கருணை மதம் பொழியும் யானை
-----
சிவனுடைய கோயிலிலே இரண்டு யானைகள் இருக்கும். ஒன்று அசையும் யானை. மற்றொன்று அசையாத யானை. அசையும் யானை இல்லை என்றாலும், அசையாத யானை இல்லாத கோயில் இராது. அசையும் யானை மதம் கொள்ளும். துதிக்கையாகிய ஒரே கை அதற்கு உள்ளது. அசையாத யானையானது, மதத்தை அழிப்பது; ஐந்து கைகளை உடையது. அசையும் யானை விலங்கு வகையைச் சேர்ந்தது. அசையாத யானை கடவுள் வரிசையைச் சேர்ந்தது. மூத்த பிள்ளையார் என்றும் கணபதி என்றும் போற்றப்படும் ஆனைமுகக் கடவுளே அந்த யானை.
சைவர்கள் மூத்தபிள்ளையாரை வணங்கிய பிறகே எந்தக் காரியத்தையும் தொடங்குவது வழக்கம். சைவ நூலாசிரியர்களை மூத்தபிள்ளையாருக்குத் துதியினைப் பாடிய பின்பே நூலைப் பாடுவார்கள். மூத்தபிள்ளையாருடைய துதிகளாகப் பாடியவர்களின் ஆற்றலுக்கும், கற்பனைக்கும் ஏற்றபடி தமிழில் பல பாடல்கள் அமைந்து உள்ளன.
திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவர், விநாயகரைச் சித்திவேழம் என்று பாடுகிறார். விநாயகருக்கு யானைமுகம் மட்டுமே உண்டு. யானைக்கு உரிய உடம்பு இல்லை. ஆனாலும், அவரை யானை என்றும், வேழம் என்றும் பாடுவது வழக்கமாக உள்ளது. அந்த விநாயகரை யானை என்று சொல்வதோடு, யானை கட்டும் கூடம், அதைக் கட்டும் தறி, சங்கிலி, அதற்கு இடும் கவளம் ஆகியவற்றையும் வைத்துப் பாடுகிறார். இந்த யானையானது உலகத்தில் உள்ள பிற யானையைப் போல, மனிதன் கட்டிய பெரிய கூடத்தில் வளர்வது அல்ல. மற்ற யானைகளை விட இது மிகப் பெரிய யானைதான். ஆனாலும், மிகச் சிறிய இடத்திலும் நுழைந்து கொள்ளும். இதற்குப் புதிதாக ஒரு கூடத்தை அமைக்க வேண்டுவது இல்லை. எவ்வளவு சிறியதானாலும், நாம் இருக்கிற இடத்தைக் கொடுத்தாலே போதும். அடியவர்கள் தம்மிடம் உள்ள சிறிய இடத்தில் இந்த யானையைக் கட்டிப் போடுகிறார்கள். அந்தக் கூடம் அடியவர்கள் உள்ளம் ஆகும். அன்பினால் சிறந்த தூய்மையான உள்ளம் அது. இதற்கு இணையான கூடம் வேறு ஒன்றுமே இல்லை. உள்ளமாகிய கூடத்தில் சித்தி வேழத்தைக் கட்டுவதற்கு அன்பர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? மனவுறுதி ஆகிய முளையை அடிக்கிறார்கள். அந்த முளையிலே மிகவும் விருப்பத்தோடு கட்டிப்போடுகின்ற சங்கிலி அன்பே ஆகும். அன்பு இருந்தால்தான் இந்த வேழத்தைக் கட்டலாம். அன்பு என்னும் சங்கிலித் தொடரை அந்த யானையால் தள்ள முடியாதாம். அடியவர்க்குச் சாதுவான இந்த யானையால் தீங்கு இல்லை. அது கட்டுத்தறியை முறிக்காது. மதம் கொள்ளாது.
