பின் நிற்பார் இன்மை பேணுதல்


பின் நிற்பார் இன்மை பேணுதல்

-----


    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ‘நாலடியார்’ சமண சமயத்தைச் சார்ந்த பண்டைத் தமிழ்ப் பெரும்புலவர்களால் அருளிச் செய்யப்பட்டது. துறவறத்தையே பெருநெறியாக உடையவர்களf, இல்லறநெறியின் இன்றியமையாமையையும் சிறப்பாக உணர்த்தி, மகளிர்க்குச் சிறந்த கற்புநெறியைக் காட்டி உள்ளனர். “பெறுநசையால் பின் நிற்பார் இன்மையே பேணும் நறுநுதலாள் நன்மைத் துணை” என்று வாழ்க்கைத் துணை பற்றிக் கூறுகின்றனர். தன்னைப் பிறர் நோக்காதவாறு நடந்து கொள்ளுதலே கற்புடைமை என்பது இதன் பொருள்.

    கற்புடைமை என்பது, ‘தன் மனம் நெறி தவறாமல் பாதுகாத்தல்’ மட்டுமல்லாமல், ‘பிறர் மனம் தன்னை விரும்பாமல் அமைதியாய் நடந்துகொள்ளுதல்’ என்பது அறிவுறுத்தப்பட்டது. பிறர் மனத்தைத் திரித்த பாவம் இதனால் உண்டாகும். கணவனைத் தவிர்த்த மற்ற யாருடைய மனமும் தன்னை நாடாதவாறு அமைந்த தன்மையுடன் ஒழுகுதல் கற்புடைமை ஆகும் என்கிறது நாலடியார்.

    இக்கலாத்தில் பலரும் காணுமாறு பகட்டு உடை அணிதல் நாகரிகம் என்று கொள்ளப்படுகிறது. பின்நிற்பார் இல்லாமையை விரும்புபவர் பகட்டு உடையைத் தவிர்ப்பர். பின் நிற்பாரைப் பேணுதலும் இக்கால நாகரிகம் போலும். பகட்டு உடை அணிந்து பெருமை தேடிக் கொள்ள நினைப்பது சிறுமையையே உணர்த்தும். இனி, யாவரோடும் கலந்து பழகுதலும் நாகரிகம் என்று கொள்ளப்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் ஏழை எளியர்வர்களோடு கலந்து பழகுகின்றார்களா என்றால், இல்லை என்றே சொல்லலாம்.

    பின் நிற்பார் இன்மையைப் பேணுதல் என்பது தமிழர் வாழ்வியல் என்பது ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் சிறப்பாகச் சொல்லப்பட்டு உள்ளது. காவிரிப் பூட்பட்டினத்து அரசனாகிய ககந்தன் என்பவனது இளைய மகன், காவிரியில் நீராடிவிட்டுத் தனியே வந்த மருதி என்னும் பார்ப்பனப் பெண்ணைக் கண்டு காமுற்று அவளை அழைத்தான். அவள் மனம் கலங்கினாள். “கற்புடையை மகளிர் என்றால், அவர் பிறர் நெஞ்சில் புகமாட்டார்கள். நானோ இவன் உள்ளத்தில் புகுந்தேன். எனவே, எனக்கு என் கணவருடன் கூடி முத்தீப் பேணும் தகுதி எனக்கு இல்லை” என்று எண்ணி, பெருந்துயரத்தோடு தனது வீட்டிற்குச் செல்லாது, அவ்வூரில் தீயொழுக்கம் உடையவரை அறைந்து உண்ணும் பூதம் உறையும் கோயிலுக்குச் சென்று, “நான் எனது கணவனுக்கு யாதொரு குற்றமும் செய்யவில்லை. அப்படி இருக்க பிறன் ஒருவனுடைய நெஞ்சில் எளிமையாகப் புகுந்தேன். நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்குப் புலனாகவில்லை. தவறு செய்தவர்களைத் தண்டிக்காது இருப்பதால், நீ கோயிலில் இருப்பது பொய்யோ?” என்று அழுது அரற்றினாள். இதனை மணிகேமலையில் பின்வருமாறு காண்க.


