திருவோத்தூர் - 0688. தவர்வாள் தோமர





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தவர்வாள் தோமர (திருவோத்தூர்)

முருகா!
தேவரீரது அருட்புகழைக் கேட்போர்
அனைவரும் உணர்வு பெறுமாறு அருள்வாயாக.


தனனாத் தானன தானம் தனனாத் தானன தானம்
     தனனாத் தானன தானம் ...... தனதான


தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந்
     தணியாச் சாகர மேழுங் ...... கிரியேழுஞ்

சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந்
     தரிகூத் தாடிய மாவுந் ...... தினைகாவல்

துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுந்
     துணையாத் தாழ்வற வாழும் ...... பெரியோனே

துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந்
     தொலையாப் பாடலை யானும் ...... புகல்வேனோ

பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்
     பழமாய்ப் பார்மிசை வீழும் ...... படிவேதம்

படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்
     பறிகோப் பாளிகள் யாருங் ...... கழுவேறச்

சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக் காலொளி சேர்வெண்
     டிருநீற் றாலம ராடுஞ் ...... சிறியோனே

செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந்
     திருவோத் தூர்தனில் மேவும் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


தவர் வாள் தோமர சூலம் தரியாக் காதிய சூரும்,
     தணியாச் சாகரம் ஏழும், ...... கிரி ஏழும்,

சருகாக் காய் கதிர் வேலும், பொருகால் சேவலும், நீலம்
     தரிகூத்து ஆடிய மாவும், ...... தினைகாவல்

துவர்வாய்க் கானவர் மானும், சுர நாட்டாள் ஒரு தேனும்,
     துணையாத் தாழ்வு அற வாழும் ...... பெரியோனே!

துணையாய்க் காவல் செய்வாய் என்று உணராப் பாவிகள்பாலும்
     தொலையாப் பாடலை யானும் ...... புகல்வேனோ?

பவம் மாய்த்து ஆணது ஆகும் பனை காய்த்தே, மணம் நாறும்
     பழமாய்ப் பார்மிசை வீழும் ...... படி, வேதம்

படியாப் பாதகர், பாய்அன்றி உடாப் பேதைகள், கேசம்
     பறி கோப்பாளிகள் யாரும் ...... கழு ஏற,

சிவமாய்த் தேன் அமுது ஊறும் திருவாக்கால், ஒளி சேர்வெண்
     திருநீற்றால் அமர் ஆடும் ...... சிறியோனே!

செழுநீர்ச் சேய்நதி ஆரம் கொழியாக் கோமளம் வீசும்
     திருவோத்தூர் தனில் மேவும் ...... பெருமாளே.


பதவுரை

      பவம் மாய்த்து --- பிறப்பை ஒழித்து,

     ஆண் அது ஆகும் பனை காய்த்தே --- ஆணாக இருந்த பனைமரம் காய் விட்டு,

         மணம் நாறும் பழமாய்ப் பார்மிசை வீழும்படி --- நறுமணம் வீசும் பழங்களாக பூமியில் விழும்படியாக,

         வேதம் படியாப் பாதகர் --- வேதத்தைப் படிக்காத பாதகர்கள்

         பாய் அன்றி உடாப் பேதைகள் --- பாயைத் தவிர வேறு ஆடையை உடுக்காத பேதைகள்

         கேசம் பறி கோப்பாளிகள் --- தலைமயிரைப் பறிக்கும் தேர்ந்த போக்கிரிகள் ஆன சமணர்கள்

         யாரும் கழு ஏற --- அனைவரும் கழுவில் ஏறும்படியாக,
        
சிவமாய் --- சிவமயமானதும்,
  
தேன் அமுது ஊறும் திருவாக்கால் --- தேனும் அமுதும் ஊறினது போல, உள்ளத்தில் இனிக்கும் திருவாக்கில் பிறந்த தேவாரப் பாடல்களைக் கொண்டும்,

     ஒளி சேர் வெண் திருநீற்றால் அமர் ஆடும் சிறியோனே --- அருள் ஒளி பொருந்திய வெண்பொடியாகிய திருநீற்றைக் கொண்டும் வாதுப் போர் புரிந்த ஆளுடைய பிள்ளையாராக வந்தருளியவரே!
  
செழுநீர்ச் சேய் நதி ஆரம் கொழியா --- செழுமை வாய்ந்த சேயாறு முத்துக்களைக் கரையிலே ஓதுக்கும்,

      கோமளம் வீசும் திருவோத்தூர் தனில் மேவும் பெருமாளே --- அழகு நிறைந்த திருவோத்தூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      தவர், வாள், தோமரம், சூலம் தரியாக் காதிய சூரும் --- வில், வாள், தண்டாயுதம், சூலாயுதம் ஆகியவைகளைத் தரித்து, கொலைகளைப் புரிந்து வந்த சூரபதுமனையும்,

      தணியாச் சாகரம் ஏழும் கிரி ஏழும் --- வற்றாத ஏழு கடல்களையும், மலைகள் ஏழினையும்,

      சருகாக் காய் கதிர் வேலும் --- சருகு போலக் காய்ந்து போகும்படி எரித்த ஒளிமிக்க வேலாயுதமும்,

     பொரு கால் சேவலும் --- கால்களால் சண்டை செய்யவல்ல சேவலும்,

      நீலம் தரி கூத்து ஆடிய மாவும் --- நீல நிறம் கொண்டதும், நடனம் புரிய வல்லதும் ஆன மயில்வாகனம் ஆகிய குதிரையும்,

      தினை காவல் துவர்வாய்க் கானவர் மானும் --- தினைப் புனத்தைக் காவல் புரிந்தவளும், பவளம் போன்ற வாயைக் கொண்டவரும், வேடர் குலத்திலே வளர்ந்த மான் போன்றவளும் ஆகிய வள்ளிநாயகியும்,

     சுர நாட்டாள் ஒரு தேனும் --- தேவலோகத்திலே வளர்ந்தவள் ஆகிய ஒப்பற்ற தேன் போன்ற தேவயானையம்மையும்,

      துணையா --- துணையாகக் கொண்டு,

     தாழ்வு அற வாழும் பெரியோனே --- உயிர்கள் எல்லாம் குறைவின்றி வாழ அருள் புரிந்து வரும் பெருமைக்கு உரியவரே!

      துணையாய்க் காவல் செய்வாய் என்று உணராப் பாவிகள் பாலும் --- தேவரீரே உயிருக்கு உற்ற துணையாக இருந்து பாதுகாத்து அருள் புரிவீர் என்று உணர்ந்து கொள்ளாத பாவிகளிடத்தில் சென்று,

      தொலையாப் பாடலை யானும் புகல்வேனோ --- அழிவில்லாத அருமையான பாடல்களை நானும் சொல்லல் தகுமோ?


பொழிப்புரை

     பிறப்பை ஒழித்து, ஆணாக இருந்த பனைமரம் காய் விட்டு, நறுமணம் வீசும் பழங்களாக பூமியில் விழும்படியாக, வேதத்தைப் படிக்காத பாதகர்கள், பாயைத் தவிர வேறு ஆடையை உடுக்காத பேதைகள், தலைமயிரைப் பறிக்கும் தேர்ந்த போக்கிரிகள் ஆன சமணர்கள் அனைவரும் கழுவில் ஏறும்படியாக,  சிவமயமானதும், தேனும் அமுதும் ஊறினது போல, உள்ளத்தில் இனிக்கும் திருவாக்கில் பிறந்த தேவாரப் பாடல்களைக் கொண்டும், அருள் ஒளி பொருந்திய வெண்பொடியாகிய திருநீற்றைக் கொண்டும் வாதுப் போர் புரிந்த ஆளுடைய பிள்ளையாராக வந்தருளியவரே!

செழுமை வாய்ந்த சேயாறு முத்துக்களைக் கரையிலே ஓதுக்கும், அழகு நிறைந்த திருவோத்தூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

     வில், வாள், தண்டாயுதம், சூலாயுதம் ஆகியவைகளைத் தரித்து, கொலைகளைப் புரிந்து வந்த சூரபதுமனையும், வற்றாத ஏழு கடல்களையும், மலைகள் ஏழினையும், சருகு போலக் காய்ந்து போகும்படி எரித்த ஒளிமிக்க வேலாயுதமும்,  கால்களால் சண்டை செய்யவல்ல சேவலும், நீல நிறம் கொண்டதும், நடனம் புரிய வல்லதும் ஆன மயில்வாகனம் ஆகிய குதிரையும், தினைப் புனத்தைக் காவல் புரிந்தவளும், பவளம் போன்ற வாயைக் கொண்டவரும், வேடர் குலத்திலே வளர்ந்த மான் போன்றவளும் ஆகிய வள்ளிநாயகியும், தேவலோகத்திலே வளர்ந்தவள் ஆகிய ஒப்பற்ற தேன் போன்ற தேவயானையம்மையும், துணையாகக் கொண்டு, உயிர்கள் எல்லாம் குறைவின்றி வாழ அருள் புரிந்து வரும் பெருமைக்கு உரியவரே!

