அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அணி செவ்வியார்
(வடதிருமுல்லைவாயில்)
முருகா!
அடியேன் ஆசைக்
கடலினின்றும் கரை ஏறி,
உம்முடன் இரண்டறக்
கலந்து இன்புற அருள் புரிவீர்.
தனதய்ய
தானன தானன
தனதய்ய தானன தானன
தனதய்ய தானன தானன ...... தனதான
அணிசெவ்வி
யார்திரை சூழ்புவி
தனநிவ்வி யேகரை யேறிட
அறிவில்லி யாமடி யேனிட ...... ரதுதீர
அருள்வல்லை யோநெடு நாளின
மிருளில்லி லேயிடு மோவுன
தருளில்லை யோவின மானவை ...... யறியேனே
குணவில்ல
தாமக மேரினை
யணிசெல்வி யாயரு ணாசல
குருவல்ல மாதவ மேபெறு ...... குணசாத
குடிலில்ல
மேதரு நாளெது
மொழிநல்ல யோகவ ரேபணி
குணவல்ல வாசிவ னேசிவ ...... குருநாதா
பணிகொள்ளி
மாகண பூதமொ
டமர்கள்ளி கானக நாடக
பரமெல்லி யார்பர மேசுரி ......
தருகோவே
படரல்லி
மாமலர் பாணம
துடைவில்லி மாமத னாரனை
பரிசெல்வி யார்மரு காசுர ......
முருகேசா
மணமொல்லை
யாகி நகாகன
தனவல்லி மோகன மோடமர்
மகிழ்தில்லை மாநட மாடின ......
ரருள்பாலா
மருமல்லி
மாவன நீடிய
பொழில் மெல்லி காவன மாடமை
வடமுல்லை வாயிலின் மேவிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
அணி
செவ்வியார், திரை சூழ்புவி,
தனம், நிவ்வியே கரை ஏறிட,
அறிவு இல்லியாம் அடியேன் இடர், ...... அதுதீர,
அருள்
வல்லையோ? நெடு நாள் இனம்
இருள் இல்லிலே இடுமோ? உனது
அருள் இல்லையோ? இனம் ஆனவை ......அறியேனே.
குண
வில்லதா மக மேரினை
அணி செல்வியாய் அருணாசல
குருவல்ல மாதவமே பெறு ...... குணசாத,
குடில்
இல்லமே தரு நாள் எது?
மொழி, நல்ல யோகவரே பணி
குணவல்லவா! சிவனே! சிவ ...... குருநாதா!
பணி கொள்ளி, மாகண பூதமொடு
அமர் கள்ளி, கானக நாடக,
பர மெல்லியார், பரமஈசுரி ...... தருகோவே!
படர்
அல்லி மாமலர் பாணம் அது
உடை வில்லி
மாமதனார் அனை
பரி செல்வியார் மருகா! சுர ......
முருகஈசா!
மணம்
ஒல்லை ஆகி நகா கன
தனவல்லி மோகனமோடு அமர்,
மகிழ்தில்லை மாநடம் ஆடினர் ...... அருள்பாலா!
மரு
மல்லி மாவனம் நீடிய
பொழில் மெல்லி காவன மாடு அமை
வடமுல்லை வாயிலின் மேவிய ......
பெருமாளே.
பதவுரை
நல்ல யோகவரே பணி குண
வல்லவா
--- நற்குணம் அமைந்த சிவயோகிகள் தங்கள் உள்ளத்தில் வைத்துத் தொழுகின்ற
அருட்குணங்களோடு கூடிய எல்லாம் வல்லவரே!
சிவனே --- மங்கல சொரூபம்
ஆனவரே!
சிவ குருநாதா --- சிவபிரானுக்குக்
குருநாதரே!