சாதுவான யானையாக இருந்தாலும், தீனி தின்னாமல் இருக்க முடியாது. ஆனை கட்டித் தீனி போட ஆராலே முடியும்? என்று ஒரு பழமொழி உள்ளது. யானைக்கு உணவளித்துப் பாதுகாப்பது எவ்வளவு அருமை என்பதை இந்தப் பழமொழி விளக்கும். ஆனை அசைந்து தின்னும் என்பார்கள். இந்த யானை அசையாமலே இருந்து தின்னும். மூத்த பிள்ளையாருக்குத் ‘தொப்பையப்பன்’ என்பது ஒரு பெயர். எத்தனை நிவேதனம் செய்தாலும் வாரிச் சுருட்டி வயிற்றுக்குள் திணிக்கும் இயல்புடையவர் அவர். “கப்பிய கரிமுகன்” என்கிறார் அருணகிரிநாதர். கப்புதல் என்றால், விரைவாக விழுங்குதல் என்று பொருள். அவர் விரைவாக விழுங்குபவை, எவை என்று “கைத்தல நிறைகனி” எனத் தொடங்கும் திருப்புகழில் காணலாம்.
அப்படி விரைவாக விழுங்குகின்ற இயல்பை உடையது அல்ல இந்த சித்திவேழம். அதற்கு உணவு இடவேண்டுமே என்று அஞ்சவேண்டியது இல்லை. ஒரு கவளம் உணவு கொடுத்தாலே போதுமாம். அதற்குக் கவளமாகக் கொடுக்க எதையும் தேடவேண்டியதில்லை. இருக்கிற பொருளையே கொடுக்கலாம். நம்மிடம் உள்ள ஒரு பொருளால் நமக்குத் துன்பமே விளைகிறது. துன்பத்தைத் தருகின்ற அந்தப் பொருளை இந்த யானைக்குக் கொடுத்தால், மிக மகிழ்ந்து உண்டு, திருவருளைப் பொழியும். எல்லா வகையான துன்பங்களுக்கும் விளைவிடமாக இருந்து, மேலும் மேலும் பிறந்து பிறந்து சாவதற்குக் காரணமாக நம்மிடம் உள்ள அந்தப் பொருளுக்குப் “பசுபோதம்” என்று பெயர்.
ஒவ்வோர் ஆன்மாவும் வியாபகப் பொருளாய் இருப்பதனால், வியாபக அறிவே அதற்குரிய இயல்பான அறிவாகும். உடம்பையும் கருவிகளையும் சார்ந்துள்ள கட்டு நிலையில் தனது உண்மை இயல்பை உணராமல், அவற்றால் உண்டாகும் சிற்றறிவையே தனக்குரிய அறிவு என்று ஆன்மா மயங்கி உணரும். ஞானாசிரியருடைய அருளுரையைப் பெற்ற முத்தி காலத்தில் அது கருவி கரணங்களினின்றும் நீங்கியவுடன் தனக்கு இயற்கையாக உள்ள வியாபகவுணர்வு விளங்கப் பெறும். எடுத்துக்காட்டாக, மேகபடலம் மூடியிருந்த காலத்தில் ஆகாயத்தின் விரிந்த தன்மை புலப்படாது. காற்றால் அடித்துச் செல்லப்பட்டு மேகபடலம் நீங்கியபோது ஆகாயத்தின் அளப்பரிய பரப்பு விளங்கித் தோன்றும். அதுபோல, ஐம்பொறி முதலிய கருவிகளின் நீங்கி, அவற்றால் உண்டான சிற்றறிவும் நீங்கிய காலத்தில் ஆன்மவுணர்வு தன் அளப்பரிய வியாபக இயல்பு விளங்கப் பெறும். கருவி கரணங்களால் உயிர்க்கு உண்டாகும் சிற்றறிவே சுட்டறிவு என்றும், கருவியறிவு என்றும், பாசஞானம் என்றும் பசுபோதம் கூறப்படும்.
