திருவாலங்காடு - 0684. கனஆலம் கூர்விழி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கனவாலங் கூர்விழி (திருவாலங்காடு)

முருகா!
விலைமாதர் மேல் வைத்த அடியேனது மனதை மாற்றி
 தேவரீரது திருவடியைத் தியானிக்க அருள் புரிவாய்.


தனதானந் தானன தானன
     தனதானந் தானன தானன
     தனதானந் தானன தானன ...... தனதான


கனவாலங் கூர்விழி மாதர்கள்
     மனசாலஞ் சால்பழி காரிகள்
     கனபோகம் போருக மாமிணை ......   முலைமீதே

கசிவாருங் கீறுகி ளாலுறு
     வசைகாணுங் காளிம வீணிகள்
     களிகூரும் பேயமு தூணிடு ...... கசுமாலர்

மனவேலங் கீலக லாவிகள்
     மயமாயங் கீதவி நோதிகள்
     மருளாருங் காதலர் மேல்விழு ......   மகளீர்வில்

மதிமாடம் வானிகழ் வார்மிசை
     மகிழ்கூரும் பாழ்மன மாமுன
     மலர்பேணுந் தாளுன வேயரு ......    ளருளாயோ

தனதானந் தானன தானன
     எனவேதங் கூறுசொல் மீறளி
     ததைசேர்தண் பூமண மாலிகை ...... யணிமார்பா

தகரேறங் காரச மேவிய
     குகவீரம் பாகும ராமிகு
     தகைசாலன் பாரடி யார்மகிழ் ......    பெருவாழ்வே

தினமாமன் பாபுன மேவிய
     தனிமானின் தோளுட னாடிய
     தினைமாவின் பாவுயர் தேவர்கள் ...... தலைவாமா

திகழ்வேடங் காளியொ டாடிய
     ஜெகதீசங் கேசந டேசுரர்
     திருவாலங் காடினில் வீறிய ......         பெருமாளே.


பதம் பிரித்தல்


கன ஆலம் கூர் விழி மாதர்கள்,
     மன சாலம் சால் பழிகாரிகள்,
     கனபோக அம்போருகம் ஆம்இணை ......  முலைமீதே

கசிவு ஆருங் கீறு கிளால் உறு
     வசைகாணும் காளிம வீணிகள்,
     களிகூரும் பேய்அமுது ஊண்இடு ......     கசுமாலர்,

மன ஏல் அம் கீல கலாவிகள்,
     மயமாயம் கீத விநோதிகள்,
     மருள்ஆரும் காதலர் மேல்விழு ...... மகளீர்,வில்

மதிமாடம் வான் நிகழ் வார்மிசை
     மகிழ்கூரும் பாழ் மனம், ஆம் உ
     மலர்பேணும் தாள் உனவே அருள் ...... அருளாயோ?

தனதானந் தானன தானன
     என வேதம் கூறு சொல் மீறு அளி
     ததை சேர் தண் பூமண மாலிகை ...... அணிமார்பா!

தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய
     குக வீர! அம்பா குமரா! மிகு
     தகைசால் அன்பு ஆர்அடியார்மகிழ் ......பெருவாழ்வே!

தினம்ஆம் அன்பா புனம் மேவிய
     தனிமானின் தோளுடன் ஆடிய
     தினைமா இன்பா! உயர் தேவர்கள் ...... தலைவா! மா

திகழ்வேடம் காளியொடு ஆடிய
     ஜெகதீச சங்கேச நட ஈசுரர்
     திருவாலங்காடினில் வீறிய ......      பெருமாளே.


பதவுரை

      தனதானந் தானன தானன என வேதம் கூறு சொல் மீறு அளி ததைசேர் தண் பூமண மாலிகை அணி மார்பா ---தனதானந் தானன தானன என்று வேதம் ஓதுவோரது சொல் ஓலியினும் மிகுந்த ஒலியுடன் வண்டுகள் நிறைந்து சேர்ந்துள்ள குளிர்ந்த பூக்களாலான நறுமணம் கொண்ட மாலைகளை அணிந்த திருமார்பரே!,

      தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக --- நொறுங்குதலும் அழிவும் அப்போது நிறையச் செய்த ஆட்டின் மேல் வாகனமாக ஏறி அமர்ந்த குகப் பெருமாளே!

     வீர --- வீரம் மிகுந்தவரே!

     அம்பா குமரா --- உமாதேவியின் திருக்குமாரரே!

     மிகு தகைசால் அன்பு ஆர் அடியார் மகிழ் பெருவாழ்வே -- தகைமை நிறைந்த , அன்பு மிகுந்த அடியார்கள் மகிழ்கின்ற பெரும் செல்வமே!

      தினம் ஆம் அன்பா(ய்) --- நாள்தோறும் அன்பு கொண்டு,

     புன(ம்) மேவிய தனிமானின் தோள் உடன் ஆடிய தினைமா இன்பா --- தினைப்புனத்தில் இருந்த ஒப்பற்ற மான் ஆகிய வள்ளிநாயகியார் தந்தருளிய தினைமாவினை இனிது உண்டு, அவரது திருத்தோள்களைத் தழுவியவரே!

