அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கருதியே மெத்த (பொது)
முருகா!
அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக.
தனதனா தத்த தனதனா தத்த
தனதனா தத்த ...... தனதான
கருதியே மெத்த விடமெலாம் வைத்த
கலகவா ளொத்த ...... விழிமானார்
கடினபோ கத்த புளகவா ருற்ற
களபமார் செப்பு ...... முலைமீதே
உருகியான் மெத்த அவசமே வுற்ற
வுரைகளே செப்பி ...... யழியாதுன்
உபயபா தத்தி னருளையே செப்பு
முதயஞா னத்தை ...... அருள்வாயே
பருவரா லுற்று மடுவின்மீ துற்ற
பகடுவாய் விட்ட ...... மொழியாலே
பரிவினோ டுற்ற திகிரியே விட்ட
பழயமா யற்கு ...... மருகோனே
முருகுலா வுற்ற குழலிவே டிச்சி
முலையின்மே வுற்ற ...... க்ருபைவேளே
முருகனே பத்த ரருகனே வெற்பு
முரியவேல் தொட்ட ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கருதியே மெத்த விடம் எலாம் வைத்த
கலக வாள் ஒத்த ...... விழி மானார்,
கடின போகத்த, புளக வார் உற்ற
களபம் ஆர் செப்பு ...... முலைமீதே
உருகி, யான் மெத்த அவசமே உற்ற
உரைகளே செப்பி ...... அழியாது, உன்
உபய பாதத்தின் அருளையே செப்பும்
உதய ஞானத்தை ...... அருள்வாயே.
பரு வரால் உற்று மடுவின் மீது உற்ற
பகடுவாய் விட்ட ...... மொழியாலே,
பரிவினோடு உற்ற திகிரியே விட்ட
பழய மாயற்கு ...... மருகோனே!
முருகு உலா உற்ற குழலி, வேடிச்சி
முலையின் மேவுற்ற ...... க்ருபைவேளே!
முருகனே! பத்தர் அருகனே! வெற்பு
முரியவேல் தொட்ட ...... பெருமாளே.
பதவுரை
பருவரால் உற்று மடுவின் மீது உற்ற பகடு வாய் விட்ட மொழியாலே --- துன்பத்தை அடைந்து, மடுவில் இருந்த (கஜேந்திரனாகிய) யானை (ஆதி மூலமே என) ஓலமிட்டு அழைத்த மொழியைக் கேட்டு,
பரிவினோடு உற்று அ(த்) திகிரியே விட்ட பழய மாயற்கு மருகோனே --- அன்போடு வந்து அந்தச் சக்கரத்தை ஏவிய பழைய திருமாலுக்குத் திருமருகரே!
முருகு உலாவுற்ற குழலி --- மணம் கமழும் கூந்தலை உடையவளும்,
வேடிச்சி முலையின் மேவு உற்ற க்ருபையோனே --- வேடர் மகளுமாகிய வள்ளிநாயகியின் மார்பகங்களை விரும்பி அணைந்த கருணை மிக்கவரே!
முருகனே --- முருகப் பெருமானே!
பத்தர் அருகனே --- அடியவர்க்கு அருகில் இருப்பவரே
வெற்பு முரிய வேல் தொட்ட பெருமாளே --- கிரவுஞ்சமலை பொடிபட்டு அழிய வேலை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!