இவ்வாறு கருவியறிவாகிய பாசஞானம் நீங்கி வியாபக அறிவைப் பெற்றபோது எல்லாவற்றையும் அறியும் நிலை கைகூடும். அந்நிலையில் ஆன்மா நானே எல்லாவற்றையும் அறிகிறேன். என்றும், என்னால் எல்லாம் செய்தல் கூடும் என்றும், நானே பெரும்பொருள் என்றும் கருதித் தன்னையே பதிப்பொருளாக மயங்கி அறியும். அவ்வறிவு, ‘பசு அறிவு’ அல்லது ‘பசுஞானம்’ எனப்படும். இதனைப் ‘பசுபோதம்’ எனவும் குறிப்பிடுவர். பசுவிற்கு மேல் உள்ள பதியாகிய முதற்பொருளை அறியமாட்டாது பசுவாகிய தன்னையே பதியாக அறிந்து நிற்கும் அறிவு பசுஅறிவு அல்லது பசுபோதம் எனப்படுவதாயிற்று. அளப்பரிய ஆகாயம் இரவெல்லாம் விளக்கமின்றி இருண்டு கிடக்கிறது. விடிந்தவுடன் அது விளக்கமுற்றுத் தோன்றுகிறது. அவ்வாறு விளங்கித் தோன்றுவதற்குக் காரணம், காலையில் எழுந்த சூரியவொளி அதனுடன் கலந்து அதனை விளக்கி நிற்பதே ஆகும். இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளாமல், தன்னறிவு வியாபக நிலையை எய்தியதைக் கண்டு தன்னையே பெரிய பொருளாக பதிப்பொருளாக மதிப்பது அறியாமையின் விளைவாகும். அவ்வியாபக நிலையிலும் திருவருள் உடனிருந்து அறிவிக்கத்தான் ஆன்மா அறிகிறதேயன்றித் தானே அறியவில்லை. எந்நிலையிலும் ஆன்மாவின் இயல்பு, அறிவிக்கவே அறிவதாகும்.
இந்தப் பசுபோதமானது, நம்மை அறியாமல் நம்மிடம் இருந்து பல தீவினைளைச் செய்யச் செய்து அலைக்கழிக்கும். இறைவனை உணர ஒட்டாமல், இந்த உலக வாழ்வே நித்தியம் என்று நினைக்கச் செய்யும். செம்பிலே களிம்பு இருப்பது போல நம்மிடம் இது இருக்கிறது. இது கழன்று போனால் நமக்கு உண்மை இன்பம் உண்டாகும். இந்தக் கள்ள வினைப் பசுபோதத்தையே, சித்தி வேழத்துக்குக் கவளமாக இட்டுவிட்டால், நமக்குத் துன்பம் தரும் பொருள் நம்மை விட்டுப் போகிறது. இது வேடிக்கையாகத் தோன்றும். அழுகல் பழம் ஐயருக்கு என்பது போல, நமக்கு வேண்டாத, துன்பம் தருகின்ற ஒன்றை விநாயகருக்குக் கொடுக்கலாமா? அதனால் அவருக்குக் கோபம் பிறக்காதா? என்று தோன்றும். கவளம் இடும்போது கல்லை இட்டால், யானை நெடுநாள் நினைவில் வைத்திருந்து இட்டவனைச் சாடும் என்று சொல்வார்களே! நமக்கு வேண்டாத, அழுக்கான பண்டத்தைச் சித்தி வேழத்துக்குக் கொடுப்பது தகுமா? கொடுத்தாலும் அது ஏற்றுக்கொள்ளுமா? - இவ்வாறு பல ஐயவினாக்கள் எழுவதற்கு இடம் உண்டு. உண்மையில், நமக்குத் தீங்கு பயக்கின்ற கள்ளமாகிய வினைகளுக்குக் காரணமாகிய பசுபோதத்தை (சிற்றறிவை)க் கவளமாக்கி விட்டால், இந்த யானை மகிழ்ச்சியோடு உண்ணும். நல்ல உணவை மிகுதியாக உண்டு வளரும் விலங்கு யானைக்குக் கொழுப்பு அதிகமானல் மதம் உண்டாகும். அந்த மதம் பிறருக்குத் தீங்கை உண்டாக்கும். இந்தத் தெய்வ யானையானது, நாம் அளிக்கும் பசுபோதக் கவளத்தை உண்டு களிப்பை அடையும். அதனால் அதற்கும் மதம் வெள்ளம் போல உண்டாகும். ஆனால், அது கருணை என்னும் மதம்.
