96. இளைத்தவன் மனைவி என்றால்...

களித்துவரும் செல்வருக்கு வலிமையுண்டு!

     மிடியருக்குக் கனந்தான் உண்டோ?

வளைத்தமலை யெனுஞ்சிலையார் தண்டலைசூழ்

     தரும்உலக வழக்கம் பாரீர்!

ஒளித்திடுவர் தம்மனையிற் பெண்டீரைக்

     கண்டவரும் ஒன்றும் பேசார்!

இளைத்தவன்பெண் டீரென்றால் எல்லார்க்கும்

     மச்சினியாய் இயம்பு வாரே.


இதன் பொருள் ---


    வளைத்த மலை எ(ன்)னும் சிலையார் தண்டலை சூழ்தரும் உலக வழக்கம் பாரீர் - வளைந்த மலையை வில்லாக ஏந்திய சிவபெருமான்  எழுந்தருளி இருக்கும் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தைச் சூழ்ந்த உலகத்தின் வழக்கத்தைப் பாருங்கள்!, தம் மனையில் பெண்டீரைக் கண்டு ஒளித்திடுவர்; அவரும் ஒன்றும் பேசார் - செல்வ வலிமை உடையோர் வீட்டில் உள்ள பெண்களைக் கண்டு ஒளித்திடுவார்; ஒன்றும் பேசவும் மாட்டார் (எனினும்), இளைத்தவன் பெண்டீர் என்றால் எல்லோர்க்கும் மச்சினியாய் இயம்புவார் – ஆற்றலு அற்றவன்  மனைவி என்றாலோ யாவருக்கும் மைத்துனியாகக் கொண்டு நகையாடுவர்; (ஆகையால்), களித்து வரும் செல்வருக்கு வலிமையுண்டு - களிப்புடன் வரும் செல்வர்களுக்கு ஆற்றலுண்டு; மிடியருக்குக் கனந்தான் உண்டோ - ஏழைகட்கு அப் பெருமை உண்டாகுமோ?


      சிவபெருமான் மேருமலையை திரிபுர தகனத்தின்போது) வில்லாக வளைத்ததனால், வளைத்தமலை எனும் சிலையார், என்றார். (சிலை – மலை) ‘இளைத்தவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி' என்பது பழமொழி.


No comments:

பொது --- 1122. மக்கள் ஒக்கல் தெரிவை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மக்கள் ஒக்கல் (பொது) முருகா!  தேவரீரது திருவடி மலர்களை வழிபட்டு உய்யும் புத்தியை அடியேனுக்கு அருள்வாயாக. த...