ஆமையும் மனிதனும்

 



ஆமையும் மனிதனும்

-----

உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. நோய் துன்பத்தையே விளைவிப்பது. ஆனால், பிறவி இடையிடையே இன்பத்தையும் விளைவிக்கிறதே! அப்படியிருக்க, அதனை நோய் என்று சொல்வது எப்படிப் பொருந்தும்? என்று கேட்கலாம். பிறவியில் இடையிடையே இன்பம் உள்ளது போலத் தோன்றினாலும் உண்மையில் விளைவது பெருந்துன்பமே ஆகும். "பிறவியால் வருவன கேடு" என்றார் திருஞானசம்பந்தர்.

இவ்வுண்மையை ஓர் அரிய உவமையால் ஒரு தேவாரப் பாடலின் மூலம் விளக்கி அருளினார் அப்பர் பெருமான். ஆமையைக் கொன்று உண்பவர் நெருப்பு மூட்டி அடுப்பில் உலை நீரை ஏற்றி அதில் ஆமையை இடுவர். நீர் சிறிது சிறிதாகச் சூடேறுகிறது. அந்த ஆமை தனக்கு வரப்போகும் அழிவை அறியாது தனக்கு நல்ல நீர் கிடைத்தது என்று எண்ணிக் களித்து அதில் மூழ்கித் திளைக்கிறது. அந்த இன்பம் அதற்குத் துன்பமாய் முடியப் போகிறது. உலகில் ஐம்புல நுகர்ச்சியால் வரும் இன்பம் இத்தகையதே ஆகும். எனவே, உலகில் சிறிது இன்பம் உளதாயினும் அது துன்பமாகவே முடிதல் கண்கூடு. இதனால் பிறவி துன்பத்தையே விளைவிக்கும் என்பதும், அது பற்றியே அது நோய் எனப்பட்டது என்பதும் தெளிவாகும். பின்வரும் திருநாவுக்கரசர் தேவாரத்தைக் காண்க...

"வளைத்து நின்று ஐவர் கள்வர் 

வந்து எனை நடுக்கம் செய்யத்

தளைத்து வைத்து உலையை ஏற்றித் 

தழல் எரி மடுத்த நீரில்

திளைத்து நின்று ஆடுகின்ற 

ஆமைபோல் தெளிவு இலாதேன்,

இளைத்து நின்று ஆடுகின்றேன், 

என்செய்வான் தோன்றி னேனே."

இதன் பொருள் ---

ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால், எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க, அந்நீரிலே பிணியை அவிழ்த்து நீந்தவிட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக்கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத்தெளிவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன். வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?

நாலடியாரில் 'பேதைமை' என்ற அதிகாரத்தில் ஒரு பாடல் வரும். 


"கொலைஞர் உலை ஏற்றித் தீ மடுப்ப, ஆமை

நிலை அறியாது அந் நீர் படிந்தாடியற்றே-

கொலைவல் கொடுங் கூற்றம் கோள் பார்ப்ப, ஈண்டை

வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு." --- நாலடியார்.


இதன் பொருள் ---

கொல்லுந் தொழிலில் வல்லமை ஊடையோனாகிய ஆற்றலிற் பெரிய கூற்றுவன், தம் உயிர்கொள்ளுதலை எதிர்நோக்கிக் கொண்டிருக்க, இவ் வுலகப் பற்றாகிய வலையில் கிடந்து அதன்கண் களித்து இருப்பாரது பேதைமை இயல்பு,  தன்னைக் கொல்லும் கொலைஞர் தன்னை உலையில் இட்டு அடுப்பில் ஏற்றித் தீக்கொளுவ, ஆமை நிலையறியாது அவ்வுலை நீரில் மூழ்கி விளையாடி மகிழ்ந்தாற் போன்றது.

பேதைமை என்பது தனக்கு வரும் இடுக்கணை அறியாது களித்திருக்கும் இயல்பு உடையது என்பது கருத்து. 'மாண்பு' என்னும்  உயர் மொழியால் கூறியது, மிக்க இழிவை உணர்த்திற்று.

