அறிவு
---
பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றுள்ள மனிதனுக்குத் தனியான, தலையான அறிவு ஒன்று உண்டு. அதுவே ஆறாவது அறிவு. நல்லதன் நலனும் அல்லதன் தீமையும் எண்ணிப் பார்த்து, அல்லதை விலக்கி நல்லதைச் செய்யுமாறு அந்த அறிவு வழி காட்ட வேண்டும். அதற்குத் துணை நிற்பது கல்வி அறிவு. “தாயாய் முலையைத் தருவானே! தாராது ஒழிந்தால் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ?” என்றார் மணிவாசகப் பெருமான். தாய்ப்பால் இல்லாத குழந்தை சவலைக் குழந்தை ஆகிவிடும். கல்வி அறிவு எனப்படுவது, ஆன்றோர்கள் நமக்குப் பருகத் தந்த தாய்ப்பால். அதனை உண்டவன் உள்ளம் வளம்பெற வேண்டும். அதற்கு உண்டது செரிக்க வேண்டும். செரிமானம் ஆகவில்லையானால், உண்டதை வாந்தி எடுக்க நேரிடும். அதுபோலவே, கற்றதன் உண்மைப் பொருளை, உய்த்து உணர்ந்து அனுபவிக்க வேண்டும். அனுபவித்தால், “நிற்க அதற்குத் தக" என்பது சாத்தியம் ஆகும். கற்றதையே பிதற்றிக் கொண்டு இருப்பது அறிவு ஆகாது. “அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே” என்றார் மணிவாசகப் பெருமான். நல்லறிவு விளங்கி, அஞ்ஞானம் தொலைய வேண்டும். அதுதான் அறிவுபெற்ற நிலை. அப்படிப்பட்ட அறிவு பெற்றவர் உலகை வழிநடத்திச் செல்வாரானால், உலகம் செழிக்கும்.
புத்தகங்களை வாங்கி அழகுபெற அடுக்கி வைத்தும், பட்டங்களை வாங்கி வைத்தும், வாழ்க்கையின் வசதிகள் எல்லாவற்றையும் வளைத்துப் போட்டும் வாழ்வதால் ஒருவனுக்கு நல்லறிவு துலங்குவது இல்லை.
“புத்தகமே சாலத் தொகுத்தும், பொருள் தெரியார்,
உய்த்து அகம் எல்லாம் நிறைப்பினும், - மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே; பொருள் தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.”. --- நாலடியார்.
இதன் பொருள் ---
புத்தகங்களை மாத்திரமே மிகுதியாகத் தொகுத்து வைத்திருந்தும், அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் நுண்பொருள்களை அறியாதவராகி, அவற்றைக் கொண்டு வந்து வீடெல்லாம் நிறைத்தாலும், அப்புத்தகங்களைப் பாதுகாக்கும் புலவரும் வேறாயிருப்பார்கள். அவற்றின் பொருள்களை அறிந்து பிறருக்குத் தெளிவிக்கும் அறிவுடையோரும் வேறாகவே இருப்பார்கள்.
புத்தகங்களைத் தொகுப்பது மட்டுமே புலமை ஆகாது; அவற்றைக் கற்றுத் தாம் தெளிந்து, பிறரையும் தெளிவுறுத்தும் அறிவுச் செழுமையே புலமை ஆகும். “பக்கத்தில் இருப்பவர் துன்பம் தன்னைப் பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி. ஒக்கத் திருந்தி உலகோர் நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி” என்று பாடுவார் பாரதியார். பட்டங்கள் பெற்று, பதவிகளில் இருந்து, பெரும்பணத்தைக் குவித்து வைத்திருக்கும் பெரியவர்கள் புண்ணியவாளர்கள் அல்ல. தோற்றத்தால் அருளாளர் போன்று இருக்கும் ஆன்மிகவாதிகள் யோகியர் அல்ல. பக்கத்தில் இருக்கும் சாதாரண மனிதன் படுகின்ற துன்பத்தைப் பார்த்துப் பொறுக்காதவனே புண்ணியமூர்த்தி. உலகோர் நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவனே யோகி.
“அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.” – நாலடியார்.