கருதியே மெத்த விடம் எலாம் வைத்த கலக வாள் ஒத்த விழி மானார் --- மனதில் எண்ணியே விடம் அனைத்தும் தன்னிடத்தே கொண்டுள்ளதும், கலகத்தை விளைவிக்கத் தக்க வாள் போன்றதுமான கண்களை உடைய விலைமாதர்களின்
கடின போகத்த, புளக வார் உற்ற களபம் ஆர் செப்பு முலைமீதே உருகி --- வன்மை மிக்கதும், போகம் தருவதும், புளகாங்கிதம் அடையச் செய்வதும், கச்சு அணிந்ததும், கலவைச் சாந்து நிறைந்ததும், குடம் போன்றதுமான முலைகளின் மீது மனம் உருகி,
யான் மெத்த அவசமே உற்ற உரைகளே செப்பி அழியாது --- நான் மிகவும் தன்வசம் இழந்த நிலையில் காமப் பேச்சுக்களையே பேசி அழிந்து போகாமல்,
உன் உபய பாதத்தின் அருளையே செப்பும் உதய ஞானத்தை அருள்வாயே --- தேவரீரது திருவடிகளின் கருணை பற்றியே பேசும்படி உதிக்கின்ற ஞானத்தை அடியேனுக்கு அருள் புரிவீராக.
பொழிப்புரை
துன்பத்தை அடைந்து, மடுவில் இருந்த (கஜேந்திரனாகிய) யானை (ஆதி மூலமே என) ஓலமிட்டு அழைத்த மொழியைக் கேட்டு, அன்போடு வந்து அந்தச் சக்கரத்தை ஏவிய பழைய திருமாலுக்குத் திருமருகரே!
மணம் கமழும் கூந்தலை உடையவளும், வேடர் மகளுமாகிய வள்ளிநாயகியின் மார்பகங்களை விரும்பி அணைந்த கருணை மிக்கவரே!
முருகப் பெருமானே!
அடியவர்க்கு அருகில் இருப்பவரே!
கிரவுஞ்சமலை பொடிபட்டு அழிய வேலை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!
மனதில் எண்ணியே விடம் அனைத்தும் தன்னிடத்தே கொண்டுள்ளதும், கலகத்தை விளைவிக்கத் தக்க வாள் போன்றதுமான கண்களை உடைய விலைமாதர்களின் வன்மை மிக்கதும், போகம் தருவதும், புளகாங்கிதம் அடையச் செய்வதும், கச்சு அணிந்ததும், கலவைச் சாந்து நிறைந்ததும், குடம் போன்றதுமான முலைகளின் மீது மனம் உருகி, மிகவும் தன்வசம் இழந்த நிலையில் காமப் பேச்சுக்களையே பேசி அழிந்து போகாமல், தேவரீரது திருவடிகளின் கருணை பற்றியே பேசும்படி உதிக்கின்ற ஞானத்தை அடியேனுக்கு அருள் புரிவீராக.
விரிவுரை
பருவரால் உற்று மடுவின் மீது உற்ற பகடு வாய் விட்ட மொழியாலே ---
பருவரால் --- பருவரல் = துன்பம். "பருவரல்" என்னும் சொல் பாடல் நயம் கருதி "பருவரால்" என நீண்டது.
மடு - கயம், குளம்.
பகடு - எருமைக் கடா, ஆண்யானை, எருது. இங்கு ஆண்யானை என்பது பொருந்தும்.
பரிவினோடு உற்று அ(த்) திகிரியே விட்ட பழய மாயற்கு மருகோனே ---
பரிவு --- இரக்கம், அன்பு, கருணை.
திகிரி - சக்கரம். இங்கு திருமாலின் திருக்கையில் விளங்கும் ஆழிப்படையைக் குறிக்கும்.
"திகிரி ஏவிட்ட" என்றால், திகிரியை ஏவிய என்றும், "திகிரியே விட்ட" என்றால், திகிரியை விடுத்து அருளிய என்றும் பொருள் படும்.
"வாரண மூலம் என்ற போதினில், ஆழி கொண்டு,
வாவியின் மாடு இடங்கர் பாழ்படவே, எறிந்த
மாமுகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன்...மருகோனே!"
எனவும்,
"வெங்கை யானை வனத்திடை, துங்க மா முதலைக்கு,
வெருண்டு, மூலம் என, கரு- ...... டனில் ஏறி,
விண் பராவ, அடுக்கிய மண் பராவ, அதற்கு
விதம் பராவ அடுப்பவன் ...... மருகோனே!"
