“உள்ளிடத்தான் வல்லையே, நெஞ்சமே! ஊழ்வினைகள்
கள்ளிடத்தான் வந்து கலவாமுன், - கொள்ளிடத்தின்
தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும்
தன்திருவாய்ப் பாடியான் தாள்.”
இதன் பொருள் ---
ஊழ்வினைகள் கள்ளிடத்தான் வந்து கலவாமுன் - முன்செய்த ஊழ்வினைகள் உயிரைக் கொள்ளை கொள்ளுவதற்காக, தம்மை அறியாமலே வந்து இருந்து, வாழ்நாள் இறுதியில் உயிரைக் கொண்டு போவதன் முன்னே; கொள்ளிடத்தின் தென்திரு ஆப்பாடியான் - கொள்ளிடத் திருநதியின் தென்கரையில் உள்ள திருஆப்பாடி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய இறைவரும்; தெய்வமறை நான்கினையும் தன் திருவாய்ப் பாடியான்தாள் - தெய்வத் தன்மை பொருந்திய வேதங்கள் நான்கினையும் தமது திருவாயினாலே பாடியவரும் ஆகிய சிவபரம்பொருளினது திருவடியை, நெஞ்சமே – நெஞ்சே! உள்ளிடத்தான் வல்லையே - நினைக்க வல்லாயோ? (நினைப்பாயாக)
உள்ளுதல் - நினைத்தல். உள்ளிட வல்லையே - நினைக்க வல்லாயோ. ஊழ்வினைகள் கள் இட வந்து கலவாமுன்– ஊழ்வினைகள், திருடுதல் போல, நம்மை அறியாதவாறு நம்மோடு பொருந்தி இருந்து, நம்மை அறியாமலே உயிரைக் கொண்டு போக. கள்ளம் செய்ய. திருவாய்ப் பாடியான் - திருவாயால் பாடினவன்.
திரு ஆப்பாடி - சோழ நாட்டு காவிரி வடகரையில் உள்ள திருத்தலம். மண்ணியாற்றின் தென்கரையில் உள்ளது; சண்டேச நாயனார் பசுக்களை மேய்த்த இடமாயும், அங்கு இறைவர் வெளிப்பட்ட இடமாயும் உள்ளதால் இப்பெயர் பெற்றது. இரண்டும் காவிரியின் பிரிவுகளாதலானும், காவிரியின் கிளையாதலாலும், மண்ணி, கொள்ளிடம் என்று உபசரிக்கப்பட்டது.
கும்பகோணம் - அணைக்கரை தடத்தில் அமைந்துள்ள மற்றொரு பாடல் பெற்ற திருத்தலமான திருப்பனந்தாள் அருகில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி. மீ. தொலைவில் உள்ளது. இறைவர் திருநாமம், பாலுகந்த நாதர், பாலுகந்தீசுவரர். இறைவியார் திருநாமம், பிருகந்நாயகி, பெரியநாயகி. அப்பர் பெருமான் பாடி வழிபட்ட திருத்தலம்.
சண்டேசுவர நாயனார் வரலாறு:
திரு ஆப்பாடிக்கு அருகிலுள்ள திருச் சேய்ஞலூர் என்பது நாயன்மார்களில் ஒருவரான சண்டேசுவர நாயனாரின் அவதாரத் தலம். இத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக அவதரித்தவர் விசாரசருமர். விசாரசருமருக்கு முற்பிறவி உணர்ச்சி முறுகி விளைந்ததனால், ஐந்து வயதிலேயே வேதாகமங்களின் உணர்வை இயல்பாகப் பெற்றார். ஏழாம் ஆண்டில் அவருக்கு உபநயனச் சடங்கு நடைபெற்றது. உலகியல் முறைப்படி ஆசிரியர்கள் அவருக்கு வேதம் முதலிய கலைகளைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். அவைகளைத் தாங்கள் கற்பிப்பதற்கு முன்னரே, அவைகளின் பொருள்களை விசாரசருமர் உணர்ந்து இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிசயித்தார்கள். வேதாகமங்களின் பயன் ஆண்டவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது துணிந்து, அவ் அன்பில் விசாரசருமர் நிற்பாராயினார்.