பிறவற்றைக் கொன்று, அவற்றின் ஊனைத் தின்று தம் ஊனைப் பெருக்கும் கொலைஞரே அவற்றைக் கொல்லும் முறைமையை நன்கு அறிவர். ஆமையைக் கொல்வது அரிது. அதைக் கொல்லும் வகையை உணர்ந்தோர் நெருப்பு மூட்டி உலை நீரை அடுப்பில் ஏற்றி அதில் ஆமையை இடுவர். தீயும் சுடர்விட்டு எரியும். நீரும் சூடு ஏறிக் கொதிக்கும். ஆமையும் வெதுவெதுப்பான நீரில் இன்புற்றுத் திளைக்கும். நீர் காயக்காய, சூடு பொறுக்கமாட்டாமல், ஆமை மாய்ந்துகொண்டே வரும். தான் அழிந்து வரும் நிலையை அறியாது அது. ஆமைக்கும் மாக்களுக்கும் வாழ்க்கை இன்பமும், அழியும் நிலையினை அறியாமையும் பொது. 

அப்பர் பெருமான் சமண மதத்தில் சேர்ந்து ஒழுகி, மீண்டு உய்ந்தவர். ஆதலின், சமணர்கள் குறித்தது ஓர் உவமையைத் தமது திறத்திற்கு ஏற்றி, நமது திறத்தை நாடச் செய்தருளினார். தொலைவில் இராமல், சூழ்ந்து (வளைத்துக்) கொண்ட கள்வர்க்கு நடுங்காதார் எவர்? ஒருவர் அல்லர் ஐவர். "ஓர ஒட்டார், ஒன்றை உன்ன ஒட்டார், மலர் இட்டு உனது தாள் சேர ஒட்டார் ஐவர்; செய்வது என் யான்?" என்று ஐம்புலன்களின் சேட்டை குறித்து அருணகிரிநாதர் இரங்கிப் பாடி உள்ளார்.  ஐவரும் சூழ்ந்து நடுக்கம் விளைக்கினும், அவர் சூழ்ச்சிக்கு ஆளாகி, அவர் ஆட்டுகின்ற வகையிலே ஆடியும் ஓட்டுகின்ற வகையிலே ஓடியும், காட்டுகின்ற வகையிலே கண்டும், ஊட்டுவதை எல்லாம் உண்டும், துன்பத்தில் இருந்தாலும், அவர் திறத்தில் ஓர் இன்பம் உண்டுபோலத் தோன்றும். அவ்வின்பத்தையே நாடி, அவர் வலையிலே சிக்கி வருந்துவதற்கே மீண்டும் அவாவுறுதல் பேதைமை அன்றி வேறு இல்லை. ஆமைக்குத் தெளிவு இருந்தால், வெந்நீரில் திளைத்து ஆடாது. நீரின் வெப்பம் அதன் உடலுக்கு இனிதாய் இருந்தது. அதைத் தெளியாமையே ஆமைக்கு அழிவாகியது. 

மெய் வாய் கண் மூக்குச் செவி ஆகிய ஐந்தனாலும் முறையே ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஐந்தும் பிறப்பு இறப்பாகிய துன்பத்தை விளைக்கும் என்று தெளியாமையே பேரின்ப வாழ்வு பெறவொட்டாது தடையாய் இருப்பது. பிறந்து இறந்து உழலும் பெருந்துன்பத்தைச் செய்கின்றது. தெளிந்து திருவருள் பெற்று உய்வதற்கே இந்தப் பிறவி வாய்த்தது. தெளியாமல் ஐம்புலத்து ஆசை வலையுட்பட்டுப் பிறவிப்பெருங் கடலில் விழுந்து துன்புறுதற்கு உண்டானது அல்ல இந்த மானிடப் பிறவி.