எனவும் திருப்புகழ்ப் பாடல்களில் அடிகளார் குறித்து அருளியமை காண்க.
திருமால், கஜேந்திரம் என்னும் யானைக்கு அருள் புரிந்த வரலாற்றைக் கூறுகின்றார் அடிகளார்.
திருப்பாற்கடலால் சூழப்பட்டதாயும், பதினாயிரம் யோசனை உயரம் உடையதாயும், பெரிய ஒளியோடு கூடியதாயும், திரிகூடம் என்ற ஒரு பெரிய மலை இருந்தது. சந்தனம், மந்தாரம், சண்பகம் முதலிய மலர்தரும் மரங்கள் நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த நீர் நிலைகளும் நவரத்தின மயமான மணற்குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு செய்தன. கந்தருவரும், இந்திரர் முதலிய இமையவரும், வானமாதர்களும் வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக் கொண்டு இருப்பார்கள். நல்ல தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில், வளமைத் தங்கிய ஒரு பெரிய தடாகம் இருந்தது. அழகிய பூந் தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத் தடாகம். அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற ஒரு யானையானது, அநேக பெண் யானைகளாலே சூழப்பட்டு, தாகத்தால் மெலிந்து, அந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித் தாகம் தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண் யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக் கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி பெறும் சக்தியின்றித் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப் பட்டு அந்த யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் பலகாலம் போர் நிகழ்ந்தது. உணவு இன்மையாலும் முதலையால் பல வாண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது கஜேந்திரம். யாதும் செய்யமுடியாமல் அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்தி, பக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலை, பாற்கடலில் அரவணை மேல் அறிதுயில் செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு, உடனே கருடாழ்வான் மீது தோன்றி, சக்கரத்தை விட்டு முதலையைத் தடிந்து, கஜேந்திரத்திற்கு அபயம் தந்து அருள் புரிந்தனர். சிவபெருமான் தமக்குத் தந்த காத்தற்றொழிலை மேற்கொண்ட நாராயணர் காத்தற் கடவுளாதலால், உடனே ஓடிவந்து கஜேந்திரனுடைய துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கினர்.
“மதசிகரி கதறிமுது முதலை கவர் தரநெடிய
மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென
வருகருணை வரதன்” --- சீர்பாதவகுப்பு.
யானை பொதுவாக அழைத்தபோது நாராயணர் வந்து காத்தருளிய காரணம், நாராயணர் தமக்குச் சிவபெருமான் கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர். ஒரு தலைவன் நீ இந்த வேலையைச் செய்யென்று ஒருவனுக்குக் கொடுத்துள்ளபோது, ஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன் கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமையல்லவா? தலைவனைத்தானே அழைத்தான்? நான் ஏன் போகவேண்டு மென்று அப்பணியாளன் வாளாவிருந்தால், தலைவனால் தண்டிக்கப் படுவானல்லவா? ஆதலால், சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை நிறைவேற்ற நாராணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.
முருகு உலாவுற்ற குழலி ---
முருகு - தெய்வத்தன்மை, இளமை, மணம், அழகு, தேன்.
தெய்வத் தன்மை உடைய மகளிரின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு.
தேன் என்று கொண்டால், தேன் நிறைந்த மலர்களைச் சூடியுள்ள என்றும் பொருள்படும்.
பத்தர் அருகனே ---
அருகு - அண்மை, பக்கம், இடம்.
அடியவர்களுக்கு அண்மையில் இருப்பவர். "மெய்யடியவர்கட்கு அண்மையனே" என்பது மணிவாசகம். "இடம்" என்று கொண்டால், அடியவர்களிடத்தில் இருப்பவர் முருகப் பெருமான் என்று ஆகும்.
கருத்துரை
முருகா! அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக.
No comments:
Post a Comment