ஒருநாள் விசாரசருமர் ஒருசாலை மாணாக்கர்களுடன் ஒதுகிடைக்குப் புறப்பட்டார். அவ் வேளையில் அவ்வூர்ப் பசுக்களும் போந்தன. அந் நிரைகளில் உள்ள ஓர் இளம் கன்று, மேய்ப்பவனை முட்டப் போயிற்று. அவன், அதைக் கோலால் அடிக்கலானான். அதைக் கண்ட விசாரசருமரின் நெஞ்சம் பதைத்தது. அவர், மேய்ப்பன் அருகே சென்று அடிப்பதைத் தடுத்தார். பசுக்களின் மாண்பை நினைந்தார். 'பசுக்களின் உறுப்புகளில் தேவர்களும் முனிவர்களும் இருக்கிறார்கள். புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. சிவபிரான் அபிடேகத்திற்குப் பஞ்ச கவ்வியம் அளிக்கும் பெருமையைப் பசுக்கள் பெற்றிருக்கின்றன. அவைகளின் சாணம் திருநீற்றிற்கே மூலம். ஆண்டவன் ஊர்தியாகிய வெள்ளேறு பசுக்கள் இனத்தைச் சேர்ந்தது' என்று எண்ணி எண்ணி நின்றார். மேலும் பசுக்களின் மாண்பை எண்ணி, 'இப் பசுக்களை மேய்த்துக் காப்பதை விடச் சிறந்த தொண்டு ஒன்று உண்டோ? இதுவே சிவபிரானுக்குரிய சிறந்த வழிபாடாகும்' என்று உறுதிகொண்டார். ஆயனைப் பார்த்து, "இந்த ஆநிரையை இனி நீ மேய்த்தல் வேண்டாம். அதனை நானே செய்கின்றேன்" என்றார். ஆயன் நடுநடுங்கிக் கை கூப்பிக் கொண்டே ஓடிப்போனான். விசாரசருமர் அந்தணர்களின் சம்மதம் பெற்று, அன்று முதல் பசுக்களை மேய்க்கும் திருத்தொண்டை ஏற்றார்.
விசாரசருமர் பசுக்களை மண்ணியாற்றங்கரையிலும் வேறு இடங்களிலும் மேய்ப்பார். பசும்புற்களைப் பறித்து பசுக்களுக்கு ஊட்டுவார். நல்ல துறைகளில் தண்ணீர் அருந்த விடுவார். அச்சத்தைத் தாமே முன் நின்று நீக்குவார். காலங்களில் பசுக்களை வீடுபோகச் செய்வார். அவர் பார்வையில் பசுக்கள் முன்னிலும் அழகு ஒழுகச் செழித்தன. வேதியர்களும் மற்றவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
பசுக்கள், தங்களின் கன்றுகளைப் பார்க்கிலும், வேதக் கன்று ஆகிய விசாரசருமரை அதிகம் நேசித்து வந்தன. கன்றுகள் தங்களைப் பிரிந்தாலும் தளர்வது இல்லை. விசாரசருமர் பிரிந்தால் அவை தளர்ச்சி அடையும். பசுக்கள் அவர் அருகே செல்லும். தாமே பால் சொரியும். அன்பு, அன்பு, அன்பு.
பசுக்கள் அன்பால் சொரியும் பாலைக் காணும்தோறும் விசாரசருமருக்குச் சிவபெருமான் திருமஞ்சன நினைவு தோன்றும். அதனால் அவருக்குச் சிவபூசை வேட்கை எழுந்தது. மண்ணியாற்றங்கரையில் ஒரு மணல் திட்டில், ஆத்தி மரத்தடியில் மணலால் ஒரு சிவலிங்கம் அமைத்தார். திருமதில்கள் எழுப்பினார். கோபுரங்கள் வகுத்தார். சுற்றாலயங்கள் எடுத்தார். வழிபாட்டிற்கு ஆத்தி முதலிய மலர்களைக் கொய்து வந்தார். கறவைப் பசுக்களிடம் சென்று மடியைத் தீண்டினார். பசுக்கள் கனைத்துச் சொரியும் பாலைக் குடங்களில் நிரப்பிக் கொண்டு சிவலிங்கத்தைத் திருமஞ்சனம் ஆட்டி அருச்சித்தார். பூசைக்குக் கிட்டாத பொருள்களை மனத்திலே பாவித்து நிரப்பிக் கொள்வார். இவர் செய்யும் அன்புப் பூசையைச் சிவபெருமான் அன்புடன் ஏற்பார். திருமஞ்சனத்துக்குப் பால் உதவியும், பசுக்கள் உரியவர்களுக்குப் பாலைக் குறையாதபடி வழங்கி வந்தன.
