கொட்டையூர் --- 0879. பட்டுமணிக் கச்சு

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பட்டுமணிக் கச்சு (கொட்டையூர்)

முருகா!
அடியரில் கூட்டி அருள்வாய்.


தத்ததனத் தத்ததனத் தத்ததனத் தத்ததனத்
     தத்ததனத் தத்ததனத் ...... தனதான


பட்டுமணிக் கச்சிருகக் கட்டியவிழ்த் துத்தரியப்
     பத்தியின்முத் துச்செறிவெற் ...... பிணையாமென்

பற்பமுகைக் குத்துமுலைத் தத்தையர்கைப் புக்குவசப்
     பட்டுருகிக் கெட்டவினைத் ...... தொழிலாலே

துட்டனெனக் கட்டனெனப் பித்தனெனப் ப்ரட்டனெனச்
     சுற்றுமறச் சித்தனெனத் ...... திரிவேனைத்

துக்கமறுத் துக்கமலப் பொற்பதம்வைத் துப்பதவிச்
     சுத்தியணைப் பத்தரில்வைத் ...... தருள்வாயே

சுட்டபொருட் கட்டியின்மெய்ச் செக்கமலப் பொற்கொடியைத்
     துக்கமுறச் சொர்க்கமுறக் ...... கொடியாழார்

சுத்தரதத் திற்கொடுபுக் குக்கடுகித் தெற்கடைசிச்
     சுற்றுவனத் திற்சிறைவைத் ...... திடுதீரன்

கொட்டமறப் புற்றரவச் செற்றமறச் சத்தமறக்
     குற்றமறச் சுற்றமறப் ...... பலதோளின்

கொற்றமறப் பத்துமுடிக் கொத்துமறுத் திட்டதிறற்
     கொற்றர்பணிக் கொட்டைநகர்ப் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


பட்டுமணிக் கச்சு இருகக் கட்டி, அவிழ்த்து, த்தரியப்
     பத்தியின் முத்துச் செறி வெற்பு ...... இணையாம் என்று,

பற்பம் உகைக் குத்து முலைத் தத்தையர் கைப் புக்கு, வசப்-
     பட்டு உருகிக் கெட்ட வினைத் ...... தொழிலாலே,

துட்டன் என, கட்டன் என, பித்தன் என, ப்ரட்டன் என,
     சுற்றும் அறச் சித்தன் எனத் ...... திரிவேனை,

துக்கம் அறுத்து, கமலப் பொற்பதம் வைத்து, பதவிச்
     சுத்தி அணைப் பத்தரில் வைத்து ...... அருள்வாயே.

சுட்ட பொருள் கட்டியின் மெய்ச் செக்கமலப் பொற்கொடியைத்
     துக்கம் உற, சொர்க்கம் உறக் ...... கொடி யாழ்ஆர்

சுத்த ரதத்தில் கொடுபுக்கு, டுகித் தென் கடைசிச்
     சுற்று வனத்தில் சிறைவைத் ...... திடு தீரன்,

கொட்டம் அற, புற்று அரவச் செற்றம் அற, சத்தம் அற,
     குற்றம் அற, சுற்றம் அற, ...... பலதோளின்

கொற்றம் அற, பத்துமுடிக் கொத்தும் அறுத்திட்ட திறல்
     கொற்றர் பணிக் கொட்டை நகர்ப் ...... பெருமாளே.


பதவுரை

         சுட்ட பொருள் கட்டியின் மெய்ச் செக்கமலப் பொன்கொடியைத் துக்கம் உற --- காய்ச்சிய தங்கக் கட்டி போன்ற உடலை உடையவளும், செந்தாமரையில் வீற்றிருப்பவளும் ஆன இலக்குமியும், அழகிய கொடி போன்றவளும் ஆ சீதைதேவியைத் துக்கப்படும்படிச் செய்து,

      சொர்க்கம் உறக் கொடி யாழ் ஆர் --- வானளாவப் பறக்கின்ற வீணைக் கொடியினை உடை,

     சுத்த ரதத்தில் கொடு புக்கு --- தூய்மை வாய்ந்த புட்பக விமானத்தில், அவளை எடுத்துச் சென்று,

     கடுகித் தென் கடைசிச் சுற்று வனத்தில் --- வேகமாகச் சென்று தென்திசையின் கோடியில், இலங்கையில் உள்ள வனத்தில்,

