053. சுற்றம் தழால் - 05. கொடுக்கலும் இன்சொல்லும்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "சுற்றத்தினர்க்குக் கொடுத்தலிலும், அவரிடம் இன்சொல் பேசுதலிலும் ஒருவன் வல்லவனானால், தொடர்ந்த பல திறப்பட்ட சுற்றத்தினரால் அவன் சூழப்படுவான்" என்கின்றார் நாயனார்.

சுற்றத்தாரது அளவு இது என்று ஒவ்வொருவரையும் அறிந்து, அவரவர் வேண்டுவன கொடுத்தல் மிக அரிது என்பதால், அவ்விதம் கொடுக்கும் ஆற்றலும், கொடுத்தல் மாத்திரம் அல்லாமல், அதனினும் அருமையாகிய இனிய சொற்களைக் கூறும் ஆற்றலும், ஆகிய இவ்விரண்டும் உடையவனாய் ஒருவன் இருப்பானானால், அவனிடத்து, நேராகச் சுற்றத்தாராக இருப்பவர்களும், சுற்றத்துக்குச் சுற்றத்தாராக இருப்பவர்களும் அவனது கொடையாலும், இன்சொற்களாலும் வந்து சேருவர் என்றார்.


இதற்குத் திருக்குறள்...

“கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின், அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும்.”

இதற்குப் பரிமேலழகர் உரை ---

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் --- ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொல் சொல்லுதலையும் வல்லனாயின், 

அடுக்கிய சுற்றத்தான் சுற்றப்படும் --- தம்மில் தொடர்ந்த பல வகைச் சுற்றத்தானே சூழப்படும்.

(இரண்டும் அளவறிந்து ஆற்றுதல் அரிது என்பது தோன்ற, 'ஆற்றின்' என்றார். தம்மில் தொடர்தலாவது - சுற்றத்தது சுற்றமும் அதனது சுற்றமுமாய் அவற்றான் பிணிப்புண்டு வருதல். இவ்வுபாயங்களை வடநூலார் தானமும் சாமமும் என்ப.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

"நத்தால் திகழ்வயல் புல்லாணி நாரணன் நல்கு அருள் இன்--

பத்தால் சொல் ஆதரவால் தொண்டர் சூழப்படு மனநே--

யத்தால் கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்--

றத்தால் சுற்றப்படும் என்றுமுன்னோர் கண்டு அறைந்ததுவே".

நத்தால் --- சங்கினால். சொல் ஆதரவால் --- கூறுகின்ற அன்பு மொழிகளால். தொண்டர் --- அடியவர்கள். திருப்புல்லாணித் திருமால் செய்யும் அன்பாலும் அருளாலும் அடியவர்கள் சூழ்ந்துள்ளனர் என்றபடி.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்...


“அடுக்கன் மலைநாட! தற்சேர்ந் தவரை

எடுக்கலம் என்னார் பெரியோர்;- அடுத்தடுத்து

வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே,

தன்காய் பொறுக்கலாக் கொம்பு.” ---  நாலடியார்.

இதன் பொருள் ---

அடுக்கல் மலை நாட - ஒன்றன் மேலொன்றாக அடுக்கிய மலைகளை உடைய நாடனே! தன் சேர்ந்தவரை எடுக்கலம் என்னார் பெரியோர் - தம்மைச் சேர்ந்த சுற்றத்தவரை ஆதரியோம் என்று கூறார் பெரியோர்,  அடுத்தடுத்து வன்காய் பல பல காய்ப்பினும் இல்லையே தன் காய் பொறுக்கலாக் கொம்பு - மேலுமேலும் வலிமை மிக்க காய்கள் பலப்பல காய்த்தாலும் தன் காய்களைத் தாங்கிக் கொள்ளாத கிளைகள் உலகத்தில் இல்லையே.


தம்மைச் சேர்ந்தவரை ஆதரித்து நிற்றலே பெருமையும் இயல்புமாகும்.

“நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;

கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;

இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்,

விடுக்கும் வினையுலந்தக் கால்.” ---  நாலடியார்.

இதன் பொருள் ---

செல்வம் - பொருளானது, கொடுத்துத் தாம் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும் - பிறர்க்குக் கொடுத்துத் தானும் நன்றாக நுகர்ந்தாலும் திரளுதற்குரிய காலத்தில் மேலுமேலுந் திரளும், வினை உலந்தக்கால் - நல்வினை முடிந்துவிட்டபோது,  இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது விடுக்கும் - அச் செல்வத்தை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் அது நில்லாமல் தனது தொடர்பை நீக்கிக் கொள்ளும், நடுக்குற்றுத் தன் சேர்ந்தார் துன்பம் துடையார் - இவ்வுண்மைகளை அறியாதார், வறுமைத் துன்பத்துக்கு அஞ்சித் தம்மை அடைந்தவர்களின் இன்னலைப் பொருள் கொடுத்துத் தீர்க்கமாட்டார்கள்.

செல்வம் நிலைப்பதற்கும் நில்லாததற்கும் ஏது முறையே இறுக்கிப் பிடித்தலும் பிறர்க்குக் கொடுத்தலும் அல்ல. அவை முன்வினை காரணமாக நிகழ்வன எனக் கருதிப் பிறர்க்கு ஒன்று கொடுத்தலை மகிழ்வோடு சோர்வு இல்லாமல் செய்துவரல் வேண்டும்.



No comments:

054. பொச்சாவாமை - 09. இகழ்ச்சியின் கெட்டாரை

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "அளவு கடந்த மகிழ்ச்சியின்...