இதன் பொருள் ---
நீதிநெறிமுறைகளை அறிந்து நடந்து கொள்ளுங்கள். எமன் ஒருநாள் வருவான் என்கிற அச்சம் உங்கள் உள்ளத்தில் இருக்கட்டும். மற்றவர் கூறும் கடுஞ்சொற்களைக் கேட்டுச் சினம் கொள்ளாது பொறுத்துக் கொள்ளுங்கள். யாரையும் வஞ்சிக்காதீர்கள். தீயவர்களின் நட்பை விட்டு ஒழியுங்கள். எப்போதும் நல்லோர் கூறும் அறவுரைகளைக் கேட்டு வாழுங்கள்.
இக்காலத்தில் அறநெறி இது என்று காட்டும் அறிவின் நிலையைச் சற்றே எண்ணிப் பார்க்க வேண்டும். நூல்களைப் படிப்பது – மனப்பாடம் செய்வது - தேர்வில் வெற்றி பெறுவது அறிவு என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். உலகம் அதைத்தான் போற்றுகின்றது. நூலறிவு உண்மை அறிவு ஆகாது. அது வெற்றறிவு. நூலறிவு நுண்ணறிவாக மாறவேண்டும். நூலறிவு இல்லாத நமது மூதாதையர் வாழ்ந்த அமைதியான வாழ்க்கையை, நூலறிவு பெற்றுள்ள நம்மால் வாழமுடிவதில்லை. யாருக்கும் அறிவு இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. "மாந்தர்க்குக் கற்ற அனைத்து ஊறும் அறிவு” என்று திருவள்ளுவ நாயனார் சொல்லுகிறார். அறிவின் நிலையில் பலபடிகள் உண்டு. மேல் மாடிக்குச் செல்வதற்குப் பலபடிகளைக் கடந்து செல்ல வேண்டும் என்பது முறை. இன்று மின்தூக்கிகள் வந்த போதிலும் படிக்கட்டுதான் இக்கட்டில் எப்போதும் பெரிதும் உதவுகின்றது. பல படிகளைக் கடந்துதான் நாம் மேலே செல்ல வேண்டும். அந்தப் படிகளின் அமைப்பைப் போலத்தான் அறிவின் பல படிகளும் அமைகின்றன. அப்படி, அறிவானது படிநிலையில் வளரவளர, நாம் அறிந்ததைக் காட்டிலும் அறியாதவை பலப்பல என்ற உண்மை விளங்கும்.
புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் அறிவு ஊறுவது இல்லை. கற்றதை "உணர்தல்" வேண்டும். அந்த உணர்வு திருவருள் வழியாகக் கிடைக்க வேண்டும். அது கிடைத்தால் உய்தி உண்டு.
படித்தல் --- எழுத்தை மேலெழுந்தவாரியாக வாசித்தல்.
கற்றல் --- கருத்து ஊன்றித் திருத்தம் உறக் கவனித்தல்.
அறிதல் --- சொல்லின் பொருளைத் தோய்ந்து தெளிதல்.
உணர்தல் --- சொல்லின் உட்குறிப்புகளை ஆராய்ந்து தெளிதல்.
உய்தல் --- தெளிந்தபடி சீலமாய் ஒழுகி உயர்தல்.
அறிதல், தெரிதல், கற்றல், என்ற சொற்களை எல்லாம் விட்டுவிட்டு, "உணர்தல்" என்னும் அருமையான சொல்லைக் கையாண்டு உள்ளார் தெய்வச் சேக்கிழார் பெருமான். சீகாழியில் பிரமதீர்த்தக் குளக்கரையில், அம்மே அப்பா என்று அழுதுகொண்டு இருந்த திருஞானசம்பந்தருக்கு, சிவபெருமான் பணிக்க, எண்ணரிய சிவஞானத்து இன்னமுதைக் குழைத்து உமையம்மையார் கொடுத்த பாலைக் குடித்தவுடன்,
"சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்,
பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்,
உவமை இலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம்,
தவமுதல்வர் சம்பந்தர் தாம்உணர்ந்தார் அந்நிலையில்"
என்கின்றார் தெய்வச் சேக்கிழார். "சம்பந்தர் அறிந்தார்" என்று சொல்லவில்லை. "உணர்ந்தார்" என்றுதான் சொன்னார். "தாம் உணர்ந்தார்" என்றார். உணர்த்த வேண்டிய ஒருவர் உணர்த்த உணர்தலை இது குறிக்கும். உணர்த்தியது சிவபரம்பொருள். உணர்ந்தவர், அவரது திருவருள் பெற்ற திருஞானசம்பந்தர். இதைத் தான், "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்று அருளினார் மணிவாசகப் பெருமான்.