     சிறை வைத்திடு தீரன் --- சிறை வைத்த வீரனாகிய இராவணனின்

      கொட்டம் அற --- இறுமாப்பு அழியுமாறு,

     புற்று அரவச் செற்றம் அற --- புற்றில் வாழும் பாம்பு போல் சீறுகின்ற அவனது சினம் அடங்குமாறு,

     சத்தம் அற --- ஓசையில்லாமல்,

     குற்றம் அற --- அவனது குற்றமானது ஒழிந்து போ,

     சுற்றம் அற --- அவனது சுற்றத்தாரும் அழிந்து போ,

     பல தோளின் கொற்றம் அற --- இருபது தோள்களின் வீரம் அழி,

     பத்து முடிக் கொத்தும் அறுத்திட்ட --- பத்துத் தலைகளையும் கொத்தாக அறுத்து ஒழித்த,

     திறல் கொற்றர் பணி --- வீரத்தைக் காட்டிய வெற்றியாளராகிய இராம்பிரானாக வந்த திருமால் பணிந்து போற்றிய,

     கொட்டை நகரப் பெருமாளே --- திருக் கொட்டையூர் என்னும் திருத்தலத்ததில், கோடீச்சரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      பட்டு மணிக் கச்சு இறுகக் கட்டி --- அழகிய பட்டினால் ஆன கச்சினை இறுக்கமாக மார்பில் கட்டியும்,

     அவிழ்த்து --- அவிழ்த்தும்,

     உத்தரியப் பத்தியின் முத்துச் செறி --- மேலாடையின் மேல் வரிசையாக விளங்குகின்ற முத்துமாலைகள் சூழ்ந்துள்ள,

     வெற்பு இணையாம் என் --- மலைக்கு இணையாகச் சொல்லப்படுகின்,

      பற்ப முகைக் குத்து முலை --- தாமரையின் மொட்டுப் போலக் குத்திட்டு நிற்கும் முலைகளை உடையவரும்,

      தத்தையர் கைப்புக்கு --- கிளி போன்ற பேச்சுக்களை உடையவரும் ஆகிய விலைமாதர்களின்,

     வசப்பட்டு உருகி --- வசத்தில் அகப்பட்டு, மனமானது அவர்களை நினைந்து உருகி,

     கெட்ட வினைத் தொழிலாலே --- கேட்டினை விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு,

      துட்டன் என --- துட்டனைப் போன்றும்,

     கட்டன் என --- துன்பத்திற்கு ஆளாவன் என்றும்,

     பித்தன் என --- பித்துப் பிடித்தவனைப் போன்றும்,

     ப்ரட்டன் எனச் சுற்றும் --- நன்னெறியில் வழுவியவனைப் போன்றும்,

     அற --- எங்கும்,

     சித்தன் எனத் திரிவேனை --- எனது சித்தம் போன போக்கில் திரிகின்ற என்னை,

      துக்கம் அறுத்து --- எனது துக்கத்தை நீக்கி,

     கமலப் பொன்பதம் வைத்து --- தேவரீரது அழகிய தாமரைத் திருவடிகளில் வைத்து,

     பதவிச் சுத்தி அணைப் பத்தரில் வைத்து அருள்வாயே ---
தூய பதவியை அடைந்துள்ள அடியவர்கள் கூட்டத்தில் வைத்து அருள் புரியவேண்டும்.


