்..

என்று இரங்குகின்றார்.
  
சிலர் அருமையாக வீடுகட்டி சுண்ணாம்பு அடித்து வர்ணம் தடவி, தூண்களுக்கு உரைபோட்டு அழகு படுத்துவர். இந்த வீடு நமக்கே சொந்தம் என்று எண்ணி இறுமாந்திருப்பர். அதற்கு வரியுஞ் செலுத்துவார்கள். ஆனால் அந்த வீட்டில் வாழும் பல்லி, எட்டுக்கால் பூச்சி கரப்பான் பூச்சி முதலியவை இந்த வீடு நமக்குத் தான் சொந்தம் என்று கருதிக் கொண்டிருக்கின்றன. இவன் அந்த பிராணிகள் மீது வழக்குத் தொடர முடியுமா? அதுபோல், இந்த உடம்பு நமக்கே சொந்தம் என்று நாம் கருதுகின்றோம். இந்த உடம்பில் வாழும் புழுக்கள் தமக்குச் சொந்தம் என்று மகிழ்ந்திருக்கின்றன. அன்றியும் இவ் உடம்பை நெருப்பு தனக்குச் சொந்தம் என்று எண்ணியிருக்கின்றது. மயானத்தில் உள்ள பூமி இவ்வுடல் தனக்கே சொந்தம் என்று எண்ணுகின்றது. பருந்துகள் தமக்கு உரியதென்று உன்னி இருக்கின்றன. நரிகள் நமக்குச் சொந்தம் என்று நினைக்கின்றன; நாய் நமக்கே இது உரியது என்று எண்ணுகின்றது. இத்தனை பேர் தத்தமக்குச் சொந்தம் என்று எண்ணுகின்ற உடம்பை நாம் எழுந்தவுடன் சிவநாம்ம்ம கூறாமலும், பல் தேய்க்காமலும் கூட, உண்டு உடுத்து வளர்க்கின்றோம். என்னே மதியீனம்?

எரி எனக்கு என்னும், புழுவோ எனக்கு என்னும், இந்த மண்ணும்
சரி எனக்கு என்னும், பருந்தோ எனக்கு எனும், தான் புசிக்க
நரி எனக்கு என்னும், புன்நாய் எனக்கு எனும், இந்நாறு உடலைப்
பிரியமுடன் வளர்த்தேன், இதனால் என்ன பேறு எனக்கே.                                                                                                  --- பட்டினத்தார்.
காட்டிலே இயல் நாட்டிலே பயில்
     வீட்டிலே உல ...... கங்கள் ஏசக்
காக்கை நாய்நரி பேய்க் குழாம் உண
     யாக்கை மாய்வது ...... ஒழிந்திடாதோ..        (ஏட்டிலே) திருப்புகழ்.
  
மச்சம் மெச்சு சூத்ரம், ரத்த பித்த மூத்ரம்
     வைச்சு இறைச்ச பாத்ரம், ...... அநுபோகம்
மட்க விட்ட சேக்கை, உள் புழுத்த வாழ்க்கை,
     மண் குலப் பதார்த்தம், ...... இடிபாறை,

எய்ச்சு இளைச்ச பேய்க்கும், எய்ச்சு இளைச்ச நாய்க்கும்,
     எய்ச்சு இளைச்ச ஈக்கும் ...... இரை ஆகும்
இக் கடத்தை நீக்கி, அக் கடத்து உள் ஆக்கி,
     இப்படிக்கு மோட்சம் ...... அருள்வாயே.    ---  திருப்புகழ்.


காட்டத்தில் நீள் எரியில் உற ---

காட்டம் - விறகு, சிறுகோல்.

விறகு கொண்டு நெருப்பினை மூட்டி, பிணங்களைச் சுடுகின்ற காடு சுடுகாடு ஆகும். அந்த விறகும் ஒழுங்கான விறகாக இருக்காது. முருடு பட்டதாக இருக்கும். பிணத்தை எரிப்பது சிலருடைய வழக்கம். புதைப்பது சிலருடைய வழக்கம். இட்டுப் புதைப்பது இடுகாடு ஆகும்.

"முருட்டு மெத்தை" என்றார் அப்பர் பெருமான். முருட்டு விறகுகளால் ஆன மெத்தையில் பிணத்தை வைத்து எரிப்பார்கள்.

"செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை, சிறு விறகால் தீ மூட்டிச் செல்லா நிற்பர்" என்றார் அப்பர் பெருமான்.
  
வானில் கூர்ப்பித்த சூலன் அதனால் குத்தி ஆவிகொடு போத் துக்கமான குறை உடையேனை ---

உடலில் இருந்து உயிரை வேறுபடுத்தி, உடம்பை விட்டு விட்டு உயிரைக் கொண்டு போவதற்கு உள்ளவன் முத்தலைச் சூலத்தைக் கேயில் கொண்டு இயமன். காலம் பார்த்து வந்து, சூலாயுதத்தால் குத்தி, உடலில் இருந்து உயிரைக் கூறுபடுத்திக் கொண்டு போவான் அவன்.

உயிருக்கு உள்ள துக்கமான குறை என்னவென்றால், வினைக்கு ஏற்ப அது படும் துன்பம் ஆகும்.வறுமை, பிணி முதலியவற்றால் துன்பத்தை உயிரானது இந்த உடலில் இருந்து கொண்டு அனுபவிக்கும்.

கூப்பிட்டு உசா அருளி ---

அழைத்தருளி, விசாரித்துத் திருவருள் பாலித்து,

"விளித்து உன் பாதுகை நீ தர நான் அருள் பெறுவேனோ" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

வாக்கிட்டு நாமம் மொழி கோக்கைக்கு நூல் அறிவு தருவாயே ---

பிறவியாகிய பெருங்கடலில் வாழும் உயிர்கள், ஆசாரியனாகிய மீகாமனோடு கூடிய சாத்திரமாகிய கப்பலில் ஏற வேண்டும். ஏறினால் முத்தியாகிய கரை ஏறலாம்.

உலகிலே உள்ள நூல்கள் யாவும் நம்மை உய்விக்காது. கற்கத் தகுந்த நூல்களையே கற்கவேண்டும். அதனாலேயே, திருவள்ளுவர் "கற்க கசடற கற்பவை" என்றனர். அறிவு நூல்களாவன பன்னிரு திருமுறைகளும் பதினான்கு மெய்கண்ட நூல்களும், அதன் வழி நூல்களும் ஆகும். சிவஞானபோதம் முதலிய ஞான சாத்திரங்களே நமது ஐயம் திரிபு மயக்கங்களை அகற்றி சிவப் பேற்றை அளிக்கும். ஐயம் திரிபு அற்ற நூலறிவோடு இறைவனுடைய அருட்புகழைப் பாடிப் பரவுதல் வேண்டும்.

அநபாயன் என்ற சோழ மன்னன், சீவகசிந்தாமணி என்ற அவநூலைப் படித்தபோது, அமைச்சராகிய சேக்கிழார் அடிகள், "ஏ! மன்னர் பெருமானே! இது அவநூல். இதனை நீ பயில்வதனால் பயனில்லை. சிவநூலைப் படிக்கவேண்டும். கரும்பு இருக்க இரும்பு கடித்தல் கூடாது" என்று தெருட்டினர்.

ஆதலின், அட்டைப் பகட்டுடன் கூடி வெளிவந்து உலாவும் அறிவை மயக்கும் நூல்கள் பல. அறநெறியைத் தாங்கி நிற்கும் நூல்கள் சில. ஆதலின், அறநெறியைத் தாங்காத நூல்களை வாங்கிப் படிக்காமல், ஆன்றோர்கள் கூறிய அறிவு நூல்களைப் படித்து உலகம் உய்வதாக.

"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்பது நன்னூல். இதனை நன்கு சிந்திக்கவும்.

திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்திக் கூறியது "கற்க கசடற கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக” என்பதே. இதற்குப் பரிமேலழகர் பெருமான் கண்டுள்ள உரையையும் நன்கு சிந்திக்கவும். "கற்பவை என்பதனால், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் உணர்த்துவன அன்றி, பிற பொருள் உணர்த்துவன, சின்னாள், பல்பிணி, சிற்றறிவினர்க்கு ஆகாது”.  "கசடு அறக் கற்றலாவது, விபரீத ஐயங்களை நீக்கி, மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்”.

பிறவியை நீக்க வேண்டின் ஒருவன் செய்ய வேண்டியது என்ன என்பதனை அறநெறிச்சாரம் என்னும் நூல் உணர்த்துவது காண்க.

மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
பிறஉரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடையார்.