     உயர் தேவர்கள் தலைவா --- வானுலகில் உள்ள தேவர்களின் தலைவரே!

      மா திகழ் வேடம் காளியொடு ஆடிய --- பெருமை திகழும் வேடத்துடன் காளியுடன் நடனம் ஆடிய

     ஜெகதீச சங்க ஈச நடேசுரர் திருவாலங்காடினில் வீறிய பெருமாளே --- உலகத் தலைவனும், அழகு பொருந்திய ஈசனும் ஆகிய நடேசப்பெருமான் திருநடனம் புரிந்து அருளிய திருத்தலமாகிய திருவாலங்காட்டில் எழுந்தலுளி எள்ள பெருமையில் மிக்கவரே!

      கன ஆலம் கூர் விழி மாதர்கள் --- அகன்ற, கொடிய விடம் போன்ற கண்களை உடையவர்கள்,

     மன சாலம் சால் பழிகாரிகள் --- மனத்தில் வஞ்சனையுடன் பசப்பி நடிப்பதில் தேர்ந்த பழிகாரிகள்.

      கன போக அம்போருகம் ஆம் இணை முலை மீதே --- மிகுந்த போகத்தைத் தருகின்ற, தாமரை மொட்டினை ஒத்ததான முலை இணைகளின் மீது,

     கசிவு ஆரும் கீறு கி(ள்)ளால் உறு வசை காணும் காளிம வீணிகள் --- அன்பு மிகுதியால் உண்டாகும் கீறல்களாலும் கிள்ளிய குறிப்புக்களாலும் பழிப்புக்குரிய கறுமை நிறைந்த வீணிகள்.

         களி கூறும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர் --- மனதில் ஆவேசத்தை உண்டு பண்ணுகின்ற நீரைக் குடிக்கின்ற கீழ்மைக்குணம் உடையவர்கள்,

     மனம் ஏல் அம் கீல கலாவிகள் --- தந்திரம் பொருந்திய மனத்தை உடையவர்கள்,

     மய மாயம் கீத விநோதிகள் ---  மயக்கும் இசையில் விநோத இன்பம் கொள்பவர்கள்.

      மருள் ஆரும் காதலர் மேல்விழு(ம்) மகளீர் --- காம மயக்கத்தால் தம்மிடம் காதல் கொண்டு வருவபவர்கள் மேல் விழுகின்ற பெண்கள்,

     வில் மதி மாடம் வான் நிகழ்வார் மிசை மகிழ்கூரும் பாழ் மனமாம் --- ஒளி பொருந்திய மேல் மாடத்தைக் கொண்ட வீடுகளில் நிலவையும் வானத்தையும் அளாவி விளங்க இருப்பவர்கள் மீது மகிழ்ச்சி மிகக் கொள்ளும் பாழான இந்த மனமானது,.

         உன மலர் பேணும் தாள் உ(ன்)னவே அருள் அருளாயோ --- தேவரீருடைய தாமரை மலரை ஒத்த திருவடிகளைத் தியானிக்க திருவருள் புரியமாட்டாயோ?

                                              பொழிப்புரை

     தனதானந் தானன தானன என்று வேதம் ஓதுவோரது சொல் ஒலியினும் மிகுந்த ஒலியுடன் வண்டுகள் நிறைந்து சேர்ந்துள்ள குளிர்ந்த பூக்களாலான நறுமணம் கொண்ட மாலைகளை அணிந்த திருமார்பரே!,

        நொறுங்குதலும் அழிவும் நிறையச் செய்த ஆட்டின் மேல் வாகனமாக ஏறி அமர்ந்த குகப் பெருமாளே!

     வீரம் மிகுந்தவரே!

     உமாதேவியின் திருக்குமாரரே!

     தகைமை நிறைந்த , அன்பு மிகுந்த அடியார்கள் மகிழ்கின்ற பெரும் செல்வமே!

      நாள்தோறும் அன்பு கொண்டு,  தினைப்புனத்தில் இருந்த ஒப்பற்ற மான் ஆகிய வள்ளிநாயகியார் தந்தருளிய தினைமாவினை இனிது உண்டு, அவரது திருத்தோள்களைத் தழுவியவரே!

     வானுலகில் உள்ள தேவர்களின் தலைவரே!

      பெருமை திகழும் வேடத்துடன் காளியுடன் நடனம் ஆடிய உலகத் தலைவனும், அழகு பொருந்திய ஈசனும் ஆகிய நடேசப்பெருமான் திருநடனம் புரிந்து அருளிய திருத்தலமாகிய திருவாலங்காட்டில் எழுந்தலுளி எள்ள பெருமையில் மிக்கவரே!

