திருவாலங்காடு - 0687. வடிவது நீலம்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வடிவது நீலம் (திருவாலங்காடு)

முருகா!
அடியேனுடைய வினையைத் தீர்த்துக் காத்தருளி,
தமிழால் தேவரீருடைய திருப்புகழைப் பாடுமாறு ஆட்கொண்டு அருள் புரிவாய்.


தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
     தனதன தானந் தாத்த ...... தனதான

வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி
     வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம்

மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு
     மதிகெட மாயந் தீட்டி ...... யுயிர்போமுன்

படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற
     பழவினை பாவந் தீர்த்து ...... னடியேனைப்

பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த
     பரபுகழ் பாடென் றாட்கொ ...... டருள்வாயே

முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில்
     முதிர்நட மாடுங் கூத்தர் ...... புதல்வோனே

முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி
     முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய்

இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி
     யெதிர்பொரு சூரன் தாக்க ...... வரஏகி

இலகிய வேல்கொண் டார்த்து உடலிரு கூறன் றாக்கி
     யிமையவ ரேதந் தீர்த்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்

வடிவது நீலம் காட்டி, முடிவு உள காலன் கூட்டி
     வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம்,

மகனொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு
     மதிகெட, மாயந் தீட்டி ...... உயிர்போமுன்,

படிமிசை தாளும் காட்டி, உடல்உறு நோய்பண்டு ஏற்ற
     பழவினை பாவம் தீர்த்து,உன் ......அடியேனைப்

பரிவொடு நாளும் காத்து, விரிதமிழால் அம் கூர்த்த
     பர புகழ் பாடு என்று ஆட்கொடு ...... அருள்வாயே.

முடிமிசை சோமன் சூட்டி, வடிவுள ஆலங் காட்டில்
     முதிர்நடம் ஆடும் கூத்தர் ...... புதல்வோனே!

முருகு அவிழ் தாரும் சூட்டி, ஒருதனி வேழம் கூட்டி,
     முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய்!

இடி ஏன வேகம் காட்டி, நெடிதரு சூலம் தீட்டி,
     எதிர்பொரு சூரன் தாக்க ...... வர, ஏகி

இலகிய வேல்கொண்டு ஆர்த்து, உடல்இரு கூறுஅன்று ஆக்கி
     இமையவர் ஏதம் தீர்த்த ...... பெருமாளே.


பதவுரை

      முடிமிசை சோமன் சூட்டி --- திருமுடியில் பிறைச்சந்திரனைத் தரித்து,

     வடிவுள ஆலங்காட்டில் --- அழகு விளங்கும் திருத்தலமாகிய திருவாலங்காட்டில்,

     முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே --- முதன்மையான திருநடனம் ஆகிய சண்ட தாண்டவத்தைப் புரிந்து அருளும் கூத்தப் பெருமானின் திருப்புதல்வரே!

      முருகு அவிழ் தாரும் சூட்டி --- நறுமணம் வீசும் மாலையைத் தரித்து,

     முதல் ஒரு தனி வேழம் கூட்டி --- முதற்பொருள் ஆனவரும், ஒற்றப்பவரும் ஆன, யானை முகம் கொண்ட விநாயகப் பெருமானை அந்த வடிவுடன் வரச் செய்து,

      மறமானின் சேர்க்கை மயல் கூர்வாய் --- வேடர்குல மகளாகிய வள்ளிநாயகியோடு சேரவேண்டுமென்னும் மோகம் கொண்டவரே!

      இடி என வேகம் காட்டி --- இடியைப் போல ஆர்ப்பரித்து விரைந்து வந்து,

     நெடி தரு சூலம் தீட்டி --- புலால் நாறுகின்ற கூர்மையான சூலாயுதத்தைக் திருக்கையில் எடுத்து,

      எதிர் பொரு சூரன் தாக்க வர ஏகி --- எதிர்த்துப் போர் புரிய வந்த சூரனை எதிர்த்துச் சென்று,

      இலகிய வேல் கொண்டு ஆர்த்து --- ஒளி விளங்கும் வேலாயுதத்தைக் கொண்டு வேகமாகச் செலுத்தி,

     உடல் இரு கூறு அன்று ஆக்கி ---  மாமரமாக நின்ற சூரபதுமனுடைய உடலை இரு கூளாகப் பிளந்து,

     இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே --- தேவர்களுக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கிய பெருமையில் மிக்கவரே!

     வடிவது நீலம் காட்டி --- கருநிறமான உடலைக் கொண்ட,

     முடிவுள காலன் --- வாழ்நாள் முடிவுக் காலத்தில் காலன் என்பான்,

     கூட்டிவர விடு தூதன் --- அனுப்பிய காலதூதுவன்,

      கோட்டி விடு பாசம் --- வளைத்து பாசக் கயிற்றினை எறிந்த அக் காலத்தில், (மரணம் அடைகின்ற பொழுது),

       மகனொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு --- மகனும், மாமன், பாட்டி முதலான உறவினர்களும் கேட்டு