பானுகோபன் வீரவாகுதேவர் முன் நின்று போர் செய்த களிப்பில் முழுகித் திளைத்திருந்து, தான் தன் குலத்தொடு வேரறச் சாய்ந்தொழிய இருக்கும் பின் விளைவைச் சிறிதும் தெளிந்திடவில்லை. அதனால், அவனை `உலைபடும் இளவெந்நீரின் உளம் மகிழ் கமடம் ஒத்தான்` எனத் தணிகைப் புராணத்தில் குறித்தருளினார் கச்சியப்ப முனிவர். கமடம் - ஆமை.

பிறவி என்பது தீராத நோய் என்பது அறிவில்லார்க்குச் சிறிதும் புலனாகாது. ஆனால், அறிவுடையார்க்கு அது நன்கு விளங்கித் தோன்றும். ஆதலால் அவர் அந்நோயைத் தீர்க்கும் மருந்தை நாடி நிற்பர். பிறவி நோய்க்கு நன்மருந்தாக இருப்பவன் இறைவன். "மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீரா நோய் தீர்த்தருள வல்லான்" என்றருளினார் அப்பர் பெருமான். உலகத்து மருந்துகள் வேறு வேறு இடங்களில் கிடைப்பன. ஆகவே அவற்றைப் பெறுதற்கு அலைதல் வேண்டும். சில சமயங்களில் அவை கிடைக்காமலும் போகலாம். ஆனால், இறைவனாகிய மருந்து அத்தகையது அல்ல. வேண்டிய போது கிடைக்கும் தன்மை வாய்ந்தது திருவருள் மருந்து. அதுவே நல்ல மருந்து. "நல்ல மருந்து இம் மருந்து - சுகம் நல்கும் வயித்தியநாத மருந்து" என்று பாடினார் வள்ளல்பெருமான். மேலும், உலகத்து மருந்துகள் உடலுக்கு உரியவை. ஆதலால் அவை உண்ணுதற்கு உரியவாகின்றன. இறைவனாகிய மருந்தோ உயிருக்கு உரியது. ஆதலால், அது எண்ணுதற்கு உரியதாகின்றது. அதுபற்றியே இறைவனை நினையுங்கள் என்று அறிவுறுத்தினர் தமது அருளாளர்கள். 

உய்யும் நெறியாகிய முத்திநெறி அறியாமல் மூர்க்கரோடு இணங்கி இருந்தால், வாழ்நாள் வீணே கழியும். மூப்பும் உண்டு. அதன் பின்னர் மரணம் நிச்சயம் உண்டு. அதன் முன்னரே, நல்வினைகளைச் செய்து நற்கதியைத் தேடவேண்டும் என முயல்வதுதான் அறிவுடைமை. அல்லாதது பேதைமை. "பேதைமை என்பது ஒன்று யாது எனின். ஏதம் கொண்டு ஊதியம் போகவிடல்" என்றார் திருவள்ளுவ நாயனார். அறியாமை என்பதன் இலக்கணம் என்னவெனில், கேடு தருவனவற்றை எல்லாம் விரும்பி ஏற்றுக் கொண்டு, ஆக்கம் தருவனவற்றைக் கைவிடுதல் ஆகும். ஆக்கம் என்பது வீடுபேறு. கேடு என்பது பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்ற தன்மை.

பேதைமையால், அறியாமையால் வரும் கேடு என்ன என்பதை, திருவள்ளுவ நாயனார் மேலும் தெரிவிப்பது, "ஒருமைச் செயல் ஆற்றும் பேதை, எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு.” ஐயோ! பேதைமையால் வரும் கேடு இவ்வளவு கொடியதா? ஆமாம். ஆமாம். பேதை என்பவன் ஒருவன், இனிவரும் பிறவிகளில் எல்லாம் தான் படவேண்டிய நரகத் துன்பத்தை, இப்போது கிடைத்த இந்த ஒரு பிறவிலேயே தேடிக் கொள்ளும் வல்லமை படைத்தவன் என்கிறார் நாயனார்.

