“குழீஇ இருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட,
வழீஇ இருந்த அங்கங்கள் எல்லாந் தழீஇஇருந்தும்
என்ஆனைக்கு ஆவா இதுதகா துஎன்னாமுன்
தென்ஆனைக் காஅடைநீ சென்று.”
இதன் பொருள் ---
குழீஇ இருந்த சுற்றம் குணங்கள் பாராட்ட - சுற்றிக் கூடியிருந்த சுற்றத்தார்கள் குணங்களை எடுத்துப் பாராட்டிக்கூற; வழீஇ இருந்த அங்கங்கள் எல்லாம் தழீஇ இருந்தும் – மரண காலத்தில் நழுவிக் கிடந்த அங்கங்களை எல்லாம் தழுவிச் சேர்த்து இருந்து கொண்டும்; என் ஆனைக்கு இது தகாது என்னா முன் – எனது ஆனைபோன்ற (தோற்றமும் நடையும் உடைய) இவருக்கு இவ்வாறு நேர்ந்தது தகாது என்று சொல்லித் துக்கப்படாத முன்னே; நீ சென்று தென் ஆனைக்கா அடை – மனமே! அழகிய திருவானைக்காவினை நீ சென்று அடைவாயாக.
எவர் ஒருவர் இறப்பினும் இறந்தவருடைய சுற்றத்தார்கள் இறந்தவரது மிகுதியான குற்றங்களை எல்லாம் மறைத்து விட்டுக் குணம் சிலவேயாயினும் அவற்றை எடுத்துக் கூறிப்பாராட்டுதல் வழக்கம். வழீஇ இருந்த அங்கங்கள் – (வழுவுதல் - நிலைகெடுதல்.) அங்கங்கள் - உடல் உறுப்புக்கள். இது – மரணம். இந்தக் கதி.
சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம் ஆகிய திருவானைக்கா திருச்சிராப்பள்ளி மாநகரின் ஒரு பகுதியாக உள்ள திருத்தலம். இறைவர், செழுநீர்த்தீரள்நாதர், ஜம்புகேசுவரர். இறைவியார், அகிலாண்டநாயகி, அகிலாண்டேசுவரி. தேவார மூவர் முதலிகள் (திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்) பாடி வழிபட்ட திருத்தலம். பஞ்சபூதங்களில் நீருக்கு உரிய திருத்தலம். நடராசர் சந்நிதிக்கு எதிரில் கோட்செங்கட்சோழ நாயனாரின் திருவுருவம் தனிச் சந்நிதியில் அமையப்பெற்றுள்ளது. இது, நாயனாரின் அவதாரத் திருத்தலம் ஆகும்.
கோச்செங்கண் சோழ நாயனார் வரலாறு
சோழ நாட்டிலே, காவிரிக் கரையிலே ஒரு தீர்த்தம் உண்டு. அதன் பெயர் சந்திர தீர்த்தம். அதன் அருகே ஒர் அழகிய வனம் இருந்தது. அவ் வனத்தில் ஒரு வெண்நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அது, ஒரு வெள்ளானைக்குப் புலப்பட்டது. அந்த யானை துதிக்கையால் நீரை முகந்து வந்து சிவலிங்கத்தை அபிடேகம் செய்யும். மலரைச் சாத்தும். இவ்வாறு நாள்தோறும் அந்த யானை சிவபெருமானை வழிபட்டு வந்தது. அதனால், அத் திருப்பதிக்குத் "திரு ஆனைக்கா" என்னும் திருப்பெயர் உண்டாயிற்று.
அங்கே ஞான உணர்வு உடைய ஒரு சிலந்தியும் இருந்தது. சிவலிங்கத்தின் மீது சருகு உதிர்வதை அச் சிலந்தி கண்டது. அதைத் தடுக்கும் பொருட்டு, அச் சிலந்தி, தனது வாய் நூலால் மேல்கட்டி அமைத்தது. பூசைக்கு வரும் வெள்ளானை, அம் மேற்கட்டியைக் கண்டு, அனுசிதம் என்று அதனை அழித்தது. சிலந்தி அதைப் பார்த்து, துதிக்கை சுழன்றமையால் விதானம் அழிந்தது போலும் என்று கருதி, மீண்டு விதானம் அமைத்தது. அடுத்த நாளும் யானை விதானத்தை அழித்தது. சிலந்திக்குச் சினம் மூண்டது. யானையின் துதிக்கயுள் புகுந்து கடித்தது. யானை விழுந்து, துதிக்கையை நிலத்தில் மோதி மோதி இறந்தது. சிலந்தியும் மாண்டது. சிவபெருமான் யானைக்குச் சிவகதி வழங்கினார். சோழர் குலத்தில் பிறக்குமாறு சிலந்திக்குத் திருவருள் புரிந்தார்.
சுபதேவர் என்னும் ஒரு சோழ மன்னர் இருந்தார். அவர் மனைவியார் கமலவதியார். அவர்க்குப் புத்திரப் பேறு இல்லாமல் இருந்தது. அப் பேறு குறித்து அம்மையார் தில்லைக் கூத்தனைப் போற்றுவது வழக்கம். தில்லைக் கூத்தன் திருவருளால் அம்மையார் கருவுற்றார். அக் கருவில் திருவானைக்காச் சிலந்தியின் ஆருயிர் சேர்ந்தது.
கமலவதியார் கரு உயிர்க்கும் நேரம் வந்தது. "பிள்ளை இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமாயின், அது மூவுலகங்களையும் ஆள்வதாகும்" என்று காலக் கணக்கர்கள் சொன்னார்கள். அது கேட்ட கமலவதியார், "அப்படியானால், என்னைத் தலை கீழாகக் கட்டுங்கள்" என்று கூறினார். அவ்வாறே செய்ய, ஒரு நாழிகை கழிந்தது. பிள்ளை காலம் தாழ்த்துப் பிறந்தமையால், சிவந்த கண்ணை உடையதாய் இருந்தது. அதைக் கண்ட அன்னையார், "என் கோச்செங்கண்ணானோ?" என்று சொல்லிக் கொண்டே இறந்தார்.