     தேவரீரே உயிருக்கு உற்ற துணையாக இருந்து பாதுகாத்து அருள் புரிவீர் என்று உணர்ந்து கொள்ளாத பாவிகளிடத்தில் சென்று, அழிவில்லாத அருமையான பாடல்களை நானும் சொல்லல் தகுமோ?


விரிவுரை

தவர், வாள், தோமரம், சூலம் தரியாக் காதிய சூரும் ---

தவர் - வில்.

வாள் - வாளாயுதம்,

தோமரம் - தண்டாயுதம்,

சூலம் - முத்தலைச் சூலம்.

காதுதல் - கொலைத் தொழில் புரிதல்,

சூரபதுமன் வில், வாள், தண்டாயுதம், சூலாயுதம் முதலிய படைக்கங்களைக் கொண்டு அண்டங்களில் வாழ்பவர்களை எல்லாம் பல்லாண்டுக் காலமாக அழித்து வந்தான்.

தணியாச் சாகரம் ஏழும் கிரி ஏழும் ---

சூரபதுமன் மட்டுமல்லாமல் வற்றாத ஏழு கடல்களையும், மலைகள் ஏழினையும்  வற்றிப் போகுமாறும் பொடியாகுமாறும் போர் புரிந்து வென்றவர் முருகப்பெருமான்.

சருகாக் காய் கதிர் வேலும் ---

சூரபதுமனோடு, கடல்களும் மலைகளும் அழிந்து ஒழியுமாறு செய்தது முருகப் பெருமான் திருக்கையில் பொருந்தி உள்ள ஞானசத்தி ஆகிய வேலாயுதம்.

வெல் என்னும் முதல் நிலை நீண்டு, வேல் என்று ஆயிற்று.

வேலுக்குப் படைக்கல நாயகம் என்று பேர். யாவற்றையும் வெல்லும் தன்மையைக் கொண்டது வேல் எனப்பட்டது. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் அடிகளார். வேலை இடையறாது வணங்குவார்க்கு வினைகள் நீங்கி, ஞானம் பிறக்கும்.

"என்றும் வாய்த்த துணை கிரணக் கலாபியும் வேலும் உண்டே" என்றும் போற்றினார் அடிகளார். "பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே" என்றும் அருளினார்

உயிர்களுக்கு மரண பயத்தைப் போக்கி அருள்வது முருகப் பெருமான் திருக்கரமும் அதில் தாங்கி உள்ள வேலாயுதமுமே ஆகும். வேலாயுதம் என்னும் ஞானசத்தியின் பெருமையை அருணை அடிகள் பாடியுள்ளதைக் காண்போம்.

சூலம் பிடித்து எம பாசம் சுழற்றித் தொடர்ந்துவரும்
காலன் தனக்கு ஒருகாலும் அஞ்சேன்; கடல்மீது எழுந்த
ஆலம் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலும் திருக்கையும் உண்டே நமக்கு ஒரு மெய்த்துணையே!  --- கந்தர் அலங்காரம்.

மகரம் அளறு இடைபுரள, உரககண பண மவுலி
மதியும் இரவியும் அலையவே,
வளர் எழிலி குடர் உழல, இமையவர்கள் துயர் அகல,
மகிழ்வு பெறும் அறுசிறையவாம்

சிகரவரை மனைமறுகு தொறும் நுளைய மகளிர்செழு
செநெல்களொடு தரளம் இடவே,
செகசிர பகிரதி முதல் நதிகள் கதி பெற, உததி
திடர் அடைய நுகரும் வடிவேல்,

தகர மிருகமதம் என மணம் மருவு கடகலுழி
தரு கவுளும் உறுவள் எயிறும்
தழைசெவியும் நுதல்விழியும் உடைய ஒரு கடவுள்மகிழ்
தரு துணைவன், அமரர் குயிலும்,

குகரமலை எயினர் குல மடமயிலும் என இருவர்
குயமொடு அமர் புரியும்முருகன்,
குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்
குலையவிடு கொடிய வேலே.                                   --- வேல் விருத்தம்.
  
அரண்நெடு வடவரை அடியொடு பொடிபட    
அலை கடல் கெட, அயில்
    வேல் வாங்கிய செந்தமிழ் நூலோன், குமரன், குகன்..  ---  தேவேந்திர சங்க வகுப்பு.

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்த குழல் சிவத்த இதழ் மறச்சிறுமி
          விழிக்கு நிகர் ஆகும்;                        
பனைக்கை முகபடக் கரட மதத் தவள
    கசக் கடவுள் பதத்துஇடு நிகளத்து முளை
          தெறிக்க அரம் ஆகும்;
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு
    கவிப்புலவன் இசைக்கு உருகி வரைக்குகையை
          இடித்துவழி காணும்;               
பசித்துஅலகை முசித்து அழுது முறைப்படுதல்
    ஒழித்து, அவுணர் உரத்து உதிர நிணத்தசைகள்
          புசிக்க அருள் நேரும்;                   

சுரர்க்கும், முநிவரர்க்கும், மகபதிக்கும், விதி
    தனக்கும், அரி தனக்கும், நரர் தமக்கும் உறும்
          இடுக்கண் வினை சாடும்;                    
சுடர்ப்பரிதி ஒளிப்ப, நிலவு ஒழுக்கு மதி
    ஒளிப்ப, அலை அடக்கு தழல் ஒளிப்ப, ஒளிர்
          ஒளிப்பிரபை வீசும்;                 
துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர்
    நினைக்கின், அவர் குலத்தை முதல் அறக்களையும்
          எனக்கு ஓர் துணை ஆகும்; 
சொலற்கு அரிய திருப்புகழை உரைத்தவரை
    அடுத்த பகை அறுத்து எறிய உருக்கி எழும்,
          அறத்தை நிலை காணும்;           

தருக்கி நமன் முருக்க வரின், எருக்கு மதி
    தரித்த முடி படைத்த, விறல் படைத்த இறை
          கழற்கு நிகர் ஆகும்;            
தலத்தில் உள கணத்தொகுதி களிப்பின் உண
    அழைப்பது என மலர்க்கமல கரத்தின் முனை
          விதிர்க்க வளைவு ஆகும்;               
தனித்து வழி நடக்கும் எனது இடத்தும், ஒரு
    வலத்தும், இரு புறத்தும், அருகு அடுத்து, இரவு
          பகல் துணை அது ஆகும்;          
சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர்
    பெருத்த குடர் சிவத்த தொடை எனச் சிகையில்
          விருப்பமொடு சூடும்;          

திரைக்கடலை உடைத்து, நிறை புனல் கடிது
    குடித்து, உடையும் உடைப்பு அடைய அடைத்து, உதிரம்
          நிறைத்து விளையாடும்;            
திசைக்கரியை முதல் குலிசன் அறுத்த சிறை
    முளைத்தது என, முகட்டின் இடை பறக்க அற
          விசைத்து அதிர ஓடும்;             
சினத்து அவுணர் எதிர்த்த ரண களத்தில், வெகு
    குறைத் தலைகள் சிரித்து, எயிறு கடித்து, விழி
          விழித்து அலற மோதும்;                
திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன், மலை
    விருத்தன், எனது உளத்தில் உறை கருத்தன், மயில்
          நடத்து குகன் வேலே..                       --- வேல் வகுப்பு.