இந்தக் கேட்டை மனிதகுலம் அடையாமல், புனிதகுலம் பெறவேண்டுமென்றுதான் வள்ளற்பெருமானார், பின்வருமாறு பாடி நம்மைத் தெளிவிக்கிறார்.


"ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்,

அகங்காரப் பேய்பிடித்தீர், ஆடுதற்கே அறிவீர்,

கூற்று வருங்கால் அதனுக்கு எதுபுரிவீர், ஐயோ,

கூற்றுஉதைத்த சேவடியைப் போற்ற விரும்பீரே,

வேற்றுஉரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்,

வீண்உலக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்,

சாற்று உவக்க எனது தனித் தந்தை வருகின்ற

தருணம் இது, சத்தியம் சிற்சத்தியைச் சார்வதற்கே."


இதன் பொருள் ---

ஆற்றில் வெள்ளம் பெருகி வரும் முன்பே அணை செய்து காத்துக்கொள்ள நினையாத உலக மக்களே! அகங்காரமாகிய பேய் பிடித்து அலைந்து வருந்துகிறீர்கள்.  நாளை எமன் வருவானாயின் என்ன செய்வீர்கள். அந்தோ! அந்த எமனை உதைத்து நீக்கிய சிவனுடைய சிவந்த திருவடியைப் போற்றி வழிபட விரும்புகின்றீர்கள் இல்லை. பிறவற்றைப் பேசித் தீவினைகளை மிகுவித்து மெலிகின்றீர்கள்ற. வீணான உலகியலில் கொடுமை நிறைந்த பொய் வழக்கங்களைக் கைவிட்டு எம்பால் வந்து அடைவீர்களாக. நான் உரைக்கின்ற சொற்களை ஏற்றருளுதற்கு என்னுடைய ஒப்பற்ற தந்தையாகிய சிவபெருமான் வந்தருளும் சமயம் இதுவாதலால், நீவிர் அவனது ஞானசத்தியைப் பெறுதற்கு உடனே வருவீர்களாக; நான் சொல்லும் இது சத்திய வாக்காகும்.

     வள்ளலார் சொல்லுகின்றவற்றைக் கேளாது அசட்டை செய்து ஒழுகுகின்றமை புலப்பட, “அகங்காரப் பேய் பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்” என்று கூறுகின்றார். கூற்று - உயிர் கவரும் எமன். மார்க்கண்டனது உயிரைக் கவர வந்த எமனைக் காலால் உதைத்து விலக்கிய சிவனுடைய அருட்செயலை விதந்து, “கூற்று உதைத்த சேவடியைப் போற்ற விரும்பீர்” என்று புகல்கின்றார். வேற்று உரைத்தல் - அருள் நெறிக்கு வேறாகியவற்றை விளம்புதல். உலகியலில் காணப்படுகின்ற தீய வழக்கங்கள் துன்பம் விளைவிப்பனவாதலால் அவற்றைக் கைவிடுதல் வேண்டி, “வீண் உலக கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்” என மொழிகின்றார். சாற்று - சொல்வது. சிற்சத்தி - திருவருள் ஞானத்தால் விளையும் மெய்ம்மையான ஆற்றல். இதனால் சன்மார்க்க நன்னெறிக்கு வேறாகியவற்றைப் பேசி உலகக் கொடுவழக்கங்களைக் கைவிடுமாறு வேண்டுகின்றார்.

இறைவனது இருப்பில் நீங்கள் ஐயங்கொள்ள வேண்டாம். அவன் பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தாக விளங்குகிறான். உங்கள் அறிவிலுள்ள மயக்கத்தை விடுத்து அவனை உணர முயலுங்கள் பேதைமையைத் தவிர்த்துப் பேரருளைப் பெற்று, பிறவாத நிலையிலே, இறவாத இன்ப அன்பில் திளைத்து இருக்க, இறைவன் திருவடியை மறவாது போற்றுவோம்.