மணல்கேணியைத் தோண்டுவது போல, சிறுமுயற்சியோடு நூல்களைக் கற்கவேண்டும். கற்பதற்கு வயது ஒரு பொருட்டு அல்ல. எந்த வயதிலும் கற்கலாம். நூலறிவு நுண்ணறிவாக மாறியது என்றால் கற்றதன் பலன் விளைந்தது என்று பொருள். நுண்ணறிவு சிறக்கவேண்டுமானால், கற்கின்ற நூல்களின் பொருளை உணர்ந்து ஓதவேண்டும். நூல்களில் இரண்டுவகை உண்டு. ஒன்று உலகநூல். இன்னொன்று அறிவுநூல். உலகநூல் வயிற்றுப் பாட்டுக்கு உதவும். அறிவுநூல் ஆன்ம வளர்ச்சிக்கு உதவும். வாழ்வில் உண்டாகும் தடுமாற்றத்தைத் தவிர்க்கும். அட்டைப் பகட்டோடு வருகின்ற நூல்கள் அறிவு வளர்ச்சிக்கு உதவுவது இல்லை.
கலையறிவு என்பது நூல்களைப் படிப்பதால் உண்டாகும் அறிவு. அருளறிவு என்பது திருவருளை முன்னிட்டுப் படிப்பதால் உண்டாகும் மெய்யறிவு. "பத்து ஆள்சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம். சூல்வண்டி ஆயிரம் கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை, ஒருவன் அருள் முன்னிடமாகச் சுத்தசிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம்" என்கின்றார் திருக்குறளைப் பதிப்பித்து, திருக்குறள் வகுப்பு நடத்தியவர் வள்ளல்பெருமான்.
நாம் நமது கைகளைத் தொட்டு, மணல் குழியில் எவ்வளவு ஆழம் தோண்டுகின்றோமோ, அந்த ஆழத்திற்குத் தகுந்தவாறு நீர் கிடைக்கும். அதுபோல நாம் எவ்வளவு புத்தகங்களைப் படிக்கிறோமோ அந்த அளவிற்கு அறிவு நமக்குக் கிடைக்கும் என்பது திருவள்ளுவர் வாக்கு. புத்தகத்தைப் படிப்பதின் மூலம் நமக்குக் கிடைக்கும் அறிவு, கலையறிவு எனப்படும்.
இந்தக் கலையறிவைக் கொண்டே அவரவர்க்கு விருப்பமான அல்லது வாய்க்கின்ற துறைகளில் வாழ்க்கைப் பயணத்தைச் செலுத்த முடிகின்றது. அப்படிப் பயணிப்பவர்கள், தாம் எடுத்த இந்தப் பிறவியில் ஆயிரம் நூல்களைப் படிப்பதோடு நில்லாமல், மேலும் அறிவு நூல்களைக் கற்று அறிந்தால் அவர்களது அறிவு மேலும் ஒளிரும் என்பதில் ஐயமில்லை. ஆயிரம் நூல்கள் என்பது எடை அளவிலா, அல்லது பக்க அளிவிலா? வள்ளல்பெருமான் சொன்ன கணக்கைப் போட்டுப் பார்ப்போம்.
