கும்பகோணம் --- 0878. மாலைதனில் வந்து





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மாலைதனில் வந்து (கும்பகோணம்)

முருகா!
உனது திருநாமத்தையே எப்போதும் உச்சரிக்க அருள்வாய்.


தானதன தந்த தானதன தந்த
     தானதன தந்த ...... தனதான


மாலைதனில் வந்து வீதிதனில் நின்று
     வாசமலர் சிந்து ...... குழல்கோதி

வாரிருத னங்கள் பூணொடுகு லுங்க
     மால்பெருகி நின்ற ...... மடவாரைச்

சாலைவழி வந்து போமவர்க ணின்று
     தாழ்குழல்கள் கண்டு ...... தடுமாறித்

தாகமயல் கொண்டு மாலிருள ழுந்தி
     சாலமிக நொந்து ...... தவியாமற்

காலையிலெ ழுந்து னாமமெமொ ழுந்தி
     காதலுமை மைந்த ...... எனவோதிக்

காலமுமு ணர்ந்து ஞானவெளி கண்கள்
     காண அரு ளென்று ...... பெறுவேனோ

கோலமுட னன்று சூர்படையின் முன்பு
     கோபமுட னின்ற ...... குமரேசா

கோதையிரு பங்கின் மேவவளர் கும்ப
     கோணநகர் வந்த ...... பெருமாளே.



பதம் பிரித்தல்


மாலைதனில் வந்து, வீதிதனில் நின்று,
     வாசமலர் சிந்து ...... குழல்கோதி,

வார்இரு தனங்கள் பூணொடு குலுங்க,
     மால்பெருகி நின்ற ...... மடவாரை,

சாலைவழி வந்து போம்அவர்கள் நின்று,
     தாழ்குழல்கள் கண்டு, ...... தடுமாறி,

தாகமயல் கொண்டு, மால் இருள் அழுந்தி,
     சாலமிக நொந்து ...... தவியாமல்,

காலையில் எழுந்து, உன் நாமமெ மொழிந்து,
     காதல்உமை மைந்த ...... என ஓதி,

காலமும் உணர்ந்து, ஞானவெளி கண்கள்
     காண அருள் என்று ...... பெறுவேனோ?

கோலம்உடன் அன்று சூர்படையின் முன்பு
     கோபமுடன் நின்ற ...... குமரேசா!

கோதை இரு பங்கின் மேவ வளர், கும்ப-
     கோண நகர் வந்த ...... பெருமாளே.


பதவுரை

      கோலம் உடன் --- போர்க் கோலத்துடன்,

     அன்று --- அந்நாளில்,

     சூர் படையின் முன்பு கோபமுடன் நின்ற குமர --- சூரர்கள் சேனைகளின் முன்பு கோபமுடன் நின்ற குமாரக் கடவுளே!

     ஈசா --- எப்பொருட்கும் தலைவரே!

      கோதை இரு பங்கின் மேவ வளர் கும்பகோண நகர் வந்த பெருமாளே --- வள்ளிபிராட்டியார், தேவயானையம்மையார் என்னும் தேவியர் இருவரும் இருபுறமும் விளங்க, அருள் வளர்கின்ற கும்பகோணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      மாலைதனில் வந்து --- மாலைக் காலத்தில் வீட்டினில் இருந்து வந்து,

     வீதி தனில் நின்று --- தெருவில் வந்து நின்று,

     வாசமலர் சிந்து குழல் கோதி --- நறுமண மலர்களைச் சூடிய கூந்தலை விரித்துக் கோதி,

      வார் இரு தனங்கள் பூணொடு குலுங்க --- கச்சுப் பொருந்திய மார்பகங்கள் அணிகலன்களுடன் குலுங்,

     மால் பெருகி நின்ற மடவாரை --- காம உணர்வு பெருகி நின்ற விலைமாதர்களை,

      சாலைவழி வந்து போம் அவர்கள் --- தெருவின் வழியே வந்து போகின்ற ஆடவர்கள்,

     நின்று --- விலைமாதரைப் பார்த்தவுடன் நின்று,

     தாழ் குழல்கள் கண்டு தடுமாறி --- தாழ்ந்துள்ள கூந்தலின் அழகைக் கண்டு அடைகின்ற தடுமாற்றத்தை அடைந்து,