சுபதேவர் பிள்ளையை வளர்த்தார். தக்க வயதில் பிள்ளைக்கு முடி சூட்டினார். பின்னே, அவர் தவநெறி நின்று சிவனடி சேர்ந்தார். கோச்செங்கண் சோழருக்கு முன்னை உணர்வு முகிழ்த்து இருந்தது. அவர் திருக்கோயில்கள் கட்டுவதில் ஆர்வம் கொண்டு இருந்தார். தாம் முன்னே திருவருள் பெற்ற திருவானைக்காவினை நாடிச் சென்று, அங்கே திருக்கோயில் அமைத்தார். சோழநாட்டிலேயே பல திருக்கோயில்களைக் கட்டுவித்தார். எழுபது மாடக் கோயில்களை அவர் சமைத்தார். இவற்றில் திருமால் கோயில்களும் அடங்கும். இதனை ஆழ்வாரும் சிறப்பித்து உள்ளார். கோச்செங்கண் சோழ நாயனார் தில்லை சேர்ந்தார். தில்லைக் கூத்தனை வழிபட்டார். தில்லைவாழ் அந்தணர்க்கு மாளிகைகள் கட்டிக் கொடுத்தார். இவ் வழியில் திருத்தொண்டுகள் பல செய்து நாயனார், சிவபெருமான் திருவடி நிழலைச் சேர்ந்தார்.
வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "நால் திசையும் தேனை, காவுள் மலர்கள், தேம் கடல் என்று ஆக்குவிக்கும் ஆனைக்கா மேவி அமர் அற்புதமே" என்று போற்றி உள்ளார்.
அப்பர் பெருமான் இத் திருத்தலத்து இறைவர் மீது பாடியருளிய திருத்தாண்டகத் திருப்பதிகம், அனைவரும் ஓதி வழிபடுவதற்கு உரியது.
“எத்தாயர், எத்தந்தை, எச்சுற்றத்தார்,
எம்மாடு சும்மாடுஆம், ஏவர் நல்லார்,
செத்தால்வந்து உதவுவார் ஒருவர் இல்லை,
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்,
சித்துஆய வேடத்தாய், நீடு பொன்னித்
திருவானைக் காஉடைய செல்வா, என்தன்
அத்தா,உன் பொற்பாதம் அடையப் பெற்றால்,
அல்லகண்டம் கொண்டுஅடியேன் என்செய் கேனே.”
இதன் பொருள் ---
(அடியேன் பல பிறவிகளை எடுத்து உள்ளேன். பிறவிகள் தோறும் எனக்குத் தாய்தந்தயர், சுற்றத்தார் அமைந்து உள்ளனர். அவர்களுள்) எந்த தாய், எந்த தந்தை, எந்த சுற்றத்தார் நமக்கு நல்லவர்கள்? எந்தச் செல்வம் நம்மைத் தாங்கக் கூடிய நல்ல செல்வம் ஆகும்? யார் நல்லவர்? நாம் இறந்தால் நமது உறவினர்களோ, நாம் ஈட்டி வைத்த செல்வமோ நமக்கு உதவும் வாய்ப்பு இல்லை. சிறிய விறகால் தீ மூட்டி இறந்த உடலைக் கொளுத்தி விட்டு எல்லோரும் பிரிந்து செல்வர். ஆதலின் உடலுக்கு உறவாக அமைந்தவர்கள் மீது கொள்ளும் பற்றினை விடுத்து, உயிருக்கு உறவாக அமைந்துள்ள “என் தலைவனே! ஞானவடிவினனே! நீர்வளம் மிக்க காவிரிக் கரையில் அமைந்த திருவானைக்காவைத் தமக்கு இடமாக விரும்பி எழுந்தருளியிருக்கும் செல்வனே! உன் பொலிவுடைய திருவடிகளைச் சரணாக அடையப்பெற்றால், துன்பத்தால் வருந்தும் நிலையை நான் அடைவேனோ? (கூ கா என என் கிளை கூடி, அழப் போகா வகை உண்டாகும்)
“ஊன்ஆகி, உயிர்ஆகி, அதன்உள் நின்ற
உணர்வுஆகி, பிறஅனைத்தும் நீயாய் நின்றாய்,
நான்ஏதும் அறியாமே என்உள் வந்து
நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்,
தேன்ஆரும் கொன்றையனே, நின்றி யூராய்,
திருவானைக் காவில்உறை சிவனே, ஞானம்
ஆனாய்,உன் பொற்பாதம் அடையப் பெற்றால்,
அல்லகண்டம் கொண்டு அடியேன் என்செய் கேனே.”
இதன் பொருள் ---
திருவானைக்காவில் உறையும் சிவபெருமானே! ஞானவடிவினனே! என் உடம்பாய் உயிராய், உயிருள் இருக்கும் ஞானமாய்ப் பிற எல்லாமாகவும் நீயே உள்ளாய். நான் ஏதும் அறியாத நிலையில் என்னுள் வந்து சேர்ந்து, எனக்கு நல்ல செயல்களையும் தீய செயல்களையும் அறிவிக்கின்றாய். தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையை அணிந்தவனே! திருநின்றியூரில் உறைபவனே! உன் அழகிய திருவடிகளை அடியேன் அடையப் பெறுவேனானால் துன்பத்தால் வருந்தும் நிலை எனக்கு ஏற்படாது.
No comments:
Post a Comment