         அகன்ற, கொடிய விடம் போன்ற கண்களை உடையவர்கள், மனத்தில் வஞ்சனையுடன் பசப்பி நடிப்பதில் தேர்ந்த பழிகாரிகள். மிகுந்த போகத்தைத் தருகின்ற, தாமரை மொட்டினை ஒத்ததான முலை இணைகளின் மீது, அன்பு மிகுதியால் உண்டாகும் கீறல்களாலும் கிள்ளிய குறிப்புக்களாலும் பழிப்புக்குரிய கறுமை நிறைந்த வீணிகள். மனதில் ஆவேசத்தை உண்டு பண்ணுகின்ற நீரைக் குடிக்கின்ற கீழ்மைக்குணம் உடையவர்கள். தந்திரம் பொருந்திய மனத்தை உடையவர்கள். மயக்கும் இசையில் விநோத இன்பம் கொள்பவர்கள். காம மயக்கத்தால் தம்மிடம் காதல் கொண்டு வருவபவர்கள் மேல் விழுகின்ற பெண்கள். ஒளி பொருந்திய மேல் மாடத்தைக் கொண்ட வீடுகளில் நிலவையும் வானத்தையும் அளாவி விளங்க இருப்பவர்கள் மீது மகிழ்ச்சி மிகக் கொள்ளும் பாழான இந்த மனமானது, தேவரீருடைய தாமரை மலரை ஒத்த திருவடிகளைத் தியானிக்க திருவருள் புரியமாட்டாயோ?


விரிவுரை


கன ஆலம் கூர் விழி மாதர்கள் ---

கனம் - அகலம். பெண்களின் கண்கள் அகன்று இருக்கும். விடத்தின் தன்மை கொண்டவையாக இருக்கும். விடமானது உண்டாரைக் கொல்லும். பெண்களின் கண்கள் கண்டாரையும் கொல்லும்.

"ஆலம் வைத்த விழி" என்றார் திருவானைக்காத் திருப்புகழில். "ஆலம் ஏற்ற விழியினர்" என்றார் பிறிதொரு திருப்புகழில்.

"தண்ணீர் பீளை தவிராது ஒழுகும் கண்ணைப் பார்த்துக் கழுநீர்" என்று திங்கள் சடையோன் திருவருள் இல்லார் கருதுவர் என்கின்றார் பட்டினத்து அடிகள்.

ஆனால், அருளாளர்களுக்கு, அந்தக் கண்கள் தெய்வத் தன்மையோடு தோன்றும். திருமயிலையில், திருஞானசம்பந்தப் பெருமான், இறையருளால் எலும்பைப் பெண்ணாக்கினார். அப்படி வருவாகி வந்த பூம்பாவையாரின் கண்கள் எப்படி விளங்கின? தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடுவதைப் பாருங்கள்...

மண்ணிய மணியின் செய்ய
         வளர் ஒளி மேனியாள் தன்
கண் இணை வனப்புக் காணில்,
         காமரு வதனத் திங்கள்
தண்ணளி விரிந்த சோதி
         வெள்ளத்தில், தகைவின் நீள
ஒள் நிறக் கரிய செய்ய
         கயல் இரண்டு ஒத்து உலாவ.

கடைந்தெடுத்த மாணிக்கத்தினை விடவும் செம்மையான ஒளிபொருந்திய மேனியைக் கொண்ட பூம்பாவையாரின் இரண்டு கண்களின் அழகானது, அழகு மிக்க முகமான சந்திரனின் குளிர்ந்த கதிர்கள் விரிந்த நிலவொளியான வெள்ளத்தில் தடுக்கப்படாத நீளமுடைய ஒள்ளிய நிறமும் கருமையும் செம்மையும் கலந்த இரண்டு கயல் மீன்களைப் போன்று உலாவின என்கின்றார்.

மணிவாசகப் பெருமான் தான் கண்ட சிவமாகிய தலைவியின் கண்களைக் குறித்துத் திருக்கோவையாரில் பாடி இருப்பதைக் காண்போம்..

ஈசற்கு யான் வைத்த அன்பின்
    அகன்று, வன் வாங்கிய என்
பாசத்தில் கார் என்று, வன் தில்லை-
    யின் ஒளி போன்று, வன் தோள்
பூசு அத் திருநீறு என வெளுத்து,
    ஆங்கு அவன் பூங்கழல் யாம்
பேசு அத் திருவார்த்தையில் பெரு-
    நீளம் பெருங்கண்களே.

இதன் பொருள் --- தலைவியின் கண்களானவை, ஈசனிடத்தில் தான் வைத்த அன்பினைப் போல அகன்று இருந்தது. இறைவனால் என்னிடத்தில் இருந்து வாங்கப் பெற்ற ஆணவமலம் போல் கருமை நிறம் கொண்டு இருந்தது. அவனுடைய தில்லையைப் போல ஒளி பொருந்தி இருந்தது. அவனுடைய திருத்தோள்களில் பூசப்பெற்றுள்ள திருநீறு போல வெளுத்து இருந்தது. அவனுடைய திருவடித் தாமரைகளைப் பற்றி நான் பேசுகின்ற திருவார்த்தைகளைப் போல நீண்டு இருந்தது.