இவ்வாறு நிகழ்ந்து வரும் நாளில், ஒருநாள் ஊரான் ஒருவன் சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளையார் செய்கையைக் கண்டான். உண்மையை உணராத அவன், அவ்வூர் அந்தணர்களுக்கு அதை அறிவித்தான். அவர்கள் எச்சதத்தனை அழைப்பித்து, கேட்டதைச் சொன்னார்கள். எச்சதத்தன், "இது எனக்குத் தெரியாது. சிறுவன் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும். இனி இப்பிழை நிகழுமாயின், அது என்னுடையது ஆகும்" என்று வணங்கி விடைபெற்றுச் சென்றான்.
அடுத்த நாள் காலையில் விசாரசருமர் வழக்கம் போலப் பசுக்களை மேய்க்கப் போனார். அன்று எச்சதத்தன், அவரைத் தொடர்ந்து மறைந்து பின்னே சென்றான். சென்று, மணல் திட்டின் அருகே உள்ள ஒரு குராமரத்தில் ஏறி ஒளித்து இருந்தான். விசாரசருமர் வழக்கப்படி பூசை தொடங்கினார். அவர், பால்குடங்களை ஏந்தி அபிடேகம் செய்வதை எச்சதத்தன் கண்டான். கண்டதும், அவன் மரத்தில் இருந்து விரைந்து இறங்கி வந்து, ஓடிக் கைத் தண்டால் பிள்ளையார் முதுகில் அடித்தான். கொடும் சொற்களால் வைதான். பெரியவர் சிந்தை சிவபூசையில் திளைத்துக் கிடக்கிறது. எச்சதத்தன் மேலும் மேலும் சீறிச்சீறி அன்பரைப் புடைக்கின்றான். அன்பர் நிலை குலையவில்லை. அதற்குமேல், பால்குடங்களை உதைத்தான். அந்த அடாத செயலைச் செய்தவன் தந்தை என்று விசாரசருமர் நன்கு உணர்ந்தார். அவன் கால்களைத் துணிக்கத் தமக்கு முன்னிருந்து கோலை எடுத்தார். அந்தக் கோல் மழுவாக மாறியது. தந்தையின் கால்கள் வெட்டப்பட்டன. முன்புபோல் சிவபூசையில் அமர்ந்தார். சிவபெருமான் உமாதேவியுடன் விடைமேல் தோன்றினார். ஆண்டவனைக் கண்டு எல்லை இல்லா ஆனந்தம் அடைந்து, விழுந்து வணங்கினார்.
சிவபெருமான், விசாரசருமரைத் தமது திருக்கையால் எடுத்து, "நம் பொருட்டு உன் தந்தையைத் தடிந்தாய். இனி நாமே உனக்கு அடுத்த தந்தை" என்று திருவாய் மலர்ந்தருளினார். அவரை அணைத்து உடலைத் தழுவினார். உச்சி மோந்தார். மகிழ்ந்தார். விசாரசருமரது திருமேனி சிவமாயிற்று. பேரொளியில் திகழ்ந்தார். சிவபெருமான், சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளையாரை நோக்கி, "திருத்தொண்டர்களுக்கு உன்னைத் தலைவன் ஆக்கினோம். நாம் உடுப்பன, உண்பன, அணிவன முதலிய எல்லாம் உனக்கே ஆகுக. அதன் பொருட்டு உனக்குச் சண்டேசுர பதத்தைத் தந்தோம்" என்று அருளித் தமது திருச்சடையில் உள்ள கொன்றை மாலையை எடுத்து அவருக்குச் சூட்டினார். சண்டீச நாயனார், தேவதேவரைத் தொழுது, அவர் அருளிய பதத்தை அடைந்தார்.
எச்சதத்தன் சண்டீசப் பெருமானால் வெட்டுண்டதால், அவன் குற்றம் நீங்கிற்று. அவன் சுற்றத்துடன் சிவலோகம் எய்தினான்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தினம் தாளில் சூழ் திரு, வாய்ப் பாடி அங்கு சூழ்கினும் ஆம் என்று உலகர் வாழ் திருவாய்ப்பாடி இன்ப வாரிதியே" என்று போற்றி உள்ளார்.