     தாகமயல் கொண்டு --- காமவிடாயால் மயக்கம் கொள்வது போன்ற,

     மால்இருள் அழுந்தி --- ஆசையாகிய இருளில் அடியனும் மூழ்கி,

     சாலமிக நொந்து தவியாமல் --- மனம் மிகவும் நொந்து தவிக்காமல்,

      காலையில் எழுந்து --- அதிகாலை நேரத்தில் துயில் எழுந்து,

     உன் நாமமெ மொழிந்து --- தேவரீரது திருநாமங்களைக் கூறி,

     காதல் உமை மைந்த என ஓதி --- உமாதேவியின் அன்புப் புதல்வரே என்று ஓதி வழிபட்டு,

      காலமும் உணர்ந்து --- காலத்தைக் கடந்த நிலையையும் உணர்ந்து,

     ஞானவெளி கண்கள் காண --- அஞ்ஞான இருள் நீங்கி, அருள் ஒளியைக் காண

     அருள் என்று பெறுவேனோ --- உமது திருவருளை அடியேன் என்று பெறுவேனோ?


பொழிப்புரை


         போர்க் கோலத்துடன் அந்நாளில் சூரர்களுடைய சேனைகளின் முன்பு கோபமுடன் நின்ற குமாரக் கடவுளே!

     எப்பொருட்கும் தலைவரே!

     வள்ளிபிராட்டியார், தேவயானையம்மையார் என்னும் தேவியர் இருவரும் இரு புறமும் விளங்க, அருள் வளரும் கும்பகோணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

     மாலைப் பொழுதில் வந்து வீதியில் நின்று நறுமணமுள்ள மலர்களைச் சூடிய கூந்தலை விரித்துகி கோதி, கச்சுப் பொருந்திய இரண்டு மார்பகங்களும் அதன் மேல் உள்ள அணிகலன்களுடன் குலுங்க, காம உணர்வு பெருகி நின்ற விலைமாதர்களை, தெருவின் வழியே வந்து போகின்ற ஆடவர்கள், விலைமாதரைப் பார்த்தவுடன் நின்று, தாழ்ந்துள்ள கூந்தலின் அழகைக் கண்டு அடைகின்ற தடுமாற்றத்தை அடைந்து, காம மயக்கம் கொண்டு, ஆசையாகிய இருளில் அடியனும் மூழ்கி, மனம் மிகவும் நொந்து தவிக்காமல், அதிகாலை நேரத்தில் துயில் எழுந்து, தேவரீரது திருநாமங்களைக் கூறி, உமாதேவியின் அன்புப் புதல்வரே என்று ஓதி வழிபட்டு, காலத்தைக் கடந்த நிலையையும் உணர்ந்து, அஞ்ஞான இருள் நீங்கி, அருள் ஒளியைக் காண, உமது திருவருளை அடியேன் என்று பெறுவேனோ?
  
விரிவுரை


காலையில் எழுந்து, உன் நாமமெ மொழிந்து, காதல்உமை மைந்த என ஓதி ---

இறைவழிபாட்டுக்கு மிகவும் உகந்த நேரம் அதிகாலைப் பொழுது ஆகும்.

திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை, திருவெம்பாவை ஆகிய அருள்மொழிகள் இதனை எடுத்து ஒதுகின்றன.

கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும்
சீலம்அறிவு அரிதாய் ஒளி திகழ்வாயநெய்த் தானம்
காலம்பெற மலர்நீர்அவை தூவித்தொழுது ஏத்தும்
ஞாலம்புகழ் அடியார்உடல் உறுநோய்நலி யாவே.   --- திருஞானசம்பந்தர்.

காலம் பெற --- விடியல்காலையில். இதுவே, மக்கள் வழக்கில், "காலம்பற" என்று வந்திருக்கலாம்.

விரும்பு மதிக்கண்ணி யானை
         மெல்இய லாளொடும் பாடிப்
பெரும்புலர் காலை எழுந்து
         பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி உந்தும்
         ஐயா றுஅடைகின்ற போது
கருங்கலை பேடையொடு ஆடிக்
         கலந்து வருவன கண்டேன்.
கண்டேன் அவர்திருப் பாதம், கண்டுஅறி யாதன கண்டேன்.    --- அப்பர்.