இப்படி ஆன்மாவின் நோக்கு எல்லாம் சிவமயமாய் இருப்பதைக் காட்டி நிற்கின்றது.

மன சாலம் சால் பழிகாரிகள் ---

மனத்தில் வஞ்சனையக் கொண்டு, அன்பு உள்ளவர் பாசாங்கு செய்து நடிப்பதில் தேர்ந்த பழிகாரிகள் விலைமாதர்கள்.

கன போக அம்போருகம் ஆம் இணை முலை மீதே கசிவு ஆரும் கீறு கிளால் உறு வசை காணும் காளிம வீணிகள் ---

கிள்ளால் என்னும் சொல் கிளால் என வந்தது.

காளிதம் - கறுப்பு.

மிகுந்த போகத்தைத் தருகின்ற, தாமரை மொட்டினை ஒத்ததான முலைகளைக் கீறுவதாலும், கிள்ளுவதாலும் உண்டான கருமை நிறம் பொருந்தி இருக்கும்.

களி கூறும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர் ---

உள்ளக் களிப்பை உண்டாக்குகின்ற ஆவேச நீரைத் தானும் குடித்து, தன்னை நாடி வருபவர்களுக்கும் கொடுத்துப் பருகச் செய்பவர்களாகிய கீழ்மைக் குணம் பொருந்தியவர்கள் விலைமாதர்கள்.

மருள் ஆரும் காதலர் மேல் விழு மகளீர் ---

காம மயக்கத்தால் தம்மிடம் காதல் கொண்டு வருவபவர்கள் மேல் விழுகின்ற பெண்கள்,

வில் மதி மாடம் வான் நிகழ்வார் மிசை மகிழ்கூரும் பாழ் மனமாம் ---

ஒளி பொருந்திய மாளிகைகளில் உள்ள நிலாமுற்றத்தில் உப்பரிகையில் விலைமாதரோடு கலந்து மகிழ்வதில் ஆர்வம் மிகக் கொள்வர் காமுகர்.

உன மலர் பேணும் தாள் உ(ன்)னவே அருள் அருளாயோ ---

கேட்டையே தருகின்ற இந்த இன்பத்தில் வைத்த மனத்தை மாற்றி, இறைவன் திருவடியில் வைக்க வேண்டும். எவ்வளவு புகழ்ந்தாலும் பொருள் இல்லாவதரைப் பொருந்த மனமில்லாதவர்கள் விலைமாதர்கள். விலைமாதரைப் பொருந்த மனம் மட்டும் இருந்தால் போதாது. மிக்க பொருளும் வேண்டும். பொருளின் அளவுக்கு ஏற்ப இன்பத்தை வழங்குவார்கள். பொருள் இல்லை என்றால், வெகுநாள் பழகியவரையும் ஓடஓட விரட்டும் தந்திரத்தை உடையவர்கள். இவர்களோடு பழகினால் பாழான நரகமே வாய்க்கும்.

ஆனால், இறைவன் திருவடியில் மனமானது பொருந்தினால் மட்டும் போதும். பொருள் வேண்டுவதில்லை. மலர்களை இட்டுத்தான் வழிபட வேண்டும் என்பது இல்லை. நொச்சி ஆயினும், கரந்தை ஆயினும் பச்சிலை இட்டுப் பரவும் தொண்டர் கரு இடைப் புகாமல் காத்து அருள் புரியும் இடைமருதன் இறைவன்.

"பத்தியுடன் நின்று பத்தி செயும் அன்பர் பத்திரம் அணிந்த கழலோனே" என்கின்றார் அருணை அடிகள் பிறிதொரு திருப்புகழில்.

போதும் பெறாவிடில் பச்சிலை உண்டு, புனல் உண்டு, எங்கும்
ஏதும் பெறாவிடில் நெஞ்சு உண்டு அன்றே, இணையாகச் செப்பும்
சூதும் பெறாமுலை பங்கர்,தென் தோணி புரேசர்,வண்டின்
தாதும் பெறாத அடித் தாமரை சென்று சார்வதற்கே.      ---  பட்டினத்தார்.

யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை;
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய்உறை;
யாவர்க்கும் ஆம் உண்ணும் போதொரு கைப்பிடி;
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே.  --- திருமந்திரம்.

பத்தி அடியவர் பச்சிலை இடினும்
முத்தி கொடுத்து முன் நின்று அருளித்
திகழ்ந்து உளது ஒருபால் திருவடி....  ---  பதினோராம் திருமுறை.

பத்தியாகிப் பணைத்தமெய் அன்பொடு
நொச்சி ஆயினும் கரந்தை ஆயினும்
பச்சிலை இட்டுப் பரவும் தொண்டர் 
கரு இடைப் புகாமல் காத்து அருள் புரியும்
திருவிடை மருத, திரிபுராந்தக,..      ---  பதினோராம் திருமுறை.

