திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 53 -- சுற்றம் தழால்
இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "பொதுவாகப் பார்க்காதவனாய், அவரவர் தனிச் சிறப்புக்கு ஏற்றமுறையில் அரசனது பார்வை அமையுமானால், அந்தப் பண்பை விரும்பிப் பலரும் சுற்றி இருப்பர்" என்கின்றார் நாயனார்.
உயர்ந்தார் இழிந்தார் என்று கருதாது, யாவரையும் ஒரு தன்மையராகக் கருதி நடந்தால், அதனை நோக்கி, உயர்ந்தார் தம்மை இழிவு படுத்தியதாக எண்ணி நீங்கி விடுவது பற்றி, பொது நோக்கு கூடாது என்று விலக்கி, சிறப்பு நோக்கு விதிக்கப்பட்டது. சிறப்பு நோக்கு என்பது, உயர்ந்தார் இழிந்தார் என்று அறிந்து, அவரவரது தகுதிக்கு ஏற்றவண்ணம் நடத்தல்.
சுற்றத்தவரில் உயர்ந்த தகுதியில் இருக்கும் ஒருவன், 'தாழ்ந்த நிலையில் இருப்பவன் ஒருவனையும் என்னையும் ஒன்றாக நடத்தினால், என் பெருமை குறைகின்றது, இனி இவனிடத்தில் இருத்தல் ஆகாது' என்று கருதி விலகிப் போவான். அவ்விதம் ஒவ்வொருவராக விலகிப் போவது சுற்றம் இன்மையில் முடியும். எனவே, சுற்றத்தைத் தழுவும் உபாயம் கூறப்பட்டது.
இதற்குத் திருக்குறள்...
“பொது நோக்கான், வேந்தன் வரிசையா நோக்கின்,
அதுநோக்கி வாழ்வார் பலர்.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் --- எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின்,
அது நோக்கி வாழ்வார் பலர் --- அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர்.
(உயர்ந்தார் நீங்குதல் நோக்கிப் பொது நோக்கை விலக்கி, எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார். இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் சோமாசிமாற நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடியுள்ள ஒரு பாடல்...
“சோமாசி மாறனார் சுந்தரரால் யாகம் இனிது
ஆமாறு அரனை அழைப்பித்தார், --- ஆமாம்
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.”
இதன் பொருள் ---
சோழமண்டலத்திலே, திரு அம்பர் என்னும் திருத்தலத்தில், அந்தணர் குலத்திலே சோமாசிமாற நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். இவர் திருவைந்தெழுத்தை அன்பினோடு செபித்து வரும் நித்த நியமம் உடையவர். எக்குலத்தினராயினும் எக்குணமுடையராயினும் சிவபத்தி உடையாராயின் அவரே நம்மை ஆளுடையார் என்னும் உறுதியான மெய்யறிவு உடையவர். அடியவர்கள் தம் வீட்டுக்கு வந்தால் அவர்களை எதிர்கொண்டு வணங்கித் திருவமுது செய்விப்பவர். சிவபிரானுக்குப் பிரீதியாகிய யாகங்களைப் புகழ் கருதாமலும், பயன் கருதாமலும் நிட்காமியமாக வேதவிதிப்படி செய்பவர். இவர் திருவாரூரில் சென்று சைவசமய ஆசாரியராகிய சுந்தரமூர்த்தி நாயனாரை அடைந்து அவர் திருவடிகளிலே பத்தி பண்ணினார். இவர் இயற்றிய யாகத்திலே சிவபெருமான் நேரே அவிர்ப்பாகத்தை ஏற்று அருளினார். அதனாலே நாயனார் சிவபதத்தைப் பெற்றார்.
எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின் அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர் என்றார் திருவள்ளுவ நாயனார்.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...
“ஒருதிசை ஒருவனை உள்ளி நால்திசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்,
வரிசை அறிதலோ அரிதே, பெரிதும்
ஈதல் எளிதே மாவண் தோன்றல்
அதுநற்கு அறிந்தனை ஆயின்
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே.” --- புறநானூறு.
இதன் பொருள் ---
அள்ளிக் கொடுக்கின்ற ஒருவனை நம்பி நால்திசையில் இருந்து பரிசில் பெறப் பலரும் வருவர். அப்படி ஒருவோருக்கு அள்ளிக் கொடுப்பது மிக எளிது. ஆனால், அவரவர் தரம் அறிந்து பிசில் அளிப்பது மிகவும் அரிய செயல் ஆகும். ஏனவே, வள்ளல் புகழ் உடையவனே! பரிசில் வேண்டி வருவோரின் வரிசை அறிந்து, நீ பரிசில் தர நினைப்பாயானால், எல்லோரையும் ஒன்றாகக் கருதுவதை விட்டு ஒழிப்பாயாக.
“மாகம் சிறுகக் குவித்து நிதிக்குவை
ஈகையின் ஏக்கழுத்தம் மிக்குஉடைய - மாகொல்
பகைமுகத்த வெல்வேலான் பார்வையில் தீட்டும்
நகைமுகத்த நன்கு மதிப்பு.” --- நீதிநெறி விளக்கம்.
இதன் பதவுரை ---
பகை முகத்த - பகைப்புலத்து உள்ள, மா - (தன் பகைவராகிய) விலங்குகளை எல்லாம், கொல் - கொல்லுந் திறனுடைய, வெள் வேலான் - ஒளிமிக்க வேலேந்திய அரசன், நகை முகத்த - (தன்) மலர்ந்த முகத்திற் காணும், பார்வையின் - பார்வையில், தீட்டும் - தோற்றுவிக்கும், நன்கு மதிப்பு - நன்மதிப்புக்கள், மாகம் - வானும், சிறுக - குறையும்படி, நிதிக் குவை குவித்து - (அவ்வளவு பெரிய) பொருட்குவியலைக் குவித்து, ஈகையின் - அவை முழுமையும் அவரவர் தகுதிக்கேற்ப அவ்வரசன் அள்ளிக் கொடுத்தலைப் பார்க்கிலும், ஏக்கழுத்தம் - செம்மாப்பு, மிக்குடைய – பெரிது உடையவாகும்.
“ஊன் உண்டு உழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப்
புல்லினான் இன்புறூஉங் காலேயம் - நெல்லின்
அரசியான் இன்புறூஉங் கீழ் எல்லாம், தத்தம்
வரிசையான் இன்புறூஉம் மேல்.” --- நான்மணிக் கடிகை.
இதன் பொருள் ---
ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம் நீர் நிலத்துப் புல்லினான் இன்புறூஉம் காலேயம் - ஊன் உணவை உட்கொண்டு புலி, மேனி இன்புறும்; ஈரம் பொருந்திய நிலத்திலுள்ள புல்லினை மேய்ந்து ஆனிரைகள் இன்புறும்; நெல்லின் அரிசியான் கீழ் எல்லாம் இன்புறூஉம் - நெல்லரிசிச் சோற்றினால் கீழ்மக்களெல்லாரும் இன்புறுவர்; மேல் தத்தம் வரிசையால் இன்புறூஉம் - மேன்மக்கள் தங்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ற மதிப்புச் செயல்களால் இன்புறுவர்.
No comments:
Post a Comment