பணி கொள்ளி --- பாம்புகளை அணிகலன்களாக அணிந்தவரும்,
மாகணம் பூதமொடு அமர் --- பாம்பும், நெருப்பும், பெரிய பேயும், பூதங்களும் விரும்பி உறையும்
கள்ளி --- அடியவர்கள் உள்ளத்தைக்
கொள்ளை கொண்டு கள்ளியும்,
கானக நாடக பர மெல்லியார் --- கள்ளிச்
செடிகளுடன் கூடிய சுடலைக் காட்டில் திருநடனம் ஆடுகின்றவரும், மேன்மையும் மென்மையம் உடையவரும்,
பரமேசுரி தரு கோவே --- மேலான தலைமை
உடையவரும் ஆகிய உமாதேவியார் பெற்றருளிய தலைவரே!
படர் அல்லி மாமலர்
பாணம் அது உடை வில்லி --- நீரில் படரும் பெருமை தங்கிய அல்லி
மலரை, பாணமாகக் கொண்டவனும், கரும்பு வில்லை உடையவனும் ஆகிய
மாமதனார் அனை பரி செல்வியார்
மருகா
--- அழகிய மன்மதனின் அன்னையும்,
பெருமை
வாய்ந்த செல்வியுமாகிய இலக்குமிதேவியின் மருமகனே!
சுர முருகேசா --- தேவர்கட்கு
அருள் புரியும் முருகக் கடவுளே!
மணம் ஒல்லையாகி நகா
கனதன வல்லி
--- விரைந்து எங்கும் கமழ்வதாகி மலைபோல் திரண்டுள்ள திருமுலைகளை உடைய கொடி
போன்றவராகிய
மோகனமோடு அமர் --- வசீகரத்துடன்
அமர்ந்து
மகிழ் தில்லை மாநடம் ஆடினர் அருள்பாலா
--- மகிழும் சிதம்பரத்தில் பெருமை மிக்க திருநடனம் ஆடிய சிவபெருமான் பெற்றருளிய
புதல்வரே!
மருமல்லி மாவன நீடிய பொழில் ---
வாசனை மிக்க மல்லிகையின் பெரிய வனம் வளமையுடன் நீண்டுள்ள சோலையும்,
மெல்லி காவன மாடு அமை --- மென்மையான
பூந்தோட்டங்களும், செல்வமும் பொருந்தி உள்ள
வடமுல்லைவாயிலின்
மேவிய பெருமாளே --- வடதிருமுல்லைவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி
உள்ள பெருமையின் மிக்கவரே!
அணிசெவ்வியார் --- அழகு நிறைந்த மாதர்கள்,
திரை சூழ்புவி --- கடல் சூழ்ந்த பூமி,
தனம் --- பொன் என்ற இந்த மூவாசைகளையும்
நிவ்வியே கரை ஏறிட --- கடந்து கரை
ஏறுவதற்கான
அறிவில்லியாம்
அடியேன் இடர் அது தீர --- அறிவற்றவனாகிய அடியேனது துயரங்கள்
நீங்குவதற்கு
அருள் வல்லையோ --- திருவருளுக்கு
வலிமை இல்லையோ
நெடு நாள் இனம் இருள்
இல்லிலே இடுமோ --- இன்னமும் அடியேனை இருள் வீட்டிலே செலுத்திடுமோ
உனது அருள் இல்லையோ --- தேவரீரது
திருவருள் அடியேன் நீது சிறிதும் இல்லையோ?
இனம் ஆனவை அறியேனே --- அடியார் திருக்கூட்டத்தையும்
நான் அறியேனே,
குண வில்லதா மக
மேரினை
--- நாணுடன் கூடிய வில்லாக பெரிய மேரு கிரியைத் தாங்கிய
அணி செல்வியாய்
அருணாசல குரு
--- உமாதேவியார் சிவந்த தீ மலையாகிய குருநாதராம் சிவமூர்த்தியைக் குறித்து
வல்ல மாதவமே பெறு
குணசாத
--- வலிமை பெற்ற பெரும் தவத்தைச் செய்து அதனால் பெற்ற குணமாகிய சிவாத்துவிதம்
என்னும் உண்மையாகிய
குடில் இல்லமே தரு
நாள் எது மொழி --- பிரணவ வீட்டை அடியேனுக்கு நீ தரும் நாள் எதுவெனக்
கூறுவாயாக.
பொழிப்புரை
நற்குணம் அமைந்த சிவயோகிகள் தங்கள்
உள்ளத்தில் வைத்துத் தொழுகின்ற அருட்குணங்களோடு கூடிய எல்லாம் வல்லவரே!