கல்லால் எறிந்தும், கை வில்லால் அடித்தும், கனிமதுரச்
சொல்லால் துதித்தும், நல் பச்சிலை தூவியும், தொண்டர் இனம்
எல்லாம் பிழைத்தனர், அன்பு அற்ற நான் இனி ஏது செய்வேன்?
கொல்லா விரதியர் நேர் நின்ற முக்கண் குருமணியே.

எல்லாம் உதவும் உனை ஒன்றில் பாவனையேனும் செய்து,
புல் ஆயினும், ஒரு பச்சிலை ஆயினும் போட்டு இறைஞ்சி
நில்லேன், நல் யோக நெறியும் செயேன், அருள் நீதி ஒன்றும்
கல்லேன், எவ்வாறு, பரமே! பரகதி காண்பதுவே.      ---  தாயுமானார்.

"எவன் பத்தியோடு, பயனை எதிர்பார்க்காமல், எனக்கு இலை, மலர், பழம், நீர் முதலிவற்றை அர்ப்பணம் செய்கின்றானோ, அன்பு நிறைந்த அந்த அடியவன் அளித்த காணிக்கையான இலை, மலர் முதலியவற்றை நான் சகுண சொருபமாக வெளிப்பட்டு அன்புடன் அருந்துகின்றேன்" என்று பகவத் கீதை ஒன்பதாம் அத்தியாயத்தில் 26 - ஆவது சுலோகத்தில் கூறப்பட்டு இருப்பதும் எண்ணுதற்கு உரியது.

பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி,
மெச்சி, சிவபத வீடு அருள்பவனை,
முத்தி நாதனை, மூவா முதல்வனை,
அண்டர் அண்டமும் அனைத்து உள புவனமும்
கண்ட அண்ணலை, கச்சியில் கடவுளை,
ஏக நானை, இணை அடி இறைஞ்சுமின்,
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே...

என்கின்றார் பட்டினத்து அடிகள். ஆகவே, போகத்தைத் தருகின்ற மாதரைப் பொருந்த நாடும் மனத்தை, அழியாத வீட்டு இன்பத்தை அருளுகின்ற இறைவன் திருவடியில் நாட்ட வேண்டும்.

மாதர் மேல் வைத்த அன்பினை ஒரு இலட்சம் கூறு செய்து, அதில் ஒரு கூறு மட்டுமே கூட இறைவன் திருவடியில் வைத்தால் போதும். அவர்க்கு இகபர நலன்களை அருள வல்லவன் இறைனவன் என்கின்றார் திருமாளிகைத் தேவர்.

தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த
    தயாவை நூறு ஆயிரம் கூறு இட்டு,
அத்தில் அங்கு ஒரு கூறு உன்கண் வைத்தவருக்கு
    அமருலகு அளிக்கும் நின் பெருமை,
பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும்
    பிழைத்தவை பொறுத்து அருள் செய்யும்
கைத்தலம் அடியேன் சென்னிமேல் வைத்த கங்கை
    கொண்ட சோளேச்சரத்தானே.

தொழும்பினரை உடையவர்கள் ஆள்வது உறு
     கடன் என்னும் தொல்லை மாற்றம்,
செழும்பவள இதழ்மடவார் திறத்து அழுந்தும்
     எனது உளத்தைத் திருப்பி, தன் சீர்க்
கொழும்புகழின் இனிது அழுத்திப் புதுக்கி அருள்
     தணிகை வரைக் குமரன் பாதம்
தழும்பு படப் பலகாலும் சாற்றுவது அல்-
     லால் பிறர் சீர் சாற்றாது என் நா.  ---  தணிகைப் புராணம்.

இதன் பொருள் ---

அடியாரை ஆள்வது உடையார் தம் பெருங்கடமையாம் என்னும் முதுமொழிக்கு இணங்க, செழிப்புடைய பவளம் போன்று சிவந்த வாயினை உடைய மகளிர்பால் சென்று அழுந்திக் கிடந்த அடியேனுடைய புன் யெஞ்சத்தை மீட்டு, தனது அழகிய கொழுவிய புகழின்கண் அழுந்துமாறு நன்கு பதித்து, அதனைப் புதுப்பித்து என்னைப் பாதுகாத்தருளிய திருத்தணிகை மலையின்கண் வீற்றிருக்கும் குமரப்பெருமானுடைய திருவடிப் புகழினைத் தழும்பு ஏறப் பலகாலும் பேசுவது அல்லது என்னுடைய செந்நா ஏனையோர் புகழை ஒரு சிறிதும்
பேசமாட்டாது.

பெண்அருங் கலமே, அமுதமே என, பெண்
      பேதையர்ப் புகழ்ந்து, அவம் திரிவேன்,
பண்உறும் தொடர்பில் பித்த என்கினும், நீ
      பயன் தரல் அறிந்து, நின் புகழேன்;
கண்உறும் கவின்கூர் அவயவம் கரந்தும்
      கதிர்கள் நூறுஆயிரம் கோடித்
தண்நிறம் கரவாது உயர்ந்துஎழும் சோண
      சைலனே கைலைநா யகனே.                     --- சோணசைல மாலை.