ஒரு ஆள்சுமை என்பது சராசரியாக 50 கிலோ என்று வைத்துக் கொள்வோம். பத்து ஆள்சுமை என்பது 500 கிலோ ஆகும். அது ஒரு வண்டிப் பாரம். இப்படி 400 வண்டிச் சுமை கொண்டது ஒரு சூல்வண்டிப் பாரம், அதவாது 2,00,000 கிலோ ஆகும். சூல் வண்டி ஆயிரம் கொண்டது என்றால், 20,00,00,000 கிலோ ஆகும். ஆக, 20 கோடி கிலோ எடையுள்ள (2,00,000 டன்) புத்தகத்தை ஒருவன் தான் எடுத்த இந்த ஜென்மத்தில், அதிதீவிர முயற்சியை மேற்கொண்டால் படித்து முடிக்கலாம் என்பது வள்ளல்பெருமானாரின் கணக்கு.
நமக்குத் தெரிந்த, பிடித்தமான, பரிச்சயமான ஒரு நூல் என்பது சுமார் ஐந்து கிலோ எடை இருப்பதாகக் கொண்டால், அது போன்று எடையுள்ள 4 கோடியே 20 லட்சம் நூல்களை நாம் இந்தப் பிறவியில் அதிதீவிர முயற்சி எடுத்தால் படித்து முடிக்கலாம். அதாவது, நாம் விரும்புகின்ற ஒரு நூலை, 4,20,00,000 முறை முழுதும் படிப்பதற்குச் சமம். நம்மில் பலருக்கும் அதிதீவிர முயற்சி என்பது அறிவைப் பெறுவதில் இல்லை என்பது மட்டும் அல்லாமல், சுத்தசிவ நோக்கமும் (திருவருள்) இல்லை என்பதுதான் நிதரிசனம். இன்னொரு காரணம், நமது வாழ்நாள் குறுகியது. போராட்டங்கள் நிறைந்தது. வாழ்நாள் குறுகியது என்றால், முயற்சியை நீட்டிக்க வேண்டும். வாழ்நாளை நீட்டிக்க முடியாது.
"வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்,
பாதியும் உறங்கிப் போகும், நின்றதில் பதினை யாண்டு
பேதை பாலகனது ஆகும், பிணிபசி மூப்புத் துன்பம்,
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகர் உளானே."
என்கின்றார் தொண்டரடிப்பொடி ஆழ்வார். ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதாகவே வேதநூலின்படி கொண்டாலும், அதில் பாதி, 50 ஆண்டுகள் உறக்கத்திலேயே கழிந்துவிடும். எஞ்சி உள்ளது, 50 ஆண்டுகளே. அதில் 15 ஆண்டுகள் பேதை, பாலகன் என்ற நிலையில் கழியும். எஞ்சி உள்ளது 35 ஆண்டுகள். இதிலும் தாகம், பிணி, பசி, மூப்பு, துன்பம் எனப் பலகாலம் போய்விடும். (நூறு வயது என்று சொல்லப்பட்டு, அதிலே பலகாலம் இப்படிக் கழிந்தால், மீதி உள்ளதை வைத்துக் கொண்டு உருப்படியாக என்ன செய்வது?) ஆதலால், எனக்குப் பிறவி வேண்டாம் என்று அரங்கனிடம் சலிப்போடு முறையிடுகின்றார் ஆழ்வார். இப்படி, சின்னாள், பல்பிணி கொண்ட வாழ்நாளில், வயிற்றுப் பாட்டுக்குப் படிப்பதற்கே (கலையறிவு பெறுவதற்கே) போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது. இதில், அருளறிவுக்கு முயல்வது எப்படி? இதுதான், பிரச்சினையா? முயற்சி இன்மைதான் பிரச்சினை. “முயற்சி திருவினை ஆக்கும்” என்றார் திருவள்ளுவ நாயனார்.
