053. சுற்றம் தழால் - விருப்பு அறாச் சுற்றம்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "அன்பு நீங்காத சுற்றமானது ஒருவனுக்கு அமையப் பெற்றால், அந்த சுற்றமானது கிளைத்தல் நீங்காத செல்வங்கள் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்" என்கின்றார் நாயனார்.

உள்ளத்தில் பகைமை உணர்வைக் கொண்டிருந்து, புறத்தில் அன்பு உள்ளவரக்ளைப் போல் காட்டிக் கொள்ளுதல் இல்லாத சுற்றத்தாரைக் குறித்து இங்குச் சொன்னார் நாயனார். சுற்றத்தார் பலர் கூடி வளர்த்தலால், செல்வம் மேலும் மேலும் கிளைக்கும் என்றார்.

"புறம் நட்டு அகம் வேர்ப்பார் நச்சுப் பகைமை வேறு ஆதல் வேண்டும்" என்றார் குமரகுருபர அடிகள். "முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா, வஞ்சகரை அஞ்சப்படும்" என்றார் நாயனார் பிறிதொரு திருக்குறளில்.

அரும்புதல் - சிறிதாகத் தோன்றி வளர்தல். அரும்பு என்னும் சொல், விகாரப்பட்டு, "அருப்பு" என வந்தது.


இதற்குத் திருக்குறள்.....

விருப்பு அறாச் சுற்றம் இயையின், அருப்பு அறா

ஆக்கம் பலவும் தரும்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு அறாத சுற்றம் ஒருவற்கு எய்துமாயின்,  அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - அஃது அவற்குக் கிளைத்தல் அறாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.

(உட்பகையின் நீக்குதற்கு 'விருப்பு அறாச் சுற்றம்' என்றும், தானே வளர்க்கும் ஒரு தலையாய செல்வத்தின் நீக்குதற்கு அருப்பு அறா ஆக்கம் என்றும், விசேடித்தார். தொடை நோக்கி விகார மாயிற்று. 'இயையின்' என்பது, அதனது அருமை விளக்கி நின்றது. ஆக்கம் என்பது ஆகுபெயர். பலவும் என்பது அங்கங்கள் ஆறினையும் நோக்கிப் பலர் கூடி வளர்த்தலின், அவை மேல்மேல் கிளைக்கும் என்பது கருத்து.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....


“வில்லுக்கு அதிபன் விரகினால் ஐவர்அரக்கு

இல்உற்றும் உய்ந்தார், இரங்கேசா! - நல்ல

விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா

ஆக்கம் பலவும் தரும்.”


இதன் பொருள் --- 


இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! வில்லுக்கு அதிபன் - வில்வித்தையில் தன்னை ஒப்பார் இல்லாத விதுரனுடைய, விரகினால் – முன் உபாயத்தினால், ஐவர் - பஞ்சபாண்டவர், அரக்கு இல் உற்றும் - (துரியோதனன் கட்டின வஞ்சக) அரக்கு மாளிகைக்குள் இருந்தும், உய்ந்தார் - பிழைத்துப் போனார்கள்,  (ஆகையால், இது) நல்ல விருப்பு அறா சுற்றம் இயையின் - என்றும் ஒருபடித்தான அன்பு அகலாத சுற்றம் ஒருவனுக்குப் பொருந்தி இருக்குமானால், அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - (அது) வளர்ந்துகொண்டே இருக்கும் பலவித செல்வங்களையும் கொடுக்கும் (என்பதை விளக்குகின்றது).

கருத்துரை --- ஒருவனைப் பற்றி ஓரகத்திரு. அன்புடைய சுற்றத்தால் ஆக்கம் பலவும் வளரும்.