மங்கல சொரூபம் ஆனவரே!
சிவபிரானுக்குக் குருநாதரே!
பாம்புகளை அணிகலன்களாக அணிந்தவரும், நெருப்பும், பெரிய பேயும், பூதங்களும் விரும்பி உறையும் அடியவர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு கள்ளியும்,
மேன்மையும்
மென்மையம் உடையவரும், மேலான தலைமை
உடையவரும் ஆகிய உமாதேவியார் பெற்றருளிய தலைவரே!
நீரில் படரும் பெருமை தங்கிய அல்லி மலரை, பாணமாகக் கொண்டவனும், கரும்பு வில்லை உடையவனும் ஆகிய அழகிய
மன்மதனின் அன்னையும், பெருமை வாய்ந்த
செல்வியுமாகிய இலக்குமிதேவியின் மருமகனே!
தேவர்கட்கு அருள் புரியும் முருகக்
கடவுளே!
விரைந்து எங்கும் கமழ்வதாகி மலைபோல்
திரண்டுள்ள திருமுலைகளை உடைய கொடி போன்றவராகிய, வசீகரத்துடன் அமர்ந்து மகிழும்
சிதம்பரத்தில் பெருமை மிக்க திருநடனம் ஆடிய சிவபெருமான் பெற்றருளிய புதல்வரே!
வாசனை மிக்க மல்லிகையின் பெரிய வனம்
வளமையுடன் நீண்டுள்ள சோலையும்,
மென்மையான
பூந்தோட்டங்களும், செல்வமும் பொருந்தி உள்ள
வடதிருமுல்லைவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையின் மிக்கவரே!
அழகு நிறைந்த மாதர்கள், கடல் சூழ்ந்த பூமி, பொன் என்ற இந்த மூவாசைகளையும் கடந்து
கரை ஏறுவதற்கான அறிவற்றவனாகிய
அடியேனது துயரங்கள் நீங்குவதற்கு திருவருளுக்கு வலிமை
இல்லையோ? இன்னமும் அடியேனை
இருள் வீட்டிலே செலுத்திடுமோ? தேவரீரது திருவருள்
அடியேன் நீது சிறிதும் இல்லையோ?
அடியார்
திருக்கூட்டத்தையும் நான் அறியேனே.
நாணுடன் கூடிய வில்லாக பெரிய மேரு
கிரியைத் தாங்கிய உமாதேவியார்
சிவந்த தீ மலையாகிய குருநாதராம் சிவமூர்த்தியைக் குறித்து வலிமை பெற்ற பெரும்
தவத்தைச் செய்து அதனால் பெற்ற குணமாகிய சிவாத்துவிதம் என்னும் உண்மையாகிய பிரணவ
வீட்டை அடியேனுக்கு நீ தரும் நாள் எதுவெனக் கூறுவாயாக.
விரிவுரை
அணிசெவ்வியார், திரைசூழ் புவி, தன நிவ்வியே ---
அணி
செவ்வியார் --- அழகிய மகளிர்.
திரைசூழ்
புவி --- கடல் சூழ்ந்த மண்.
தனம்
--- பொன்.
மனிதனுக்கு
ஒழியாமல் உள்ள ஆசை மூன்று ஆகும். அவையாவன
--- பெண், மண், பொன் என்பன. இந்த மூவாசையால் விளையும்
கேடுகள் பல. ஆசையே பிறவிக்கு வித்து ஆகும். ஆசையினால் வரும் அல்லலும் அநந்தம்.
அவாஎன்ப
எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப்
பிறப்புஈனும் வித்து.
அவாஇல்லார்க்கு
இல்லாகும் துன்பம், அஃதுஉண்டேல்
தவாஅது
மேன்மேல் வரும். --- திருக்குறள்.
"நீவியே"
என்ற சொல் சந்தத்தை நோக்கி, "நிவ்வியே" என
வந்தது.
நீவுதல்
- கடத்தல், அழித்தல், கோதுதல், துடைத்தல், பரப்புதல், பூசுதல், தூண்டுதல் எனப்
பல பொருள்படும். இங்கு கடத்தல் என்னும் பொருளில் வந்தது.