தண்ணீர் வேண்டும் என்றால் தோண்டித்தான் ஆகவேண்டும். அருளறிவு வேண்டும் என்றால் முயன்றுதானே ஆகவேண்டும். முயன்று பாருங்கள். உங்களது முயற்சிக்குத் திருவருள் துணை நிற்கும். நிலையில்லாத பொருட்செல்வத்தைத் தேடி வாழ்நாள் முழுக்க உழைக்கின்றோம். கேடு இல்லாத மேன்மையைத் தருவதாகிய கல்விச் செல்வத்தையும் வாழ்நாள் முழுதும் தேடவேண்டும். தேடிய செல்வம் போதும் என்று யாரும் இருப்பது இல்லை. ஆனால், கற்ற கல்வி போதும் என்று அமைந்துவிட்டு, கற்றதை வைத்துச் செருக்குக் கொண்டு இருப்போரைக் காணலாம். "முற்றும் உணர்ந்தவர் இல்லை; முழுவதும் கற்றனம் என்று களியற்க" என்கின்றார் குமரகுருபர அடிகள். "கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு. கலைமகளும் தினமும் படித்துக் கொண்டு இருக்கிறாள். ஏதோ கொஞ்சும் படித்துவிட்டு, நான் நிரம்பக் கற்றவன், நீ கற்றவனா என்று வாதம் செய்து கொண்டு இருக்காதீர்கள். எறும்பும் தன்னுடைய கையால் எட்டுச் சாண் உயரம் இருக்கும்" என்கின்றார் ஔவைப் பிராட்டியார்.
“கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகு அளவு என்று
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள்; – மெத்த
வெறும் பந்தயம் கூற வேண்டாம், புலவீர்!
எறும்பும் தன் கையால் எண்சாண்.”
கண்ணால் காணும் சிறு துாரத்தை எண்ணும்போது, அது அதிகமாகத் தெரிகிறது. ஆனால், ஒரு சிறிய தொலைநோக்கியில் அந்த அளவைக் காணும்போது, காணாத தூரம் இன்னும் விரிந்து கொண்டே செல்கிறது. பின்னர் அந்த தூரத்தையும் பிறிது ஒரு பெரிய தொலைநோக்கியைக் கொண்டு நோக்கும் போது, காணாது பரந்து நிற்பது இன்னும் விரிவடைகிறது. அறிவும் அத்தகையதே ஆகும். அறிய அறிய இன்னும் அறிய வேண்டுவது அதிகமாகின்றது. இதையே திருவள்ளுவ நாயனார் “அறிதோறு அறியாமை கண்டற்றால்” என உவமை முகத்தால் தெளிவிக்கின்றார். எனவே, அறிவுக்கு எல்லை இல்லை. எல்லையற்ற பரம்பொருளை ஓர் எல்லைக்குள் கொண்டு வந்து சிறுச்சிறிதாக அறிய முனைவது சமயம் சார்ந்த நெறிப்பட்ட வாழ்க்கை ஆகும். சட்டம் தவறு செய்த மனிதனைத் தண்டித்துத் திருத்த முயல்கிறது. சமயம் சார்ந்த, அறிவு சார்ந்த வாழ்க்கையானது, மனிதனை அறநெறியில் செலுத்தி வாழ்வாங்கு வாழச் செய்கிறது.
சமயத் தலைவர்களும் சமுதாயத்தைச் சீர்திருத்த வருபவரும் உயிர்கள் வாழ வழிவகுக்கும் நல்லவரும் காட்டும் அந்த அறிவுப் பாதையை,அறநெறியை நாம் அனைவரும் படிக்கிறோம், படிக்கக் கேட்கிறோம். ஆனால் பின்பற்றுகிறோமா? அவ்வாறு பின்பற்றாத மனிதனைப் பார்த்துப் பெரியவர்கள் அறிவற்றதென நாம் கருதும் மரத்தை, விலங்கை, பறவையை நமது மனக்கண் முன் நிறுத்திக் காட்டி அறிவுறுத்துகின்றனர்.
“சாந்தனையும் தீயனவே செய்திடினும், தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.”
என்பது ஒளவையார் அருள்வாக்கு. மனிதனால் மரம் வெட்டப்படுகிறது. பின் துளிர்த்து நிழல் தருகிறது. கோடை வெப்பத்தில் வெட்டிய அந்த மனிதனே அந்த மரத்தின் நிழலில் ஒதுங்குகிறான். “என்னை வெட்டிவிட்டு, எனது நிழலிலேயே வந்து ஒதுங்குகின்ற மனிதா!” என்று கூறி எந்த மரமும் நிழல் தர மறுப்பது இல்லை. அதுபோல அறிவுடையவர் தமக்குத் தீங்கு இழைக்கும் கொடியவனாக இருந்தாலும், துன்பம் வருங்கால் தம்மால் கூடிய வரையில் அவனைக் காத்து ஒம்புவர் என்கிறார் ஔவையார்.
