புல்லறிவாளர்க்குச் செய்த உபகாரம் தீமையைத் தரும்






                       நன்றி அறிவு இல்லாதவர்க்கு உபகாரம் செய்யாதே.
-----

     பிறருக்கு உதவுவது என்பது மிக உயர்ந்த பண்பு. பிறருக்கு உதவுபவர்களை உலகம் போற்றும்.

     அன்பின் அடிப்படையாகத் தோன்றும் கருணை இருந்தால், பிறர்க்கு உதவத் தோன்றும். அறிவு எங்கே இருக்கிறதோ அங்கே கருணை இருக்கும். அறிவின் பயன், அன்பு, கருணை, இரக்கம்.

"அறிவினால் ஆகுவது உண்டோ? பிறிதின்நோய்
தன் நோய்போல் போற்றாக் கடை".

என்பது திருக்குறள்.

     "பிறருக்கு வரும் துன்பத்தைத் தனது துன்பமாக ஒருவன் எண்ணவில்லையானால், அவனுக்கு உள்ள அறிவினால் என்ன பயன் விளையும்" என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

     எனவே இரக்கம் என்பது அறிவு உள்ளவர்களுக்கு வரும். அறிவில்லா முரடர்களிடம் இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது. அதே சமயம் எல்லா இடத்திலேயும் இரக்கம் காட்டுவதும் அறிவுடைமையாகாது.

       Misplaced sympathy is harmful.  "அவரவருடைய பண்புகளை அறிந்து உதவி செய்ய வேண்டும். பண்பில்லாதோருக்கு உதவி செய்வது தவறாகவே முடியும்" என்கின்றது பின்வரும் திருக்குறள்,

"நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு, அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாகை கடை"

இது குறித்து சிந்திப்பொம்....

     விடத்தை நீக்குவதில் சிறந்த மருத்தவர் ஒருவர், ஒருநாள் காட்டு வழியே மூலிகைகளைத் தேடிப் போய்க்கொண்டு இருந்தார். ஒரு புலி குற்றுயிராக விழுந்து கிடந்ததைப் பார்த்தார். சிறிது தூரத்தில் நாகப்பாம்பு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.  நாகப்பாம்பு அந்தப் புலியைக் கடித்துவிட்டு ஓடிக் கொண்டிருந்தது என்றும் அதனால் அந்தப் புலி விஷம் ஏறி விழுந்து கிடக்கிறது என்றும் புரிந்து கொண்டார்.

     புலியின் நிலைமையைப் பார்த்து இரக்கப்பட்ட மருத்துவர்,  புலி நலம் பெற்று எழுந்தால் என்ன ஆகும் என்பதைச் சற்றும் சிந்திக்காமல், புலிக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கினார்.  புலி பிழைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை வந்தவுடன், மருத்துவர், மூலிகைகளைத் தேடத் தொடங்கினார். சிறிது நேரத்தில் நலம் பெற்று எழுந்த புலிக்கு அடங்காப் பசி ஏற்பட்டது. புலியின் பார்வையில் மூலிகையைத் தேடிக் கொண்டிருந்த மருத்துவர் பட்டார். கொடிய மிருக சாதியான புலிக்கு நன்றி உணர்வு இருக்க வாய்ப்பு சிறிதும் இல்லை. மருத்துவர் மீது பாய்ந்து கடித்தது. விடத்தைத் தீர்த்து வைத்த வைத்தியர் தீர்ந்து போய், புலிக்கு ஆகாரம் ஆனார்.

     கருணை காட்டி உதவ வேண்டியது தான். அறிவில்லாத தீயவர்களுக்கு இரக்கம் காட்டி உதவினால் தீமைதான் பலனாகக் கிடைக்கும். அறிவில்லாத தீயவர்களுக்கு இரக்கம் காட்டி உதவுவது, உதவியவருக்கே தீமையாக முடியும் என்பது நடைமுறை உண்மை.  தீயவர்களிடம் இருப்பது தீமைக் குணம் தான். அதைத் தான் அவர்கள் கைம்மாறாகத் தருவர்.

     அற்புதமான வேலைப்பாடமைந்த மண்கலத்தில் பொருட்களைக் கொண்டு போய் கல்லின் மேல் வேகமாக வைத்தால் என்ன ஆகும்?  கல்லின் இயல்பு கடினமானது.  எனவே மண்கலம் சுக்குநூறாக உடைந்து போகும். அது போல, அறிவில்லாத தீயவர்களுக்கு உதவி செய்வது மண்கலத்தைக் கல்லின் மேல் போட்டு உடைப்பதற்குச் சமம்.

     இந்த இரண்டு உண்மைகளை வைத்து, ஔவையார் பாடிய "மூதுரை" என்னும் நூலில் வரும் பாடல் உணர்த்துகின்றது.

பாடலைப் பார்ப்போம்....

"வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனாற்போல், ---பாங்குஅறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்".  

இதன் பொருள் ---

     வேங்கை வரிப் புலி நோய் தீர்த்த விடகாரி --- வரிகளையுடைய வேங்கைப் புலியின் விடநோயைப் போக்கிய விட வைத்தியன், ஆங்கு --- அப்பொழுதே, அதனுக்கு ஆகாரம் ஆனால்போல் --- அப் புலிக்கு, - இரையானால் போல, பாங்கு அறியா --- நன்றியறிவு இல்லாத, புல் அறிவாளர்க்கு --- அற்ப அறிவினருக்கு, செய்த உபகாரம் --- செய்யப்பட்ட உதவி, கல்லின் மேல் இட்ட கலம் --- கல்லின்மேலே போடப்பட்ட மண்கலம்போல (அழிந்து, செய்தவனுக்கே துன்பத்தை விளைக்கும்.)

     தீயோர்க்கு உதவி செய்தால் துன்பமே உண்டாகும் என்பது கருத்து.

      விஷகாரி என்னும் வடமொழி விடகாரி என்றாயிற்று. அதற்கு விடத்தை அழிப்பவன் என்பது பொருள். கல்லின் மேலிட்டகலம் என்பதற்குக் கல்லின்மேலே தாக்கிய மரக்கலம்.
                      

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...