பொது --- 1091. கருதியே மெத்த

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

கருதியே மெத்த (பொது)

முருகா! 

அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக.


தனதனா தத்த தனதனா தத்த

     தனதனா தத்த ...... தனதான


கருதியே மெத்த விடமெலாம் வைத்த

     கலகவா ளொத்த ...... விழிமானார்


கடினபோ கத்த புளகவா ருற்ற

     களபமார் செப்பு ...... முலைமீதே


உருகியான் மெத்த அவசமே வுற்ற

     வுரைகளே செப்பி ...... யழியாதுன்


உபயபா தத்தி னருளையே செப்பு

     முதயஞா னத்தை ...... அருள்வாயே


பருவரா லுற்று மடுவின்மீ துற்ற

     பகடுவாய் விட்ட ...... மொழியாலே


பரிவினோ டுற்ற திகிரியே விட்ட

     பழயமா யற்கு ...... மருகோனே


முருகுலா வுற்ற குழலிவே டிச்சி

     முலையின்மே வுற்ற ...... க்ருபைவேளே


முருகனே பத்த ரருகனே வெற்பு

     முரியவேல் தொட்ட ...... பெருமாளே.


                     பதம் பிரித்தல்


கருதியே மெத்த விடம் எலாம் வைத்த

     கலக வாள் ஒத்த ...... விழி மானார்,


கடின போகத்த, புளக வார் உற்ற

     களபம் ஆர் செப்பு ...... முலைமீதே


உருகி, யான் மெத்த அவசமே உற்ற

     உரைகளே செப்பி ...... அழியாது, உன்


உபய பாதத்தின் அருளையே செப்பும்

     உதய ஞானத்தை ...... அருள்வாயே.


பரு வரால் உற்று மடுவின் மீது உற்ற

     பகடுவாய் விட்ட ...... மொழியாலே,


பரிவினோடு உற்ற திகிரியே விட்ட

     பழய மாயற்கு ...... மருகோனே!


முருகு உலா உற்ற குழலி, வேடிச்சி

     முலையின் மேவுற்ற ...... க்ருபைவேளே!


முருகனே! பத்தர் அருகனே! வெற்பு

     முரியவேல் தொட்ட ...... பெருமாளே.

பதவுரை


பருவரால் உற்று மடுவின் மீது உற்ற பகடு வாய் விட்ட மொழியாலே --- துன்பத்தை அடைந்து, மடுவில் இருந்த (கஜேந்திரனாகிய) யானை (ஆதி மூலமே என) ஓலமிட்டு அழைத்த மொழியைக் கேட்டு, 

பரிவினோடு உற்று அ(த்) திகிரியே விட்ட பழய மாயற்கு மருகோனே --- அன்போடு வந்து அந்தச் சக்கரத்தை ஏவிய பழைய திருமாலுக்குத் திருமருகரே! 

முருகு உலாவுற்ற குழலி --- மணம் கமழும் கூந்தலை உடையவளும்,

வேடிச்சி முலையின் மேவு உற்ற க்ருபையோனே --- வேடர் மகளுமாகிய வள்ளிநாயகியின் மார்பகங்களை விரும்பி அணைந்த கருணை மிக்கவரே! 

முருகனே --- முருகப் பெருமானே!

பத்தர் அருகனே --- அடியவர்க்கு அருகில் இருப்பவரே

வெற்பு முரிய வேல் தொட்ட பெருமாளே --- கிரவுஞ்சமலை பொடிபட்டு அழிய வேலை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

கருதியே மெத்த விடம் எலாம் வைத்த கலக வாள் ஒத்த விழி மானார் --- மனதில் எண்ணியே விடம் அனைத்தும் தன்னிடத்தே கொண்டுள்ளதும், கலகத்தை விளைவிக்கத் தக்க வாள் போன்றதுமான கண்களை உடைய விலைமாதர்களின்