திடவிய நெஞ்சு உடை அடியர் இடும்பை கெடும்படி
    தீ ஆம் குறை போய் ஆழ்ந்தது;               
செயசெய என்று இசை பரவிய எங்கள் கொடுங்கலி
    தேசாந்தரமே சாய்ந்தது;                      
செயல்உரை நஞ்சு உறழ் மயல் உறு நெஞ்சினர் வஞ்சகர்
    தீமான் கதர் தாம் ஏங்கினர்;                       
சிகர தரங்கித மகர நெருங்கு பெருங்கடல்
    தீ மூண்டு, தன் வாய் மாண்டது;              

தெரியலர் சென்று அடை திசைகளில் எண் கரி சிம்பெழ
    மாறாங்கிரி நூறாம் துளை                     
சிகர நெடுங்கிரி குகைகள் திறந்து திகந்தமும்
    லோகாந்தமும் நீர் தேங்கின;                 
சிறையுள் அழுந்திய குறைகள் ஒழிந்து, செயம் கொடு
    தேவேந்திரர் சேண் ஆண்டனர்;               
திரி புவனங்களும் ஒரு பயம் இன்றி, வளம் கெழு
    சீர் பூண்டு அற நேர் பூண்டன;                                 

விட வசனம் சில பறையும் விரிஞ்சன் விலங்கு அது
    கால் பூண்டு, தன் மேல் தீர்ந்தனன்;       
விகசித சுந்தர விதரண ஐந்தரு வெந்து எழில்
    வீ வான் பொழில் பூ வாய்ந்தது;          
விழைவு தரும்பத சசி தன் விளங்கிய மங்கல
    நூல் வாங்குகிலாள், வாழ்ந்தனள்;         
வெருவி ஒதுங்கு இமையவர் எவரும் சிறை வென்று இதம்
    மேலாம் படியே மீண்டனர்;                   

விழியொர் இரண்டு, ரு பது சத நின்று எரி கண்டகன்
    மேல் வாங்கிளை கால்சாய்ந்தது;             
வெளி முழுதும் திசை முழுதும் விழுங்கி எழும் கன
    சூர் மாண்டு அற வேர் மாய்ந்தது;        
விபுதர் பயம் கெட, நிருதர் தளம் கெட, விண் கெடு
    மேடாம்படி பாடோங்கின;                
மிடை குறள் வெங்கொடி கழுகு பருந்து விருந்து என
    ஊன் ஆர்ந்து அகல் வான் ஆர்ந்தன;            

அடவி படும் சடை மவுலியில் வெம்பணி அம்பணி
    ஆமாங்கதர் வாம அங்கனை             
அநுபவை அம்பிகை அநுதிதை அம்பை த்ரியம்பகி
    ஆசாம்பரை பாசாங்குசை                     
அநகை அசஞ்சலை அதிகுண சுந்தரி அந்தரி
    காலாந்தகி மேலாம் திரு                     
அமலை அலங்க்ருதை அபிநய பங்குரை சங்கினி
    மான்ஆம்கணி ஞானஅங்குரை           

அணிமுக பந்திகள் சிறுபொறி சிந்த விளைந்து அழல்
    வாய் கான்றிடு நாகாங்கதை             
அபய வரம் புரி உபய கரம் திகழ் அந்தணி
    யாமாங்கறி தாய் மாண்பினள்,                
அதுலை தரும் திரு மதலை, இபம் கொள் பயங்கொடு
    பாய் மாண் கலை வாய் மாண் புன           
அணி குறமின் புணர் தணிகையில் அந்தணன், இந்திர
    ராசாங்கம் அது ஆராய்ந்தவன்;                                

வடவை இடும்படி மணிமுடி பஞ்சு எழ விஞ்சிய
    மாடாம் புடை நாடுஆண்தகை            
வசை கருதும் குரு பதியொடு, தம்பியரும் பட
    வே பாண்டவர் தேர் ஊர்ந்தவன்;                  
வளவில் வளர்ந்து இடை மகளிர் குவிந்து தடம் குடை
    வார் பூந்துகில் வார் பூம்பூயல்;                
வரை நிரை கன்று இனம் முழுதும் மயங்கிய பண்கெழு
    வேய் ஏந்திய வாயான்; கழல்        

மருதுஇடை சென்று, உயர் சகடு தடிந்து, அடர் வெம்புளை
    வாய் கீண்டு, ஒரு பேய் காய்ந்தவன்;         
மத சயிலம் பொர வர விடு நெஞ்சினில் வஞ்சக
    மாமான் பகை கோமான்; திரு            
மருகன், நிரம்பிய மதிமுக மஞ்சரி குஞ்சரி
    வாகாம்பரை தோய் காங்கேயன்,           
மகபதி தன் பதி பகை கிழியும்படி அன்று அடல்
    வாள் ஓங்கிய வேல் வாங்கவே.                       --- வேல்வாங்கு வகுப்பு.

பொரு கால் சேவலும் ---

பொரு கால் சேவல் --- காலால் பொருகின்ற சேவல். 

காலால் பொருவதால் காலாயுதம் என்றும் பதாயுதம் என்றும் சேவலுக்குப் பெயர் வழங்குவதாயிற்று.

விதிர்தரு சமர முறி கரகமல நகாயுத
கோழி வீற விதரண சித்ர
அலங்க்ருதம் புனைந்து பூரித்து இலங்கின....        --- புய வகுப்பு.

வேலாயுதன் சங்கு சக்ராயுதன் விரிஞ்சன் அறியாச்
சூலாயுதன் தந்த கந்தசுவாமி சுடர்க்குடுமிக்
காலாயுதக் கொடியோன் அருள் ஆய கவசம் உண்டு என்
பால் ஆயுதம் வருமோ யமனோடு பகைக்கினுமே.      --- கந்தர் அலங்காரம்.

சேவல் ஒங்கார மந்திரத்தை ஒலியால் உணர்த்துவது. நாத ரூபமானது. ஆதலின், சேவலை செவ்வேள் பரமனார் கொடியாகக் கொண்டருளினார்.

அன்றியும் சூரியனுடைய வரவை உலகுக்கு உணர்த்துவது சேவல். ஒளியைக் கண்டு உவகை உறுவது. உறக்கத்தை விட்டு உலகினரை எழுப்பி உதவி புரிவது. அஞ்ஞான இருள் நீங்கி, ஞான ஒளி அடையச் செய்வது.

உலகில் அனுதினமும் வரும் அடியவர்கள் இடர் அகல,
உரிய பரகதி தெரியவே,
உரக மணி என உழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள் மிடி கெட அருளியே,

கலகம் இடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடினம் உற வரில், அவைகளைக்
கண்ணைப் பிடுங்கி, உடல் தன்னைப் பிளந்து, சிற-
கைக்கொட்டி நின்றாடுமாம்...             --- சேவல் விருத்தம்.
  
வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
வெங்கண் குறும்புகள் தரும்
விடு பேய்களே கழுவன் கொலை சாவு கொள்ளிவாய்
வெம் பேய்களைத் துரத்தி

பேறான "சரவண பவா"என்னும் மந்திரம்
பேசி, உச்சாடனத்தால்
பிடர் பிடித்துக் கொத்தி, நக நுதியினால் உறப்
பிய்ச்சுக் களித்து ஆடுமாம்...         --- சேவல் விருத்தம்.

 
நீலம் தரி கூத்து ஆடிய மாவும் ---

மா - ஆண் குதிரை.

மயில் நீல நிறத்தை உடையது. அழகாக நடனம் புரிய வல்லது.
வேகமாகச் செல்லும் குதிரையைப் பல் முருகப் பெருமான் வேமாக ஊர்ந்து செல்லும் வாகனமாக உள்ளது. மயில் விந்து வடிவமானது.

ஆதவனும் அம்புலியும் ஆசு உற விழுங்கி உமிழ்
    ஆலம் மருவும் பணி          இரண்டும் அழுதே
ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எம் கடவுள்
    ஆம் என மொழிந்து அகல    வென்று விடுமே; 
ஆர்கலி கடைந்த அமுது வானவர் அருந்த, அருள்
    ஆதி பகவன் துயில்           அநந்தன் மணிசேர்
ஆயிரம் இருந்தலைகளாய் விரி பணம் குருதி
    ஆகம் முழுதும் குலைய       வந்து அறையுமே; 
  
வேத முழுதும் புகல் இராமன் ஒரு தம்பி மிசை
    வீடணன் அருந்தமையன்        மைந்தன் இகலாய்
வீசும் அரவம் சிதறி ஓட, வரு வெங்கலுழன்
    மேல் இடி எனும்படி            முழங்கி விழுமே;  
மேதினி சுமந்த பெரு மாசுணம் மயங்க, நக
    மேவு சரணங்கொடு உலகு      எங்கும் உழுமெ;
வேலி என எண்திசையில் வாழும் உரகம் தளர-
    வே, அழல் எனும் சினம்         உடன் படருமே; 
  
போதினில் இருந்த கலை மாதினை மணந்த உயர்
    போதனை இரந்து மலர்          கொண்டு முறையே
பூசனை புரிந்து கொடியாகி மகிழ் ஒன்று துகிர்
    போல் முடி விளங்கவரும்      அஞ்சம் அடுமே; 
பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்
    பூரண கணங்களொடு             வந்து தொழவே,
போரிடுவ வென்று, வெகு வாரண கணங்கள் உயிர்
    போயினம் எனும்படி             எதிர்ந்து விழுமே; 
  
கோது அகலும் ஐந்து மலர் வாளி மதனன் பொருவில்
    கோல உடலம் கருகி            வெந்து விழவே
கோபமொடு கண்ட விழிநாதர் அணியும் பணிகள்
    கூடி, மனம் அஞ்சி, வளை        சென்று புகவே
கூவி, இரவந்தம் உணர் வாழி என நின்று, பொரு
    கோழியொடு வென்றி முறை    யும் பகருமே; 
கோலம் உறு செந்தில் நகர் மேவு குமரன், சரண
    கோகனதம் அன்பொடு          வணங்கு மயிலே..      ---  மயில் வகுப்பு

சக்ரப்ர சண்டகிரி முட்டக் கிழிந்து, வெளி
பட்டுக் க்ரவுஞ்ச சயிலம்
தகர, பெருங்கனக சிகரச் சிலம்பும் எழு
தனிவெற்பும், அம்புவியும், எண்

திக்குத் தடம் குவடும் ஒக்கக் குலுங்க வரு
சித்ரப் பதம் பெயரவே,
சேடன் முடி திண்டாட, ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கும் மயிலாம்...            ---  மயில் விருத்தம்.
  