      மதி கெட மாயம் தீட்டி --- அறிவு கலங்கும்படியாக மயக்கத்தைச் செய்து,

     உயிர் போமுன் --- உயிர் உடலை விட்டுப் போவதன் முன்,

      படிமிசை தாளும் காட்டி --- நிலம் தன் மேல் வந்து அருளி, நீள் கழல்கள் காட்டி,

     உடல் உறு நோய் பண்டு ஏற்ற பழவினை பாவம் தீர்த்து --- முன்பு செய்த வினைகளால் வந்த இந்த உடலானது அனுபவிக்கின்ற துன்பங்களுக்கு இடமான பாவங்களை எல்லாம் தீர்த்து அருளி,

      அடியேனை பரிவோடு நாளும் காத்து --- உனது அடியேனை அன்புடன் நாள்தோறும் காத்து அருள் புரிந்து,

      விரி தமிழால் --- விரிந்த அழகிய தமிழால்,

     அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட்கொண்டு அருள்வாயே --- அழகு மிக்க மேலான திருப்புகழைப் பாடுவாயாக என்று ஆட்கொண்டு அருள் புரிவாயாக.


பொழிப்புரை


         திருமுடியில் பிறைச்சந்திரனைத் தரித்து, அழகு விளங்கும் திருத்தலமாகிய திருவாலங்காட்டில், முதன்மையான திருநடனம் ஆகிய சண்ட தாண்டவத்தைப் புரிந்து அருளும் கூத்தப் பெருமானின் திருப்புதல்வரே!

         நறுமணம் வீசும் மாலையைத் தரித்த முதற்பொருள் ஆனவரும், ஒற்றப்பவரும் ஆன, யானை முகம் கொண்ட விநாயகப் பெருமானை அந்த வடிவுடன் வரச் செய்து, வேடர்குல மகளாகிய வள்ளிநாயகியோடு சேரவேண்டுமென்னும் மோகம் கொண்டவரே!

         இடியைப் போல ஆர்ப்பரித்து விரைந்து வந்து, புலால் நாறுகின்ற கூர்மையான சூலாயுதத்தைக் திருக்கையில் எடுத்து, எதிர்த்துப் போர் புரிய வந்த சூரனை எதிர்த்துச் சென்று, ஒளி விளங்கும் வேலாயுதத்தைக் கொண்டு வேகமாகச் செலுத்தி,
மாமரமாக நின்ற சூரபதுமனுடைய உடலை இரு கூளாகப் பிளந்து, தேவர்களுக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கிய பெருமையில் மிக்கவரே!

         கருநிறமான உடலைக் கொண்ட, வாழ்நாள் முடிவுக் காலத்தில் காலன் என்பான், அனுப்பிய காலதூதுவன், வளைத்து பாசக் கயிற்றினை எறிந்த அக் காலத்தில், (மரணம் அடைகின்ற பொழுது),  மகனும், மாமன், பாட்டி முதலான உறவினர்களும் கேட்டு அறிவு கலங்கும்படியாக மயக்கத்தைச் செய்து, உயிர் உடலை விட்டுப் போவதன் முன், நிலம் தன் மேல் வந்து அருளி, நீள் கழல்கள் காட்டி,  முன்பு செய்த வினைகளால் வந்த இந்த உடலானது அனுபவிக்கின்ற துன்பங்களுக்கு இடமான பாவங்களை எல்லாம் தீர்த்து அருளி, உனது அடியேனை அன்புடன் நாள்தோறும் காத்து அருள் புரிந்து,  விரிந்த அழகிய தமிழால், அழகு மிக்க மேலான திருப்புகழைப் பாடுவாயாக என்று ஆட்கொண்டு அருள் புரிவாயாக.


விரிவுரை

         வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டிவர விடு தூதன் கோட்டி விடு பாசம், மகனொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு, மதி கெட மாயம் தீட்டி, உயிர் போமுன்  ---

தீவினையைச் செய்த பாவிகளை காலனால் விடுக்கப்பட்ட இயமதூதர்கள் வடவா முகாக்கினி போல் கொதித்து, பாசக் கயிற்றால் இறுக்கிக் கட்டிக் கொண்டு, தமது இயமபுரம் கொண்டு போய்த் துன்புறுத்துவார்கள். புண்ணியம் செய்தவர்களை இயம தூதுவர்கள் உபசரித்து, சுகமான வழியில் கொண்டு போவார்கள்.

இயமலோகத்திற்கும் மனிதலோகத்திற்கும் இடையிலுள்ள வழி, எண்பத்தாறாயிரம் யோசனைத் தூரமாகும். அவ்வழியானது காடாகவும், கோரமாகவும், நாற்புறங்களிலும் தண்ணீரில்லாத வெளியாகவும் இருக்கிறது. அந்த வழியில் மரங்களின் நிழல் கிடையாது. தண்ணீருமில்லை. களைப்படைந்தவனும் இளைத்தவனுமான மனிதன் இளைப்பாறத் தக்க இடங்களும் இல்லை. இயமனுடைய கட்டளையைச் செய்கின்ற இயமதூதர்களால் ஆடவரும், மகளிரும் அப்படியே பூமியிலுள்ள மற்றவைகளும் அந்த வழியில் பலாத்காரமாகக் கொண்டுபோகப் படுகிறார்கள்.