பொழிப்புரை


         காய்ச்சிய தங்கக் கட்டி போன்ற உடலை உடையவளும், செந்தாமரையில் வீற்றிருப்பவளும் ஆன இலக்குமியும், அழகிய கொடி போன்றவளும் ஆ சீதைதேவியைத் துக்கப்படும்படிச் செய்து, வானளாவப் பறக்கின்ற வீணைக் கொடியினை உடை,
தூய்மை வாய்ந்த புட்பக விமானத்தில், அவளை எடுத்துச் சென்று, வேகமாகச் சென்று தென்திசையின் கோடியில், இலங்கையில் உள்ள வனத்தில், சிறை வைத்த வீரனாகிய இராவணனின் இறுமாப்பு அழியுமாறும், புற்றில் வாழும் பாம்பு போல் சீறுகின்ற அவனது சினம் அடங்குமாறும், ஓசையில்லாமல், அவனது குற்றமானது ஒழிந்து போ, அவனது சுற்றத்தாரும் அழிந்து போ, இருபது தோள்களின் வீரம் அழி, பத்துத் தலைகளையும் கொத்தாக அறுத்து ஒழித்த, வீரத்தைக் காட்டிய வெற்றியாளராகிய இராம்பிரானாக வந்த திருமால் பணிந்து போற்றிய, திருக் கொட்டையூர் என்னும் திருத்தலத்ததில், கோடீச்சரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         அழகிய பட்டினால் ஆன கச்சினை இறுக்கமாக மார்பில் கட்டியும், அவிழ்த்தும், மேலாடையின் மேல் வரிசையாக விளங்குகின்ற முத்துமாலைகள் சூழ்ந்துள்ள, மலைக்கு இணையாகச் சொல்லப்படுகின், தாமரையின் மொட்டுப் போலக் குத்திட்டு நிற்கும் முலைகளை உடையவரும், கிளி போன்ற பேச்சுக்களை உடையவரும் ஆகிய விலைமாதர்களின் வசத்தில் அகப்பட்டு, மனமானது அவர்களை நினைந்து உருகி, கேட்டினை விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு,  துட்டனைப் போன்றும், துன்பத்திற்கு ஆளாவன் என்றும், பித்துப் பிடித்தவனைப் போன்றும், நன்னெறியில் வழுவியவனைப் போன்றும், எங்கும், எனது சித்தம் போன போக்கில் திரிகின்ற என்னை, எனது துக்கத்தை நீக்கி, தேவரீரது அழகிய தாமரைத் திருவடிகளில் வைத்து, தூய பதவியை அடைந்துள்ள அடியவர்கள் கூட்டத்தில் வைத்து அருள் புரியவேண்டும்.விரிவுரை

பதவிச் சுத்தி அணைப் பத்தரில் வைத்து அருள்வாயே ---

     அடியவர் கூட்டத்தில் சேர்ந்து நாளும் ஒருவன் இருப்பானாயின், அவன் தானாகவே மெய்யடியவனாக மாறி விடுவான். அடியவர் திருக்கூட்டத்தில் இருத்தல் என்ன பயனை இயல்பாகவே தரும் என்பதை, "சிதம்பர மும்மணிக் கோவை"யில், குமரகுருபர அடிகள் கூறுமாறு காண்க.

"செய்தவ வேடம் மெய்யில் தாங்கி,
கைதவ ஒழுக்கம் உள் வைத்துப் பொதிந்தும்,
வடதிசைக் குன்றம் வாய்பிளந் தன்ன
கடவுள் மன்றில் திருநடம் கும்பிட்டு
உய்வது கிடைத்தனன் யானே. உய்தற்கு
ஒருபெருந் தவமும் உஞற்றிலன், உஞற்றாது
எளிதினில் பெற்றது என் எனக் கிளப்பில்,
கூடா ஒழுக்கம் பூண்டும், வேடம்
கொண்டதற்கு ஏற்ப, நின் தொண்டரொடு பயிறலில்
பூண்ட அவ் வேடம் காண்தொறுங் காண்தொறும்
நின் நிலை என் இடத்து உன்னி உன்னி,
பல்நாள் நோக்கினர், ஆகலின், அன்னவர்
பாவனை முற்றி, அப் பாவகப் பயனின் யான்
மேவரப் பெற்றனன் போலும், ஆகலின்
எவ்விடத்து அவர் உனை எண்ணினர், நீயும் மற்று
அவ்விடத்து உளை எனற்கு ஐயம் வேறு இன்றே, அதனால்
இருபெரும் சுடரும் ஒருபெரும் புருடனும்
ஐவகைப் பூதமோடு எண்வகை உறுப்பின்
மாபெரும் காயம் தாங்கி, ஓய்வு இன்று
அருள் முந்து உறுத்த, ஐந்தொழில் நடிக்கும்
பரமானந்தக் கூத்த! கருணையொடு
நிலைஇல் பொருளும், நிலைஇயல் பொருளும்
உலையா மரபின் உளம் கொளப் படுத்தி,
புல்லறிவு அகற்றி, நல்லறிவு கொணீஇ,
எம்மனோரையும் இடித்து வரை நிறுத்திச்
செம்மை செய்து அருளத் திருவுருக் கொண்ட
நல் தவத் தொண்டர் கூட்டம்
பெற்றவர்க்கு உண்டோ பெறத் தகாதனவே".       

