ஔவையார் தனிப்பாடல்

ஔவையார் தனிப்பாடல்        


விநாயகப் பெருமானை வணங்குவார்க்கு அனைத்தும் எளிது. சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான்பெருமாள் நாயனாரும் திருக்கயிலைக்குச் செல்லும்போது ஔவையாரையும் அழைத்தனர். அவர் அப்போது தாம் செய்து கொண்டிருந்த விநாயகர் பூசையை முடித்துக் கொண்டு கயிலாயம் வருவதாகக் கூறி, பூசையை விரைவாகச் செய்யத் தொடங்கினார். அதை அறிந்த விநாயகர் ஔவையாரை நிதானமாகப் பூசை செய்யும்படியும், அவ்விருவருக்கும் முன்னதாக, தாம் அவரைத் திருக்கயிலாயத்தில் கொண்டு சேர்ப்பதாகவும் சொன்னார். ஔவையார், "சீதக் களப" என்று தொடங்கும் அகவற்பாவைப் பாடிப் பூசனையை நிறைவு செய்தார். விநாயகர் தமது துதிக்கையால் தூக்கி, ஔவையாரைத் திருக்கயிலாயத்தில் சேர்த்தார். தங்களுக்கு முன்னதாகவே எப்படித் திருக்கயிலாயத்திற்கு வந்து சேர முடிந்தது என்று கேட்ட சேரமான்பெருமாளுக்கு, பதிலாக ஔவையார் பாடல் ஒன்றைப் பாடினார். இப்படி ஒரு கதை உலவுகிறது. இதற்குப் பெரியபுராணத்தில் சான்று இல்லை. எப்படியாயினும் சரி. ஔவையார் பாடியதாகச் சொல்லும் தனிப் பாடலைப் பார்ப்போம்....


“மதுரமொழி நல்உமையாள் சிறுவன் மலர்அடியை

முதிரநினைய வல்லார்க்கு அரிதோ, முகில்போல் முழங்கி

அதிரவருகின்ற யானையும், தேரும், அதன் பின்சென்ற

குதிரையும் காதம், கிழவியும் காதம், குலமன்னனே.”


இதன் பொருள் ---


உயர்ந்த சேரர் குலத்தில் பிறந்த மன்னனே!  இனிய சொற்களைப் பேசும் உமாதேவியாரின் மகனாகிய விநாயகப்பெருமானின் திருவடிகளை வணங்குபவர்க்கு எந்தச் செயலும் செய்வதற்கு அரியது ஆகாது. ஆதலால், நான் இங்கு வந்து இருப்பது அரியது அல்ல. நிலம் அதிரச் செல்லும் யானையும்,  அதற்குப் பின்னர் புறப்பட்டு வந்த குதிரையும் நாழிகை ஒன்றுக்குக் காதவழி நடக்கும். நடக்க இயலாத கிழவியாகிய நானும் நடந்து வந்தது காதவழியே ஆகும்.


"நிலைகெட விண்அதிர நிலம் எங்கும் அதிர்ந்து அசைய, மலையிடை யானை ஏறி வழியே வருவேன்" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தேவாரத் திருப்பாட்டில் அருளியது காண்க.

No comments:

053. சுற்றம் தழால் - 10 உழைப் பிரிந்து

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 53 -- சுற்றம் தழால் இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "தன்னிடத்தில் இருந்து க...