“தெள்ளுநீர்க் காவிரி ஆடினள் வரூஉம்

பார்ப்பனி மருதியைப் பாங்கோர் இன்மையின்

யாப்பறை என்றே எண்ணின் ஆகிக்

காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்

நீவா என்ன, நேரிழை கலங்கி,


மண்திணி ஞாலத்து மழைவளந் தரூஉம்

பெண்டிர் ஆயின் பிறர்நெஞ்சு புகாஅர்,

புக்கேன் பிறன் உள்ளம், புரிநூன் மார்பன்

முத்தீப் பேணும் முறை எனக்கு இல் என,

மாதுயர் எவ்வமொடு மனையகம் புகாஅள்,


பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்

கொண்டோன் பிழைத்த குற்றம் தான்இ்(ல்)லேன்,

கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிது ஆயினேன்,

வான்தரு கற்பின் மனையறம் பட்டேன்

யான்செய் குற்றம் யான் அறிகில்லேன்

பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத்

தெய்வம் நீ எனச் சேயிழை அரற்றலும்


மாபெரும் பூதம் தோன்றி, மடக்கொடி!

நீகேள் என்றே நேரிழைக்கு உரைக்கும்,


தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப்

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்,

பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு

விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக்

கடவுள் பேணல் கடவியை ஆகலின்,

மடவரல் ஏவ மழையும் பெய்யாது,

நிறையுடைப் பெண்டிர் தம்மே போலப்

பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை,

ஆங்கவை ஒழிகுவை ஆயின், ஆயிழை

ஓங்கிரு வானத்து மழையும் நின் மொழியது;


பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக்

கட்டாது உன்னை என் கடுந்தொழிற் பாசம்,

மன்முறை எழுநாள் வைத்தவன் வழூஉம்

பின்முறை அல்லது என்முறை இல்லை,

ஈங்கு எழு நாளில் இளங்கொடி நின்பால்

வாங்கா நெஞ்சின் மயரியை வாளால்

ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டு என

இகந்த பூதம் எடுத்துரை செய்தது, அப்

பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன்

தாதை வாளால் தடியவும் பட்டனன்.”