நாம் அளிப்பது, நமக்குக் கொடுமையைச் செய்யும் அழுக்குப் பண்டம். அதை உவந்து பெற்றுக் கொண்டு, அந்த யானை தருவதோ, யமக்கு எல்லா நன்மைகளையும் அளிக்கும் கருணை. இதில் வியப்பு ஒன்றும் இல்லை. நறுமணம் மிகுந்த மலர்ச் செடியைத் தோட்டத்தில் வைத்து வளர்க்கிறோம். அதற்கு மணமுள்ள எருவை இடுவது இல்லை. தீநாற்றம் உள்ள எருவை இடுகிறோம். அதனை ஏற்றுக்கொண்டு வளர்கின்ற செடியானது மிகவும் மணமான மலரை அளிக்கின்றது. ஒரறிவுடைய செடியே நமக்குப் பயன்படாத நாற்றப் பொருளை அளித்தால், நேர்மாறான நறுமணமுள்ள மலரை அது நமக்குத் தருகிறது. அப்படியானால், நிறை அறிவு எனப்படும் ஞானமயமான விநாயகப் பெருமான், நாம் அளிக்கும் பசுபோதத்தை உள்ளம் உவந்து ஏற்றுக் கொண்டு, நமக்குக் கருணையை வெள்ளமாகப் பொழிவதில் வியப்பு இல்லை.
திருவிளையாடல் புராணத்தில், பரஞ்சோதி முனிவர் அருளிய பாடலை இனிக் காணலாம்.
“உள்ளமெனுங் கூடத்தி லூக்கமெனுந்
தறிநிறுவி யுறுதி யாகத்
தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி
யிடைப்படுத்தித் தறுகட் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்
களித்துண்டு கருணை யென்னும்
வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை
நினைந்துவரு வினைகள் தீர்ப்பாம்.”
இதன் பொருள் ---
உள்ளம் எனும் கூடத்தில் - உள்ளமாகிய கூடத்தில், ஊக்கம் எனும் தறி நிறுவி – மன உறுதியாகிய கட்டுத் தறியை நிறுத்தி, தள்ளரிய அன்பு என்னும் தொடர் பூட்டி – பேதித்தல் இல்லாத அன்பாகிய சங்கிலியை உறுதியாக வலிமை பெறப் பூட்டி, இடைப்படுத்தி - அதில் அகப்டுத்தி, தறுகண் பாச - வன்கண்மையை உடைய ஆணவ சம்பந்தமுள்ள, கள்ளவினை - வஞ்சவினையை உடைய. பசுபோதம் – சீவபோதம் (அல்லது ஆன்மபோதம்) ஆகிய, கவளம் இட - கவளத்தைக் கொடுக்க, களித்து உண்டு – மகிழ்ந்து உண்டு, கருணை என்னும் மத வெள்ளம் பொழி - அருளாகிய, மதப்பெருக்கைச் சொரிகின்ற, சித்தி வேழத்தை நினைந்து - சித்திவிநாயகக் கடவுளாகிய யானையைத் தியானித்து, வருவினைகள் தீர்ப்பாம் - பிறவிதோறும் தொடர்ந்து வருகின்ற வினைகளை நீக்கிக் கொள்வோம்.
விநாயகக் கடவுளை வேழம் என்றதற்கேற்ப உள்ளம் முதலியவற்றைக் கூடம் முதலியவாக உருவகப்படுத்தினார். கூடம் - யானை கட்டுமிடம். கவளம் - யானை உணவு. ஆணவத்தால் பசுபோதமும், அதனால் கள்ளவினையும் நிகழும். பசுபோதக் கவளம் இடுதலாவது யான் எனது என்னும் செருக்கற்று வணங்குதல்.