பெரும்புலர் காலை மூழ்கிப்
         பித்தர்க்குப் பத்தர் ஆகி
அரும்பொடு மலர்கள் கொண்டுஆங்கு
         ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம்
         விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார்
         கடவூர்வீ ரட்ட னாரே.                        --- அப்பர்.

மேலை விதியே விதியின் பயனே
         விரவார் புரமூன்று எரிசெய்தாய்
காலை எழுந்து தொழுவார் தங்கள்
         கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
         மறவேன் அடியேன் வயல்சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
         ஆலக் கோயில் அம்மானே.                   --- சுந்தரர்.

முருகப் பெருமானுடைய திருநாமங்கள் பல. அவை எல்லாவற்றையும் ஓத இயலாது என்றாலும், "முருகன், குமரன், குகன்" என்றேனும் மொழியலாம்.

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்,
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குரு புங்கவ, எண்குண பஞ்சரனே.    ---- கந்தர் அநுபூதி.

ஓதுதற்கு உரியவை இறைவனுடைய அருட்பாடல்கள் ஆகிய, பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் முதலானவையே.

சரவண பவநிதி அறுமுக குருபர
     சரவண பவநிதி அறுமுக குருபர
     சரவண பவநிதி அறுமுக குருபர ...... என ஓதித்
தமிழினில் உருகிய அடியவர் இடம்உறு
     சனன மரணம் அதை ஒழிவுற, சிவம்உற,
     தருபிணி துளவரம் எமதுஉயிர் சுகம்உற ...... அருள்வாயே... --- திருப்புகழ்.

இரவினிடை துயிலுகினும் யாரோடு பேசுகினும்
     இளமையும் உன்அழகுபுனை ஈராறு தோள்நிரையும்
     இருபதமும் அறுமுகமும் யான்ஓத ஞானமதை ...... அருள்வாயே.
                                                         --- கரியகுழல் (திருப்புகழ்.)


கோதை இரு பங்கின் மேவ வளர் கும்பகோண நகர் வந்த பெருமாளே ---

வள்ளிபிராட்டியார், தேவயானையம்மையார் என்னும் தேவியர் இருவரும் இருபுறமும் விளங்க, அருள் வளர்கின்ற கும்பகோணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றார் முருகப் பெருமான்.

லக்கியத்தில் "குடமூக்கு" என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள "கும்பகோணம்" என்ற பெயரே உள்ளது. சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

மயிலாடுதுறை - தஞ்சைக்கு இடையிலுள்ள பெரிய தலம். சென்னை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், சிதம்பரம் முதலிய பல இடங்களிலிருந்து நிரம்ப பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலம், சென்னை - திருச்சி மெயின் லைனில் உள்ள இருப்புப் பாதை நிலையம்.

இறைவர் --- கும்பேசுவரர், அமுதேசுவரர், குழகர்.
இறைவியார் --- மங்களாம்பிகை.
தல மரம் --- வன்னி.

திருஞானசம்பந்தப்பெருமானும், அப்பர் பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்றது.

பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது.

குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தம், அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால் "அமுதசரோருகம்" என்றும் அழைக்கப்படுகிறது. மகாமக உற்சவநாளில் கங்கை முதலிய ஒன்பது புண்ணிய நதிகளும் (கங்கை, சரயு, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி) - நவகன்னியர்களாக, மக்கள் தங்களுக்குள் மூழ்கி தொலைத்த பாவங்களை போக்க, இங்கு வந்து மகாமக குளத்தில் நீராடியதால் இத்தீர்த்தம் "கன்னியர் தீர்த்தம் " என்னும் பெயரையும் பெற்றது.