ஆதார பாதளம் பெயர, அடி பெயர,
மூதண்ட முகடு அது பெயரவே,
ஆடு அரவ முடிபெயர, எண்திசைகள் பெயர, எறி
கவுள் கிரிசரம் பெயரவே,

வேதாள தாளங்களுக்கு இசைய ஆடுவார்
மிக்க ப்ரியப் படவிடா
விழி பவுரி கவுரி கண்டு உளமகிழ விளையாடும்
வித்தார நிர்த்த மயிலாம்...               ---  மயில் விருத்தம்.
  
சங்கார காலம் என அரிபிரமர் வெருவுற,
சகல லோகமும் நடுங்க,
சந்த்ர சூரியர் ஒளித்து, இந்த்ராதி அமரரும்
சஞ்சலப் பட, உமையுடன்

கங்காளர் தனி நாடகம் செய்த போது, அந்த
காரம் பிறந்திட, நெடும்
ககன கூடமும் மேலை முகடு மூடிய பசுங்
கற்றைக் கலாப மயிலாம்...               ---  மயில் விருத்தம்.

தீரப் பயோததி திக்கும் ஆகாயமும்
ஜகதலமும் நின்று சுழல,
திகழ்கின்ற முடி மவுலி சிதறி விழ, வெஞ்சிகைத்
தீக்கொப்புளிக்க, வெருளும்

பாரப் பணாமுடி அனந்தன் முதல் அரவு எலாம்
பதை பதைத்தே நடுங்க,
படர்ச் சக்ர வாளகிரி துகள் பட, வையாளி வரு
பச்சை ப்ரவாள மயிலாம்...               ---  மயில் விருத்தம்.
 
தினை காவல் துவர்வாய்க் கானவர் மானும் ---

துவர் - சிவப்பு, கவளம், காவி.

தினைப் புனத்தைக் காவல் புரிந்தவளும், பவளம் போன்ற வாயைக் கொண்டவரும், வேடர் குலத்திலே வளர்ந்த மான் போன்றவளும் ஆகிய வள்ளிநாயகியைத் துணாயாகக் கொண்டவர் முருகப் பெருமான்.

சுர நாட்டாள் ஒரு தேனும் ---

தேவலோகத்திலே இந்திரனின் வாகனம் ஆகிய ஐராவதம் என்னும் வெள்ளை யானையால் வளர்ந்தவள் ஆகிய ஒப்பற்ற தேன் போன்ற தேவயானை அம்மையும்,

துணையா ---

இச்சா சத்தி ஆகிய வள்ளிநாயகி. இச்சத்தி உயிர்களுக்கு மலத்தை நீக்கிச் சிவத்தை அளிக்கும்பொருட்டு  பெருங்கருணை கொள்ளும் சத்தி.

ஞானசத்தி ஆகிய வேலாயுதம். உயிர்களின் மலத்தை நீக்கிச் சிவத்தை அளிப்பதற்கு வேண்டிய வழிவகைகளை அறியும் சத்தி. 

கிரியா சத்தி ஆகிய தெய்வயானை அம்மையார். படைத்தல் முதலிய ஐந்தொழில்களின் வழிவகைளைச் செய்யும் சத்தி.

இச்சா சத்தி எனப்படும் அன்பாற்றல் மட்டும் எங்கும் எப்பொழுதும் ஏறாமலும் குறையாமலும் ஒரே தன்மைத்தாய்ப் பரந்துபட்டு நிற்கும். நிட்கள (அருவம்) சிவத்துடன் ஞானசத்தி எனப்படும் அறிவாற்றல் தனித்து நின்றும், கிரியாசத்தி எனப்படும் ஆள்வினை ஆற்றல் தனித்து நின்றும் பரந்து படுதலே இலயம் அல்லது கூட்டல் எனப்படும்.

சிவம் அறிவாற்றலாகிய ஞானசத்தியைப் பொருந்தும் போது அருவத் திருமேனியோடு சிவம் எனவும், நிட்களசிவம், இலயசிவம் எனவும்,  கிரியாசத்தி என்னும் ஆள்வினை ஆற்றலைப் பொருந்தும் போது சத்தி எனவும் பெயர் பெறுவர்.  சகள நிட்கள (அருவுருவ)  சிவத்துடன் ஞானசத்தியும் கிரியாசத்தியும் சமமாகப் பொருந்தி வியாபித்தலே போகம் அல்லது ஊட்டல் எனப்படும். இங்குச் சகளநிட்கள சிவம் (அருவுருவம்) சதாசிவம் எனப் பெயர் பெறும். 

சகள (உருவ) சிவத்துடன் ஞானசத்தி என்னும் அறிவாற்றல் குறைந்து, கிரியாசத்தி என்னும் ஆள்வினை ஆற்றல் மிகுந்து நின்றும்,  ஞானசத்தி என்னும் அறிவாற்றல் மிகுந்து கிரியாசத்தி என்னும் ஆள்வினை ஆற்றல் குறைந்து நின்றும் வியாபித்தலே அதிகாரம் அல்லது ஆட்டல் எனப்படும். சகள சிவம் ஞானம் குறைந்து, கிரியை மிகுந்து நிற்கும்போது மகேசுவரன் எனவும், ஞானம் மிகுந்து கிரியை குறைந்து நிற்கும்போது சுத்தவித்தை எனவும் பெயர் பெறுவர்.  சுத்தவித்தையில் உருத்திரன், விஷ்ணு, பிரமன் என்ற மூவர் உள்ளனர்.  மகேசுவரனிடத்து உருத்திரனும் விஷ்ணுவும் தோன்றியவராவர்.  விஷ்ணுவினிடத்து  தோன்றியவன் பிரமன்.

பரமசிவம் அறிவாற்றலால் அறிந்து ஆள்வினை ஆற்றலால் உலகைப் படைப்பர். இந்த இரண்டு சத்திகளும் இறைவனை விட்டு நில்லா. இறைவனும் அச்சத்திகளை விட்டு நில்லான்.  ஆகவே, இச் சத்திகள் இறைவனுக்குத் தாதான்மிய (ஒற்றுமைப்பட்டு இருக்கும்) சத்திகளாம்.

சேவல் நாத த்ததுவத்தை உணர்த்துவது. மயில் விந்து தத்துவத்தை உணர்த்துவது.

, முருகப் பெருமான், சேவல், மயில், வேல், வள்ளி, தெய்வயானை ஆகிய சத்திகளைத் துணையாகக் கொண்டுள்ளார்.

தாழ்வு அற வாழும் பெரியோனே ---

இதனால் உயிர்கள் எல்லாம் அஞ்ஞானம் நீங்கி, ஞானத்தைப் பெற்று, துன்பத்தில் இருந்து விடுபட்டு இன்பத்தைத் துய்த்தும் குறைவின்றி வாழ அருள் புரிந்து வருகின்றார் முருகப் பெருமான்.

துணையாய்க் காவல் செய்வாய் என்று உணராப் பாவிகள் ---

இறைவனே எல்லா உயிருக்கும் உற்ற துணையாக இருந்து பாதுகாத்து அருள் புரிவான் என்று உணர்ந்து கொள்ளாத பாவிகளும் உலகில் உள்ளனர்.

உற்றார் இலாதார்க்கு உறுதுணை ஆவன, ஓதி நன்னூல்
கற்றார் பரவப் பெருமை உடையன, காதல் செய்ய-
கிற்பார் தமக்குக் கிளர்ஒளி வானகம் தான் கொடுக்கும் ,
அற்றார்க்கு அரும்பொருள் காண்க ஐயாறன் அடித்தலமே.    --- அப்பர்.