எந்த மனிதர்கள் ஏழைகளுக்கு வண்டி, குதிரை முதலிய வாகனங்களைக் கொடுத்து உதவிசெய்கின்றார்களோ அவர்கள் அந்த வாகனங்களின்மேல் அந்த வழியில் துன்பமில்லாமல் செல்லுகிறார்கள்.

குடையைத் தானம் செய்தவர்கள் குடையினாலே வெய்யிலைத் தடுத்துக் கொண்டு செல்லுகிறார்கள்.

அன்னதானம் செய்தவர்கள் அந்த வழியில் அன்னத்தைப் புசித்துக் கொண்டு பசியின்றிச் செல்லுகிறார்கள்.

ஆடைகளைக் கொடுத்தவர்கள் ஆடையுள்ளவர்களாகவும்,  கொடாதவர்கள் நிர்வாணராகவும் செல்லுகிறார்கள்.

பொன்னைக் கொடுத்தவர்கள் அலங்கரிக்கப் பட்டவர்களாக சுகமாகச் செல்லுகிறார்கள்.

பூதானம் செய்தவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் அடைந்து இன்புற்று இனிது செல்லுகிறார்கள்.

தானியங்களைக் கொடுக்கிற மனிதர்கள் துன்பமின்றிச் செல்லுகிறார்கள்.

வீட்டைத் தானம் செய்கிற மனிதர்கள் விமானங்களில் மிக்க சுகமாகச் செல்லுகிறார்கள்;

தண்ணீரைத் தானம் செய்தவர்கள் தாகம் இல்லாதவர்களாயும் மிக மகிழ்ந்த மனம் உள்ளவர்களாகவும் செல்லுகிறார்கள்;

விளக்கு தானம் செய்தவர்கள் பிரகாசமுள்ள வழியில் பிரகாசமுள்ள உருவத்துடன் செல்லுகிறார்கள்.

கோதானம் செய்தவர்கள் எல்லா பாவங்களாலும் விடுபட்டுச் சுகமாகச் செல்லுகிறார்கள்.

ஒரு மாதம் உபவாசம் இருப்பவர்கள் அன்னங் கட்டிய விமானத்தின் மீது செல்லுகிறார்கள்.

ஆறு நாளுக்கு ஒருதரம் உபவாசமிருப்பவர்கள் மயில்கள் பூட்டின விமானங்களின் மேல் செல்லுவார்கள்.

எந்த மனிதன் ஒரு வேளை சாப்பிட்டுக் கொண்டு மூன்று இரவுகளைக் கழிக்கிறானோ? இடைவேளைகளில் சாப்பிடுகிறதில்லையோ அவனுக்கு அழிவற்ற லோகங்கள் கிடைக்கின்றன.

தண்ணீர்ப் பந்தல் வைத்து கோடைக் காலத்தில் தாகத்தால் வாடும் மக்களுக்குத் தண்ணீரும் மோரும் கொடுத்து உதவிய உத்தமர்களுக்கு அந்த யமலோகத்தில் புஷ்போதகை என்ற நதியை உண்டாக்கிக் கொடுப்பார்கள். அந்த நதியில் அவர்கள் அமிருதம் போன்ற குளிர்ந்த தண்ணீரைக் குடித்துக் கொண்டு சுகமாய் இருப்பார்கள்.

எவர்கள் தீவினைகளைச் செய்தவர்களோ அவர்களுக்கு அந்த நதியில் சீயானது குடிப்பதற்கு ஏற்படுத்தப் படுகிறது.

மாமிசங்களைத் தின்றவர்கள் யமலோகத்தில் தமது மாமிசத்தைத் தானே யுண்டு தங்களுடம்பில் வடியும் உதிரத்தைக் குடித்துக்கொண்டுத் தீவாய் நகரத்தில் மல்லாக்கப் படுத்த வண்ணமாக பெருந்துன்பத்தை யனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

தாய் மனைவி மக்கள் முதலியோர் உயிர் பிரியும்போது கதறி அழுவார்கள்.  உயிர்க்கு உறுதி பயக்குந் தன்மையைத் தேடமாட்டார்கள். இயமனுடைய பாசக்கயிற்றினின்று விடுவிக்கவும் ஆற்றல் அற்று வாளா வருந்துவார்கள். அம் மரணகாலத்தில் காப்பாற்ற வல்லவர் முருகவேள் ஒருவரே யாவர்.

முதலவினை முடிவில்இரு பிறைஎயிறு கயிறுகொடு
 முதுவடவை விழிசுழல வருகால தூதர்கெட
 முடுகுவதும் அருள்நெறியில் உதவுவதும்”     --- சீர்பாதவகுப்பு

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழும் சுடரே
வைவைத்த வேற்படை வானவனே மறவேன் உனை நான்
ஐவர்க்கு இடம்பெற கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு
கைவைத்த வீடு குலையும் முன்னே வந்து காத்தருளே.

மைவரும் கண்டத்தர் மைந்த 'கந்தா' என்று வாழ்த்தும் இந்தக்
கைவரும் தொண்டுஅன்றி மற்றுஅறியேன் கற்ற கல்வியும் போய்ப்
பை வரும் கேளும் பதியும் கதறப் பழகி நிற்கும்
ஐவரும் கைவிட்டு மெய்விடும்போது உன் அடைக்கலமே.     --- கந்தர்அலங்காரம்.
  