தலவரலாற்றின் படி - 1. அமுதகும்பம் வைத்திருந்த இடம் - கும்பேசம், 2. அமுதகும்பம் வைத்திருந்த உறி சிவலிங்கமான இடம் - சோமேசம், 3. அமுதகும்பத்தில் சார்த்தியிருந்த வில்வம் இடம் - நாகேசம், 4. அமுதகும்பத்தில் வைத்திருந்த தேங்காய் இடம் - அபிமுகேசம், 5. பெருமான் அமுதகுடத்தை வில்லால் சிதைத்த இடம் - பாணபுரேசம் (பாணாதுறை), 6. கும்பம் சிதறியபோது அதன்மீதிருந்த பூணூல் சிதறிய இடம் - கௌதமீசம் என வழங்கப்படுகின்றன.

"கோயில் பெருத்தது கும்பகோணம்" என்னும் முதுமொழிக்கேற்ப எண்ணற்ற கோயில்களைக் கொண்டது இத்தலம்.

உலகப் புகழ் பெற்ற மகாமக உற்சவம் நடைபெறும் தலமும் மகாமகதீர்த்தம் உள்ளதும் இத்தலமே. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் இவ்வுற்சவத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் வந்து மகாமகக் குளத்தில் நீராடுவர். இக்குளம் பதினைந்து ஏக்கர் பரப்பளவில், நான்கு கரைகளிலும் 16 சந்நிதிகளையுடையதாய், நடுவில் 9 கிணறுகளைக் கொண்டு விளங்குகிறது.

இத்தலத்தில் பதினான்கு கோயில்களும், பதினான்கு தீர்த்தங்களும் உள்ளன.

கும்பகோணத்தில் குடமூக்கு --- கும்பேசுவரர் கோயில்; குடந்தைகீழ்க் கோட்டம் --- நாகேசுவர சுவாமி கோயில்; குடந்தைக் காரோணம் --- சோமேசர் கோயில்.
   
மூர்க்க நாயனார் தொண்டு செய்து வாழ்ந்த பதி; ஏமரிஷி பூசித்த பதி.

மூர்க்க நாயனார் வரலாறு

தொண்டைவள நாட்டின் பாலியாற்றின் வடக்கில் உள்ளது திருவேற்காடு என்னும் திருத்தலம். அதில் சிவனடிமைத் திறத்தில் சிறந்து, வழிவழி வந்த வேளாண் மரபில் அவதரித்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அடியார்க்கு அமுது முன் ஊட்டி மகிழ்ந்து, பின் தாம் அமுது செய்யும் நியதியினை இடைவிடாமல் கடைப்பிடித்து வந்தார்.

இவ்வாறு ஒழுகும் நாளில் அடியவர்கள் நாளும் நாளும் மிகவும் பெருகி வந்தமையாலே தமது உடமை முழுவதும் மாள விற்றும் அப்பணி செய்தனர். மேலும் செய்து வருவதற்கு அவ்வூரில் ஒருவழியும் இல்லாமையால், தாம் முன்பு கற்ற நல்ல சூதாட்டத்தினால் பொருளாக்க முயன்றனர். தம் ஊரில் தம்முடன் சூது பொருவார் இல்லாமையால் அங்கு நின்று வேற்றூர்க்குப் போவாராயினர்.

பல பதிகளிலும் சென்று சிவனை உள்ளுருகிப் பணிந்து, அங்கங்கும் சூதாடுதலினால் வந்த பொருளைக் கொண்டு தமது நியமமாகிய அடியார் பணியினைச் செய்து வந்தார். கும்பகோணத்தைச் சேர்ந்து அங்கு தாம் வல்ல சூதினால் வந்த பொருளைத் தாம் தீண்டாது, நாள்தோறும் அடியார்க்கு அமுதூட்டி இருந்தனர். சூதினில் வல்ல இவர், முதற்சூது தாம் தோற்றுப் பிற்சூது பலமுறையும் தம் வென்று பெரும்பொருள் ஆக்கினார். சூதினால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்துதலினால் இவர் நற்சூதர் – மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்று உலகில் விளங்கினார்.

இவ்வாறு பணி செய்து அருளாலே குற்றங்கள் போய் அகல இவ்வுலகை விட்டதற்பின், இறைவரது சிவபுரம் அடைந்தார்.

கருத்துரை

முருகா! உனது திருநாமத்தையே எப்போதும் உச்சரிக்க அருள்வாய்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...