ஐயாறன் அடித்தலங்கள் தமக்கு உதவுவார் இல்லாது தனித்து வருந்துபவர்களுக்கு மேம்பட்ட துணையாவனவாய், சிவாகமங்களை ஓதி அனுபவப் பொருளை ஞானதேசிகர் பால் கேட்டு அறிந்த சான்றோர்கள் முன்நின்று துதிக்கும் பெருமை உடையனவாய், தம்மை விரும்பும் ஆற்றல் உடையவர்களுக்கு மேம்பட்ட ஞானஒளி வடிவமான வீட்டுலகை அளிப்பனவாய் ஏனைய பொருள்பற்று அற்றாருக்குக் கிட்டுதற்குச் சிறந்த பொருளாய் உள்ளனவாம்.

உற்றார், பெற்றார் கிளைஞர் கேளிர், சுற்றத்தார் முதலிய பலருள் ஒருவகையர், கிளைத்தவர், கேட்பவர், சுற்றுபவர், உற்றவர்., பெற்றவர் எல்லாரும் ஒரு திறத்தர் ஆகார். மகன் மகள் பேரன் பேத்தி எனக் கிளைத்தல். நலம் பொலம் கேட்டல். சுற்றி இருத்தல். எண்பெருஞ் சுற்றம்என்பது பொருள் இருக்கும் அளவும் உற்று இருக்கும். கொடுத்தல் கொள்ளல் செய்து இருக்கும். மக்களைப் பெறுதல் முதலிய எல்லாம் பல தொழிலாலும் தன்மையாலும் வேறுபடுதல் அறிக. கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லைஎன்பது வெற்றிவேற்கை.

தொலையாப் பாடலை யானும் புகல்வேனோ ---

உணர்வில்லாத பாவத்துக்கு இடமானவர்கள் பால் சென்று, முருகப்பெருமானின் அழிவில்லாத அருட்புகழைக் கூறும் அருமையான பாடல்களை நானும் சொல்லல் தகுமோ என்றார் அடிகளார். நானும் என்றதால், அடிகளாருக்கு முன்னரும் இவ்வாறு நிகழ்ந்து உள்ளது என்பதை எண்ணி அடிகளார் வருந்தியதாகக் கொள்ள இடமுண்டு.

  
பவம் மாய்த்து, ஆண் அது ஆகும் பனை காய்த்தே, மணம் நாறும் பழமாய்ப் பார்மிசை வீழும்படி ---

திருவோத்தூரில் ஓர் அன்பர் இருந்தார். அவர் சிவபெருமானுக்கு எனப் பனைகள் அமைத்து வளர்த்தார். அந்தப் பனைகள் ஆண்கள் ஆகி, காயாது இருந்தன. அதைக் கண்ட சமணர்கள், ", சிவபத்தரே! உமது ஆண்பனைகள் காய்க்குமா? சிவனருளால் காய்க்கச் செய்ய முடியுமா?" என்று எள்ளுவது வழக்கம். திருவோத்தூருக்கு எழுந்தருளிய பிள்ளையார், திருக்கோயினுள் சென்று, மனம் உருகி இறைவரை வழிபட்டார். நாளும் திருவோத்தூர்ப் பெருமான் வழிபட்டு, அவ்வூரில் எழுந்தருளி இருந்த திருஞானசம்பந்தரிடம் சமணர்கள் ஏளனம் செய்வதை முறையிட்டார். அவ்வுரை கேட்ட பிள்ளையார் திருக்கோயிலின் உள் நுழைந்தார். ஆண்டவனை நினைந்து நினைந்து உருகினார். "பூத்தேர்ந்து ஆயன கொண்டு" என்னும் திருப்பதிகத்தைப் பாடி அருளினார். திருக்கடைக்காப்பிலே, குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர்" என்று அருளிச் செய்தார். ஆண் பனைகள் எல்லாம் பெண் பனைகள் ஆயின. ஒவ்வொன்றிலும் குலைகள் தொங்கின. காய்கள் பழுத்தன. இவ்வாறு ஆளுடைய பிள்ளையார் அன்பருக்கு அருள் செய்தார். சமணர்களில் பலர் ஊரை விட்டு ஓடினர். சிலர் திருவெண்ணீறு அணிந்து சிவநெறியில் நின்றனர். பனைகள் பிள்ளையாரின் அருள் பெற்ற காரணத்தால், தங்கள் காலம் கழித்து, முடிவில் தங்கள் பிறப்பை ஒழிந்து, சிவத்தைச் சார்ந்தன.

தேவர் முனிவர்க்கு ஓத்து அளித்த
         திருவோத்தூரில் திருத்தொண்டர்
தாவில் சண்பைத் தமிழ்விரகர்
         தாம் அங்கு அணைய, களி சிறந்து
மேவும் கதலி தோரணங்கள்
         விளக்கு நிரைத்து நிறைகுடமும்
பூவும் பொரியும் சுண்ணமும் முன்
         கொண்டு போற்றி எதிர்கொண்டார்.

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மறைகளை ஓதுவித்து அருள் செய்த திருவோத்தூரில் வாழும் திருத்தொண்டர்கள், குற்றம் அற்ற சீகாழிப் பதியில் தோன்றிய தமிழ்வல்லுநரான ஞானசம்பந்தர் அங்கு வரவே, மிகவும் மகிழ்ந்து, வாழைகளையும் தோரணங்களையும் விளக்குகளையும் நிரல்பட அமைத்து, நிறை குடங்களையும் பூவும் பொரியும் சுண்ணமும் என்ற இவற்றையும் முன்னே ஏந்திப் போற்றிசெய்து எதிர் கொண்டனர்.

சண்பை வேந்தர் தண்தரளச்
         சிவிகை நின்றும் இழிந்து அருளி,
நண்பின் மிக்க சீரடியார்
         சூழ நம்பர் கோபுரம் சூழ்
விண்பின் ஆகமுன் ஓங்கும்
         வியன்பொன் புரிசை வலம் கொண்டு
பண்பு நீடிப் பணிந்து எழுந்து
         பரமர் கோயில் உள் அடைந்தார்.

சீகாழியில் தோன்றிய பிள்ளையார், முத்துச் சிவிகையினின்றும் இழிந்து, அன்பின் சிறப்புடைய அடியவர்கள் தம்மைச் சூழ்ந்துவர, இறைவரின் கோபுரத்தைச் சூழ்ந்து, வானமும் கீழ்ப்படும் வண்ணம் முன்னால் உயர்ந்து விளங்கும் பெரிய பொன் மதிலை வலமாக வந்து வணங்கிப் பண்பில் நீடிப் பணிந்து, எழுந்து, இறைவரின் திருக்கோயிலினுள் சென்றார்.
  
வாரணத்தின் உரிபோர்த்த
         மைந்தர், உமையாள் மணவாளர்
ஆரணத்தின் உட்பொருளாய்
         நின்றார் தம்முன் அணைந்து இறைஞ்சி
நாரணற்கும் பிரமற்கும்
         நண்ணற்கு அரிய கழல்போற்றும்
காரணத்தின் வரும் இன்பக்
         கண்ணீர் பொழியக் கைதொழுதார்.

சீகாழியில் தோன்றிய பிள்ளையார், முத்துச் சிவிகையினின்றும் இழிந்து, அன்பின் சிறப்புடைய அடியவர்கள் தம்மைச் சூழ்ந்துவர, இறைவரின் கோபுரத்தைச் சூழ்ந்து, வானமும் கீழ்ப்படும் வண்ணம் முன்னால் உயர்ந்து விளங்கும் பெரிய பொன் மதிலை வலமாக வந்து வணங்கிப் பண்பில் நீடிப் பணிந்து, எழுந்து, இறைவரின் திருக்கோயிலினுள் சென்றார்.
  
தொழுது விழுந்து பணிந்து எழுந்து,
         சொல்மாலைகளால் துதிசெய்து,
முழுதும் ஆனார் அருள்பெற்றுப்
         போந்து வைகி, முதல்வர் தமைப்
பொழுது தோறும் புக்கு இறைஞ்சிப்
         போற்றி செய்து அங்கு அமர்வார் முன்
அழுது வணங்கி ஒரு தொண்டர்
         அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார்.

தொழுது நிலத்தில் விழுந்து பணிந்து எழுந்து, சொல் மாலைகளால் போற்றி, எல்லாமாய் நின்ற இறைவரின் திருவருள் பெற்று, வெளியே வந்து தங்கியிருந்தவராய், இறைவரைக் காலங்கள் தோறும் சென்று வணங்கிப் போற்றி, அங்கு விரும்பி இருப்பவரான அப்பிள்ளையாரின் திருமுன்பு, ஒரு தொண்டர் அழுது நின்று, சமணர்களின் தன்மை பற்றிய ஒரு செய்தியை அறிவிக்கத் தொடங்கி,

"அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன்
         ஆக்கும் பனைகளான எலாம்
மங்குல் உற நீண்டு ஆண்பனையாய்க்
         காயா ஆகக் கண்ட அமணர்,
இங்கு நீர் இட்டு ஆக்குவன
         காய்த்தற்கு அடைவு உண்டோ என்று
பொங்கு நகைசெய்து இழித்து உரைத்தார்,
         அருள வேண்டும்" எனப்புகல.