காலனார் வெம் கொடும் தூதர் பாசம் கொடு, ன்
     காலின் ஆர் தந்து உடன் ...... கொடுபோக,
காதலார் மைந்தரும் தாயர் ஆரும் சுடும்
     கானமே பின் தொடர்ந்து ...... அலறாமுன்,

சூலம்,வாள், தண்டு, செஞ்சேவல், கோதண்டமும்,
     சூடுதோளும், தடம் ...... திருமார்பும்,
தூயதாள் தண்டையும் காண, ஆர்வம் செயும்
     தோகைமேல் கொண்டுமுன் ...... வரவேணும்.             --- திருப்புகழ்.

காதி வரும் இயம தூதர் கயிறுகொடு
     காலில் இறுக எனை ...... வந்து இழாதே,
காவல் என விரைய ஓடி, உனது அடிமை
     காண வருவது இனி ...... எந்த நானோ?        --- (மோதிஇறுகி)  திருப்புகழ்.

கொல்லத் தான் நமனார் தமர் வந்தக்கால்
இல்லத்தார் செய்யல் ஆவது என் ஏழைகாள்,
நல்லத்தான் நமை ஆள்உடையான் கழல்
சொல்லத்தான் வல்லிரேல் துயர் தீருமே. --- அப்பர்.
  
படிமிசை தாளும் காட்டி ---

படி - உலகம்.

"நிலம் தன்மேல் வந்து அருளி, நீள் கழல்கள் காட்டி,
நாயில் கடையாய்க் கிடந்த அடியேற்கு
தாயில் சிறந்த தயா ஆன தத்துவனே"

என்றார் மணிவாசகப் பெருமான்.

இறைவன் எண்ணற்ற உயிர்களிடத்து என்றும் உடனாய் நீங்காது நின்று அவைகளுக்கு வேண்டுகின்ற எல்லா நலங்களையும் எப்போதும் புரிந்து வருகிறான். அவன் ஆணவத்தில் அழுந்திக் கிடந்த உயிர்களை அந்தக் கேவல நிலையிலிருந்து எடுத்துச் சகல நிலையில் கொண்டு வந்த அருட்செயலையும், அச்சகல நிலையில் உயிர்கள் பல வகைப் பிறப்புக்களைக் கடந்து மனிதப் பிறப்பை அடையும்படி செய்கின்ற அவனது பேருதவியையும், உயிர்கள் உலகிற் பிறந்தும் இறந்தும் உழன்று படிப்படியாகப் பக்குவ முதிர்ச்சி பெற்ற காலத்தில் குருவாய் வந்து தத்துவங்களின் இயல்புகள், தன்னியல்பு ஆகிய எல்லாவற்றையும் விளங்கக் காட்டி அம்மெய்யுணர்வின் பயனாகப் பாசநீக்கம் வருவித்து அவ்வுயிர்களைத் தானாகச் செய்து தன்னொடு சேர்த்துக் கொண்டு பேரின்பம் அளிப்பான்.

                  ......      ......      மாறிவரும்
ஈர்இரண்டு தோற்றத்து, எழுபிறப்புள், யோனி எண்பான்
ஆரவந்த நான்கு நூறுஆயிரத்துள், -  தீர்வுஅரிய

கன்மத்துக்கு ஈடாய், கறங்கும் சகடமும் போல்
சென்மித்து, உழலத் திரோதித்து, - வெந்நிரய

சொர்க்க ஆதி போகம் எலாம் துய்ப்பித்து, பக்குவத்தால்
நல்காரணம் சிறிது நண்ணுதலும்,  -  தர்க்கமிடும்

தொல்நூல் பரசமயம் தோறும், அதுஅதுவே
நல்நூல் எனத் தெரிந்து, நாட்டுவித்து,  -  முன்நூல்

விரதமுத லாயபல மெய்த் தவத்தின் உண்மை
சரியை கிரியா யோகம் சார்வித்து,  -  அருள்பெருகு

சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து,
ஆலோகம் தன்னை அகற்றுவித்து,  -  நால்வகையாம்

சத்தி நிபாதம் தருதற்கு, இருவினையும்
ஒத்து வரும் காலம் உளஆகி,  -  பெத்த

மலபரிபாகம் வரும் அளவில், பல்நாள்
அலமருதல் கண்ணுற்று, அருளி,  - உலவாது

 அறிவுக்கு அறிவு ஆகி, அவ்வுறிவுக்கு எட்டா
 நெறியில் செறிந்த நிலை நீங்கி,  -  பிறியாக்

கருணைத் திருவுருவாய், காசினிக்கே தோன்றி
குருபரன் என்று ஓர் திருப்பேர் கொண்டு,  - திருநோக்கால்

ஊழ்வினையைப் போக்கி, உடல் ஆறுபத்து எட்டு, நிலம்
ஏழும், அத்துவாக்கள்  இருமூன்றும்  -  பாழ்ஆக,

ஆணவமான படலம் கிழித்து,  அறிவில்
காணஅரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டி, -  பூணும்

அடிஞானத்தால் பொருளும் ஆன்மாவும் காட்டி,
கடிஆர் புவனம் முற்றும் காட்டி,  -  முடியாது