     அடியேன் புறத்தே தொண்டர் வேடம் தாங்கி, அகத்தே தீய ஒழுக்கம் உடையவனாக இருந்தும், நின் தொண்டர்களோடு பழகி வந்த்தால், அவர்கள் என் புற வேடத்தை மெய் என நம்பி, என்னைத் தக்கவனாகப் பாவித்தனர். என்பால் தேவரீர் எழுந்தருளி இருப்பதாக அவர் பாவித்த பாவனை உண்மையிலேயே நான் உய்யும் நெறியைப் பெறச் செய்தது என்கின்றார் இந்த அகவல் பாடலில்.

     வெள்ள வேணிப் பெருந்தகைக்கு யாம் செய் அடிமை மெய்யாகக், கள்ள வேடம் புனைந்து இருந்த கள்வர் எல்லாம் களங்கம் அறும் உள்ளமோடு மெய்யடியாராக உள்ளத்து உள்ளும் அருள் வள்ளலாகும் வசவேசன் மலர்த்தள் தலையால் வணங்குவாம்என்று பிரபுலிங்கலீலை என்னும் நூலில் வரும் அருமைச் செய்யுள் இதனையே வலியுறுத்தியது.

     இதன் உண்மையாவது, சிவபெருமானை மெய்யடியார்கள் எவ்விடத்தில் பாவனை செய்கின்றார்களோ, அவ்விடத்திலே அவன் வீற்றிருந்து அருள்வான். அதனால், பொய்த் தொண்டர்களும் மெய்த்தொண்டர் இணக்கம் பெற்றால், பெற முடியாத பேறு என்பது ஒன்று இல்லை. இது திண்ணம்.

குருட்டு மாட்டை, மந்தையாகப் போகும் மாட்டு மந்தையில் சேர்த்து விட்டால், அக் குருட்டு மாடு அருகில் வரும் மாடுகளை உராய்ந்து கொண்டே ஊரைச் சேர்ந்து விடும்.

     முத்தி வீட்டுக்குச் சிறியேன் தகுதி அற்றவனாயினும், அடியார் திருக்கூட்டம் எனக்குத் தகுதியை உண்டாக்கி முத்தி வீட்டைச் சேர்க்கும். அடியவருடன் கூடுவதே முத்தி அடைய எளியவழி. திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான் தன்னை அடியவர்கள் திருக்கூட்டத்தில் சேர்த்தது அதிசயம் என்று வியந்து பாடுகின்றார்.

வைப்பு மாடு என்றும் மாணிக்கத்து ஒளி என்றும்
     மனத்திடை உருகாதே
செப்பு நேர்முலை மடவரலியர் தங்கள்
     திறத்து இடை நைவேனை
ஒப்பு இலாதன உவமனில் இறந்தன
     ஒண் மலர்த் திருப்பாதத்து
அப்பன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயங் கண்டாமே. 

நீதியாவன யாவையும் நினைக்கிலேன்
     நினைப்பவ ரொடும் கூடேன்
ஏதமே பிறந்து இறந்து உழல்வேன் தனை
     என் அடியான் என்று
பாதி மாதொடும் கூடிய பரம்பரன்
     நிரந்தரம் ஆய் நின்ற
ஆதி ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

முன்னை என்னுடை வல்வினை போயிட
     முக்கண் அது உடை எந்தை
தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன்
     எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றது ஓர் புரிசடை முடிதனில்
     இளமதி அது வைத்த
அன்னை ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயங் கண்டாமே. 

பித்தன் என்று எனை உலகவர் பகர்வதோர்
     காரணம் இது கேளீர்
ஒத்துச் சென்று தன் திருவருள் கூடிடும்
      உபாயம் அது அறியாமே
செத்துப் போய் அரு நரகிடை வீழ்வதற்கு
     ஒருப்படு கின்றேனை
அத்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே.

பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன்
     பன்மலர் பறித்து ஏத்தேன்
குரவு வார் குழலார் திறத்தே நின்று
     குடி கெடுகின்றேனை
இரவு நின்று எர் ஆடிய எம் இறை
     எரிசடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும் என்
     ஏழைமை அதனாலே,
நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு
     நல்வினை நயவாதே,
மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு
     ஒருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

பொத்தை ஊன்சுவர் புழுப் பொதிந்து உளுத்துஅசும்பு
     ஒழுகிய பொய்க்கூரை
இத்தை மெய் எனக் கருதி நின்று இடர்க் கடல்
     சுழித்தலைப் படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த
     பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

நீக்கி முன் எனைத் தன்னொடு நிலாவகை
     குரம்பையில் புகப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து,
     நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி முன்செய்த பொய் அறத் துகள்அறுத்து
     எழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர்
     எழுதரு நாற்றம் போல்
பற்றல் ஆவது ஓர் நிலையிலாப் பரம்பொருள்
     அப்பொருள் பாராதே,
பெற்றவா பெற்ற பயன்அது நுகர்த்திடும்
     பித்தர்சொல் தெளியாமே
அந்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச்  
     சிறுகுடில் இது, இத்தைப்
பொருள் எனக் களித்து அருநரகத்து இடை
     விழப் புகுகின்றேனை,
தெருளும் மும்மதில் நொடிவரை இடிதரச்
     சினப் பதத்தொடு செந் தீ
அருளும் மெய்ந்நெறி, பொய்ந்நெறி நீக்கிய
     அதிசயங் கண்டாமே. 


துரும்பனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ
தொண்டரொடு கூட்டு கண்டாய்”          ---  தாயுமானார்.

தரையின் ஆழ்த் திரை ஏழே போல்,எழு
     பிறவி மாக்கடல் ஊடே நான்உறு
     சவலை தீர்த்து, ன தாளே சூடி,உன் ...... அடியார்வாழ்
சபையின் ஏற்றி, இன் ஞானா போதமும்
     அருளி, ஆட்கொளுமாறே தான், அது
     தமியனேற்கு முனே நீ மேவுவது ...... ஒருநாளே?
                                                        ---  (நிருதரார்க்கொரு) திருப்புகழ்

சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்குழாம்
சாரில், கதி அன்றி வேறு இலைகாண், தண்டு தாவடி போய்த்
தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம்
நீரில் பொறி என்று அறியாத பாவி நெடுநெஞ்சமே.

என்று கந்தரலங்காரப் பாட்டில் நெஞ்சுக்கு மிக உருக்கமாக உபதேசிக்கின்றார்.

மிக உயர்ந்த பாடல். உள்ளத்தை உருக்கும் பாடல்.

இப்படி அருணகிரிநாத சுவாமிகள் முருகனிடம் “ஆண்டவனே! அடியேனை அடியாருடன் கூட்டிவைக்க வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

     வேண்டுவார் வேண்டியதை வெறாது உதவும் வேற்பரமன் அந்த விண்ணப்பத்தை நிறைவேற்றி வைத்தார். அங்ஙனம் நிறைவேற்றி விட்டார் என்பதை நாம் எப்படி அறிய முடியும்? நிறைவேறப் பெற்ற அருணகிரிநாதரே கந்தரலங்காரத்தில் விளக்கமாக நன்றி பாராட்டும் முறையில் கூறுகின்றார்.

"இடுதலைச் சற்றும் கருதேனை, போதம் இலேனை, அன்பால் 
கெடுதல் இலாத் தொண்டரில் கூட்டியவா! கிரௌஞ்ச வெற்பை
அடுதலைச் சாத்தித்த வேலோன். பிறவி அற, இச் சிறை
விடுதலைப்பட்டது, விட்டது பாச வினை விலங்கே".

     இறைவனுடைய திருத்தொண்டர்கட்கு மிகுந்த நேசத்துடன் தொண்டு புரிவதே முத்தி பெறுவதற்கு எளிய வழியாகும். தொண்டர்க்குத் தொண்டு புரிவோர் எல்லா நலன்களையும் எளிதிற் பெறுவர்.

     இறைவனுக்குத் தொண்டு புரிவது ஒரு மடங்கு பயனும் தொண்டர்க்குத் தொண்டு செய்வது இருமடங்கு பயனும் விளைவிக்கும். ஏனெனில், தொண்டர் உள்ளத்தில் இறைவன் உறைகின்றான். ஆதலின் இருமடங்காகின்றது. மானக்கஞ்சாற நாயனாரைப் பற்றிக் கூறவந்த சேக்கிழார் பெருமான், அவருடைய அடியாரின் அடித்தொண்டினைக் கூறும் திறம் காண்க.