அதுதான், உண்மையான அறிவு உள்ள மனிதனின் நிலை. அதுதான் அறவாழ்வும் கூட. தொல்காப்பியர் காலம் தொடங்கி, இந்நாள் வரை அறிவுள்ள பெரியோர்களும் அருளாளர்களும் இதைத்தான் வலியுறுத்திக் கூறுகின்றனர். இவற்றையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எண்ணிப் பார்த்து, மனிதகுலத்தின் மீது அளவற்ற கருணை கொண்டு திருவள்ளுவ நாயனார், “அறிவினுள் எல்லாம் தலை என்ப, தீய செறுவார்க்கும் செய்யாவிடல்” என்று தெளிவாக அருளினார். திருக்குறளைக் கற்று எழுதுவதோடு, மேடைகளிலும் முழங்கிப் பணம் பண்ணுவதையே அறிவு என்று எண்ணிக் கொள்ளுகின்ற அவலநிலை இன்றும் தொடர்கிறது. இதனாலேயே மனிதகுலம் பல்வேறு இன்னல்களையும் அனுபவித்துக் கொண்டு வருகிறது. பிற உயிர்கள் படும் துன்பத்தை, தான்படும் துன்பத்தைப் போல மதித்து நடந்து கொள்ளாதபோது, தான்பெற்ற அறிவினால் பயன் விளைவது உண்டோ? என்று கூறி மனிதகுலத்தைச் சிந்திக்க வைத்தார் திருவள்ளுவ நாயனார். “அறிவினால் ஆகுவது உண்டோ? பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக் கடை” என்பது திருக்குறள். மனிதகுலம் இதைச் சிந்தக்கத் தவறிவிட்டது என்றே இக்கால நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன.
ஒத்தாரும், உயர்ந்தாரும், தாழ்ந்தாரும், எவரும் ஒருமை உள்ளவர் ஆகி உலகியலை நடத்திடல் வேண்டும் என விழைந்த திருவருட்பிரகாச வள்ளற்பெருமான் காட்டிய வழியில் மனித இனமானது வாழ்ந்து ஓங்கி விளங்கிட வேண்டும். 'நாம் செய்த நல்வினையே நமக்குப் பலன்தரும்’ என்ற அறிவுரையைப் படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் மனிதன், அதற்கு நேர்மாறான காரியங்களையே செய்து வருகிறான்.
ஆறறிவு படைத்த மனிதன் பகுத்தறிவு, பகுத்தறிவு என்று பிதற்றிக் கொண்டு, உண்மையில் பகுத்தறிவு என்பதை உணர்ந்து திருந்தாத அவலநிலையை அன்றே உணர்ந்து, தனது காலத்திற்கு முன்னர் எத்தனையோ சான்றோர்களும் அருளாளர்களும் காட்டிச் சென்ற நெறியை உணராமல், நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைத்துக் கெடுகின்ற மனிதனை எப்படித்தான் திருத்துவது என்று சிந்தித்த ஔவையார், ஓரறிவு உடைய உயிர்களைக் காட்டியாகிலும் மனிதகுலத்தை நல்வழிப் திருத்தலாம் என எண்ணி, மரத்தைக் குறித்து மேலே காட்டிய பாடலைப் பாடினார்.
சாலை ஓரத்தில் வானோங்கிய நல்ல மரங்கள் நிழலைத் தந்து கொண்டிருக்கின்றன. அதன் தழைகளையும் கிளைகளையும் வெட்டுவதற்கு ஒரு மனிதன் வருகிறான். மொட்டை ஆகிய அந்த மரம் முன்னிலும் மேலாகத் தழைக்கிறது. கோடைக் காலம் வந்தபோது, அந்த மரத்தை வெட்டிய மனிதன், அதன் நிழலை அடைகிறான். இவன் தனது அங்கங்களையெல்லாம் வெட்டிச் சிதைத்தவனாயிற்றே என்று எண்ணி அவனுக்குத் நிழலைத் தர மறுக்கவில்லை மரம். அவனுக்குக் குளிர் நிழலைத் தந்து வெம்மையைத் தடுத்து அவனுக்கு இதம் செய்கிறது. (ஆனால், இன்றைய மனிதன் மனசாட்சி சிறிதும் இல்லாமல், அதிகாரம் தன்னிடத்து இருக்கின்றது என்ற செருக்குக் காரணமாக, மரங்களை வேரோடு வெட்டிச் சாய்த்துக் கொண்டு இருக்கிறான்.)