தேக்கு பரமானந்த தெள்அமுதம் ஆகி, எங்கும்
நீக்கம் அற நின்ற நிலை காட்டி,  -  போக்கும்

வரவும் நினைப்பும் மறப்பும் பகலும்
இரவும் கடந்து, உலவா இன்பம் -  மருவுவித்து,

கன்ம மலத்தார்க்கு மலர்க்கண் மூன்றும் தாழ்சடையும்
வன்மழுவும் மானும்உடல் மால்விடைமேல் - மின்இடத்துப்

பூத்த பவளப் பொருப்பு ஒன்று வெள்ளி வெற்பில்
வாய்த்த அனைய தெய்வ வடிவுஆகி,  -  மூத்த

கரும மலக்கட்டு அறுத்து, கண்அருள் செய்து, உள்நின்று
ஒரு மலத்தார்க்கு இன்பம் உதவி, - பெருகி எழு

மூன்று அவத்தையும் கழற்றி, முத்தர் உடனே இருத்தி,
ஆன்ற பரமுத்தி அடைவித்து  -  தோன்றவரும்

யான் எனது என்று அற்ற இடமே திருவடியா,
மோன பர ஆனந்தம் முடி ஆக,  -  ஞானம்

திருஉருவா, இச்சை செயல் அறிவு கண்ணா,
அருள் அதுவே செங்கை அலரா,  -  இருநிலமே

சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே! எவ் உயிர்க்கும்
பின்னம் அற நின்ற பெருமானே!         --- கந்தர் கலிவெண்பா.


அருபரத்து ஒருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையைச்

சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்
பிறிவினை அறியா நிழல் அது போல

முன் பின்னாகி முனியாது அத்திசை
என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80

அன்பு எனும் ஆறு கரை அது புரள
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி

உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுண் துளி அரும்ப

சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி.            --- திருவாசகம்.


உடல் உறு நோய் பண்டு ஏற்ற பழவினை பாவம் தீர்த்து ---

குருநாதன் திருநோக்கம் கிடைத்தவுடன் உயிரானது முற்பிறவிகளில் செய்த வினைகள் அனைத்தும் நெருப்பிடைப் பட்ட பஞ்சு போல் அழிந்து ஒழியும். இந்த உடலுக்கு உள்ள பிராரத்த வினையானது உடல் ஊழாய்க் கழிந்து ஒழியும்.
        

விரி தமிழால் அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட்கொண்டு அருள்வாயே ---

உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழியே ஆகும். இறைவன் அருளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே ஆகும். "நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொல் தமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்" என்னும் பெரியபுராணப் பாடல் வரிகள் சிந்தனைக்கு உரியன. இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழ் ஆராய்ந்தமையாலும், பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி சிவாச்சாரியாரிடம் சீட்டு எழுதி அனுப்பியது தமிழிலே ஆதலானும், சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணை அடிகளுக்கும் அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும் இதன் பெருமை நன்கு விளங்குகின்றது. முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ்.  கல் புணையை நல் புணை ஆக்கியது தமிழ்.  எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ். இறைவனை இரவில் திருவாரூர்த் தெருவில் இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ். மணிவாசகருக்காக குதிரைச் சேவகனாக வரச்செய்தது தமிழ். கல் தூணில் காட்சி தரச் செய்தது தமிழ். பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது தமிழ். இயற்கையான மொழி தமிழ். பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது தமிழ். ஆதலால் நம் அருணகிரியார் “அரிய தமிழ்” என்றும் "விரிதமிழ்" என்றும் பாடுகின்றார்.

"தமிழ்த் தென்றலின் உடனே நின்று எரிக்கும் பிறை" என்றார் பிறிதொரு திருப்புகழப் பாடலில்.

தமிழ்த் தென்றல், தமிழ் வழங்கும் திசை தென் திசை. அத்திசையில் இருந்து வரும் மெல்லியக் காற்று தென்றல், இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும் என்பது நிகண்டு. தமிழ் என்றால் இனிமை என்று பொருள். "தமிழ் ஓதிய குயிலோ" என்றும் ஒரு திருப்புகழில் பாடியுள்ளார் அடிகளார். பெண்களின் குரல் மிகவும் இனிமையாக பறவைகளின் குரல் போல் இருக்கும். இனியக் காற்று தென்றல். “தமிழ் மாருதம்” என்று தெய்வச் சேக்கிழாரும் கூறுகின்றனர்.

தலைவனைப் பிரிந்திருக்கின்ற தலைவிக்குக் குளிர்ந்த தென்றல் காற்று நெருப்பை அள்ளி வீசுவதைப் போல் துன்பத்தைத் தரும். பரவையாரைப் பிரிந்து வருந்தும் சுந்தரரைத் தென்றல் மாருதம் வருத்தியது. அப்போது அப்பெருமான் கூறுகின்றார்: “ஏ தென்றல் காற்றே! உயர்ந்த இடத்தில் பிறந்தவர்க்கு நற்குணம் தானேயமையும். நல்லவரைச் சார்ந்தவர்க்கும் அவ்வாறே நல்ல பண்புகள் உண்டாகும். தமிழ் மாருதமே! நீ எம்பிரானுடைய பொதிய மலையில் பிறந்தனை; பரமன் இருந்து அரசாண்டதும், தடாதகைப் பிராட்டியார் திருவவதாரம் புரிந்ததுமாகிய சிறந்த பாண்டி நாட்டின் வழியே, அருள் நிறைந்த சோழவள நாட்டைச் சார்ந்தும் தவழ்கின்றனை. இவ்வாறிருக்க, நீ பிறரை வருத்தும் இத்தீமைக் குணத்தை எங்கே கற்றுக்கொண்டாய்?”