கடின போகத்த, புளக வார் உற்ற களபம் ஆர் செப்பு முலைமீதே உருகி --- வன்மை மிக்கதும், போகம் தருவதும், புளகாங்கிதம் அடையச் செய்வதும், கச்சு அணிந்ததும், கலவைச் சாந்து நிறைந்ததும், குடம் போன்றதுமான முலைகளின் மீது மனம் உருகி,

யான் மெத்த அவசமே உற்ற உரைகளே செப்பி அழியாது --- நான் மிகவும் தன்வசம் இழந்த நிலையில் காமப் பேச்சுக்களையே பேசி அழிந்து போகாமல்,

உன் உபய பாதத்தின் அருளையே செப்பும் உதய ஞானத்தை அருள்வாயே --- தேவரீரது திருவடிகளின் கருணை பற்றியே பேசும்படி உதிக்கின்ற ஞானத்தை அடியேனுக்கு அருள் புரிவீராக.


பொழிப்புரை

துன்பத்தை அடைந்து, மடுவில் இருந்த (கஜேந்திரனாகிய) யானை (ஆதி மூலமே என) ஓலமிட்டு அழைத்த மொழியைக் கேட்டு,  அன்போடு வந்து அந்தச் சக்கரத்தை ஏவிய பழைய திருமாலுக்குத் திருமருகரே! 

மணம் கமழும் கூந்தலை உடையவளும், வேடர் மகளுமாகிய வள்ளிநாயகியின் மார்பகங்களை விரும்பி அணைந்த கருணை மிக்கவரே! 

முருகப் பெருமானே!

அடியவர்க்கு அருகில் இருப்பவரே!

கிரவுஞ்சமலை பொடிபட்டு அழிய வேலை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

மனதில் எண்ணியே விடம் அனைத்தும் தன்னிடத்தே கொண்டுள்ளதும், கலகத்தை விளைவிக்கத் தக்க வாள் போன்றதுமான கண்களை உடைய விலைமாதர்களின் வன்மை மிக்கதும், போகம் தருவதும், புளகாங்கிதம் அடையச் செய்வதும், கச்சு அணிந்ததும், கலவைச் சாந்து நிறைந்ததும், குடம் போன்றதுமான முலைகளின் மீது மனம் உருகி, மிகவும் தன்வசம் இழந்த நிலையில் காமப் பேச்சுக்களையே பேசி அழிந்து போகாமல்,  தேவரீரது திருவடிகளின் கருணை பற்றியே பேசும்படி உதிக்கின்ற ஞானத்தை அடியேனுக்கு அருள் புரிவீராக.

விரிவுரை


பருவரால் உற்று மடுவின் மீது உற்ற பகடு வாய் விட்ட மொழியாலே --- 


பருவரால் --- பருவரல் = துன்பம். "பருவரல்" என்னும் சொல் பாடல் நயம் கருதி "பருவரால்" என நீண்டது.

மடு - கயம், குளம்.

பகடு - எருமைக் கடா, ஆண்யானை, எருது. இங்கு ஆண்யானை என்பது பொருந்தும்.


பரிவினோடு உற்று அ(த்) திகிரியே விட்ட பழய மாயற்கு மருகோனே --- 

பரிவு --- இரக்கம், அன்பு, கருணை.

திகிரி - சக்கரம். இங்கு திருமாலின் திருக்கையில் விளங்கும் ஆழிப்படையைக் குறிக்கும்.

"திகிரி ஏவிட்ட" என்றால், திகிரியை ஏவிய என்றும், "திகிரியே விட்ட" என்றால், திகிரியை விடுத்து அருளிய என்றும் பொருள் படும்.

"வாரண மூலம் என்ற போதினில், ஆழி கொண்டு,

வாவியின் மாடு இடங்கர் பாழ்படவே, எறிந்த

     மாமுகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன்...மருகோனே!"


எனவும்,


"வெங்கை யானை வனத்திடை, துங்க மா முதலைக்கு, 

     வெருண்டு, மூலம் என, கரு- ...... டனில் ஏறி,

விண் பராவ, அடுக்கிய மண் பராவ, அதற்கு

     விதம் பராவ அடுப்பவன் ...... மருகோனே!"