`உள்ளங்கையில் தீயினைக் கொண்ட இறைவற்கு அடியவனாகிய யான், வளர்க்கும் பனை மரங்கள் எல்லாம் மேகமண்டலம் பொருந்த நீண்டு வளர்ந்தும், ஆண் பனைகளாய்க் காய்க்காது இருப்பதைக் கண்ட சமணர்கள், `இங்கு நீவிர் வைத்து வளர்க்கும் பனை மரங்கள் காய்ப்பதற்கு வழியுண்டோ?' என்று எள்ளி மிகவும் நகைத்து, இழிவாய்ப் பேசுகின்றனர்; தாங்கள் அருள் செய்ய வேண்டும்' என விண்ணப்பிக்க,
  
பரமனார் தம் திருத்தொண்டர்
         பண்பு நோக்கி, பரிவு எய்தி,
விரவு காதலொடும் விரைந்து
         விமலர் கோயில் புக்கு அருளி
அரவும் மதியும் பகை தீர
         அணிந்தார் தம்மை அடி வணங்கி,
இரவு போற்றித் திருப்பதிகம்
         இசையில் பெருக எடுத்தருளி.

சிவபெருமானது திருத்தொண்டரின் அடிமைத் திறத்தைத் திருவுளங்கொண்ட திருஞானசம்பந்தர், மிகவும் இரங்கி, பொருந்திய பெருவிருப்பத்துடன் விரைந்து சென்று, இறைவரின் திருக்கோயிலுக்குள் புகுந்து, பாம்பையும் பிறைச்சந்திரனையும் பகை தவிர்த்துத் தலையில் சூடிய சிவபெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கித் திருவருளை இரந்து `பூத்தேர்ந்தாயன' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பண் இசை பெருகப் போற்றியருள,

விரும்பு மேன்மைத் திருக்கடைக்காப்பு
         அதனில், விமலர் அருளாலே,
குரும்பை ஆண் பனை ஈனும்
         என்னும் வாய்மை குலவுதலால்,
நெருங்கும் ஏற்றுப் பனை எல்லாம்
         நிறைந்த குலைகளாய்க் குரும்பை
அரும்பு பெண்ணை ஆகியிடக்
         கண்டார் எல்லாம் அதிசயித்தார்.

விரும்பத்தக்க மேன்மை பொருந்திய திருக்கடைக்காப்பில், இறைவரின் திருவருளால் `குரும்பைகளை ஆண் பனைகள் ஈனும்' என்னும் வாய்மை பொருந்தி விளங்குதலால், நெருங்கிய அவ்வாண்பனைகள் எல்லாம், நிறைந்த குலைகளை உடையனவாய்க் குரும்பையுடைய பெண்பனைகளாக மாறிவிடவே, கண்டவர் அனைவரும் வியப்படைந்தனர்.

சீரின் மன்னும் திருக்கடைக்காப்பு
         ஏற்றி, சிவன் ஆரருள் பெற்றுப்
பாரில் நீடும் ஆண்பனைமுன்
         காய்த்துப் பழுக்கும் பண்பினால்,
நேரும் அன்பர் தம் கருத்து
         நேரே முடித்துக் கொடுத்து அருளி,
ஆரும் உவகைத் திருத்தொண்டர்
         போற்ற அங்கண் இனிது அமர்ந்தார்.

சிறப்பால் நிலைபெற்ற திருக்கடைக்காப்புச் சாத்திப் பதிகத்தை நிறைவாக்கி, இறைவரின் திருவருளைப் பெற்று, உலகத்தில் நீடிய ஆண்பனைகள் முன்னே காய்த்துப் பழுக்கும் தன்மை வர, விரும்பும் அன்பரின் கருத்தை நேர்பட முடித்துத் தந்து நிறைவான மகிழ்ச்சியடைய, திருத்தொண்டர் போற்ற, அந்நகரத்தில் இனிதாய் எழுந்தருளியிருந்தார் ஞானசம்பந்தர்.

தென்னாட்டு அமண் மாசு அறுத்தார் தம்
         செய்கை கண்டு, திகைத்த அமணர்
அந்நாட்டதனை விட்டு அகல்வார்,
         சிலர் தம் கையில் குண்டிகைகள்
"என் ஆவன மற்று இவை என்று
         தகர்ப்பார், இறைவன் ஏறு உயர்த்த
பொன்னார் மேனிப் புரிசடையான்
         அன்றே" என்று போற்றினார்.

பாண்டிய நாட்டில் சமணமான குற்றத்தை நீக்கிய ஞானசம்பந்தரின் இச் செயலைக் கண்டு, திகைத்த சமணர்களிற் சிலர், அந்நாட்டை நீங்கிச் செல்பவர்களாகி, சிலர் தம் கையில் ஏந்திய தம் சமயச் சின்னங்களுள் ஒன்றான நீர்க் குண்டிகைகளை இவற்றால் என்ன பயன் என்று கூறி உடைத்து எறிந்து, `முழுமுதல் கடவுளாவார் விடைக்கொடியை உயர்த்திய பொன்போன்ற மேனியை உடைய புரிந்த சடையை உடைய சிவபெருமானே!' என்று போற்றினர்.


பிள்ளையார் தம் திருவாக்கில்
         பிறத்தலால், அத் தாலம் முன்பு
உள்ள பாசம் விட்டு அகல,
         ஒழியாப் பிறவி தனை ஒழித்துக்
கொள்ளும் நீர்மைக் காலங்கள்
         கழித்து, சிவமே கூடினவால்,
வள்ளலார் மற்று அவர் அருளின்
         வாய்மை கூறின் வரம்பு என்னாம்.

திருஞானசம்பந்தரின் உண்மைத் திருவாக்கினால் பெண்பனை ஆன அப் பனைமரங்களுள், பனையாய்ப் பிறப்பதற்கு உரியதான வினை நீங்க, ஓயாமல் தொடர்ந்து வருகின்ற பிறவிப் பிணி நீங்கி, உடம்பு இருப்பதற்குக் காரணமான ஏன்ற வினையை நுகரும் கால அளவு நீங்கியபின், சிவப்பேற்றை அடைந்தன. இந் நிலையைக் காண, வள்ளலாரான பிள்ளையாரின் அருளிப்பாட்டை எடுத்துக் கூறுவது என்பது ஒரு வரம்புக்கு உள்ளாகுமோ? ஆகாது.


வேதம் படியாப் பாதகர் ---

வேதத்தைப் படிக்காத பாதகர்கள் என்றார் அடிகளார். வேதத்தைப் படித்து, அதன் வழி ஒழுகின்றால் உள்ளத்திலே வேதங்களின் உட்கருத்தானது படியும். அதனால் மனமும் படியும். சமணர்கள் அவ்வாறானவர்கள் அல்லர்.

பாய் அன்றி உடாப் பேதைகள் ---

பாயைத் தவிர வேறு ஆடையை உடுக்காத பேதைகள்
  
கேசம் பறி கோப்பாளிகள் யாரும் கழு ஏற ---

கோப்பன் - கெட்டிக்காரன், தேர்ந்த போக்கிரி. 
கோப்பாளிகள் - தேர்ந்த போக்கிரிகள்.

தலைமயிரைப் பிய்த்துப் பறிக்கும் தேர்ந்த போக்கிரிகள் ஆன சமணர்கள் அனைவரும் கழுவில் ஏறும்படியாக,
        
சிவமாய், தேன் அமுது ஊறும் திருவாக்கால், ஒளி சேர் வெண் திருநீற்றால் அமர் ஆடும் சிறியோனே ---

மதுரையம்பதிக்குத் திருஞானசம்பந்தர் வருகையும், அடியார்கள் முழக்கமும் சமணர்களுக்குப் பொறாமையை ஊட்டியது. அவர்களுக்குப் பல துர் நிமித்தங்களும், தீய கனவுகளும் தோன்றின. எல்லோரும் ஓரிடத்தல் கூடி பாண்டிய மன்னனைக் காணச்சென்றார்கள். மன்னனிடம், "உமது மதுராபுரியில் இன்று சைவ வேதியர்கள் மேவினார்கள். நாங்கள் கண்டு முட்டு"  என்றார்கள். மதி இல்லாத மன்னவனும், "கேட்டு முட்டு" என்றான். "இதற்கு என்ன செய்வது என்று அவர்களையே கேட்டான். மதிகெட்ட மன்னனின் கீழ் வாழும் மதிகெட்ட சமணர்களும், "மந்திரத்தால் தீயிட்டால், அவன் தானே ஓடிவிடுவான்" என்றார்கள். மன்னனும் உடன்பட்டான்.