கரை
ஏறிட
---
கரை
ஏறுதல் என்றமையால் ஆசையைக் கடல் என்று உணர வைக்கின்றனர். கடலைக் கடப்பது எத்துணை
அரிதோ, அத்துணை அரிது ஆசைக்
கடலைத் தாண்டுவது.
அறிவில்லியாம்
---
ஆசைக்
கடலினின்றும் கரை ஏறுதற்கு புணை யாது என்று சிந்தித்து அறிதல் வேண்டும். ஆசைக் கடலைத் தாண்ட வைக்கும் புணை ஆறெழுத்து
ஆகும்.
ஆசை
யிற்கை கலந்து சுமா சுமாபவ
சாக ரத்தில் அழுந்தி எழா எழாதுஉளம்
ஆறெ ழுத்தை நினைந்து குகா குகாஎன ...... வகைவராதோ
--- (ஓலமிட்ட) திருப்புகழ்.
அருள்
வல்லையோ …... அறியேனே ---
எம்பெருமானே!
அடியேனுடைய இடரைத் தீர்க்க அருளுக்கு வன்மை இல்லையா? இன்னும் இருளிடத்திலே தள்ளி விடுமா? உமது திருவருளே இல்லையா? இன்னதென்று அறிகிலேன்.
இனம்
--- கூட்டம். இங்கு அடியார் திருக்கூட்டத்தைக் குறிக்கும் என்று கொண்டு, அடியார் திருக்கூட்டத்தை நான் இன்னமும்
அறிந்து கொள்ளவில்லையே என்றும் கொள்ளலாம். "இனத்தான் ஆம் இன்னான் எனப்படும்
சொல்" என்றார் திருவள்ளுவ நாயனாரும்.
குணவில்லதா
மகமேரினை …........ குணசாத குடில் ---
குணம்
- வில்நாண்.
சிவபெருமான்
மாதொரு கூறன். பெருமானுடைய இடப்பாகம் உமையவளுடையது. வில்லைத் தாங்கிய கை இடக்கை.
அது உமையம்மையின் திருக்கரம். ஆதலால், மேருமலையை
வில்லாக வளைத்தவர் பார்வதி தேவியார் என்று இங்கே கூறி அருளினார்.
இதே
கருத்தை சுவாமிகள், திருவானைக்காத் திருப்புகழிலும் வைத்துப் பாடி
உள்ளார்.
அப்பர்
பெருமானும் இதே கருத்தில் பாடி உள்ளார். வில்லை வளைத்த திருக்கரம்
உமையம்மையாருடையதே என்கிறார்..
கற்றார்
பயில்கடல் நாகைக்கா ரோணத்துஎம் கண்ணுதலே
வில்
தாங்கிய கரம் வேல்நெடுங் கண்ணி வியன்கரமே
நல்
தாள் நெடும்சிலை நாண்வலித்த கரம் நின்கரமே
செற்றார்
புரம்செற்ற சேவகம் என்னைகொல் செப்புமினே.
இதன் பொழிப்புரை : கற்றவர்கள் பெருகிய , கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உறையும், நெற்றியில் கண்ணையுடைய எம்பெருமானாரே !
வில்லைத் தாங்கிய கை, வேல் போன்ற நீண்ட
கண்களை உடைய பார்வதி பாகத்தில் உள்ள கையே. நல்ல கால்களால் வில்லை மிதித்து அதற்கு
நாணை ஏற்றிய கை உம் பாகத்தில் உள்ள கையே. இவ்வாறாகப் பகைவருடைய மும்மதில்களை
அழித்த வீரம் உம்முடையது என்று கூறுவதன் காரணத்தை அடியேற்குத் தெரிவியுங்கள்.
கருதலர்
திரிபுரம் மாண்டு நீறு எழ,
மலைசிலை ஒருகையில் வாங்கு நாரணி,
கழல்அணி மலைமகள், காஞ்சி மாநகர் ....உறைபேதை,
களிமயில், சிவனுடன் வாழ்ந்த மோகினி,
கடல் உடை உலகினை ஈன்ற தாய், உமை,
கரிவனம் உறை அகிலாண்ட நாயகி ......அருள்பாலா!