எனவும் திருப்புகழ்ப் பாடல்களில் அடிகளார் குறித்து அருளியமை காண்க.

திருமால், கஜேந்திரம் என்னும் யானைக்கு அருள் புரிந்த வரலாற்றைக் கூறுகின்றார் அடிகளார்.

திருப்பாற்கடலால் சூழப்பட்டதாயும், பதினாயிரம் யோசனை உயரம் உடையதாயும், பெரிய ஒளியோடு கூடியதாயும், திரிகூடம் என்ற ஒரு பெரிய மலை இருந்தது. சந்தனம், மந்தாரம், சண்பகம் முதலிய மலர்தரும் மரங்கள் நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த நீர் நிலைகளும் நவரத்தின மயமான மணற்குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு செய்தன. கந்தருவரும், இந்திரர் முதலிய இமையவரும், வானமாதர்களும் வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக் கொண்டு இருப்பார்கள். நல்ல தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில், வளமைத் தங்கிய ஒரு பெரிய தடாகம் இருந்தது. அழகிய பூந் தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத் தடாகம். அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற ஒரு யானையானது, அநேக பெண் யானைகளாலே சூழப்பட்டு, தாகத்தால் மெலிந்து, அந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித் தாகம் தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண் யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக் கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி பெறும் சக்தியின்றித் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப் பட்டு அந்த யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் பலகாலம் போர் நிகழ்ந்தது.  உணவு இன்மையாலும் முதலையால் பல வாண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது கஜேந்திரம். யாதும் செய்யமுடியாமல் அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்தி, பக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலை, பாற்கடலில் அரவணை மேல் அறிதுயில் செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு, உடனே கருடாழ்வான் மீது தோன்றி, சக்கரத்தை விட்டு முதலையைத் தடிந்து, கஜேந்திரத்திற்கு அபயம் தந்து அருள் புரிந்தனர். சிவபெருமான் தமக்குத் தந்த காத்தற்றொழிலை மேற்கொண்ட நாராயணர் காத்தற் கடவுளாதலால், உடனே ஓடிவந்து கஜேந்திரனுடைய துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கினர்.

“மதசிகரி கதறிமுது முதலை கவர் தரநெடிய

 மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென

 வருகருணை வரதன்”              --- சீர்பாதவகுப்பு.

யானை பொதுவாக அழைத்தபோது நாராயணர் வந்து காத்தருளிய காரணம், நாராயணர் தமக்குச் சிவபெருமான் கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர். ஒரு தலைவன் நீ இந்த வேலையைச் செய்யென்று ஒருவனுக்குக் கொடுத்துள்ளபோது, ஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன் கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமையல்லவா? தலைவனைத்தானே அழைத்தான்? நான் ஏன் போகவேண்டு மென்று அப்பணியாளன்  வாளாவிருந்தால், தலைவனால் தண்டிக்கப் படுவானல்லவா? ஆதலால், சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை நிறைவேற்ற நாராணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.


முருகு உலாவுற்ற குழலி --- 

முருகு - தெய்வத்தன்மை, இளமை, மணம், அழகு, தேன்.

தெய்வத் தன்மை உடைய மகளிரின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு.

தேன் என்று கொண்டால், தேன் நிறைந்த மலர்களைச் சூடியுள்ள என்றும் பொருள்படும்.


பத்தர் அருகனே --- 

அருகு - அண்மை, பக்கம், இடம்.

அடியவர்களுக்கு அண்மையில் இருப்பவர். "மெய்யடியவர்கட்கு அண்மையனே" என்பது மணிவாசகம். "இடம்" என்று கொண்டால், அடியவர்களிடத்தில் இருப்பவர் முருகப் பெருமான் என்று ஆகும்.


கருத்துரை

முருகா! அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக.






ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...