விளக்கவுரை - எக்காலத்தும் தன் பிள்ளைகளும் பாண்டவர்களும் பகைத்து இருக்கிறார்கள் என்று அறிந்த திருதராட்டின், தருமராசனை நோக்கி, "தம்பீ! நீங்கள் அனைவரும் வாரணாவதம் போய் உங்கள் பிதாவுக்குச் சரம கைங்கரியங்களைச் செய்துகொண்டு, ஒராண்டு தங்கியிருந்து திரும்பி வாருங்கள்" என்று அனுப்பினான். ஐவரும் அப்படியே அங்குப் போயிருந்தார்கள். அதுதான் சமயம் என்று துரியோதனன் அவர்களைக் கொல்ல, வாரணாவதத்தில் ஓர் அரக்கு மாளிகையைக் கட்டுவித்து, அவர்களை அதில் குடியிருக்க வேண்டினான். கள்ளம் கவடு அறியா உள்ளம் உடையவர்களாகிய ஐவரும் அவன் அன்பிற்கு வியந்து, அதற்கு உடன்பட்டு, நாள் ஏற்படுத்தி இருந்தார்கள். ஐவர்மேல் உண்மை அன்புடைய அவர்கள் சிற்றப்பனான விதுரன், துரியோதனனுடைய வஞ்சகச் சூழ்ச்சியை அறிந்து, அம் மாளிகையை நிருமித்த சிற்பிக்கு அந்தரங்க பரிதானம் செய்து, அதிலிருந்து தப்பியோடிப் பிழைக்க ஓர் அந்தரங்கச் சுரங்கம் யார்க்கும் தெரியாமல் அவனைக் கொண்டே செய்வித்து, அதைப் பற்றி வீமனுக்கு மட்டும் சேதி தெரிவித்து இருந்தான். தாங்கள் ஏற்படுத்தியிருந்த நன்னாளில் ஐவரும் குந்தியோடு அரக்கு மாளிகையில் குடி புகுந்தார்கள். குடி புகுந்த அன்றிரவிலேயே துரியோதனன் தன் மந்திரி புரோசனன் என்பவனை அனுப்பி மாளிகையைக் கொளுத்தக் கட்டளை இட்டு இருந்தான்.  அவனும் அப்படியே கொஞ்சமேனும் பழிக்கு அஞ்சாமல் அரையிரவில் ஐவரும் தூங்கும்போது, அதைக் கொளுத்திவிட்டான். ஆயினும் சங்கேதப்படி விழிப்பாயிருந்த வீமன் தன்னுடன் இருந்த ஐவரில் தாயையும் தமயனையும் தோள்களின் மேலும், தம்பியரில் அர்ச்சுனனை ஓர் அக்குளிலும், நகுல சகாதேவர் இருவரையும் மற்றோர் அக்குளிலும் அடக்கித் தூக்கிக்கொண்டு அநாயாசமாய், அந்தரங்க சுரங்க வழியே வெளியேறிப் பிழைத்துப் போனான். விருப்பறாச் சுற்றமாகிய விதுரன் ஒருவன் இருந்ததனால், ஐவருக்கும் அருப்பு அறா ஆக்கம் தந்தது காண்க. 

'அரும்பு அறாத ஆக்கம்' எனப் பிரித்து, என்றும் அரும்புதலை நீங்காத, அதாவது என்றும் அரும்பி வளர்ந்துகொண்டே இருக்கும் என்றும் பொருள் உரைக்கலாம். 'வில்லுக்கு அதிபன்' என்று விதுரனைக் குறித்தது, அவன் வில்லெடுத்தால் வெல்ல வல்லுநர் ஒருவரும் இல்லாதிருந்தமையால். ஆகையால்,  கண்ணபிரானைப் போலவே அவனும் வில் எடேன் என்று சபதம் கூறி விடுத்தான்.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“எய்த்து மகத்து இறந்தும் சூரன்இளையோரால்

மொய்த்தவளம் பெற்றான், முருகேசா! --- மெய்த்த

விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா

ஆக்கம் பலவும் தரும்.


இதன் பொருள் ---

முருகேசா - முருகப் பெருமானே,  சூரன் - சூரபதுமனானவன், எய்த்து மகத்து இறந்தும் - வருந்தி வேள்வியிலே மாண்ட பின்னரும்,  இளையோரால் - தன்னுடைய தம்பிமார்களால், மொய்த்த வளம் பெற்றான் - மிகுந்த செல்வ நலத்தை அடையப் பெற்றான். மெய்த்த - உண்மை பொருந்திய, விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு நீங்கப் பெறாத உறவினர்களைப் பெற்றால், அருப்பு அறா - வளர்ச்சி குறையாத, ஆக்கம் பலவும் தரும் - செல்வம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.

சூரபதுமனானவன் வேள்வியிலே வருந்தி இறந்தும், தன்னுடைய தம்பிமார்களால் மிகுந்த செல்வ வளத்தைப் பெற்றான். ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றத்தார்கள் அமைவார்களானால் அவனுக்கு வளர்ச்சி குறையாத செல்வம் பலவும் உண்டாகும் என்பதை இந்த வரலாறு விளக்கும்.