--- (பரிமளம்
மிக) திருப்புகழ்.
பொருஇல்மலை
அரையன்அருள் பச்சைச் சித்ரமயில்,
புரம் எரிய இரணியதனுக் கைப் பற்றி இயல்
புதிய முடுக அரியதவம் உற்றுக் கச்சியினில்
......உறமேவும்
புகழ்வனிதை
தருபுதல்வ, பத்துக் கொத்துமுடி
புயம் இருபது அறவும் எய்த சக்ரக் கைக்கடவுள்,
பொறிஅரவின் மிசைதுயிலும் சுத்தப் பச்சைமுகில்..... மருகோனே.
--- (கருகியறிவு)
திருப்புகழ்.
பொன்
மேருமலையை வில்லாகப் பிடித்த அம்பிகை இடப்பாகம் பெறும்பொருட்டு திருவருணையில் தவம்
செய்து சிவபெருமானுடன் இரண்டறக் கலந்தனர். அத் தன்மையை அடியேனுக்குத் தரவேண்டும்
என்கின்றனர். அதாவது சிவத்தோடு கலந்துறையும் அத்துவித வாழ்வு ஆகும்.
இமயவல்லி இடப்பாகம்
பெற்றது
உமையம்மையார்
சந்திர சூரியர் சிவபெருமானுடைய திருக்கண்களே என்பதை உலகறியச் செய்யும் பொருட்டு, எம்பெருமானது திருக்கண்களைப்
புதைத்தனர். அதனால் உலகங்கள் எல்லாம் இருண்டு விட்டன. உயிர்கள் அனைத்தும்
தடுமாறித் துன்புற்றன. அக்காலை சிவபெருமான் நெற்றிக் கண்களைத் திறந்து ஒளியை
உண்டாக்கினர். அது கண்ட அம்பிகை முக்கட்பெருமானைத் தொழுது, "எம்பெருமானே! உலகமெல்லாம் இருண்டு
மருண்டு துன்புறத் தங்கள் திருக்கண்களைப் புதைத்த பாவம் தீர மண்ணுலகில் சென்று
தவம் புரியக் கருதுகின்றேன். அதற்குத் தக்க இடம் அருளிச் செய்வீர்" என்றனர்.
கண்ணுதற்கடவுள், "தேவீ ! உனை வினை
வந்து அணுகாது எனினும், உலகம் உய்யத் தவம்
புரியக் கருதினை. மண்ணுலகில் மிகவும் சிறந்த தலம் காஞ்சியே ஆகும். ஆங்கு சென்று
தவம் செய்தி" என்று அருளிச் செய்தனர்.
அம்மையார்
பாங்கிகளும், அடியார்களும், விநாயகரும், முருகரும் சூழ, கச்சியம்பதி போந்து, வேதமே மாமரமாகி நிற்க, அதன் கீழ் மணலால் இலிங்கம் உண்டாக்கி
வழிபாடு செய்தனர். அம்மையின் அன்பை
உலகறியச் செய்ய இறைவன் கம்பை நதியில் பெருவெள்ளம் வரச்செய்தனர். அதுகண்ட அம்மை தன்னைக் காத்துக் கொள்ளும்
கருத்து இன்றி, சிவலிங்கத்
திருமேனிக்குப் பழுது நேராவண்ணம் முலைத்தழும்பும், வளைச் சுவடும் உண்டாக சிவலிங்கத்தைத்
தழுவிக்கொண்டனர். இறைவன் அம்மையின்
இணையற்ற அன்பின் பெருக்கை நோக்கி உருகி, விடைமீது
காட்சி தந்தனர். உமாதேவி இறைவன் திருவடி மீது வீழ்ந்து, "இடப்புறம் தந்து என்னைக் கலந்து
அருளும்" என்றனர். பெருமான்,
"உமையே!