மின்னினில் நடுக்கம் உற்ற, நுண்ணிய நுசுப்பில், முத்த
     வெண் நகையில், வட்டம் ஒத்து, ...... அழகு ஆர
விம்மி இளகிக் கதித்த கொம்மை முலையில், குனித்த
     வில் நுதலில் இட்ட பொட்டில், ...... விலைமாதர்,

கன்னல் மொழியில், சிறக்கும் அன்ன நடையில், கறுத்த
     கண்ணின் இணையில், சிவத்த ...... கனிவாயில்,
கண் அழிவு வைத்த புத்தி, ஷண்முகம் நினைக்க வைத்த,
     கன்மவசம் எப்படிக்கும் ...... மறவேனே.                 ---  திருப்புகழ்.

அரும்பினால், னிக் கரும்பினால் தொடுத்து,
     அடர்ந்து மேல் தெறித்து, ...... அமராடும்
அநங்கனார்க்கு இளைத்து, யர்ந்து, அணாப்பி எத்து
     அரம்பை மார்க்கு அடைக் ...... கலம் ஆகி,

குரும்பை போல் பணைத்து, ரும்பு உறாக் கொதித்து
     எழுந்து, கூற்று எனக் ...... கொலைசூழும்,
குயங்கள் வேட்டு, றத் தியங்கு தூர்த்தனை,
     குணங்கள் ஆக்கி நல் ...... கழல்சேராய்.   ---  திருப்புகழ்.


தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே,
        சிற்றிடையிலே, நடையிலே,
  சேல்ஒத்த விழியிலே, பால்ஒத்த மொழியிலே,
        சிறு பிறை நுதல் கீற்றிலே,
பொட்டிலே, அவர்கட்டு பட்டிலே, புனைகந்த
        பொடியிலே, அடியிலே, மேல்
  பூரித்த முலையிலே, நிற்கின்ற நிலையிலே
        புந்தி தனை நுழைய விட்டு,
நெட்டிலே அலையாமல்; அறிவிலே, பொறையிலே,
        நின் அடியர் கூட்டத்திலே,
   நிலைபெற்ற அன்பிலே, மலைவு அற்ற மெய்ஞ்ஞான
        ஞேயத்திலே, உன்இருதாள்
மட்டிலே மனதுசெல, நினது அருளும் அருள்வையோ?
        வளமருவு தேவை அரசே!
   வரை ராசனுக்கு இருகண் மணியாய் உதித்த மலை
        வளர் காதலிப்பெண் உமையே.        --- தாயுமானார்.

தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக ---

தகர் - தகர்த்தல் என்றும் ஆட்டுக்கடா என்றும் பொருள்படும்.

ஏறு - விலங்கின் ஆண்.

அழிவைச் செய்த ஆடு என்றும் பொருள் கொள்ளலாம்.

மருப்பாயும் தார் வீரவாகு, - நெருப்பில் உதித்து,
அங்கண் புவனம் அனைத்தும் அழித்து உலவும்
செங்கண் கிடாய் அதனைச் சென்று, கொணர்ந்து, -  "எம்கோன்
விடுக்குதி" என்று உய்ப்ப, அதன்மீது இவர்ந்து, எண்திக்கும்
நடத்தி விளையாடும் நாதா!                               --- கந்தர் கலிவெண்பா.


மிகு தகைசால் அன்பு ஆர் அடியார் மகிழ் பெருவாழ்வே --

உலைவு அற, விருப்பாக, நீள்காவின் வாசமலர்
     வகைவகை எடுத்தே தொடா மாலிகா ஆபரணம்
     உனது அடியினில்  சூடவே நாடும் மாதவர்கள் .....இருபாதம்

உளமது தரித்தே வினாவோடு பாடி அருள்
     வழிபட எனக்கே, தயாவோடு தாள் உதவ
     உரகம் அது எடுத்தாடும் மேகார மீதின்மிசை ....வரவேணும்.
                                                               --- தலைவலி (திருப்புகழ்.)