யானைக்குக் கன்னமதம், கபோலமதம், பீஜமதம் என மும்மதங்கள் உண்டு. கணபதிக்கு யானை உறுப்புக் கழுத்துக்கு மேல் மட்டுமே உள்ளது. எனவே, விநாயகப் பெருமானுக்கு மும்மதம் என்பது பொருந்தாது. மும்மதம் என்பன இச்சா ஞானக் கிரியைகளின் உருவகம் ஆகும் என்பதை அறிதல் வேண்டும். அவை, நமது ஆணவ அழுக்கினால் உண்டான துர்நாற்றத்தைப் போக்கி அருள் புரியும்.
இது குறித்தொரு புராண வரலாறு ---
வாழ வைத்தவர் வீழ்ந்து ஒழிய வேண்டும். அப்பொழுதான் என் பெருமை தலை எடுக்கும் என்று எண்ணும் ஏழை அறிவினர் சிலர் அன்னாளிலும் இருந்தனர். அவர்களுள் ஒருவன்தான் சலந்தரன். சலந்தராசுரன் தன் மனைவியாகிய பிருந்தை தடுத்தும் கேளாது, சிவபெருமானோடு போர் புரிய வேண்டித் திருக் கயிலை நோக்கி வரும் வழியில், சிவபெருமான் ஓர் அந்தண வடிவம் கொண்டு நின்று, "எங்குச் செல்கின்றாய்" என்று வினவ, அவன் "சிவனோடு போர் புரிந்து வெல்லச் செல்கிறேன்" என்ன, பெருமான், "அது உனக்குக் கூடுமோ? கூடுமாயின், தரையில் நான் கீறும் சக்கரத்தை எடுப்பாய்" என்று ஒரு சக்கரம் கீற, அதை அவன் தோளின்மீது எடுக்க, அப்போது அது அவன் உடம்பைப் பிளக்கவே அவன் இறந்தொழிந்தான்.
சலந்தரன் உடல் குருதி, பொறுக்க முடியாத துர்நாற்றமாய் உலகைப் போர்த்தது. அதனால் தாங்க முடியாமல் தடுமாறிய அகில உலகமும், மூத்த பிள்ளையார் ஆகிய கணபதியை ஆராதித்தது. உடனே ஆனைமுகப் பெருமானின் ஊற்றெடுத்த அருள்மதம், எங்கும் வியாபித்து, அப் பொல்லாத நாற்றத்தைப் போக்கியது. அதன் மூலம் உலகமும் உய்ந்தது என்கின்றது காஞ்சிப் புராணம்.
“விழிமலர்ப் பூசனை உஞற்றித் திருநெடுமால்
பெறும் ஆழி மீளவாங்கி,
வழிஒழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி
முடைநாற்றம் மாறும் ஆற்றால்,
பொழிமதநீர் விரை ஏற்றி விகடநடப்
பூசைகொண்டு புதிதா நல்கிப்,
பழிதபு தன் தாதையினும் புகழ்படைத்த
மதமாவைப் பணிதல் செய்வாம்.” --- காஞ்சிப் புராணம்.
இதன் பொருள் ---
திருமால் சிவபூசையில் தனது கண்மலரைச் சாத்திப்பெற்ற சக்கரத்தை, விநாயகர் ஓர்வழியால் கொண்டு, அறவழி ஒழுகாத சலந்தரனைத் தடிந்த முடைநாற்றம் நீங்க மதநீரால் மணம் ஏற்றி விகடநடப் பூசை கொண்டு புதிதாக்கித் தந்து பழியை நீக்குகின்ற தனது தந்தையாகிய சிவபரம்பொருளினும் புகழ் படைத்த அவ்விநாயகரை வணங்குவாம்.
No comments:
Post a Comment