இங்கு தவம் புரிந்ததனால் கண் புதைத்த வினை கழிந்தது. இடப்பாகம் வேண்டுதியேல், நினைக்க முத்தியளிக்கும் திருத்தலமாகிய
திருவருணைக்குச் சென்று தவம் செய்வாய். ஆங்கு அதனை அருள்வோம்" என்று அருள்
புரிந்தனர்.
ஆரணன்
திருமால் தேட
அடிமுடி ஒளித்து ஞானப்
பூரண
ஒளியாய் மேல்கீழ்
உலகெலாம் பொருந்தி நிற்போம்
தாரணி
யவர்க்கும் மற்றைச்
சயிலமாய் இருப்போம் அங்கே
வாரணி
முலையாய் பாகம்
தருகுவோம் வருதி என்றார்.
அருளே
வடிவாகிய அம்பிகை தனது பரிவாரங்கள் யாவும் சூழ, இரண்டு காவதம் சென்று ஒரு வெள்ளிடையில்
சேர்ந்தனர். அங்கே முருகக் கடவுள்
வாழைப்பந்தர் இட்டனர். அது கண்ட தாய்,
அன்னையும்
குகனை நோக்கி
அரம்பையால் பந்தர் செய்து
பன்னிரு
கரமும் சால
வருந்தினை எனப் பாராட்டி
இன்னுமோர்
கருமம் சந்தி
முடிப்பதற்கு இனிய நன்னீர்
கைந்நிறை
வேலை ஏவி
அழைத்திடு கணத்தில் என்றாள்.
அக்காலை
ஆறுமுகப் பெருமான், தம் திருக்கரத்தில்
உள்ள வேலாயுதத்தை ஏவி, மேற்பால் உள்ள
மலையைப் பிளந்து, அதனின்றும் ஒரு
நதியைத் தருவித்தனர். சேய் தருவித்த காரணத்தால், அந்த நதி சேயாறு எனப்படுவதாயிற்று.
வாழைப்பந்தல்
என்ற திருத்தலமும் இன்று கண்கூடாக விளங்குகின்றது. அம்மை அந் நதியில்
சந்தியாவந்தனம் செய்து, திருவண்ணாமலையை
அடைந்தனர். அங்கு தவம் புரியும் முனிவர்களுடன் கௌதமர் அம்மையின் வரவைத் தரிந்து
அளவற்ற மகிழ்ச்சி உற்று, எதிர் ஓடி மண்மிசை
வீழ்ந்து கண்ணருவியுடன் துதித்து,
வாய்
குழறி, மெய் பதைத்து நின்றனர். அம்மை அன்புருவாய கோதமனாதியர்க்கு அருள்
புரிந்து, ஆங்கு ஒரு தவச்சாலை
நியமித்து தவம் புரிவாராயினார்.
கொந்தளகம்
சடைபிடித்து விரித்து, பொன்தோள்
குழைகழுத்தில் கண்டிகையின் குப்பை
பூட்டி,
உந்துமர
வுரிநிகர் பட்டாடை நீக்கி,
உரித்தமர வுரிசாத்தி, உத்தூ ளத்தால்
விந்தைதிரு
நீறணிந்து, கனற்குள் காய்ந்து,
விளங்கும் ஊசியின் ஒருகால் விரலை ஊன்றி,
அந்திபகல்
இறைபதத்தின் மனத்தை ஊன்றி,
அரியபெரும் தவம்புரிந்தாள் அகிலம்
ஈன்றாள்.
ஆங்கு
மிகப்பெரும் தவ வலிமை உடைய மகிடாசுரன் தன் சேனைகளுடன் வந்து அம்மை தவத்திற்கு
இடையூறு செய்ய, அம்மை துர்க்கையினால்
மகிடாசுரனைக் கொல்வித்து அருளினர். இங்ஙனம் பரமேசுவரி நெடிது காலம் மாதவம்
புரிந்து, கார்த்திகைத்
திங்களில் கார்த்திகை நட்சத்திரத்தன்று நீராடி, அண்ணாமலை அண்ணலைத் தொழுது துதித்து
நின்றனர். அதுசமயம், மலைமேல் ஒரு ஞானசோதி பல்லாயிரம் கோடி
சூரியர் உதயம்போல் எழுந்து உலகமெல்லாம் உய்யத் தோன்றியது. அம்மை அதுகண்டு, மெய் சிலிர்த்து, உள்ளம் குளிர்ந்து வணங்கினர். "பெண்ணே!