பாவத்தினை வளர்க்கும் நூல்களும்,  ஆசையினை வளர்க்கும் நூல்களும், பிறவற்றினை வளர்க்கும் நூல்களும், கலந்து நிறைந்ததே இந்த உலகம்.  அறத்தினை வளர்க்கும் நூல்களைக் கேட்கின்ற நற்பேற்றினை உடையவர்களே பிறப்பினை நீக்குதற்கு ஏற்ற, வீட்டுலகினை உடையவர் ஆவர்.

அறநூல்களைப் பயில வேண்டிய நெறி இது என்று அறநெறிச்சாரம் கூறுமாறு..

நிறுத்து அறுத்துச் சுட்டுஉரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால், -- பிறப்புஅறுக்கும்
மெய்ந்நூல் தலைப்படல் ஆகும்,மற்று ஆகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு.

பொன் வாங்குவோன் அதனை நிறுத்தும் அறுத்தும் சுட்டும் உரைத்தும் பார்த்து வாங்குதல்போல, அறநூல்களையும் பலவற்றாலும் ஆராய்ந்து தேடினோமானால் பிறவியினை நீக்கும்படியான உண்மை நூலை அடையலாம். கண் சென்று பார்த்ததையே விரும்பி உண்மை எனக் கற்பின் உண்மை நூலை அடைய இயலாது.

பொய் நூல்களின் இயல்பு இன்னது என அறநெறிச்சாரம் கூறுமாறு...

தத்தமது இட்டம் திருட்டம் என இவற்றோடு
எத்திறத்தும் மாறாப் பொருள் உரைப்பர்--பித்தர்,அவர்
நூல்களும் பொய்யே,அந் நூல்விதியின் நோற்பவரும்
மால்கள் எனஉணரற் பாற்று.

தாம் கூறும் பொருள்களைத் தங்கள் தங்கள், விருப்பம், காட்சி, என்ற இவையோடு, ஒரு சிறிதும் பொருந்தாவாறு உரைப்பவர்களைப் பைத்தியக்காரர் எனவும், அவர் கூறும் நூல்களைப் பொய்ந் நூல்களே எனவும், அந்நூல்கள் கூறும் நெறியில் நின்று தவஞ்செய்வோரும் மயக்கமுடையார் எனவும் உணர்தல் வேண்டும்.

மக்களுக்கு அறிவு நூல் கல்வியின் இன்றியமையாமை குறித்து அறநெறிச்சாரம் கூறுமாறு....

எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கட் பிறப்பில் பிறிதுஇல்லை, --- அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்,

மக்கட் பிறப்பில், கற்றற்கு உரியவற்றைக் கற்றலும், கற்றவற்றைப் பெரியோர்பால் கேட்டுத் தெளிதலும், கேட்ட அந்நெறியின்கண்ணே நிற்றலும் கூடப் பெற்றால், வேறு எந்தப் பிறப்பானாலும், மக்கட் பிறப்பினைப் போல, ஒருவனுக்கு இன்பம் செய்வது வேறு ஒன்று இல்லை.

எனவே,  அருள் நூல்களை ஐயம் திரிபு அற ஓதித் தெளிந்து, இறைவனது அருட்புகழைப் பாடுகின்ற நல் அறிவைத் தமக்குத் தந்து அருளுமாறு அடிகளார் வேண்டுகின்றார்.
   
போர்க்கு எய்த்திடா மறலி போல் வடிவேலால் குத்தி ---

எய்த்தல் - இளைத்தல், சளைத்தல்.

மறலி - இயமன்.

காலம் பார்த்து வருகின்ற இயமன், போருக்கு வருவது போல் ஆவேசமாக வந்து, உடலில் இருந்து உயிரைப் பிரித்துக் கொண்டு போவான்.

மேவு அசுரர் போய்த் திக்கெலாம் மடிய பூச்சித்தர் தேவர் மழை போல் துர்க்கவே பொருது, போற்றிச் செய்வார் சிறையை விடுவோனே ---

தன்னை எதிர்த்து வந்த அரக்கர்களை எல்லாம் திசைகள் தோறும் ஓடிப்போய் மடியும்படியும், இந்த பூவுலகில் வாழ்கின்ற சித்தர்களும், வானுலகில் வாழும் தேவர்களும் மழையைப் போல மலர்களைச் சொரிந்து வாழ்த்த, தன்னை வணங்கிய தேவர்களை எல்லாம் சூரபதுமனுடைய சிறையில் இருந்து விடுவித்தவர் முருகப் பெருமான்.