சமணர்கள், பிள்ளையார் எழுந்தருளி இருந்த மடத்தில் தீயை மூட்ட மந்திரத்தை செபித்தார்கள். பலிக்கவில்லை. திரும்பிப் போனால் மன்னன் மதிக்கமாட்டான் என்று எண்ணி, கையிலே தீக்கோலைக் கொண்டு மடத்திற்குத் தீயை மூட்டினார்கள். மன்னன் அரசாட்சி வழுவியதால் வந்த தீது இது என்று உணர்ந்த திருஞானசம்பந்தப் பெருமானார், தம்மை மதுரையம்பதிக்கு வரவழைத்த மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணைப் பாதுகாக்கவும், குலச்சிறை நாயனாரின் அன்பை நினைந்தும், மன்னவன் தனது தவறை உணர்ந்து மீண்டும் சிவநெறியை அடையவேண்டும் என்பதை உணர்ந்தும், "அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே" என்று திருப்பதிகம் பாடி வேண்டினார்.

சமணர்கள் மடத்தில் இட்ட தீயானது, மெதுவாகச் சென்று, பாண்டியன் உடம்பில் வெப்பு நோயாகப் பற்றியது. இதைக் கேட்ட சமணர்கள் மன்னனை அடைந்து, தமது கையில் உள்ள மயிற்பீலியால் மன்னனின் உடலைத் தடவி, குண்டிகை நீரை மந்திரித்துத் தெளித்தார்கள். அந்த நீர் நெருப்பில் சொரிந்த நெய்யைப் போல, வெப்பு நோய் பின்னும் மிகுவதற்கே ஏதுவானது.

பாண்டி மாதேவியாரும், குலச்சிறையாரும் மன்னனை வணங்கி, "சமணர்கள் இட்ட தீயே வெப்பு நோயாகி உம்மை வருத்துகின்றது. உடல் மாசும், உள்ளத்தில் மாசும் உடைய இவர்களால் இதைத் தீர்க்க முடியாது. இறைவன் திருவருளைப் பெற்ற திருஞானசம்பந்தப் பெருமான் வந்து பார்த்து அருளினாலே இந்த நோய் மட்டும் அல்லாது பிறவி நோயும் அகன்று விடும்" என்றார்கள்.

திருஞானசம்பந்தர் என்னும் நாம மந்திரம் செவியில் நுழைந்த உடனே, சிறிது அயர்வு நீங்கப் பெற்ற மன்னன், "சமணர்களின் தீச் செயலே இந்த நோய்க்கு மூலம் போலும்" என்று எண்ணி, "திருஞானசம்பந்தரை அழைத்து வாருங்கள். எனது நோயைத் தீர்ப்பவர் பக்கம் நான் சேர்வேன்" என்றான்.

மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் வேண்ட, திருஞானசம்பந்தர் மன்னனின் திருமாளிகைக்கு எழுந்தருளினார். மன்னன் தனது முடியின் பக்கத்தில் பொன்னால் ஆன ஆசனத்தை இடுமாறு பணிக்க, அந்த ஆசனத்தில் எழுந்தருளினார் சுவாமிகள். சமணர்கள் வெகுண்டனர். "நீங்கள் இருவரும் உங்கள் தெய்வ வலிமையால் எனது நோயைத் தீருங்கள். தீர்த்தவர் வென்றவர் ஆவர்" என்றான். சமணர்கள் "எங்கள் தெய்வ வல்லமையால் இடப்பக்கத்து நோயைத் தீர்ப்போம்" என்று அருக நாமத்தை முழக்கி, மயில் பீலியால் உடம்பைத் தடவினார்கள். பீலி வெந்தது. மன்னனைப்      பற்றிய வெப்பு நோய் மேலும் முறுகியது. ஆற்ற முடியாதவனாய் மன்னன் திருஞானசம்பந்தரைப் பார்த்தான்.

ஆலவாய்ச் சொக்கனை நினைந்து, "மந்திரமாவது நீறு" என்னும் திருப்பதிகத்தைப் பாடி, திருஞானசம்பந்தப் பெருமான் பாண்டியனின் வலப்பக்கத்தில் தடவினார். வலப்பக்கம் நோய் நீங்கிக் குளிர்ந்தது. தனது உடம்பிலேயே, ஒரு பக்கம் நரகத் துன்பத்தையும், ஒரு பக்கம் வீட்டின்பத்தையும் அனுபவித்தான் மன்னன். "அடிகளே! எனது இடப்பக்க நோயையும் தீர்த்து அருள் செய்யும்" என வேண்டினான். பெருமான் அப் பக்கத்தையும் தமது திருக்கைகளால் திருநீறு கொண்டு தடவ, வெப்பு நோய் முழுதும் நீங்கியது.

மங்கையர்க்கரசியாரும் குலச்சிறை நாயனாரும், பிள்ளையார் திருவடிகளில் விழுந்து வணங்கி, "நாங்கள் பெருமை உற்றோம். பெறுதற்கு அரிய பேற்றைப் பெற்றோம். மன்னனும் பிறவா மேன்மை உற்றார்" என்றனர். "ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன்" என்று மன்னனும் பெருமானாருடைய திருப்பாதங்களில் பணிந்தான்.

பெற்றியால் அருளிச் செய்த
         பிள்ளையார் தமக்கும், முன்னம்
சுற்று நின்று அழைத்தல் ஓவா
         அருகர்க்கும், தென்னர் கோமான்,
"இற்றை நாள் என்னை உற்ற
         பிணியை நீர் இகலித் தீரும்,
தெற்று எனத் தீர்த்தார் வாதில்
         வென்றனர்" என்று செப்ப.

மன்னவன் மாற்றம் கேட்டு,
         வடிவுபோல் மனத்து மாசு
துன்னிய அமணர், தென்னர்
         தோன்றலை நோக்கி, "நாங்கள்
உன் உடம்பு அதனில் வெப்பை
         ஒருபுடை வாம பாகம்
முன்னம் மந்திரித்துத் தெய்வ
         முயற்சியால் தீர்த்தும்" என்றார்.

யாதும் ஒன்று அறிவு இலாதார்
         இருள் என அணையச் சென்று
வாதினில் மன்னவன் தன்
         வாம பாகத்தைத் தீர்ப்பார்
மீது தம் பீலி கொண்டு
         தடவிட, மேன்மேல் வெப்புத்
தீது உறப் பொறாது, மன்னன்
         சிரபுரத்தவரைப் பார்த்தான்.

தென்னவன் நோக்கம் கண்டு
         திருக் கழுமலத்தார் செல்வர்
"அன்னவன் வலப்பால் வெப்பை
         ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும் மந்திரமும் ஆகி
         மருந்துமாய்த் தீர்ப்பது" என்று
பன்னிய மறைகள் ஏத்தி,
         பகர் திருப்பதிகம் பாடி.

திருவளர் நீறு கொண்டு
         திருக்கையால் தடவ, தென்னன்
பொருவரு வெப்பு நீங்கிப்
         பொய்கையில் குளிர்ந்தது அப்பால்,
மருவிய இடப்பால் மிக்க
         அழல் எழ மண்டு தீப்போல்
இருபுடை வெப்பும் கூடி
         இடங்கொளாது என்னப் பொங்க.

உறியுடைக் கையர், பாயின்
         உடுக்கையர் நடுக்கம் எய்திச்
செறிமயில் பீலி தீயத்
         தென்னன் வெப்பு உறு தீத் தம்மை
எறியுமா சுடலும்,  கன்றி
         அருகு விட்டு ஏற நிற்பார்,
அறிவு உடையாரை ஒத்தார்
         அறிவு இலா நெறியில் நின்றார்.

பலர் தொழும் புகலி மன்னர்
         ஒருபுடை வெப்பைப் பாற்ற,
மலர்தலை உலகின் மிக்கார்
         வந்து அதிசயித்துச் சூழ,
இலகுவேல் தென்னன் மேனி
         வலம் இடம் எய்தி நீடும்
உலகினில் தண்மை வெம்மை
         ஒதுங்கினால் ஒத்தது அன்றே.

மன்னவன் மொழிவான், "என்னே
         மதித்த இக் காலம் ஒன்றில்
வெந்நரகு ஒருபால் ஆகும்,
         வீட்டு இன்பம் ஒருபால் ஆகும்;
துன்னு நஞ்சு ஒருபால் ஆகும்,
         சுவை அமுது ஒருபால் ஆகும்;
என்வடிவு ஒன்றில் உற்றேன்,
         இருதிறத்து இயல்பும்" என்பான்.