திருந்தாத மனிதனைத் திருத்த எண்ணி, ஔவையார் இந்தக் காட்சியினை ஒளவையார் எடுத்துக்காட்டினார். ஆனாலும் அந்த மனிதன், ஔவையார் பாடல்களையும் படித்துக் கொண்டு, படித்தவற்றை மற்றவர்க்கு உபதேசித்துக் கொண்டே, அழிவுப் பாதையில் போய்க்கொண்டுதான் இருக்கின்றான். அவன் பேசுவதையும் அறிவு அறிவு என்று பாராட்டுகின்ற ஒரு கூட்டம், அவனோடு அழிவுப் பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது.
அறிவு என்பது வெறும் ஏட்டுப் படிப்பால் மட்டும் வருவது அல்ல. அது உண்மையானால், படித்த பலர் வாழும் இன்றைய உலகில் கொடுமைகள் பெருகிக் கொண்டே போவது ஏன்? எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத ஓரறிவு உயிராகிய மரத்துக்கே இவ்வளவு கேட்டினை விளைவிக்கும் மனிதனால், மனிதகுலத்துக்கு என்ன நன்மை விளைந்துவிடப் போகிறது? எனவேதான் திருவள்ளுவ நாயனார், “அறிவினால் ஆகுவது உண்டோ? பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றாக் கடை'” என்று பாடினார். இந்த உண்மையினைத்தான் பிற்கால ஒளவையார் மரத்தைச் சான்றாக வைத்துக் காட்டி மனிதனுக்கு விளக்கம் செய்தார்.
தீமை செய்வார்க்கும் நன்மை செய்வதே மனிதன் பெற்ற அறிவின் பயன் ஆகும். நல்லவருக்கும் கூடத் தீமை இழைத்து மகிழும் மனித சமுதாயத்தில் வாழும் நமக்கு, இந்த உண்மை விளங்காமல் போனதுதான் வருத்தத்திற்கு உரியது. அறிவு என்பது பிறர் எக்கேடு கெட்டாலும் தான்மட்டும் சாமர்த்தியாமகப் பிழைப்பு நடத்துவது அல்ல. எவ்வுயிருக்கும் தீங்கு நினையாமல் வாழ்வதுதான்.
திருக்குறளில், “அறிவுடைமை” என்னும் அதிகாரத் தலைப்புக்கு, அறிவுடைமையாவது, கல்வி கேள்விகளால் ஆகிய அறிவோடு, உண்மை அறிவும் உடையவராய் இருத்தல் ஆகும் என விளக்கம் கண்டு உள்ளார் பரிமேலழகர். அதிகார முறைமைப்படி, கல்வியும், கேள்வியும் உடையவராய் இருந்தாலும், கற்றதையும், கேட்ட பொருளையும் உள்ளவாறு உணர்ந்து அறிதல் வேண்டும். “அறிவாவது, நல்லதன் தலனும், தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்தல்” என்று நச்சினார்க்கினியர் கூறி உள்ளார். “செய்யுள் நிகழ் சொல் தெளிவும், செவ்விய நூல் பலநோக்கும், மெய் உணர்வின் பயன் இதுவே” என்பது பெரியபுராணம். நோக்கும் என்பதற்கு, கருத்து ஊன்றி உணர்தல் எனப் பொருள் கண்டனர் முன்னோர். கற்கின்ற நூல்களைக் கருத்து ஊன்றி உணர்பவருக்கு மெய்யறிவு விளங்கும். மெய்யறிவு பெற்றோர் பிற உயிர்க்குத் தீங்கு செய்யார். அவரால் மனித குலம் தழைக்கும்.
No comments:
Post a Comment