ஆன்மாவானது இறைவனை வணங்கி வாழ்த்த, அதனைப் பற்றி உள்ள மும்மலங்களும் தனது வலி குறைந்து நீங்குமாறு இறைவன் திருவருள் புரிந்து, ஆன்மாக்கள் துன்பத்தை அனுபவித்து வந்த பிறவிச் சிறையை விடுவித்து அருள்வான் என்பது கருத்து.

பிறவித் துன்பம் நீங்கி விடுமானால், மீண்டும் ஒரு உடம்பு வராது. சிறையில் உள்ளவர் யாரும் தமது விருப்பபடி இயங்க முடியாது. அதுபோல், பிறவியாகிய சிறையில் உள்ள உயிரும் தாம் விரும்பிய இன்பத்தை அனுபவிக்க முடியாது. வினைக்கு ஏற்ற உடம்பை எடுத்து, அதற்கேற்ற இன்ப துன்பங்களை அனுவித்தே ஆகவேண்டும். இந்த உடம்பானது பாவ புண்ணியம் என்னும் பெரிய கயிற்றினால் கட்டப்பட்டு உள்ளது. "அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி, புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை" என்றார் மணிவாசகப் பெருமான்.

இடுதலைச் சற்றும் கருதேனைப் போதம் இலேனை அன்பால்
கெடுதல் இலாத் தொண்டரில் கூட்டியவா! கிரௌஞ்ச வெற்பை
அடுதலைச் சாத்தித்த வேலோன் பிறவி அற இச் சிறை
விடுதலைப்பட்டது, விட்டது பாச வினை விலங்கே.        --- கந்தர் அலங்காரம்.

ஏழையின் இரட்டைவினை ஆயதொர் உடல் சிறை
இராமல் விடுவித்து அருள் நியாயக் காரனும்..    --- திருவேளைக் காரன் வகுப்பு.

பார்க் கொற்ற நீறு புனைவார்க்கு ஒக்க ஞான பரனாய், பத்தி கூர் மொழிகள் பகர் வாழ்வே ---

கொற்றம் - வீரம், வெற்றி,வலிமை, வன்மை,

"பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு" என்றார் திருஞானசம்பந்தப் பெருமான். இறைவனை, "நீற்றினால் நிறைந்த கோல நிருத்தன்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

பவளமால் வரையைப் பனிபடர்ந் தனையதோர்
    படரொளி தருதிரு நீறும்,
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
    துன்றுபொன் குழல் திருச் சடையும்
திவள மாளிகை சூழ்தரு தில்லையுள்
    திருநடம் புரிகின்ற
தவள வண்ணனை நினைதொறும் என்மனம்
    தழல்மெழுகு ஒக்கின்றதே.                --- திருவிசைப்பா.

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.        --- அப்பர்.

பூமியில் உள்ளோர் யாவருக்கும் பெருமையைத் தருகின்ற திருநீற்றை அணிகின்ற சிவபெருமானுக்கு ஒக்க, ஞானத்தில் மேம்பட்டவராக அவருக்கே பத்திநெறியை மிகுவிக்கும் ஞானமொழிகளைக் கூறியருளிய குருமூர்த்தி முருகப் பெருமான்.

பாக் கொத்தினால் இயலர் நோக்கைக்கு, வேல் கொடு, உயர் பாக்கத்தில் மேவ வல பெருமாளே ---

பாக் கொத்து --- பாடல் கொத்து.  பாடல்களால் ஆகிய கொத்து. பாமாலை, சொல்மாலை.

அருட்பா மாலைகளால் இறைவனைப் பாடி வழிபடும் இயல்பினை உடையவர்கள், புறக்கண்ணால் அன்றி, மனக்கண்ணாலும் இறைவனைக் கண்டு களிக்க ஏதுவாக, வேலைத் தாங்கிய திருக்கரத்தோடு திருமேனி தாங்கி, பாக்கம் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளவர் முருகப் பெருமான்.

பாக்கம் என்னும் திருத்தலம் சென்னையில் இருந்து 34 கி. மீ. தொலைவில், திருவள்ளுர் மாவட்டத்தில், திருநின்றவூர் இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது.



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...