சூரபதுமன் மிகவும் முயன்று அரிய வேள்வியைச் செய்தான். அவ்வாறு செய்தும் சிவபிரான் எழுந்தருளவில்லை. அதனால் வருந்தி வேள்வித் தீயில் விழுந்து இறந்தான். பிறகு அவனிடத்திலே அன்புள்ள சிங்கமுகன், தாரகன் என்னும் தம்பிமார்கள் அவ் வேள்வியை முடித்தார்கள். அதனால் சிவபிரான் எழுந்தருளி இறந்துபோன சூரபதுமன் உயிர் பெற்று எழச் செய்தார். ஆயிரத்தெட்டு அண்டங்களின் அரசுரிமையையும் பிறவற்றையும் வழங்கினார். அதனால் சூரபதுமன் தன் உடன் பிறந்தார்களோடு மேன்மையுடன் வாழ்ந்தான். அன்புடைய உறவினர்களைப் பெற்றால் அவர்களால் நலமெலாம் உண்டாகும் என்பது சூரபதுமனிடம் நன்கு விளங்கியது.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.விருப்பு அறாச் சுற்றத்தை, "பண்பின் விரவிய கிளை" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். பாடலைக் காண்க...


"அரசுகொள் கடன்கள் ஆற்றி

மிகுதிகொண்டு அறங்கள் பேணி

பரவு அரும் கடவுள் போற்றி

குரவரும் விருந்தும் பண்பின்

விரவிய கிளையும் தாங்கி

விளங்கிய குடிகள் ஓங்கி

வரைபுரை மாடம் நீடி

மலர்ந்து உள பதிகள் எங்கும்" --- பெரியபுராணம்.


இதன் பொருள் ---

தொகுத்த நெற்குவியல்களுள், அரசர்க்குரிய ஆறில் ஒரு பங்கை அரசுக்கு இறையாகக் கொடுத்து, எஞ்சிய ஐந்து பங்குகளில், தாம் செய்தற்குரிய அறங்களைச் செய்தும், வணங்குதற்குரிய இறை வழிபாட்டைச் செய்தும். குரவர்க்கும் விருந்தினர்க்கும், நற்குணம் அமைந்த சுற்றத்தார்க்கும் கொடுத்தும், இவ்வாற்றான் புகழ் விளங்கிய குடிகள் மிக்கு, மலை போலும் உயர்ந்த மாளிகைகள் விளங்க இருந்தன அந்நாடுகள் எல்லாம்.



"ஈரம் இல்லாதது கிளைநட்பு அன்று." --- முதுமொழிக் காஞ்சி.

இதன் பொருள் ---

ஈரம் இல்லாதது - மனத்தின்கண் அன்பில்லாதது, கிளை (அன்று) - சுற்றமுமன்று; நட்பு அன்று - சினேகமும் அன்று.



“வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்

கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு

அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்

கேளிரைக் காணக் கெடும். --- நாலடியார்.

இதன் பொருள் ---

வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகன் கண்டு தாய் மறந்தாங்கு – கருவுற்றிருந்த போது தோன்றிய மசக்கைத் துன்பமும், இடையில் கருவைச் சுமந்து வந்த வருத்தமும், கருவுயிர்த்த அக்காலத்தில் உண்டான இன்னலும் தாய் தன் தொடையில் மகனைக் கண்டு மறந்து விட்டாற்போல,  அசா தான் உற்ற வருத்தம் --- முயற்சிகளின் இடையே தளர்ச்சியால் ஒருவன் அடைந்த துன்பம், உசா தன் கேளிரைக் காணக் கெடும் - ஆய்ந்து சூழ்தற்கு உரிய தன் சுற்றத்தாரைக் கண்ட அளவில் நீங்கும்.

முயற்சிகளினிடையே தோன்றுந் தளர்ச்சியை நீக்குதற்கு அவ்வப்போதும் ஆராய்ந்து சூழ்தற்குரிய சுற்றத்தார் இன்றியமையாது வேண்டியிருத்தலின், அவரை எஞ்ஞான்றும் தழுவி ஒழுகுதல் வேண்டும்.

மகன் என வழக்கு நோக்கி ஆண்பாலாகக் கூறினாரேனும் ஏனைப் பாலுக்கும் அது ஒக்கும்.


No comments:

053. சுற்றம் தழால் - விருப்பு அறாச் சுற்றம்

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 53 -- சுற்றம் தழால் இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "அன்பு நீங்காத சுற்ற...