எல்லாம் நம்மால் தான்





                                            எல்லாம் நம்மால் தான்
                                                     -----


"தீதும் நன்றும் பிறர் தர வாரா,
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன"

இவை புறநானூற்றுப் பாடல் ஒன்றில் வரும் வரிகள்.

     கெடுதலோ, நன்மையோ நமக்குப் பிறரால் உண்டாகாது. நமக்கு உண்டாகும் வருத்தமும், அது தணிந்த மகிழ்வும் அதுபோலத் தான். பிறரால் உண்டாவதில்லை என்று இந்தப் பாடல் வரிகள் நமக்கு அறிவுறுத்துகின்றன.

"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்"

என்று திருவள்ளுவ நாயனார் இதனை மேலும் தெளிவாக்குகின்றார்.

     பொற்கொல்லன் ஒருவன் தன்னிடத்தே கிடைத்த பொன்னின் தகுதியை உரைகல் ஒன்றினைக் கொண்டு பார்ப்பதுபோல், மக்களது பெருமையையும், சிறுமையையும் அறிவதற்கு உரைகல்லாக இருப்பது அவர் செய்யும் செயல்களே ஆகும். ஆகவே, ஒருவன் குற்றம் உடையவன், குணம் உடையவன் என்று ஆராய்வதற்கு அவனுடைய செயலே கருவியாக உள்ளது.

இதனையே "அறநெறிச்சாரம்" என்னும் நூலில் கூறியுள்ளது காண்க.

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
தானே தனக்குக் கரி.            

இதன் பொருள் ---

     தனக்குத் துன்பம் செய்யும் பகைவனும், இன்பம் செய்யும் நண்பனும் தானே ஆவான்.  பிறர் அல்ல. தனக்கு மறுபிறவியில் உண்டாகக் கூடிய இன்பத்தையும், இந்தப் பிறவியில் அனுபவிக்கும் இன்பத்தையும் செய்து கொள்பவனும் அவனேதான். தான் செய்த வினைகளின் பயனாக, இன்ப துன்பங்களைத் தானே அனுபவிக்கின்றான். எனவே,  தான் செய்த வினைகளுக்குச் சான்றாக உள்ளவனும் அவனே தான்.

     இது, "நறுந்தொகை" என்னும் நூலில் பின்வருமாறு காட்டப்பட்டது.

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.
பெருமையும் சிறுமையும் தான்தர வருமே.

உருவத்தால் பெரியவர், வயதில் பெரியவர், செல்வத்தால் பெரியவர், பட்டத்தால் பெரியவர், பதவியால் பெரியவர் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் பெருமைக்கு உரியவர் ஆகமாட்டார்.

அவ்வாறே, உருவத்தால் சிறியவர், வயதில் சிறியவர், செல்வத்தால் சிறியவர், பட்டத்தால் சிறியவர், பதவியால் சிறியவர் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் சிறுமைக்கு உரியவர் ஆகமாட்டார்.

ஒருவருக்கு உண்டாகும் மேன்மையும், சிறுமையும், அவரவர் செய்யும் செயல்களால் உண்டாகும்.

அறிவினாலும், பிறர்க்கு உதவி செய்தல் முதலியவற்றாலும் பெரியவரே, பெரியவர். அவரே பெருமை உடையவர்.

இதையே நாலடியார் கூறுமாறு காணலாம்...


நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழ் இடுவானும், நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.


எல்லோரும் போற்றும்படியாக சிறந்த நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்பவனும், தனது முன் நிலையையும் குலையச் செய்து, தன்னைக் கீழ்நிலையில் தாழ்த்திக் கொள்பவனும், தான் முன் இருந்த சிறந்த நிலையில் இருந்து, மேன்மேலும் உயர்ந்த நிலையில் தன்னை மேம்படுத்தி நிலைசெய்து கொள்பவனும், தன்னை அனைவரினும் தலைமை உடையவனாகச் செய்து கொள்பவனும் தானே ஆவான்.

இதுவரை உலகியல் நிலை காட்டப்பட்டது. இனி, அருளியல் நிலையும் அவ்வாறே என்பதைக் காட்டுவோம்...

"தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே".

என்கின்றார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார்.

தனக்கு துன்பம் செய்யும் பகைவனும் இன்பம் செய்யும் நட்பு உடையவனும் தானே ஆவான்.  பிறர் காரணம் அல்ல. தனக்கு மறுமை இன்பத்தையும் இம்மை இன்பத்தையும் செய்துகொள்பவனும் தானே ஆவான். தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத் தானே அனுபவிப்பவனும் அவனே. அதனால், தனக்குத் தானே தலைவனாக இருந்து தன்னை நல்ல நெறியில் செலுத்திக் கொள்பவனும்,  தீய நெறியில் செலுத்திக் கொள்பவனும் அவனே தான். உயிர்களின் பக்குவத்தைப் பொறுத்தே நன்மையும் தீமையும் அமையும்.

மேற்குறித்த அறநெறிகளை எல்லாம் வலியுறுத்தி, பொய்யான உலக வாழ்வை விடுத்து, மெய்ந்நெறியில் நின்று, இறைவன் திருவடியைச் சாருகின்ற வழியில், இனியாவது நில்லுங்கள் என்று நம்மை மேலும் நன்னெறிப் படுத்துகின்றார் மணிவாசகப் பெருமான்.

திருவாசகத்தில், "யாத்திரைப் பத்து" என்னும் பகுதியில் வரும் பின்வரும் பாடலைத் தெளிந்து கொள்ளலாம்...

"தாமே தமக்குச் சுற்றமும்,
         தாமே தமக்கு விதிவகையும்,
யாம் ஆர்? எமது ஆர்? பாசம் ஆர்?
         என்ன மாயம்? இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
         அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமாறு அமைமின் பொய்நீக்கி,
         புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.

இதன் பொருள் ---

     தமக்குச் சுற்றமும் தாமே --- ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரே, தமக்கு விதி வகையும் தாமே --- நடைமுறைகளை வகுத்துக் கொள்பவரும் அவரே; ஆதலால், அடியவர்களே, நீங்கள், யாம் ஆர் --- நாம் யார், எமது ஆர் --- எம்முடையது என்பது எது, பாசம் ஆர் --- பாசம் என்பது எது, என்ன மாயம் --- இவையெல்லாம் என்ன மயக்கங்கள்? என்று உணர்ந்து, இவை போக --- இவை நம்மை விட்டு நீங்க, கோமான் பண்டைத் தொண்டரொடும் --- இறைவனுடைய பழைய அடியார்களோடும் கூடி, அவன் தன் குறிப்பே --- இறைவனது திருவுளக் குறிப்பையே, குறிக்கொண்டு --- உறுதியாகப் பற்றிக்கொண்டு, பொய் நீக்கி --- பொய் வாழ்வை விட்டு, புயங்கன் --- பாம்பினை அணிந்தவனும், ஆள்வான் --- எம்மை ஆள்வோனுமாகிய பெருமானது, பொன் அடிக்கு --- பொன் போல ஒளிரும் திருவடிக்கீழ், போம் ஆறு அமைமின் --- போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.

இறைவன் திருக்குறிப்பாவது, ஆன்மாக்கள் எல்லாம் வீடுபேறு எய்த வேண்டும் என்பது, இதனை உணர்ந்து அவனது திருவடியைப் பற்றிக்கொள்ள வேண்டும்.

ஆக, புறநானூறு, திருக்குறள், அறநெறிச்சாரம், நறுந்தொகை, நாலடியார் ஆகிய நூல்கள் கூறுவது உலகியல் நிலை.  

திருமந்திரம், திருவாசகம் கூறுவது உலகியல் நிலையில் இருந்து உயரவேண்டிய அருள்நிலை.

நல்லதையே நினைப்போம், நல்லதையே சொல்வோம், நல்லைதையே செய்வோம்.

உலகியல் நிலையில் உயர்ந்து வாழ்ந்து, இறைவன் திருவடிக்குப் பாத்திரம் ஆவோம்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...