"வெந்தொழில் அருகர்! தோற்றீர்,
         என்னை விட்டு அகல நீங்கும்,
வந்து எனை உய்யக் கொண்ட
         மறைக் குல வள்ளலாரே!
இந்தவெப்பு அடைய நீங்க
         எனக்கு அருள் புரிவீர்" என்று
சிந்தையால் தொழுது சொன்னான்
         செல்கதிக்கு அணியன் ஆனான்.

திருமுகம் கருணை காட்ட,
         திருக்கையால் நீறு காட்டி,
பெருமறை துதிக்கும் ஆற்றால்
         பிள்ளையார் போற்றி, பின்னும்
ஒருமுறை தடவ, அங்கண்
         ஒழிந்து வெப்பு அகன்று, பாகம்
மருவு தீப் பிணியும் நீங்கி, வழுதியும்
         முழுதும் உய்ந்தான்.
        
கொற்றவன் தேவியாரும்
         குலச்சிறையாரும் தீங்கு
செற்றவர் செய்ய பாதத்
         தாமரை சென்னி சேர்த்து,
"பெற்றனம் பெருமை, இன்று
         பிறந்தனம், பிறவா மேன்மை
உற்றனன் மன்னன்" என்றே
         உளம் களித்து உவகை மிக்கார்.

மீனவன் தன்மேல் உள்ள
         வெப்பு எலாம் உடனே மாற,
ஆன பேரின்பம் எய்தி,
         உச்சிமேல் அங்கை கூப்பி,
மானம் ஒன்று இல்லார் முன்பு
         வன்பிணி நீக்க வந்த
ஞானசம்பந்தர் பாதம்
         நண்ணி நான் உய்ந்தேன்" என்றான்.              --- பெரியபுராணம்.

பின்னர், அனல் வாதம் தொடங்கியது. பாண்டியன் முன்னிலையில் எரி வளர்க்கப்பட்டது. திருஞானசம்பந்தர் தான் பாடிய திருமுறைகளை எடுத்தார். கயிற்றை அவிழ்த்தார். ஏடுகளை பறித்தார். "போகம் ஆர்த்த பூண்முலையாள்" என்னும் திருநள்ளாற்றுத் திருப்பதிகம் கிடைத்தது. அத் திருப்பதிக ஏட்டினைப் பெருமான் தமது திருக்கரத்திலே தாங்கி, அதற்கு ஆக்கம் தேடத் "தளரிள வளரொளி" என்னும் திருப்பதிகத்தைப் பாடி நெருப்பில் இட்டார். அந்த ஏடு நெருப்பில் வேகாது, பழுது நீங்கி, முன்னினும் பச்சையாய் விளங்கியது. அந்த ஏட்டினைத் தமது திருக்கைகளால் நெருப்பில் இருந்து எடுத்து, அவைக்குக் காட்டி, பழையபடி அதைத் திருமுறையிலே சேர்த்தார். மன்னனும் மற்றையோரும் வியந்தனர்.

சமணர்கள் தங்கள் ஏட்டை இட்டனர். அது தீய்ந்து கருகியது. மன்னன் தண்ணீரைக் கொண்டு தீயை அவிக்கச் செய்தான். சமணர்கள் தமது ஏட்டைத் தடவிப் பார்த்து, கரியையும் சாம்பலையுமே கண்டார்கள். மன்னன் அவர்களைப் பார்த்துச் சிரித்து, "இன்னும் நன்றாக அரித்துப் பாருங்கள். பொய்யை மெய்யாக்கப் புகுந்தவர்களே! போங்கள். போங்கள். முன்னும் தோற்றீர்கள். இப்பொழுதும் தோற்றீர்கள்" என்றான். "இன்னும் ஒருமுறை முயல்வோம்" என்றனர் சமணர்கள். "வாதில் தோற்றவர்களை என்ன செய்வது என்பதை முடிவு செய்து, மேல் வாதம் புரியவேண்டும்" என்றார் குலச்சிறை நாயனார். சமணர்கள், கோபத்தால் வாய் சோர்ந்து, "நாங்கள் வாதில் தோற்றோமாயின், மன்னவன் எங்களைக் கழுவில் ஏற்றுவானாக" என்றனர். மன்னன் சமணர்களைப் பார்த்து, "கோபமும் பொறாமையும் உங்களை இவ்வாறு கூறச் செய்தன" என்றான்.

எல்லோரும் வைகை ஆற்றங்கரையை அடைந்தார்கள். சமணர்கள் அத்தி நாத்தி என்று எழுதிய ஏட்டை ஆற்று வெள்ளத்தில் விட்டார்கள். அந்த ஏடு கடலை நோக்கி ஓடியது. திருஞானசம்பந்தர், வாழ்க அந்தணர் எனத் தொடங்கும் திருப்பாசுரத்தை ஏட்டிலே வரைந்து, அதை வைகையிலே இட்டார். அந்த ஏடு நீரைக் கிழித்துக் கொண்டு மேல் ஏறிச் சென்றது. திருப்பாசுரத்தில் வேந்தனும் ஓங்குக என்று அருளப்பட்டதால், மன்னன் கூன் நிமிரப் பெற்றான். ஏட்டை நிறுத்தப் பிள்ளையார், வன்னியும் மத்தமும் என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். திரு ஏடகம் என்னும் இடத்திலே ஏடு நீரில் நின்றது. குலச்சிறை நாயனார் காற்றினும் கடிது சென்று, ஏட்டினை நீரிலே நின்ற ஏட்டினை எடுத்து வந்து எல்லோருக்கும் காட்டினார். 

சமணர்கள் எண்ணாயிரவரும் கழுவில் ஏறினார்கள். திருஞானசம்பந்தர் பாண்டியனுக்குத் திருநீறு கொடுத்தார். அதை அன்போடு வாங்கித் தரித்துக் கொண்டான் பாண்டியன். மன்னன் நீறு அணிந்தான் என்று, மற்று அவன் மதுரை வாழ்வார் துன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்துகொண்டார்.

இந்த நிகழ்வினை அடிகளார், "சிவமாய்த் தேன் அமுது ஊறும் திருவாக்கால், ஒளி சேர்வெண் திருநீற்றால் அமராடும் சிறியோனே" என்று பாடிப் பரவினார். ஆயுதங்கள் ஏதும் இல்லாமல், திருஞானசம்பந்தப் பெருமான் தமது திருவாக்கில் பிறந்த தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டும், திருநீற்றைக் கொண்டுமே சமணர்களோடு வாது புரிந்து வென்றார்.

செழுநீர்ச் சேய் நதி ஆரம் கொழியா கோமளம் வீசும் திருவோத்தூர் தனில் மேவும் பெருமாளே ---

ஆரம் - முத்து, சந்தனமரம்.

கோமளம் - அழகு, இளமை, மென்மை, மகிழ்ச்சி.

உமையம்யையாருக்குச் சேய் ஆகிய முருகப்பெருமான் உருவாக்கியதால் சேயாறு எனப்பட்டது. அது மலைப்பண்டங்கள் ஆகிய சந்தன மரக் கிளைகளையும் முத்துக்களையும் கொழித்துக் கொண்டு வந்து ஆங்காங்கே கரையிலே சேர்க்கும்.
அழகிய சேயாற்றின் கரையிலே விளங்கும் திருத்தலம் திருவோத்தூர் என்றும் செய்யாறு என்றும் வழங்கப் படுவது. திருஞானசம்பந்தப் பெருமானால் ஆண்பனைகள் பெண்பனைகள் ஆகுமாறு திருப்பதிகம் பாடப்பெற்ற சிறப்பினை உடையது.

"ஓத்தின் உரை வரம்பு அகன்ற முக்கண் உத்தமன் சந்தை கூட்டி அருமறை அறவோர்க்கு ஓதுவித்த இடம் அதனைக் காண்மின்" என்று திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

"தேவர் முனிவர்க்கு ஓத்தளித்த திருவோத்தூர்" என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் போற்றி உள்ள சிறப்பு மிக்க திருத்தலம்.

இத்தகைய மாமறைநூல் முந்நாள்
     இத் திருக்காஞ்சி வரைப்பில் தென்சார்,
தத்துநீர் அலைபுரட்டும் சேயாற்றின்
     தடங்கரைக் கண் இமையோர்கட்கும்,
மெய்த்தவர்க்கும் ஓதுவித்தோம் ஆதலினால்
     மேவுதிரு ஓத்தூர் என்னும்,
அத்தலத்தின் எமைத் தொழுதோர்
     அருமறைநூல் முழுது உணர்ந்து வீடுசேர்வார்.        --- காஞ்சிப் புராணம்.

கருத்துரை

முருகா! தேவரீரது அருட்புகழைக் கேட்போர் அனைவரும் உணர்வு பெறுமாறு அருள்வாயாக.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...