இம்மலையை வலமாக வருக" என்று சிவமூர்த்தி அசரீரியாகக் கூறியருளினர். அதுகேட்ட அம்மை ஞானதீபமுடன் விளங்கும்
அண்ணாமலையைத் தமது பரிவாரங்களுடன் வேதங்கள் முழங்க வலம் வருவாராயினார்.
"அம்மே! உமது திருவடி
சிவந்தன" என்று கங்கை கை கூப்பி வணங்க, உமாதேவியார், அக்கினி, தெற்கு, நிருதி என்ற திசைகளில் அண்ணாமலையைத்
தொழுது மேல்திசையை அடைந்தனர். அங்கு சிவபெருமான் விடைமீது காட்சி தந்து மறைந்தனர்.
பின்னர், அம்மை வாயு மூலையில்
உள்ள அணியண்ணாமலையைப் பணிந்து குபேர திசை, ஈசான திசைகளிலும் தொழுது, கீழ்த்திசை எய்தினார். தேவர் பூமழை
பொழிய, மறைகள் முழங்க, ஆலமுண்ட நீலகண்டப் பெருமான்
விடையின்மீது தோன்றி அம்மைக்குத் தன்னுருவில் பாதியைத் தந்து கலந்து அருளினார்.
அடுத்த
செஞ்சடை ஒருபுறம், ஒருபுறம் அளகம்
தொடுத்த
கொன்றை ஓர்புறம், ஒருபுறம்
நறுந்தொடையல்,
வடித்த
சூலம்ஓர் புறம், ஒருபுறம் மலர்க்குவளை,
திடத்தில்ஆர்
கழல் ஒருபுறம், ஒருபுறம் சிலம்பு.
குடில்
இல்லமே தரும் நாள் எது ---
குடிலை
என்பது குடில் என்று குறுகி நின்றது. குடிலை - பிரணவம். உமையம்மையார் தவம் புரிந்து இறைவனுடன் இரண்டறக் கலந்ததுபோல், குடிலை வீட்டைப் பெற்று, அத்துவித முத்தி பெறவேண்டும் என்று
அடிகள் வேண்டுகின்றனர்.
வடமுல்லைவாயில் ---
வடதிருமுல்லைவாயில்
என்னும் திருத்தலம், சென்னப்
பட்டணத்துக்கு மேற்கு, பத்து மைலில் உள்ள
அம்பத்தூர் இரயில் நிலையத்திற்கு வடமேற்கு ஒன்றரை மைலில் உள்ள அருமையான
திருத்தலம். அது ஒருகால் முல்லை வனமாக விளங்கியது. முல்லைக் கொடிகளுக்குள்
சிவலிங்கமூர்த்தி மறைந்து இருந்தது. ஆதொண்டைச் சக்கரவர்த்தி வேற்று அரசனிடம்
பொருது, வலிமை குன்றி வருங்கால், அவன் ஏறி வந்த யானையின் கால்களை அக்
கொடிகள் சுற்றிக் கொண்டன. மன்னன்
வால் கொண்டு முல்லைக் கொடியை வெட்ட,
அதற்குள்
இருந்த சிவலிங்கத்தின் மீது வாள் பட்டு உதிரம் வெளிப்பட்டது. மன்னன் பெரிதும் வருந்தி, விண்ணருவி எனக் கண்ணருவியுடன்
எம்பெருமானைப் பணிய, இறைவன் காட்சி தந்து, திருநந்தி தேவரையும் சிவகணங்களையும்
துணையாக அனுப்பினார். அதனால், ஆதொண்டை மன்னன் மாற்றலரை வென்று, அவர்கள்பால் இருந்து கவர்ந்த
அரும்பெரும் பொருள்களைக் கொண்டு,
முல்லைக்
காட்டை அகற்றி, அங்கு பெரிய
திருக்கோயில் புதுக்கி, ஆறுகால பூசைக்கும்
நைமித்திக வழிபாட்டிற்கும் வேண்டிய நிலங்களைச் சுவாமிக்கு ஏற்படுத்தி வழிபட்டு
பேறு பெற்றனன்.