பணிவுடைய வடிவு உடையார் பணியினொடும் பனிமதியின்
அணிவு உடைய சடைமுடியார்க்க் ஆளாகும் பதம்பெற்ற
தணிவுஇல் பெரும் பேறு உடையார் தம்பெருமான் கழல்சார்ந்த
துணிவு உடைய தொண்டர்க்கே ஏவல்செயும் தொழில் பூண்டார்.  --- பெரியபுராணம்.

கண்டுமொழி, கொம்பு கொங்கை, வஞ்சிஇடை, அம்பு நஞ்சு
     கண்கள், குழல் கொண்டல், என்று, ...... பலகாலும்
கண்டு உளம் வருந்தி நொந்து, மங்கையர் வசம் புரிந்து,
     கங்குல்பகல் என்று நின்று, ...... விதியாலே

பண்டைவினை கொண்டு உழன்று, வெந்து விழுகின்றல் கண்டு,
     பங்கய பதங்கள் தந்து, ...... புகழோதும்
பண்புடைய சிந்தை அன்பர் தங்களின் உடன் கலந்து
     பண்புபெற, அஞ்சல் அஞ்சல் ...... என வாராய்.    --- திருப்புகழ்.

கரைஅற உருகுதல் தருகயல் விழியினர்,
     கண்டுஆன செஞ்சொல் ...... மடமாதர்,
கலவியில் முழுகிய நெறியினில் அறிவு
     கலங்கா மயங்கும் ...... வினையேனும்,

உரையையும் அறிவையும் உயிரையும் அணர்வையும்
     உன்பாத கஞ்ச ...... மலர்மீதே,
உரவொடு புனைதர நினைதரும் அடியரொடு
     ஒன்றாக என்று ...... பெறுவேனோ?       ---  திருப்புகழ்.

சீறல் அசடன், வினை காரன், முறைமை இலி,
     தீமை புரி கபடி, ......        பவநோயே
தேடு பரிசி, கன நீதி நெறிமுறைமை
     சீர்மை சிறிதும் இலி, ......   எவரோடும்

கூறு மொழி அது பொய் ஆன கொடுமை உள
     கோளன், றிவிலி,  ......     உன்அடிபேணாக்
கூளன், னினும் எனை நீ உன் அடியரொடு
     கூடும் வகைமை அருள் ...... புரிவாயே.   ---  திருப்புகழ்.


வாதம், பித்தம், மிடாவயிறு, ஈளைகள்,
     சீதம், பற்சனி, சூலை, மகோதரம்,
     மாசு அம் கண், பெரு மூல வியாதிகள், .....குளிர்காசம்,
மாறும் கக்கலொடே, சில நோய், பிணி-
     யோடும், தத்துவ காரர் தொணூறு அறு-
     வாரும் சுற்றினில் வாழ் சதிகாரர்கள், ......வெகுமோகர்,

சூழ் துன் சித்ர கபாயை, மு ஆசைகொடு
     ஏதும் சற்று உணராமலெ மாயைசெய்,
     சோரம் பொய்க் குடிலே சுகமாம் என, ......இதின்மேவித்
தூசின் பொன் சரமோடு குலாய், உலகு
     ஏழும் பிற்பட ஓடிடு மூடனை,
     தூ அம் சுத்த அடியார் அடி சேர,நின் ......அருள்தாராய்.   ---  திருப்புகழ்.

கறுத்த தலை வெளிறு மிகுந்து,
     மதர்த்த இணை விழிகள் குழிந்து,
     கதுப்பில் உறு தசைகள் வறண்டு, ......செவிதோலாய்,
கழுத்து அடியும் அடைய வளைந்து,
     கனத்த நெடு முதுகு குனிந்து,
     கதுப்பு உறு பல் அடைய விழுந்து, ...... உதடுநீர்சோர்,

உறக்கம் வரும் அளவில், எலும்பு
     குலுக்கி விடும் இருமல் தொடங்கி,
     உரத்த கன குரலும் நெரிந்து, ......     தடி கால் ஆய்,
உரத்த நடை தளரும் உடம்பு
     பழுத்திடும் முன், மிகவும் விரும்பி
     உனக்கு அடிமை படும்அவர் தொண்டு ...... புரிவேனோ?   --- திருப்புகழ்.

கொட்டை நகரப் பெருமாளே ---

     திருக் கொட்டையூர் என்பது சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

         கும்பகோணம் - திருவையாறு சாலையில் கும்பகோணத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர் இருக்கிறது.

     கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் நகரப் பேருந்து கொட்டையூர் வழியாகச் செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.