பிறந்தது எங்கள் பிரான் மலயத்து இடை,
சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில்,
புறம் பணைத் தடம் பொங்கு அழல் வீசிட
மறம் பயின்றது எங்கோ? தமிழ் மாருதம்!     ---  பெரியபுராணம்.

எல்லோருக்கும் குளிர்ந்திருக்கின்ற சந்திரன் காதலனைப் பிரிந்திருக்கின்ற காதலிக்கும், காதலியைப் பிரிந்திருக்கின்ற காதலனுக்கும் மிகுந்த வெப்பத்தை வீசுகின்ற நெருப்பைப் போல் துன்பத்தைச் செய்யும்.

இராமர் மீது வேட்கை கொண்ட சீதாதேவியைத் திங்கள் சுடுகின்றது. அப்போது அம்மைக் கூறுகின்றாள், “ஏ சந்திரனே! நீ திருப்பாற் கடலிலே பிறந்தனை. நீ கொடியவனுமல்லன். இதுவரை யாரையும் நீ கொன்றதில்லை, குற்றமில்லாத அமிர்தத்தோடு பிறந்தனை. அன்றியும் இலக்குமியாகிய பெண்ணுடன் தோன்றினையே? பெண்ணாகிய என் மீது ஏன் உனக்கு இத்தனை சினம்? என்னை ஏன் சுடுகின்றாய்?”

கொடியை அல்லைநீ, யாரையும் கொல்கிலாய்,
வடுஇல் இன்னமு தத்தொடும் வந்தனை,
பிடியின் மென்னடைப் பெண்ணொடுஎன் றால்எனைச்
சுடுதியோ கடல் தோன்றிய திங்களே.       --- கம்பர்.

பலபல பைம்பொன் பதக்கம் ஆரமும்,
     அடிமை சொலும் சொல் தமிழ்ப் பனீரொடு,
     பரிமளம் மிஞ்ச, கடப்ப மாலையும் ...... அணிவோனே!       --- (மலரணி) திருப்புகழ்

விரித்து அருணகிரிநாதன் உரைத்த தமிழ் எனும் மாலை
     மிகுத்த பலமுடன் ஓத ...... மகிழ்வோனே!             ---  (வரிக்கலையின்) திருப்புகழ்.

அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க
     அரிய தமிழ் தான் அளித்த ...... மயில்வீரா!
அதிசயம் அநேகம் உற்ற பழநிமலை மீது உதித்த
     அழக! திரு ஏரகத்தின் ...... முருகோனே!     --- (சரணகமலாலயத்தை) திருப்புகழ்.

"வள்ளியை வேட்டவன், முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்" என்றார் கந்தர் அலங்காரத்தில்.

உலகினில் பிறவாமையை வேண்டுவார் அவ்வாறே வேண்டிக் கொள்ளட்டும்.  ஆனால் நான் பிறவியையே வேண்டுவேன். எப்படிப்பட்ட பிறவி?  இனிமை நிறைந்த தமிழ்ச் சொற்களால் ஆன மலர்களை, இறைவா! உனக்கு அணிகின்ற பிறவியே அடியேனுக்கு வேண்டும் என்றார் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள்.

விரைவிடை இவரும் நினை, பிறவாமை
      வேண்டுநர் வேண்டுக, மதுரம்
பெருகுறு தமிழ்ச்சொல் மலர் நினக்கு அணியும்
      பிறவியே வேண்டுவன் தமியேன்;
இருசுடர்களும் மேல் கீழ்வரை பொருந்த
      இடை உறல் மணிக்குடக் காவைத்
தரை இடை இருத்தி நிற்றல் நேர் சோண
      சைலனே கைலைநா யகனே. 

எனவே, அடிகளாரை முருகப் பெருமான் மேலான தமிழால் தமது அருட்புகழைப் பாடுமாறு ஆட்கொண்டு அருளினன் என்றார்.

முடிமிசை சோமன் சூட்டி, வடிவுள ஆலங்காட்டில் முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே ---

திருமுடியில் பிறைச்சந்திரனைத் தரித்து, அழகு விளங்கும் திருத்தலமாகிய திருவாலங்காட்டில், முதன்மையான திருநடனம் ஆகிய சண்ட தாண்டவத்தைப் புரிந்து அருளும் கூத்தப் பெருமானின் திருப்புதல்வர் முருகப் பெருமான்.

சிதம்பரத்தில் பெருமான் இயற்றுகின்ற திருநடனம் உத்தமமாம் இன்ப மேன்மை தங்கியிடும் ஆனந்தத் தாண்டவம் எனப்படும்.

திருவாலங்காட்டில் ஆடுகின்ற முதன்மையான திருநடனமோ,  பிறப்பு இறப்பைத் தடுக்கின்ற சங்கார தாண்டவம் ஆகும்.

