ஐந்தில் வளையாதது




"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்றபடி, இளமையில் நல்ல பழக்கங்களை உருவாக்கிக் கொண்டால், அது பிறவி உள்ள வரை தொடரும் என்பது மட்டும் அல்லாமல், பிறவிகள் தோறும் வரும்.

பெருத்த செல்வம் உடையவராய்ப் பிறந்தவர்கள், அழகு உடையவராய், நல்ல குடியில் பிறந்தவர்கள் யாரையும் "கருவிலே திரு உடையார்" என்று கூறுவதில்லை. நற்சிந்தனையும், நல்லொழுக்கமும், இறைச் சிந்தனையும் உடையவரையே அவ்வாறு கூறுவதையும் காணலாம்.

ஆனால், விளையாட்டுப் பருவம், எதையும் ஆய்ந்து அறியமுடியாத பருவம் ஆகிய இளவயதில், நல்லொழுக்கத்தில் நாட்டம் செல்வது மிகவும் அருமை. உடல் வளமை உள்ள இளவயதில், நல்லவற்றைப் பழகினால், அது முதுமையில் எளிதாகும்.

இந்தக் கருத்தில்தான், "ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா" என்ற வழக்குச் சொல் உருவாகி இருக்கவேண்டும் என்பதை, "நீதிவெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல் மூலம் அறியலாம்.

பாடலைக் காண்போம்....

வருந்தவளை வேய்,அரசர் மாமுடியின் மேல்ஆம்,
வருந்த வளையாத மூங்கில் - தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து
தாழும்அவர் தம்அடிக்கீழ்த் தான்.


இதன் பொருள் ---

         தன்னை மக்கள் வளைத்து வருத்தப்படுத்த வளைந்து கொடுத்த மூங்கில் கொம்பு, பெருமை வாய்ந்த அரசரின் தலைமுடியின்மேல் பல்லக்கு ஆகச் சிறப்புப் பெறும். வளையாத மூங்கில் கம்பானது, தாழ்வுபெற்று கழைக் கூத்தாடிகளின் கையில் அகப்பட்டு அவருடைய காலின்கீழ் கிடந்து உலகமெல்லாம் அலைந்து இழிவுபடும்.

         இதன் கருத்து, இளமையில் பெற்றோரும் ஆசிரியரும் வற்புறுத்திக் கல்வி கற்க வைக்க,   பெற்றோரும் ஆசிரியரும் காட்டிய வழியில் வருந்திக் கல்வியறிவைப் பெற்ற பிள்ளைகள், பிற்காலத்தில் பெரியோர் பலரும் பாராட்டும்படி சிறப்பைப் பெறுவார்கள். இளமையில் உடம்பை வருத்தி, கல்வியறிவைப் பெற எண்ணாமல் சோம்பி இருந்து ஊர் சுற்றிய பிள்ளைகள், பிழைக்க வழியில்லாமல், ஊர்தோறும் திரிந்து, கீழ்மக்களிடத்திலே அவர்களை இட்ட வேலைகளைச் செய்து சிறுமைப் பட்டுக் கிடப்பார்கள்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...