மா திகழ் வேடம் காளியொடு ஆடிய ஜெகதீச சங்க ஈச நடேசுரர் திருவாலங்காடினில் வீறிய பெருமாளே

திருவாலங்காட்டின் பெருமையைச் சிவபெருமான் சொல்லக் கேட்ட சுநந்த முனிவர், பெருமான் அருளிய வண்ணம் தாண்டவ அருட்கோலத்தைக் காண விழைந்து திருவாலங்காடு சென்று தவம் புரிந்து இருந்தனர். கண்ணுதல் பெருமானது கைவிரல் அணியாகிய கார்க்கோடகன் திருவிரலில் விடத்தைக் கக்க, பெருமான் “நம்மைக் கருதாது தருக்குடன் நீ செய்த தீமைக்காகத் திருக்கைலையினின்று நீங்குக” எனப் பணித்தனர். நாகம் நடுநடுங்கிப் பணிய, சிவமூர்த்தி, “திருவாலங்காட்டில் அநேக ஆண்டுகளாக அருந்தவம் இயற்றும் சுநந்தருடன் சண்ட தாண்டவத்தைத் தரிசித்துப் பிறகு வருதி” என்று அருளிச் செய்தனர். கார்க்கோடகன் கருடனுக்கு அஞ்ச, எம்பெருமான் “இத் தீர்த்தத்தில் முழுகி அங்குள்ள முத்தி தீர்த்தத்தில் எழுக” என்று அருள் பாலிக்க, அரவு அவ்வாறே ஆலவனம் வந்து, சுநந்தரைக் கண்டு தொழுது, தனது வரலாற்றைக் கூறி நட்புகொண்டு தவத்து இருந்தது. சுநந்தர் நெடுங்காலம் தவத்தில் இருப்ப, அவரைப் புற்று மூடி முடிமேல் முஞ்சிப்புல் முளைத்துவிட்டது. அதனால் அவர் முஞ்சிகேச முனிவர் எனப் பெயர் பெற்றனர். இது நிற்க,

நிசுபன், சும்பன் என்னும் அசுரர் இருவர் ஒப்பாரு மிக்காரும் இன்றி, பல தீமைகளைச் செய்து வந்தனர். அத் துன்பத்திற்கு அஞ்சிய தேவர்கள் உமாதேவியாரை நோக்கி அருந்தவம் செய்தனர். அகிலாண்டநாயகி அமரர் முன் தோன்றி, “உங்களைத் துன்புறுத்தும் அசுரரை அழிப்பேன்” என்று அருளிச்செய்து, மலைச்சாரலை அடைந்து, தவ வடிவத்தைக் கொண்டு உறைகையில், சண்டன் முண்டன் என்னும் அவுணர் இருவர் அம்பிகையை அடைந்து “நீ யார்? தனித்திருக்குங் காரணம் என்ன? சும்பனிடம் சேருதி” என்னலும், உமாதேவியார், “தவம் இயற்றும் யான் ஆடவர்பால் அணுகேன்” என்று கூற, அவ்வசுரர் சும்பன்பால் சென்று தேவியின் திருமேனிப் பொலிவைக் கூறி, அவனால் அனுப்பப்பட்ட படையுடன் வந்து அழைத்தும் அம்பிகை வராமையால், வலிந்து இழுக்க எண்ணுகையில் இமயவல்லி, சிறிது வெகுள, அம்மையார் தோளிலிருந்து அநேகம் சேனைகளும் ஒரு சக்தியும் தோன்றி, அவற்றால், அசுர சேனையும் சண்டனும் முண்டனும் அழிந்தனர். உமாதேவியார் “சண்டணையும் முண்டனையும் கொன்றதனால் சாமுண்டி எனப் பெயர் பெற்று உலகோர் தொழ விளங்குதி” என அச்சக்திக்கு அருள் புரிந்தனர்.

அதனை அறிந்த நிசும்பன், சும்பன் என்போர் வெகுண்டு ஆர்த்து, அளப்பற்ற அசுர சேனையுடன் வந்து, அம்பிகையை எதிர்த்துக் கணைமாரி பெய்தனர். அகில ஜக அண்டநாயகி தனது உடலினின்றும் சத்தமாதர்களையும் சிவதூதியரையும் உண்டாக்கிப் போருக்கனுப்பி, அவர்களால் அசுரசேனையை அழிப்பித்து, தாமே முதலில் நிசும்பனையும் பிறகு சும்பனையும் கொன்றருளினார்.

அவ்விரு நிருதர்கட்கும் தங்கையாகிய குரோதி என்பவள் பெற்ற இரத்த பீசன் என்று ஒருவன் இருந்தான். அவன் தனது உடலினின்றும் ஒரு துளி உதிரம் தரைமேல் விழுந்தால், அத்துளி தன்னைப்போல் தானவன் ஆமாறு வரம் பெற்றவன். அவன், இச்செய்தி அறிந்து இமைப் பொழுதில் எதிர்த்தனன். அந் நிருதனுடன் சத்தமாதர்கள் சமர் செய்கையில், அவன் உடம்பினின்றும் விழுந்த உதிரத் துளிகளில் இருந்து, அவனைப் போன்ற அசுரர்கள் பல ஆயிரம் பேர் தோன்றி எதிர்த்தனர். இவ்வற்புதத்தைக் கண்ட சத்த மாதர்கள் அம்பிகையிடம் ஓடிவந்து கூற, அம்பிகை வெகுள, அவர் தோளினின்றும் பெரிய உக்கிரத்துடன் காளி தோன்றினாள். “பெண்ணே; யான் இரத்த பீசனைக் கொல்லும்போது உதிரத்துளி ஒன்றும் மண்ணில் விழாமல் உன் கைக் கபாலத்தில் ஏந்திக் குடிக்கக் கடவாய்” என்று பணித்து, இரத்த பீசனை அம்பிகை எதிர்த்து, காளி உதிரத்தைப் பருக, இறைவியார் இரத்த பீசனை சங்கரித்து அருளினார். இமையவரைத் தத்தம் இருப்பிடத்திற்கு அனுப்பிவிட்டு, காளியை மகிழ்வித்து அவளுக்கு சாமுண்டி என்ற பெயரும் தெய்விகமும் சிவபெருமானிடம் நிருத்தஞ் செய்து அவர் பக்கலில் உறைதலும் ஆகிய நலன்களைத் தந்தருளி, சத்த மாதர்கட்கும் அருள்புரிந்து மறைந்தருளினார்.