இறைவன் ஒரு காலை ஊன்றி, ஒரு காலைத் தூக்கித் திருநடனம் புரிவதன் கருத்தை,ஈட்டிய வினைப்பயன் எவற்றையும் மறைத்து நின்று ஊட்டுவது ஆகும் நின் ஊன்றிய பதமேஎன்றார் குமரகுருபர சுவாமிகள்.

ஆன்மாவின் மலம் நீங்கித் தூய்மையடைய வேண்டுமானால், ஆன்மா இருவினைப் பயன்களை அனுபவித்து மலத்தை நீக்க வேண்டும். வினைகளைச் செய்து அவற்றின் பயனை அனுபவித்துக் கழித்தால்தான் ஆன்மா மலம் நீங்கித் தூய்மை அடையும். ஆகவே, கருணாமூர்த்தியாகிய இறைவன் ஆன்மாவுக்கு வீடுபேறு கொடுப்பதற்காக அதைத் தூய்மைப்படுத்துகிற முறையில் திரோபவம் என்னும் மறைத்தல் செயலைச் செய்கிறார்.

எந்தக் காலை உயர்த்தினாலும், எந்தக் காலை ஊன்றினாலும் மூலக்கருத்துக்கு மாறுபாடு இல்லை. ஏனென்றால், தூக்கிய திருவடியில் அருளல் செயலும், ஊன்றிய திருவடியில் மறைத்தல் செயலும் நிகழ்கின்றன என்பது சாத்திரக் கருத்து. ஆனால் சாத்திரம் இந்தக் காலைத் தான் தூக்க வேண்டும், இந்தக் காலைத்தான் ஊன்ற வேண்டும் என்று கூறவில்லை. ஆகவே, எந்தக் கால் உயர்த்தப் பட்டதோ அந்தக்காலில் அனுக்கிரகச் செயல் நிகழ்வதாகக் கொள்ளுதல் வேண்டும். ஆனந்தத் தாண்டவமாகிய நடராசத் திருவுருவத்திலும் திருவடியை மாற்றி அமைத்திருப்பது (கால்மாறி ஆடியது) நினைவில் கொள்ளத் தக்கது.

திருவாலங்காட்டுப் புராணமும் இதனையே கூறுகிறது. ஆதிசேடன், திருமாலை நோக்கி, ஊர்த்துவ தாண்டவத்தின் பயனைக் கூறவேண்டும் என்று கேட்க, அவர் கூறுகிறார்:

நாற்றிசையும் போற்றிசெயும் ஆலவனப்
     பெருமையினை, நாதன் அல்லால்
போற்றி எவர் புகழ்ந்து உரைப்பார்? புனிதம் அதில்
     புனிதமாய்ப் பொரு அற்று ஓங்கி
மேல் திகழும் புண்ணியத்தின் புண்ணியமாய்
     வியன் ஆகி, வீறு பாசம்
மாற்றி, அருள் அளித்து, ஈசன் மலரடிக்கீழ்ப்
     பேரின்ப வாழ்வு சேர்க்கும்.

மேலும் இந்தத் தாண்டவக் கருத்தைக் கூறவேண்டும் என்று சுநந்த முனிவர் சிவபெருமானைக் கேட்டுக் கொள்ள, அப்பெருமான் கூறுகிறார்:

மண்டு இருட்குழு அகல அடியவர்கள்
     மலமாயை முடிந்து நீங்கத்
தொண்டர் கணம் கதிமேவச் சோதிதமது
     உருவெழுந்த சுடர்க்கண் மூசி
அண்ட மெலாம்இருள் நீங்க ஆடல் செய்வோம்
     ஆலவனத்து.  உறுதி என்றும்.

திருவாலங்காட்டுத் திருக்கோயிலில் நிகழும் இத்தாண்டவம் அனுக்கிரக தாண்டவம் என்று கூறப்படுவது ஈண்டு நினைவு கூரத் தக்கது.

ஐப்பசித் திங்கள் முழுநிலா நாளில் ஆகமத்தில் கூறிய முறைப்படி இறைவனைப் பூசித்து வணங்கி, இந்தத் தாண்டவத்தைக் காண்பவருக்கு அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களும் கிடைக்கும் என்று காரணாகமம் கூறுகிறது.

ஆலவனம் அனைத்தினுக்கும் முதலான
     நடனத் தானம் அருள்நட்டம்
மூலமதாம் அதன் அகத்துச் சண்ட தாண்டவம்
     ககன முகடு நோக்கி
மேலதாக இடத்தாளை எடுத்து வலத்தாள்
     ஊன்றி விளைக்கும் நட்டம்
சாலும் இது சங்கார தாண்டவமாம்
     பிறப்பு இறப்புத் தவிர்தலாலே

என்று திருவாலங்காட்டுப் புராணம் கூறுகிறது.