இத்
திருத்தலத்தில் மிகப் பெரிய எருக்கம் தூண்கள் இரண்டு, இருப்புத் தூண்போல் இருப்பது
கவனித்தற்குரியது. அதுவும் மன்னன் கொணர்ந்து வைத்தது எனக் கூறுவர். சுந்தரமூர்த்தி
சுவாமிகளும் வழிபட்ட திருத்தலம்.
சொல்அரும்
புகழான் தொண்டைமான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையால் கட்டிஇட்டு
எல்லையில்
இன்பம் அவன்பெற வெளிப்பட்டு
அருளிய இறைவனே என்றும்
நல்லவர்
பரவும் திருமுல்லை வாயில்
நாதனே நரைவிடை ஏறீ
பல்கலைப்
பொருளே படுதுயர் களையாய்
பாசுப தாபரம் சுடரே.. --- சுந்தரர்.
பணி
கொள்ளி
---
பணி
- பாம்பு. பாம்பை அணிகலனாகக் கொண்டவள் அன்னை உமாதேவியார்.
"சந்த்ரசேகரி, நாக பூஷணத்தி, அண்டம் உண்ட நாரணி, ஆல போஜனத்தி" என்றார் கந்தவார் குழல்
எனத் தொடங்கும் திருப்புகழில்.
கள்ளி ---
கள்வனுக்கு
வாய்த்தவள் கள்ளி ஆவாள். "உள்ளம் கவர் கள்வன்" என்று சிவபெருமானைத்
திருஞானசம்பந்தர் போற்றினது பற்றி,
இறைவியார்
கள்ளி எனப்பட்டாள்.
உள்ளத்து
இதயத்து நெஞ்சத்து ஒருமூன்றுள்
பிள்ளைத்
தடம் உள்ளே பேசப் பிறந்தது,
வள்ளல்
திருவின் வயிற்றினுள் மாமாயைக்
கள்ள
ஒளியின் கருத்தாகும் கன்னியே. ---
திருமந்திரம்.
கானக
நாடக
---
சுடுகாட்டிலே
திருநடம் புரியும் இறைவரைக் குறித்தது. இறைவரின் இடப்பக்கத்தை உமாதேவியார்
கொண்டிருத்தலால் அவரும் காட்டில் நடம் ஆடினார் என்றார்.
பழைய
தம் அடியார் துதி செயப்
பார் உளோர்களும் விண் உளோர்தொழ,
குழலும்
மொந்தை விழா ஒலி செய்யும் கோட்டாற்றில்
கழலும்
வண்சிலம்பும் ஒலி செயக்
கான் இடைக்கணம் ஏத்த ஆடிய
அழகன் என்று எழுவார் அணியாவர் வானவர்க்கே. --- திருஞானசம்பந்தர்.
காவிஅம்
கண் மடவாளொடும் காட்டிடைத்
தீயகல்
ஏந்தி நின்று ஆடுதிர், தேன்மலர்
மேவிய
தண்பொழில் வெள்ளடை மேவிய
ஆவினில்
ஐந்துகொண்டு ஆட்டு உகந்தீரே. --- திருஞானசம்பந்தர்.
வேய்கள்
ஓங்கி வெண்முத்து
உதிர வெடிகொள் சுடலையுள்
ஒயும்
உருவில் உலறு
கூந்தல் அலறு பகுவாய
பேய்கள்
கூடிப் பிணங்கள்
மாந்தி அணங்கும் பெருங்காட்டில்,
மாயன்
ஆட மலையான்
மகளும் மருண்டு நோக்குமே. --- காரைக்காலம்மையார்.
கருத்துரை
பார்வதி
பாலகரே, இலக்குமி மருகரே, சிவ குமாரரே, வடமுல்லைவாயிலில் வாழ்பவரே, அடியேன் ஆசைக் கடலினின்றும் கரை ஏறி, உம்முடன் இரண்டறக் கலந்து இன்புற அருள்
புரிவீர்.
No comments:
Post a Comment