இறைவர்     : கோடீசுவரர்.
இறைவியார் : கந்துக கிரீடாம்பாள், பந்தாடுநாயகி.
தல மரம் : கொட்டை (ஆமணக்கு)ச் செடி.
தீர்த்தம்      : அமுததீர்த்தம்.

     அப்பர் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்ற திருத்தலம்.

         ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் சுயம்பு மூர்த்தியாக இலிங்கம் வெளிப்பட்டதால் ஊர் "கொட்டையூர்" என்று பெயர் பெற்றது. சோழ மன்னனுக்கும் ஏரண்ட முனிவருக்கும் கோடிலிங்கமாகக் காட்சி தந்தமையால் "கோடீசுவரர்" என்று சுவாமிக்கும் "கோடீச்சரம்" என்று கோயிலுக்கும் பெயர் வந்தது. ஏரண்டம் என்றால் ஆமணக்குச் செடியைக் குறிக்கும். அதன் கீழிருந்து தவம் செய்தமையால் அம்முனிவர் ஏரண்டமுனிவர் என்று பெயர் பெற்றார். இத்தலத்திற்கு வில்வாரண்யம், ஏரண்டபுரம் என்றும் வேறு பெயர்கள் உண்டு. ஊர் மக்களிடம் கோடீசுவரர் கோயில் என்று பெயர் சொல்லிக் கேட்டால் மக்கள் எளிதில் கோயிலைக் காட்டுகிறார்கள். இத்தலத்தில் மார்க்கண்டேயர் இறைவனை வழிபட்டுள்ளார். பத்திரயோகி முனிவருக்கு இறைவன் கோடிவிநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் திருவுருவாகக் காட்சி தந்ததால் இறைவன் கோடீசுவரர் எனப்பட்டார்.

         இத் தலத்தில் புண்ணியம் செய்தாலும் பாவம் செய்தாலும் கோடி மடங்காகப் பெருகும் என்பது நம்பிக்கை. இங்குப் பாவஞ் செய்தால் கோடி மடங்காகப் பெருகுவதால் அதற்குக் கழுவாயே இல்லாமல் போகும் என்பதை "கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே" என்னும் பழமொழியால் அறியலாம்.


         திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஐந்து மூர்த்திகளையும் காண்போர் வேறு தலங்களில் கோடித் திருவுருவம் கண்ட பயனைடவர். இங்குச் செய்த எப்புண்ணியமும் பிற தலங்களிற் செய்த புண்ணியங்களினும் கோடி மடங்கு பயன் தருமென்று தல புராணம் கூறுகிறது.

         இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் ஒரு திருப்புகழில் பாடியுள்ளார். உட்பிரகாரத்திலுள்ள முருகப் பெருமான கோடி சுப்பிரமணயர் என்ற பெயருடன் உள்ளார். இவர் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கோவிலின் நுழைவாயிலில் தண்டாயுதபாணி சந்நிதி உள்ளது.

         அம்பாள் பந்தாடு நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் முன்னேற இந்த அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இங்குள்ள அமுதக்கிணறு தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையும் கிடைப்பதாகவும் மேலும் கல்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றை இந்த தீர்த்தம் தருவதாக நம்பிக்கை.

         காவிரி நதி திருவலஞ்சுழியில் வலம் சுழித்துச் செல்கிறது. அவ்வாறு வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கி விட்டது. அது கண்ட சோழமன்னன் கவலையுற்றுத் திகைத்தபோது, அசரீரியாக இறைவன், "மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் பலியிட்டுக் கொண்டால் அப்பிலத்துவாரம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்" என்றருளினார். அதுகேட்ட மன்னன் கொட்டையூர் என்ற இந்த ஊரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ள இடத்தில் தவம் செய்த ஏரண்ட முனிவரை அடைந்து அசரீரி செய்தியைச் சொன்னான். இதைக் கேட்ட ஏரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளி வருகிறாள். இந்த ஏரண்ட முனிவருக்கு கோடீசுவரர் கோவிலில் தனி சந்நிதி உள்ளது.

கருத்துரை

முருகா! அடியரில் கூட்டி அருள்வாய்.

நமது உடம்பில் உள்ள தச வாயுக்கள்

  நமது உடம்பில் உள்ள பத்து வாயுக்கள் ----        "காயமே இது பொய்யடா - வெறும் காற்றடைத்த பையடா - மாயானாராம் குயவ...