இதன் பொருள் ---


    தெளிந்த நீரினையுடைய காவிரியில் நீராடி வருகின்ற பார்ப்பனியாகிய மருதியைப் பக்கத்தில் உள்ளோர் ஒருவரும் இல்லாமையால், அவளை மன உறுதியற்றவள் என நினைந்தவனாய், காவிரியின் கரையில் ககந்தனுடைய புதல்வன், நீ வா என அழைக்க, அவள் கலக்கமுற்று, அணுச்செறிந்த நிலவுலகத்தில், வேண்டியபோது மழையினைப் பெய்விக்கும் கற்புடை மகளிர் ஆயின், பிறர் உள்ளத்தில் புகுதல் இலர். நானோ அயலான் உள்ளத்தில் புகுந்தேன். ஆதலின் முந்நூலணிந்த மார்பினை உடைய அந்தணனது முத்தீயைக் காக்கும் தகுதி எனக்கு இல்லை என்று மிகப் பெரிய துன்பத்துடன் தனது மனைக்குச் செல்லாதவளாய், பூத சதுக்கத்தை அடைந்து வருந்தி, கணவனைப் பிழைத்த குற்றமொன்றும் இல்லேன், அயலானுடைய உள்ளத்தில் எளிதில் புகுந்தேன், மழையைத் தரும் கற்புடைய மகளிர்க்குரிய இல்லறத்தில் பொருந்தியவளாகிய நான் செய்த குற்றம் ஒன்றையும் அறியேன், நெறியல்லன செய்தோரைப் புடைத்து உண்பாய் என்று கூறப்படுகின்ற பூதசதுக்கத்துக் கடவுளாகிய நீ இங்கு இருப்பது பொய்ம்மையோ என மருதி பலவாறு புலம்புதலும்; மிகப் பெரிய சதுக்கப்பூதம் தோன்றி, மடக்கொடியே நீ கேட்பாயாக, பிற தெய்வத்தை வணங்காது தன் தெய்வமாகிய கணவனைத் தொழுது எழுகின்ற கற்புடை நங்கை, பெய் என்று சொல்லப் பெருமழை பெய்யும் என உரைத்த, தெய்வப் புலவராகிய திருவள்ளுவ நாயனாரது அப் பொருண்மொழியை நீ தெளியவில்லை. பொருளொடு புணராப் பொய்ம்மொழிகளையும் பொருளொடு புணர்ந்த நகைமொழிகளையும் பிறரிடம் கேட்டு, விழாக் காண்டலை விரும்பி, வேறு கடவுளை வணங்கும் தன்மை உடையவள் நீ ஆனாய். எனவே, நீ ஏவினால் மழையும் பெய்யாது, பிறருடைய உள்ளத்தைச் சுடுகின்ற தன்மையை உடையவளும் நீ அல்ல. முற்கூறிய நினது செயல்களை நீங்குவாயானால்,  உயர்ந்த வானத்து மழையும் நீ ''பெய்'' எனச் சொன்னால் பெய்யும்.

    தான் விரும்பியவாறே ஒழுகுகின்ற பெண்களைக் கட்டுவதுபோல,  எனது கொடிய தொழிலையுடைய பாசமானது உன்னைக் கட்டாது. அரசன் முறை செய்யத் தவறினால் ஒழிய, நான் அவனை முறைசெய்வது இல்லை. இன்றைக்கு ஏழாம் நாளில் உன்னிடம் வைத்த உள்ளத்தை மீட்காத மயக்கமுடையோன், ககந்தன் கேள்வியுற்று வாளினால் தண்டிக்கப்படுவான் என்று பூதம் எடுத்துக் கூறியது. பூதம் உரைத்த நாளில் அவன் தன் தந்தையின் வாளால் வெட்டப்பட்டான்.

    ஆடம்பரமாக ஒழுகுதலே பிறர் நெஞ்சு புகுதற்குக் காரணம் ஆகிறது என்பது இதனால் சொல்லப்பட்டது. ஒருவனும் ஒருத்தியுமாய் வாழ்கின்ற காதல் வாழ்க்கை சிறப்புற்று மேம்படுவது, நாணம் என்னும் நல்லியல்பினால்தான். பெண்மை தன்மை கெட்டு, ஆண் தன்மையே மிகுந்து, நாணம் அற்று வாழ்வது பொதுமகளிரின் இயல்பு. மகளிர்க்கு நாணமே உயிர்க்குணம் என்பதை நாலடியார் பின்வருமாறு கூறும்.


“எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேற் சேர்ந்து எழினும்,

அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; - எஞ்ஞான்றும்

என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால்

பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.


அன்றாடம் என் கணவர் என்னோடு கூடி மகிழ்கின்றார். என்றாலும், அவர் என்னோடு முதன்முதலாக்க் கூடியபோது உண்டான நாணம் என்னை இன்னும் விட்டபாடில்லை. ஆனால், அன்றாடம் பலரோடு கூடி, பணத்துக்காகப் பரத்தையர் இன்றுபுகிறார்களே. இவர்கள் எல்லாம் எப்படித்தான் நாணத்தை விட்டு அனைவரோடும் கூடி இன்புறுகின்றார்களோ? இது எனக்கு விந்தையாய் உள்ளது, என்று தனது நாணுடைமையின் பெருமையை வெளிப்படுத்தினாள் தலைவி.


