“அழுகு திரிகுரம்பை ஆங்குஅதுவிட்டு ஆவி
ஒழுகும் பொழுதுஅறிய ஒண்ணா; - கழுகு
கழித்துஉண்டு அலையாமுன், காவிரியின் தென்பாற்
குழித்தண் டலையானைக் கூறு.”
இதன் பொருள் ---
அழுகு திரி குரம்பை ஆங்கு அது விட்டு - அழுகும் இயல்புடைய திரிந்து கெட்டுப் போதற்கு இடமாகிய உடம்பை விட்டு, ஆவி ஒழுகும் பொழுது அறிய ஒண்ணா - உயிர் நீங்கும்போது அறிய ஒண்ணாது. கழுகு கழித்து உண்டு அலையா முன் - கழுகு உண்டு கழித்துச் சிதைந்து உடல் அலைபடாத முன்னம்; காவிரியின் தென்பால் – காவிரியின் தென்கரையில் அமைந்து உள்ள, குழித் தண்டலையானைக் கூறு – குழித்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருகோஇல் கொண்டு எழுந்தருளியுள்ள இறைவரின் திருநாமத்தைக் கூறுவாயாக.
அழுகு திரி குரம்பை – அழுகு குரம்பை, திரி குரம்பை எனத் தனித்தனி கூட்டுக. அழுகுதல் – கெடுதல். கணம் தோறும் வளர்தலும், கணம் தோறும் கெடுதலும் உடைய உடம்பு இது. திரிதல் – விகாரப் படுதல். “வேற்று விகார விடக்கு உடம்பு” என்றார் மணிவாசகப் பெருமான். ஒழுகுதல் – ஓட்டைக் குடத்தில் இருந்து நீர் நீங்குவது போல, உடலில் இருந்து உயிர் பிரிதல். “திருத்தண்டலை” என்பது தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். “நீள்நெறி” என்பது அத்தலத்தில் உள்ள திருக்கோயிலின் பெயர். தற்காலத்தில் ‘தண்டலைச்சேரி’ என்றும் ‘தண்டலச்சேரி’ என்றும் வழங்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டியிலிருந்து 3 கி. மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்திற்கு பக்கத்தில் 'மணலி ' புகைவண்டி நிலையம் உள்ளது. திருஞானசம்பந்தப் பெருமானார் பாடி வழிபட்ட திருத்தலம்.
குழித்தண்டலை என்பதை, குழித்தலை என்று கொள்வோரும் உண்டு. குளித்தலை என்றும் வழங்கப்படுகிறது. இது கடம்பர் கோயில் என விளக்கமாய் அறியப்படுவது. திருக் கடம்பந்துறை என்று திருமுறையில் அறியப்படுவது. அப்பர் பெருமான் பாடி வழிபட்ட சோழநாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம். இத்திருத்தலம் குளித்தலை என்னும் நகரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. கரூரில் இருந்தும், திருச்சியில் இருந்தும் இத்தலத்திற்குச் செல்லலாம். குளித்தலை இரயில் நிலையம் திருச்சி - கரூர் - ஈரோடு வழித்தடத்தில் உள்ளது.
No comments:
Post a Comment