சிவபெருமான் சந்திரனைத் தரித்த வரலாறு

         மலர்மிசை வாழும் பிரமனது மானத புத்திரருள் ஒருவனாகியத் தட்சப் பிரசாபதி தான் பெற்ற அசுவினி முதல் ரேவதி ஈறாயுள்ள இருபத்தியேழு பெண்களையும், அநசூயாதேவியின் அருந்தவப் புதல்வனாகிய சந்திரன் அழகில் சிறந்தவனாக இருத்தல் கருதி, அவனுக்கு மணம்புணர்த்தி, அவனை நோக்கி, “நீ இப்பெண்கள் யாவரிடத்தும் பாரபட்சமின்றி சமநோக்காக அன்பு பூண்டு ஒழுகுவாயாக” என்று கூறிப் புதல்வியாரைச் சந்திரனோடு அனுப்பினன். சந்திரன் சிறிது நாள் அவ்வாறே வாழ்ந்து, பின்னர் கார்த்திகை உரோகணி என்ற மாதர் இருவரும் பேரழகு உடையராய் இருத்தலால் அவ்விரு மனைவியரிடத்திலே கழிபேருவகையுடன் கலந்து, ஏனையோரைக் கண்ணெடுத்தும் பாராது இருந்தான். மற்றைய மாதர்கள் மனங்கொதித்து தமது தந்தையாகிய தக்கனிடம் வந்து தம் குறைகளைக் கூறி வருந்தி நின்றனர். அது கண்ட தக்கன் மிகவும் வெகுண்டு, குமுதபதியாகிய சந்திரனை விளித்து “உனது அழகின் செருக்கால் என் கட்டளையை மீறி நடந்ததனால் இன்று முதல் தினம் ஒருகலையாகத் தேய்ந்து ஒளி குன்றிப் பல்லோராலும் இகழப்படுவாய்” என்று சபித்தனன்.

அவ்வாறே சந்திரன் நாளுக்கு நாள் ஒவ்வொரு கலையாகத் தேய்ந்து பதினைந்து நாட்கள் கழிந்தபின் ஒருகலையோடு மனம் வருந்தி, இந்திரனிடம் சென்று தனக்கு உற்ற இன்னல்களை எடுத்து ஓதி “இடர் களைந்து என்னைக் காத்தருள்வாய்” என்று வேண்டினன். இந்திரன், “நீ பிரமதேவர் பால் இதனைச் சொல், அவர் தன் மகனாகிய தக்கனிடம் சொல்லி சாபவிமோசனம் செய்தல் கூடும்” என, அவ்வண்ணமே சந்திரன் சதுர்முகனைச் சரண்புக, மலரவன் “சந்திரா! தக்கன் தந்தை என்று என் சொல்லைக் கேளான்; ஆதலால் நீ திருக்கயிலையை அடைந்து கருணாமூர்த்தியாகியக் கண்ணுதற்கடவுளைச் சரண்புகுவாயேல் அப்பரம பிதா நின் அல்லலை அகற்றுவார்” என்று இன்னுரை பகர, அது மேற்கண்ட சந்திரன் திருக்கயிலைமலைச் சென்று, நந்தியெம்பெருமானிடம் விடைபெற்று மகா சந்நிதியை அடைந்து, அருட்பெருங்கடலாகியச் சிவபெருமானை முறையே வணங்கி, தனக்கு நேர்ந்த சாபத்தை விண்ணப்பித்து, “பரமதயாளுவே! இவ்விடரை நீக்கி இன்பம் அருள்வீர்” என்று குறையிரந்து நின்றான். மலைமகள் மகிணன் மனமிரங்கி, அஞ்சேல் என அருள் உரை கூறி, அவ்வொரு கலையினைத் தம் முடியில் தரித்து, “நின் கலைகளில் ஒன்று நம் முடிமிசை இருத்தலால் நாளுக்கு ஒரு கலையாகக் குறைந்தும் இருக்கக் கடவாய், எப்போது ஒரு கலை உன்னை விட்டு நீங்காது” என்று கருணைப் பாலித்தனர்.

எந்தை அவ்வழி மதியினை நோக்கி, "நீ யாதும்
சிந்தை செய்திடேல், எம்முடிச் சேர்த்திய சிறப்பால்
அந்தம் இல்லை இக் கலை இவண் இருந்திடும் அதனால்
வந்து தோன்றும் நின் கலையெலாம் நாள்தொறும் மரபால். ---  கந்தபுராணம்.


முதல் ஒரு தனி வேழம் கூட்டி, மறமானின் சேர்க்கை மயல் கூர்வாய் ---

முதற்பொருள் ஆனவரும், ஒற்றப்பவரும் ஆன, யானை முகம் கொண்ட விநாயகப் பெருமானை அந்த வடிவுடன் வரச் செய்து, வேடர்குல மகளாகிய வள்ளிநாயகியோடு சேரவேண்டுமென்னும் மோகத்தை உடையவர் முருகப் பெருமான்.

தனக்கு உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான்,  தனது தமையன் ஆன தந்திமுகத் தொந்தியப்பரை நினைந்து, "முன்னே வருவாய், முதல்வா!" என்றார். அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தார். வள்ளியம்மை அது கண்டு அஞ்சி ஓடி, கிழமுனிவரைத் தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்து, விநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய அவரும் நீங்கினார்.

கருத்துரை

முருகா! அடியேனுடைய வினையைத் தீர்த்துக் காத்தருளி, தமிழால் தேவரீருடைய திருப்புகழைப் பாடுமாறு ஆட்கொண்டு அருள் புரிவாய்.



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...