    இல்வாழ்க்கைக்குத் துணைவியர்க்குச் சிறப்புக்களாவன கணவருடைய வரவின் அளவைத் தெரிதலும், அதற்குத்தக்க செலவு செய்தலும் சுற்றம் தழுவுதலும், விருந்தோம்பலும், தெய்வத்தை வழிபடுதலும் என்பன. இல்லறத்தில் நிற்கும் பெண்டிரின் இயல்பைப் பின்வருமாறு எடுத்து ஓதுகின்றன நமது பண்டைய நூல்கள்.


“கொண்டான் குறிப்பொழுகல், கூறிய நாணுடைமை

கண்டது கண்டு விழையாமை,--விண்டு

வெறுப்பன செய்யாமை, வெஃகாமை நீக்கி

உறுப்போடு உணர்வு உடையாள் பெண். --- அறநெறிச்சாரம்.


இதன் பொருள் ---


கணவன் குறிப்பறிந்து ஒழுகுதலும், மகளிர்க்குக் கூறிய நாணினை உடைமையும், எப் பொருளையும் கண்டவுடன் மனம் சென்றவழிப் பெற விரும்பாமையும், கணவனுடன் மாறுபட்டு வெறுப்பனவற்றைச் செய்யாமையும் ஆகிய இவற்றை விரும்பி மேற்கொள்ளுதலோடு உடலழகும் அறிவும் உடையவளே பெண்ணாவாள்.


“கட்கு இனியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,

உட்கு உடையாள், ஊர்நாண் இயல்பினாள், - உட்கி

இடன் அறிந்து ஊடி இனிதின் உணரும்

மடமொழி மாதராள் பெண்.”          --- நாலடியார்


இதன் பொருள் ---


    பார்வைக்கு இனிய இயற்கையழகு உடையவளாய்த் தன் காதலன் விருப்பப்படி ஆடை அணிகலன்களைப் புனைந்து தன்னை அழகுபடுத்திக் கொள்பவளும், தனது கற்பொழுக்கச் சீரினால் கண்டார் எவரும் அஞ்சும் மதிப்பு உடையவளாய்த் தான் வாழும் ஊரிலுள்ள மகளிரெல்லாரும் தன்னுடைய இல்லறச் செய்கைகளின் திறமைக்கு வியந்து நாண்கொள்ளற்கு உரிய மாட்சிமை உடையாளும், தன் கணவன்பால் உள்மதிப்புக் கொண்டு செவ்வியறிந்து ஊடியும், அது இனிது ஆகும்படி அவ்வூடல் நீங்கியும் இன்பம் விளைக்கும் மென்மையான மொழிகளையுடைய பெண்ணே, இல்வாழ்க்கைக்குரியவள் ஆவாள். 


    இங்ஙனம் ஊடியும், உணர்ந்தும், கூடியும் வாழ்வதே நிறைந்த காதல் வாழ்க்கை எனக் காட்ட, “ஊடுதல் காமத்திற்கு இன்பம், அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின்” என்றும், “துனியும் புலவியும் இல்லாயின், காமம் கனியும் கருக்காயும் அற்று” என்றும் அருளினார் திருவள்ளுவ நாயனார். நினைத்ததற்கு எல்லாம் ஊடுதலும், மனம் கனிந்து தேற்றியும் ஊடல் ஒழியாது நிற்றலும் காதல் வாழ்க்கைக்கே அழிவு செய்யும் என்பதால், “இடன் அறிந்து ஊடி, இனிதின் உணரும் மாதராள்” என்று சொல்லப்பட்டது.



No comments:

திருமகள் வாழிடம்

திருமகள் விருப்பத்தோடு சேர்ந்து இருக்கும் இடங்கள் எவை எனத் திருவள்ளுவ நாயனார் காட்டுவது..... 1. அகன்அமர்ந்து செய்யாள் உறையும், முகன்அமர்ந்...