காளி, அசுரர் உதிரம் குடித்த ஆற்றலாலும், உமையிடம் பெற்ற வரத்தாலும் இறுமாந்து ஊன்களைப் புசித்து, மோகினி, இடாகினி, பூத பிசாசுகள் புடைசூழ ஒரு வனத்திலிருந்து மற்றொரு வனத்திற்குப் போய், உலகம் முழுவதும், உலாவி, திருவாலங்காட்டிற்கு அருகில் வந்து அனைவருக்கும் துன்பத்தைச் செய்து வாழ்ந்திருந்தனர்.

ஒரு நாள் திருவாலங்காடு சென்ற நாரத முனிவருக்குக் காளியின் தீச்செயலை கார்கோடக முனிவர் கூற, நாரதர் கேட்டுச் செல்லுகையில் காளி விழுங்க வர, அவர் மறைந்து சென்று திருமாலிடம் கூறி முறையிட்டார். திருமால் சிவபெருமானிடஞ் சென்று, “எந்தையே! காளியின் தருக்கை அடக்கி அருள வேண்டும்” என்று விண்ணப்பம் செய்ய, முக்கட்பெருமான் “இப்போதே காளியின் செருக்கை அடக்க வடாரண்யத்திற்கு வருவோம்” என்று திருவாய் மலர்ந்து, சுநந்த முனிவர் கார்க்கோடக முனிவர்கட்குத் திருவருள் செய்யத் திருவுளங்கொண்டு திருவாலங்காட்டிற்கு எழுந்தருளினார்.

கூற்றை உதைத்த குன்றவில்லி, வயிரவ வடிவு கொண்டனர். உடன் வந்த பூதங்களுடன் காளியின் சேனை எதிர்த்து வலியிழந்து காளியிடம் கூற, அவள் போர்க்கோலம் தாங்கி வந்து, அரனாரைக் கண்டு அஞ்சி “நிருத்த யுத்தம் செய்வோம்” எனக் கூற, கண்ணுதற் கடவுள் இசைந்து, முஞ்சிகேச கார்க்கோடகர்கட்குத் தரிசனம் தந்து திருநடனத்திற்குத் தேவருடன் வந்தருளினார். அக்காலை அமரர் அவரவர்கட்கு இசைந்த பல வாத்தியங்களை வாசித்தனர். அநவரதம், அற்புதம், ரௌத்ரம், கருணை, குற்சை, சாந்தம், சிருங்காரம், பயம், பெருநகை, வீரியம் என்னும் நவரசங்களும் அபநியமும் விளங்க வாத்தியங்களுக்கு ஒப்ப பாண்டரங்கம் ஆகிய சண்ட தாண்டவத்தைக் காளியுடன் அதி அற்புத விசித்திரமாகச் செய்தருளினார்.

இவ்வாறு நடனஞ் செய்கையில், பெருமானது திருச்செவியில் இருந்து குண்டலமானது நிருத்த வேகத்தால் நிலத்தில் விழ, அதை இறைவரே திருவடி ஒன்றினால் எடுத்துத் தரித்து ஊர்த்துவ தாண்டவம் செய்ய, காளி செயலற்று நாணிப் பணிந்தனள். சிவபெருமான் “நீ இங்கு ஒரு சத்தியாய் இருத்தி” எனத் திருவருள் புரிந்து, இரு முனிவரும், எண்ணில்லா அடியவரும் தமது தாண்டவத் திருவருட் கோலத்தை எந்நாளும் தெரிசிக்க திருவாலங்காட்டில் எழுந்தருளியிருந்தார்.

அறுகினை முடித்தோனை, ஆதாரம் ஆனவனை,
     மழு உழை பிடித்தோனை, மாகாளி நாணமுனம்
     அவைதனில் நடித்தோனை, மாதாதையே எனவும் ..... வருவோனே!
                                                                             --- (தலைவலி) திருப்புகழ்.


கருத்துரை

முருகா! விலைமாதர் மேல் வைத்த அடியேனது மனதை மாற்றி, தேவரீரது திருவடியைத் தியானிக்க அருள் புரிவாய்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...